— வீரகத்தி தனபாலசிங்கம் —
புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழும் இலங்கை தமிழ்பேசும் சமூகத்தின் மத்தியில் இன்று இருக்கக்கூடிய அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர் பேராசிரியர் என்.சண்முகரத்தினம். சுமார் நான்கு தசாப்தங்களாக நோர்வேயில் வாழ்ந்துவரும் அவரின் பல்கலைக்கழக கல்வி, அதன் ஆய்வுத்துறை சார்ந்த பங்களிப்புகளுடன் அரசியல் சமூகம் சார்ந்த எழுத்து மற்றும் சிந்தனைப் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமானவை.
இளவயதில் இருந்தே இடதுசாரி அரசியலில் ஆர்வத்தை கொண்டிருந்த அவர் 1960 களின் நடுப்பகுதியில் இருந்து சொந்தப் பெயரிலும் சமுத்திரன் எனும் புனைபெயரிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரசியல், சமூக விடயங்கள் மற்றும் கலை இலக்கியம் தொடர்பான சிந்தனையை தூண்டும் பெருவாரியான கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறார்.
அவரின் கட்டுரைகளின் மத்தியில் இருந்து தெரிந்தெடுத்து ‘சமுத்திரன் எழுத்துக்கள்’ என்ற தலைப்பில் நான்கு தொகுப்பு நூல்களை லண்டனில் இயங்கும் சமூக இயல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வெளியீட்டு வைபவம் நோர்வேயில் கடந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள அரசியல், சமூக, கலை இலக்கிய ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்து அந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி 01 ‘இலங்கை மீள்சிந்திப்புக்கான சில முன்மொழிவுகள் ‘ என்ற தலைப்பில் தேசிய இனப்பிரச்சினை, பெருந்தேசியவாதம், இலங்கை இடதுசாரிகள், தமிழ்தேசியவாதம், இந்திய மேலாதிக்கம், தேசியக்கொடி, நிலம், பொருளாதாரம், அபிவிருத்தி, சமூகமேம்பாடு, தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்களவர்கள், புலம்பெயர் சமூகம் என்ற விடயதானங்களை அலசும் 13 கட்டுரைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தொகுதி 02 மாக்சியம், முதலாளித்துவம், இயற்கை, ஜனநாயகம், மூலதனம், உலகமயமாக்கம், நவதாராளவாதம், தொழிலாளர் வர்க்கம், ஏகாதிபத்தியம், யுத்தம், சமாதானம், கொவிட் என்ற விடயதானங்களை அலசும் பத்து கட்டுரைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தொகுதி 03 கலை இலக்கியம், சமூகம், அரசியல், உரையாடல், விவாதம், எதிர்வினை, வாசிப்பு, நினைவு அஞ்சலி என்பவற்றை பற்றிய 12 கட்டுரைகளை கொண்டிருக்கிறது.
தொகுதி 04 இலங்கை தேசிய இனப்பிரச்சினை, சிங்கள பெரும்தேசிய இனவாதத்தின்அடிப்படைகளும் மேலாதிக்கமும பற்றி அலசும் நான்கு கட்டுரைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நான்கு தொகுதிகளுக்கும் பதிப்புரையை எழுதியிருக்கும் லண்டனில் வாழும் கலை இலக்கிய மற்றும் சமூக செயற்பாட்டாளரான எம்.பௌசர், “கடந்த காலத்தை கறாராக மீள்மதிப்பிடுவது மட்டுமல்ல இன்றைய காலத்தின் அரசியல் மற்றும் சமூகத் தளங்களை செப்பனிட்டு முன்னோக்கிச் செல்லவேண்டிய தேவையும் அவசியமும் நம் முன் உள்ளது. அதற்கான அடிப்படைகளையும் சமூகநீதிக்கும் சமத்துவத்துக்குமான மனிதத்தின் அடியாளத்தை சமுத்திரன் எழுத்துக்கள் நம் முன்வைக்கின்றன, வலியுறுத்துகின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சண்முகரத்தினம் நீண்டகால அரசியல், சமூகச் செயற்பாட்டையும் அறிவார்ந்த பங்களிப்புமிகு நம் காலகட்டத்தின் பல்துறை ஆற்றல்களையும் கொண்ட ஒரு அறிவாளர். இந்த தொகுப்புகளில் உள்ள எழுத்துக்கள் இலங்கையின் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேற்பட்ட சமூக அரசியல் வரலாற்றின் மிகவும் முக்கியமான பதிவுகளாகும்.
இவை சமுத்திரன் என்கிற ஒரு தனிமனிதரின் கருத்துக்கள், பார்வைகள் என்பதனையும் தாண்டி இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார வரலாற்றின் மிக முக்கிய பதிவுகளாக மாறும் விரிந்த அரசியல் பண்பைக் கொண்டவையாகும். இந்த வரலாற்றில் ஈடுபாடும் கற்றலுக்கான தேடல் கொண்டோருக்கும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கைவாழ் அனைத்து மக்களினதும் சமத்துவமான இருப்பிலும் வாழ்விலும் அக்கறையும் அரசியல் நோக்கமும் கொண்ட மக்கள் ஜனநாயகப் பிரிவினருக்கும் சமுத்திரன் எழுத்துக்கள் மிக அவசியமான அரசியல், சமூக ஆவணமாகும் என்றும் பௌசர் கூறியிருக்கிறார்.
இந்த தொகுப்பு நூல்களில் உள்ள எழுத்துக்கள், மதிப்பீடுகள், கருத்துக்கள் தான் வரித்துக்கொண்ட அரசியல் கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்ட பார்வைகள்தான் என்பதை கூறும் சண்முகரத்தினம் நூல்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் நிலைபெறு மனித மேம்பாடு ஆகியவற்றை மக்கள் ஜனநாயகத்துக்கான போராடடத்துடன் இணைக்கும் சவால் பற்றிய திறந்த விவாதங்களுக்கு உதவுமாயின் பெரும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தொகுப்புக்கள் எப்போதோ வெளிவந்திருக்கவேண்டியவை என்று கூறியிருக்கும் பதிப்பாசிரியர் பௌசர் காலத்தின் தேவையான இந்த பணியை அர்ப்பணிப்புடன் செய்தமைக்காக மிகுந்த பாராட்டுக்குரியவர்.