— அழகு குணசீலன் —
இலங்கையின் அரசியல் களத்தில் ஒரு காலத்தில் ஜனநாயக அரசியலில் எங்கோ ஒரு மூலையில் கிடந்த ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி. இன்று முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் ராஜபக்சேக்களின் ஆட்சி மட்டும் அல்ல அதைத் தொடர்ந்த ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியும் தான். இந்த இருதரப்பு ஆட்சியும் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை மற்றைய கட்சிகள் அனைத்தையும் விடவும் சிறப்பாக பயன்படுத்துகிற ஒரு கட்சி என்றால் அது ஜே.வி.பியே.
எதிரணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா விட்ட / விடும் அரசியல் தவறுகளுக்குள்ளும் ஓட்டைகளுக்குள்ளும் புகுந்து விளையாடுகிறார் அனுரகுமார. இந்த வாய்ப்பை ஜே.வி.பிக்கும் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவுக்கும் தூக்கிக்கொடுத்தவர் சஜீத் பிரேமதாசா. நெருக்கடியான காலத்தில் இலங்கை அரசியலுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கமுடியாத அவரது பலவீனம் மக்களால் அடையாளம் காணப்பட்டதால் அது அனுரவுக்கு கிடைத்துள்ள மேலதிக அரசியல் “போனஸ்” ஆக உள்ளது.
இலங்கையின் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வொன்றைக்கான மரபுரீதியான ஆளும்தரப்பும், எதிரணியின் மரபு ரீதியான கட்சிகளும் தவறியுள்ள நிலையில் மூன்றாவது சக்தி ஒன்றின் தேவையை மக்கள் உணர்ந்ததன் விளைவு இது.
இந்த மக்கள் அதிருப்தி அலையில் அனுரகுமார திசாநாயக்க தனது தலைமைத்துவத்தை மிகவும் இலகுவாக மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முடிகிறது. காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஊடாக நகர்ந்து தற்போது அரசாங்க எதிர்ப்புப் பேரணியாகவும், போராட்டமாகவும் மாறியிருக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையின் எரிகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடினால் மற்றைய மரபுக்கட்சிகள் போன்றே ஜே.வி.பி.யினரும் வெறும் கையை விரிக்கின்றனர்.
வெறும் அதிருப்தி அலையை அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் மத்தியில் அரசியல் தனது தேவைக்கு பயன்படுத்தலாமே ஒழிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. இதுவே ஜே.வி.பி.யின் இன்றைய நிலை. மரபுவழி அரசியல் கோரும் ஆட்சி மாற்றம் சமகால நெருக்கடிகளுக்கான உடனடியாகவும் தற்காலிக -நீண்டகால தீர்வுகளுக்கான சரியான அணுகுமுறையாக அமைய முடியாது. தேவை நெருக்கடிகாலத்திற்கான, தேசிய நலன்சார்ந்த கட்சிகளுக்கிடையான ஒருங்கிணைந்த செயற்பாடு. இதை இலங்கை அரசியலில் வலை போட்டு தேடியும் காணமுடியவில்லை.
குறிப்பாக இனநெருக்கடிக்கான தீர்வில் 13 வது திருத்தத்தை எதிர்க்கும் ஜே.வி.பி. அதற்கான மாற்றுத்தீர்வை வெளிப்படையாக இதுவரை முன் வைக்கவில்லை. இது சிங்கள பேரினவாத கட்சிகளின் மரபுவழி வழமையான பாணி, எனினும் ஜே.வி.பி.யும் அதே சாக்கடையிலேயே வீழ்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கான தீர்வில் மேற்குலக, இந்திய உதவிகள், ஆலோசனைகள் அனைத்தையும் நிராகரிப்பதுடன் ஆலோசனைகள், உதவிகளை ஆக்கிரமிப்புகளாக அக் கட்சி நோக்குகிறது. இந்த நோக்கை இடதுசாரி பாராளுமன்ற அரசியல் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டாலும் இன்றைய உலகமயமாக்க, பிராந்திய பூகோள அரசியல் சூழலில் இருக்கக்கூடிய மாற்றுவழி என்ன? அந்த மாற்று வழியை ஜே.வி.பி. இன்னும் ஏன் முன்வைக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது.
இதனால்தான் ஜே.வி.பியின் மணியோசை (சின்னம்) இலங்கைக்கு அபாய ஒலியாகவும், தேசிய மக்கள் சக்தி என்.பி.பி. யின் சின்னம் திசைகாட்டி காட்டும் திசை தவறானதாகவும் இருக்கிறது. இனப்பிரச்சினைதீர்வுக்கான 13வது திருத்தத்தை ஜே.வி.பி. நிராகரித்திருப்பது அது சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாது என்ற நிலைப்பாட்டில் இல்லை. மாறாக சிங்கள பௌத்த பேரினவாதிகளுடன் ஒத்து ஓடுகின்ற, ஒத்து ஊதுகின்ற ஒரு நிலைப்பாடாகும். ஜனநாயக அரசியலில் எந்த ஒரு முன்மொழிவையும் நிராகரிப்பதென்றால் அதற்கான மாற்று முன்மொழிவை முன்வைக்க வேண்டும் அதை ஜே.வி.பி. செய்யாதவரை அதுவும் ஒழித்துப்பிடித்து விளையாடவே விரும்புகிறது.
வெறும் அரிவாளும் சுத்தியலையும், சிவப்புச்சட்டையையும், அக்ரோசமான கோசங்களையும், அனுரகுமார மீதான தனிநபர் கவர்ச்சியையும் கொண்டு ஒரு கட்சியின் சரியான கொள்கை நிலைப்பாட்டை உறுதி செய்யமுடியாது. இலங்கையின் இன்றைய நிலையில் மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று காலத்தின் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மாற்றுச் சிந்தனை இல்லாத, இருந்தால் அதை வெளிப்படையாக மக்கள் முன்வைக்காத தலைமைத்துவம்/கட்சி பத்தோடு பதின்ஒன்றுதான்.
ஜே.வி.பி. புதிய அரசியல் அமைப்பு குறித்த பேசுகிறது அதில் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் சார்ந்தும், எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களின் சம உரிமைகள் குறித்தும் அது தெளிவுபடுத்தவில்லை. ஜே.வி.பி.யின் 1971 கிளர்ச்சி, 1987 இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை எதிர்ப்பு, வடக்கு -கிழக்கு பிரிப்பு வழக்குத்தாக்கல் ,13 வது திருத்தத்தை எதிர்த்தல் சிறுபான்மையினருக்கு எதிரான கடந்தகால செயற்பாடுகள் காரணமாக அதன் வெளிப்படையான கொள்கையற்ற கோசங்களை நம்புவது அரசியல் குருட்டுத்தனம்.
ஜே.வி.பி.யின் இந்த கடந்த கால அரசியல் அது ஒருநாடு, ஒரு தேசம் கருத்தியலைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அரசியல் அமைப்பில் மொழிசம உரிமை, மதசம உரிமை அல்லது அரச மதம் என்ற வார்த்தையை நீக்குதல், இன விகிதாசார ரீதியான நிலப்பகிர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றை புதிய அரசியல் அமைப்பில் முன்மொழிய வாய்ப்புண்டு. ஆனால் இவை சக தேசிய இனங்களின் கோரிக்கையான அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி அதிகாரத்தை வழங்குமா? என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். அதனால்தான் ஜே.வி.பி. 13 வது திருத்தத்தை மாற்று முன்மொழிவு இன்றி நிராகரிக்கிறது.
இந்திய மத்திய அரசை மட்டும் ஆக்கிரமிப்பாளர்களாக அது பார்க்க வில்லை. மலையக மக்கள் சிங்கள மக்களின் காணிகளை பறித்துவிட்டார்கள் என்ற பார்வையை அது நீண்டகாலமாக கொண்டுள்ளது. இந்திய தமிழ்நாடு – இலங்கை தமிழர்தாயக உறவை சந்தேகத்தோடு நோக்குகிறது. அண்மையில் சஜீத் பிரேமதாசா ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் காணிச் சீர்திருத்தத்தை – காணி உச்சவரம்பைக் கொண்டுவரும் என்று பேசியிருந்தார். இது சஜீத்தின் பச்சை முதலாளித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது. வாழைத் தோட்ட பரம்பரைக்கே இந்த மனநிலையில் மாற்றம் இல்லை என்றால் நாயக்க பரம்பரையில் மக்கள் எதனை எதிர்பார்க்கமுடியும்.
சஜீத்துக்குப் பதிலளித்த அனுரகுமார “அது ஜே.வி.பி.யின் அந்தக்காலம்” என்ற பாணியில் பேசியுள்ளார். இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது என்ன? காணி உரிமையில் பச்சை, சிவப்பு சட்டைகளுக்கு இடையே வேறுபாடில்லை. வாழைத் தோட்ட சிந்தனைக்கும், கண்டிய சிந்தனைக்கும் இடையே வேறுபாடில்லை. 1971 கிளர்ச்சியின் போது கூட சிறிமாவோ அரசாங்கம்ஜே.வி.பி. நாட்டைக் கைப்பற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக இருப்பதனால் அனைவரையும் சுட்டுக்கொண்டு விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்ததும் இங்கு நினைவுக்கு வருகிறது. அனுரவின் வார்த்தைகளில் அது அந்தக்காலம்.
இலங்கையின் சமகால அரசியல் சகல மரபுவழிக் கட்சிகளையும் பின் தள்ளி ஜே.வி.யை. முன்னிலைப்படுத்தி இருக்கிறது. இலங்கை மக்கள் குறிப்பாக தென்னிலங்கை மக்கள் மூன்றாகப் பிரிந்து நிற்கிறார்கள். ஜே.வி.பி. உட்பட எந்தக் கட்சியும் அல்லது கூட்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தேர்தலில் பெற முடியாது. இதனால் அரசியல் அமைப்பு மாற்றம் சாத்தியமற்றது. இதனால்தான் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அரசியல் அமைப்பை மாற்றுவோம் என்று கூறுகிறார். அப்போது சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் இனவாத அரசியலுக்கு பலிகொடுக்கப்படுவார்கள்.
ஜே.வி.பி.க்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. அதுதான் 22 வது திருத்தத்தை அரசியல் அமைப்பில் கொண்டு வந்து மற்றைய இனவாதக் கட்சிகளின் ஆதரவுடன் 13 வது திருத்தத்தை இல்லாமல் செய்வது. இன்றைய நிலையில் இதனை இந்தியாவை எதிர்த்து சீன மறைகரத்துடன் செய்யக்கூடிய துணிச்சல் அனுரகுமாரவுக்கும், ஜே.வி.பி.க்கும் மட்டுமே உண்டு. அப்போது இல்லாத ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு யாரும் கோரமுடியாது. இது நடந்தால் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டில் இழந்த சந்தர்ப்பங்களை நினைத்து தமிழ்த்தேசியம் கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்.
ஜே.வி.பி. கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை முழுமையாக கைப்பற்றியது, கொழும்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் என்பதையெல்லாம் கொண்டு தேசிய மட்டத்திலான அரசியலை நிர்ணயிப்பது கஷ்டமானது. ஆனால் ஜே.வி.பி. மீதான மக்கள் அலை ஒன்று நிலவுகிறது என்பதையும், மும்முனைப் போட்டியில் அது மேலும் முதல் இடத்தில் வருவதற்குவாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், சமூக, பொருளாதார, அரசியல் – நெருக்கடிகளுக்கான சரியானதும், வெளிப்படைத் தன்மையற்றதுமான கொள்கைத் திட்டங்கள் அற்ற வெற்றியில் ஜே.வி.பி.சாதிக்கப்போவது என்ன? இலங்கை பாராளுமன்ற அரசியல் தொடர்ந்தும் அதேபுள்ளியிலேயே ஒரு நச்சவட்டமாக சுழலப்போகிறது. இலங்கை அரசியல் வேண்டிநிற்பது தேர்தலும், ஆட்சிமாற்றமும் அல்ல. சமகால நெருக்கடி நச்சு வட்டத்தில் இருந்து விடுபடுவதற்கான கட்சி அரசியல் சுவர்களைத் தாண்டிய ஒத்துழைப்பும், ஒருங்கிணைந்த செயற்பாடுகளுமேயாகும்.
இல்லையேல் ஜே.வி.பி.யும் புதிய போத்தலில் அடைத்த பழைய கள்தான்.