– அழகு குணசீலன் –
ஆதாம்…!
ஏவாள் …..!
இவர்களின் நிறம் என்ன?
யார் கறுப்பு ?
யார் வெள்ளை?
யேசுவின் பிறப்பை வால்வெள்ளி அறிவிக்க……
அத்திசை நோக்கி மூவேந்தர் வந்தனர்.
கஸ்பார், மெல்சியர், பால்தஸார்.
பொதி சுமந்த கழுதைகள் கூட நடந்தன.
மூவரில் இருவர் வெள்ளை….! ஒருவர் – கஸ்பார் கறுப்பாம்…
இங்கும் மூன்றில் இரண்டு வெள்ளை பெரும்பான்மை……!
நத்தார் தாத்தாவோடு ….. சாக்கு தூக்குவதும் ஒரு மனிதக்கழுதை.
அதுவும் கறுப்பு…..!
வெள்ளைக்கு கரிபூசி வேசம் போட்டிருப்பர்.
இங்கு ஐம்பதுக்கு ஐம்பது….! ஆனாலும் சாக்கை “கறுப்பு மனிதக் கழுதையே” சுமக்கும்.
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என யார் சொன்னது ?
சமமாயின் ஏன் இந்த கறுப்பும் வெள்ளையும்……?
இயற்கையைப் படைத்தவனும் அவன் என்றால் ….,
அதுவே கறுப்புக்கும் , வெள்ளைக்கும் காரணமானால்….
பாகுபாட்டை ஏன் படைத்தான்…..?
பன்றியை படைத்து “அதை” வைக்க மறந்ததால் பின்னால் எறிந்தான் ஒட்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள்.
மனிதர்களில் மட்டும் அவன் ஏன் இன்னும் நிறக்குருடனாய் இருக்கிறான்….?
கறுப்பை அல்லது வெள்ளையை கொஞ்சம் அள்ளி எறிய அவன் இன்னும் மறந்தது ஏனோ…?
அவன் படைப்பில் அனைவரும் சமம் அல்ல என்பதனாலா….?
அவன் விட்ட தவறு உலகம் அழிகிறது….எரிகிறது….மனிதம் மரணிக்கிறது…..
கறுப்பை அழித்து வெள்ளை அடிக்க அவனின் “ஆசி” பெற்ற அவர்கள்
அனைத்தும் செய்கிறார்கள்…..
கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு கறுப்பும், வெள்ளையுமே தீனி.
ஆனால் யாரும் அவனை பொறுப்பு சொல்வதில்லை …
மிஞ்சிப்போனால் விதி என்று அஞ்சி …கெஞ்சுகிறார்கள்.
அமெரிக்காவில் பல்கலைக்கழக அனுமதியில் கறுப்புமாணவர்களுக்கு அநீதி- புறக்கணிப்பு…!
பிரான்சில் கறுப்பு இளைஞனை சுட்டுக்கொன்ற வெள்ளைப் பொலிஸ்.
கறுப்பு அகதிகளை உகண்டாவுக்கு நாடுகடத்தும் ஆசிய இளம் கறுப்பு பிரதமரைக்கொண்ட இங்கிலாந்து.
சுனேக் : தோலால் கறுப்பு அடிமை பரம்பரை…. எனினும் மனதில் வெள்ளைத் திமிர்….!
ஆபிரிக்காவுக்கு இருண்ட கண்டம் என கறுப்பு கலர் தீட்டிய காலனித்துவ தொடரச்சியில் …… !
கறுப்பு அடிமைகளுக்கு இழைக்கப்ப்பட்ட அநியாயங்களுக்காக உதட்டளவில் மன்னிப்பு வெள்ளையடிக்கும் நெதர்லாந்து வெள்ளை மன்னர்.
ஆக, அன்றும் , இன்றும், என்றும் கறுப்பு – வெள்ளை சர்வதேச தீண்டாமை விவகாரம்….!
AFFIRMATIVE ACTION
———————
அவ்ரோஅமெரிக்க கறுப்பின மாணவர்களின் பல்கலைக்கழக சலுகை அனுமதிமுறைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அமெரிக்க சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது.
1960 களில் இருந்து நடைமுறையில் உள்ள இந்தமுறை தகுதியும், திறமையும் உள்ள அமெரிக்க, ஆசிய மாணவர்களுக்கு பாதகமானது என்று கூறுகிறது நீதிமன்றம்.
சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் சமசந்தர்ப்பம் மறுக்கப்படும் மாணவர்களுக்கு சமூகநீதியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் மற்றைய மாணவர்களை பாதிக்கிறது என்பது பழைமைவாத நீதிபதிகளின் வாதம்.
இந்த தீர்ப்பில் தனக்கு உடன்பாடில்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் , தனது பதவிக்காலத்தில் மூன்று பழைமைவாத நீதிபதிகளை நியமனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் இதனை வரவேற்றுள்ளார்.
இதன் மூலம் அவ்ரோஅமெரிக்க கறுப்பின மாணவர்கள் – இவர்கள் அமெரிக்க குடிகள், சொந்தநாட்டில் சமவாய்ப்பற்று மூன்றாம் தரப்பிரஜைகளாக நிற்கிறார்கள்.
அதிக சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புக்களை கொண்டுள்ள முதல்நிலை அமெரிக்க வெள்ளை மாணவர்களோடும்….
இன்றைய உலகமயமாக்கல் டிஜிட்டல் உலகில் அதிவிரைவில் வளர்ந்து வருகின்ற இரண்டாம் நிலை ஆசிய மாணவர்களோடும்……
சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஒரு கறுப்பின மாணவரால் திறமையின் அடிப்படையில் எவ்வாறு போட்டியிட முடியும்?
வெள்ளை, கறுப்பு , ஆசிய மாணவர் அமைப்புக்கள் கறுப்பின மாணவர்களுக்கு நிவாரணம் தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்….
ஆனாலும் கறுப்பினத்தவருக்கு ஊக்குவிப்பு என்றவகையில் அமையும் சலுகைத்திட்டம் வெள்ளை மாணவர்களையும் , ஆசிய மாணவர்களையும் புறக்கணிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள்.
அவர்களின் பார்வையில் ஒரு புறக்கணிப்பை தவிர்க்க மற்றொரு புறக்கணிப்பு ….
மாணவர்களிடமும் தீர்வு இல்லை….!
JUSTICE FOR NAHEL
———————————-
பெயர் நாகெல், வயது 17.
பிரான்ஸ் பொலிஸால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன்.
அவரின் தாயின் அழைப்பை ஏற்று நாகெலுக்கு நீதி கோரி ஆரம்பமான,
“வெள்ளை பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான துக்க பேரணி” வன்முறையில்…. பாரிஸ் எரிகிறது!
அவனை கொல்லுவதற்கு எந்தக்காரணமும் இல்லை. அப்படி எந்தப் பாரிய குற்றங்களும் அவன் செய்யவில்லை.
நாகெல் ஒரு குடியேறிகள் குடும்பத்தைச் சேர்ந்தவன், கறுப்பின இளைஞன். அதுவே அவன் செய்த குற்றம்.
அதுவே இளைய தலைமுறையின் சீற்றத்திற்கு காரணம். ஆபிரிக்காவை கொள்ளையடித்த கொடிய காலனித்துவத்தின் எச்சமாக இந்த இளைஞர்கள் பிரான்ஸ் வீதிகளில்…..
மேற்கு ஊடகங்களால் சமூகவிரோதிகள் – வன்முறையாளர்களாக காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
எதிர்காலம் குறித்து எந்த நம்பிக்கையும் அற்றவர்களாக …..அதற்கான வாய்ப்புக்களும்…..வசதிகளும் மறுக்கப்பட்டவர்களாக….!
பாரிஸ் வீதிகளில் நஈதஇகஓரஇ நிற்கிறார்கள் நாகெலுக்கு மட்டும் அல்ல, தங்களுக்கும் தான்….!
ஆனாலும் , 1789 பிரான்சிய புரட்சி சமத்துவம், சகோதரத்துவம் , விடுதலை பற்றி பேசுகிறது.
யூலை 14 இல் பிரான்ஸ் தேசியதினம் ….!
புரட்சியின் மகத்துவம் குறித்தும் , அதன் வரலாற்று பெறுமதிகள் குறித்தும் அங்கு பேசப்படும்.
அந்த பெறுமதிகள் அவர்களாலேயே பிரான்ஸ் வீதிகளில் சுட்டுவீழ்த்தப்படும் !
இன்னும் எத்தனை நாகெல்கள்…..?
PATEL & SUNAK POLITIC
————————
இந்திய- உகண்டா வம்சாவழியைச் சேர்ந்தவர் இங்கிலாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் பிரிட்ரி சுசில் பட்டேல்.
ஆபிரிக்க அகதிகளை உகண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தின் சூத்திரதாரி அம்மையார்.
ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் செங்கன் ஒப்பந்தத்தின் படி ஒன்றிய நாடு ஒன்றில் இருந்து அகதிகள் மற்றொரு ஒன்றிய நாட்டுக்குள் பிரவேசித்தால் அவர்கள் முதலில் வந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்.
இதை செய்வதற்கு BREXIT க்கு முன்னர் இருந்தே இங்கிலாந்தும் பிரான்சும் ஒரு இணக்கத்திற்கு வரமுடியவில்லை.
2018 இல் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்துள்ளனர்.
இவர்களை பின்கதவு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் உகண்டாவுக்கு நாடுகடத்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இதில் வருந்தத்தக்கது என்னவெனில் திட்டத்தை முன்மொழிந்த பட்டேலும், இன்றைய பிரதமர் சுனேக்கும் இந்திய வம்சாவழியினர்.
வந்தேறுகுடிகள் …..!
உகண்டாவில் ஆபிரிக்க அகதிகளுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பும், எதிர்காலமும் என்ன ?
ஐரோப்பா தனது அகதிகள் பிரச்சினையை வெறுமனே ஆபிரிக்காவுக்கு இடம் மாற்றுகிறது.
லண்டனில் கறுப்பு குறைந்து வெள்ளை கூடுமாம்!
DUTCH SLAVE TRADE
——————–
ஒல்லாந்தர் காலனித்துவ ஆட்சியில் ஆபிரிக்காவில் இருந்து ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடிமைகளாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
1596 க்கும் 1829 க்கும் இடைப்பட்ட இந்தக் காலப்பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரத்தை ஊடறுத்து கரீபியன் தீவுகளுக்கு கொண்டு வரப்பட்ட அடிமைகள் அங்கிருந்து அமெரிக்காவுக்கு மறு விற்பனை Resale செய்யப்பட்டார்கள்.
ஒல்லாந்து காலனியான டச் குஜானா, மற்றும் சூரினாம் நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் கரும்புத்தோட்ட அடிமைக்கூலிகளாக விற்கப்பட்டார்கள்.
ஆய்வுகளின் படி 1738 முதல் 1780 வரையான காலப்பகுதியில் ஒல்லாந்தின் பொருளாதார வளர்ச்சியில் 40 வீதம் அடிமைகள் வியாபாரமாக இருந்திருக்கிறது.
இந்த மிருகத்தனமான வர்த்தகத்திற்காக நெதர்லாந்தின் மன்னர் வில்லியம் அலெக்ஸாண்டர் கடந்தவாரம் மன்னிப்புக் கோரி இருந்ததுடன் தன்வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஆபிரிக்க சமூகத்தினர் இந்த மனிதநேயமற்ற அடிமைகள் வியாபாரத்தைத் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இவை எதுவும் தங்களோடு சம்பந்தமற்றவை என்று இன்னும் ஈழக்கனவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தாங்கள் வெள்ளையர்கள் என்ற மனநோயுடன் ……
சக ஆபிரிக்க அகதிகளை “கறுவல்கள்” என்று அழைப்பதை என்ன என்பது?
இவர்களுக்கான ஈழ விடுதலை (?) இன்னும் வெகு தூரத்தில் இல்லை…!