இலங்கையில் அலைக்கழிக்கப்படும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்

இலங்கையில் அலைக்கழிக்கப்படும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்

   — கருணாகரன் — 

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதை எப்படி எதிர்கொள்வது? எப்படிச் சீர்செய்வது என்பதே இன்றைய முதல் பிரச்சினை. ஏனென்றால், பொருளாதார நெருக்கடியை நாம் சரியான முறையில் எதிர்கொண்டு அதைக் கடக்கவில்லை என்றால் மிகமோசமான எதிர்விளைவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சமும் பட்டியினும் கூடத் தலைவிரித்தாடத் தொடங்கி விடும். உற்பத்தித்துறைகள் வீழ்ச்சியடையும். ஆகவே இதற்கு பல வகையான மாற்றுத்திட்டங்கள் உடனடியாகத் தேவை. முக்கியமாக முதலீடுகளும் உற்பத்திகளும் மிகமிக அவசியமானவை. 

இதை மனதிற் கொண்டோ என்னவோ அரசாங்கமும் முதலீட்டாளர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக “புலம்பெயர்ந்திருக்கும் மக்கள் நாட்டுக்கு வந்து முதலீடுகளைச் செய்யுங்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் அனுசரணைகளையும் அரசாங்கம் செய்து தரும்” என்று ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரையில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்த அழைப்பை 2009க்குப் பின்னர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் விடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஜனாதிபதியும் விடுத்திருக்கிறார்கள். 

ஆனால் இந்த அழைப்பை ஏற்று இங்கே வந்து முதலீடுகளில் ஈடுபட்டிருப்போர் மிகமிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடக்கூடியவர்கள் என்று சொல்வார்களே, அந்தளவு தொகையினர்தான் வந்து சிறிய அளவிலான முதலீடுகளைச் செய்திருக்கிறார்கள். இவர்களும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டவாறே தமது முயற்சிகளைத் தொடர்கிறார்கள். 

இவர்கள் உற்சாகமாக இங்கே இயங்கக் கூடிய ஒரு நிலை –அரசாங்கம் அழைக்கும்போது சொல்வதைப்போல இலகுவான நடைமுறைகள் – இருக்குமானால் அதைப் பார்த்து விட்டு ஏனையவர்களும் நாட்டுக்கு முதலீடுகளுடன் வரக்கூடியதாக இருக்கும். 

ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த மாதிரி ஒரு சுமுக நிலை இல்லை. இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள், குழப்பங்கள், நெருக்கடிகள், அலைச்சல்கள், அல்லற்படுத்தல்கள், கேள்விகள், விசாரணைகள், தடைகள்… 

முதலீட்டுக்கான அனுமதியைப் பெறுவது தொடக்கம் அதற்கான இடத்தைத் தெரிவு செய்வது வரையில் சகல மட்டங்களிலும் பிரச்சினைகள், இழுத்தடிப்புகள், பொருத்தமற்ற காரணங்கூறுதல்கள்… 

மேலும் கொமிசன் எதிர்பார்க்கைகள் வரையில்… 

சில சிறிய உதாரணங்களை இங்கே சொல்லலாம்.  

புலம்பெயர்ந்த மக்களின் கட்டமைப்பொன்று இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு வாழ்வாதார உதவித்திட்டங்களை மேற்கொண்டு வந்தது. கூடவே ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கான வீடமைப்பு, பின்தங்கிய பிரதேசங்களில் மற்றும் வறிய நிலையில் உள்ளோருக்கான கல்விக்கான நிதியளிப்புகள் என. இதை அந்தக் கட்டமைப்பு முறைப்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வழிமுறைகளுக்கூடாகவே செய்து வந்தது. இன்னும் செய்து கொண்டிருக்கிறது. 

இதன் அடுத்த கட்டமாக அவர்கள் (இந்தக் கட்டமைப்பினர்) இலங்கையில் முதலீடுகளைச் செய்ய விரும்பினர். அந்த முதலீடானது இங்கே சூழலில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தும் உற்பத்தி முயற்சியாகும். இதில் இரண்டு நன்மைகள் உருவாகும் எனத் திட்டமிடப்பட்டது. ஒன்று,வளங்களை  உற்பத்திப் பெறுமானமாக்குவது. இரண்டாவது, தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது. வேலை வழங்குவது. 

இவ்வளவுக்கும் இதனுடைய லாபம் முழுவதும் இந்த மண்ணிலேயே –இந்த நாட்டிலேயே செலவழிக்கப்படும். இந்த உற்பத்தி மையத்தை மேலும் விரிவாக்குவது. கூடவே இதில் பெறப்படும் வருவாயின் மூலமாக சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது. 

ஆக முதலீட்டுக்கான தொடக்க நிலை நிதியையும் அதன் இயங்கு நிலையை உருவாக்குவதுமே இவர்களுடைய – அந்தக் கட்டமைப்பின் – பணியாகும். 

இதற்காக நிலம் ஒன்று தனியாரிடமோ அரச நிலமாகவோ எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை மாவட்ட செயலர்கள், ஆளுனர், பிரதேச செயலர்கள் என சம்மந்தப்பட்ட பல தரப்பினரிடத்திலும் அவர்கள் கொடுத்தனர். 

காணி வழங்கப்படலாம் என்ற நற்சமிக்ஞையும் காட்டப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் காணி வழங்கப்படவில்லை. இந்த மாதிரியான இழுத்தடிப்புகளின் பின்னணி, அதற்கான காரணங்களை நாம் இங்கே விளக்கத் தேவையில்லை. அதைப் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால், பிரச்சினை – நடைமுறை -இப்படித்தான் உள்ளது. 

இதைப்போல இன்னொரு முதலீட்டாளரின் கதையையும் இங்கே கூறலாம். 

கனடாவிலிருந்து வந்து இங்கே நாட்டில் உற்பத்தித்துறையில் முதலீட்டைச் செய்வதற்கு முயற்சித்தார். குறிப்பாகப் பனை, தென்னை வள மூலப்பொருட்களில் உற்பத்திகளைச் செய்வது. ஆனால், நடைமுறையில் அதை மேற்கொள்வதற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். பனை அபிவிருத்திச் சபையின் அனுமதி, பனை ஆய்வு நிறுவனத்தின் அனுமதி, தென்னைச் சபையின் அனுமதி, பிரதேச சபை, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகப் பிரிவு, கைத்தொழில் அமைச்சக அனுமதி, சுற்றுச்சூழல், பொதுச்சுகாதாரத் தரப்பு போன்றவற்றின் அனுமதி, உற்பத்தித்தரச் சான்றிதழ்கள்… இப்பப் பல தரப்புகளோடு தொடர்பு கொண்டு செயற்பட வேண்டியிருந்தது. இதில் அவர் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். சில தரப்புகள் முறையற்ற காரணங்களைச் சொல்லி இழுத்தடிப்புகளைச் செய்துள்ளன. 

இவை நிர்வாக நடைமுறைகள் என்பதில் சந்தேகமில்லை. எந்த நாட்டிலும் இதிருக்கும். ஆனால், ஒரு திட்டத்தை மேற்கொள்வதற்கான File விரைவாக Move பண்ணவேண்டுமே. நடைமுறைகளை மீறுங்கள் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. விரைவு படுத்துங்கள் என்றே கோருகிறார். 

ஏனென்றால், இதையெல்லாம் கடப்பதென்பதே பெரிய களைப்பை ஏற்படுத்தி விடக்கூடியது. இதைப்பற்றி இந்தப் பத்தியில் முன்னரும் நாம் பேசியுள்ளோம். ஆனால், நெருக்கடிகள் தணியவில்லை. நல்மாற்றங்கள் நிகழவில்லை. ஆகவேதான் மீளவும் இதைப்பற்றிப் பேச வேண்டியுள்ளது. அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படியொரு நம்பிக்கையில். 

அரசாங்கமோ முதலீட்டாளர்களின் வருகையை ஊக்கப்படுத்துவதற்கு ஏராளம் அறிவிப்புகளை விடுத்திருக்கிறது. சலுகைகளைக் கூட வழங்கலாம் என்று சொல்கிறது. முக்கியமாக வரிச்சலுகை, பொருத்தமான இடங்களில் தேவைப்படும் காணிகளை வழங்குவது, நீர் மற்றும் போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுப்பது வரையில். 

ஆனால், இவற்றைப் பெறுவதில் அதிகாரிகள் மட்டத்தில் உள்ள நெருக்கடிகளும் இழுத்தடிப்புகளும் சாதாரணமானதல்ல. இதைச் சீர் செய்வது யார்? இதைக் கண்காணிப்பது யார்? அதாவது கீழ் மட்டத்தில் உள்ள இந்தத்  தடை தாண்டல்களைச் செய்வது எப்படி? 

உண்மையில் இதற்கொரு விசேட ஏற்பாடு அவசியம். அதற்கான தனியான ஒரு செயலகப் பிரிவு இயங்க வேண்டும். அது சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இயங்க வேண்டும். அதைக் கண்காணிப்பதற்கான ஒரு சிறப்புப் பொறிமுறையை நேரடியாக ஜனாதிபதியோ அரசாங்கத்தின் சிறப்புக்குழுவொன்றோ கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுவது அவசியம். 

இப்படி நெருக்கடிகளைத் தணிக்கும் வகையில் செய்யவில்லையென்றால் யாரும் இங்கே வரப்போவதுமில்லை. முதலீடுகளைச் செய்யப்போவதுமில்லை. நம்முடைய கஸ்டமும் பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையும் மாறப்போவதில்லை. பதிலாக கடன்சுமையே ஏறும். 

அல்லது இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பிற நாடுகளே இங்கே முதலீடுகளைச் செய்யும் நிலை வளரும். இது இந்த மண்ணின் வளங்களால் அந்த நாடுகளை வளர வைப்பதற்கே உதவும். 

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது  இதுதான். 

ஆனால், இலங்கையில் தனியாகவும் கூட்டாகவும் முதலீடுகளைச் செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் பலர் ஆர்வமாக உள்ளனர். வலிய வருகின்ற சீதேவியை காலால் தள்ளி விடுகிறோம் என்பார்களே, அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை என்ன செய்வது? 

இன்னொரு தரப்பினர் முதலீடுகளைச் செய்யவில்லை. பதிலாக வாழ்வாதார உதவிகள் தொடக்கம் கல்விப் பணிகள், மருத்துவ உதவிகள் எனச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒரு பொது அழைப்பிலோ தனிப்பட்ட ரீதியிலோ தொடர்பு கொண்டு முதலீடுகளின் பக்கமாகத் திருப்பலாம். ஆயிரக்கணக்கானோருக்கு உடைகளைக் கொடுத்து அந்த மக்களைக் கையேந்தும் கலாச்சாரத்துக்குப் பழக்குவதை விட அவர்கள் உழைத்து வாழக் கூடிய வழிகளைக் காட்ட வேண்டும். அதைப்போல வாழ்வாதார உதவிகள் என்று தொழில் முயற்சிகளுக்கான வழிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர, உணவுப் பொருட்களை வழங்குவது மிகப் பெரிய தவறு. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு – ஏன் போர் நெருக்கடிக்காலத்தில் கூட – யாருக்கும் யாரும் உணவுப் பொதிகளைக் கொடுத்ததில்லை. அதை யாரும் எதிர்பார்த்ததும் இல்லை. யாருக்கும் யாரும் பாவித்த உடுப்புகளையோ பாவிக்காத உடுப்புகளையோ கொடுத்ததும் இல்லை. இதற்காக யாரும் கையேந்தி நின்றதும் இல்லை. 

ஆனால் இப்பொழுதுதான் இந்தப் புதிய வியாதி தொடங்கியுள்ளது. 

இது ஒரு சமூகத்தை ஈடேற்றுவதற்குப் பதிலாக அதைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளி இயலாதவர்களாக்குவதாகும். 

ஆகவே இந்த உதவிப் பங்களிப்பாளர்களைப் பக்குவமாக வழிப்படுத்தி, அவர்களுடைய பங்களிப்புகளை முதலீடுகளாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதை தமிழ் அரசியற் தரப்பினர் தொடக்கம் அரச அதிகாரிகள், சமூக அக்கறையோடு செயற்படுவோர், சமூகப் பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் செய்ய வேண்டும். அரசாங்கம் கூட இதற்குப் பொருத்தமான முறையில் சிநேகபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

ஏனென்றால் இந்த மாதிரி உதவிப் பணிகளுக்காக பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன. ஆனால் அவை பயனற்றுப் போகின்றன. மட்டுமல்ல, மிக மோசமான  -தவறான ஒரு வாழ்க்கைப் பண்பாட்டையும் – கையேந்தி நிற்கும் மனநிலையை – தோற்றுவிக்கின்றன. ஆகவே இதை அவசியம் மாற்ற வேண்டும். 

நமக்கு முன்னே வாய்ப்புகள் தாராளமாக உள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதே நமது இன்றைய வேலை. 

உலகில் எத்தனையோ நெருக்கடிகளை வரலாறு கடந்து வந்திருக்கிறது. நாமும் நம்முடைய நெருக்கடிகளைக் கடப்பதற்கு சரியாகச் சிந்திக்க வேண்டும். அதுவே சரியான வழிகளைத் திறக்கும். அந்தச் சரியான வழிகளே நெருக்கடிகளைத் தீர்க்கும். அதிலிருந்து நம்மை மீட்கும். 

இது மீட்பர்களுக்கான காலமாகும்.