“MINORITY TAMIL PEOPLE!” தமிழர் அரசியலில் சொற்சிலம்படி வித்தை! (காலக்கண்ணாடி 65)

“MINORITY TAMIL PEOPLE!” தமிழர் அரசியலில் சொற்சிலம்படி வித்தை! (காலக்கண்ணாடி 65)

      — அழகு குணசீலன் — 

தமிழர் அரசியல் வரலாற்றில், சமூக, அரசியல் சொற்களின் பயன்பாடு என்பது தெளிவற்றதும் குழப்பங்கள் நிறைந்ததும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வியாக்கியானங்களை கற்பிக்கக்கூடியதுமாகவே தொடர்கிறது.  

சமூக, பொருளாதார, அரசியல் கோட்பாடுகள், தத்துவங்கள் சார்ந்ததாக அன்றி வெறுமனே மொழியையும், இனத்தையும் அடையாளப்படுத்தி நிற்கின்ற சொற்பிரயோகம் பாராளுமன்ற அரசியலிலும், ஆயுதப்போராட்ட அரசியலிலும் தொடர்ந்த மொழி நுட்பத்தையே காணக்கூடியதாக உள்ளது. 

இந்த நிலையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்துணர்விலும், இணக்கப்பாட்டிலும் முரண்பாடுகளை ஏற்படுத்திவிடுகிறது என்று கூறலாம். தமிழர் அரசியல் கட்சிகளின் பெயர்சூட்டல், இயக்கங்களின் பெயர்சூட்டல் முதல் திம்பு முதலான பேச்சு வார்த்தைகளிலும், சமகால அமெரிக்க சந்திப்புக்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளாகி இருப்பதை அரசியல் கருத்தாடல்கள் வெளிக்காட்டுகின்றன. இது கட்சிகளினதும், இயக்கங்களினதும் கொள்கைசார்ந்த விடயம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேவேளை தமிழர் பாராளுமன்ற அரசியல் சட்ட அரசியலாக முதன்மைப்படுத்தப்படுவதால் எப்படியும் வியாக்கியானம் கொள்ளலாம் என்பதாகவும் இருக்கமுடியும். 

அமெரிக்க சந்திப்புக்கள் குறித்த பேச்சுக்களில் பயன்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற வார்த்தைப் பிரயோகத்தை தமிழ்த்தரப்பு சட்ட நிபுணர்கள் ஆட்சேபிக்கவில்லை என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டர் பதிவுகளைப்பார்த்த தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஒன்றின் நற்காரியத்தின் பயனாக ‘சிறுபான்மையினர்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு ‘தமிழ்மக்கள்’ என்ற வார்த்தை உள்வாங்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 

இதற்குப் பின்னரும் இடம்பெற்ற பல்வேறு சந்திப்புக்களிலும் தமிழ் தரப்பும் சிறுபான்மையினர் என்ற வார்த்தையை தாமே பயன்படுத்தினர் என்றும் அல்லது மறுதரப்பு பயன்படுத்திய போது மறுத்துரைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக லண்டன் சந்திப்புக்கள் தொடர்பான செய்திகளிலும் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியிருப்பதைக் காணமுடியும். 

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பேச்சுவார்த்தைக் குழுத்தலைமையும், சட்ட வல்லுனர்களும் இது விடயமாக மொளனம் சாதிப்பதாகும். ஆகக்குறைந்தது தாங்கள் அந்த வார்த்தைப் பயன்பாட்டை ஏன்? ஆட்சேபிக்கவில்லை என்று அவர்கள் இதுவரை கூறவில்லை. அல்லது தவறுக்கு மன்னிப்புத்தான் கோராவிட்டாலும் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இது நிகழாதவரை இவர்களின் மௌனத்தை சம்மதமாகவே கொள்ள வேண்டும். தமிழ் டயஸ்போரா பிரதிநிதிகள் மட்டுமே வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு திருத்த யோசனைகளில் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வுகாணும் இணக்கப்பாட்டை மேலும் சிங்கள மக்களுக்கு அச்சத்தைப் போக்குவதற்காக “பிரிக்கப்படமுடியாத ஒற்றை ஆட்சி” என்ற சொல் தங்களால் பயன்படுத்தப்பட்டதாக சுமந்திரன் பல தடவைகளில் கூறியுள்ளார்.  

எனவே இந்த சிறுபான்மையினர் என்ற வார்த்தைப் பயன்பாட்டை தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆட்சேபிப்பதற்கு காரணம் எதுவும் இல்லை. 

இது இன்றைய ஜதார்த்தமும் கூட.  

தமிழ்காங்கிஸ்: (1944 ) – தமிழரசு: (1949)  

தமிழ் தேசியம் என்ற வார்த்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தேர்தலுக்காக பயணிக்கின்ற கட்சியின் முழுப்பெயர் என்ன? அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC). முழு இலங்கையையும்: All Ceylon ஐயும் தாங்கி காலனித்துவ விசுவாசிகள் தேசியம் பேசுகிறார்கள். தேர்தலுக்காக மட்டும் மக்களை ஏமாற்ற தேசியத்தை சேர்த்துக் கொள்கிறார்கள். மற்றும்படி சட்டரீதியான கட்சியின் செயற்பாடு முழு நாட்டிலும் தமிழை முதன்மைப்படுத்தியதே. அதற்குள் இன்னொரு வித்தை பாட்டனார் 50:50 வைத்து அரசியல் நடாத்தியதைப்போன்று பேரனின் “ஒரு நாடு இரு தேசம்” ஆனால் முழுப்பெயரில் தமிழர் தாயகம் இல்லை அகில இலங்கை. அகில இலங்கைக்கும் உரிய கட்சி இரு தேசங்களைக் கேட்கிறது. அதேவேளை இந்த ஒரு நாடு இரு தேசத்தை அடைவதற்கான அதன் வேலைத்திட்டம் என்ன? சர்வதேசத்தில் பிச்சை எடுப்பதா…?  

ஜீ.ஜீ. பொன்னம்பலம் அரச சபையில் 50:50 கோரி ஆற்றிய நீண்ட உரை “மரதன் ஓட்ட உரை” என்று பதிவாகியுள்ளது. அந்த உரையில் கூட அவர் சிறுபான்மையினர் என்ற வார்த்தையையே பயன்படுத்தி உள்ளார். பொதுவாக 50:50 என்று கூறப்பட்டாலும் அதனை அரசியல் நிபுணர்கள் “BLANCED REPRESENTATION” என்றே குறிப்பிடுகின்றனர். சிறுபான்மையினர் என்ற இந்த வார்த்தை பிரயோகம் உண்மையில் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புள்ளிவிபர அணுகுமுறையே அன்றி வேறொன்றும் இல்லை.   

தமிழ்க்காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்களால் தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது. இதன் பெயரைப்பாருங்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) இது தமிழில். ஆங்கிலத்தில் இது FEDERAL PARTY. அதாவது சமஷ்டிக்கட்சி. சமஷ்டி யாருக்கு முழு இலங்கைக்குமா? அல்லது தமிழர் தேசத்திற்கா? இந்த வார்த்தை மாஜாயாலம் தமிழர்களை சமஷ்டி என்று ஏமாற்றவும், சிங்கள மக்களை தமிழரசு -TAMIL STATE என்று அச்சம் கொள்ளச்செய்து அவநம்பிக்கையை ஏற்படுத்தி கிடைக்கின்ற தீர்வுகள் அனைத்தையும் குழப்பவும்தான் உதவியிருக்கிறது.  

இன்று முற்றுமுழுதான கோரிக்கை 13வது திருத்தமாககிவிட்டது. ஒற்றையாட்சிக்குள் சிக்கி சமஷ்டியும் இல்லை தமிழரசும் இல்லை என்ற நிலை. இவர்களின் சாதனை என்ன வென்றால் பிரிக்கப்படமுடியாத ஒற்றை ஆட்சிக்குள் தீர்வாம். ஆனால் பேசுவதோ தமிழ்த்தேசியம். பெயரில் தமிழர்தேச வாசமேயற்ற இலங்கை அதாவது அன்றைய சிலோன் இன்றைய சிறிலங்கா. இவர்களுக்கு எல்லாம் இந்த வார்த்தைப் பிரயோகங்களில் எந்த அக்கறையும் இல்லை. ஏனெனில் கோரி நிற்பது பிரிக்கப்பட முடியாத ஒற்றையாட்சிக்குள் 13 வது திருத்தம். கட்சி பெயர்சூட்டல்கள் எல்லாம் பாராளுமன்ற அரசியலைத்தக்க வைத்துக் கொள்வதற்கான வித்தை மட்டும்தான். 

வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர்கூட்டணி உள்ளிட்ட தமிழர்விடுதலைக்கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பவை எல்லாம் இனத்தை முதன்மைப்படுத்தினவே அன்றி பாரம்பரிய தாயக தேசத்தை முதன்மைப்படுத்திய, உடன் வாழும் மற்றைய மக்கள் பிரிவினரின் உரிமைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. 

ஆயுதப்போராட்டம்: தமிழ் – தமிழ்மக்கள் – தமிழ்ஈழம். 

ரெலோ: தன்னை தமிழீழ விடுதலை இயக்கம் என்றது. எல்ரிரிஈ: தன்னை தமிழீழ விடுதலைப்புலிகள் என்றழைக்க, புளொட்: தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்று அழைத்தது. இது இவை ஆயதப்போராட்ட இயக்கங்களாக இருந்த போது கொண்டிருந்த பெயர்கள். பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்த போது ரொலோ தனது கட்சியை அதே பெயரில் அழைத்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்தையா தலைமையில் விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சியைப் பதிவு செய்தனர். புளொட், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சியானது. 

பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்த அல்லது பிரவேசிப்பதற்காக(?) பதிவு செய்யப்பட்ட இந்தக்கட்சிகளில் ரொலோவைத்தவிர மற்றையவை தமிழீழத்தை அதாவது தமிழர் தாயகம் என்று அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட நில ஆள்புலத்தை கட்சிப்பெயர்களில் கொண்டிருக்கவில்லை. ரொலோ பாராளுமன்ற அரசியலிலும், தனிநாட்டுக்கு பயன்படுத்திய புவிசார்பெயரை தொடர்ந்தும் பயன்படுத்தி 13 வது திருத்தந்தைக் கோரிநிற்கிறது. புளொட்டின், புலிகளின் கட்சிகளின் பெயரிலும் பாரம்பரிய பிரதேசம் காணாமல் போய்விட்டது.  

பெயரா முக்கியம் போராட்டமும், அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளும்தான் முக்கியம் என்றும் வாதிடமுடியும். அப்படியானால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை அல்லவா.? இந்த அமைப்புக்களின் அல்லது கட்சிகளின் பெயர்கள் மட்டும் அல்ல அவற்றின் செயற்பாடுகளும்தான் தமிழ்தேசிய வாதத்தை குறுந்தேசியவாதமாக்கியது என்பதையும் மறுப்பதற்கில்லை. தமிழ், தமிழ்மக்கள், தமிழ்ஈழம் என்ற “தமிழரை” முதன்மைப்படுத்திய குறுந்தேசியவாதத்தின் வெளிப்பாடு இது. இங்கு பாரம்பரியமாக வாழும் மற்றைய மக்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. 

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது பிராந்திய அரசியலை முதன்மைப்படுத்தியதாக இருக்கிறது. வடக்கும் கிழக்கும் சிறுபான்மையினரின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அங்கீகரிக்கின்ற அதேவேளை நிர்வாக ரீதியாக இரு மாகாணங்களும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி நிற்கின்றது. பாரம்பரிய தாயகம் என்பது நிர்வாக ரீதியில் இணைந்த மாகாணங்களா? பிரிந்த மாகாணங்களா? என்ற விடயத்தினால் தீர்மானிக்கப்படுவதில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தாலும், பிரிந்து இருந்தாலும் அந்நிலப்பரப்பு பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுதலிக்கவில்லை. அது மத்தியில் இணக்க அரசியலையும், கிழக்கில் பிராந்திய அரசியலையும் முதன்மைப்படுத்தி செயற்படுகிறது. பாரம்பரிய பிரதேசத்தின் வடக்கு, கிழக்கு நிர்வாகப் பிரிவுகள் மக்கள் சார் பொதுவிடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்பது அதன் வாதம். வேற்றுமையிலும் ஒற்றுமை. ஒற்றுமையிலும் வேற்றுமை. 

ஆயுதப்போராட்டம்: ஈழம் – ஈழமக்கள் – ஈழவர்.! 

ஆயுதப்போராட்டத்தின் மறுபக்கமான தத்துவார்த்த அரசியலையும், ஈழ தேசியத்தையும் நோக்கித் திரும்புகிறது காலக்கண்ணாடி. இந்த வார்த்தைகள் ஈழப்போராட்ட வரலாற்றில் பத்தோடு பதினொன்றாக உச்சரிக்கப்பட்டவை அல்ல மாறாக தத்துவார்த்த அரசியலைப் பேசியவை. செயற்பாட்டளவில் ஆயுத சாகாசங்களில், இராஜதந்திரங்களில் தோல்வியடைந்திருப்பினும் “தமிழுக்குள்” 

சிறைவைக்கப்பட்டிருந்த குறுந்தேசியவாதத்தை தமிழ்த்தேசியத்தின் எல்லைகளைத் தகர்த்து ஈழதேசத்ததின் பரந்த தேசியத்தை அறிமுகம் செய்தவை இந்த வார்த்தைகள். 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF), ஈழ மாணவர் புரட்சி அமைப்பு (EROS), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) என்பனவற்றை இங்கு முக்கியமாகக் குறிப்பிட முடியும். 

இங்கு வடக்கு கிழக்கு அங்கு பாரம்பரிமாக வாழ்கின்ற மக்களின் தாயகம் என்பது தெளிவாக வரையறை செய்யப்படுகிறது. ஈரோஸ் மலையக மக்களையும் உள்வாங்கிக்கொண்டது. ஈழத்தில் வாழும் மக்கள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஈழமக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஈரோஸ்  இன்னும் ஒரு படி முன்னேறி ஈழமக்களை ஈழவர் என்று பிரகடனம் செய்கிறது. தமிழர், தமிழ்மக்கள், தமிழ்பேசும் மக்கள் என்று தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் முதன்மைப்படுத்திய குறுகிய அரசியலில் இருந்து முற்று முழுதாக வேறுபட்ட பார்வை இது. ஈழ விடுதலைப்போராட்டத்தின் தத்துவார்த்த முற்போக்கான பக்கம் இது. துரதிஷ்டவசமாக இந்தப்பக்கம் குறுக்கே பிற வாதத்தினால் மறைக்கபட்டும், அழிக்கப்பட்டும் விட்டது என்றே கூறவேண்டும். 

இந்த இயக்கங்களின், கட்சிகளின் நடைமுறையில் குறைபாடுகள் இல்லை என்று வாதிடுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம். இன்று அமெரிக்காவுக்கு சென்று எந்த வார்த்தை சரியானது என்று மீண்டும் சிறுபான்மையினருக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே உரத்து குரல் எழுப்புகின்ற தத்துவமற்ற அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் மத்தியில் அவர்கள் பார்ப்பதைவிடவும் ஈழதேசியத்தை தெளிவாகக்காட்டுகின்ற இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். அத்தோடு சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழ்மக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் அது ஈழ தேசியத்தை பூரணத்துவப் படுத்தாது என்பதைச் சுட்டிக் காட்டுவதுமாகும். பாலஸ்தீன தேசியவிடுதலை, குர்திஸ்தான் தேசியவிடுதலை போராட்டங்களிலும் ஆள்புலமே மொழி, மத, இனங்களை விட முதன்மைப்படுத்தப்படுகிறது. 

இன்னும் இலங்கைத்தீவில் ஒரு தனிநாட்டை அமைக்கமுடியும் என்று நம்புகின்ற தாயக, புகலிட சக்திகள் சிறுபான்மையினர், தமிழ்மக்கள் என்ற இரண்டு சொற்களுக்குள்ளும் நின்று சொற்சிலம்படி ஆட்டம் நடத்தாது ஈழமக்கள், ஈழவர் என்ற வார்த்தைகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று கோருவதே சரியான தத்துவார்த்த அரசியலாகும். அதைவிடுத்து பிரிக்கமுடியாத ஒற்றையாட்சிக்குள் தீர்வை 13 இன் ஊடாக தேடுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின், உலகத்தமிழர் பேரவையின் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை பிரதியீடு செய்வதும் ஒரு சிலம்பின் வித்தைதான். 

ஆக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இன்றைய தீர்வுப்போக்கில் இந்தவார்த்தைகளால் அவர்களுக்கு எந்த ஒவ்வாமையும் இல்லை. மாறாக சிறுபான்மையினர் என்ற வார்த்தையில் அலர்ஜி உள்ளவர்கள் ஈழத்தை முதன்மைப் படுத்திய வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு கோருவதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். 

சிறுபான்மையினர் என்பவர்கள் யார்…..? 

சிறுபான்மையினர் என்றால் யார்? என்பதை வரையறை செய்வதான சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சட்டவரையறை எதுவும் இன்றுவரை இல்லை. 1992ம் ஆண்டின் ஐ.நா.வின் சிறுபான்மையினர் பிரகடனத்தின் முதலாவது சரத்து பின்வருமாறு கூறுகிறது. 

“சிறுபான்மையினர் என்பவர்கள் அடிப்படையில் தேசிய அல்லது இன, கலாச்சார, மத, மற்றும், மொழி அடையாளங்களைக் கொண்டவர்கள்”. 

இது சமூக அடிப்படையிலானதும், மனித உரிமைகள் சார்ந்ததுமான ஒரு வரைவிலக்கணம். இதனை அரசியல் ரீதியாக விரிவுபடுத்தும் போது இந்த வரையறையானது சுயநிர்ணய உரிமையையும் உள்ளடக்கியதாக விரிவுபடலாம். எனவே சிறுபான்மையினர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு தமிழ்மக்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதெல்லாம் முள்ளைப் பிடுங்கி கட்டையை அடித்த கதைகள்தான். 

“THE TERM MINORITY AS USED IN THE UNITED NATIONS HUMAN RIGHTS SYSTEM USUALLY REFERS TO NATIONAL OR ETHNIC, RELIGIOUS, AND LINGUSTIC MINORITIES, PURSUANT TO THE UNITED NATIONS MINORITIES DECLARATION. 

ALL STATE HAVE ONE OR MORE MINORITY GROUPS WITH IN THEIR TERRITORIES, CHARACTERIZED BY THEIR OWN NATIONAL, ETHNIC, LINGUSTIC OR RELIGIOUS IDENTITY, WHICH DIFFERS FROM THAT OF MAJORITY POPULATION.” 

இந்த வரையறையின் அடிப்படையில் நோக்கும்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றம் எதையும் சாதிக்கப்போவதில்லை. மாறாக அந்த அறிக்கை ஈழமக்கள் அல்லது ஈழவர் என்று திருத்தப்பட்டிருந்தால் அது வரலாற்றில் ஒரு முக்கிய பதிவாக இருக்கமுடியும். ஐ.நா. வரைவிலக்கணத்தில் உள்ள சிறுபான்மையினர் என்ற வார்த்தை தமிழ்மக்கள் என்ற வார்த்தையை விடவும் அதிகம் பேசுகின்றதா? இல்லையா?  

தமிழ்த்தேசியம் பேசும் பாராளுமன்ற அரசியல் நிலத்திலும் புலத்திலும் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன்  செயற்படுவதுடன், தான் போக வழியில்லாத நிலையில் தவில்போல மாராப்பையும் சுமக்காமல் இருப்பதே பொறியில் சிக்காமல் இருப்பதற்கான வழி.