கே.எஸ்.சிவகுமாரன் நினைவு 

கே.எஸ்.சிவகுமாரன் நினைவு 

             — செங்கதிரோன் — 

ஆக்க இலக்கியப் படைப்பாளி – திறனாய்வாளர் – பத்தியெழுத்தாளர் – ஊடகவியலாளர் – மொழி பெயர்ப்பாளர் – ஆங்கில ஆசிரியர் – விரிவுரையாளர் (திரைப்படத்துறை) – பத்திரிகையாசிரியர் – இலங்கை தணிக்கை சபை உறுப்பினர் எனப் பலதளங்களில் இயங்கிய இலங்கையின் மூத்த கலை, இலக்கிய ஆளுமையான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் 15.09.2022 அன்று அமரத்துவமடைந்த செய்தி ஆற்றொணாத் துக்கத்தை அளிக்கிறது. 

அவரை ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருந்தாலும் அவருடன் சிநேகபூர்வமாகப் பழகும் வாய்ப்பு 1990 இல்தான் எனக்குச் சித்தித்தது. அன்றிருந்த அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்த நான் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலேயே அவரைச் சந்தித்தேன். என்னைப்பற்றி ஏற்கெனவே அவர் அறிந்துகொண்டிருந்தார் போலும், எடுத்த எடுப்பிலேயே நானும் மட்டக்களப்பான் தான் என்று கூறி அவரது வழமையான வஞ்சகமில்லாத சிரிப்புடன் என்னோடு உரையாடத் தொடங்கினார். அவருடன் எனது ஊடாட்டம் மூன்று தசாப்தங்களைக் கடந்து நிற்கின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் அனேகமான நிகழ்வுகளில் முன்வரிசையிலேயே அமர்ந்து கலந்துகொள்வார். நிகழ்வுகளுக்கு நேரத்திற்குச் சமுகமளிக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது.  

ஏராளமான கலை, இலக்கித் தகவல்களையும் – வாசிப்பு அனுபவங்களையும் – ஆக்க இலக்கியப் படைப்பாற்றலையும் – ஆழமான விமர்சனப் பார்வையையும் – தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழிப் புலமையையும் தன்னகத்தே கொண்டு இலங்கிய கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தற்புகழ்ச்சியை நாடாத தன்னடக்க சுபாவத்தையும், அதிர்ந்து பேசாத அமைதியான குணத்தையும் கொண்டவராக – ஒரு நிறைவான மனிதராக – நிறைகுடமாக வாழ்ந்து மறைந்துள்ளார். முதிர்ந்த வயதிலும்கூட குழந்தை மனமே அவரிடம் குடிகொண்டிருந்தது. பத்திரிகை – வானொலி – தொலைக்காட்சி – சஞ்சிகை மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடற்ற சுதந்திர ஊடகவியலாளராகத் திகழ்ந்த சிவகுமாரன் அவர்கள் 01.10.1936 அன்று மட்டக்களப்பு புளியத்தீவில் பிறந்தார்.  

தந்தை கைலாயசெல்வநயினார் திருகோணமலையைச் சேர்ந்தவர். தாய், கந்தவனம் தங்கத்திரவியம் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தாயின் பெற்றோர் யாழ்ப்பாணம் நல்லூரையும் கந்தரோடையையும் சேர்ந்தவர்கள். இவருடைய அம்மம்மாவின் பெயர் அம்முனிப்பிள்ளை என்பதால் மலையாளத் தொடர்பும் இருக்கக்கூடும். 

ஆரம்பக்கல்வியை (தமிழ்மொழி மூல) மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் பயின்று பின் மட்டக்களப்பில் சென்.மைக்கல் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாகத் தொடர்ந்து, 1953 இல் கொழும்புக்கு வந்தார். 

மட்டக்களப்பில் வசித்த காலத்தில் ‘Lake Road Journal’ எனும் ஆங்கில கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். சென்.மைக்கல் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறந்த மெய்வல்லுனராகவும், கிரிக்கட் விளையாட்டு வீரராகவும் விளங்கிய இவர், Sports Editor of Junior Times’ ; Junior Observer’ ஆகியவற்றுக்கு எழுதினார். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று ஆங்கில மொழியில் ஆர்வமுள்ளவராக விளங்கியபோதும் இவரது தமிழ் வாசிப்பை இவரது தந்தையாரும், ஆசிரியர் செபஸ்தியான்பிள்ளை அவர்களும் ஊக்கப்படுத்தினர். துரைசாமி ஐயங்கார், அனுத்தமா, ராஜம் கிருஸ்ணன், தமிழ்வாணன், சிரஞ்சீவி ஆகியோரது எழுத்துக்கள் இளமைக் காலத்தில் இவர் படித்தவை. 

கொழும்பில் எஸ்.எஸ்.சி.வரை இரத்மலானை இந்துக்கல்லூரியிலும், பின் எச்.எஸ்.சி.ஐ மருதானை சென்.யோசப் கல்லூரியிலும் கற்றார்.  

1955-1960 காலப்பகுதியில் கொழும்பில் சில்லையூர் செல்வராசன், எம்.எஸ்.எம்.இக்பால், ரெயின்போ கனகரெத்தினம், இராமநாதன் ஆகியோர் மூலம் நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்ததாகக் கூறியுள்ளார். இவர், 1970 இல் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவனாக இணைந்து ஆங்கிலம், தமிழ், மேலைத்தேய தொன்மைப் பண்பாடு (Western Classical Culture) ஆகிய பாடங்களைக் கற்று பின் பட்டதாரியானார். 

‘Champer of Commerce’ சஞ்சிகையின் Assistant Editor – உள்ளூராட்சி சேவை ஆணைக்குழு (Local Service Commission) இல் தமிழ் மொழிபெயர்ப்பாளர் – இலங்கை வானொலியில் செய்தி மொழிபெயர்ப்பாளர் – தமிழ்ச் செய்திப் பொறுப்பாசிரியர் – வர்த்தக சேவையில் பகுதிநேர அறிவிப்பாளர் – இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் United States Information Service இல் ஆங்கில தகவல் உதவியாளர் (Information Assistant) – ‘ISLAND’ பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பில் Deputy Features Editor – நாளாந்தப் பதிப்பில் Culture Edittor – இலங்கை மத்திய வங்கியில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் – மாலைதீவு ‘Majeediya’ பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் – வீரகேசரி| இணை ஆசிரியர் – நவமணி|வாரவெளியீட்டின் ஸ்தாபக ஆசிரியர் – ஓமான் நாட்டின் ‘Sri Lankan School’ இல் ஆங்கில ஆசிரியர் – அமெரிக்க நாட்டில் வர்த்தக நிறுவனமொன்றில் பணிபுரிந்துகொண்டு பகுதிநேர ஆங்கில ஆசிரியர் – கொழும்பு ‘Gateway International School’ இல் ஆங்கில ஆசிரியர் – இலங்கை தணிக்கை சபை (Public Performance Board) இன் உறுப்பினர் – கொழும்பு சுஜாத்தா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியர் ஆகத் தொழில் அனுபவங்கள் பலமிக்கவர். 

இலங்கையின் தினக்குரல் பத்திரிகையில் சொன்னாற்போல – ISLAND ஆங்கிலப் பத்திரிகையில் As I like it – Daily Mirror இல் ‘Thursday Life’ – Daily News, Gleanings’ ஆகிய மகுடங்களில் பத்தி எழுத்துக்களை எழுதிய இவர் இலங்கை வானொலியில் ஆங்கிலப் பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து 2000 ஜனவரியில் தனது கன்னி இதழை விரித்து என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த செங்கதிர் சிற்றிதழின் 2008 ஆடி மாத இதழின் (வீச்சு 7) அதிதிப் பக்கத்தை அலங்கரித்து நான் ஏன் எழுதுகிறேன்?| என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். 

//எனது சிற்றறிவும், சிற்சில அனுபவங்களும் என்னைத் தழுவியபோது அவற்றை விருத்தி செய்து பேரறிவுடையவர்களுக்காக எனது சிறிய அளவிலான பரிமாண வீச்சில் ஏனையோருடன் (ஆர்வம் உள்ளவர்களுக்கு மாத்திரம்) பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக கடந்த அரை நூற்றாண்டாக எழுதுகிறேன். 

திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளை எழுதுகிறேன். நூல்கள், சினிமா, நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஆகியன என் பார்வைக்கு வரும்போது மட்டும் அவை பற்றி எழுதுகிறேன். முழுநேர வாசகனாகவும், எழுத்தாளனாகவும் இல்லாததனால், எனது பார்வைக்கு வந்ததவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்டவை சம்பந்தமாகவே, பாராபட்சமின்றி எழுத முற்படுகிறேன். 

பேரறிஞர்களும், திறனாய்வாளர்களும், ஆய்வாளர்களும், மதிப்புரையாளர்களும், விமர்சகர்களும் (கண்டனக்காரர்) தத்தம் அளவில் தமது பங்களிப்புக்களைச் செய்து வருவதனால், அத்தகையோரின் எழுத்து முறைகளைத் தவிர்த்து பத்தி (Column) எழுத்து முறையைக் கையாண்டு, அவர்களுக்கும் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமாக எழுதுகிறேன். அத்தகையோரின் இரசனை மட்டத்தைச் சற்று உயர்த்துமுகமாகத் தகவல்களையும், ரசனைக் குறிப்புக்களையும் வித்தியாசமான பார்வைகளை (உதாரணமாக – அழகியல் சார்ந்த பார்வைகளை) அவர்கள் விருத்தி செய்யுமாறு எழுதுகிறேன்.  

இவ்வாறு ஏன் எழுதவேண்டுமென்றால், ஒடுங்கிய பார்வையினின்றும் வேறுபட்டுப் பரந்த, விரிந்த பார்வையைச் செலுத்த வேண்டுமென்பதற்காக, ஒப்பீட்டு அடிப்படையிலும் எழுதுகிறேன். 

இவ்விதமான எழுத்து பயனளிக்கிறது என்பதற்கு ஜனரஞ்சக வாசகர்களிடமிருந்தும் வரவேற்கப்படுவதன் மூலம் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனக்கென்று பிரத்தியேகமானதொரு கலை/ இலக்கியக் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் படிக்கிறேன், படித்துப் புரிந்துகொள்ள முற்படுகிறேன். அவற்றுள்ளே எனக்குப் பிடித்தவற்றை மாத்திரம் உள்வாங்கி, அவற்றுள்ளும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிரயோகிக்கிறேன். எனது அணுகுமுறையை Multi Disciplinary Approach எனலாம். 

நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் நிறைய செய்தித்தாள்களிலும் இலக்கிய ஏடுகளிலும் எழுதியிருக்கிறேன். எனது ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழ் வாசகர்களைவிட, பிறமொழி வாசகர்கள், அறிஞர்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறேன்.  

உலகமெங்கிலுமிருந்து தமிழர் உட்பட பல வெவ்வேறு மொழிகள் பேசும் மின்கடிதம் மூலம் ஆங்கிலத்திலும் என்னுடன் தொடர்புகொண்டு தமது ஆசிகளைத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் 2007 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆங்கில மொழிப் பத்திரிகையாளராக விருது பெற்றேன். ஆங்கில மொழியில் எழுதும் பிற பத்தி எழுத்தாளர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, என்னைத் தேர்ந்தெடுத்மை, தமிழருக்குக் கிடைத்த பேறாகவே நான் கருதுகிறேன். 

உலக ஆங்கில மொழிக் கலைக் களஞ்சியங்களில் எனது திறனாய்வுக் குறிப்புக்களும் இடம்பெற்றமையும் தமிழருக்குப் பெருமை தருவது. ஆங்கில இலக்கியத்தையும் பாடமாக நான் பட்டப்படிப்புக்கு மேற்கொண்டமை எனக்கு ஆங்கில மொழியில் எழுதும் லாவகத்தையும் தருகிறது எனலாம். 

நான் எழுதும் இலக்கிய வடிவங்கள் பத்தி எழுத்து (திறனாய்வு மதிப்புரை), சிறுகதை, கவிதை ஆகியன. நான் ஆங்கிலத்தில் எழுதிய ‘A Subliminal Assault’ என்ற ஆங்கிலக் கவிதை 2003 ஆம் ஆண்டு சிறந்த கவிதையாக அமெரிக்கக் கவிஞர்கள் சங்கத்தினரால் கருதப்பட்டு விருது பெற்றமையும் இங்கு குறிப்பிடலாம்.  

எனது இருமை என்ற சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதிய, உளவியல் சார்ந்த கதைகள் இடம்பெற்றுள்ளன. விமர்சனம், திறனாய்வுஎன்ற சொற்கள் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தைத் தருவன. ஆயினும், விமர்சனம்எனும் போது ஆக்கபூர்வமற்ற கண்டனத்தையே மனதிற் கொள்வதனால், அந்தச் சொல்லைத் தவிர்த்து திறனாய்வு என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, உற்சாகப்படுத்தும் முறையில் Positive அம்சங்களையும் உருவச் சிறப்புக்களையும், உத்திகளையும் கவனத்திற் கொண்டு எழுதுகிறேன். 

ஒரு திறனாய்வாளன் முதலில் ரசிகனாக இருக்க வேண்டும். அதன் பின்னே திறன்களை ஆராய வேண்டும். அதேசமயம் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி ஆக்கபூர்வமாக எழுத வேண்டும். இதுவே என் திறனாய்வுப் பிரயோக முறை. 

சினிமா என்பதைத் தவிர்த்து, பிரெஞ்சுமொழி தழுவிய ‘Cinema’ என்ற ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பிலே சினமா என்று எழுதுகிறேன்||.  

அறுபது வருடங்களுக்கும் மேலாக எழுத்தூழியம் புரிந்த கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள், 

•          TAMIL WRITING IN SRILANKA (1974) 

•          சிவகுமாரன் கதைகள் (1982 

•          கலை இலக்கியத் திறனாய்வு (1989) 

•          Aspects of Culture in Sri Lanka (1989) 

•          கைலாசபதியும் நானும் (1990) 

•          LEROY ROBINSON IN CONVERSATION WIu; K.S.SIVAKUMARAN (1992) 

•          திறனாய்வு – ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் : திறனாய்வு (1998) 

•          திறனாய்வுப் பார்வைகள் (1996) 

•          இருமை – (சிறுகதைத் தொகுப்பு) – 1998) 

•          ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999) 

•          மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999) 

•          திறனாய்வு – அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் (1999) 

•          மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000) 

•          அசையும் படிமங்கள் (2001) 

•          சொன்னாற்போல – 01 (2005) 

•          திறனாய்வு என்றால் என்ன? (2005) 

•          இந்திய – இலங்கை இலக்கியம்: ஒரு கண்ணோட்டம் (2005) 

•          சினிமா! சினிமா! – ஓர் உலகவளம் (2006) 

•          பிறமொழிச் சிறுகதைகள் (2007) 

•          ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை (2008) 

•          சொன்னாற்போல – 02 (2008) 

•          சொன்னாற்போல – 03 (2008) 

•          ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை – 1962 – 1979, பாகம் – 1 (2008) 

•          ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை – 1980 – 1998, பாகம் – 2 (2008) 

•          பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள் (2009) 

•          காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வை (2010) 

•          ஏடுகளில் திறனாய்வு ஃ மதிப்பீடுகள் சில (2011) 

•          திறனாய்வு சார்ந்த கட்டுரைகள் (2011) 

•          கலை இலக்கியப் பார்வைகள் (2013) 

•          திரைப்படத் துறையில் – கட்டுரைகள் (2020) 

•          Entry in ENCYCLOPEDIA OF WORLD LITERATURE 

•          Entry in ENCYCLOPEDIA OF WORLD 20th Century WORLD LITERATURE 

ஆகிய தமிழ் / ஆங்கில நூல்களை வெளிக்கொணர்ந்தார். இலங்கை அரசினால் வருடாவருடம் வழங்கப் பெறும் அதியுயர் இலக்கிய விருதான சாகித்யரத்னா|விருதினை 2020 இல் பெற்றுப் பெருமையடைந்தார். வடக்கு – கிழக்கு மாகாண அறிஞர் விருதும் பெற்றார். மேலும்,கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தனது திறனாய்வுகளுக்கு நாடகத் துறையையும் உட்படுத்தினார். மனத்திரை எனும் தனது பத்தி எழுத்தினூடாக கொழும்பில் 1960களில் நாடகத்திறனாய்வை ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவர்.  

அனைத்துலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அவர் எழுதிய சினிமா விமர்சனங்களும் மிகவும் கவனிப்புப் பெற்றவையாகும். இந்தியாவின் பூனே திரைப்படக் கல்லூரியில் 1990இல் இவர் மேற்கொண்ட திரைப்படத் திறனாய்வுத்துறைப் பயிற்சி அதற்கான தொழில்வாண்மையை இவருக்குக் கொடுத்திருந்தது. Film Critics and Jounalist Association என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் கூட. 

தமிழ்மொழிப் படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஆங்கில ஊடகங்களில் ஆங்கில மொழிப் பத்திகள் மூலம் ஏனைய மொழியினருக்கும் அறிமுகப்படுத்தியமை அன்னாரது எழுத்துவாழியத்திற்குப் பெறுமதிசேர் பிறிதொரு பரிமாணமாகும். அமெரிக்காவில் வெளியிடப்பெற்ற ’20th Century WORLD LITERATURE’ என்ற உலக இலக்கிய களஞ்சியத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் குறித்த இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘Subliminal Assault’ எனும் இவரது ஆங்கிலக் கவிதை ‘The Poetry of America’ விருதினைப் பெற்றுள்ளது. Srilanka Press Institute, College of Journalism என்பன சிறந்த ஆங்கிலப்பத்தி (Column) எழுத்தாளராகப் பாராட்டிப் (2008) பரிசளித்தன.  

புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும்| என்ற தலைப்பில், தினக்குரல் சொன்னாற்போல பந்தியில் 23.07.2001 இதழில் எழுதிய அவரது பந்தியில் வீறுகொண்ட விமர்சனப் பங்களிப்புக்களைக் கொழும்பு மேடைகளில் பிரபல்யப்படுத்தி வருபவர்களில்| ஒருவராக என்னையும் அவர் அப்போது அடையாளம் கண்டு வெளிப்படுத்தியிருந்தார்.  

தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்| (2016) மற்றும் விளைச்சல் – குறுங்காவியம் (2017) ஆகிய எனது நூல்களுக்கான விமர்சனக் குறிப்புக்களை முறையே 25ஜூன் 2017 ஞாயிறு தினக்குரலிலும், 03 செப்டம்பர் 2017 ஞாயிறு தினக்குரலிலும் எழுதியிருந்தார். 

அவர் மறைந்துவிட்ட இச்சந்தர்ப்பத்தில் என்னைச் சார்ந்த இந்த விடயங்களும் என் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  

விளைச்சல் காவியம் குறித்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அவர் ‘Column’ எழுதியிருந்தார். 

11.05.2022 அன்று கிழக்கின் முதுசொம் ஆன மாஸ்டர் சிவலிங்கத்தை இழந்ததால் மட்டக்களப்புத் தமிழகத்தை அப்பிய சோகம் நீங்குமுன்னமே 15.09.2022 அன்று நிகழ்ந்த கே.எஸ்.சிவகுமாரனின் மறைவினால் மட்டக்களப்பு மண் மற்றொரு மூத்த மைந்தனை இழந்து மனம் தவிக்கிறது.