— ஜாவிட் யூசுவ் —
இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதை நோக்கிய செயன்முறைகளின் முதற்படியாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது நோக்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை தொடக்கிவைத்து அவர் நிகழ்த்திய கொள்கை விளக்கவுரையின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது.
அரசியலமைப்பு ஏற்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதற்காக ஜனாதிபதி ஏன் கண்டனத்துக்கு உள்ளாகிறார் என்று விளங்கவில்லை. அந்த கண்டனங்கள் சகலவிதமான நியாயங்களையும் மீறியதாக இருக்கின்றன. அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதுவதற்காக அல்ல நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்காகவே அரசாங்கங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுவது வழமை. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதை தவிர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கணிசமான குற்றச்சாட்டுக்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஆனால், 13 வது திருத்தத்துக்கு எதிராக கிளம்பியிருக்கும் தரப்புக்களை நோக்கும்போது அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கடந்த காலத்தில் இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்தவர்களே இப்போதும் வீதிகளுக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதே சக்திகள் பல மாதங்களாக மக்கள் உணவு வகைகள், எரிபொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாட்டினாலும் வானளாவ உயர்ந்த வாழ்க்கைச் செலவினாலும் சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்தபோது சத்தம் போடாமல் அமைதியாக இருந்தன.
13 வது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் அதன் நடைமுறைப்படுத்தல் நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பூச்சாண்டியையே பிரதானமாக காட்டுகிறார்கள்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினரின் மனங்களில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துவதற்கு அறிவுபூர்வமான வாதங்களில் அல்ல வெறும் சுலோகங்களிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறார்கள். இது அவர்கள் 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளுடன் ஒரு மேலோட்டமான பரிச்சயத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆட்சேபங்கள் சுலோகங்களுக்குள் பொதிந்திருக்கும்போது அந்த திருத்தம் தொடர்பில் மக்களுக்கு இருக்கக்கூடிய உண்மையான எந்தவொரு அச்சம் குறித்தும் நாகரிகமான கலந்துரையாடலை நடத்துவது கஷ்டமானதாகும்.
இதற்கு மாறாக, 13 வது திருத்தத்தை கடுமையாக எதிர்ப்பவரும் அது தொடர்பில் கிரமமாக ஊடகங்களில் எழுதிவருபவருமான நெவில் லடுவஹெட்டி மக்களுக்கு இருக்கக்கூடிய அச்சங்களை உரியமுறையில் கையாளக்கூடிய முறையில் தனது அக்கறைகளை வெளிப்படுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களின் உணர்வுகள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தின்போது பாராளுமன்றத்திலும் எதிரொலித்தன. பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் 13 வது திருத்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் நகர்வு மீதான தாக்குதலின் முன்னரங்கத்தில் நின்றனர்.
ஜனாதிபதியின் யோசனை தொடர்பில் தனது முன்னைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி.) எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தாக்குவதற்கு அந்த சந்தர்ப்பத்தை விமல் வீரவன்ச பயன்படுத்திக்கொண்டார். ஆனால், இனநெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான ஒரு வழிமுறையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் பற்றி பேசியபோது அவரின்அரசாஙகத்தில் முக்கியமான அமைச்சராக இருந்த வீரவன்ச தனது அச்சங்களை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை.
விவாதத்தில் பங்கேற்று உரயாற்றிய பவிதுறு ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனது வாதத்துக்கு ஆதரவாக கிழக்கு திமோர் அனுபவத்தை முன்வைத்தார். 13 வது திருத்தம் நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர் இந்தோனேசியபின் புலத்துக்கும் இலங்கைப் பின்புலத்துக்கும் இடையில் எத்தகைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை விளக்கிக்கூற தவறிவிட்டார்.
இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான மாகாணங்கள் விரும்பினால் இணைந்துகொள்வதற்கு அனுமதிக்கும் இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாட்டை சுட்டிக்காட்டிய கம்மன்பில அவ்வாறான இணைப்பு ஏற்படும் பட்சத்தில் பிரிவினைக்கு சாத்தியம் இருப்பதாக கூறினார். ஆனால் மாகாணங்கள் இணைவதற்கு எடுக்கக்கூடிய எந்தவொரு தீர்மானமும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் குறித்து ஆட்சேபனைகளைக் கொண்டிருப்பவர்கள் தங்களது அச்சங்களை எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருக்கமுடியும். பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் அவ்வாறு செய்யுமாறு ஜனாதிபதி முன்கூட்டியே கேட்டிருந்தார்.
13 வது திருத்தம் தொடர்பில் இருக்கக்கூடிய எந்த அச்சத்தையும் சுலோகங்களை எழுப்புவதன் மூலமோ அல்லது வீதிகளில் அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலமோ அல்ல பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே கையாளமுடியும்.
அதிகாரப் பரவலாக்கத்தின் விளைவாக பிரிவினை ஏற்படும் என்ற அச்சம் குறித்து நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியலமைப்பு சபையின் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாடும் பிளவுபடாத நாட்டொன்றின் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்றும் எந்தவொரு மாகாணமும் பிரிவினைவாதப் போக்குகளை வெளிப்படுத்தினால் தலையீடு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என்றும் அன்றைய அரசங்கமும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன.
எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் வெற்றிகரமானதாகவும் நிலைபேறானதாகவும் அமையவேண்டுமென்றால், சமுதாயத்தின் சகல பிரிவுகளினதும் சம்மதத்தை நிச்சயம் பெறவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், எந்தவொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் அங்கீகாரத்தை மாத்திரமல்ல, சிங்கள சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெறவேண்டியது அவசியமானது என்று சம்பந்தன் திரும்பத்திரும்ப வலியுறுத்திவருவது கவனிக்கத்தக்கது.
13 வது திருத்தம் தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை போதுமானளவுக்கு நிறைவேற்றுமா என்பது சந்தேகமே. ஆனால் அந்த திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பரவலாக்கப்படக்கூடிய அதிகாரங்களுடன் தமிழ் அரசியல் தலைமைத்துவம் திருப்திப்படுமானால், அதற்கு குறுக்கே நிற்பதில் அர்த்தமில்லை.
( சண்டே ரைம்ஸ், 12 பெப்ரவரி 2023)