வரதராஜா பெருமாளின் இலங்கை பொருளாதாரம் குறித்த நூல்

வரதராஜா பெருமாளின் இலங்கை பொருளாதாரம் குறித்த நூல்


அரங்கம் பத்திரிகையில் தொடராக வந்த அ. வரதராஜா பெருமாள் அவர்களின் “எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்” நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிறப்பு குறித்த சிலரது கருத்துகள்.
…………………
இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள் திடீரென நிகழ்ந்ததொன்றல்ல.  இந்த நிலைக்கான  அடிப்படைக் காரணிகளை வரலாற்று வழியிலும், விடப்பட்ட , விடப்பட்டுவரும் தவறுகளை தெளிவாக விளங்கிக் கொண்டும், இந்த கைசேத நிலையிலிருந்து மீட்சி பெற சிந்திக்கவுமான   தேவையே இன்றைய இலங்கையின் வீழ்ச்சி  நிலையை குறைந்த பட்சமாவது சீர்படுத்தி முன் கொண்டு செல்ல துணை புரியும். 

இந்த முக்கியமான பணியில் இதன் பல்வேறு அடிப்படைகளை விளங்கிக் கொள்வதற்கு, தமிழில் இந்த நூல் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும்.  

இலங்கையின் இன்றைய பொருளாதார திவால் நிலைக்கு, பல தசாப்தங்களாக நீடித்து வருகின்ற இன ரீதியான அரசியல் பிரச்சினைகளும், அசமத்துவ நிலையும் ஒரு பிரதான காரணமாகும். நாட்டின் பெருமளவு வளத்தை, சொந்த நாட்டு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்க மறுத்து, அம்மக்களை அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்கி வைப்பதற்குமே அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வீணாக்கி வந்துள்ளனர் .

இலங்கை தமிழ்ச் சூழலில், பொருளாதாரத்துறை சார்ந்த கல்வியலாளர்களும் ஆய்வாளர்களும் உள்ளனர். ஆனால் அரசியல், சமூகவியல் துறை சார்ந்த அறிவுடன், இலங்கையின் பொருளாதார அடிப்படைகளையும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளையும், பொருளாதாரத்துறை சார்ந்த கல்விப்புலத்துடனும், அறிவுடனும்  எழுத இயலுமானாவர்கள் ஒரு சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நூலின் ஆசிரியர் தோழர் அ. வரதராஜா பெருமாள். கிட்டத்தட்ட 50 வருட ங்களாக இத்துறைகள் சார்ந்த  ஈடுபாடும் தேடலும் அறிவும் அவருக்குள்ளது.   

 இலங்கையின் இன்றைய நிலையை  அனைத்து தளங்களிலும் சீர்படுத்துவதற்கான   பங்களிப்பினை செய்ய  வேண்டிய பொறுப்பு அனைத்து சமூக, ஜனநாயக  சக்திகள் முன் உள்ளது! இந்த அவசியத் தேவைக்கான சிந்தனையும், பொருளாதார அரசியல் பாடத்தினையும் தருவதற்கான அம்சங்களையும் உள்ளடக்கமாக கொண்டுள்ளது இந்த நூலின் இன்னொரு முக்கியத்துவமாகும்.

எம்.பௌசர்
பதிப்பாளர்

அ.வரதராஜா பெருமாள் வெற்றுக்கோட்பாட்டாளராக அல்லாமல், நீண்ட அரசியல் பயணத்தின் வழியில் அவர் சேகரித்துக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் உரைகல்லில் சோதிக்கப்பட்ட ஆய்வாக இந்த நூல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

 வரதராஜா பெருமாள் இந்தக் கட்டுரைகளை எழுதிய காலப்பகுதியிலிருந்து இன்றைக்கு நாடு மீளமுடியாத அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. இலங்கை அரசு வங்குரோத்து நிலையைப் பிரகடனம் செய்துவிட்டது. அடுத்து வரும் காலங்கள் காரிருள் சூழ்ந்ததாகவே தெரிகிறது. மக்களை நேசிக்கும், சகல மக்களையும் தம் பிள்ளைகளாக மதிக்கும் பண்பு கொண்ட மனிதர்களுக்கு பதிலாக, கொடுங்கோலர்களும் ஆணவங் கொண்டோரும் ஆள்வோராயிருந்தால் ஒரு தேசம் எப்படிச் சீரழிய முடியும் என்பதற்கு இலங்கை ஒரு text book உதாரணம்.   

 இப்படியான ஒரு காலகட்டத்தில் சாதாரண மக்களின், நலன்களை முன்னிருத்திய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக  வரதராஜா பெருமாளின் குரல் இந்த நூலில் பக்கத்திற்குப்பக்கம் ஒலிக்கிறது. 

மு. நித்தியானந்தன்

இந்த நூலின் ஆசிரியர் அ.வரதராஜா பெருமாள் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில், பொருளியல் சிறப்பு பட்டதாரியாகி பின்னர் இப்பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். அவர் அபிவிருத்தி சமூகவியலையும் ஒரு பாடமாக கற்றவர். அவருடைய சமூக, பொருளாதர, அரசியல் எழுத்துக்களை தொடர்ந்த்தும் நான் வாசித்து வந்திருக்கிறேன். அவர் ஒரு மாறுபட்ட சிந்தனையாளர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் அனைத்து விடயங்களையும் அலசும் இந்த வெளியீடானது , இலங்கைப் பொருளாதாரத்தினை கற்கின்ற அனைவருக்கும், குறிப்பாக பொருளியலே தெரியாத ஒருவர்கூட , இலங்கையின் பொருளாதார நிலைமையை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், விருப்பத்துடன் படிப்பதற்குமான இலகு நடையில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் இந்த பங்களிப்பினை இந்தக் காலகட்டத்தின் முக்கியமான பணி என துணிந்து சொல்ல முடியும். 

  • பேராசிரியர் செ. சந்திரசேகரம்

இந்த நூலை கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக நிலையத்திலும் யாழில் தேசிய கலை இலக்கிய பேரவை புத்தக நிலையத்திலும் ஏறாவூரில் பாத்திமா புத்தக நிலையத்திலும், ஐரோப்ப நாடுகளில் லண்டன் புத்தக நிலையத்திலும் பெறலாம்!

மேலதிக தகவல்களுக்கு…
Mob, Whatsup 0044 7817262980