— கலாநிதி சு.சிவரெத்தினம் —
மட்டக்களப்பில் களுதாவளை பல சுதேசிய புலமையாளர்களையும் கலைஞர்களையும் கொண்டிருந்த ஒரு கிராமம். இன்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறது. வடமோடி, தென்மோடிக் கூத்துகளுக்கான அண்ணாவிமார் எவரும் இல்லை. பறைமேளக் கூத்தில் ஆனைக்குட்டி அண்ணாவியாருக்குப் பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக இருந்தவர் கலாபூசணம் க.பரசுமாமன் அவர்கள். அவரும் இன்றில்லை.
இவர் பறைமேளக் கூத்து, மகிடிக் கூத்து ஆகிய இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றவராக இருந்தார். மகிடிக் கூத்து 1977ம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்படவில்லை. அக்கூத்து நிகழ்த்தப்படுவதற்கான சமூகத் தேவை இல்லாமல் போனதும், அதை நிகழ்த்துகின்ற சமூகம் அதை நிகழ்த்த விரும்பாததும் இதற்கான காரணங்களாகும்.
களுதாவளையில் பறைமேளக் கூத்து ஒரு அரங்க ஆற்றுகையாக மட்டுமன்றி கலியாண வீடு, மரணவீடு போன்ற நிகழ்வுகளிலும் நிகழ்த்துகை செய்யப்படுவது. அவ்வவ் சூழல்களுக்கேற்ப தாளமும் சொர்ணாளி இசையும் வேறுபடும். இந்த பறை மேள ஆற்றுகையும் 1985ம் ஆண்டில் களுதாளையில் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினைத் தொடர்ந்து பறைமேளக் கூத்தோ அல்லது பறையிசையோ களுதாவளையில் நிகழ்த்துகை செய்யப்படுவதில்லை.
எனது பல்கலைக் கழக முதலாம் வருட முடிவில் எங்கள் பிரதேசத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கலை பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சி.மௌனகுரு சேர் அவர்கள் கேட்டுக்கொண்டார். எனக்கு உடனே நினைவுக்கு வந்தது சிறுவயதில் என்னை மகிழ்வித்த வகுத்தய்யாமாரின் மகிடிக் கூத்துத்தான். அதை மௌனகுரு சேருக்குக் காட்ட வேண்டும் என விரும்பினேன். அவர் மட்டக்களப்பிலுள்ள மகிடிக் கூத்தெல்லாம் மிக நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவருடைய ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் நூல் கூட அப்போது வரவில்லை. நாங்களும் முதலாம் வருட மாணவர்கள் என்பதினால் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் தொடர்பாக ஆழமாக கற்கவும் இல்லை. இதனால் சேருக்கு அதன் பிரதியை எடுத்துக் காட்ட வேண்டும் என்கின்ற இளவயது அறியாத்தனத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தேன்.
ஊருக்குச் சென்று அண்ணாவியார் கலாபூசனம் வை.ஆனைக்குட்டி அவர்களைச் சந்தித்து எனது நோக்கத்தை தெரியப்படுத்தினேன். அவரோ மகிடிக் கூத்துப் பிரதி எவரிடமும் இல்லை என்று கைவிரித்தார். எனது ஆர்வத்தில் இடி விழுந்தது போல் இருந்தது. இருந்தும் தொடர்ந்து அவருடன் உரையாடினேன். ‘உங்களுக்குத் தெரிஞ்ச பாட்டுக்களைச் சொல்லுங்கள் நான் எழுதிக்கொள்கிறேன். தெரியாதவற்றை அக் கூத்து ஆடியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்’ என்றேன். அவருக்கு அதில் சிரமம் இருந்தாலும் அண்ணர்களின் அறிமுகத்தினால் என்னை அவர் தவிர்த்துக் கொள்ள விரும்பவில்லை. தனக்கு பெரியளவுக்கு அப் பாடல்கள் நினைவில் இல்லையென்றும் தனது மருமகனான பரசுராமன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி ஆலோசனை கூறியதுடன் அதே வீட்டிலிருந்த பரசுராமன் அவர்களுக்கு எனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
திரு.பரசுராமன் அவர்களிடம் பேசி நாட்களைக் குறித்துக் கொண்டு அந்நாட்களில் அவருடைய வீட்டுக்குச் சென்று எழுத ஆரம்பித்தேன். எனக்கு அதிக சிரமத்தை அவர் வைக்கவில்லை. அவர் ஒழுங்கு முறைப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டு வருவார். அவருக்கு நினைவில்லா விடயங்களை ஆனைக்குட்டி அண்ணாவியார் மீட்டுத் தருவார். அவருக்கும் நினைவில்லா விடயங்களை ஆனைக்குட்டி அண்ணாவியாருடைய மகள் மீட்டுத் தருவார். அண்ணாவியாரின் குடும்பம் மறந்து விட்ட விடயங்களை ஞா.சின்னத்தம்பி என்பரும் மீட்டுத்தருவார். இவ்வாறு அவர்கள் கூறக் கூற கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக எனது கையெழுத்தில் பதிவு செய்து முடித்தேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆடிய கூத்துப் பாடல்களை நினைவில் வைத்து அதனை மீட்டு ஒழுங்காக எனக்குச் சொல்லித்தந்த அவருடைய திறமையினை எண்ணி வியந்தேன். அதனை அவரிடமே கூறிப் பாராட்டினேன். இதனைத் தொடர்ந்து திரு.பரசுராமன் அவர்களுக்கும் எனக்குமான உறவு மிக நெருக்கமானது.
கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறை 1997, 1998, 1999களில் பேராசிரியர். சி.மௌனகுரு சேர் அவர்களின் தலைமையில் பாலசுகுமார் சேர் ஐந்து நாட்கள் கொண்ட பிரமாண்டமான உலக நாடக விழாவினை செய்து கொண்டு வந்தார். நான் அப்போது அங்கு தற்காலிக விரிவுரையாளராக இருந்தேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி சேர் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நாடக விழா தொடர்பான கலந்துரையாடலில் பாரம்பரிய ஆற்றுகை தொடர்பான நாளில் களுதாவளையில் இருக்கும் பறைமேளக் கூத்தையும் அழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
உலக நாடக தின விழா ஆற்றுகைக்காக பல்கலைக் கழகத்தில் ஆற்றுகை செய்யப்படும் எல்லா ஆற்றுகைகளையும் விரிவுரையாளர்கள் அந்த அந்த ஊர்களுக்குச் சென்று ஒத்திகை பார்த்து ஆற்றுகை தரமானது என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் பல்கலைக் கழகத்தில் ஆற்றுகை செய்யப்படும் என்ற ஒரு நடைமுறை இருந்தது. பறைமேளக் கூத்தும் இதற்கு விதிவிலக்கல்ல. பேராசிரியர் கா.சிவத்தம்பி சேர் அவர்கள் பறைமேளக் கூத்து ஒத்திகையைப் பார்த்து சிபார்சு செய்ய வேண்டும். இதற்காக ஆனைக்குட்டி அண்ணாவியார், பரசுராமன் போன்றவர்களிடம் பல்கலைக் கழகத்தில் ஆற்றுகை செய்யப்படுவது தொடர்பாகவும் அதற்காக ஓர் ஒத்திகை பார்க்க பேராசிரியர் கா.சிவத்தம்பி சேர் அவர்கள் வருவார்கள் அவருக்கு செய்து காட்ட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டேன். அவர்களும் முழு மனத்துடன் சம்மதித்து மிக அழகாகச் செய்து காட்டினர். அப்போது பேராசிரியர் அவர்கள் சொர்ணாளி இசை தனக்கு சங்க இலக்கியத்தில் கூறப்படுகின்ற இசையை நினைவுபடுத்துவதாகவும் அதன் ஒலியினையும் அது கொண்டுவரும் உணர்வு வெளிப்பாட்டையும் இவ்வளவு அற்புதமாக தான் எங்கும் பார்க்கவில்லை என்றும் ஆனைக்குட்டி குழுவினரை மனதாரப் பாராட்டியதுடன் என்னிடம் இவ்விசை தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்துதான் வருடாவருடம் பறைமேளக் கூத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆற்றுகை செய்யப்படலாயிற்று.
ஆரம்பத்தில் ஆனைக்குட்டி அண்ணாவியாரே சொர்ணாளி வாசிப்பவராக இருந்தார். பரசுராமன் அவர்கள் பறையை தாளம் தப்பாமல் அடித்து ஆடும் ஓர் ஆட்டக் கலைஞராக இருந்தார். தாளத்துக்கும் இசைக்கும் ஏற்ப கையில் சிலம்புகள் அணிந்து அபிநயம் பிடித்து ஆடும் அவருடைய ஆட்டம், லயம் நிறைந்ததாக இருக்கும். ஆனைக்குட்டி அண்ணாவியார் சுகயீனமுற்று முடியாமல்போனபோது பரசுராமன் அவர்கள் ஆட்டத்தை விட்டு சொர்ணாளியினை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் ஓர் அழகிய ஆட்ட நாயகனை பறைமேளக் கூத்து இழந்தது. இப்போது (27.02.2023) சொர்ணாளி இசை வாசிப்போரையும் இழந்திருக்கின்றது. கலைவாரிசுகள் இல்லாது கலைஞர்கள் மறைவது தனியே அந்தக் கலைஞனின் இழப்பாக மட்டுமன்றி அந்தக் கலையினுடைய இழப்பாகவும் அமைவதுதான் எமது சமூகத்தின் துயரமாக இருக்கின்றது.
நான் 1991ம் ஆண்டு பரசுராமன் அவர்களிடம் கேட்டு எழுதிய மகிடியே எனது பதிப்பில் ‘மகிடிக்கூத்து’ எனும் நூலாக 06.03.2023 அன்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூல் பறைமேளக் கூத்திலும் மகிடிக் கூத்திலும் ஒப்பிலாக் கலைஞராக விளங்கிய கலாபூசணம் வையன் ஆனைக்குட்டி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நூல் 2022 கார்த்திகை மாதம் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்ட போதும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்பே வெளியிடப்படுவதற்குக் காரணம், இதனை களுதாவளையில் மகிடி ஆடிய அதே மண்ணில் மகிடி ஆடிய சமூகத்தினரால் மட்டக்களப்பின் புலமையாளர்களின் பிரசன்னத்துடன் வெளியிடப்பட வேண்டும் என்பது எனது பேரவாவாக இருந்தது. இந்த வெளியீட்டின் போது மகிடியை தன் நினைவில் வைத்திருந்து எனக்குப்பாடிக் காட்டிய பரசுராமன் அவர்களுக்கு உரிய கௌரவத்தினை அந்த இடத்தில் வழங்க வேண்டும் எனவும் விரும்பியிருந்தேன். இதன் மூலம் மகிடி நூலினை வெளியிடுவதை விட இந்நூலின் மூலம் அந்த மகிடி ஆடிய சமூகத்துக்கு ஒரு புலமைத்துவ அங்கீகாரத்தினையும் கௌரவத்தினையும் வழங்கவேண்டும் என்பதே நோக்கமாகும். எனது நோக்கத்தினை முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் அவர்களிடம் கூறிய போது தான் நிர்வாக சபையினருடன் இது தொடர்பாக கலந்துரையாடிக் கூறுவதாக கூறினார். பின்னர் ஒரு மாதத்தின் பின் (மார்கழி) அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது ‘இப்போது விரத காலமாதலால் இந்தக் காலத்தில் செய்ய முடியாது விரதங்கள் முடிய ஒரு திகதியைத் தருகிறோம்’ என்றார். விரதம் முடிந்து நீண்டகாலமாகியும் அவர் எந்தவொரு திகதியும் தரவில்லை. பின்பு தொடர்பு கொண்ட போது தான் திருகோணமலையில் நிற்பதாகவும் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் கூறினார். அவருடைய கால நீடிப்பு அவர்கள் இந்நூலினை வெளியிட விரும்பவில்லை என்பதைக் காட்டியது.
கலாபூசணம் க.பரசுராமன் அவர்களுக்கு அவர் பிறந்து, வாழ்ந்த மண்ணில் கௌரவம் வழங்கவேண்டும் என்று விரும்பி முடியாமல் போன அதே நேரம், அவர் 27.02.2023 அன்று காலமானார். இருந்த போதும் அவருடைய 31ம் நாள் சடங்குக்கு முதல் அவருக்கு அஞ்சலி செலுத்தி நூலினை வெளியிட வேண்டும் என பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் நானும் உறுதியாக இருந்தோம். அந்த மணிணில் வெளியிடப்படாமல் இருந்தாலும் அந்த மகிடியை ஆடிய அந்தச் சமூகப் பிரதிநிதியாக இருக்கின்ற முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் அவர்களை மேடைக்கு அழைத்து பிரதியொன்று வழங்க வேண்டும் எனத் தீர்மானித்து அவரிடம் கேட்டபோது வருவதாகச் சம்மதம் தெரிவித்தார். அவருடைய சம்மதத்தின் அடிப்படையில் அழைப்பிதழிலும் அவருடைய பெயரை சேர்த்துக் கொண்டோம். ஆனால் கடைசிவரைக்கும் அவர் பிரதியினைப்பெறவரவேயில்லை. இது மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்ற விடயமாக இருந்தது.
இந்த அதிர்ச்சியும் கவலையும் தனிப்பட்டவருடைய நடத்தைக்கானதல்ல மகிடியை ஆடிய சமூகம் அந்த மகிடியினூடாக வரும் அடையாளத்தை விரும்பவில்லை. அந்த அடையாளம்தான் அந்தச் சமூகத்தை கிண்டலுக்கும் கேலிக்கும் அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்தியிருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு காலத்தின் சமூக அடையாளத்தை மீண்டும் தங்கள்மேல் அணிந்து கொள்ளவோ அல்லது அதனை நினைத்துப் பார்க்கவோ அல்லது அதன் மூலமாகவரும் கௌரவத்தைப் பெற்றுக் கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை என்பதே அதுவாகும்.
அவர்களுடைய நோக்குநிலையில் இது மிகச் சரியானதாகும். அவர்களுக்கிருக்கும் அந்த உரிமையினையும் உணர்வினையும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் எமது நோக்குநிலையில் பறையை, மகிடியை அந்தச் சமூகம்தான் அளிக்கை செய்ய வேண்டும் என்றோ அல்லது அதனை அச்சமூகம் பாதுகாக்க வேண்டும் என்றோ கூறவில்லை. அப்படிக் கூற முற்படுவதே அடிப்படைத் தவறாகும். நூல் வெளியீட்டில் கலாபூசணம் க.பரசுராமன் அவர்களின் உருவப்படத்துக்கு அனைவரும் எழுந்து நிற்க ஈழத்தின் மூத்த கலைஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலியைச் செலுத்தியமை சமூக கருத்து நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமாகும்.
எந்தச் சமூகம் பறையினையும் மகிடியினையும் சாதி அடையாளம் பூசி ஒதுக்கியதோ அந்தச் சமூகம் பறையினையும் மகிடியினையும் தங்களுடைய பூர்வீக கலைவடிவமாகக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்று அவை தமிழர்களின் பூர்வீக அடையாளம். அந்த அடையாளத்தினை எவ்வளவோ அவமானங்களுக்குள்ளால் சுமந்து வந்த அந்தச் சமூகத்தையும் அந்தக் கலைஞர்களையும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கின்றோம், போற்றுகின்றோம், கௌரவப்படுத்துகின்றோம். இந்தத் தளமாற்ற நிலையினை அந்தச் சமூகம் உணர்ந்து கொண்டு அந்த, இந்த வேறுபாடுகளற்று சமநிலையில் நின்று கொண்டாடி மகிழ முன்வரவேண்டும் என்பதே எமது ஆவாலாகும்.