— அழகு குணசீலன் —
இலங்கையின் இனப்பிரச்சினை அடிப்படையில் ஒரு பொருளாதாரப் பிரச்சினை. வெறுமனே மொழி, மதம் சார்ந்ததல்ல. அப்படி எங்காவது முடிச்சுப் போட்டால் அது பொருளாதாரத்தில் தான் போய்முடியும். கல்வி முதல் காணிவரை பேசப்படுகின்ற விடயங்கள் இவையே. இதுவே ஆறு அம்சக் கோரிக்கையாக தமிழ்த்தேசியத்தினால் சிங்கள அரசிடம் அன்று கோரப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்றைய பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அது போன்று இனப்பிரச்சினையில் இருந்தும் பொருளாதாரத்தைக் பிரித்துப் பார்ப்பது இலகுவல்ல. இதனால்தான் தமிழர் போராட்டமே பொருளாதார விடுதலைக்கான சமதர்ம தமிழீழ போராட்டமாக தோற்றம் பெற்றது. ஆனால் காலப்போக்கில் சிங்கள பேரினவாதமும், தமிழ் குறுந்தேசியவாதமும் இனவாதமாக இதை அடையாளப்படுத்திவிட்டன.
எந்த ஒரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியை அந்த நாட்டின் அரசியல் ஸ்த்திரத்தன்மையும், பொருளாதார உறுதித்தன்மையும் நிர்ணயிக்கின்றன. முதலாவது உறுதிக்கு அரசியல் பொறுப்பு என்றால், இரண்டாவது உறுதிக்கு மத்திய வங்கியும் அதன் நாணயக்கொள்கையும் பொறுப்பாகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார உறுதிக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணவேண்டியது மத்திய வங்கியின் கடமையாகிறது. அதுபோல் நாட்டின் சமூக, பொருளாதார தேசிய நலன்களை முதன்மைப்படுத்தி பொருளாதார கொள்கைத் திட்டங்களை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசியலின் பொறுப்பு.
இலங்கையின் சமகால பொருளாதார வரட்சிக்கு -இறுக்கத்திற்கு கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற போரும், போருக்கு காரணமான இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையும் காரணமாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படும் கருத்துக்களை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் மேற்கூறிய போரும், சமாதானம் அற்ற சூழலும்தான் இன்றைய நிலையை நிர்ணயித்த ஏக காரணிகளா? என்ற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அப்படியானால் கடந்த 30 ஆண்டுகள் போர்க்காலத்தில் ஏன்? இந்த நிலை ஏற்படவில்லை? இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்த கடந்த 75 ஆண்டு காலத்தில் இந்த நெருக்கடி எவ்வாறு தவிர்க்கப்பட்டு வந்தது?
இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நீண்டகால இழுத்தடிப்பும், அதனால் இடம்பெற்ற ஆயுதப்போராட்டமும் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய நேரடி, மறைமுக பாதிப்புக்களுக்கு இதில் பங்குண்டு என்றாலும் அந்தக் காரணங்கள் போரும், சமாதானமின்மையும் விட்டுச் சென்ற நீண்டகால எச்சங்களின் – வடுக்களின் தாக்கங்களாக இன்றைய நெருக்கடிக்குள் மறைந்து இருக்கின்றன என்பதே உண்மையாகும்.
சமூக, பொருளாதார, அரசியல் நீண்டகால, குறுங்கால, உடனடிக் காரணங்களின் பின்னணியில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் போரும், சமாதானம் ஏற்படுத்தப்படாமையும் இலங்கையின் பொருளாதாரத்தின் பின்னணியில் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருந்த நீண்டகாலக் காரணங்கள். மறுபக்கத்தில் இனவாத அரசியலானது மக்களுக்காகவே இந்த யுத்தத்தை தொடர்வதாக கூறிவந்தது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏட்டிக்குப் போட்டியாக இதை தெரிவித்து வந்துள்ளன.
அத்துடன் விடுதலைப்புலிகளின் தென் இலங்கை மற்றும் எல்லைக் கிராம குடிமக்கள் மீதான தாக்குதல்களும் ஒருபகுதி சிங்கள முஸ்லிம் மக்களை அரசாங்கங்களின் பக்கம் சாய்த்து விட்டிருந்தது. இதனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை தங்களின் பாதுகாவலர் என்று நம்பியது போன்று, சிங்கள மக்கள் அரசாங்கத்தை தங்களின் பாதுகாவலராக நம்பினார்கள். தங்களுக்காகவே இந்த யுத்தம் இடம்பெறுகிறது என்ற நம்பிக்கையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள். இப்போது யுத்தம் ஓய்ந்து ஒரு தசாப்தம் கடந்தும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை. அதேவேளை யுத்தத்தை மட்டும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக குற்றக்கூண்டில் ஏற்றமுடியாது.
நெருக்கடி நிலையை துரிதப்படுத்திய குறுங்கால, உடனடிக் காரணங்கள் பலவற்றை நாம் பட்டியலிட முடியும். அவை எவை…..?
(*). மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் நிலையற்ற, மாறுபட்ட பொருளாதாரக் கொள்கைகள் /அணுகுமுறைகள். பிராந்திய மயமாக்க, உலகமயமாக்க கொள்கைகள்.
(*). 2019 ஈஸ்டர் கால சங்கிலித் தாக்குதல்கள்.
(*). சர்வதேசத்தை தாக்கிய கொரோனா பெருந்தொற்று.
(*). குடும்ப ஆட்சியினதும், அதிகாரிகளினதும் ஊழல் நிறைந்த நிர்வாகம். துறைசார் நிபுணர்களுக்கு பதிலாக இராணுவ நிபுணத்துவம் நிர்வாகத்துறையில் பதிலீடு செய்ரப்பட்டமை.
(*). ஏற்றுமதிப் பொருளாதாரம் ,உல்லாசப்பிரயாணத்துறை, அந்நிய முதலீட்டுப்பாய்ச்சல் என்பனவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்படுத்திய அந்நியச்செலாவணி திறைசேரி வங்குரோத்து.
(*) உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும், இறக்குமதிச் செலவுகளில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பும்.
(*) அரசவருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்ட கடன் வாங்கும் குறுக்குவழி அணுகுமுறை.
(*). ரூபா தாள்நாணய வெளியீடு, பணவீக்கம், நாணயப்பெறுமதி வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு, மானிய வழங்கல்கள்.
(*). நாட்டின் தேசிய நலன்களை புறக்கணித்த கட்சி அரசியல் நலன்சார்ந்த ஆளைமாற்றும் வைத்தியம்.
(*) உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தின் உலகளாவிய தாக்கங்கள்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியானது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் ஒரு கூட்டு. இது போர்க்காலத்திலே நிமிர்ந்திருந்த பொருளாதாரத்தை போரற்ற இன்றைய சூழலில் அடித்து வீழ்த்தியிருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள விடயங்கள் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. வாசகர்களின் கவன ஈர்ப்புக்காக இலகுபடுத்தி இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அரசியல் தற்கொலை…(?)
இன்று இலங்கையில் நிலவுகின்றது போன்ற இலகுவாக மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது என்ன ?
அதுவும் அன்றாட வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில் இந்த நிலைக்கு யார்? எந்த அரசாங்கம் காரணம் என்று குற்றவாளியைத் தேடுவது தீர்வாகாது. கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கங்கள் இருந்திருந்தாலும், எல்லா அரசாங்கங்களையும் போன்றே ஒவ்வொன்றும் தவறுகளை செய்திருந்தாலும், இன்று ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசாங்கத்திற்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. இறந்தகாலம் பற்றி பேசாது இன்றைய நிலைகக்கான பொறுப்பை, இடம்பெற்ற தவறுகளை இன்றைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். பாராளுமன்றம் வழமையான நடவடிக்கைகளை பேணமுடியாத நிலையில் உள்ளது. அமைச்சரவையின் நிலையும் அதுதான். இதுவரை அரச தலைவரோ, பிரதமரோ தனித்தோ, ஆட்சியாளர்கள் என்ற வகையில் கூட்டாகவோ காத்திரமான பொருளாதார மீட்சி திட்டம் எதையும் முன் வைக்கவில்லை. திட்ட முன்மொழிவுகள் மட்டும் இன்றைய நிலையில் மக்களின் வலிக்கு ஒத்தடமாகாதுதான் எனினும் அது ஒரு அரசியல் தார்மீகம் இல்லையா? இதைத் தவிர்த்தும், தீர்வை நோக்கியன்றியும் வெறும் வாய்ச்சவால்களே பாராளுன்றத்தில் பேசப்படுகின்றன.
ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவது முதல் பாராளுமன்றத்தை கலைப்பது வரை பல்வேறு ஆலோசனைகள் கட்சிகளால் தங்கள் நலன்சார்ந்து முன்வைக்கப்படுகின்றன. மக்கள் கிளர்ச்சிக்கு பின்னணியில் உள்ள அரசியலுக்கும் இதில் பங்குண்டு. இந்த யோசனைகள் எதுவுமே இன்றைய நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது. பிரச்சினையை தீர்ப்பதைவிடவும் மக்களை மேலும் வருத்தி எப்படி கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்வது அல்லது எப்படி கதிரையில் புதிதாக அமர்வது பற்றியே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தனி ஒரு கட்சியாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூட்டாக இணைந்து பெரும்பான்மையை நிரூபிக்கின்ற நிலையிலும் எதிர்க்கட்சிகள் கட்சிகள் ஒற்றுமையாகவும் இல்லை.. அரசாங்கம் மட்டும் அல்ல அதைவிடவும் பலவீனமான நிலையில் தான் எதிரணியினர் உள்ளனர். இதனால்தான் அரசியல் அமைப்பு சார்ந்த ஜனநாயக நடைமுறைக்கப்பால் ஜனாதிபதி பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை எழுகின்றது.
பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்ற கோரிக்கை கூட விரல்விட்டு எண்ணக்கூடிய எம்.பி.க்களால் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. மாற்றுக்கட்சி எம்.பி.க்களை பதவி விலகுங்கள் என்று கூக்குரல் இடுபவர்கள்கூட முன்னுதாரணமாக தாங்கள் பதவியைத் துறக்கத்தயாராயில்லை. அனைவரும் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று தங்களாலும் பொருளாதாரத்தை சரிசெய்வது முடியாதது என்பதால் எதிர்த்தரப்பு அதற்கும் தயாராக இல்லை. மக்கள் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கேட்கிறார்கள். கட்சித்தலைமைகள் கதிரையை கைப்பற்றுவதுதான் தீர்வு என்று தவறான வழியில் மக்களை வழிப்படுத்துகின்றன.
எந்த அரசாங்கம் கடைப்மிடித்த பொருளாதாரக் கொள்கை சரியானது என்பதல்ல இன்றைய தேவை. எல்லாக் கொள்கைகளிலும் இரு பக்கங்கள் உண்டு. இன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையானது தோல்வியடைந்திருக்கிறது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதற்கு உள்ளகக் காரணிகள் மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிக்காரணிகளும் பெரும் வகிபாகத்தைக் கொண்டுள்ளன என்ற ஜதார்த்தம் மறைக்கப்படுகிறது.
குடும்ப ஆட்சியானது நாட்டின் நலன்சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு தடையாக உள்ளது. முடிவகள் குடும்ப – வாரிசு நலன் சார்ந்து எடுக்கப்பட்டன. உலகின் எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அரசாங்க உயர் மட்டத்தில் இந்தளவு குடும்ப ஆதிக்கம் கிடையாது. இந்த நிலை ஊழல் கட்டுக்கடங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. முடிவுகள் மற்றைய கட்சிகளோடு கலந்தாலோசிக்கப்படாமலும், அவற்றின் ஆதரவின்றியும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படுகின்றன. முடிவுகளில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்படாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு பொருத்தமானது என்று முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் அன்றைய வார்த்தைகள் பொய்த்து விட்டன. 1978இல் இருந்து இந்த நிறைவேற்று அதிகாரம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மாறாக வளர்த்து விட்டுள்ளது. இரு நன்மைகளை மட்டுமே நிறைவேற்று அதிகாரம் உருப்படியாக சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ளது என்று கூறலாம்.
ஒன்று : முஸ்லீம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரப் சாதித்த விகிதாசாரத் தேர்தல் முறையின் வெட்டுப்புள்ளி அளவு குறைக்கப்பட்டமை.
மற்றையது : அன்றைய அமைச்சர் தொண்டமான் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தவர்களைக் கொண்டே அதை மீளப் பெற்றுக் கொண்டமை. இந்த நிலையில் எப்படி இனப்பிரச்சினையை இரவோடிரவாகத் தீர்க்க முடியாதோ அவ்வாறே இன்றைய பொருளாதார நெருக்கடியையும் இரவோடிரவாக தீர்க்க முடியாது. அது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியானது இனப்பிரச்சினைக்கான தீர்வை இன்னும் பின்தள்ளப்போகின்றது என்பதே உண்மையாகும்.
சுய அரசியல் இலாப நட்டங்களை கணக்குப் பார்க்கும் நேரம் அல்ல இது. இலங்கையின் தேசிய நலன்கருதி அனைத்துக் கட்சிகளும், தலைமைகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்வைக் காணவேண்டும், அதுவும் விரைவாக காணவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இந்த நிலை தொடருமாயின் அரசாங்கம் விட்டதவறையே, எதிர்கட்சிகளும் செய்கிறார்கள் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். இது கட்சிகளின் நலன் மக்கள் நலனிலும் முந்திச் செல்வதை வெளிக்காட்டுவதாக அமையும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்கிறார் சஜீத் பிரேமதாச. இதன் மூலம் மக்களின் உடனடிப் பொருளாதாரத் தேவைகளில் இருந்து அவர் தூரவிலகி நிற்கிறார்.
கடைசி பஸ்ஸும் குடைசாய்ந்தது…..!
இருக்கும் வரையும் இருந்துவிட்டு, காலம் கடந்து அரசாங்கத்தின் ஆயுள் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதுதான் அரசாங்கமும் சர்வகட்சி மாநாட்டை கூட்டியது. தமிழரசுக்கட்சியும், புளொட்டும் அரசாங்கத்துடன் பேச்சுக்கும் முன்வந்தன. இருதரப்பையும் பொறுத்தமட்டில் இது காலம் கடந்த ஞானமாகவே உள்ளது.
இதுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படவில்லை. மறுபக்கத்தில் தமிழ்த்தேசிய அரசியலும் ஒற்றுமையற்று இந்தியா, அமெரிக்கா என்று காலத்தை கடத்தினார்களே அன்றி அர்த்தபூர்வமான -இராஜதந்திர ரீதியான காய்களை நகர்த்தவில்லை. அழுத்தத்தை கொடுக்கவில்லை. இரு தரப்புமே இன்று பலவீனமான நிலையில் உள்ளனர். அரசாங்கத்துக்குள்ளும் பிரச்சினை. தமிழ் தேசியத்தின் உள்ளும் பிரச்சினை.
பலவீனமான நிலையானது ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தள்ளிவிட்டது. இது இருப்பைத்தக்க வைப்பதற்கான இருபக்க முயற்சி. ஒரு தரப்பு பலவீனமான நிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீட்டைக்கோரியது. மறு தரப்பும் பலவீனமான நிலையில் இருந்து இனப்பினச்சினைக்கான தீர்வைக்கோரியது. ஸ்திரமற்ற அரசியலிலும் ஸ்த்திரமற்ற பொருளாதாரத்திலும் இவையிரண்டும் சாத்தியமா?
நல்லாட்சியில் நடந்ததும் இதுதான். அன்று ஆரம்பத்திலேயே பஸ்ஸில் ஏறினார்கள். வசதியான இருக்கைகளும் கிடைத்தன. மேலும் வசதியாக அதைத்தருகிறோம், இதைத்தருகிறோம் என்று ஏமாற்றி, ஐந்து வருடங்களில் டிரைவருக்கும், கன்டக்டருக்கும் இடையிலான முரண்பாட்டில் எதையும் கொடுக்காமல் பஸ்ஸில் இருந்து இறக்கி விட்டுவிட்டார்கள். இப்போது கடைசி பஸ்ஸில் ஓடிப்போய் ஏறியவுடன் பஸ்ஸே குடைசாய்ந்து விட்டது.
கடைசி பஸ்ஸில் ஏறுவதில் உள்ள நன்மை என்ன தெரியுமா…? இடைநடுவில் இறக்கிவிட்டு விட்டான் என்று தேர்தலுக்கு வாக்கு கேட்கலாம். ஒன்றும் கொடுக்காமலே இறக்கிவிட்டு விட்டோம் எப்படி எங்கள் தந்திரம்? என்றுகூறி பஸ்காரர்களும் மறுதரப்பில் வாக்குத்தான் கேட்பார்கள். இப்போது கொண்ட கொள்கையை விட்டு சிங்கள தேசத்தை காப்பாற்ற ஓடுகிறது தமிழ்த்தேசியம்.
ஆட்சியாளர்கள் மூச்சு எடுப்பதற்கே வழிதெரியாமல் இருக்கும் மிகப் பலவீனமான நிலையில், ஆட்சியே இன்று அரைவாசி கவிழ்ந்தும், மிதந்தும் கொண்டிருக்கின்ற நிலையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று சாத்தியமா? சிங்கள தேசியவாதிகள் அரசாங்கத்தை முழுக்க கவிழ்க்க இருக்கின்ற இன்றைய சூழலில் ராஜபக்சாக்களின் அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்த தற்கொலை முயற்சியில் இறங்குமா…? இல்லை சிங்கள இனவாதிகளும் விமல் வீரவன்சவும், அநுரகுமாரவையையும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கப்போகிறார்களா …?
பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசுவது – வாக்களிப்பின் போது நழுவுவது, கையொப்பம் சேகரிக்கும் இடத்திற்கு போவது – கையொப்பம் வைக்காமல் சறுக்குவது, பாராளுமன்றத்தில் மற்றவர்கள் இல்லாதபோது “கொம்புவது” – அவர்கள் வந்து திருப்பிக்கொடுத்தால் ஓடிப்போய் கக்கூசிக்குள் ஒழித்துக்கொள்வது இதுதான் தமிழ்த்தேசிய அரசியலாக உள்ளது.
இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்தாலும், இடைக்கால அரசாங்கம் ஏற்பட்டாலும், புதிய அரசாங்கம் பதவி ஏற்றாலும் இனப்பிரச்சினை இவர்களால் தீர்க்கப்பட வாய்ப்பில்லை. சிங்கள தேசியவாதிகளான விமல் வீரவன்ச, அநுரகுமார ஆகியோரின் கரங்கள் தென் இலங்கையில் ஓங்கி இருக்கின்ற இன்றைய சூழல் கவனத்திற்குரியது. இவர்களுக்கு பின்னால் கூச்சல் போடும் தமிழ் தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
பொங்குதமிழில்…., பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில்…, தமிழர் எழுச்சிப் பேரணிகளில் பங்கு கொண்டவர்களின் தொகை என்ன? தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை, நியாயமான கோரிக்கைகளை கொள்கை அளவிலாவது ஏற்றுக்கொள்ளாத தென்னிலங்கை இனவாதிகளிடம் தமிழ்த்தேசியம் மீண்டும் ஒருமுறை ஏமாந்த வரலாற்றை பதிவு செய்யப்போகிறது.
ஆக, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண குறைந்தது பத்து ஆண்டுகள் என்றால்….
13வது திருத்தத்திற்கு… எத்தனை ஆண்டுகள்? செல்வத்துக்குத்தான் வெளிச்சம்!
13க்கும் அப்பால்… எத்தனை ஆண்டுகள் சுமந்திரனுக்காவது தெரியுமா. ? .
சமஷ்டிக்கு….? எத்தனை ஆண்டுகள் விக்கினேஸ்வரன் எழுதி வைத்திருப்பார்.(?)
ஒரு நாடு இருதேசம்….? 50:50 வாரிசு கஜேந்திரகுமாரைக் கேட்டுப்பாருங்கள் .
இனப்பிரச்சினை இருப்பே…! இவர்களின்களின் இருப்பு..!!