தமிழ்த்தேசிய சுயவிமர்சனம்! தடம்புரண்டது வண்டி..! புரட்டியது மக்களா..?  சாரதியா…? (காலக்கண்ணாடி 68)

தமிழ்த்தேசிய சுயவிமர்சனம்! தடம்புரண்டது வண்டி..! புரட்டியது மக்களா..? சாரதியா…? (காலக்கண்ணாடி 68)

—- அழகு குணசீலன்—-

தமிழ்த்தேசிய அரசியல் போக்கை கேள்விக்கு உட்படுத்தும் சுயவிமர்சனப் பாணியிலான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது வழமைக்கு மாறானதும், வித்தியாசமானதுமாகும். ஒரு வகையில் இதுவரை மறுதரப்பினரால் தமிழ்தேசிய அரசியல் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாக ஏற்றுக் கொள்வதாகவும், கடந்த காலத்தை திரும்பிப்பார்ப்பதாகவும் இந்நிகழ்வு அமைகிறது.  

இது அரங்கமும்அதன் பத்தியாளர்களும் இதுவரை பேசிவருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளுக்கு கிடைத்த வெற்றியும்தான்.   

இது வண்டிச் சாரதியின் சிந்தனைகளில் எந்தளவு  தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கப்பால் வரவேற்கத்தக்க வெளிப்படைத்தன்மை கொண்ட கருத்தாடலும், சுயவிமர்சனமும். தமிழ்த்தேசியம் கடந்த பல தசாப்தங்களாக தொலைத்துவிட்டு தேடிய சுயவிமர்சனத்தை காலம் கடந்து  கண்டு பிடித்திருக்கிறார்கள். 

“தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம்” சார்பில் இதனை மன்னார் சிவகரன் ஏற்பாடு செய்துள்ளார். இவர் தமிழ்த்தேசிய பற்றாளரும், தீவிர ஆதரவாளரும். கருத்துரையாற்ற அழைக்கப்பட்டவர்களும் தமிழ்த்தேசிய அரசியல், சமூக, ஊடக, கல்விச் சமூகங்களைச் சார்ந்தவர்கள். பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கிடையே ஏகபோகமற்ற பன்மைத்தன்மையைக் கேட்கக்கூடியதாக இருந்தது. இது கூட தமிழ்த்தேசிய அரசியலில் புதிய போக்கு.  தமிழ்த்தேசிய வண்டியை சாரதி தடம்புரட்டுகிறார் என்கிறார்கள் சிலர். இல்லை மக்களே புரட்டுகிறார்கள் என்கிறார்கள் மற்றவர்கள். இடையில் தமிழ்த்தேசிய அரசியல் பாராளுமன்ற தலைமைத்துவத்தில் இருந்து மீட்கப்பட்டு வாக்கு அரசியலுக்கு அப்பால் மக்களை உள்வாங்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் அந்த மேடையில் ஒலிக்கிறது. 

“சிதைந்து போகின்ற தமிழ்த்தேசியமும், சிந்திக்காத தலைமைகளும்” என்பதே இக் கருத்தாடலின் தலைப்பு. ஆகக்குறைந்தது தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் சுயமாகவே தமிழ்த்தேசியம் சிதைவதையும், தலைமைகள் சிந்திக்காதிருப்பதையும் அடையாளம் கண்டிருப்பதன் வெளிப்பாடு இது எனலாம்.   

கூட்டமைப்பின் முக்கூட்டு தலைமைக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்கினேஸ்வரனுக்கும் பொருந்திப்போகின்ற தொப்பி இது. இந்த நிகழ்வில் கருத்துரையாற்றிய சில துறைசார் முக்கியத்தர்களின் கருத்துக் கருப்பொருள் இங்கு கண்ணாடியில் விழுகிறது. 

மக்கள் சிதைத்த தமிழ்த்தேசியம் …..! 

“மக்களின் தலையில் தேர்தலுக்கு தேர்தல் மிளகாய் அரைப்பதை நிறுத்துங்கள்” என்று அரசியல்கட்சித் தலைமைகளைக் கோரும் ஊடகவியலாளர் வித்தியாதரன், தேசியம் சிதைந்தது மக்காளால் என்று அடித்துச் சொல்வது முரண்பாடாக உள்ளது. தமிழ்த்தேசியம் என்ற (வண்டியை) தலைமை (சாரதி) தடம்புரள வைக்கவில்லை மக்கள்(பயணிகள்) தடம்புரள வைத்தார்கள் என்பது அவர்தம்வாதம். 

முள்ளிவாய்க்கால் முடிந்து ஆறுமாதத்தில் வெற்றிலைச் சின்னத்திற்கு 45,000 வாக்குகள் யாழ்ப்பாண மக்களால் அளிக்கப்பட்டதை தமிழ்தேசியத்தின் சிதைவின் ஆரம்பம் என்பது வித்தியாதரனின் கருத்து. “சட்டம் கோட்டைவிட்ட கணக்கு” என்று 1989 இல் ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேர்தலில் மூன்று இடங்களை யாழ்தேர்தல் மாவட்டத்தில் எவ்வாறு வென்றார்கள் என்றும் விளக்குகிறார் அவர்.  

சட்டமூளைகள் வேட்பாளர் எண்ணிக்கையில் கண்ணாய் இருக்க மூன்று வேட்பாளர்களை மட்டும் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தமது ஆதரவாளர்களின் மூன்று வாக்குகளையும் மூன்று வேட்பாளர்களுக்கும் போடவைத்து வெற்றிபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகள் பிரிந்ததினால் வெறுங்கையோடு திரும்பியது. மக்கள் களைத்து விட்டார்கள் அவர்களுக்கு ஒரு தீர்வு தேவை என்கிறார் அவர். 

அதேவேளை தமிழ்த்தேசியம் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாக மக்களைக்கோரி கட்சி அரசியல் தலைமைகள் தமிழ்த்தேசியத்தை சிதைத்ததை – வண்டியை சாரதிகள் தடம்புரட்டியதை வசதிகருதி மறந்து போகிறாரா வித்தியாதரன்? மக்களை தமிழ்த்தேசியத்தை சிதைத்தவர்கள் என குற்றக்கூண்டில் ஏற்றுகிறார் அவர்.  

பல கட்சி வேண்டும்.! பன்மைத்தன்மை. வேண்டும்…!! 

“தமிழ்த்தேசியம் மந்திரமோ, சுலோகமோ, வெறும் கூக்குரலோ அல்ல. அது செயற்பாட்டை வேண்டிநிற்கிறது” என்று மிதப்போக்கு தலைமைகளைச் சாடுகிறார் செல்வின். ஒரு சிறந்த நிர்வாக சேவை அதிகாரியான செல்வின், சமாதான செயலகத்தின் பணிப்பாளராக செயற்பட்டவர். 

தமிழ்த்தேசியம் தேர்தல் சுலோகம் அல்ல. அது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டிய வாழ்வியல். தேசியம் மண், மக்கள், மாண்பு இணைந்த பெருநிலம் என்று கூறும் செல்வின் எமது தலைவர்களை, தான்  தமிழ்த் தலைவர்கள் என்று அழைப்பதில்லை என்றும் அவர்கள் வெறும் கட்சித்தலைவர்கள் என்றும் கூறுகிறார். 

அனைவரும் ஓரணியில் ஒன்றுபடவேண்டும் என்பதல்ல. ஒற்றுமை வேண்டாம் என்று கூறுவதன் மூலம் இதுவரை தமிழ்த்தேசியம் வலியுறுத்திய ஏகபோகத்தை நிராகரிக்கிறார் செல்வின். உண்மையில் இது சிந்தனையில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனை. அடிப்படையில் ஒருமனப்படுங்கள்! ஒற்றுமை வேண்டாம்.!! பல கட்சி வேண்டும். பன்மைத்தன்மை வேண்டும். விவாதங்கள் வேண்டும் என்பது செல்வினின் கருத்து. இது ஜனநாயக ஜதார்த்தமும் கூட. 

மக்களின் இன்றைய தேவை வாழ்வாதாரப் பொருளாதாரம். அது காலப்போக்கில் அரசியல்பொருளாதாரமாகி தேசிய பொருளாதாரமாக உருவாக்கப்பட வேண்டும். கட்சி இருப்பு, வாக்கு இருப்பு, கதிரை இருப்புக்காக வாக்குக்கேட்டுவராத தலைமை தமிழ்மக்களுக்கு தேவை என்று வாதிடுகிறார் அவர். 

சட்டம், காகிதஅறிக்கை, ஒப்பந்தம், தேர்தல் எல்லாம் தேசியமாகாது. 

அண்ணல் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று குடும்பிச் சண்டை பிடிக்கும் கட்சி அரசியல் தேசியம் அல்ல. கட்சி மக்களை வழிநடத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியத்தை சிதைத்தது சிந்திக்காத தலைமைகள்தான் என்றும்  கருத்தாடலின் தலைப்பை உறுதி செய்து தமிழ்த்தேசியம் தடம்புரள தலைமையே – சாரதியே காரணம் என்பது செல்வினின் வாதம். 

பழுதடைந்த பதின்மூன்று தீர்வாகுமா…

“அடிப்படையிலேயே பழுதுபட்டது 13வது திருத்தச்சட்டம்” என்று G.L.பீரிஸ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதை திருப்பிச் சொல்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். அவரது உரை தலைப்பு  கூறுகின்ற குற்றச்சாட்டில் இருந்து தலைமைக்கு விடுதலையும் பிணையும் கோருகின்ற நீதிமன்றவாதமாக அமைகிறது. 

சமஷ்டிக்கு குறைவான தீர்வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. 2010 முதல் 2020 தேர்தலிலும் கூட்டமைப்பின் கொள்கையும், நிலைப்பாடும் அதுதான். சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிப்பகிர்வையே நாம் வேண்டிநிற்கிறோம் என்கிறார் சுமந்திரன். பழுதடைந்த 13 ஐ சுமந்திரன் இப்படித்திருத்துகிறார்: 13 உடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு…. என்பதுதான் அந்தத் திருத்தம். 

மாகாணசபை சபைகளுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வு இல்லை. நிறைவேற்று அதிகாரம் ஆளுனரிடம் உள்ளது. மாகாணசபை சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றை பாராளுமன்றம் நிராகரிக்கலாம், மாற்றி அமைக்கலாம். இதனால் இந்தப் பாதகங்கள் இல்லாத சமஷ்டியைக் கோருகிறோம் என்பது சுமந்திரனின் வாதம். அதற்காக பதின்மூன்று தொடக்கப்புள்ளியாகவும் இருக்கமுடியாது என்று நாங்கள் நிராகரிக்கவில்லை என்று கஜேந்திரகுமார் அணியைச்சாடவும் அவர் தவறவில்லை. 

குறிப்பாக நோக்கினால் “தமிழ்தேசிய சிதைவு” “சிந்திக்காத தலைமைகள்” என்ற வார்த்தைகளை பயன்படுத்தாத சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  தலைமை தமிழ்த்தேசிய பாதையில் தடம்புரளாது பயணிக்கிறது என்ற அர்த்தத்தில் தலைமைத்துவத்திற்கு சார்பாக ஆஜராகிப் பேசிமுடித்தார். தமிழரசை முதன்மைப்படுத்தியும், தன்னை முதன்மைப்படுத்தியும் அவரது வாதம் அமைந்திருந்தது. தமிழ்த்தேசியத்தில் எந்த தேய்வும் இல்லை, சிதைவும் இல்லை போன்ற காட்சியை காட்டமுயற்சிக்கிறார் அவர். 

அமெரிக்காவே ஆண்டவன்….! பாலஸ்தீனத்தை மறந்த நிலாந்தன்!! 

தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றார் தந்தை செல்வா. அந்த ஆண்டவன் யார்? ஏன் அவர் ஆண்டவன்? என்று உலக விவகாரங்களைப் பட்டியல் போட்டு அமெரிக்க மேலாதிக்கத்திற்கு வெற்றிலை வைக்கிறார் நிலாந்தன் என்ற ஊடகவியலாளர். 

“தமிழ்த்தேசிய வெளிவிவகாரமும், இராஜதந்திரமும் வல்லரசுகள் சார்ந்த அணிசேர்தலாக அமையவேண்டும்” என்று, பெரிதும் அமெரிக்க சார்பு அணுகுமுறையை பல நாடுகளின் பெயர்களைப் பட்டியலிட்டு நியாயப்படுத்துகிறார் ஊடகவியலாளர் நிலாந்தன். இதன் மூலம் தேசிய விடுதலைப்போராட்டங்கள் குறித்த தூரப்பார்வை அற்று அவர் ஆதங்கப்படுகிறார். 

“விடுதலை” என்பது “ஆட்சி அதிகாரம்” என்று குறுக்குகிறார். இதனால்தான் அவருக்கு அமெரிக்காவினால், மேற்குலகினால், ஏன் இந்தியாவினால் கூட விடுதலைக்கு அளிக்கப்பட்ட ஆதரவுகள் வெறும் அதிகார மாற்றங்களே என்பதையும், அவர் குறிப்பிட்ட இராஜதந்திரம் எந்த சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையையும் மக்களுக்கு பெற்றுத்தரவில்லை என்பதையும் பார்க்கத் தவறுகிறார். ஒருவகையில் இது தமிழ்த்தேசியம் அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் கட்டுடைப்பைச் செய்யாது பூசிமூடிய புலிகளின் அணுகுமுறை. 

நிலாந்தன் பட்டியல் இட்டுள்ள வங்காளதேசம், கிழக்குத்திமோர், கோசவோ, தென் சூடான், குர்திஸ்தான் மக்களுக்கு மேற்குலக ஆண்டவன் பெற்றுக்கொடுத்துள்ள தேசியம் உலகின் வறியநாடுகளின் பட்டியலில் இவை முன்னணி வகிப்பதுதான். இஸ்ரேலை முன்மாதிரியாக கூறும் நிலாந்தன் ஆண்டவனின் அருளோடு பாலஸ்தீனத்தில் அது நடாத்தும் ஆக்கிரமிப்பை மறந்து போகிறார். 

ஈழவிடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியில் பாலஸ்தீனத்திற்கும் ஒரு பங்குண்டு. அதை மறந்து பாலஸ்தீன்த்தை கறிவேப்பிலையாக்குகிறார்.  

இங்கு செல்வின் குறிப்பிட்ட இஸ்ரேலால் அமெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை அவர் கண்டுகொள்ளவில்லை. ஒரு தேசிய இனம் ஆகக்குறைந்தது இன்னொரு தேசிய இனத்தின் நலன் சார்ந்தாவது சிந்திக்காதவரை நிலாந்தன் பேசும் இராஜதந்திரம் தமிழ்த்தேசியத்தை வெறுமனே பொறியியல் மாட்டுவதாகவே அமையும். 

இந்தியாவில் உள்நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேவேளை மேற்குலகின் இன, மத, நிறவாதங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இது மிகப் பாரிய வன்முறை. அமெரிக்காவின் ஆதரவுடன் சுயாட்சியைப்பெற்ற நாடுகளை மட்டும் அல்ல இறைமையுள்ள நாடுகளில் சுய நலன் சார்ந்து ‌‌ 

அமெரிக்கா தலையிட்டு நடாத்திய யுத்தங்களையும்‌, இதனால் இன்று அந்த நாடுகளின் நிலைமையையும் கருத்தில் கொள்ளாதது கவலைக்குரியது. அந்த நாடுகள் அடிப்படையில் அனைத்தையும் இழந்து அகதிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. 

அணிசேராத வெளிவிவகாரமும், இராஜதந்திரமுமே நீண்டகால அணுகுமுறையில் ஈழமக்களின் பிரச்சினையை கையாள உதவியாக இருக்கும். கடந்த கால அனுபவங்கள் இந்தியாவைத்தவிர்த்து சாமாதானத் தீர்வு சாத்தியமில்லை என்பதையே காட்டுகிறது. பூகோள அரசியல் ஜதார்தமும் அதுதான். சீனாவின் சிறிலங்கா மீதான அக்கறைக்குள் அமெரிக்கா இலங்கை மக்களை இழுத்து விடும் இராஜதந்திரத்தில் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களை மேற்குலகம் தமது நலன்சார்ந்து பயன்படுத்துவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

பிராந்தியத்தை முதன்மைப்படுத்தும் நோக்கு ..! 

“பேராசிரியர் கணேசலிங்கன் தமிழ்த்தேசிய அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை முதன்மைப்படுத்துவதுடன் பெருமளவுக்கு சுமந்திரனின் 13வது திருத்தச்சட்டம் குறித்த கருத்துக்களோடு முரண்படுகிறார். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் ‌‌‌‌‌என்று இந்தியாவை ஏன்? நேரடியாகக் கோரமுடியாது? என்று சுமந்திரனைக் கேட்கிறார் அவர். 13 உடன் கூடிய அர்த்தமுள்ள  அதிகாரப்பகிர்வு (சமஷ்டி,) என்ற வார்த்தைப்பிரயோகங்கள் இந்தியாவில் இருந்து விலகி அமெரிக்காவை நாடும் தந்திரம் என்ற தொனியில் அவர் குரல் ஒலிக்கிறது. 

தமிழ்மக்கள் அரசியல் விழிப்புணர்வு அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கருத்தை இவர்கள் அனைவரும் கொண்டுள்ளபோதும், அதற்கான பொறுப்பை கட்சியோ, சாரதியோ ஏற்றுக்கொள்ளாது  தப்பித்துக் கொண்டு மக்களின் தலையில் கட்டிவிட முயற்சிப்பது தெரிகிறது. அரசியல் தலைமைகள் மக்களுக்கு வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டும் என்று ஆணித்தரமாக கோரும் ஒரே ஒருவராக செல்வினின் உரை அமைகிறது. 

தமிழ்த்தேசியத்தின் சரிவுப்போக்கானது இதுவரை பாராளுமன்ற தேர்தல் முடிவை மட்டுமே அளவீடாகக்கொண்டிருந்தது. அந்த வகையில் கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் இழந்த பாராளுமன்றகதிரைகளின் எண்ணிக்கையே அடிப்படையாக இருந்தது. 

ஆனால் இந்த அணுகுமுறையில் இருந்து மாற்றுப் போக்கைக் கொண்டதாக இக்கருத்தாடல் அமைந்திருப்பது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசியல் கலந்துரையாடலின் முதற்படி. 

இந்த சிதைவை ஓரளவுக்காவது  தடுத்து நிறுத்த பலகுழுக்களும், அமைப்புக்களும் முயற்சித்தன. பிரூபி, மக்கள் ஆட்சிக்குழு, ஆயர்கள் அமைப்பு போன்றவற்றைக்குறிப்பிடலாம். இவை எல்லாம் வந்த வேகத்தில் செயலற்றுப் போயின. காரணம் வண்டிச் சாரதிகள் இவர்களை கருத்தில் கொள்ளவில்லை. இப்போது கட்சிக்குள் இருந்து சிவகரன் புறப்பட்டிருக்கிறார். இவரை அசட்டை செய்வது தமிழ்த்தேசிய வண்டிச் சாரதிகளுக்கு அவ்வளவு இலகுவல்ல. அப்படி அசட்டை செய்தால் வன்னியில் சிதைவு அதிகமாக இருக்கும். 

இந்தக் கருத்தாடல் தமிழ்த்தேசிய தலைமைகளை – சாரதிகளை தாங்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்ற கட்சி வண்டிகளை இன்றைய நிலையிலாவது தடம்புரளாது செலுத்த வேண்டிய பொறுப்பை உணர்த்தியிருக்குமா..? அல்லது மக்கள் தான் தடம்புரட்டினார்கள் என்று வித்தியாதரனின் மந்திரத்தை ஓதுவார்களா? 

“வண்டி ஓடச்சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் -அந்த இரண்டில் ஒன்று இலையென்றால் எந்த வண்டி ஓடும்….?”