— அகரன் —
அன்று பேருந்துக்காக காத்திருந்தேன். அது பதிவாகிய நேரத்திற்கு வரவில்லை. பாரிசில் போராட்டங்கள் நினைத்த நேரத்தில் நடக்கும், நினைக்காத நேரத்திலும் நடக்கும். அது ஒரு வாழ்க்கை முறை. வளர்ந்த நாடாக இருந்தாலும் தங்கள் உரிமைகளில் எந்தக் காற்று தீண்டினாலும் பிரெஞ்சு மக்கள் புயலாவதற்கு தயாராகவே இருப்பார்கள். வீட்டுக்கு நடந்து செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
முப்பது நிமிடங்கள் நடந்தால் வீடு வந்துவிடும். நிச்சயமற்ற பேரூந்தை விட நிச்சயமான கால்கள் நம்பிக்கை நிறைந்தது. நடக்க ஆரம்பித்தேன். வழி நெடுக வீதி விளக்குகள். அருகே செல்லும் வாகனங்கள் 30 km வேகத்தை தாண்ட முடியாது. அன்று வீதி நிறைந்து கிடந்தது. வாகனங்களை நான் முந்துவதும், அவை என்னை முந்தும் பின்பு வாகனங்களை நான் முந்துவதும் நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு காட்சி கடைக்கண்ணில் பதிவாகியது. அப்படியான காட்சி மிக அரிதானது. ஓர்விலை உயர்ந்த கார். மின்சாரத்தில் இயங்கும் ரெஸ்லா 4×4. அந்தக்காருக்குள் அதன் கண்ணாடிகளைத் தாண்டி வசைபாடும் சத்தம் வந்தது. சட்டென்று பார்த்தேன். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் வாழ்ந்துவிட்ட உயர்தர ஆடை, அடையாளங்கள் கொண்ட பெண், வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கும் ஆணைப்பார்த்து கடுமையாக திட்டிக்கொண்டிந்தார்.
அந்த ஆண் ஏதேதோ சொல்ல வாய் திறந்தார். ஆனால் அந்தப் பெண்மணி அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. அவர்களுடைய வாகனம் முன்னால் நகர்ந்தது. எனக்காக வீதி விளக்கு சிகப்பு விளக்கை காட்டி மீண்டும் அவர்களை நிறுத்தியது. மிக ஆர்வமுற்று அந்த ஆணின் முகத்தை அவதானித்தேன். அவர் முகம் எந்த வெறுப்பையும் காட்டாது பெண்ணை பேச விட்டு அமைதியாக ஏதோ சொல்ல முயன்று தோற்றார். அப்பெண் கையில் வேப்பிலை கொடுக்கத்தக்க நிலையில் இருந்தாள்.
இந்த நிகழ்வை பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி உண்டாயிற்று. பிரெஞ்சு குடும்பம் ஒன்று சண்டையிடும் காட்சி அவ்வளவு இலகுவாகக் கிடைக்குமா என்ன?
நான் மகிழ்ந்ததிற்கு மற்றொரு காரணம் அந்த ஆண் அப் பெண்ணின் கோபத்திற்கு கொடுத்த முக்கியமும், அவளின் கோபத்திற்கு வன்முறையிலும், மென் முறையிலும் காட்டாத எதிர்ப்பு. பெண்ணுக்கு அவர் கொடுக்கும் மகத்தான முக்கியத்துவத்தை பார்த்து வியந்தேன்.
இதே நேரம் எங்கள் ஊரில் நடைபெறும் சண்டைகளை நினைத்துப் பார்த்தேன். காட்சிகள் கோரமான வடிவங்களோடு அறுபடாமல் வந்தபடி இருந்தது.
அண்மையில் பெண்களால் அவர்கள் விடுதலையை முன்வைத்த இரு நாவல்களை படித்தேன். ஒன்று கே.வி ஷைலஜா எழுதிய சஹிதா. மற்றையது மாஜிதா எழுதிய பர்தா.
சஹிதா நாவல் ஓர் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து வாழ்ந்து மகளின் பதினெட்டாவது வயதில் குடும்ப வாழ்வை உதறி பின்பு ஒர் ஐரோப்பிய நண்பருடன் இணைந்து நலம் குன்றிய குழந்தைகளை வளர்க்கும் மாபெரும் தாயாக மாற மனம் விரும்புகிறாள்.
ஆனால் மிக அன்பான கணவன். பதினெட்டு வயதை அடைந்த தன் மகள். இவர்களை விட்டு அவள் செல்லவேண்டும். இது எப்படிச் சாத்தியம் என்பது நமக்கு மட்டுமல்ல அவளுக்கும் பெரும் மனப்போராட்டமாக நீள்கிறது.
கணவனின் குடும்பம் கடும் எதிர்ப்பையும் மத அடையாளங்களை இனங்காட்டி வதைக்கிறது. ஆனால் கணவன் பெரு மனதோடு தன்னோடு பதினெட்டு வருடமாக வாழ்ந்து பணிகள் செய்த தன் மனைவியின் மன விருப்பை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறான். மகள் கூட ‘அம்மா நான் வளர்ந்து விட்டேன். நீ உன் ஆசைப்படி வாழ வேண்டும்’ என்று உற்சாகப்படுத்துகிறாள்.
சஹிதா வின் மனம் கணவனையும், மகளையும் விட்டு பிரியவும் முடியாமல் ஓர் குழந்தைக்கு மட்டும் தாயாக வாழ்ந்து விட முடியாமல் வேகி கண்கள் கரைந்து உருகி ஓடுகிறது.
குடும்பமே சேர்ந்திருந்தது பேசி சஹிதா அந்த ஜரோப்பிய நண்பருடன் செல்லும் நாள் தீர்மானிக்கப்படுகிறது. கணவன் அவரிடம் தன் மனைவியை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்புகிறான். சஹிதா புதிய கனவை நோக்கி வீட்டில் இருந்து வெளியேறி ஓர் பெரு ஆன்ம வெளிக்குச் செல்கிறாள்.
இந்த நாவல் பெண் கட்டுப்பாடுகளில் இருந்து மீளும் மாபெரும் விடுதலையை பேசுகிறது. குறிப்பாக இந்த நாவல் நடைபெற்ற ஓர் சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட நாவல் என்பதை அறிந்தபோது ஆச்சரியமும், நம்பிக்கையும் ஒருங்கே கை கூடியது.
மற்றையது இந்த ஆண்டு வெளியான பர்தா. பர்தா இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமத்தில் உள்ள சிறுமியின் நினைவுகளின் பர்தா பற்றிய குறிப்புகள் என்று கூறலாம். பெருநாவலாக இல்லாத இடத்தும் நிகழ்காலத்தில் ஈரானில் நிகழும் போராட்டத்தின் மற்றொரு மனப்போராட்ட பிரதியாக இதைப் பார்க்கலாம்.
ஈரானில் மாசா அமினி என்ற பெண் நிஜாப் அணியாத காரணத்தால் கைது செய்யப்பட்டு காவல்துறையின் காவலில் இறந்த போது தொடங்கிய ஈரான் பெண்களின் உரிமை ஆட்டம் ஈரானின் வரலாற்றை குலுக்கி நிற்கிறது.
இந்த நாட்களில் இலண்டனில் வாழும் மாஜிதா எழுதிய ‘பர்தா’ என்ற நாவலும் ஒருவகை உரிமை ஆட்டம்தான். (தை, 2023, எதிர் வெளியீடு)
மதங்களால் பின்னப்பட்ட மனிதர் அதில் இருந்து வெளியேற கடவுள் அனுமதித்தாலும் மதத்தார் விடுவதில்லை.
இலங்கையில் நடைபெற்ற பெரிய வெள்ளி தாக்குதல் நினைவஞ்சலி லண்டனில் நடைபெற அதில் பங்கெடுப்பதில் ஆரம்பிக்கிறது நாவல்.
கிழக்கிலங்கையின் கிராமம் ஒன்றில் வாழும் சிறுமியான சுரையாவிற்கு டயானா போல் முடிவெட்ட ஆசை வந்துவிடுகிறது. அவள் தந்தையும் அதை மகிழ்வோடு நிறைவேற்றுகிறார்.
அவள் படிக்கும் பள்ளிக்கு ஈரானுக்கு சென்று வந்த திருவாளர் மூலம் பர்தா கட்டாயமாக்கப்படுகிறது.
அதை அமுல்படுத்தும் பொறுப்பு அவள் தந்தைக்கு பெருமையுடன் வந்துசேர்கிறது.
திடீரென வந்த பர்தாவை மகளே ஏற்க மறுக்கிறாள். தாயார் கட்டாயப்படுத்தும் போது அவள் பச்சைமிளகாய் தண்டணைக்கு உள்ளாகிறாள்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பர்தாவை எதிர்த்து அவள் நிகழ்த்தும் மனமிடை ஓர்மம். கட்டாயப்படுத்தும் சக ஆணை எதிர்த்துக் கேட்கும் கேள்வி, என சுரையா தனி மனித வேள்வி.
பின்பு காதல், லண்டன் வருகை. அங்கே வாய்த்த நண்பி தான் விரும்பி பர்தா அணிவதாகக் கூறுவதும் மாறுபட்ட மாயை இருளின் கேள்விகளும் நிதானமாக முன்வைக்கப்படுகிறது.
லண்டனில் தன் பிள்ளைகள் இஸ்லாமிய கல்வியை பெற பர்தா அவசியம் என்று பள்ளிகள் நிராகரிப்பதென சென்ற இடமெங்கும் பர்தா சுரையாவோடு போராடுகிறது.
குழந்தைகளோடு ஊர்திரும்பி முதுமை அரவணைத்த தன் பெற்றோரையும், பர்தாவால் திட்டமிட்டு மூடப்பட்ட ஊரையும், அங்கு இஸ்லாமிய மக்களுக்குள் நடைபெறும் பர்தா அரசியலையும் மிக கவனமாகவும் இயல்பாகவும் எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களின் மனவெளியை நிதானத்துடன் எழுதிய மாஜிதா கிழக்கிலங்கை கிராமத்தை தன் பர்தா கதவு மூலம் திறந்து விட்டுள்ளார்.
ஈரானுக்கு சென்று வந்த மௌலவியின் பயணப் பரிசாக இலங்கையில் அறிமுகமான பர்தா, ஈரானில் புரட்சி வெடித்திருக்கும் இக்காலத்தில் வெளிவந்திருப்பதும் அதை மாஜிதா தன் முதல் நாவலாக எழுதியிருப்பதும் புரட்சிதான்.
பெண்களுக்கான இடமும் அடக்குமுறையும் உலகெங்கிலும் இருந்தாலும் இவை பற்றிய புரிதல் சமூக விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து மருந்திட வழிநடத்துவோர் தயார் இல்லை. அவர்கள் மூளை எங்குமே புண்கள். முதலில் அதை ஆற்றவே மருந்தில்லை. ஆனால் இலக்கியம் சமூகத்தின் நோய்களுக்கு மருந்தாகும். அதற்கு குழந்தைகளை கற்பவர்களாக ஆக்குதல் முதற்கடன்.
2015 ஆம் ஆண்டு வரை நோபல் பரிசு பெற்றவர்களில் 822 பேர் ஆண்கள். 48 பேர் மட்டுமே பெண்கள். இதற்கு காரணம் ஆண்கள் மூளை சக்திவாய்ந்தது என்பதல்ல. அதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படாமையே. மகத்தான செயலைச் செய்யும் ஆண்களின் மூளையை தன் வயிற்றில் உருவாக்குபவள் பெண் என்ற புரிதல் ஆணுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வரவேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு சமமாக பெண்களின் வாய்ப்பை முன்னுரிமையை மறுப்பவர்கள் பெண்கள்.
வில்லியம் கோல்டிங் ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு இலக்கியத்திற்கு வந்தவர். நோபல் பரிசு பெற்றவர். அவர் “பெண்கள் ஆண்களோடு சமமாக இருப்பதைப்போல நடிப்பது முட்டாள்தனமானது. அவர்கள் ஆண்களை விட பல மடங்கு மேன்மையானவர்கள். அவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதை அவர்கள் பிரமாண்டமாக்கிக் காட்டுவார்கள். ஒரு துளி விந்தைக் கொடுத்தால் அவள் ஓர் குழந்தையை கொடுப்பாள்“ என்றார்.
சிந்தித்தால் பெண் மாபெரும் படைப்பாளி. அவளே மானுடத்தின் ஆதாரம். ஆணை பூமிக்கு அறிமுகப்படுத்துபவளே அவள் தான். முதலில் இதை பெண்கள் உணரவேண்டும். அதை விடுத்து ஆணுக்கு நிகராக ஆடை அணிவதில் இல்லை புரிதல்.
மானுட வரலாற்றின் மகத்தானதும், மோசமானதுமான புரட்சி 1789 இல் பாரிசில் நடந்தது. புரட்சிக்குப் பின் அவர்கள் உரிமை சாசனம் எழுதினர். அந்த உரிமை சாசனத்தின் பெயர் ‘ஆண்களின் உரிமைகள்’ . அதற்கு நிகராக போராடி பெண்களின் உரிமைகளை அறிவித்த பெண்ணை அதே புரட்சியாளர்கள் மன்னனை கொன்ற கரங்களால் கொன்றார்கள். பெண்களின் நிலை அத்தனை மோசமாக அன்று இருந்தது. அதே வீதியில் இன்று ஆணை விட பெண்ணுக்கு சட்டமும், சமூகமும் முன்னுரிமை அளிக்கிறது. பிரெஞ்சு விருந்தொன்றில் உணவு பரிமாறுவதாக இருந்தால் முதலில் பெண்ணுக்குத்தான் பரிமாறுவார்கள். யாரும் விருந்தினர் வந்தால் பெண்ணிடமே முதல் வணக்கமும், நலமும் விசாரிப்பார்கள். இது சட்டமல்ல பண்பாடாக இந்த இருநூறு ஆண்டுகளில் நடந்த மகத்துவ மாற்றம்.
அந்த பெண் கோபங்கொண்டு பேசும்போது. பொறுமையோடு கேட்கும் ஆணை நினைத்தபோது பெருமையாக இருந்தது. முதலில் என் வீட்டில் இதை நான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நினைவுகளில் இருந்து விடுபட வீடு வந்து சேர்ந்திருந்தேன். வேலை விட்டு வருவதால் கடும் பசி வயிற்றில் கலையாடிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்து நுழைந்தேன். மனைவியைக் காணவில்லை. வீடு தனித்திருந்து. சமையலறை சென்றேன். சமைத்த அடையாளங்களில்லை. வந்தது கோபம். கலையாட ஆரம்பித்தேன்.