— அழகு குணசீலன் —
இலங்கையில் தமிழர் அரசியல் ஒரு “வெற்றுப்பானை”. அதற்குள் எந்த அகப்பையைப் போட்டாலும் கோட்பாட்டு அரசியலும் இல்லை, ஜதார்த்தம் சார்ந்த நடைமுறைப் பிரயோக அரசியலும் இல்லை. இருப்பதெல்லாம் ஏட்டிக்குப் போட்டியான அபிவிருத்தி, உரிமை என்ற இரு வார்த்தைகள் தான்.
இந்த வார்த்தைகள் குறித்து நிற்பது என்ன? இவற்றின் மறுவாசிப்பு என்ன? என்று கேட்டால் அரசியல் கூறும் பதிலும் வெறும்பானை பதில்தான். அபிவிருத்தி, உரிமை சார்ந்தது என்பதையும், உரிமை, அபிவிருத்தி சார்ந்தது என்பதையும், அபிவிருத்தியும், உரிமையும் பிரிக்கமுடியாத ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதையும், சமூக, பொருளாதார, அரசியலில் விடுதலையின் அடிப்படைகள் என்பதையும் அரசியல் புரிந்து கொள்வதற்கு பானைக்குள் ஏதாவது இருக்கவேண்டுமா….?இல்லையா…?
கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புன்னைக்குடா கிராமத்தில் அமைக்கப்படவுள்ள “கைத்தொழில் பேட்டை” வேலைகள் ஆரம்பமாகி உள்ள இன்றைய சூழலில், இந்த அபிவிருத்திச் செயற்திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளும், ஆதாரமற்ற தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொறுப்பான ஊடகங்கள் கூட ஏதோ “மர்மங்கள்” அங்கு இரவோடு இரவாக இடம்பெறுவதாக செய்தியிட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
மகாத்மா காந்தியை, வின்சன்ட் சர்ச்சில் சந்தித்தபோது காந்தி அணிந்திருந்த கதர் ஆடையைப் பார்த்து “முன்னால் கொஞ்சம் கூட இருக்கிறது பின்னால் அதுவும் இல்லை” என்று ஏளனம் செய்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடம் பதிலளித்த காந்தி “அவர் எனக்கும் சேர்த்து இரண்டு பேருக்கான ஆடையை அளவுக்கு அதிகமாக அணிந்திருந்தார்” என்றார். உடைத்தேர்வு ஒரு உரிமை. அந்த தேர்வை நிர்ணயிப்பதில் வாழும் புவியல் சூழலும் ஒன்று.
புன்னைக்ககுடா கைத்தொழில் பேட்டை விவகாரத்திலும் மட்டக்களப்பு மக்களின் தேவைகளையும், கிடைக்கக்கூடியதாக உள்ள வளங்களையும் கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார, அரசியல் ஜதார்ததத்தை கருத்தில் கொள்ளாது உரிமை பேசுவோர் அளவுக்கு அதிகமான சர்ச்சிலின் பார்வையையும், அபிவிருத்தி பேசுவோர் காந்தியின் கிராமிய பொருளாதார கட்டமைப்பு தேவைசார் ஜதார்த்த பார்வையையும் கொண்டிருக்கின்ற இருவேறு கோணங்களையே காணக்கூடியதாக உள்ளது.
அபிவிருத்தி என்பது சுற்றாடல் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே அன்றி அது வேறு இது வேறு அல்ல. சமகால சமூக, பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் சுற்றாடல் பாதுகாப்பு கொள்கைகளை உள்வாங்கியே வகுக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளாமல் “மர்மக் குழாய்கள்” பற்றி பேசுவது அபிவிருத்தியையும், சுற்றாடல் பாதுகாப்பையும் புரிந்து கொள்வதில் அவர்களுக்கு உள்ள அரசியல் குழப்பம். இது குழப்பவாதிகளின் பிரச்சினை, மக்களுடையதல்ல.
சோறா….? சுதந்திரமா…? என்று கவிதைபாடி, அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தையும் சுதந்திரப்போருக்கு (?) விலையாகக் கொடுத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் தொலைத்து போர்தின்ற பூமியில் அன்றாடம் அடுப்பு மூட்ட வாழ்க்கைப் போராட்டம் நடாத்தும் மக்களுக்கு சுற்றாடல் பாதுகாப்பு சோறு போடும் என்றால் சொல்லுங்கள் .மக்களும் சேர்ந்து வருவார்கள் புன்னைக்குடா கைத்தொழில் பேட்டையை மூடிவிடலாம். அல்லது மக்களுக்கு சோறு போடக்கூடியதும் சுற்றாடல் பாதிப்பு எதுவுமே இல்லாததுமான ஒரு மாற்று அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன் மொழியுங்கள்.
நாய்க்கு வைக்கோல் தீனி அல்ல. ஆனால் மாட்டின் உயிர் வாழ்வுக்கான தீனி வைக்கோல். அப்படி இருக்க யாருக்காக வைக்கோலை காவல்காக்கிறது நாய்….? எசமானுக்காகவா..? உங்கள் அரசியலுக்கு அபிவிருத்தி தடையாகிவிடும் என்பதால் மக்களுக்கும் அது கிடைக்காமல் இருக்கும் வரையும்தான் உங்கள் வாய் மந்திரங்கள் பலிக்கும் என்பதாலா…? நீங்கள் அரசியலுக்குள் பின்கதவால் புகுந்தவர்கள். ஆனால் மட்டக்களப்பு அன்னையின் மக்களோ இராசதுரை காலம்முதல் இந்த அரசியல் தலைமைகளின் கசப்பான அனுபவங்களைப் பெற்றவர்கள். தீர்மானங்களை எடுப்பதில் அவர்கள் எப்போதும் சரியாகவே உள்ளனர் என்பதை ஒருமுறை அல்ல பல முறைகள் சாதித்துக்காட்டியுள்ளனர்.
கைத்தொழில் பேட்டை செயற்திட்டம்….!
சிறிலங்கா காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் பெறப்பட்ட சுமார் 300 ஏக்கர் காணியில் கட்டம் கட்டமாக இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் முதலீட்டுச்சபையின் ஊடாக தேர்வு செய்யப்படுவர். கைத்தொழில் பேட்டைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு இலங்கை அரசாங்கம் நிதி வழங்குகின்றது. முதற்கட்டமாக துணி உற்பத்தி ஆலைகளே இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த ஐந்து துணி உற்பத்தி (நூல், நூல் சாயமிடல்) நிறுவனங்களுக்கு நிலப்பங்கீட்டளிப்பு, மற்றும் நிபந்தனைகள், அவற்றிற்கான வசதிகள் அனைத்தும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சட்டரீதியாக அமைந்திருக்கும். வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ப அவை அமையும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளில் 20% மட்டுமே உள்நாட்டு ஆடைத்தொழில் துறைக்கு பயன்படுத்தப்படவுள்ளது. மிகுதி 80% மான துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். குறிப்பாக இன்று சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபடுகின்ற வங்காளதேசம், எதிதோப்பியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேவேளை இதுவரை, இலங்கை வெளிநாடுகளில் இருந்து ஆடை உற்பத்திக்காக இறக்குமதி செய்த துணியின் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும். இலங்கையில் சுமார் 600 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளபோதும், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே துணி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதனால் உள்நாட்டிலே துணிக்கு போதுமான சந்தையும் உண்டு.
ஒரு பொருள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கான உள்ளீடுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அந்த நாட்டிற்கு கிடைக்கின்றன தேறிய வருமானப் பெறுமதி குறைவானது. ஏனெனில் இறக்குமதி உள்ளீடுகளுக்கான பெறுமதியை கழித்தே கணிப்பிடவேண்டும். இலங்கையின் ஆடை உற்பத்தியில் இறக்குமதி செய்யப்பட்ட துணி பயன்படுத்தப்படுவதால் இந்த நிலையே காணப்படுகிறது. துணியை இலங்கையில் உற்பத்தி செய்து, பயன்படுத்தும் போது இந்த நிலைமையை மாற்றமுடியும்.
இதனால் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி செலவு குறைக்கப்படுவதுடன் ஏற்றுமதி செய்யப்படும் துணிகளில் இருந்து அந்நியச் செலாவணி வருமானம் அதிகம் பெறப்படும். உற்பத்தியின் உள்நாட்டு பெறுமதியும் உயர்வாக கிடைக்கும். இரு கட்ட திட்டங்களும் முழுமையாக செயற்படும் போது வருடத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2.5 மில்லியன் ரூபா முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆரம்பக்கட்டத்தில் துணி உற்பத்தியில் ஒரு நிறுவனத்தில் இருந்து 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, ஐந்து நிறுவனங்களும் 5000 பேருக்கு வேலைவாப்பை வழங்கமுடியும். உள்ளூரவர்களும் மறைமுக வேலைவாப்புக்களையும் பெறமுடியும் என்பதால் குறைந்த பட்சம் 8000 -10000 வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வறிய குடும்பங்கள், அதுவும் குறைந்த கல்வித்தரத்தை கொண்ட இந்த குடும்பங்களின் உறுப்பினர்கள், அதுவும் அதிகளவு இளம் பெண்கள் வேலைவாய்ப்பை பெறுகையில் இது ஒரு வரப்பிரசாதம்.
இன்னும் 5 நிறுவனங்கள் காலப்போக்கில் ஆடை உற்பத்தியிலும் (வெட்டுதல், தைத்தல்) ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. சர்வதேச மட்டத்தில் ஆடையுற்பத்தியில் பெயர் பெற்ற நிறுவனங்கள் பல முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக முதலீட்டுச்சபை அறிக்கை கூறுகிறது. மார்க் அன் ஸ்பென்சர், நைக் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
யுத்தம் தின்ற பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது துணி உற்பத்திசார் கைத்தொழில் பேட்டைத் திட்டம் இது. இதுபோன்ற வேறெந்த திட்டங்களும் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரை இல்லை. மட்டக்களப்பு விமானநிலையம் மேலும் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும், வீதிப்போக்குவரத்துக்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மேலும் விருத்தி செய்யப்படுவதற்குமான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மறைமுக வேலை வாய்ப்புகளும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில், வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கும்.
இது சுற்றாடல் தொப்பி! அளவானவர்களுக்கு மட்டும்…!!
வடக்கில் பாரிய சேதனப்பசளை தயாரிப்பு நிலையத்தை சிறிலங்கா அமைச்சருடனும், அங்கயன் இராமநாதனுடனும் இணைந்து ஆரம்பித்து வைக்கும் தமிழ்த்தேசிய அரசியல், வாழைச்சேனையில் பிரதேசசபையில் சேதனப்பசளை தயாரிப்பு திட்டத்தை தோற்கடித்தது. வடக்கு கடலில் மீன் வள அழிப்பு, கடல்வள சுற்றாடல் பாதிப்பை தடுக்க சட்டம் சுட்டு அதை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்த்தேசிய அரசியலால் நல்லாட்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதே அரசியல் புன்னைக்குடாவில் சுற்றாடல் பாதுகாப்பை அரசியல் கோசமாக தூக்கிப்பிடிக்கிறது.
தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஏர்பிடித்து சுற்றாடல் பாதுகாப்பு படம் காட்டுகிறவர்கள், மறுபக்கத்தில் விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படவில்லை என போராட்டம் நடாத்துகிறார்கள். முன்னையது சர்வதேசத்திற்கு சுற்றாடல் பாதுகாவலனாகக் காட்ட, பின்னையது சமூக, பொருளாதார கொள்கை எதுவுமே அற்ற தேர்தல் அரசியல். பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதால் சுற்றாடல் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது? உலகில் மிகப்பாரிய சுற்றாடல் பாதிப்பக்களில் விமானப்போக்குவரத்தின் பங்கை குறைத்து மதிப்பிடமுடியுமா?
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், வாழைச்சேனை கடதாசி ஆலை, அம்பாறை சீனித்தொழிற்சாலை இவற்றால் எல்லாம் சுற்றாடல் மாசுபடுத்தப் படவில்லையா? கடலிலும், நிலத்திலும், வனவளக்காடுகளிலும் நடந்த ஈழப் போரில் ஏற்பட்ட மாசுபடுத்தலுக்கு எமக்கும் 50:50 பங்குண்டா இல்லையா? இலங்கை வீதிகளில் ஓடுகின்ற சுமார் எட்டு இலட்சம் ஓட்டோக்களால் சுற்றாடல் என்ன பாதுகாக்கப்படுகிறதா? குறைந்த பட்சம் எட்டு இலட்சம் குடும்பங்களை ஓட்டோக்கள் வாழவைக்கின்றன. எனவே ஜதார்த்த நடைமுறை அரசியல் பொருளாதாரக் கொள்கை இங்கு தேவையாகவுள்ளது. இது வெறும் கோச அரசியலுக்கானதல்ல மக்களுக்கானது.
மட்டக்களப்பு மாநகரில் லேடி மெனிங் வீதி குப்பைத்தொட்டியாக, மாநகருக்கு நட்டநடுவே மூக்கைத்துளைக்கிறது. புறநகர்ப்பகுதிகளில் அழுக்கடைந்த நீர்நிலைகளின் படங்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. மாநகர அதிகாரம் வரியிறுப்பாளர்களின் தேவைகளை மறந்து, அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு வியூகம் தேடுகிறது. நிர்மாணப் பொருட்களுக்கு மில்லியன் கணக்கில் செலவுசெய்து களஞ்சியம் நிறைந்து கிடக்கின்றது. ஆனால் அரசியலோ மக்களின் நலன் மறந்து கட்சி அரசியல் போட்டிக்கு ஊக்கம் அளிக்கிறது.
ஹவார்ட் பல்கலைக்கழக சுற்றாடல் பாதுகாப்பு, களத்தேர்வு அனுசரணை அறிக்கை..!
ஐக்கிய அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக அனுசரணையுடன் இலங்கையின் துறைசார் பல்வேறு நிறுவகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் புன்னைக்குடா தொழிற்பேட்டைக்குப் பொருத்தமான இடமாகவும், மட்டுப்படுத்தப்பட்ட சுற்றாடல் பாதிப்புக்களுடனும், அதற்கான மாற்று வழிகளுடனும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக கைத்தொழில் பேட்டை ஒரு “சமூக நலன்சார் பொருளாதார திட்டம்” இங்கு இலாப நட்டத்திற்கு அப்பால் வேலைவாய்ப்பு, வருமானம், வாழக்கைத்தரம், வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பைப் பெறவுள்ள சமூகப்பிரிவினர், நிலவளம் பயன்பாடு போன்றவை முன்னுரிமை பெறுகின்றன.
இலங்கை நீரியல் நிறுவக (LHI) தகவல்களின் படி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கடலில் இறக்கப்படும். இதனால் அருகிலுள்ள கடலோரப்பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீள் பயன்பாட்டிற்கு, உதாரணமாக பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தமுடியும். இதனைச் செய்வதற்கு தொழிற்சாலைப் பகுதிக்கும், பயிற்செய்கைப் பகுதிக்கும் இடையே குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். இதை தனியார் முதலீட்டாளர்களிடம் உடனடியாக கோரமுடியாது காலப்போக்கில் இதுவிடயமாக கவனத்தில் கொள்ளப்படமுடியும்.
இலங்கையின் புவியியல் நிலவமைப்பில் தாழ்நில உயர்வலையமாக உள்ள இவ் நிலப்பரப்பு சமவெளியாகவும், இரு நீரோடைகளும் உள்ள மணல் நிலமாகவும் உள்ளது. பனைமரங்கள், பற்றைக்காடுகள், சவுக்கு, அடம்பன்கொடிகள், கடற்பாசி போன்ற மற்றும் கடற்கரை தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. அதாவது சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்களால் பேசப்படுகின்ற தாவர, விலங்கியல் வேற்றுமை- பன்மைத்தன்மை “BIO DIVERSITY ” இங்கு ஒரு முக்கிய வளமாக உள்ளது. தேசிய ரீதியில் வாழ்வியல் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகக் கருதக்கூடிய எந்த உயிரினங்களும் இப்பகுதியில் இல்லை என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
புன்னைக்குடாச் சுற்றாடலில் 59 விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 32 பறவைகள், 14 வகைப்பட்டாம் பூச்சிகள், 3 வகை தும்பிகள், 5 வகையான பாலூட்டிகள், மற்றும் 5 சிற்றினங்கள். இங்கு குறிப்பிடத்தக்கது என்னவெனில் சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் வாழ்வியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் கடல் ஆமைகள் இப்பகுதியில் இல்லை. இதற்கு ஆமைகளுக்குத் தேவையான முட்டையிடும் சூழலை புன்னைக்குடா கடற்கரை கொண்டிருக்காமை காரணமாகும். இரண்டேயிரண்டு இடம்பெயர் பறவைகள் இங்கு வருகின்றன இவற்றில் ஒன்று பஞ்சுருட்டான் நீலவால் குருவி.
44 குடும்பங்களைச் சேர்ந்த 117 வகையான மீன் இனங்கள் இக் கடற்பரப்பில் உள்ளன. இதில் கெளுத்தி முதல் இராட்சத மட்டிவரை அடங்கும். இந்த விலங்கியல், தாவரவியல் சூழல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக, மிக அரிதாகவே உள்ளது, என்று ஹார்ட் பல்கலைக்கழக ஆய்வும், இலங்கை நீர்வள நிறுவன ஆய்வும் உறுதிசெய்கின்றன.
பிரதேச மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல்..!
புன்னைக்குடா: தளவாய் கிராமசேவகர் பிரிவில் (193) அமைந்துள்ள ஒரு கிராமம். 683 குடும்பங்களைச் சேர்ந்த 1750 பேர் இப்பிரிவில் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ், முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தளவாய் மக்களின் மாத வருமானம் 5,000 முதல் 25,000 வரையான எல்லைக்குள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 75 வீதமான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்ற போதும், மீன்பிடியில் 250 குடும்பங்களும், 50 குடும்பங்கள் மீன்பிடித் தொழில் சார்ந்தும் வாழ்கின்றன. சில குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களையும் செய்கின்றன.
30 குடும்பங்கள் பனைமர வளங்களை மூலப்பொருளாகப் பயன்படுத்தி குடிசைக் கைத்தொழிலைச் செய்கின்றனர். இன்னொரு தகவல் இக்குடும்பங்களில் 28 ஏறாவூர்ப்பற்று /செங்கலடி பிரதேசத்தில் ஆடைத்தொழிலில் ஈடுபடுவதாகக் கூறுகிறது. ஆக, 2 குடும்பங்களே 262 ஏக்கர் பரப்பளவில் உள்ள பனைவளங்களைப் பயன்படுத்தி நிரந்தர தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம் 6,000 முதல் 7,000 வரையான வருமானத்தைப் பெறுவதாக ஆய்வு கூறுகிறது.
புன்னைக்குடாவில் 425 மீனவர்கள் சிறியதும் பெரியதுமான பல்வேறுபட்ட படகுகளைக் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
சவுக்கடியில் 264 மீனவர்கள் தொழில் செய்கின்றனர். மீனவர்கள் நாளொன்றுக்கு 1,500 முதல் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். மீன்பிடி பருகாலத்தைப் பொறுத்து இந்த வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபா முதல் 15,000 வரை உயர்வடைகிறது. மீனவர்களில் பெரும்பாலானவர்கள் ஐயங்கேணியில் தற்காலிகமான குடிசைகளை அமைத்து அங்கிருந்து கடலுக்கு செல்வதாகவும், இவர்களில் சிங்களவர்களும் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புன்னைக்குடா கைத்தொழில் பேட்டை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கடலில் விடப்படுவதால் அங்குள்ள நீரோடைகளுக்கோ, நிலத்தடி நீருக்கோ பாதிப்பில்லை என்பதையும் ஆய்வு உறுதி செய்கிறது. ஒட்டு மொத்தமாக நோக்கும் போது இப்பகுதி மக்கள் கைத்தொழில் பேட்டையிலும், பகுதிநேரமாக தமது பாரம்பரிய தொழில்களிலும், மற்றும் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பையும் பெறுகின்றபோது வருமானத்தில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தும். இது வாழ்வாதாரத்தில் ஏற்படுத்துகின்ற சமூக, பொருளாதார அபிவிருத்தி சார்ந்த பாரிய மாற்றமாக அமையும்.
இலங்கையின் ஆடைக்கைத்தொழிலில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தை விடவும் மிகவும் சாதகமாக சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் சில விடயங்கள் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இறக்குமதியாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற கோரிக்கைகளை ஒப்பீட்டளவில் இலங்கை தாமதமின்றி நிறைவேற்றுகிறது. மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுற்றாடல் பாதுகாப்பில் இலங்கை அதிகம் ஆர்வம்காட்டுகிறது. மேலும் தொழிலாளர் சமூக நலன்சார்ந்த விடயங்களிலும் இலங்கையின் கவனம் அதிகமானது. இந்த விடயங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திருப்தியாக உள்ளனர் .இதனால் இங்கு முதலீடு செய்ய கவரப்படுகின்றனர்.
புன்னைக்குடாவுக்குப் பின்னால்……….!
சுற்றுச்சூழல் பாதுகாப்பை விடவும் அப்பகுதி மக்களின் சமகால வாழ்வாதாரம் முக்கியமானது. இது பற்றியே மட்டக்களப்பு அரசியல் அதிக கவனம்செலுத்த வேண்டும். கைத்தொழில் பேட்டை செயற்படத் தொடங்கும் போது அங்கு வேலை செய்கின்ற தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நலன் மேம்பாடு அவசியமாகிறது. ஏனெனில் அப்போது தான் இப்போது கண்ணுக்குப் புலப்படாத பல பிரச்சினைகள் வெளிப்பட வாய்ப்புண்டு.
தொழிலாளர்களின் வேலை நேரம், விடுமுறை, அவர்களுக்கான இடைவேளை ஏற்பாடுகள், ஓய்வெடுக்கும் வசதிகள், சம்பளம் , மற்றும் சமூக நலன்பேணும் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசியலுக்கு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வது இலாபம் பெறுவதற்கு என்பதில் இருகருத்துக்கள் இல்லை. அதே நேரம் இயலுமானவரை தொழிலாளர்களின் நலன் பேணப்படும் வகையில் செயற்பட வேண்டியதும் அவர்களின் கடமை.
இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆகக்குறைந்தபட்ச மாதக்கூலி 80 யூரோக்களாக உள்ளது. தனியார் முதலீட்டாளர்கள் இதற்கும் மேலாக 100 முதல் 120 யூரோக்களை வழங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பொருளாதார நலிவுள்ள நிலையில் ரூபாயின் பணப்பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சியை சரிசெய்வதாக இச்சம்பளம் அமையவேண்டும். இல்லையேல் பணவீக்கம் காரணமாக தொழிலுளர்கள் பெறும் பணக்கூலியும் ,அதன் உண்மைப்பெறுமதியும் குறைவடைந்துவிடும். கூலி ரூபாயில் வழங்கப்படுவதால் யூரோ/ டொலரில் ஏற்படும் பெறுமதி அதிகரிப்பு முதலாளிக்கு சாதகமாக அமையுமேயன்றி தொழிலாளர்களுக்கு அல்ல.
சமூக ரீதியான உடல் ஆரோக்கியம், பிரசவ விடுமுறை, ஓய்வறைகள், வேலை நேரங்கள என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படவேண்டும்.
பல நாடுகளில் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட வீதம் தொழிலாளர்களுக்கு போனஸ் ஆக வழங்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. தொழிலாளர்களின் ஓய்வூதியம் / சேமலாபநிதி போன்ற இளைப்பாற்றுக்கால சேமிப்புக்கள் போன்றவை ஆரம்பத்லிலேயே வேலை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். அரசாங்கம் வேலை நேரத்தை வாரத்திற்கு 57 மணித்தியாலங்களாக நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால் தொழிலாளர்கள் 60 முதல் 80 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய கட்டாயப் படுத்தப்படுவதாகவும் தென் இலங்கை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களின் நலன் பேணும் வகையில் சமூகநலன் அமைப்பு ஒன்று தொழிலாளர்களால் அமைக்கப்படுவது அவசியம்.
புன்னைக்குடாவில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்கு வருவது குறித்து அப்பகுதி மக்களிடையே திருப்தியின்மை நிலவுகிறது. இப்போது சுமார் 300 ஏக்கர் கடற்கரை நிலப்பரப்பு கைத்தொழில் பேட்டைக்கு பயன்படுத்தப்படுவதால் தரிசு நிலம், அரசகாணி என்று வெளியார் வாடி அடிப்பதற்கான வாய்ப்பை அது மட்டுப்படுத்தும். இதன் மூலம் பாரம்பரியமான தமிழ், முஸ்லிம் உறவைப் பரஷ்பரம் பேணக்கூடியதாக அமையும். இளம் பெண்கள் வெளி ஊர்களுக்கு தொழிலுக்கு செல்வதால் பல்வேறு கலாச்சாரப் பாதிப்புக்கள் பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. இவற்றின் உண்மை, பொய்களுக்கு அப்பால் சமூகங்களுக்கு இடையிலான உறவு குறைந்த பட்சம் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்.
ஒட்டுமொத்தமாக நோக்குகையில் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமல்ல, வேறு பாதிப்புக்களையும் முற்று முழுதாக தவிர்த்த அபிவிருத்தி திட்டம் ஒன்றை செயல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றதும் , ஜதார்தமற்றதும். இதனால் சாதகங்களுக்கும், பாதகங்களுக்கும் இடையிலான ஒரு சமநிலை பேணுவதையும், அதேவேளை அப்பிரதேசத்தில் நிலவுகின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு அபிவிருத்தி திட்டம் எந்தளவு பங்களிப்பு வழங்க முடியும் என்பதையும் கொண்டே ஒரு திட்டத்தை தேறிய நன்மைகள் கோட்பாட்டின் அடிப்படையில் மதிப்பிட முடியும். அந்த வகையில் மட்டக்களப்பு மக்களின் சமூக பொருளாதார வாழ்வை உயர்த்த கைத்தொழில் பேட்டை கைகொடுக்கும்.
சமூக, விஞ்ஞான ஆய்வு ஆதாரங்கள் எதுவும் இன்றி “மர்மங்கள்” பற்றிப் பேசுவதை நிறுத்தி நடைமுறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டிய கூட்டுப் பொறுப்பு அபிவிருத்தி, உரிமை அரசியலின் கடமையும் , மக்களின் உரிமையுமாகும்.