— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
29.04.2023 ‘ஈழநாடு’ பத்திரிகையின் 3 ஆம் பக்கத்தில் ‘ஈழநாடு’ வின் கருத்துக்கு மறவன் புலவுசச்சி மறுப்பு என்ற மகுடத்தின் கீழ் மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் ஈழநாட்டிற்கு எழுதியிருந்த கடிதம் (அல்லது கட்டுரை) பிரசுரமாகியிருந்தது.
மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடைய அத்தனை கருத்துக்களுடனும் -அரசியல் மற்றும் மதம் சார்ந்த அவரது அத்தனை நிலைப்பாடுகளுடனும் இப்பத்தி எழுத்தாளருக்கு முற்றுமுழுதான உடன்பாடில்லையென்றபோதிலும் இக்கடிதத்தில் (அல்லது கட்டுரையில்) அவர் வடித்திருக்கின்ற சில வரிகள் என் கவனத்தை ஈர்த்தன.
“இந்தியாவை ஆள்வது அரசியல் கட்சிகள் என மேம்போக்காகத் தெரிந்திருந்தாலும் இறுக்கமான ஆட்சிக் கட்டமைப்பே – ஆட்சி அலுவலர்களே இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் புத்தர்களை நம்பலாம் தமிழர்களை நம்ப முடியாது என இந்திய ஆட்சிக்கட்டமைப்பில் உள்ளவர்கள் இறுக்கமாகக் கருதுகிறார்கள். அத்தகைய கருத்துக்களை ஆளும் கட்சியாக எவர் வந்தாலும் அவர்களிடம் ஆலோசனையாக இந்திய ஆட்சி அலுவலர் இந்தியப் படை அலுவலர் சொல்கிறார்கள்.
இந்தியாவின் தெற்கெல்லைப் பாதுகாப்புக்குத் தமிழர்களே அரணாவர் என இங்குள்ள சிலரின் கூற்று வெறும் மாயை“
இவைகளே என் கவனத்தை ஈர்த்த வரிகள்.
மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்கள் நான் அறிந்த வரை 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெற்ற காலத்திலிருந்து தமிழ்மொழி – கலை -இலக்கிய-பண்பாட்டு வளர்ச்சிக்கு அக்கறையோடு இயங்கிவரும் செயற்பாட்டாளர் – ஐநா நிறுவனத்தில் மீன்பிடித் துறை சார்ந்த துறைசார் ஆலோசராகக் கடமையாற்றியவர்- பல நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்-சர்வதேச மட்டத்தில், தமிழ்நாடு மாநில மற்றும் டில்லி மத்திய அரச மட்டத்தில், இலங்கையின் அரச மட்டத்தில் பல முக்கியஸ்தர்களுடன் தொடர்புள்ள ஆளுமையாளர் -தமிழ்நாடு சென்னையில் ‘காந்தளகம்’ என்னும் பதிப்பகத்தை நிறுவிப் பல நூறு நூல்களை வெளியிட்டுப் பதிப்புத் துறையில் சாதனை படைத்தவர் -அகவை எண்பத்தைந்தைத் தாண்டிய அனுபவசாலி. அவருடைய பலம் பலவீனங்களுக்கும் அவர்மீது மற்றவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் அப்பால் வடக்கு கிழக்குத் தமிழர்களிடையே இன்றுள்ள செயற்பாட்டு அறிவு ஜீவிகளில் விரல் விட்டுக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர்.
இவரது இந்தக் கூற்றின் உட்கிடக்கையை-அரசியல் நுட்பத்தை-எதார்த்தத்தை ஈழத் தமிழர்தரப்பு அரசியற் சமூகம் கவனத்திற் கொள்வது அவசியம்.
1983 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் இறுக்கமான நேச சக்தியாக 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் வரை செயற்பட்ட இந்திய மத்திய அரசு பின்பு ஈழத் தமிழர்கள் விடயத்திற் பட்டும் படாமலும் பாராமுகமாகவும் இருந்தமைக்கான – முள்ளி வாய்க்கால் யுத்தத்தின் போது புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டமைக்கான காரணம் என்ன?
மறவன் புலவு சச்சிதானந்தன் கூறியிருப்பது போல இலங்கையில் ‘புத்தர்களை நம்பலாம் தமிழர்களை நம்ப முடியாது’ என்ற கருத்துருவாக்கம் இந்தியர்களிடையே ஏற்படக் காரணம் என்ன?
இவைகளைப் பற்றி ஆராயாமல்-இந்தியாவுக்கெதிராகவும் இந்திய அமைதி காக்கும் படைக்கெதிராகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் புரிந்த அரசியல் மற்றும் இராணுவச் செயற்பாடுகளை அரசியற் பகுப்பாய்வு அடிப்படையில் சுய விமர்சனத்திற்குட்படுத்தாமல் சும்மா எடுத்ததெற்கெல்லாம் இந்தியாவைச் ‘சொட்டை’ சொல்வதில் எந்த நன்மைகளும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லையென்பதையே மறவன் புலவு சச்சிதானந்தன் பூடகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தெற்கெல்லைப் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டுமென்று இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவின் தெற்கெல்லைப் பாதுகாப்புக்கு ஈழத் தமிழர்களே அரணாவர் என்று தமிழ் மக்களிடையேயுள்ள அரசியல் பிரமுகர்கள் சிலர் பொது வெளியில் கருத்துக் கூறுவது (அதில் உண்மையிருந்தாலும் கூட) அதிகப் பிரசங்கித்தனம் மட்டுமல்ல சுத்த அபத்தமுமாகும். ‘தலைக்குமிஞ்சிய தலப்பாக்கட்டு’ என்றே இதைக் கூறலாம். இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கத் தேவையில்லை. இந்தியாவைப் பாதுகாக்க இந்தியாவுக்குத் தெரியும். இதனைச் சுட்டிக் காட்டவே மறவன் புலவு சச்சிதானந்தன் ‘இந்தியாவின் தெற்கெல்லைப் பாதுகாப்புக்குத் தமிழர்களே அரணாவர் என இங்குள்ள சிலரின் கூற்று வெறும் மாயை’ எனக் கூறினார் போலும்.
தம்மைத்தாமே ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என அழைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அதன் புலம்பெயர் முகவர்களுக்கும் தலையையும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கைக்கு வருகைதரும் இந்திய ராஜதந்திரிகளுக்கும் வாலையும் காட்டி இரட்டை வேட ‘விலாங்கு மீன்’ அரசியல் செய்யும் அனைத்துச் சக்திகளையும் ஜனநாயக ரீதியான தேர்தல்கள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் முற்றாக நிராகரித்து இந்தியாவை உளமாற அனுசரித்து இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் முழுமையான – முறையான அமுலாக்கலை இதய சுத்தியுடன் அவாவி நிற்கும் அரசியல் சக்திகளை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே இந்திய ஆட்சி அலுவலர் -இந்தியப் படை அலுவலர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஈழத் தமிழர்களின் மீது மீண்டும் நம்பிக்கை பிறப்பதற்கான பிள்ளையார் சுழி இடப்படும். ஈழத் தமிழர் தரப்பு அரசியல் சமூகம் இது குறித்து ‘சீரியஸ்’ ஆகச் சிந்திக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் இன்றைய அவசரமான – முன்னுரிமைத் தேவை, ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதாகும் என்பதையே மறவன் புலவுசச்சிதானந்தத்தின் மேற்படி ‘ஈழநாடு’ பத்திரிகைக் கூற்று மிக நுட்பமாகச் சுட்டிக் காட்டுகிறது.