—- அழகு குணசீலன் —-
ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு தைப்பொங்கலுக்கும் அரசியல்வாதிகள் கூறிய காலக்கெடுக்களை எண்ணி ஏமாந்து நின்ற நிலையிலும், தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற சுயநம்பிக்கையில் பொங்கலுக்கு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த போது உலக ஊடகங்கள் அந்தச் செய்தியைப் பரிமாறிக்கொண்டன.
ஜனவரி 13ம் திகதி, தைப்பொங்கலுக்கு முதல் நாள் ஜேர்மனியின் பிராந்திய நீதிமன்றம் ஒன்று சிரியாச் சிறையில் நடந்த மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு அது. சிரியாவின் 251வது படைப்பிரிவின் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரியும், அவரால் தடுப்புக்காவல் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட நபரும் ஜேர்மனி கொப்ளன்ஸ் (KOBLENZ) பிராந்தியத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டதன் விளைவு, அதிகாரிக்கு வினையாக முடிந்தது.
இருவரும் சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள். ஒருவர் 58 வயதான புலனாய்வுத்துறை தலைவர் அன்வர். ஆர். மற்றையவர் அன்பரின் சித்திரவதைகளை சிறையில் அனுபவித்தபோதும் தப்பித்து வந்துள்ள அரசியல் அகதி.
அஷாத் அரசின் அரசபயங்கரவாதத்திற்கு துணைபோன, மற்றும் சிரியர்களால் சித்திரவதைக்கு பெயர்போனவர் என்று அறியப்பட்டவர் அன்வர். பாதிக்கப்பட்டவர் அஷாத் அரசின் ஜனநாயக மறுப்புக்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்.
இவர்கள் இருவரும் தற்செயலாக சந்தித்தபோது சித்திரவதைக்குட்பட்டவர் புலனாய்வு தலைமை அதிகாரியை அடையாளம் கண்டுவிட்டார். இது பெப்ரவரி 2019இல் நிகழ்ந்தது. தகவல் ஜேர்மனியின் பாதுகாப்புத் துறைக்கு பறக்க அன்வர்.ஆர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். அரசியல் தஞ்சம் கோரியுள்ள சிரியர்களில் அன்வரின் சித்திரைவதை நரகத்தை அனுபவித்தவர்கள் முறைப்பாடுகளைச் செய்கிறார்கள். வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
வழக்கு விசாரணைகள் ஏப்ரல் 2020இல் ஆரம்பித்து, 108 நாட்கள் இடம்பெற்றன. 80 சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தோன்றி அன்வருக்கு எதிராக தமது சாட்சியங்களை வழங்கினர். இந்த வழக்கின் தீர்ப்பே ஜனவரி 13ம் திகதி வழங்கப்பட்டது. புலனாய்வுத்துறை தலைவர் அன்வருக்கு ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கொப்ளன்ஸ் பிராந்திய நீதிமன்றம்.
இத்தீர்ப்பானது சிரியாவில் மட்டும் அல்ல உலகநாடுகள் பெரும்பாலானவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் இந்த வழக்கு உலகின் முதல்வழக்கு. வேறு ஒரு நாட்டில் செய்யப்பட்ட குற்றத்திற்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு நாட்டில் தொடர்ந்த வழக்கு. இது எப்படிச் சாத்தியமானது? என்று கேட்பதில் சில சட்டவாதிகளுக்கு தலையைச் சுற்றுகிறது. மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளுக்கு இது ஒரு அதிர்ச்சி வைத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.
2002ம் ஆண்டு ஜேர்மனியின் குற்றவியல் சட்டத்தில் ஒரு புது அம்சம் உள்வாங்கப்பட்டது. “உலக சட்ட தத்துவம்” (WORLD LAW CONCEPT) என்பதே அது. இதன்படி வழக்காளியும், எதிரியும் ஒரே நாட்டில் வாழ்ந்தால், குற்றச்செயல் வேறு ஒரு நாட்டில இடம்பெற்றிருந்தாலும் ஜேர்மனியின் சாதாரண நீதிமன்றங்களில் வழக்குத்தொடரமுடியும். இதனை ஜேர்மனியின் குற்றவியல் சட்டத்தின் சரத்து 6 St GB உறுதி செய்கிறது. இந்த உலக சட்டவிதி தத்துவத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட உலகின் முதல் வழக்கு இது. மனித உரிமைகள் குறித்து அளவுக்கு அதிகமாக பேசும் நாடுகள் கூட இந்த சட்டவிதிமுறைகளை தங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ள வாங்கவில்லை. இந்த வகையில் இது ஜேர்மனியின் நீதித்துறையின் செயற்பாட்டில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதும், முன்மாதிரியான குணமாகும்.
ஐ.நா.வும், சர்வதேச நீதிமன்றங்களும், சட்டங்களும்!
உலகின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசும் போது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும், மேற்கு நாடுகளும் ஐ.நா.வையும், சர்வதேச நீதிமன்றங்களையும், சட்டங்களையுமே தூக்கிப்பிடிக்கின்றன. ஆனால் இந்த பாரிய முயற்சியானது மிகக் குறைந்த பலாபலன்களையே தருகின்றது. அல்லது அதுவும் இல்லை. இது இலங்கைக்கும் பொருத்திப் போகின்ற ஒன்று. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இவை செயற்படுவதால் அங்கு மட்டுமே நீதிகோரமுடியும். அதற்கு ஐ.நா. அரசியல் வீட்டோவின் பெயரில் தடையாக அமைகிறது.
இனப்படுகொலை, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்றெல்லாம் பட்டியல் இட்டு ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் நாடி ஏமாந்த மக்களே உலகில் அதிகம். ஆர்மேனிய இனப்படுகொலையை அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது ஒரு வரலாற்று துயரம்.
மியான்மாரில் ரொஹிஞ்ஞாக்களுக்கு நடந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றவழக்கில் அன்றைய அரசதலைவி சமாதானத்திற்கான விருதுடன் பத்திரமாக நாடு திரும்பினார். இந்த அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது ஜேர்மனிவாழ் சிரியாவின் புலம்பெயர்ந்த சமூகத்தினர் ஓரணியில் நின்று முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள். அதன் பலாபலனைக் கண்டிருக்கிறார்கள். அதற்கு ஜேர்மனியின் குற்றவியல் சட்டத்திருத்தம் வாய்ப்பளித்திருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழ்த்தேசிய சட்டவாதிகளோ இருக்கின்ற சட்டநடைமுறைகளைக்கூட சரியாகப் பயன்படுத்த சாணக்கியமற்று உள்ளனர். சிரிய புலம்பெயர்ந்த சமூகத்தின் அனுபவங்களில் இருந்து தமிழ்த்தரப்பு கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சர்வதேசத்தை தேடி, சர்வதேச சட்டங்களையும், நிறுவனங்களையும் தேடி அலைவதை தவிர்த்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள சட்டநடைமுறைகளை அறிந்து கொள்ளவும், செயற்படவும் வேண்டிய தேவை இருக்கிறது.
புலம்பெயர்ந்த நாடுகளில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் மட்டுமல்ல, தமிழ்த்தரப்பு ஆயுத வன்முறை மனித உரிமைமீறல்காளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், இரகசிய சிறைகளில், தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியவர்கள் எனப்பலரும் உள்ளனர். இது நான்காவது மாடிக்கு மட்டுமன்றி, துணுக்காய்க்கும் மற்றைய முகாம்களுக்கும் பொருந்திப்போகிறது .
பாதிப்பை ஏற்படுத்தியவரும், பாதிக்கப்பட்டவரும் அல்லது அவரது குடும்பமும் ஒரே நாட்டில் வாழ்ந்தால், அந்த நாட்டில் உலக சட்ட தத்துவம் சட்டவிதிமுறை உள்வாங்கப்பட்டிருப்பின் நீதி கேட்பதற்கு சட்டவாய்ப்புக்கள் உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு மற்றைய பாதிக்கப்பட்ட சமூகங்கள் போன்று ஈழத் தமிழர்களுக்கும் சொல்லி நிற்கிறது.
உலக சட்ட தத்துவத்தை தேசிய குற்றவியல் சட்டம், குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், என்பவற்றுடன் இணைந்த வகையில் யுத்த மீறல்கள் இன அழிப்பு மற்றும் பொதுவான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக நோக்குகையில் உலகில் இன்று மூன்று வகையான சட்ட ஒழுங்கு முறைகள் செயற்படுகின்றன.
1. ஒரு நாட்டின் சட்ட ஒழுங்கு (STATE LEGAL ORDER).
2. நாடுகளுக்கு இடையிலான சட்ட ஒழுங்கு (INTER STATES LEGAL ORDER)
3. ஒரு நாடு, தனது தனித்துவ சட்டமுறைமையுடன், உலக சட்டமுறைமைகளையும் உள்வாங்கி உள்ள ஒரு கலப்பு சட்ட ஒழுங்குமுறை. (SEMI AUTONOMOUS LEGAL ORDER)
இந்த மூன்றாவது வகை வலையிலையே அன்வர் அகப்பட்டார்.
அன்வர் மீதான குற்றச்சாட்டும், அவரின் மறுப்பும்…!
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் உள்ள ALKHATIB சிறையில், 2011-2012 வரையான காலப்பகுதியில் சுமார் 4000 கைதிகளை சித்திரவதைக்கு உள்ளாக்கினார் என்றும், குறைந்தது 27 கைதிகளின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்பதும் அன்வர் மீதான குற்றச்சாட்டுக்கள்.
தலைகீழாக கட்டித்தொங்கவிடுதல், மின்சார அதிர்ச்சி வழங்கல், பொல்லுகள், வயர்களால் அடித்துத் துன்புறுத்தல், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இவரின் கட்டளையிலும், மேற்பார்வையிலும் இடம்பெற்றதை சாட்சியங்கள் பல்வேறு ஆவணங்களைக்கொண்டு நிரூபித்தனர்.
*** இந்த இடத்தில் வாசகர்களின் கவன ஈர்ப்புக்காக இலங்கை முகாம் ஒன்றில் இடம்பெற்ற சித்திரவதைக் காட்சி ஒன்றைக் காட்டவிரும்புகிறது காலக்கண்ணாடி : ***
“பெரியதொரு மேசையில் படுக்க வைத்து கைகள் கால்களை அழுத்தி அங்கும் இங்கும் கட்டினர். ஒரு சிரட்டையில் இரண்டு மூன்று கொடுக்கான் பூச்சிகளை விட்டுத் தொப்புள் பகுதியில் சிரட்டையைக் கவிட்டு விட்டனர். வாய்க்குள்ளும், கண்ணுக்குள்ளும் மிளகாய்த்தூளைக்கொட்டி விட்டனர். இப்படியான நிலையில் பலகையால் உடலெல்லாம் அடித்தனர். கயிற்றில் தொங்கவிட்டனர். கால் இரண்டையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டனர். இப்படி இரவு பகலாக இரண்டு நாட்கள் தூங்கக்கூடவிடாமல் விசாரணை செய்தனர்- சித்திரவதை செய்தனர். மயங்கு மட்டும் அடித்தனர். மயக்கம் தெளிந்த பின் மீண்டும் ஊசியால் குத்தி மிளகாய்த்தூள் போட்டு பலகையால் அடித்து கொடுமை செய்தனர்”
இவ்வாறு ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற தனது நூலில் பதிவிட்டுள்ளார் சி.புஸ்பராஜா. இந்தக் கொடுமைகள் இல்லாமல் இருந்திருந்தால் புஷ்பராஜா இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று எண்ணத்தோன்றுகிறது .
உணவு வழங்கப்படாமை, அடிப்படை வசதிகள் வழங்கப்படாமை, சிறிய அறையில் அளவுக்கு அதிகமானவர்களை ஆடு, மாடுகளைப்போன்று அடைத்து வைத்திருந்தமை உள்ளிட்ட பல விடயங்கள் சாட்சியங்களால் வெளிக்கொணரப்பட்டன. சிறையில் நித்திரை செய்வதற்கு கைதிகளுக்கு போதிய இடம் இன்மையால் கைதிகள் இடநெருக்கடியைத் தவிர்க்க மாற்று முறையில் குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு தூங்கும் போது மற்றையகுழுக்கள் விழித்திருந்ததாகவும், இதனால் தங்களுக்கு இரவு -பகல் தெரியவில்லை என்றும் வழக்கில் சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றை தான் சுயவிருப்பில் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுக்களை மறுத்து அன்வர் இவ்வாறு கூறுகிறார்.
“பேரணி நடாத்துபவர்கள், சிறைக்கைதிகள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று எனக்கு சொல்லப்பட்டது. சிறையில் கைதிகளின் தொகை பத்து மடங்காக அதிகரித்திருந்தது. இதனால் மேலதிகாரிகள் எதிர்தரப்பினரை கொலைசெய்ய விரும்பினார்கள்.”
“என்னால் இதற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. நான் எவரையும் சித்திரவதை செய்யுமாறு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக என்னால் முடிந்த அளவுக்கு நல்லதைச் செய்தேன். அதை சில சாட்சியங்கள் இங்கு கூறியிருக்கிறார்கள். நான் அவர்கள் விடுதலையாவதற்கு உதவியதை நினைவுகூர்ந்து இருக்கிறார்கள்.”
“நான் அரச எதிர்த்தரப்பினருடன் அனுதாபம் கொண்டவனாக இருந்தேன். அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவினேன். இதனால் நானே அஷாத் அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டே இங்கு வந்தேன். எனது பல உறவினர்கள் அஷாத்துக்கு எதிரான போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். எனது பத்து வயது பேரன் இயந்திரத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான்”
அன்வர் தரப்பு சட்டத்தரணி, குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதின்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த தலைமை நீதிபதியின் கருத்தும் தீர்ப்பும் இப்படி அமைந்தது.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் முன்வந்து சாட்சியமளித்ததை மதித்தும், பாராட்டியும் தலைமை நீதிபதி கருத்து வெளியிட்டார். சிரியா அரசுக்கு எதிராக உங்களுக்கு இருக்கின்ற ஆத்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒரு முக்கியமான பணியைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் இதை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் மட்டும் செய்யவில்லை. அதற்காக எனது முழுமையான மரியாதையை உங்களுக்கு செலுத்துகிறேன்.”
அன்வர்.ஆர். அவர்களை குற்றவாளியாகக்கண்டு இந்த நீதிமன்றம் அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனையை வழங்குகிறது. ஜேர்மனியில் சீவிய மறியல் என்பது முதலில் 15 ஆண்டுகளைக் கொண்டது. பின்னர் குற்றவாளியின் கடந்தகால 15 ஆண்டுகால சிறைவாழ்க்கை நன்நடத்தைகளைப் பொறுத்து அவரின் விடுதலைக்காலம் மீள்பரிசீலனை செய்யப்படும். குற்றவாளிக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு செய்யப்போவதாக அன்வர் தரப்பு சட்டத்தரணி அறிவித்திருப்பதால் தீர்ப்பு உடனடியாக அமுலாகாது.
எதிரொலிகள்……..!
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜேர்மனிக்கிளை, மனித உரிமைகள் காப்பகம், ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையகம், அரசியல் அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மத்திய நிலையம் என்பன தீர்ப்பை வரவேற்று கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
புலம்பெயர்ந்த சிரியர்கள் தங்கள் மனச்சுமை இறக்கப்பட்டதாக உணர்கிறார்கள். தங்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஆரம்ப அறிகுறி இது என்கிறார்கள். குரல் இல்லாதவர்களின் குரலாக, குரல் இருந்தும் சிரியாவில் குரல்வளை நசிக்கப்பட்டு வாழ்பவர்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம் என்கிறார்கள் அவர்கள்.
“இத் தீர்ப்பானது ஒரு அர்த்தமுள்ள சைகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது ” -சர்வதேச மன்னிப்புச்சபை.
“தண்டனைக்குரிய குற்றச்செயல்கள், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குமாறு மற்றைய நாடுகளையும் கோருகிறேன்” – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்.-
“உண்மையில் இது வரலாற்றுச்சாதனை” – மனித உரிமைகள் காப்பகம்.-
“சர்வதேச நீதியரசர்கள் இந்த உலக சட்ட தத்துவ விதிமுறைகளைப் பயன்படுத்தி சகல சட்டப் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்ய முடியும்.” – (ECCHR-)அரசியல் அமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையம்.
“இந்த தீர்ப்பானது அஷாத் அரசுக்கு ஒரு சிக்னல் என்றோ, அதிர்ச்சி வைத்தியம் என்றோ கூறமுடியாது. ஐ.நா.பாதுகாப்புச்சபையில் ரஷ்யாவும், சீனாவும், சிரியாவின் இடமும், வலமும் இருக்கும் வரை சர்வதேச நீதிமன்றம் எதிலும் சிரியாவை /அஷாத்தை ஏற்றுவது சாத்தியமற்றது”. – மத்திய கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர்.
இந்த வழக்கு ஜேர்மன் மக்கள் மத்தியிலும் எதிரொலிகளை ஏற்படுத்தத் தவறவில்லை. பெரும்பாலான மக்கள் இது விடயத்தில் பெரும் ஆர்வம் காட்டவில்லை. ஒருபகுதியினர் இது ஜேர்மனிக்கு தேவையில்லாத வேலை. பொலிஸ் வேலை பார்க்கவேண்டிய தேவை எமக்கு இல்லை என்று கருதுகின்றனர்.
ஜேர்மன் மக்களின் வரிப்பணத்தில் அரசசெலவில் இவ்வாறான வழக்குகள் தேவை அற்றவை என்றும் அவர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.
இன்னொரு பிரிவினர் அமெரிக்கா இத் தீர்ப்பை ஏற்குமா? முடியமானால் குவாண்டனாமாவில் அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகளால்/ படையினரால் சித்திரைவதை செய்யப்பட்டஆப்கானிஸ்தான் கைதிகளுக்கு சார்பாக ஒரு வழக்கை நடாத்திக்காட்டுங்கள் என்று ஜேர்மனியின் நீதித்துறைக்கு சவால்விடுகிறார்கள் அவர்கள்.
ஜேர்மனியின் சட்ட ஒழுங்கு நடைமுறையானது முற்றுமுழுக்க பூகோள அரசியல் தூய்மை கொண்டது என்று யாரும் வாதாடமுடியாதுதான். அதேவேளை அஷாத்தின் அரசியல் இருப்பையோ, அரசின் அடித்தளத்தையோ இந்த தீர்ப்பு தகர்க்கவில்லை என்பது உண்மையே. ஆனால் உலக நாடுகளுக்கு ஆகக்குறைந்தபட்சம் ஒரு செய்தியை அது பரிமாறியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
அன்வர் மேன்முறையீட்டில் தோற்றால் 15 ஆண்டுகளில் வெளியே வருவார். ஆனால் அப்போதும் சிரியாவில் அஷாத் ஆட்சியில் இருப்பார் என்பதை மறுத்துரைப்பதும் அவ்வளவு இலகுவாக இல்லை. பூகோள அரசியல் சதுரங்கத்தில் இது ஒன்றும் புதுமை அல்லவே.
நெத்தலிகள் வலையில் சிக்குகிறார்கள், சுறாக்கள் தப்பிக்கொள்கிறார்கள். இது உலக அரசியல்! இலங்கை அரசியலிலும் இதுதான் பொது நிலை.!!