‘குழப்ப சூழ்நிலையில் மாகாணசபை நிர்வாகம்‘    -மாகாணசபை முன்னாள்  செயலர் தெய்வேந்திரம்

‘குழப்ப சூழ்நிலையில் மாகாணசபை நிர்வாகம்‘   -மாகாணசபை முன்னாள் செயலர் தெய்வேந்திரம்

 — நேர்காணல் – கருணாகரன் —

பச்சிலைப்பள்ளியின் முதலாவது இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான (SLAS) திரு. கந்தையா தெய்வேந்திரம், தன்னுடைய விடா முயற்சியினால் பல சிகரங்களைத் தொட்டவர். தெய்வேந்திரம் படித்தது ஈழப்போராட்டம் தீவிரமடைந்த காலமாகும். சூழலும் அதுவே. இராணுவ நெருக்கடி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், போராளிகளின் செயற்பாடுகள், போர் என்ற நிலைமைகளின் மத்தியில் தன்னை நிதானப்படுத்தி, உறுதியுடன் தன்னுடைய இலக்கில் முன்னேறியவர்.

இளமையிலிருந்தே மக்களின் மீதும் அவர்களுக்கான பணிகளின் மீதும் தெய்வேந்திரத்துக்கு ஈடுபாடுண்டு.  அவர் தேர்ந்தெடுத்த பணிப்பாதை இதை நிரூபிக்கிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்து குடிநீர் வசதிகளற்றவர்களுக்கான கிணறுகளை அமைத்தல், மக்களை விழிப்புணர்வூட்டும் கலை நிகழ்ச்சிகளை ஊர்கள் தோறும் நடத்துதல் என மக்களுக்கான பணிகளைச் செய்யத் தொடங்கிய தெய்வேந்திரம், தான் வகித்த பதவிகளின் வழியே அதைத் தொடர்ந்தார். அதுவே அவருடைய பாதையுமாகும்.

இதற்காக அவர், தமிழர் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் (TRRO), பட்டதாரி ஆசிரியர், இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புள்ளிவிபரவியலாளர், உதவி கமநல சேவைகள் ஆணையாளர், பிரதி ஆணையாளர் (வடமாகாணம்), வடக்குக் கிழக்கு கரையோர அபிவிருத்தித்திட்டத்தின் (NECTEP) பிரதிப் பணிப்பாளர், வடக்குக் கிழக்கு வீடமைப்பு புனர் நிர்மாணத்திட்டத்தில் (NERHP) கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர், வடக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், வட மாகாணசபைச் செயலாளர், விவசாய அமைச்சு (வடமாகாணசபை) செயலாளர், தேசிய நீர்வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர், வடமாகாண சபையின் நிதி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எனப் பல பதவிகளை வகித்தவர்.

இந்தப் பெரும் பணிப்பரப்பில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாகாண அரசுகளின் நிர்வாக அனுபவங்கள், அதிகார எல்லைகள் பற்றி இந்த உரையாடலில் பேசுகிறார் தெய்வேந்திரம்.

இந்த நேர்காணலை தெய்வேந்திரத்தின் பள்ளித்தோழர்களாகிய நாம் ஒரு காலையில் செய்திருந்தோம். முதல் நாளிரவு நண்பர்கள் கூடிப் பேசி, உண்டு, உறங்கினோம். பள்ளிக்காலத்தை  வாழ்வதும் நினைவில் மீட்பதும் அலாதியானது. அந்த மனநிலையோடு காலையில் தெய்வேந்திரத்துடன் இன்னொரு கோணத்தில் உரையாடினோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. உங்களுடைய இளமைக்காலத்தைப் பற்றி…

பின்தங்கிய நிலையில் இருந்த கிராமங்களில் ஒன்றான பளை – அல்லிப்பளையில் பிறந்தேன். அப்போது மின்சாரம், சீரான வீதிகள் என  எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. ஏறத்தாள 10 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராமத்தை கொத்திகாடு எனவும்  சொல்வார்கள். தந்தையை நாம் ஐயா என்றுதான் அழைப்போம். அவருடைய பெயர் ஆறுமுகம் கந்தையா. அவரை மாப்பாணர் பரம்பரை என்றும் சொல்வதுண்டு. அம்மா, மங்கையற்கரசி. ஊரில் பவளம் என்பார்கள். விவசாயக் குடும்பம். என்னோடு சேர்த்து நான்கு பிள்ளைகள். நான் குடும்பத்தில் இரண்டாவது மகன். 1962 இல் வீட்டிலேயே பிறந்தேன். அப்பொழுது எங்களுடைய வீடு ஒரு சிறிய குடிசையாக இருந்தது.

2. ஆரம்பக்கல்வி?

அல்லிப்பளையில் இருந்த இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் (CCTMS) 05 ஆம் வகுப்புவரை படித்தேன். என்னுடைய வகுப்பில் நான்கு மாணவர்கள் மட்டுமே படித்தனர். மொத்தமாக 24 மாணவர்கள்தான் இருந்தனர். இப்போது அந்தப் பாடசாலை அறத்திநகரில் இயங்கி வருகிறது. அல்லிப்பளையில் ஆட்களே இல்லாமல் போய் விட்டனர். ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன.

3. பிறகு?

பளை மகாவித்தியாலயத்தில்  (தற்போது பளை மத்தியகல்லூரியில்) படித்தேன். எங்களுடைய பாடசாலையில் அப்போதுதான் க.பொ.த. உயர்தரம்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவும் கலைப்பிரிவு மட்டும்தான்.  அதிலும் அப்போதிருந்த ஆசிரிய வளத்துக்கு ஏற்ற மாதிரியே பாடத்தெரிவுகள் நடந்தன. மாணவர்களுடைய விருப்பத் தெரிவுகளுக்கு இடமில்லை. தமிழ், இந்து நாகரிகம், அரசியல், புவியியல் போன்ற பாடங்களே அப்போதைய தெரிவுக்கிருந்தன. 1983 இல் உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுத் தெரிவாகிய மாணவர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். மாபொல புலமைப்பரிசில் கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றேன். 1984 இல் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய போதும் 1990 இல்தான் பட்டப்படிப்பை முடிக்கக் கூடியதாக இருந்தது. காரணம், யுத்தச் சூழல். அது இலங்கைப் படையினருக்கும் போராளிகளுக்குமிடையில் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். பிறகு 1987 இலிருந்து இந்திய அமைதிப்படை வந்திருந்த காலப்பகுதி.

4. பல்கலைக்கழகப்படிப்பை முடித்த பின்னர்?

அரச சார்பற்ற நிறுவனமான தமிழர் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் திட்ட அலுவலராகக் கடமையாற்றினேன். அப்பொழுது அதனுடைய தலைவராக பேராசிரியர் கா. சிவத்தம்பி இருந்தார். அதற்குப் பிறகு 1993 இல் பட்டதாரி ஆசிரியராக கொழும்பு வாழைத் தோட்டத்தில் பணியேற்றேன். அப்போது ஒரு போட்டிப் பரீட்சையில் தோற்றி, 1994 ஜனவரியில் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் உதவிப் பொது முகாமையாளராகக் கடமையாற்றினேன். அதனைத் தொடர்ந்து இன்னொரு போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி 1994 ஜூலையில் இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புள்ளிவிபரவியலாளராகக் கடமையாற்றினேன். அடுத்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி 1995 ஏப்ரலில் இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டேன். ஒரு போட்டிப் பரீட்சையில் தோற்றினால் அதில் ஒரு பரிச்சயம் ஏற்பட்டு விடும். தொடர்ந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கக் கூடிய உற்சாகமும் வந்து விடும்.

5. தொடர்ந்து போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவதற்கான எண்ணம் எப்படி ஏற்பட்டது? யாருடைய வழிகாட்டல்கள் கிடைத்தன?

நான் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும்போதே இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவிருந்தது. அதனால் அப்போதிருந்தே என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இலக்கை அடைந்தேன்.

6. இலங்கை நிர்வாக சேவையாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஏற்ற பணி?

இந்தமுதல் நியமனத்தில் உதவி கமநல சேவைகள் ஆணையாளராக வவுனியாவில் கடமையாற்றினேன். பிறகு அதே திணைக்களத்தில் 2005 இலிருந்து பிரதி ஆணையாளராக (வடமாகாணம்)  பணியைத் தொடர்ந்தேன். அதற்குப் பிறகு 2008 இல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு கரையோர  அபிவிருத்தித்திட்டத்தின் (NECTEP) பிரதிப் பணிப்பாளராக கடமைபுரிந்தேன். அதனைத் தொடர்ந்து 2010 இல் வடக்குக் கிழக்கு வீடமைப்பு புனர் நிர்மாணத்திட்டத்தில் (NERHP) பணியைத் தொடர்ந்தேன். இந்தத் திட்டம் 2012 இறுதியில் நிறைவுற்றதும் 2013 இல்  மத்திய அரசினால் விடுவிக்கப்பட்டு வடக்கு மாகாணசபைக்கு வந்தேன். அங்கே வடக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக நியமனம் பெற்றேன். 2015 இலிருந்து மாகாணசபைச் செயலாளராகப் பணி செய்யக் கிடைத்தது. 2017 இலிருந்து விவசாய அமைச்சு (வடமாகாணசபை) செயலாளராகப் பணி செய்தேன். 2020 இல் மாகாணசபையிலிருந்து மத்திய அரசுக்கு விடுவிக்கப்பட்டு, தேசிய நீர்வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றினேன். 2022 இல் மீண்டும் வடமாகாண சபைக்கு வந்து நிதி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினேன். 31.12.2022 இல் பணி ஓய்வைப் பெற்றேன்.

7. இப்படிப் பல பணிகளில் செயற்பட்டிருக்கிறீர்கள். குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மாகாண சபை, மத்திய அரசு என உங்களுடைய பணிப்பரப்பும் இருந்துள்ளது. இந்தப் பணிகளில் சந்தித்த அனுபவங்கள்?

தமிழர் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிய அனுபவம் முக்கியமானது. அதில் திட்ட அலுவலராக இருந்தபோது திட்டங்களை அடையாளம் காணுதல், அதனை ஒழுங்குபடுத்தல், அதனை நெறிப்படுத்தல், அதை நடைமுறைப்படுத்தி மக்களிடம் கையளித்தல் போன்றவற்றில் நிறைவான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன். அந்த வயதில் அது மிக முக்கியமானதாக இருந்தது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் அதற்குப் பின்னர் வகித்த பதவிகளை என்னால் வினைத்திறனாகவும் விரைவாகவும் நிறைவேற்ற முடிந்தது.

இதற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடைய ஆலோசனைகளும் ஊக்கங்களும் எனக்கு நிறைவான வளத்தைத் தந்தன.

இந்தப் பட்டறிவு ஆசிய அபிவிருத்தி, உலக வங்கி ஆகியவற்றின் திட்டங்களில் பணியாற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

அரச சார்பற்ற நிறுவனங்களில் தீர்மானம் எடுத்தலும் நடைமுறைப்படுத்தலும் இலகுவாக இருக்கும். சுயாதீனத் தன்மை கூடுதலாகக் கிடைக்கும். அத்துடன் திட்ட அனுகூலங்கள் வினைத்திறனாகவும் விரைவாகவும் மக்களுக்குக் கிடைக்கும். இது நிறைவை அளிக்கும். இதனால் என்னால் முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் முழுமையாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

அரச நிறுவனங்களில் கட்டுப்பாடுகள், கால தாமதம், அரசியற் தலையீடுகள், அழுத்தங்கள் என பணி நெருக்கடிகள் இருந்தது. இதனால் திட்டங்களை உரிய காலத்தில், உரிய முறையில் முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன. இது அரச திணைக்களங்களில் உள்ள பொதுவான – வழமையான ஒரு நிலைமையாகவே தொடர்கிறது. இதனால், திட்டங்களை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் இடையூறுகளும் தாமதங்களும் ஏற்படுகிறது.

இருந்த போதிலும் எனது விவேகம், வேகம், துணிவு என்பவற்றைப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளை அணுகி, அவற்றை உரிய முறையில் தீர்த்து வைத்ததன் அடிப்படையில் அத்தனை அரச திணைக்கள வேலைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இது எனக்கு நிறைவை அளிக்கிறது. ஆனால், இது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு எதை விரைவாகவும் சரியாகவும் செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கும். அதற்கான வழிகளைக் கண்டறிந்து விடுவேன்.

8. சரி, இப்படிப் பல பணிகளை, பல தரப்புகளுடன் செய்யும் காலத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் என்ன?

வடக்குக் கிழக்கு வீடமைப்பு புனர் நிர்மாணத்திட்டத்தில் (NERHP) வீட்டுத்திட்டப் பயனாளிகளில் சிலர்  பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய முறையில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளாமல் விட்டனர். இதற்கு நாம் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அரசியல்வாதிகளின் தலையீடுகள் எங்களுக்குச் சிரமத்தைத் தந்தன. இவற்றைக் கூட சாதுரியமாகத் தீர்த்துக் கொண்டேன். ஒரு உதாரணத்தைச்  சொல்லலாம். ஒரு பயனாளி பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டுத்திட்டத்தை முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் அவரைத் தொடர்பு கொள்ள முடியாதவாறு தலைமறைவாகி விட்டார். அவரைச் சந்திப்பதற்காக ஒரு நாள் நாம் அவருடைய வீட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். அப்போதும் அவர் வீட்டுக்குள் மறைந்து விட்டார். நீண்ட நேரத்தின் பின்னர் வேறு வழியில்லாமல் எம்மிடம் வந்து முற்பட்டார். அவரை அழைத்து வந்து பிணையாளிகளோடு அவருடைய கொடுப்பனவுகளை மீளப் பெற்றோம். இதெல்லாம் நிர்வாக ரீதியாக மிகச் சிரமமான – நெருக்கடியான விடயங்கள். இப்படியாக நமக்குத் தெரிந்த வழிமுறைகளுக்கு ஊடாக – துணிகரமாக சில நடவடிக்கைகளை எடுத்து வெற்றியடைந்தோம்.

அடுத்தது, மாகாணசபை நிர்வாகம். பொதுவாக ஒரு குழப்பரமான சூழ்நிலையிலேயே மாகாணசபை நிர்வாகம் இருந்து வருகிறது. இதனால் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றில் பாரிய இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இங்கே (வடமாகாணத்தில்) அதிகாரிகளுக்கிடையே போட்டி, பொறாமை, குரோதம், குழப்புதல் எல்லாமே மலிந்து கிடக்கின்றன. இதனால் நல்லதைச் செய்ய வேண்டும் என்று கருதுகின்ற – முயற்சிக்கின்ற அதிகாரிகள் தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்தி, ஆளுமையுடன் பணியாற்ற முடியாமலுள்ளது. இதில் அதிகரித்த அரசியல் தலையீடுகளும் அதிகாரிகளுக்கிடையிலுள்ள முரண்பாடுகளும் தாராளமாக இருக்கின்றன. இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். அதற்கு எல்லோரும் சேர்ந்து இணைந்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிடம் குறைவாகவுள்ளது. இது கவலையளிக்கிறது. இதனால் எமது சமூகத்துக்கு, எமது எதிர்காலச் சந்ததிக்குப் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.

மாகாணசபை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளுகை செய்யப்பட்டபோது அரசியல்வாதிகளுக்கிடையேயும் இழுபறிகளும் போட்டி, பொறாமைகளும் இருந்தது. இதனால் பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன.

9. அப்படியென்றால், இது ஒடுக்குமுறைக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளாகியிருக்கும் எமக்கு (தமிழ்ச்சமூகத்துக்கு) பாதிப்பையும் ஒடுக்கும் தரப்புக்கு வாய்ப்பையும் அளிக்கும் அல்லவா!

நிச்சயமாக. இங்கே காணப்படுகிற முரண்பாடுகள், அதிகாரிகளின் பொறுப்பற்ற, அறிவற்ற நடத்தைகள், பழிவாங்கும் குரோத மனப்பாங்கு போன்றவற்றினால், எமக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள், பதவிகள், நன்மைகள், நிதி ஒதுக்கீடுகள் எனச் சகலதிலும் இழப்பு ஏற்படுகிறது.  இங்கே அதிகாரிகள், அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் முரண்பாடுகளால்  எமது சமூகத்துக்கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் மற்றும் அனுகூலங்கள் இல்லாமற் போகிறது. உதாரணமாக சிற்றூழியர்கள் தொடக்கம் உயர் பதவிகளுக்குரியவர்கள் வரையில் தென்பகுதியில் இருந்தோரே நிரப்படுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல்  திணறுகின்றனர். இதில் அரசியல்வாதிகளும் அடக்கம். நிர்வாக அதிகாரிகளும் பொறுப்பு.

10. மாகாணசபைக்கான அதிகாரங்கள் போதாதுள்ளது என்பதைப்பற்றி?

மாகாண சபைக்கான அதிகாரங்கள் இன்னும் தேவை என்பது உண்மையே. 13 திருத்தத்தில் சொல்லப்படும் அதிகாரங்களை முழுமைப்படுத்தினால் பெரும்பாலான அதிகாரங்களை நாம் பெறமுடியும். ஆனால், தற்போதிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தினாலே  எமது மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களைச் சீராக நிறைவேற்ற முடியும். இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சாட்டுப்போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

11. நிர்வாகத்துறையில் பல படிமுறைகளில் செயற்பட்டுள்ளீர்கள். அதற்கான போட்டிப் பரீட்சைகளில்தோற்றியுள்ளீர்கள். இதைத் தவிர, மேற்கற்கைகள்?

பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றேன். அதன் பிறகு பிரதேசத் திட்டமிடல், பொருளியல், வியாபாரா நிர்வாகம் ஆகியவற்றில்  முதுமாணி சிறப்புப் பட்டங்களையும் பெற்றுள்ளேன். இந்தப்பட்டங்கள் என்னுடைய பணிகளை இலகுவாகவும் வினைத்திறனாகவும் செய்வதற்கு  உறுதுணையாக இருந்தன. இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும், நான் பொருளியலில் சிறப்புப் பட்டங்களைப் பெற்றாலும் க.பொ.த உயர் தரத்தில் பொருளாதார பாடத்தைப் படிக்கவே இல்லை. அந்தப் பாடத்தை படிப்பதற்கு – தேர்வு செய்வதற்கு அப்பொழுது எமது பாடசாலையில் ஆசிரிய வளமும் சூழலும் இருக்கவில்லை.

12. பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் முதலாவது இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக (SLAS) தேர்வாகிய நீங்கள், உங்களுடைய சேவைக்காலத்தில் உங்களுடைய பிரதேசத்தில் செய்யக் கூடியதாக இருந்த பணிகள்?

உலக வங்கி வீட்டுத்திட்டத்தின் கீழ், பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் 446 வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத்திட்டத்தின் ஊடாகவே பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் இருந்த  ஓலைவீடுகள் கல்வீடுகளாக மாற்றப்பட்டன. இது ஒரு தொடக்கமாக இருந்தது. இப்பொழுது பச்சிலைப்பள்ளியில் ஓலை வீடுகளே இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இந்திராபுரம், அறத்தி நகர் போன்ற கிராமங்களில் பல அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. செல்வபுரம் – அல்லிப்பளை இணைப்பு வீதி போன்ற சில கிராமிய வீதிகள் மாகாணசபைக்கூடாகச் செய்து  கொடுக்கப்பட்டன.

13. நீங்களும் உங்கள் துணைவியார் திருமதி சுகுணரதி தெய்வேந்திரமும் இலங்கை நிர்வாக சேவையின் உயர் அதிகாரிகளாக இருந்தகாலத்தில் உங்கள் பணிகளைச் செய்வதற்கு என்ன வகையான ஆலோசனைகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் இருவரும் பரஸ்பரம் செய்துள்ளீர்கள்?

தொடர்பு பட்ட அபிவிருத்தித்திட்டங்களை விரைவாகச் செய்வதற்கும் பிரச்சினைகள் எழும்போது அவற்றை இலகுவாகத் தீர்த்து திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் இருவரும் பரஸ்பரமாகப் பேசிக் கொள்வோம். இருவரும் ஒரே துறையில் கற்றிருந்தது வசதியாக இருந்தது.

14.உங்களுடைய பணிகளுக்குப் பிள்ளைகளின் பங்களிப்பு?

பொதுவாக எனது அரச பணிக்காலத்தில் நான் நிறைவாக பல வேலைத் திட்டங்களைச்செய்துள்ளேன். அவை நிறைவாகுவதற்கு எனது மூன்று பிள்ளைகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். முக்கியமாக அவர்கள் தங்களுடைய நேரத்தை எனக்கு தந்தார்கள். எனக்குத் தந்தது என்பதன் அர்த்தம், அந்த நேரம் மக்களுக்காக அவர்கள் அளித்ததாகும்.

15.பளையில் – பச்சிலைப்பள்ளியில் மேற்கொள்ளக் கூடிய – மேற்கொள்ள வேண்டிய சமூக அபிவிருத்திப் பணிகளும் அரசியல் முன்னெடுப்புகளும்?

பச்சிலைப்பள்ளியில் நிறைய வளங்கள் உண்டு. ஆனால், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் உள்ளன. வளங்களைப் பயன்படுத்தாத தன்மைகளும் உண்டு. இன்று இங்கே நடப்பது இயற்கை வள அழிப்பும் சமூக விரேதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதுமாகும்.  வேலை வாய்ப்புக்காக ஆடைத்தொழிற்சாலை, கற்றாழை உற்பத்தி மற்றும் தொழிற்சாலை போன்றவற்றை அமைக்கலாம். பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நிறையப்பேர் புலம்பெயர்ந்து முதலீடுகளைச்செய்யக் கூடிய நிலையில் உள்ளனர். இயக்கச்சியில் உள்ள Reecha போன்ற தொழில் வாய்ப்புகளை வழங்கக் கூடிய முதலீடுகளைச் செய்யலாம். குளங்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்பிடியை மேற்கொள்ளலாம். பன்றி வளர்ப்பைச்செய்யலாம். இது போலப் பலவற்றைச் செய்யலாம். மனமுண்டானால் இடமுண்டு.