எழுந்து முன்னேற முடியா வகையில்   இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 20)

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 20)

 — அ.வரதராஜா பெருமாள் —                            

இக்கட்டுரையின் கடந்த பகுதியில் இலங்கை அரசின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள விடயங்களில் சில முக்கியமான துறைகளின் செலவு மற்றும் வரவுகளுக்கான திட்டங்களை அவதானித்தோம். இங்கு மேலும் சில முக்கியமான துறைகள் தொடர்பான வரவு மற்றும் செலவுகள் தொடர்பான நிதித் திட்டங்களை அவதானித்து ஏனைய பொதுவான விடயங்கள் பற்றி மேலும் தொடரலாம். 

வீதிகள்கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு அள்ளிக் கொட்டும் அரசாங்கம் உற்பத்தி சார் அபிவிருத்திகளுக்கு கிள்ளித் தெளிக்கிறது 

நாட்டில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பண்டங்களின் பற்றாக்குறையையும் விலையுயர்வையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கால கட்டத்திலேயே நாடு உள்ளது. ஆனால் அரசாங்கமோ அந்த விடயங்களுக்கான நிதிப்பங்களிப்பை மிகச் சிறிய அளவில் மேற்கொள்வதனையே நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்டம் பிரதிபலிக்கின்றது. ‘நாட்டு மக்கள் சாப்பாடில்லை என்னும் நிலை நிலவும் போது எதற்காக பெருந் தொகைப்பணத்தை வீதிகளை அமைப்பதற்காக ஒதுக்கியிருக்கிறீர்கள்’ என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருப்பது நியாயமாகவே படுகிறது. 

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசினால் மேற் கொள்ளப்படும் பெருந் தெருக்கள் அமைப்புக்காக 25000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதைவிட மாகாண சபைகள் மற்றும் மாநகர சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட வீதிகளுக்கான நிதியின் தொகையும் கணிசமாகும். மேலும் கிராமங்களுக்கு 100000 கிலோ மீட்டர் வீதிகள் என்னும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை 2022ம் ஆண்டில் அமைப்பதற்கு 1000 கோடி ரூபாக்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வீதிப் போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்வது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாடு அசாதரணமான சூழ்நிலையில் உள்ளது.  

இந்த நிலையிலேயே வீதிகளைப் பாரிய அளவில் அமைப்பதற்கு இவ்வளவு பெருந்தொகைளை ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வீதிகள், அரச கட்டிடங்கள் மற்றும் அரசின் பாவனைக்கான வாகனங்கள் இவை தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகையையும் கூட்டிப் பார்த்தால் 50000 கோடிகளுக்கு மேல் அரசாங்கம் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் செலவிடவுள்ளது. ஆனால் நாட்டு மக்களுக்கு அவசியமான உணவுப் பண்டங்களின் உற்பத்திகள், மீன்பிடி உற்பத்திகள், பல்வேறு வகைப்பட்ட ஆக்க கைத்தொழில் உற்பத்திகள் ஆகியவற்றை அதிகரிப்பதற்கான முதலீடுகள் மற்றும் ஏனைய வகையான நேரடிச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையைக் கூட்டிப் பார்த்தால் 10000 கோடி தன்னும் தேறாது என்னும் நிலையை வரவு செலவுத் திட்டம் கொண்டிருப்பது தான் இங்கு விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரிய விடயமாகும். 

கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு துறைக்கும் செலவிடப்பட்ட தொகைகள் ஒவ்வொன்றையும் சற்றும் மேலும் கீழுமாக கூட்டிக் குறைக்கும் முறையையே நிதி அமைச்சர் வரவு செலவு ஒதுக்கீடுகளை மேற்கொள்கிற போது கடைப்பிடித்திருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. நிதி அமைச்சர் அவர்கள் நாடு இன்றுள்ள நிலைமைகளையும் நாட்டு மக்களது அவசரமானதும் அவசியமானதுமான தேவைகளையும் கருத்திற் கொண்டு அதற்குரிய வகையில் தமது பொருளாதார மூல உபாயங்களை வகுத்து அவற்றின் அடிப்படையில் தமது வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை தயாரித்ததாகத் தெரியவில்லை. மாறாக, நிதி அமைச்சினுடைய செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளினால்; அவர்களது வழமையான யாந்திரிக ரீதியான பாணியில் தயாரிக்கப்பட்ட வரவு செலவுகளையே அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார் என்றே கூற வேண்டியுள்ளது. வேண்டுமென்றால்,அவரைச் சூழ்ந்துள்ள செல்வாக்குள்ளவர்களின் திருப்திக்கான வகையில் சில ஏற்ற இறக்கங்களை செய்திருக்கிறார் எனலாம். ஏனெனில், கடந்த கால வரவு செலவுத் திட்ட அறிக்கைகளையும் 2022ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் ஒப்பீட்டுப் பார்த்தால் வரவு செலவு ஒதுக்கீட்டு அணுகுமுறையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அடிப்படை மாற்றம் எதனையும் காண முடியவில்லை என்பதை இங்கு வலியுறுத்துவது அவசியமாக உள்ளது. 

உற்பத்தி சார் துறைகளுக்கு ஒதுக்கிய நிதி உண்மையில்உற்பத்திகளை அதிகரிக்குமா?  

நேரடியாக, பயிர் செய்கைத் துறைகள், கால் நடைத் துறைகள், மீன்பிடித் துறை, ஆக்கக் கைத்தொழில் துறைகள் ஆகியவற்றில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நேரடியாகச் செலவளிப்பற்கான அல்லது உதவுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகைகளை இன்றைய தேவைகளோடும் ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையிலும் மிகச் சொற்பமானவைகளேயாயினும், அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பணங்கள் உரியபடி உற்பத்தியாளர்களை சென்றடையுமா? புதிய உற்பத்தியாளர்களை உருவாக்குமா? ஒவ்வொரு துறையிலும் தொகைரீதியில் உற்பத்திகளை அதிகரிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் கடந்த காலங்களிலும் இவ்வாறாக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை எதனையும் சாதிக்கவில்லை. ஏனெனில் அவை உற்பத்தியாளர்களைச் சென்றடைவதற்கும் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்குவதற்கும் பொருத்தமான பொறி முறையை அரச கட்டமைப்பு கொண்டிருக்கவில்லை.  

அடுத்த ஆண்டு பல்வேறு காரணங்களினால் அத்தியாவசியப் பண்டங்களின் உற்பத்திகளில் வீழ்ச்சியேற்படும் என துறைசார் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏன்! ஒரு மூத்த அமைச்சர்; கூட அடுத்த ஆண்டு எற்படப் போகும் உணவுப் பற்றாக்குறை நெருக்கடிகளை எதிர்நோக்க நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிக்கை விடுகின்றார். அவ்வாறு ஒரு நெருக்கடி நிலைமை ஏற்படுவதற்கு இந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு பிரதானமான காரணியாக இருக்கப் போகின்றன என்பதே பொதுவான அபிப்பிராயம். இப்படியான நிலையில் நிதி அமைச்சர் அவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையைத் தடுக்க அவரது வரவு செலவுத் திட்டம் மூலம் எந்த வகையான தீர்வுகளை சாதிக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை. அவர் தான் சாதிக்கப் போவதாக காட்டும் கணக்குகள் எல்லாம் சாத்தியமாக மாட்டாதவையாகவே உள்ளன. 

முழுமையான தேசிய பொருளாதார அபிவிருத்தி திட்டம் சரியான வரவு செலவுத் திட்டத்திற்கு மிக மிக அவசியம் 

இலங்கையின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் மற்றும் மாகாண சபைகள் தோறும் திட்டமிடல் அலுவலகங்கள் இருக்கின்றன. அதற்கென மத்திய அரசில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சு என ஒன்றும் உள்ளது. அது பிரதம மந்திரிக்குக் கீழே உள்ள ஒரு அமைச்சாக இருந்தும் நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அப்படி ஒரு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டையோ அல்லது அப்படியான ஒரு அமைச்சின் செயற்பாடுகள் பற்றிய எந்தவொரு குறிப்பையுமோ காண முடியவில்லை. அனைத்து மாகாணங்களினதும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்த வகையில் நாடு தழுவிய வகையிலான பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடும் செயற்பாடுகளும், அவ்வாறான திட்டங்கள் நடைமுறையில் அமுலாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யும் செயற்பாடுகளும், திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்யும் செயற்பாடுகளும், முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எந்தளவுக்கு நடைமுறையாகியிருக்கின்றன என்ற மதிப்பீடுகளும்  தொடர்ச்சியான முறையில் முறையாக மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறான ஒரு செயற்பாட்டை – அவ்வகையில் தயாரிக்கப்படும் அறிக்கைகளை – திட்டங்களை – அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அவ்வாறு நடைபெறுவதில்லை. 1970 க்கும் 1977க்கும் இடைப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் மட்டுமே அவ்வாறான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது பின்னர் இல்லாமற் போய்விட்டது.  

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தில் பொருளாதார திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் விடயங்கள் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கான ஒரு பிரதானமான விடயமாக உள்ளது. ஆனால் நடைமுறையில் இலங்கையின் பிரதமரின் கீழ் பெயரளவில் ஒரு அமைச்சு இருந்தாலும் அது சாராம்சத்தில் அர்த்தமற்ற ஒன்றாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் பிரதமர் தலைமையிலோ அல்லது ஜனாதிபதியின் தலைமையிலோ தேசிய பொருளாதார அபிவிருத்தி பேரவை ஒன்று அமைதல் வேண்டும். அதேபோல மாகாண மட்டங்களில் முதலமைச்சர்களின் தலைமையில் மாகாண பொருளாதார அபிவிருத்தி சபை அமைதல் வேண்டும். 1988க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையில் இவ்வாறானதொரு மாகாண பொருளாதார அபிவிருத்தி சபை அமைக்கப்பட்டிருந்தது என்பதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.  தேசிய பொருளாதார அபிவிருத்திச் சபையின் சபையின் நடைமுறை செயற்பாடுகளை வழி காட்டுவதற்கும் அனைத்து மாகாண பொருளாதார அபிவிருத்தி சபைகளின் சிந்தனைகளை – திட்டங்களை ஒருங்கிணைப்பதற்குமென கபினெட் அந்தஸ்துடன் ஒரு பொருளாதார நிபுணரை அதன் துணைத் தலைவராக கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாறான ஒரு தேசிய பொருளாதார அபிவிருத்தி பேரவையினால் தயாரிக்கப்படும் அபிவிருத்தித் திட்ட தேவைகளுக்கான பிரேரணைகளையும் சிபார்சுகளையும் கருத்திக் கொண்டே நிதி அமைச்சர் தமது வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் நாட்டிலுள்ள சாதகமான மூல வளங்களுக்கும் நாட்டின் சாத்தியமான மூலதன நிதி வளங்களுக்கும் நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுக்குமிடையில் ஒரு சமநிலையினை உருவாக்குதல் சாத்தியமாகும்.   

அவ்வாறான ஓர் ஒருங்கிணைப்பும் கட்டாயமும் மேற்பார்வையும் இல்லாத பட்சத்தில் நடைமுறை விளைவு என்ன வென்றால் அமைச்சுக்கு ஒதுக்கப்படும் மூலதனச் செலவு விடயத்தில் அமைச்சர்கள் தனியார் கட்டிட ஒப்பந்தகாரர்களுக்கு டென்டர்களுக்கு விட்டு வீதிகள் மற்றும் கட்டிடங்களை அமைக்கும் விடயங்களிற் தான் அக்கறை காட்டுவார்களே தவிர தமது அமைச்சுகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய பண்ட உற்பத்திகளின் வளர்ச்சியில் – அதிகரிப்புகளில் அக்கறை காட்டமாட்டார்கள் ஏனெனில் அவ்வாறான செயற்பாடுகள் அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளுக்கும் ஊழல்மோசடித்தனமான கமிசன்களை பெற்றுத்தர மாட்டா.  

எனவே, பண்ட உற்பத்திகளின் அபிவிருத்திக்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுள்ள பணத்தொகைகள் குறிப்பிட்ட இலக்குகளை தாமாக சாதிக்கமாட்டா என்பதே உண்மையாகும். பண்ட உற்பத்திகள் சார் திணைக்களங்கள் ஒவ்வொன்றும் உரிய உற்பத்தியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை நேரடியாக ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை தாராளமாக வழங்கி, அவர்களது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமானவற்றை உரிய நேரத்தில் ஏற்பாடு செய்வதன் மூலமே நாட்டின் பண்ட உற்பத்திகளின் வளர்ச்சியை சாதிக்க முடியும். முதலாளித்துவ திறந்த பொருளாதார கண்ணோட்டத்தில் எல்லா பொருளாதார செயற்பாடுகளும் சந்தை இயக்கத்தின் மூலம் தானாகவே நடக்கும் என்று இருந்தால் அது இலங்கைக்குப் பொருந்தாது. இங்கு ஒவ்வொன்றையும் ‘அக்கறையோடு, தேடித்தேடி, பார்த்துப் பார்த்து செய்தல் வேண்டும்’. ஆனால் இங்குள்ள பரிதாப நிலை என்னவென்றால்,அதற்கான பொறிமுறையையும் பண்பாட்டையும் அரச கட்டமைப்பு தற்போது கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். 

நிதி அமைச்சர், ‘ நான் நிதிகளை அனைத்து அமைச்சர்களையும் திருப்திப் படுத்தும் விதத்தில் ஒதுக்கியிருக்கிறேன். இனி நடப்பது எதுவோ அது நடக்கட்டும்’ என்று இருந்தால் அவரது வரவு செலவுத் திட்டம் பற்றி அக்கறையோடு ஆக்கபூர்வமாக எதனையும் கூற முடியாது. அவர் தனது வரவு செலவுத் திட்டம் குறைந்த பட்சம் பொருட்களின் உற்பத்தித் துறைகளிலாவது வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று கருதினால் அதனை உறுதிப்படுத்துவதுவும் அவரது கடமையாகும். அதற்கான பொறி முறையை அவர் கட்டியெழுப்புவதுவும் அவசியமாகும். இல்லையென்றால் அவர் கூறுபவைகள் – அவர் இலக்குகளாய் நிர்ணயித்தவைகள் எல்லாம் ‘கனவாய் கதையாய் கற்பனைகளாய்’ முடிவடையும் என்பதில் சந்தேகமில்லை.  

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்துள்ள வரவு செலவுத் திட்டம்

இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளுக்கும் 2018ம் ஆண்டிலேயே தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை மைத்திரி – ரணில் கூட்டாட்சியினர் தமது சுய அரசியல் நோக்கங்களுக்காக பொய்களைச் சொல்லி அந்தத் தேரதல்களை நடத்தாமல் காலம் தள்ளிப் போட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ‘உடனடியாக மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவோம்’ எனக் கூறி பிரச்சாரங்கள் செய்து ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் இன்னமும் அதற்கான தேர்தல்களை நடத்துவதற்கான நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அது குறித்து எதிர்க்கட்சிகளும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதன் காரணமாக அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமா என்பதற்கான பதில் தெரியவில்லை. அல்லது  அரசாங்கம் வெவ்வேறு காரணங்களைக் கூறி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் தனது ஆட்சிக் கால எஞ்சிய வருடங்களைக் கடத்துமா? தெரியவில்லை.   

இதேவேளை இலங்கையிலுள்ள 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் உள்ளிட்ட 341 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. கடைசியாக இவற்றிற்கான தேர்தல்கள் 2018ம் ஆண்டு மாசி மாதம் நடைபெற்றது. நான்கு ஆண்டு கால வாழ்நாள் எல்லை கொண்ட இந்த சபைகளுக்கு 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடுத்த தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது இந்த அரசாங்கம் தேர்தல்களை நடத்தினால் படு தோல்விகளை சந்திக்கும் என இந்த அரசாங்கத்தைச் சேரந்த அமைச்சர்களே பகிரங்கமாகக் கூறி வருகின்றார்கள். அண்மைய நாட்களில் வெளிவரும் அரசியல் ஊகங்களின்படி அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தல்களை ஒரு வருடத்துக்கு தள்ளிப் போடக்கூடும். இந்நிலையில் நிதி அமைச்சர் பஸில் அவர்கள் கடந்த 12ம் திகதி வெளியிட்ட நிதி ஒதுக்கீட்டு அறிவிப்புகள் பெரும்பாலும் அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமது கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இலக்குகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.  

இலங்கையில் உள்ள 14000 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 30 லட்சம் ரூபாக்கள் அபிவிருத்தி நிதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளுராட்சி சபைகளினதும் செயற்பாடுகளுக்காக பொதுவாக ஒதுக்கப்பட்ட நிதியை விட மேலதிகமாக 1997 கோடி ரூபாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சி சபைகள் மொத்தமாக 4917 வட்டாரங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் 40 லட்சம் ரூபா என நிதி அமைச்சர் குறித்து ஒதுக்கியிருக்கிறார். கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது வட்டார அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் சிறி லங்கா பொதுஜன கட்சியைச் சேர்ந்தவர்களே. எனவே அவர்கள் ஒவ்வொருவரும் நேரடியாக தத்தமது வட்டாரங்களில் மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடாகவே அதனைக் கருத வேண்டியுள்ளது.  

இதைவிட 335 பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் அனைத்து உள்ளுராட்சி பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கென சுமார் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர்கள் பிரிவுகளுக்கென குறித்தொதுக்கப்பட்ட பணங்களும், பிரதேச செயலாளர்கள் ஊடாக செலவளிக்கப்படுவதற்கென ஒதுக்கப்பட்டு;ள்ள தொகைகளும் மாகாண சபை அமைப்புக்களின் அல்லது உள்ளுராட்சி சபைகளின் மூலமாக செலவு செய்யப்பட மாட்டாது. மாறாக அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினது கட்டளைகள் மற்றும் வலியுறுத்தல்களுக்கு அமையவே செலவிடப்படும். இவ்வாறாக இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறாகவே கடந்த ஆட்சிக் காலத்தில் ‘கம்பரலிய’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இவை ‘கமசமக பிலிசந்தர’ என்ற பெயரில் நடைபெறவுள்ளன. இவை எதுவும் விவசாயத்துறை மற்றும் கைத் தொழிற்துறையின் விருத்திக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யப் போவதில்லை. மாறாக, இவை அனைத்தும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களையும் அவர்களிடம் வாக்கு கேட்கப் போகும் வேட்பாளர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்;கான நிதி ஒதுக்கீடுகள் என்றே கூறலாம்.   

2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் தற்போது ஆளும் சிறி லங்கா பொதுஜன கட்சி பெற்ற அமோகமான வெற்றிதான் அக்கட்சிக்கு 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கு வழி வகுத்தது என்பதில் சந்தேகமில்லை. தற்செயலாக உள்ளுராட்சி சபைகளுக்கான அடுத்த தேர்தல்களின் போது பொதுஜன பெரமுன கட்சி தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தால் அது தொடர்ச்சியாக தோல்விகளுக்கு வழி வகுத்து விடும் என்பதில் நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. பொது மக்கள் உள்ளுராட்சித் தேர்தல்களின் போது தத்தமது வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாகவும் அவரால் கடந்த காலத்தில் தமக்கும் தமது பகுதிகளுக்கும் கிடைத்த நன்மைகளையுமே பெரும்பாலும் கவனத்திற் கொள்வார்கள். நாடு தழுவிய அரசியற் பிரச்சினைகளுக்கு உள்ளுராட்சித் தேர்தலின் போது மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதேபோல பொதுவாக உள்ள விலைவாசிப் பிரச்சினைகள் மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகள் தொடர்பிலும் மக்கள் இத்தேர்தல்களின் போது குறைந்த அளவு அக்கறையே கொள்கின்றனர். எனவேதான் தமது ஆட்சியின் மீது மக்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் ஆத்திரத்தை தணிப்பதற்கு நேரடியாக உள்ளுர் மக்களின் நலன் சார் செயற்திட்டங்களில் நிதி அமைச்சர் அதிக அக்கறையை அவரது வரவு செலவுத் திட்டத்தில் காட்டியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 

பண நோட்டுகளை அச்சடித்தேதான் தீர வேண்டும் வைத்தியர்களே இங்கு நோய்களை பெருக்குகிறார்கள்! 

2020ம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சா அவர்கள் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கையில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது மொத்த தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 9 சதவீமாக அமையும் என்றார். ஆனால் உண்மையில் நடந்ததென்ன 2021ம் ஆண்டுக்கான பற்றக்குறை 15 சதவீதத்தை அண்மித்துள்ளது. இந்த அனுபவத்துக்குப் பின்னரும் இப்போது பஸில் அவர்கள் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறை 8.8 சதவீதமாக அமையும் என்கிறார். ஏற்கனவே இக்கட்டுரைப் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி அரசின் செலவுகள் அமைச்சரின் நிதித் திட்டத்தில் குறிக்கப்பட்டதை விட கூடுதலாகவே அமையும். அதேவேளை வருமானத்தையும் அமைச்சர் குறித்துள்ள அளவுக்கு திரட்டி விட முடியாது இந்நிலையில் 2022ம் ஆண்டும் பற்றாக்குறையானது அமைச்சர் கணித்துள்தை விட கணிசமான அளவு அதிகமானதாகவே அமையும். 

நிதி அமைச்சர் திறைசேரியினூடாக மீண்டெழும் செலவீனங்களை மேலும் அதிகரிக்க விடாமலும்,திட்டமிட்டபடி மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல் கணிசமான அளவு குறைத்தாலும் கூட பற்றாக் குறையானது 2700 பில்லியன்களுக்கு மேல் செல்வதை தவிர்க்க முடியாது. இதில் 300 பில்லியன்கள் வரை மட்டுமே வெளிநாடுகளிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பிருக்கும் என நிதி அமைச்சர் மதிப்பிட்டுள்ளார். எனவே மிகுதி 2400 கோடியையும் உள்நாட்டிலேயே கடனாகப் பெற வேண்டும். எதிர்பார்க்கும் அளவுக்கு வெளிநாட்டு கடனுதவிகள் கிடைப்பது கூட மிகச் சிரமமான ஒரு விடயம்.  

தவிர்க்க முடியாத மீண்டெழும் செலவுகளை என்னதான் கடும் பிடி பிடித்தாலும் அதன் அதிகரிப்பு வீதாசாரத்தை குறைக்கலாமேயொழிய அதிகரிப்பை நிறுத்த முடியாது. அதைவிட பிரதானமாக, அரசாங்கம் வருமானமாகத் திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும் தொகையை விட கணிசமாக குறைந்த தொகையையே திரட்ட முடியும் இந்நிலையில் பற்றாக்குறை இடைவெளி அதிகரிக்கவே செய்யும். அதன் விளைவாக உள்நாட்டுக் கடன்களை மேலும் அதிகமான அளவிலேயே அரசாங்கம் வாங்க வேண்டி ஏற்படும். 

ஆனால் அவ்வளவு தொகையை உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தோ அல்லது தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தோ பெற முடியாது. இந்த நிலையில் மத்திய வங்கியிடமிருந்தே பெருந் தொகையில் அரசாங்கம் கடன் வாங்க வேண்டும். இந்நிலையில் அரசாங்கம் பணத்தை அச்சிடும்படி மத்திய வங்கியை கட்டாயப்படுத்துவது நடந்தே தீரும்.. அதற்கு உரிய வகையாகவே மத்திய வங்கியின் ஆளுநராக அரசாங்கம் தமது அமைச்சராக இருந்த ஒருவரையே நியமித்து வைத்திருக்கிறது. 2020ம் ஆண்டு 65000 கோடிக்கு மேல் பணம் அச்சிடப்பட்டதாகவும் 2021ம் ஆண்டு இது வரை 40000 கோடிக்கு மேல் பணம் அச்சிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2022ம் ஆண்டில் மத்திய வங்கி இவற்றையும் விட மிக அதிகமாகவே பணத்தை அச்சிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் என்பது தெளிவாகவே தெரிகிறது.  

நாட்டில் பொருட்களின் உற்பத்திகள் தொகைரீதியில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் குறைவதற்கே நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பணத்தை பெருந்தொகையாக அச்சிட்டு மக்கள் மத்தியில் சுழல விட்டால் அது பணவீக்கத்தையே பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கச் செய்யும் என்பது பொருளாதார விதி. பணவீக்கம் என்பது பண்டங்களின் விலை அதிகரிப்பே. உள்நாட்டின் பணவீக்கம், அந்நிய செலாவணி பற்றாக்குறைகள் ஆகிய இரண்டும் சேர்ந்து ஏற்றுமதி வருமானங்களின் பெறுமதியைக் குறைத்து இறக்குமதிச் செலவுகளை அதிகரிக்கும். இது இறக்குமதிகளை மேலும் தொகைரீதியில் குறைக்க வேண்டிய கட்டாயங்களை உருவாக்கும். இது நாட்டில் பண்டங்களினுடைய விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் தட்டுப்பாடுகள் மற்றும் பதுக்கல் வியாபாரங்களையுமே தாராளமாக்கும். ஆக இங்கு அரசாங்கத்தின் பொருளாதார வைத்தியர்கள் நோய்களைத் தீர்ப்பதற்காக கொடுக்கும் மருந்துகள் ஒவ்வொன்றும் மேலும் நோய்களை அதிகரிக்கும் வேலையையே செய்கின்றன. 

ஸ்ஸ் அப்பாடா! எந்தப் பக்கம் போனாலும் வளைச்சு வளைச்சு தடை போடுராங்களே!      

இந்த ஆட்சியில் உள்ள ஒரு முக்கியமான அமைச்சர் கொரோணாத் தொற்றின்  ஆரம்பக் கட்டத்தில் ‘ புலிகளையே ஒழித்த எங்களுக்கு கொரோணாவை அடித்துத் துரத்துவது ஒன்றும் பெரிய வேலையே இல்லை’ என்று பெருமை பேசினார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘எந்தவொரு நாடும் எங்களுக்கு உதவாவிட்டாலும் அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருக்கிறது’ என்று முழக்கமிட்டார். ஆனால் சீனாவோ இப்போது இலங்கையின் பொருளாதார வறுமையை நீக்குவதற்கு தான் மட்டுமே தொடர்ந்து உதவ முடியாது எனக் கைவிட்டுவிட்டது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சீனா எந்தவொரு நாட்டோடும் இன்றைய உலக பொருளாதார ஒழுங்குக்கு ஏற்ற வகையில் வர்த்தக உறவுகளை முறையாக வைத்துக் கொள்வதிலேயே அக்கறையாக உள்ளது. ஆனால் அதனை ராஜபக்சாக்களின் அரசாங்கம் தவறாகக் கணக்கிட்டு விட்டதாகவே தெரிகின்றது. சீனா ஏற்கனவே இலங்கையில் தனக்குத் தேவையான பல்வேறு தளங்களில் நன்றாகவே தனது கால்களைப் பதித்து விட்டது. இந்நிலையில் சீனாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை நடந்து கொண்டால் அது இலங்கைக்கு மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை அண்மையில் இலங்கைக்கு சேதன பசளையை ஏற்றி வந்த சீனாவின் கப்பல் விவகாரம் தெளிவாகவே உணர்த்துகிறது.  

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும்படி பலர் அறிவுரை கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியம் எந்தவொரு நாட்டுக்கும் அபிவிருத்தி தொடர்பான நிதி உதவிகளை வழங்கும் அமைப்பு அல்ல. அது வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பில் ஒரு நாடு சென்மதி நிலுவைப் பிரச்சினைக்கு உள்ளாகிற போது அது தொடர்பான கடனுதவிகளை வழங்குவதை மட்டுமே தனது வரைவிலக்கணமாகக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட மாட்டோம் என பல முக்கியமான அமைச்சர்களும் மத்திய வங்கியின் ஆளுநரும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாடு எவ்வளவு காலத்துக்கு ராஜபக்சாக்களால் கடைப்பிடிக்கப்படும் எனக் கூற முடியாது. சரவதேச நாணய நிதியத்தை நாடுவதனை தள்ளிப் போடுவதற்கு அரசாங்கம் ஓமானிடமிருந்து 3500 மில்லியன் டொலர் பெறுமானமான பெற்றோலியப் பொருட்களைக் கடனாகக் கோரி நிற்கின்றது. அதேபோல இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இறக்குமதிகளை கடனாகத் தரும்படி கேட்டு நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சி எந்தளவு தூரம் வெற்றியாகுமென கூற முடியாது.   

சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் நாடுகின்ற பட்சத்தில் அது இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக மட்டுமல்ல நாட்டின் அனைத்து பொருளாதார விடயங்களிலும் தனது நிபந்தனைகளை வலியுறுத்தவே செய்யும். முக்கியமாக பொதுமக்கள் நலன்கள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களிலேயே கட்டுப்பாடுகளை விதிக்கும், பணப் பெறுமதியை சந்தை செயற்பாட்டுக்கு முழுமையாகத் திறந்து விடவே அது கட்டாயப்படுத்தும். பொருத்தமில்லாத காலகட்டத்தில் பொருத்தமில்லாத முறையில் இலங்கையை நவதாராளவாத பாதையில் திறந்து விட்டமையே இன்றைய பொருளாதார நோய்களுக்குக் காரணம். நவ தாராள பொருளாதார முறையை ஆழப்படுத்துவதுவும் அகலப்படுத்துவதுமே சர்வதேச நாணய நிதியத்தின் சித்தாந்தம். சர்வதேச நாணய நிதியத்தை அனுசரிக்க முடியாத கட்டாய நிலையில் அரசாங்கம் உள்ளது தெளிவு. ஏனெனில் அந்த நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் கடைப்பிடித்தால் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கோபம் மேலும் பன்மடங்காக அதிகரிக்கும். அதேவேளை சர்வ தேச நாணயத்தை அரசாங்கம் முற்றாக புறக்கணித்து விடவும் முடியாத சூழ்நிலையிலேயே உள்ளது.  

இதேவேளை இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் நிபந்தனை போடாமல் மடிப் பிச்சை இடுங்கள் எனக் கேட்டு இலங்கை அரசாங்கம் வேண்டி நிற்கிறது. அது எப்படி சாத்தியமாகும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல அந்த நாடுகளுடனான உறவுகளை இந்த அரசாங்கம் யுத்த வெற்றியின் மிதப்பில் கெடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது அந்த நாடுகளுக்கான நேரம் வந்து விட்டது போல அவை செயற்படுவது தெரிகிறது. அவை தங்களது நலன்கள் தொடர்பில் சீனாவுடனான உறவை கட்டுப்படுத்திக் கொள்ள கட்டளையிடுவார்கள் என்பது மட்டுமல்ல அவை தமது தேவைகளையும் இலங்கை மண்ணில் நிறைவு செய்ய ஒரு பெரும் பட்டியலையே வைத்திருக்கிறார்கள். 

அரசாங்கமோ புருசனையும் கை விட முடியாம அரசனையும் தூர விலக்க முடியாம அல்லாட்ட நிலையில் நிற்கின்றது. சினிமாப் பாணியில் கூறினால் ‘ஒரு புறம் நாகம் மறு புறம் வேடன் இடையினிலே கலைமான்’ என்ற கணக்கில் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் அகப்பட்டுப் போயிருக்கிறது. ஆட்சியாளர்கள் தம்மை நம்பிய மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து சேவகம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதை பரந்து பட்ட பொது மக்கள் நம்பவும் வேண்டும். அதேவேளை நாடு இக்கட்டான சூழலில் இருக்கும் போது அனைத்து மக்களும் நாட்டுக்கான எதிர்காலத்துக்காக சிரமங்களையும் குறைகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டுமே இல்லை. எதிர்காலம்?????.  

இலங்கையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கண்ணோட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு 

இக்கட்டுரைத் தொடரை அடுத்த பகுதி 21ல் தொடருவோம்;.