கையெழுத்து – கைகொடுப்பு – கழுத்தறுப்பு.(காலக்கண்ணாடி – 79) 

கையெழுத்து – கைகொடுப்பு – கழுத்தறுப்பு.(காலக்கண்ணாடி – 79) 

      — அழகு குணசீலன் — 

சிறிலங்கா அரசாங்கத்தின் திறைசேரிப் பெட்டகம் காலியாகிக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் எதைச் செய்வது? எதைச் செய்யாமல்விடுவது? என்று திண்டாடுகிறது. வங்காளதேசம் முதல் சர்வதேச நாணய நிதியம் வரை அரசாங்க கரங்கள் நீண்டிருக்கின்ற நிலையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்று அனைத்துக் கட்சிகளும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.  

அதற்கு அருகாக ஜனாதிபதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசையும், புளட்டையும் சந்தித்திருக்கிறார். இலவுகாத்த கிளியாக இரண்டு ஆண்டுகள் தமிழ்த் தரப்பில் கழிந்த நிலையில் இருக்கிற திறைசேரி இலவம் பஞ்சும் வெடித்துப் பறப்பதற்கு முன்னரான இறுதி “தற்காப்பு” நடவடிக்கையாக இந்த இரு நிகழ்வுகளையும் கொள்ளலாம். 

இது நாட்டு மக்களுக்கு தற்காப்போ இல்லையோ இருதரப்பும் தங்களைத் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான தற்காப்புத்தான். 

இந்த அனைத்துக்கட்சி(?) மாநாட்டில் இலங்கையின் சமகால பொருளாதார நிலையை மீட்டெடுப்பது பேசுபொருளாக இருந்தபோதும், அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய இரு கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கம் – உறவு – புரிவு என்பன அரசியல் அவதானிகளால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன.  

நல்லாட்சிக்கு மட்டும் அல்ல, நாங்கள் இதுவரை விமர்சனம் செய்துவந்த இராணுவ, குடும்ப, பேரின இனவாத, சீன ஆதரவு, பொல்லாத ஆட்சிக்கும் கைகொடுப்போம் என்பதை தமிழ்த்தேசியத்தின் ஒரு தரப்பு நிரூபித்திருக்கிறது. அதுமட்டுமின்றி நல்லாட்சி முதல் ஜனாதிபதி தேர்தல் வரையும், அதையும் தாண்டி இன்றுவரையும் சஜீத் பிரமதாசவுக்கு தோள்கொடுத்தவர்கள் இப்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள்.  

இந்த அரசாங்கத்தை, தென் இலங்கை ஆட்சி மாற்ற சக்திகளுடன் இணைந்து வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஒன்றுக்கு பல முறை பொதுவெளியில் பேசியவர்கள் -செயற்பட்டவர்கள் இப்போது குத்துக்கரணம் அடித்திருக்கிறார்கள். அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதி தேர்தலை இப்போதைக்கு நடாத்த முடியாது என்பது சஜீத் பிரேம தாசவுக்கு தெரியாதா? என்று உறுமியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணியும், எம்.பி.யுமான சுமந்திரன். 

எங்கெல்லாம் ஆலாய்ப்பறந்தாலும் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என்றாலும் இலங்கையில் இணக்க அரசியலின் ஊடாகத்தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பதை காலம் கடந்தாவது உணர்ந்திருக்கிறார்கள்(?). ஆனால் இதில் உள்ள ஆபத்து என்னவெனில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்க தரப்பாக மாறிவிடுவதாகும். இதுதான் நல்லாட்சியிலும் நடந்தது. கட்டியணைத்த பின்னர் எல்லாவற்றையும் மறந்து மக்களுக்கு கழுத்தறுப்புக்களையே இவர்கள் செய்து வந்துள்ளனர்.  

இவர்கள் அடையமுடியாது என்று தங்களால் நன்கு அடையாளம் காணப்பட்ட கோரிக்கைகளையே மக்கள் முன்வைப்பர். அப்போதுதான் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் தலையில் பழியைப் போடமுடியும். மறுபக்கத்தில் இந்த கோரிக்கைகளை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதற்கு நிபந்தனையாக கொள்ளமாட்டார்கள். மூடிய கதவுக்குள் என்ன பேசுகிறார்கள் என்ற வெளிப்படைத்தன்மை இருக்காது. 

கதவைத் திறந்து வெளியே வந்தால் ராஜபக்சாக்களுக்கு கண்ணைப்பொத்தி கன்னத்தில் அறைந்தோம், சம்பந்தர் ஐயா முட்டிக்காலில் நிற்கவைத்து குட்டுக் குட்டென குட்டினார், அவர் காட்டிய நெற்றிக்கண்ணால் ராஜபக்சாக்கள் அரைவாசி எரிந்தே போனார்கள் என்றும், தான்தான் தண்ணீர் ஊத்தி தணித்தேன் என்றும் ஊடகப்பேச்சாளர் ஊடகங்களுக்கு “கட்டுக்கதை” சொல்வார். 

இந்த அரசியல் பாணியை தவிர்த்து இனியாவது தமிழ்த்தேசியவாதிகள் அரசாங்கத்தின் இன்றைய பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொள்வார்களே என்றால் அதுவே சாணக்கிய அரசியல். இதற்கு பெயரில் சாணக்கியம் தேவையில்லை. தேவை அரசியல் நேர்மை. ஜதார்த்த அரசியல் அணுகுமுறை. இதை இரு தரப்பும் கொண்டிருக்க வேண்டும். 

“மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கமானது சிங்கள மக்களை ஏமாற்றமுடியாது” என்று கூறியுள்ளார் சுமந்திரன் எம்.பி. இந்தக் கருத்து தமழ்த்தேசியத்திற்கும் விதிவிலக்கல்ல. சுமந்திரன் தனது கண்ணாடிக்கு முன் நின்று மீண்டும் மீண்டும் இதைச் சொல்லிப் பார்க்க வேண்டும். சமதர்ம தமிழீழம் என்று சிவபூமியில் போய் நிற்கிறோம். மக்கள் படகேறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சிங்கள அரசு மட்டும் தான் பொறுப்பா….? 

 கையெழுத்து வேட்டை  ஒரு மோசடி..! 

பயங்கரவாதத் தடைச்சட்டமானது அதன் பிறப்பு பெயரில் இருந்து நல்லாட்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும், இன்று பயங்கரவாத எதிர்ப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் என்றும் பெயர் மாற்றமும், உரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவிலும், நடைமுறைப் சிக்கல்களைத் தவிர்ப்பதிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் பரவாயில்லை என்கிறார் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்த்தரும் சட்டத்தரணியுமான தவராசா.  

இவரும், அவரது மறைந்த துணைவியார் கௌரிசங்கரியும் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழான செயற்பாடுகளிலும், நடைமுறைச் சிக்கல்களிலும் நீண்டகாலமாக கொழும்பில் செயற்பட்டவர்கள் / தற்போதும் தவராசா செயற்படுபவர். எனவே அனுபவ ரீதியான அவரின் கருத்தை “அரசியலுக்காக” எவரும் தட்டிக்கழித்து இலாபம் பெற முயற்சிப்பது நல்லதல்ல.  

 பயங்கரவாதச் தடைச்சட்டம் கொடுமையானது அதை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதில் சட்டத்தரணி தவராசா உடன்படுகிறார். ஆனால் அவர் எழுப்புகின்ற கேள்வி இன்றைய சூழலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் இது சாத்தியமா? என்பதுதான். இல்லையேல் இந்த கையெழுத்து வேட்டை யாரின் கழுத்தை அறுக்க? 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இணங்க, இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனைத் தெரிவித்திருந்தோம்.”  என்று ஊடகச் சந்திப்பில் கூறுகிறார் சுமந்திரன். இதன் அர்த்தம் பயங்கரவாதச் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்பது அனைத்துக்கட்சிக் கூட்டத்திலோ, தமிழ்தேசிய கூட்டமைப்பு -ஜனாதிபதி சந்திப்பிலோ பேசுபொருளாக இருக்கவில்லை. 

அப்படியானால் நாடு முழுக்க சகல இனமக்களையும் ஏமாற்றி, கையெழுத்து வேட்டை நடாத்தியதன் அரசியல் பின்னணி என்ன? 

தமிழ்பேசும் மக்களின் தலையில் மட்டுமல்ல சிங்கள மக்கள் தலையிலும் மிளகாய் அரைக்கப் புறப்பட்டிருக்கிறது தமிழரசுக்கட்சி. தமிழரசின் வாலிப முன்னணியின் வேலைத்திட்டம் என்று விளம்பரப்படுத்தி கூட்டமைப்பு பங்காளிகளுக்கே காதில் பூவைத்து அவர்களை ஓரம் கட்டி மேற்கொண்ட செப்படிவித்தை. இந்த அரசியல் அணுகுமுறைதான் நிறைவேற்ற முடியாத சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்களை ஏமாற்றுவது . 

பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் 12.1, 13.1, 13.2 சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதை ஏற்கனவே 1996இல் நீதிமன்றம் தீர்ப்பொன்றில் கூறியுள்ளது. தற்போது மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் பாக்கியசோதி சரவணமுத்து வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்பே மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சில சரத்துக்கள் அரசியல் அமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கும் நீதி மன்றம், மறுபக்கத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் குறிப்பிட்ட சட்டம் நடைமுறையில் இருக்கமுடியும் என்று கூறுகிறது. ஆக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தமிழரசு வாலிப முன்னணி எப்படி முற்றாக நீக்கப்போகிறது.   

இது சாணக்கியனுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் சுமந்திரனுக்கு தெரியாதது அல்ல. இதனால் தான் எந்த பேச்சுவார்த்தையிலும் இது முன்வைக்கப்படவில்லை. மொட்டைக் கடிதம் எழுதுதல், கள்ளக் கையொப்பம் வைத்தல் இந்தப்பாணியில் மக்களை ஏமாற்றி கையெழுத்து வாங்குவது எந்தப் பாணி? கையெழுத்து மோசடி!! 

பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்ட திருத்த விவாதத்தில் மட்டக்களப்பு எம்.பி. சந்திரகாந்தன் கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. ஒரு சட்டம் குற்றம் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதை தடுக்கவேண்டும். மறுபக்கத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்பித்துக் கொள்வதை தடுக்கவேண்டும். இவற்றிற்கும் மேலாக குற்றச்செயல்கள் இடம்பெறாமல் இருக்க பாதுகாப்பாக அமையவேண்டும்.  

ஆனால் திட்டமிட்ட பயங்கரவாத செயற்பாடுகள் என்றுவந்தால், அதுவும் தற்கொலைத் தாக்குதல்கள் என்றால் எந்த நாட்டிலும் அதை முன்கூட்டியே தடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல. இதற்கு இலங்கையை விடவும் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. உலகின் சகல நாடுகளிலுமே பயங்கரவாத தடைச்சட்டங்கள் உள்ளன. நாடுகளிடையே வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படலாம்.  

அது போன்று நடைமுறைப்படுத்தல்களில் குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இதுதானே அனைத்துச் சட்டங்களினதும் நோக்கம். இங்கு பேசப்படுபவை சட்டத்தின் குறைபாடுகள் மட்டுமன்றி, நடைமுறைப்படுத்தல் குறைபாடுகளுமாகும். 

கைகுலுக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியங்கள்..!

புலம் பெயர்ந்த தேசத்துக்கோர் பாலம் அமைப்பேன்…!! 

“புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்”    

“அரசாங்கத்திற்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையே பாலமாக விளங்கத்தயார்” 

“நாட்டுக்காக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேசத்தயார்” 

ஊடகங்கள் கூறுகின்ற நற்செய்திகள் இவை. இவை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒவ்வொரு அரசியல் ஒழிந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். என்றாலும் நாட்டின் பொருளாதார வங்குரோத்து, கட்சிகள்  தங்கள் அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் மீறிச் செயற்பட வேண்டிய கட்டாய சூழலுக்குள் அவர்களைத் தள்ளிவிட்டுள்ளது. காரணம் இவர்களின் பாராளுமன்ற அரசியல் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றம் கலைக்கப்படுகின்ற “விபத்தைப்” சந்தித்து இவர்களில் பலர் மீளமாட்டார்கள். 

புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கை புதிதல்ல. வெளிநாட்டு விஷயங்களின்போதும், இலங்கையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்தபோதும் அவர்  இதைக் கூறியுள்ளார். 

இப்போது இதை நினைவுபடுத்துவதாக டயானா கமகேயின் ஆலோசனை உதவுகிறது. முன்னர் என்ன எண்ணத்தில் ஜனாதிபதி இக்கருத்தை வெளியிட்டிருந்தாலும் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடு இலங்கைக்கு தேவையாக உள்ளது என்பது மட்டும் உண்மை. 

சுமந்திரன் எம்.பி. யின் “பாலம்” போடும் அரசியல் பற்றி சற்று நோக்க வேண்டியுள்ளது. சுமந்திரனின் கடந்தகால தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலில் பல தரப்பினருக்கும் அதிருப்தி இருப்பினும் புலம்பெயர் சமூகத்தில், அவர்களின் அமைப்புக்களில் இது அதிகமாக உள்ளது. அவருக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், எதிராக டயஸ்போரா அமைப்புக்கள் பொதுவெளியில் விடுகின்ற அறிக்கைகள், நேர்காணல்கள் குறித்து அவதானிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.? 

இந்த நிலையில் சுமந்திரனால் இந்த “தரகர் பாலத்தை” கட்ட முடியுமா? இதை டயஸ்போரா ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டி உள்ளது. 

எப்போதும் போன்றே தானாகவே ஒரு பெயரை தனக்கு சூட்டி தனக்கு தானே பதவி ஏற்பவர் அவர். அப்படித்தான் இந்தப் பாலப்பதவியும். இருதரப்பும் உடன்பட்டு ஒரு தரகரை நியமிப்பது என்பது வேறு. நான் தரகராய் இருக்கிறேன் என்பது வேறு? ஏன்? தமிழ்தேசிய அரசியலில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நேர்மையான உறவைப்பேணும் வேறு எவரும் இல்லையா? பாலம் கட்டுபவர் ஒரு பாராளுமன்ற அரசியல் வாதியாகத்தான் இருக்கவேண்டுமா? எல்லாம் முந்திரிக் கொட்டை அரசியல். 

சுமந்திரன் சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலி என்று பேசுகிறது டயஸ்போரா. அவரின் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் அரசியலில் சந்தேகங்கள் உள்ளன. அவர் டயஸ்போராவின் நம்பிக்கையை இழந்த நிலையில் இந்த முதலீட்டு ஊக்குவிப்புப் பாலத்தை கட்டுகின்ற தகுதி அவருக்கு உண்டா? அதற்கான அங்கீகாரத்தை டயஸ்போரா அவருக்கு வழங்கும் என்று எதிர்பார்ப்பது கஷ்டம்.   

இந்த பாலம்கட்டும் முயற்சிக்கு சுமந்திரன் எம்.பி. ஒரு “வால்” வைத்துள்ளார். அதுதான் அவர் கூறும் 13ற்கும் அப்பால் என்ற தீர்வு. தீர்வைத் தாருங்கள் பாலம் கட்டுகிறேன் என்பது அரசாங்கத்திடம் அவரின் கோரிக்கையாம். இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது. புலம்பெயர்ந்த சமூகம் 13ஐ ஆரம்பப்புள்ளியாக ஏற்கத்தயாராக இல்லாத நிலையில்தான் இதுவரையில் அதிகமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அப்படியானால் இந்தப் பாலத்தை சுமந்திரனால் சாதிக்கமுடியுமா? 

சில டயஸ்போரா அமைப்புக்கள் எந்த தரகரும் இன்றி நேரடியாக சிறிலங்கா அரசுடன் நீண்டகாலமாக தொடர்பில் உள்ளன. அறிவிக்கப்பட்ட தடை கூட இவற்றில் சிலவற்றைத் தடுத்து நிறுத்தவில்லை. இது தனிநபர்களுக்கும் பொருந்தும். அப்படியானால் சுமந்திரனுக்கு இங்கு வேலையில்லாது போகும்.  

சிறிலங்காவில் கடைதிறக்கப்போகிறவர்கள் முதலாளிகள் இவர்களுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு பொருட்டல்ல. யுத்த காலத்திலும் இவர்கள் தென் இலங்கையில் வீடமைப்பில் முதலீடு செய்தார்கள். வங்கிகளில் பெரும் தொகையான பணத்தை வைப்பதில் இட்டார்கள். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். சிறிலங்கா நிதி, பொருளாதார நிறுவனங்களின் முகவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

யுத்த காலத்தில் சிறிலங்கா இறக்குமதிகளை புலம்பெயர்ந்த சமூகம் பகிஸ்கரிக்கவேண்டும், உல்லாசப் பிரயாணிகளாகச் செல்வதை தவிர்க்க வேண்டும், சிறிலங்கா வங்கிகளுக்கூடாகப் பணக் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது, சிறிலங்கா விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் “கட்டளைகள்” போடப்பட்டது. அல்லது சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. நடந்தது என்ன? ஆக, தீர்வுக்கும் முதலீட்டிற்கும் முடிச்சுப் போட முடியாது. 

தடையை நீக்குவதில் கூட அமைப்புக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டால் இரகசியமாகக்கூட இதைச் சாதிக்கமுடியும். இவை அனைத்தும் கடை முதலாளிகள் சமாச்சாரம் இதற்கேன் முழுப் புலம் மக்களையும் சந்திக்கிழுப்பான். 

அபிவிருத்தி நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஏன்கனவே தோல்வியடைந்துள்ளது. சி.விக்கினேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சராக இருந்த போது இதற்கு முயற்சிக்கப்பட்டது. அது சாத்தியப்படவில்லை. இதற்கு அரசாங்கம் மட்டும் அல்ல விக்கினேஸ்வரன் கொழும்பு அரசுடன் தன் பலமறியாது குத்துச்சண்டை போட்டதும் ஒரு காரணம். மேலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான நிதியை வழங்க முன் வராததும் மற்றொரு காரணம். புலிகளின் காலத்தில் வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்தொகையை கணக்கில் எடுத்து கணிப்பிடுவது தவறானது. அது இறந்த காலம். 

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. நஸீர் அகமட் நாட்டுக்காக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேசத்தயார் என்று அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐந்து அல்லது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெறும் பேச்சுவார்தையில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார். முஸ்லீம் காங்கிரசுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே ஒப்பீட்டளவில் நல்லுறவு நிலவுகிறது. கொழும்பு தூதுவராலயங்களுடனும் இந்த உறவு பேணப்படுகிறது.  

ஆகக் குறைந்தது முஸ்லீம் பிரதேச அபிவிருத்தியை முதன்மைப்படுத்தி இந்த முதலீட்டைக் கவரமுடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழக விவகாரம் இங்கு தூசு தட்டப்பட வாய்ப்புண்டு. இந்த விவகாரத்திற்கு அப்பால் அரசாங்கம் விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தமுடியும். சுமந்திரனின் பால விவகாரதில் காணப்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவிலும் வெளிப்படையாகவும் இங்கு குறைவாகவே உள்ளன. 

அரசாங்கம் கட்சிகளின் கழுத்தையும், கட்சிகள் அரசாங்கத்தின் கழுத்தையும் அறுக்காமல் இருந்தால் சரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் கட்சிகளுக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கழுத்தறுபோட்டி இந்த விவகாரங்களில் நடைமுறை ஜதார்த்த அணுகுமுறையில் குளறுபடிகளை ஏற்படுத்தாது என்று உத்தரவாதப்படுத்தமுடியாது. இது கடந்த கால பட்டறிவு. 

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து மக்களின் கழுத்தை அறுக்காமல் இருந்தால் சரி. ஆட்சியிலும், எதிரிலும் இருந்து நீங்கள் இதுவரை அறுத்ததே போதும்.   

அரசன் அன்றறுப்பான்…! ஆண்டவன் நின்றறுப்பான்..!! இந்த நம்பிக்கையில் மக்கள் வாக்குச் சீட்டால் அறுக்கக் காத்திருக்கிறார்கள்.