பாகிஸ்தான் நெருப்பு: கொளுத்தப்பட்டது பிரியந்த மட்டுமல்ல  இஸ்லாமும்தான்! (காலக்கண்ணாடி – 66)

பாகிஸ்தான் நெருப்பு: கொளுத்தப்பட்டது பிரியந்த மட்டுமல்ல இஸ்லாமும்தான்! (காலக்கண்ணாடி – 66)

— அழகு குணசீலன் — 

டிசம்பர் மூன்று, வெள்ளிக்கிழமை. 

இஸ்லாத்தின் புனிதநாள்! ஜும்மாத்தொழுகை நாள்!! 

இஸ்லாத்தில் மட்டுமல்ல இந்து மதத்திலும், கிறிஸ்த்தவத்திலும் அது புனிதநாள்தான். 

இந்துக்கள் ஆகக்குறைந்தது மாமிசம் உண்ணமாட்டார்கள். கிறிஸ்த்தவர்களைப் பொறுத்தமட்டில் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை. (பெரிய வெள்ளி) என்பதால் மேற்கு நாடுகளில் வெள்ளியில்  கடலுணவு உண்பர், மற்றைய மாமிச உணவை தவிர்ப்பர். 

அப்படியொரு வெள்ளியில்தான் யாரும் எதிர்பாராதபடி அந்த நெருப்பு மூண்டது. பிரியந்த எரிக்கப்பட்டான். மரணத்தின் பின் ஒரு இஸ்லாமியனின் ஜனாஸா எரிக்கப்படுவது இஸ்லாத்தின் உன்னத இலட்சியங்களுக்கு முரணானது. அது இஸ்லாத்தை நிந்திப்பது. 

ஆனால் பிரியந்த என்ற மனிதனின் உடல் அங்கு எரிக்கப்பட்டுள்ளது.  

இஸ்லாம் மதத்தை நிந்தித்தான் என்பதற்காக வழங்கப்பட்ட தண்டனை. 

இந்த படுபாதகச்செயலைச் செய்ததன் மூலம் இஸ்லாம் மதத்தினை அவமதித்து, அதன் போதனைகளை அந்தக் கும்பல் நிந்தித்திருக்கிறார்கள். இதன் மூலம் உலகில் வயதில் இளம்மதம் போதித்த புனிதப் போதனைகளயும் அதன் புனித திருக்குரானையும் சேர்த்தே கொளுத்தியிருக்கிறார்கள். 

ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும் போது, மதத்தின் பெயரால் சட்டம், ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொண்ட கும்பல் ஒன்றின் மதம்பிடித்த செயற்பாடு இது. 

பாகிஸ்தான் மக்கள் தொகையில் ஒப்பீட்டளவில் இது ஒரு சிறு கும்பல்தான், ஆனால் பாகிஸ்தானில் மட்டுமல்ல உலக அரசியலில், தலைமைத்துவத்தில் இவர்களின் கைதான் ஓங்கியிருக்கிறது. 

இது உலகில் பாகிஸ்தானில் மட்டும் நடைபெறவில்லை. பல நாடுகளில் இனத்தின், மதத்தின், நிறத்தின், மற்றும் சமூகத்தின், சாதியின், பாலின் பெயரால் பல நாடுகளிலும் நடைபெறும் ஒன்று. இலங்கை, இந்தியா, மியான்மார், அரபு தேசங்களின் பல நாடுகளிலும், ஆயுத அமைப்புக்களிலும் நடைபெறும் அநாகரிகம். 

இதில் வெறிகொண்ட சாமானியர்கள் மட்டுமல்ல, மதவாதிகளும், அரசியல் தலைவர்களும், படையினரும், இனவாதிகளும் தங்கள் பங்கைச் செலுத்தியே வருகின்றனர்.  

அமெரிக்க வெள்ளைப்பொலிஸ் ஒருவன் தன் முழங்காலால் தொண்டையை நெரித்து ஒரு கறுப்பின இளைஞனின் மூச்சை நிறுத்தினான். 

புனிதப் பசுவை(?) வாகனத்தினால் மோதிக்கொன்றான் என்பதற்காக இந்திய இந்து வெறியர்கள் சாரதி ஒருவனை அடித்துக் கொன்றார்கள். 

வன்முறையாளர்களால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். 

சாதியின் பெயரால், பாலின் பெயரால் நாளும் பொழுதும் கொலைகள் தொடர்கின்றன. இலங்கைக்கும் இது விதிவிலக்கல்ல. அவை எல்லாவற்றையும் பதிவிட இப்பத்தி போதாது. அவற்றைப் பதிவிட்டு இப்பதிவை திசைதிருப்புவதும் “அதற்குத்தான் இது” என்று மனித நேயத்தை மறைப்பதும் தார்மீக தர்மம் அல்ல. 

இவ்வாறான வன்முறைச் சூழலில்தான் பாகிஸ்தான் வீதியொன்றில் கல்லெறிந்து, அடித்து நொருக்கப்பட்டு, காலால் உதைத்து, ஆடைகளை அகற்றி, வீதியால் இழுக்கப்பட்டு, அனைத்து சித்திரவதைகளையும் செய்த பின் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கிறான் பிரியந்த. 

வழமைபோல் எல்லாம் முடிந்தபின் வருவதுதானே பொலிஸ். வந்து இருக்கிறார்கள் மீசையை முறுக்கிக்கொண்டு கும்பலைத் தேடுகிறார்களாம். 

இந்த நெருப்பு எரியும்போதே வழமைபோல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்தக் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக தங்கள் இயலுமைக்கு ஏற்ப எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  

அரசியல்வாதிகள், மதவாதிகளை விட்டுவிடுவோம் அது அவர்களின் வழமையான பம்மாத்தும், பல்லவியும், பத்தோடு பதினொன்றும். ஆனால் மக்கள் குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் இந்தக் கொடுமைக்காக சிறிலங்கா மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். இது மனிதத்தின், இஸ்லாம் போதனைகளின் வெளிப்பாடு. 

“SORRY SRILANKA” என்ற பதாதைகளை ஏந்தி பெண்களும், பிள்ளைகளும் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த மிருகத்தனமான செயலையிட்டு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறார்கள். பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன. கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இம்ரான் கான் அரசாங்கத்தைக் கோரி நிற்கின்றன . 

இது அரசியல், மதத்தலைமைகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது.  

பிரதமர் இம்ரான் கான் பேசினார், இஸ்லாமிய மதத்தலைவர்கள் பேசினார்கள், அமைச்சர்கள் பேசினார்கள், அறிக்கைகளை விட்டார்கள். சிலர் செத்த வீட்டில் அரசியலையும் தேடினார்கள்.  

என்ன பேசினார்கள்? எப்போதும் போன்று, எல்லோரையும் போன்று வழமையான பேச்சு. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும், சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம், கைதுகள் தொடர்கின்றன என்றார்கள்.  

இவற்றோடு நின்றுவிடவில்லை நஷ்ட ஈடும் வழங்கப்படவுள்ளது. பிரியந்ந குடும்பத்திற்கு பாகிஸ்தான் வர்த்தக சமூகம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குமாம். அவர் கடமையாற்றிய கம்பனி மாதாமாதம் அவரது சம்பளத்தை குடும்பத்திற்கு அனுப்பி வைக்குமாம். 

சிறிலங்கா ஜனாதிபதி ஒருநாள் மௌனம் இருந்து, பின் டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்திருக்கிறார். அரசாங்கமும், சஜீத் பிரேமதாசவும் பல மில்லியன்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஊடகம் ஒன்று புலிகளை அழிக்க பாகிஸ்தான் ஆயுத, இராணுவ உதவிவழங்கியதால் ராஜபக்சாக்கள் மௌனமாய் இருக்கிறார்கள் என்று இலங்கை அரசாங்கத்தைப் சீண்டி அரசியல் நடாத்துகிறது. 

இலங்கையில் ஒரு சிங்கள – முஸ்லீம் கலவரம் வெடிக்கும், அதில் குளிர்காயலாம் என்று அவர்கள் நினைத்தது நடக்கவில்லை போலும். 

அமைதி காத்ததன் மூலம் இலங்கை மக்கள் இந்தியாவின் முகத்தில் கரிபூசியிருக்கிறார்கள். 

அது சரி, பிரியந்தவின் பிள்ளைகளுக்கு தகப்பனையும், மனைவிக்கு கணவனையும், உறவினர்களுக்கு அவனது உறவையும் எவராலும் வழங்கமுடியாது. இன்னும் சில மாதங்களில் எல்லாம் மறந்து போய்விடும், மீண்டும் ஒரு உயிர் பலியிடப்படும்வரை. ஏனெனில் இந்த மனிதத்தின் கொலை முதலாவதும் இல்லை. இறுதியானதும் இல்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அரசியலும், மதமும் அடுத்த முறையும் அரைத்தமாவைத் திருப்தி அரைக்க தயாராகும்.  

டிசம்பர் 10. வெள்ளிக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று பாகிஸ்தானில் மதவன்முறைக்கு எதிராக நாடு தழுவிய துக்கதினமும், அமைதிப்பேரணியும் உலமா சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியந்தவின் கொலை இஸ்லாத்துக்கு முரணானது என்கிறார் உலமா சபைத்தலைவர்.  

பாகிஸ்தானில் அரசியலும்… இஸ்லாமும்….! 

இலங்கையில் பௌத்தம் எப்படி அரசமதமோ, அப்படித்தான் பாகிஸ்தானிலும் இஸ்லாம் அரசமதம்.   1956 இல் இருந்து பாகிஸ்தான் இஸ்லாமியக்குடியரசு. அரசியல் அமைப்பு இருநாடுகளிலும் மதத்தினைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அரசின் கட்டாய கடமை என்பதை வலியுறுத்துகிறது. அரசுகள் மதத்தை மட்டும் பாதுகாக்கவில்லை மதத்தின் பெயரால் தீவிர அடிப்படைவாத கருத்துக்களையும் பாதுகாக்கின்றன. இந்த அரசியல்வாதிகள் இன்னும் சிலநாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். மதத்தில் கைவைத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே அரசு மதத்தை பாதுகாக்கிறது, அரசை மதம் பாதுகாக்கிறது. அதிகாரம் கவிழாமல் இருக்க கொடுக்கப்படும் இருபக்க இரட்டை முட்டு. 

இது விடயத்தில் பாகிஸ்தான் அரசியலமைப்பு காலனித்துவ கால குற்றவியல் சட்டத்தின் எச்சமாக 295ம் இலக்க சட்டத்தை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 295 A பிரிவின் கீழ் இவ்வாறான குற்றங்களுக்கு(?) ஆகக்கூடியது பத்து வருட சிறைத்தண்டனையும், தண்டப்பணமும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1982இல் 295 Bயில் ஆயுட்காலத் தண்டனையாக உயர்தப்பட்டுள்ளது. இறுதியாக 1986இல் 295 C யில் மரணதண்டனையாக அது கடுமையாக்கப்பட்டது.  ஷியாகுல் ஹக், முஷாரப் கால இராணுவ ஆட்சியில் இந்த கடுமையாக்கம் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மதத்தின் பெயரால் சிறுபான்மையினருக்கு, மட்டுமன்றி பெரும்பான்மை பாகிஸ்தானியர்களுக்கும் எதிராக மிக இலகுவாக பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. 

“WHOEVER BY WORDS, BY VISIBLE REPRESENTATION OR BY ANY INSINUATION DEFILES THE SACRED NAME OF THE  HOLY PROPHET MUHAMMED SHALL BE PUNISHED WITH DEATH AND ALSO BE LIABLE TO FINE”  section 295 -C . 

இங்கு அவதானிக்கப்படவேண்டிய ஒருவிடயம் என்னவெனில் மதத்தை நிந்தித்தவர்கள் என்ற போர்வையில் பலர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல் தீவிர மதவாதக்கும்பல்களால் மரணதண்டனை வழங்கப்படுகிறார்கள். 1987 முதல் 2017 வரையான முப்பது வருடகாலத்தில் மதத்தின் பெயரால் மரணதண்டனை விதிக்கப்பட்வர்கள் 75. இவர்களில் பலர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே மதவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2020இல் 80 பேர் மரணதண்டனையை எதிர்பார்த்து சிறையில் இருந்தார்கள். குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகள் எனப் பலரும் தீவிரமதவாதக்கும்பலால் கொலை செய்யப்படுகின்றனர். இந்தப் பட்டியலில் இன்றைக்கு இறுதியாக இருந்தவன் பிரியந்த. 

தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் போன்றே பாகிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிகமாக இது அரசதுறையில் நிலவுகிறது. அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வொன்றின் படி 41 வீதம் பொலிஸ்நிர்வாகத்திலும், நீதித்துறையில் 17.4 வீதமும் ஊழல்  இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் 46,698 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 17,72,990 வழக்குகளும் தேங்கிக்கிடப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த நிலையில் பிரியந்தவின் கொலைகார்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். மதநிந்திப்பு தொடர்பான கொலைகள் தனி ஒரு கொலைகாரனால் நடாத்தப்படுவதாக இல்லை. மத வெறிக்கும்பல் கூட்டாகவே இதனைச் செய்கிறார்கள். இதனால் இலகுவில் தப்பித்தும் கொள்கிறார்கள். 

Tehreek-e- Labbaik என்ற அதிதீவிர இஸ்லாமிய கட்சியே பிரியந்தவின் கொலைக்கு பின்னணியில் செயற்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் பேசுகின்றன. ஒரு வருடகாலம் தடைசெய்யப்பட்டிருந்த இக்கட்சி மீதான  தடையை, அது நடாத்திய காட்டுத்தர்பார் வன்முறைகள் காரணமாக பாகிஸ்தான் அரசு மீளப்பெற்று, கட்சியின் 2000க்கும் மேற்பட்ட அதி தீவிரவாதிகளையும் சிறையில் இருந்து விடுவித்ததிருந்தது. இவர்களே மத அவமதிப்பு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொலைகளைச் செய்து வருகின்றனர். இம்ரான் கானின் ஆட்சிக்கு பெரும் தலையிடியாக உள்ளனர். பாகிஸ்தான் தலிபான்களுடன் இணைந்து செயற்படும் இக்கட்சி இம்ரான் கான் அரசாங்கத்துடனான யுத்தநிறுத்தத்தை முறித்துக்கொண்டுள்ளது. 

“இந்த நாள் பாகிஸ்தான் வெட்கப்படவேண்டிய ஒருநாள். தனிநபர்களும், காடையர்களும் சட்டத்தைக் கையில் எடுப்பதை அனுமதிக்கமுடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறுவதற்கு இடமளிக்கமாட்டேன்.  சகல பாகிஸ்தானியர்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும். இந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் சிலர், மதத்தை மற்றைய மனிதர்களுக்கு எதிராக சித்திரவதைக்கும், எரியூட்டுவதற்கும் பயன்படுத்தி உள்ளோம் என்பதை சாட்சியப்படுத்தி உள்ளோம். வெளிநாடுகளில் வாழும் ஒன்பது மில்லியன் பாகிஸ்தானியர்கள் முகம் இழந்து நிற்கிறார்கள்” என்று மிகவும் கடுமையான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 

பாகிஸ்தான் ஊடகங்களின் பாராட்டத்தக்க பங்களிப்பு

பாகிஸ்தான் ஊடகங்கள் பலவும் பிரியந்தவின் படுகொலையை மிகவும் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளன. பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பத்தி எழுத்தாளர்கள் இதுவிடயமாக எழுதிவருகின்றனர். வாசகர் கடிதங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடகங்கள் தம்பங்கை, ஆற்றவேண்டிய பணியை, சமூகத்திற்கு சொல்லத் துணிந்திருப்பது பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. 

அரசியல், மதத்தலைவர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அவை வெளியிடுகின்றன. மதப்பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மத வெறிக்கு எதிரான கருத்துக்களை, வன்முறைக்கு எதிரான போதனைகளை ஊடகங்கள் வேண்டி நிற்கின்றன. இஸ்லாத்தின் போதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, சமூகத்தை சற்று விழிப்பூட்ட வேறு எதை இந்த ஊடகங்களால் செய்யமுடியும்? நாளை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கொளுத்தப்படமாட்டார்கள் என்பதற்கும் பாகிஸ்தானில் எந்த உத்தரவாதமும் இல்லை. 

பிரியந்தவின் இக்கொலை தொடர்பாக ஊடகங்கள் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளில் சில: 

*மிருகத்தனமான செயல்.  

*காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். 

* காடையர் கும்பல்  

* மதவெறியர்கள் 

* விசாரணை இன்றிய அநியாயக்கொலை 

* மனிதன் மிருகத்தின் வாரிசு என்பதை நிரூபித்த நிகழ்வு . 

* காட்டுக்கலாச்சாரம் 

“இஸ்லாமிய மதபோதனைகளின் விளக்கத்திற்கும், அதனூடான பாகிஸ்தான் மக்களிடம் உள்ள மனிதாபிமான உணர்வுகளுக்கும், நேர்மைக்கும்  முரணான நிகழ்வு இது” என்று கண்டிக்கிறார் பேராசிரியர் ஷயிட் மீர். 

ஹமீத் சயீட் ஹஷ்மி, இவர் இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர். 

“இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இக்கொடுமையை  விபரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார்.  

இப்படி ஏராளமான கல்வியாளர்களையும், புத்திஜீவிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், மனித உரிமையாளர்கள், மதத்தலைவர்கள், ஊடகங்கள், அனைவரையும் தட்டி எழுப்பி விழித்துக்கொள்ளுங்கள் என்று இறுதிமூச்சை இழுத்து, கண்களை மூடியிருக்கிறான் பிரியந்த. 

பாகிஸ்தான் பெண்கள், தாய்மார்கள் இதுவா? எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் கற்றுக்கொடுக்கின்ற இஸ்லாமிய போதனை என்று வீதியில் இறங்கி இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் இந்த வெறித்தனத்தோடு மதத்தின் பெயரால் வளர்கப்படுவதை நிராகரித்து குரல் கொடுக்கிறார்கள்.  

பாகிஸ்தான் மதநிந்தனையை மென்மையாகவா? கடுமையாகவா கையாள்கிறது என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. மாறாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வெளிநாட்டவர்களை காப்பாற்றுவதற்கான இயலுமையை இழந்து நிற்கிறார்கள். இதனால் அடிப்படைவாதம், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து கட்டற்று செயற்படுகிறது. மத நிந்தனைக்கு எதிரான சட்டம் மரணதண்டனையை கோருவதால் அது மதவாதக் கும்பல்களுக்கு ஒரு ஊக்கியாக அமைந்துவிடுகிறது . 

இலங்கைக்கு பிரியந்த சொன்ன இறுதிச் செய்தி என்ன? 

எடுத்ததற்கு எல்லாம் கர்ச்சிக்கும் இலங்கை அரசியல் அமைதியாக இருக்கிறது. மகாசங்கங்கள் வாய் பொத்தி இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சலசலப்புகள் பேசப்பட்டபோதும் இலங்கை மக்கள் அமைதியாக இருந்ததன் மூலம் பிரியந்தவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி இருக்கிறார்கள்.  

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருந்த பௌத்த பேரினவாத அச்சத்தை பிரியந்த தன் உயிரைப்பலிகொடுத்து போக்கியிருக்கிறான். இலங்கை எரியும் என்று எதிர்பார்த்த “அனுமான்களுக்கு” யேசுவும், முகமது நபியும், காந்தியும், புத்தரும் போதித்த போதனைகளை நீனைவூட்டி விடைபெற்றிருக்கிறான் பிரியந்த. 

பிரியந்தவை அஞ்சலிப்போம்….!!!