சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு 

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு 

 — வேதநாயகம் தபேந்திரன் — 

சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா?  காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? 

எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். 

வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். 

பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகச் சப்பாத்தை உருவாக்கினார்கள். குளிர்காலநிலைக்கு அணிவதை வின்ரர் சூ (Winter shoe) என்றார்கள். கோடைக் காலத்தில் அணிவதை சம்மர் சூ (Summer shoe) என்றார்கள்.   

தாம் உலகெங்கும் காலணிகள் வைத்திருந்த போது இந்தச் சப்பாத்தையும் கொண்டு சென்று பழக்கி விட்டார்கள். 

வெள்ளையின எசமானர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் உயர்வானவை. ஆகவே அவர்கள் போல நாமும் நடை உடை பாவனைகளை வைத்திருந்தால் எம்மையும் உயர்வானவர்களாக மதிப்பார்கள் என்ற எண்ணம் சுதேசிகளிடம் விதைக்கப்பட்டது. 

அந்த விதைகள் எம்மிலும் ஆழப் பதிந்து விட்டது. 

2004 டிசெம்பர் 26இல் சுனாமிப் பேரலைகள் எமது இலங்கை உட்படப் பல நாடுகளைத் தாக்கிப் பெரும் உயிர் உடமைச் சேதங்களை ஏற்படுத்தின. 

அதன் பின்பாகப் பங்குனி மாத நாளொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் வில்லியம் புஸ், பில் கிளிங்ரன் ஆகியோர் இலங்கையின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட வந்தனர். 

ஒரு ரீ சேட்டுடன் கோடைக்கால நிலைக்கேற்ற சப்பாத்தை அணிந்து வலு சிம்பிளாக  வந்தார்கள். 

ஆனால் அவர்களை வரவேற்று இங்குள்ள இடங்களைக் காண்பித்த எமது அரச அதிகாரிகளோ கோட் சூட்டுடன் கடமையாற்றினார்கள். 

அவர்கள் காலநிலையை உணர்ந்து ஆடைகள் அணிந்தார்கள். ஆனால் எம்மவரோ நாகரிகமென காலநிலைக்கு முரண்பாடாக உடை அணிந்தார்கள். 

எமது காலத்தில் பிரபலமான தனியார் கல்லூரிகள் தான் சப்பாத்து அணிவதைக் கட்டாயப்படுதினார்கள். ஏனைய பாடசாலைகள் மாணவர்களின் நிலைமைக்கேற்ப சப்பாத்து அணிவது தொடர்பில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையைக் கடைப்பிடித்தார்கள். 

காலுக்குப் போடச் செருப்பு இல்லாமலேயே பாடசாலை சென்ற மாணவர்கள் அதிகம். உயர்தர வகுப்பில் சோசல் எனப்படும் ஒன்றுகூடல் வைக்கும் போது போடச் சப்பாத்து இல்லாமல் இரவல் சப்பாத்து வாங்கிப் போட்டவர்களும் உண்டு. 

கிராமத்துப் பாடசாலைகளில் இருந்து நகரப்புறப் பாடசாலைகளுக்குப் போட்டிகளுக்குப் போகும் போது கடன உடனப்பட்டு சப்பாத்தைப் புதிதாக வாங்கிய பெற்றோரும் உண்டு. இரவல் வாங்கிச் சப்பாத்துப் போட்டுப் பங்குபற்றியோரும் உண்டு. 

சப்பாத்துப் போட்டு ஒரு மாணவன் அல்லது மாணவி பாடசாலை சென்றால் அதை வியப்பாகப் பார்த்தார்கள். அதிலும் சப்பாத்துப் போட்டு உத்தியோகம் பார்த்தவர்களை வியப்பாகவே பார்த்தார்கள். 

பாடசாலைகளில் ஆண், பெண் மாணவர்கள் சப்பாத்து அணிந்து செல்வார்கள். சப்பாத்துகளில் பிரதானமாக இருவகை உண்டு. 

நூல் கட்டுவதைச் சூ என்பார்கள். நூல் கட்டாமல் போடுவதைப் பம்ஸ் என்பார்கள். 

அது போலத் தடித்த துணியினால் செய்த சப்பாத்துகளும் உண்டு. செயற்கைத் தோலால் செய்த சப்பாத்துகளும் உண்டு. எமது காலத்தில் பெண் மாணவிகள் தடித்த துணியிலான சப்பாத்துகளையே பெரிதும் அணிந்தார்கள். ஆண் மாணவர்கள் தடித்த துணி, தோலினாலான சப்பாத்துகளை அணிந்தார்கள். 

ஆண்கள் பெரியவர்களாகி அரச தனியார் துறைகளுக்கு உத்தியோகம் பார்க்கப் போகும் போது சப்பாத்து அணிந்தார்கள். 

ஆனால் பெண்கள் சப்பாத்து அணிவதைக் கைவிட்டு விடுவார்கள். 

சப்பாத்து வழக்கமாக அணிவோர் கம்பீரமாக நடந்து கொள்வார்கள். புதிதாக அணிவோர் சாதாரண நடை தளர்ந்து வளைந்து நெளிந்து ஒரு கூச்சநடை நடப்பார்கள். 

பளிச்சென்று இருக்கும் சப்பாத்து மாணவர் ஒருவரது துப்பரவைக் காட்டும். தை தையென்று தைத்து நிறைய நூல்கள் தெரியக் கிழிந்த சப்பாத்து ஒருவரது வறுமையைக் காட்டும். 

சப்பாத்து, செருப்பு விற்பதில் எமது நாட்டில் பாட்டா எனும் சர்வதேசக் கம்பனி பிரபலமானது. அவர்கள் சப்பாத்து செருப்பு மீது விலையை அச்சிடும் போது ரூபா 29.90 சதமென விலையைக் குறித்தார்கள்.  

இதில் இரண்டு யுக்தி உள்ளது. ஒன்று விலை முப்பது ரூபா அல்ல. அதை விடக் குறைவானது எனக் குறைத்துக் காட்டுவது. ஆனால் வெறும் பத்துச் சதமே குறைவு என்ற உணர்வு இல்லாமல் வாடிக்கையாளன் ஒருவன் முப்பது ரூபாவைக் கொடுப்பான். 

அடுத்தது அந்த நாளில் பத்துச் சதம் கொடுத்து பஸ் பயணம் செய்து வீட்டிற்குப் போகும் நிலை இருந்தது. 

ஒரு காலத்தில் ஆட்டுத் தோல்களை வாங்குவதற்கென வியாபாரிகள் ஊர் ஊராக வந்தார்கள். ஆட்டுத் தோலை வாங்கிச் சப்பாத்து செய்யும் கம்பனிகளிடம் விற்றார்கள். இது போன்ற இயற்கைத் தோலினால் ஆகிய சப்பாத்துகள் எமது காலுக்கு இதமானது. 

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வதிரிக் கிராமத்தவர்கள் சப்பாத்துச் செருப்புத் தயாரிப்பதில் பரம்பரைத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இவர்களது தொழிற்சாலைகளும் கடைகளும் ஒரு காலத்தில் நாடெங்கும் இருந்தன. 

சிறுவயது முதலே சப்பாத்து அணிபவர்களது காலின் முன்பாதம் ஒடுங்கி இருக்கும். சப்பாத்து அணியாமல் இருப்போரது முன்பாதம் அகன்று இருக்கும். 

எமது பிரதேசத்தில் 1980களின் முற்பகுதியில் போராட்ட இயக்கங்கள் உருவாகிய காலத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் சப்பாத்து அணிந்து சென்ற போது அவர்களை வியப்பாகப் பார்த்தார்கள். 

இங்கு சப்பாத்தை ஒரு காலமும் அணியாமல் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்று சப்பாத்து அணிதலை வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவர்கள் ஏராளம். 

விமானப் பயணம் செய்பவர்கள் சப்பாத்துப் போட்டுக் கோட் சூட் அணிதல் கட்டாயமென்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அதாவது பிரமுகர்கள் மட்டுமே விமானப் பயணம் செய்யலாம். சாமானியர்களுக்கு விமானப் பயணம் மறுக்கப்பட்டிருந்தது. 

எங்கட வடக்கில் சப்பாத்து அணிந்து அரச அலுவலகங்களுக்குப் பணியாற்றச் செல்பவர்களது எண்ணிக்கை குறைவானது. அப்படிச் செல்வதற்கு வெட்கப்படுபவர்கள் அதிகம். 

ஆனால் தென் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிற்றூழியர் முதல் பெரிய அதிகாரிகள் வரையில் சப்பாத்து அணிந்து ரிப்ரொப்பாகத் தான் போவார்கள். அலுவலக உத்தியோகத்தர் குழாமைப் பார்க்கும் போது பளிச்சென்று இருக்கும். 

சப்பாத்து அணிந்து கடமைக்குச் செல்லும் போது ஒரு கம்பீரம் இருப்பதைப் போன்ற உணர்வு வருவதையும், சப்பாத்து அணியாமல் செல்லும் நாள்களில் கம்பீரம் குறைந்தது போன்ற உணர்வும் வருவதாகச் சொல்லும் உத்தியோகக்காரரைக் கண்டுள்ளேன். 

சப்பாத்துத் தொடர்பான நினைவுகள் இன்னுமின்னும் நீளமானவை. வாசகர்கர்களே உங்களுக்குத் தெரிந்தவை இருந்தால் கூறுங்களேன். 

(ஆசிரியர் குறிப்பு: சப்பாத்து குறித்து எனக்கும், எமது அரங்கத்துக்கும் ஒரு நினைவு உண்டு. சூறாவளி மட்டக்களப்பை தாக்கி சிறிதுகாலத்தில் எமது மட்/புனித மிக்கேல் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி அகில இலங்கை ரீதியில் பல வெற்றிகளை பெற்று இறுதி ஆட்டத்துக்கும்  தெரிவானது. நானும் அதில் விளையாடினேன். ஆனால், அப்போது கால்பந்து சப்பாத்து அணிந்த கொழும்பு மற்றும் ஏனைய மாவட்ட பள்ளிக்கூட அணிகளுடன் எதிர்த்து விளையாடிய எங்களில் எவரிடமும் கால்பந்து சப்பாத்து கிடையாது. ஆனாலும், நாம் வெற்றிகளை அப்போதும் குவித்தோம். இதன் நினைவாகத்தான் ‘அரங்கத்தின்’ பெண்கள் பள்ளிக்கூட கால்பந்து அணிகளுக்கான அனுசரணையின் போது முதல் விடயமாக அவர்கள் அனைவருக்கும் கால்பந்து சப்பாத்துக்களை வாங்கிக்கொடுத்து பயிற்றுவித்தோம்.  

  — அன்புடன் சீவகன்)