— அழகு குணசீலன் —
“ஓட ஓட விரட்டப்பட்ட சுமந்திரன், சாணக்கியன்….”
“கனடாவில் சுமந்திரன் விரட்டியடிப்பு…..”
“கனடா தமிழரசிடம் விளக்கம் கோரினார் மாவை….”
“TAMIL DIASPORA OPPOSES SRILANKAN TAMIL POLITICIANS…..”
“PRO – LTTE SUPPORTERS DISRUPT TNA MPs MEETING IN CANADA…..”
“TORONTO POLICE SAVE SUMANTHIRAN AND RASAMANICKAM FROM PRO- LTTE mob…..”
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் கடந்த வாரம் உலக வலம் வந்த ஊடகச் செய்திகள் இவை. மேற்குலக ஜனநாயகச் சூழல் ஒன்றில் அனைத்து ஜனநாயக சுதந்திரங்களையும், அந்த நாடுகளின் பலவர்ண கடவுச்சீட்டுக்களையும் சுமந்து கொண்டும், ஜனநாயக விழுமியங்களையும், அதன் பெறுமதிகளையும் அனுபவித்துக் கொண்டும் ஜனநாயகத்தை படுகொலை செய்த நிகழ்வு இது.
இந்த ஜனநாயக மறுப்பு புலிக்குணாம்சம். தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஓடிய, இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்ற நச்சு இரத்தம். ஆயுதப்போராடத்தின் தோல்வியை சுயவிமர்சனம் செய்ய வக்கற்ற கூட்டம் ஒன்றின் ஜனநாயக மறுப்பும், வன்முறையும் தொடர்கிறது. புலம்பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்த்தேசியம் வன்முறைப் பாலூட்டிவளர்த்த வன்முறைக் குணாம்சமும்தான் என்பதையே கனடாவில் சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காட்டிநிற்கின்றன.
இப்பதிவின் அர்த்தம் சுமந்திரனையும், சாணக்கியனையும் காந்திய அகிம்சை புனிதர்கள் என்று பொய்புனைவதல்ல. எல்லோருக்கும் போன்றே அவர்களுக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துகின்ற உரிமை உண்டு என்பதை வலியுறுத்துவதுடன், அவர்கள் விதைத்த வினை அவர்களுக்கே எதிர்வினையாகி இருக்கிறது, என்பதை சுட்டிக்காட்டுவதுமாகும். தமிழ்த்தேசிய அரசியலின் கருவை ஆயுதப்போராட்டம் என்ற பெயரில் விடுதலைப்போராட்டம் ஒன்றின் வரைவிலக்கணத்தை கொச்சைப்படுத்துகின்ற செயற்பாடுகளின் திரளாக இது அமைந்திருக்கிறது.
அரசியல் பன்மைத்துவம், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், கருத்தைக் கருத்தால் மோதல் போன்ற அனைத்தும் மறுக்கப்பட்டு, துப்பாக்கி வன்முறையூடான ஜனநாயக மறுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த மனநோயுடன் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருபகுதியினர் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலும் பட்டறிவும், படிப்பறிவும் அற்ற வன்முறை மனநோயாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதன் மிகப்பிந்திய வெளிப்பாடுதான் கனடா நிகழ்வு. இந்த தீயை எண்ணெய் ஊற்றி மேலும் மேலும் சண்டித்தன அரசியியலினால் இலாபம் அடைய முற்பட்ட தமிழ்தேசிய அரசியல்வாதிகளில் சுமந்திரனும், சாணக்கியனும் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆக, தமிழ்த்தேசிய அரசியலில் அவர்கள் விதைத்தை கனடாவில் அறுவடை செய்திருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம் இது முதல் அறுவடை, ஆனால் இறுதி அறுவடை அல்ல. இது தொடரப்போகும் ஒரு தொடர்கதை.
விடுதலைப்போராட்டத்தில் அரசியல் பன்மைத்துவம் மறுக்கப்பட்டு ஏகபோக – தனியுரிமை ஆக்கப்பட்டது. இது ஒரு கம்பனி அரசியல்.
இந்த அரசியல் தற்போது பல்தேசியக் கம்பனி அரசியலாக மாறிவருகிறது. கொக்கா கோலா கம்பனி பல்வேறு பெயர்களில் வெவ்வேறு குடிபானங்களை உற்பத்தி செய்து தனது பல்தேசிய இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதுபோல் தமிழ்த்தேசிய கம்பனியும் பல்வேறு வடிவங்கள், அமைப்புக்கள் ஊடாக கம்பனி வியாபாரத்தைத் கொண்டு ஓட்டுகிறது. தமிழ்த்தேசிய பல்தேசியக்கம்பனியின் ஒரு கிளை நிகழ்வுதான் கனடா சம்பவம்.
மாவீரர் நாளும் துரோகிகள் பட்டமளிப்பும்!
தமிழ்த்தேசிய அரசியல் மிகப்பெரும் திண்டாட்டத்தில் உள்ளது. இது தமிழர்தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் தான். இந்த அரசியலானது எந்த கோட்பாடுகளுக்கு ஊடாகவும் நெறிப்படுத்த முடியாத போதனைகள் அற்ற சாதனைகள் நிறைந்தது(?). இதனால் முரண்பாடான அரசியல் அணுகுமுறைகள் முட்டி மோதுகின்றன.
தாயகத்தில் மாவீரர் நாளைக்கொண்டாட சிறிலங்கா அரசிடம் தமது உரிமைகளைக் கோரிநிற்கும் தமிழ்ச்சமூகம், கனடாவில் அதே உரிமைகளை குழிதோண்டிப் புதைத்துள்ளது. மாவீரர் தினத்திற்கான தடை உத்தரவுகளுக்கு எதிராக ஜனநாயகம் மறுக்கப்படுவதாகக் கூறும் தமிழ்த்தேசியம், கனடாவில் அதே ஜனநாயக உரிமையை தமது அரசியல்வாதிகளுக்கே மறுத்திருக்கிறது. மாவீரர் தினத்தை அனுட்டித்தல் என்பது கருத்துச்சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் சார்ந்தது. ஒருபக்கத்தில் உரிமைகள் மறுக்கப்படுவதாக குரல் எழுப்பிக்கொண்டு மறுபக்கத்தில் ஜனநாயகத்தின் குரல் கனடாவில் நசிக்கப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் ஒன்றுகூடுவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமையை இவர்கள் மறுத்துள்ளார்கள்.
தமிழ்த்தேசிய பல்கலைக்கழக கம்பனி வழங்கும் “துரோகி” பட்டம் கனடாவில் சுமந்திரனுக்கு சூட்டப்பட்டுள்ளது. “சுமந்திரன் தமிழினத்துரோகி” என்பது பட்டத்தின் முழுமையான தலைப்பு. தனக்கு வந்தால்தான் தெரியும் தடிமலும் காய்ச்சலும் என்று கூறுவது வழக்கம். இப்போது சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் இது புரிந்திருக்கும். ஏனெனில் இவர்கள் இருவரும் மாற்றுக்கருத்தாளர்களை துரோகிகள் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றனர். ஏன்? ஜெனிவா ஆவண விவகாரத்திலும் பங்காளிக்கட்சித் தலைமைகளை அவர்கள் மறைமுகமாக அப்படித்தான் குறிப்பிட்டார்கள்.
கனடாவில் இவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகக் கடுமையான வன்முறை உள்ளடக்கம் கொண்ட “வார்த்தை வன்முறை”.
“டேய் நாயே..! மானம்கெட்டவனே…! அம்மணமாக வாடா…! துரோகி..!”
இந்த வார்த்தை வன்முறையை சுமந்திரனும் சாணக்கியனும்கூட பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் முதல் பாமரமக்கள் மத்தியில் வரை கூறியிருக்கிறார்கள். பிள்ளையை வளர்த்த வளர்ப்பு என்று முழுப்பெற்றோர்களையும் பாராளுமன்றத்தில் அவமதித்தவர் சுமந்திரன். “நீங்கள் தமிழ்த்தாய்க்கு பிறந்தவர்களா?” என்று பகிரங்க கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர் சாணக்கியன். கனடாவில் அவர்களுக்கு அது திருப்பிக்கிடைத்திருக்கிறது.
இன்னொரு வேடிக்கையான ஊடகப் “பதிவு “ஐயும்” இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
“கூட்டத்தில் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடுகளும் இல்லாது பேசிமுடித்தார். இதன் மூலம் சாணக்கியனுக்கு செய்தி சொல்லப்பட்டதுடன், கிழக்கிற்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.” என்று அந்தப் செய்தி கூறுகிறது. சாணக்கியனுக்கு சொல்லப்பட்ட செய்தி என்ன? கவனம்! உங்களுக்கும் இதுதான் நிலை என்பதா?
கிழக்கிற்கான கௌரவம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேசியப்பட்டியல் நியமன கருத்தாடலில் சம்பந்தர் ‘பிரேக்’ போடவேண்டி வந்தது. பீருபீ இல் சாணக்கியனின் மீது வசைபாடப்பட்டது. இப்படி கிழக்கிற்கு கௌரவம் கொடுக்காதவர்கள் இப்போது மட்டும் சற்று கவனமாக திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த அணுகுமுறையானது உளவியல் நிபுணர்களாலும், சமூக விஞ்ஞானிகளாலும் மறுதலிக்கப்படுகின்ற ஒன்று. அதாவது பாவம், புண்ணியம் பார்த்து விட்டுத் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது,
ஒதுக்கீடுகள் வழங்குவது போன்றது. சொல்லப்போனால் நாங்கள் மேலானவர்கள் உங்களுக்கு விட்டுத்தந்திருக்கிறோம் என்ற மேலாண்மை அரசியல் அணுகுமுறை. இன்னும் இலகுவாகச் சொன்னால் மனித நீதியும், சமூக நீதியும் அற்ற சமூகக் கட்டமைப்பில் பயன்படுத்துகின்ற “LADIES FIRST” அணுகுமுறை. இதன் அர்த்தம் பால் சமத்துவம் அல்ல. வெறும் “சால்வை” போட்டு ஏமாற்றும் பசப்பு. காதிலே பூ வைப்பு.
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் ஆதரவுடன் சாணக்கியன் உள்ளிருந்து சுமந்திரனுக்கு எதிராக ரொட்டிக்கு மாக்குளைத்தாரா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
கனடாவில் இடம்பெற்ற வன்முறைகள் பாதிக்கப்பட்ட தரப்பினரின் மனநிலையை நிச்சயம் பாதித்திருக்கிறது. அவர்கள் இருவரும் தங்களை சுற்றிக்கட்டியிருந்த மிகப்பெரிய பிரமைக் கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. இதே நிலைதான் தங்கள் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்பதை இவர்கள் உணர்வதற்கான வாய்ப்பு இது.”
ஆக, தீயினால் சுட்ட புண் மாறும் நாவினால் சுட்ட புண் மாறாது !.
சுமந்திரன் அமெரிக்க சி.ஐ.ஏ. யின் முகவரா….?
கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இரு கொழும்புப் பெண்களை வேட்பாளராக களமிறக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழரசுக்கட்சியை கொண்டுவரும் திட்டம் சுமந்திரனுக்கு இருந்தது. அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இது முதல் சுமந்திரன் மீதான எதிர்ப்பும், அதிருப்தியும் அதிகரிக்கத்தொடங்கியது. இதில் விடுதலைப்புலிகளின் மூத்தபோராளிகள் முன்னணி வகித்தனர். சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டது. அவரது தேர்தல் முடிவிலும், அதிரடிப்படை உறவிலும் மர்மங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்னர் கூட்டமைப்பு தலைமை செயலிழந்ததைத் தொடர்ந்து அதனை கையில் எடுத்து கூட்டாளிகளையும் தவிர்த்து தனித்து ஓடினார் சுமந்திரன். அதற்கு ஒத்து ஊதினார் சாணக்கியன். வெளிநாட்டு இராஜதந்திரிகளை தனியாகச் சந்திக்கத்தொடங்கினார். சந்தேகங்கள் வலுத்தது. இவர்கள் ராஜபக்ச அரசாங்கத்துடன் பின்கதவால் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியத்தை நிலத்திலும், புலத்திலும் ஏமாற்றினார்கள். நிலமும் புலமும் இவர்களை போலித்தேசியவாதிகள் என்று அழைத்தன.
இனப்படுகொலை, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்துதல், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் முன்னோக்கி நகர்த்தப்படாதது மட்டுமன்றி, சட்டரீதியாக இந்த விடயங்கள் சாத்தியமற்றவை என்று கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன்ஆலோசனைகளை சுமந்திரன் நிராகரித்தார். சுமந்திரன் திருந்தமாட்டார் என்று ஆத்திரப்பட்டார் கஜேந்திரகுமார்.
விடுதலைப்புலிகளும் போர்க்குற்றவாளிகள் அவர்களையும் விசாரணை செய்யவேண்டும் என்பதும் சுமந்திரனின் நிலைப்பாடு. விடுதலைப்புலிகளால் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஏற்று இருபது இளைஞர்களை சிறைக்குள் தள்ளியவர் சுமந்திரன். விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை தவறு என்று கூறி மன்னிப்புக் கோரினார்.
இவை அமெரிக்காவின் ஆலோசனைகள் என்று நம்பப்படுகிறது.
கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட டயஸ்போரா நிதிக்கான கணக்கு குறித்தும் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த நிலையில் சுமந்திரனுக்கு கணக்குத் தீர்த்திருக்கிறார்கள் கனடாத்தமிழர்கள்.
அமெரிக்க அதிகாரிகளின் தாளத்திற்கு சுமந்திரன் ஆடுகிறார் என்றும் அதற்கு பக்கவாத்தியம் அடிப்பவர் சாணக்கியன் என்றும் நம்பப்படுகிறது. தமிழ்த்தேசியத்திற்கும் அப்பாற்பட்ட சிங்கள தேசத்தின் நலனுக்காக இவர்கள் சீனாவுக்கு எதிராக செயற்பட்டார்கள். இந்திய மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தையை தவிர்த்து கடலில் இறங்கினார்கள். இவை எல்லாம் அமெரிக்காவின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டனவா? என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்காவுக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை அதற்காக சுமந்திரன் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறாரா? ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகுமா? நல்லாட்சி தந்த பாடம் என்ன?.
அமெரிக்க சந்திப்புக்களில் யார்? யார்? கலந்து கொள்வது என்பதையும் சுமந்திரனின் ஆலோசனையுடனேயே அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்ததாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சுமந்திரனின் முகமூடியைக் கனடாவில் கிழிக்க காரணமாய் இருந்துள்ளன. உலகத்தமிழர் பேரவை (WTF ), அமெரிக்க தமிழர் நடவடிக்கைக்குழு (USTAC), மற்றும் கனடாவைச் சேர்ந்த சிலரும் சுமந்திரன் அணியுடன் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. இவர்கள் நாடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். இவை அனைத்தும் பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்களையும் சிறப்பாக கனடாத்தமிழர்களையும் ஆத்திரமூட்டியதன் வெளிப்பாடே கனடா நிகழ்வு. சுமந்திரன் நிலத்திலும், புலத்திலும் தமிழரின் ஐக்கியத்திற்கு குறுக்காக நிற்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த விடயங்களில் ஓரளவுக்கு உண்மை இருப்பினும் கனடாச் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. இந்த முரண்பாடுகள் ஜனநாயக அரசியலில் ஆரோக்கியமானவை. தமிழ்த்தேசிய அரசியலுக்கு இது புதுமைதான். சுமந்திரனை மரபு ரீதியான அரசியல் போக்கை நிராகரிக்கும் ஒரு மொடர்ன் அரசியல்வாதியாகவே மேற்குலகம் பார்க்கிறது. ஆனால் சுமந்திரன் அரசியலில் இரட்டை முகம் கொண்டவர் என்பதே தமிழர் கண்ணாடியில் விழும் விம்பம்.
சுமந்திரன், சாணக்கியன் நிலை இன்று ஆப்பிழுத்த குரங்கின் கதையாகவும், வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாகவும் உள்ளது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு 2009 வரை சகல ஆயுத வன்முறைகளையும், ஜனநாயக, கருத்துச்சுதந்திர மறுப்புக்களையும் அங்கீகரித்தது மட்டுமன்றி, ஆதரித்தும், ஊக்கப்படுத்தியும், மாற்று கருத்தாளர்களுக்கு துரோகிப்பட்டத்தை வழங்கியும் சுய இலாப அரசியல் நடாத்தியது. தமது கட்சிக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது மௌனவிரதம் இருந்தது. அவர்கள் வளர்த்து விட்ட கடா அவர்களின் மார்பில் பாய்ந்துள்ளது. கனடா சம்பவத்திற்கு வன்முறையையும், ஜனநாயக மறுப்புக்களயும் வளர்த்து விட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும்.
புலிகளின் அரசியல் பிரிவின் மீள் வருகை !
கடந்த கால தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் போக்கில் விடுதலைப்புலிகள் திருப்தியாக இல்லை என்பது தெரிந்த விடயம்.
இதுவரை மௌனித்து இருந்த புலிகள் தற்போது களத்தில் குதித்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மத்திய ஐரோப்பாவில் இருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது விடுதலைப்புலிகளின் பல்வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த போராளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு என்ற பெயரில் செயற்பட அவர்கள் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் சுவிஸில் இருந்தும், பிரித்தானியாவில் இருந்தும் அறிவித்திருக்கிறார்கள்.
அவர்களின் கருத்துக்கள் அவர்கள் தம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தியிருப்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த ஒரு தசாப்தமாக மேற்குலக ஜனநாயக நடைமுறைகளையும், அரசியலையும் அவதானித்ததன் விளைவாகவும் இது இருக்கலாம். விடுதலைப்புலிகள் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்டதற்கான இரு காரணங்களை அவர்கள் இனம்கண்டிருப்பது தெரிகிறது.
1. சட்டவிரோதமான கட்டாய நிதி சேகரிப்பு.
2. மேற்குலகு பயங்கரவாதமாகப் பார்க்கின்ற ஆயுதப்போராட்டம்.
இனிமேல் இத்தவறுகளைத் திருத்திக்கொண்டு ஒரு அரசியல் செயற்பாட்டு அமைப்பாக தமது பிரிவு இயங்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அவர்கள். மேற்குலக ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய அரசியலை வன்முறையற்றதாக முன் நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம் எனத் தெரிகிறது.
இவர்களின் அறிவிப்புடன் சம காலத்தில் சுமந்திரன் மீதான கனடா வன்முறை இடம்பெற்றிருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் பலவும் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது சார்பானவர்கள்தான் இதைச் செய்திருப்பதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் காகம் இருக்க பனங்காய் விழுந்த கதையா? அல்லது பின்னணியில் புலிகளா? எது எப்படியோ இனிமேல் தமிழ்த்தேசிய அரசியலின் சுக்கான் புலத்தில் இருந்துதான் ‘தோணியை’ நெறிப்படுத்தும் என்பது மட்டும் உண்மை.
இங்கு எழுப்பப்படுகின்ற இன்னொரு கேள்வி தாயகத்தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பது நிலத்தில் உள்ளவர்களா? புலத்தில் உள்ளவர்களா? என்பதாகும். சுமந்திரன், சாணக்கியன் மீதான அதிருப்தியும் இந்த முரண்பாட்டை கொண்டதாகவே உள்ளது.
ஏற்கனவே புலத்திலும், நிலத்திலும் பல்வேறு துண்டுகளாக சிதறிக்கிடக்கின்ற அமைப்புக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையே ஒரு ஐக்கியத்தை அரசியல் பிரிவு ஏற்படுத்துமா?ஒற்றுமையிலும் வேற்றுமையை அங்கீகரிக்குமா?அல்லது மீண்டும் தமிழ்தேசிய அரசியல் ஏகபோகமாக மாறுமா? என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
அதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளிட்ட மற்றைய டயஸ்போரா அமைப்புக்களின் எதிர்காலம் என்ன? இலங்கையில் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகளின் எதிர்காலம் என்ன? என்பதற்கு காலமே பதில்.
வருகுது..! வருகுது….!! புலி வருகுது..!!!