கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: நரியும் திராட்சையும் (காலக்கண்ணாடி 61)

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: நரியும் திராட்சையும் (காலக்கண்ணாடி 61)

  — அழகு குணசீலன் — 

1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் முதல் கிழக்கு மாகாணம் இலங்கை அரசியலில் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இணைந்திருந்த போதும் பேசப்பட்டது, பிரிக்கப்பட்ட பின்பும் பேசப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் அது மூவின மக்களையும், பலமத, கலாச்சார, பண்பாட்டு, விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுதான்.  

இதுவே கிழக்கில் சகல தரப்பினதும் அரசியல் முக்கியத்துவத்தின் மர்மம். இதனால் தேசிய அரசியலில் மட்டுமன்றி பிராந்திய, சர்வதேச அரசியலிலும் கிழக்கின் புவிசார் அமைவிடம் முக்கியமானது. அதுவே அதன் அரசியலில் நீண்டகாலமாக அவிழ்க்க முடியாமல் இருக்கும் சிக்கல்களுக்கும் காரணமாகிறது.  

கிழக்கு மாகாணசபை இரு தடவைகள் தனித்து செயற்பட்ட அனுபவத்தை கொண்டது. இரண்டாவது மாகாணசபைக் காலம் எட்டோடு ஒன்பதாக இருந்தது என்றே சொல்லவேண்டும். ஆனால் முதலாவது  கிழக்கு மாகாணசபைக் காலமானது அப்படி அல்ல என்பதை கட்சி அரசியல் சார்ந்து மறுத்தாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தி குறித்து மறுப்பது கடினமானது.  

இதற்கு பல காரணங்கள் அன்று வாய்ப்பாக அமைந்தன. அவற்றுள் சில: 

1. கிழக்கில் யுத்ததம் முடிவுற்ற சமகாலத்தில், இந்திய மருத்துவிச்சி தான் பார்த்த பிரசவக் குழந்தைக்கு உயிரூட்ட விரும்பியமையும், கிழக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டதை ஏதோ ஒரு வகையில் வெளிக்காட்ட வேண்டிய தேவையும் சிறிலங்கா அரசுக்கு இருந்தது. 

2. யுத்தப் பாதிப்புக்களை கட்டியெழுப்ப தேசிய, பிராந்திய, சர்வதேச அரசுகளும், நிறுவனங்களும் காட்டிய பெரும் ஆர்வமும், வழங்கிய உதவிகளும் முக்கியமான காரணம்: மேற்குலக வார்த்தைகளில் கூறுவதானால் இது பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட பரிசு. 

3. படிப்படியாக வழமைக்கு திரும்பிய சமூக ஜனநாயக  வாழ்வியல்: இதன் அர்த்தம் அடிமழை விட்டவுடன்  தூவானமும் நின்றுவிட்டது என்பதல்ல. 

4. யுத்தத்தின் முடிவு பிள்ளையான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் கீழான கிழக்கு மாகாண சபையை கொண்டு நடாத்துவதற்கான “புலிகள் தரப்பு தடைகளை” அகற்றியது. 

5. 30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் காட்டிய ஆர்வமும், வழங்கிய ஒத்துழைப்பும். 

6. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கொழும்பு அரசாங்கத்துடன் முரண்படாது நகர்த்திய காய் நகர்வுகள். 

7. மாகாணசபை சபை நிர்வாகம் கிழக்கின் மூவின மக்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக இருந்தமை…..

நாடு முழுவதும் பேசப்படுவதைவிடவும் கிழக்கில் மாகாணசபை சபை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அது பற்றிய அக்கறையும், அவசரமும் மக்கள் மத்தியில் இருக்கோ இல்லையோ அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கிறது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதலமைச்சராவேன் என்று அடித்துச் சொல்கிறார் சாணக்கியன். அது எப்போது என்பது அவருக்கும் தெரியாது, எவருக்கும் தெரியாது. இல்லாத ஒன்றுக்கு அரசியலில் காலவரையறை அற்ற  ஒரு இலக்கு நிர்ணயம். இது ஒரு பிரமை மட்டுமே. இதைவிடவும் பாராளுமன்ற அரசியலில் மிகப் பெரிய பலவீனம் எதுவும் இருக்க முடியாது. 

அரசாங்க தரப்பில் பிள்ளையான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற செய்திகளை ஊடகங்கள் கசியவிடுகின்றன. அரசாங்க உயர்மட்டம் பிள்ளையானுக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இது செய்தி ஒன்றை வெளியில் விட்டு அதன் தாக்கவெளிப்பாட்டை நாடி பிடிப்பதற்கான அரசின் தந்திர உபாயமா? என்ற சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. இதுவரை நிலவும் மொளனம் சம்மதத்தின் அறிகுறியா? 

எது எப்படியோ ஆளும்தரப்பில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை பெயர் குறிப்பிடுவது அரசுக்கு அவ்வளவு கஷ்டமானதல்ல என்பது தெரிந்தவிடயம். நேர்த்திக்கடனும், ஒரு காலப் பூஷையும் முடிந்து பிரசாதம் பிள்ளையான் கையில் இருக்கிறது என்று கொள்ளலாமா? அப்படியானால் இனி காளாஞ்சிதான் பாக்கி.  

பிராந்திய அரசியலில் தனக்குள்ள ஈடுபாட்டை பிள்ளையான் ஒன்றுக்கு பத்துமுறை எந்த ஒளிவு மறைவும், சுற்றிவளைப்பும் இன்றி தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். வெற்றி தோல்விக்கப்பால் அவரது வார்த்தைகளிலும், நிலைப்பாட்டிலும் தளம்பல் அற்ற  உறுதி தெரிகிறது. இலங்கையின் அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரு முன் மாதிரியாக, கிடைத்த குறைவான உரிமைளையும், அதிகாரங்களையும், வாய்ப்புக்களையும் பயன்படுத்தி கிழக்குமாகாணசபையை வெற்றிகரமாக சகோதர இனங்களுடன் இணைந்து நடாத்திக் காட்டிய அனுபவம் அவருக்கு உண்டு. இது கொழும்பு அரசுக்கு மட்டுமன்றி சகல இனமக்களுக்கும் தெரியும். 

ஆகக் குறைந்தது இங்கு ஒரு நீதியரசரான முதலமைச்சருடன் ஒரு சிறுவர் போராளி முதலமைச்சரை ஒப்பிட முடிகிறதா இல்லையா? என்று மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்கமுடியும். 

மறுபக்கத்தில் மாகாணசபையைக் கைப்பற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மிக ஆர்வத்துடன் செயற்பட்டுவருகிறது. கடந்த முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  கைப்பற்றியதுதான் (?) அது எப்படி (?)  என்பதும் என்ன நடந்தது என்பதும்தான் இங்கு திரும்பிப்பார்க்க வேண்டிய அரசியல். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர்கள் பலரும் நேர்த்திக்கடன் வைத்து கியூவில் நிற்கிறார்கள். சிறிதரன் , சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக்க  ஆலோசனை வெளியிட்டு, முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கு எம்.பிக்களுடன் முரண்பட்டு தனது முதலமைச்சர் கனவில் இருந்து பின்னடித்தவர் சாணக்கியன்.  

அதற்கு அவர் சொல்லும் காரணம்தான் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் தான் முதலமைச்சர் ஆவேன் என்பது. இது சாணக்கியனின் தனிநபர் கொள்கையா? அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கையா? இல்லை தமிழரசின் கொள்கையா? வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும்வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாகாணசபை தேர்தலில் பங்கு பற்றக்கூடாது என்றும், பங்குபற்றுவது தாயகக்கோட்பாட்டிற்கு முரணானது என்றும், மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது பாரம்பரிய தமிழர் பிரதேசம் கூறுபோடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதாகும் என்றும் சாணக்கியனால் பகிரங்கமாக கோரிக்கை விட முடியுமா? 

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பை ஆதரித்துப் பாதுகாப்பதுடன், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்குவதை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியுதவி அளிக்கவோ, அதற்கான பரப்புரையை முன்னெடுக்கவோ மாட்டேன் என உறுதியளித்து சத்தியம் செய்கிறேன்” இது சாணக்கியனின் பாராளுமன்ற சத்தியப் பிரமாணம்.  

இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டுள்ளது என்றுதான் தற்காலிக இணைப்பு நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டது. அந்த அரசியல் அமைப்பை ஏற்றுத்தான் சத்தியம் செய்து பாராளுமன்றத்தில் கதிரை கிடைத்திருக்கிறது. கொழும்புக்கதிரைக்கு ஒரு அரசியலமைப்பும், திருகோணமலைக் கதிரைக்கு வேறு அரசியலமைப்பும் இல்லை..? அவரது   மாகாணசபை அரசியல் பாலர் வகுப்பு நரியும் திராட்சைப்பழமும் கதையை நினைவூட்டுகிறது. எட்டி எட்டிப் பார்த்து பழம் எட்டாததால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றதாம் நரி. 

சாணக்கியனின் பின்னடிப்புக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் இடம் காலியாக இருப்பதால் முன்னாள் பாராளுமன்ற அரசியல்வாதிகள் அனைவரும்  இப்போது வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியிருக்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளராக முடிசூடவேண்டும் என்ற எண்ணம் இவர்களில் பலருக்கும் உண்டு. மன்னர் தசரதர் எடுக்கப்போகின்ற முடிவு என்ன? அந்த முடிவில் கூனியதும், நாரதரதும் வகிபாகம் எந்தமட்டு? முன்னாள் பாராளுமன்ற அரசியல்வாதிகள் தசரதரிடம் வைத்துள்ள நேர்த்திக்கடன் பலிக்குமா? அல்லது பலிக்கடாவாக்கப்படுவார்களா…? 

இங்கு மக்களாட்சிக்குழு யாருக்கு மடைவைக்கப் போகிறது. தமிழ்த்தேசிய அரசியலில் வெறும் பார்வையாளராக இருந்த ஒருவர் தீடீரென்று வைத்தமடையில் முதலமைச்சர் வேட்பாளராக கும்பிட வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஏதும் நடந்தால் அது இராமன் அல்ல பரதன்! 

திருகோணமலை மாவட்டம்  

மன்னர் தசரதரின் தலைமைத்துவம் பலவீனமானது என்பதை அவரது மந்திரிசபை நாரதரே முதற்தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளார். 

கதவு இல்லாத “வீடு” போல் எந்த ஒழுங்கு நடைமுறையும் இன்றி எவரும் வரலாம், போகலாம் என்ற நிலையில் நிலைமை உள்ளதாகவே அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தசரதரின் திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 39,570. இது 18.58 வீதம்.  

மன்னர் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியது போன்று நான்கு பேரில் நான்காவதாக தெரிவு செய்யப்பட்டார். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. 2012 மாகாணசபைத் தேர்தலில் 44,396 வாக்குகளாகவும், 29.8 வீதமாகவும் இருந்த கூட்டமைப்பு வாக்கு வங்கி சுமார் 10 வீதத்தினால் இங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர்  அரங்கத்தில் சம்பந்தர் தோற்று, கருணா வெற்றியடைந்திருந்தால்.? என்று எழுப்பியிருந்த கேள்வி இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு மூன்று மாவட்டங்களிலும்  குறைவடைந்து காணப்படுகிறது. குறிப்பாக திருகோணமலையில் தமிழ்த்தேசிய அரசியல் உயிர்ப்பற்று, தேங்கி, மந்தமாகக் கிடக்கிறது. கட்சி ரீதியாக எந்த முன் எடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. உரிமை சார்ந்தும் இல்லை அபிவிருத்தி சார்ந்தும் இல்லை. இதனால் தமிழ்மக்கள் மாற்று அரசியல் ஒன்றை நாடவேண்டிய நிலைக்கு மன்னர் மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறார். 

இது மாகாணசபைத் தேர்தலில் மாற்றுத் தமிழ்கட்சிகளுக்கும், அரசதரப்புக்கும் சாதகமாக அமையமுடியும். 

2020 பாராளுமன்றத் தேர்தலில் சஜீத் அணி 86,394 வாக்குகளைப்பெற்று 40.56 வீத்தினையும், பொதுஜனபெரமுன 66,681 வாக்குகளைப்பெற்று 32.25 வீதத்தினையும் எட்டியிருந்தன. ஈ.பி.டி.பி. 3,775 வாக்குகள்- 1.77 வீதம், தமிழ் காங்கிரஸ் 2,745 – வாக்குகள் 1.30 வீதம். முஸ்லீம் காங்கிரஸ் சஜீத் அணியில் போட்டியிட்டது. சமகால அரசியலில் கிழக்குமாகாண முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்கள் அரசாங்க சார்பு தனித்துவ நிலைப்பாட்டை எடுத்து ரவூப் ஹக்கீம் இன் தாய்க்கட்சியில் இருந்து விலகி நிற்கிறார்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் கூட்டு மாகாணசபையில் தொடர்வது சந்தேகம். 

ஆக, அப்படி நடந்தால் அது ஆளும்தரப்பிற்கே சாதகமாக அமையும்.  

அதிகாரப் பரவலாக்கல் அமைப்பில் புரிந்துணர்வுடன் செயற்படுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, ரீ.எம்.வி.பி., ஈ.பி.டீ.பி, மற்றும் கலாநிதி விக்கினேஸ்வரனின் கட்சி போன்றவை ஒரு அணியாகக் களமிறங்கினால், கூட்டமைப்பு மீதுள்ள அதிருப்தியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்மக்களின் கணிசமான வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. மறுபக்கத்தில் புளட்டையும், ரெலோவையும் சமாளிக்க தமிழரசு வகுக்கப் போகும் வியூகமும் வாக்குப்பிரிவதில் முக்கிய காரணியாக இருக்கும். 

கடந்த தேர்தலில் சஜீத் அணி ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதிக வாக்குகள் அந்த அணிக்கு கிடைத்தன. இன்றைய நிலையில் முஸ்லீம் காங்கிரஸும் விலகி நின்றால் ஆளும்தரப்புக்கே அது சாதகமாக அமையப் போகிறது. ஏனெனில் உரிமைக்குச் சமாந்தரமாக அபிவிருத்தியை வேண்டிநிற்கின்ற மக்களின் தேர்வு ஆளுந்தரப்பாக அமைவதற்கான வாய்ப்புக்களே அதிகம். கிழக்கின் முஸ்லீம் எம்.பி.க்களின் நிலைப்பாடு இதுவே. 

இதைத்தான் எங்கள் அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அவர்களில் பலரும் சாணக்கியனுக்கு சொல்லால் அடித்தார்கள். 

மட்டக்களப்பு மாவட்டம்: 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாராளுமன்ற முன்னாள்கள் நேர்த்திவைத்து வரிசையில் நிற்கிறார்கள். செல்வராசா, கனகசபை தவிர்ந்த மற்றைய அனைவரதும் பெயர்கள் அடிபடுவது மட்டுமன்றி அவர்கள் வெளியே வந்திருப்பதும் தெரிகிறது. அரியநேத்திரன், சிறினேசன், யோகேஸ்வரன் உட்பட மாகாணசபை முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம், முன்னாள் வேட்பாளர் உதயகுமார் பற்றியும் பேசப்படுகிறது. 

அதேவேளை விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் ‘தமிழ்த்தேசிய அரசியல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் வயோதிபர் மடம் அல்ல’ என்பதை பாராளுமன்ற தேர்தல் முதல் கூறிவருகின்றார்கள் என்பதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. தமிழரசு இளைஞர் அணி செயோனின் பெயரும் பேசப்படுகிறது. இவருக்கு பின்னால் முன்னாள் போராளிகள் நிற்பார்கள் என்பது நிச்சயம். 

பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறு வந்த நிர்பபந்தத்தில் துரைராசசிங்கம் பதவி விலகினார். அதை சுயவிருப்பில் பதவி விலகியதாக அவர் அறிக்கை விட்டது வேறுகதை. தீடீரென்று விழித்துக்கொண்டவர் போல் அண்மையில் அமரர் எஸ்.எம்.இராசமாணிக்கம் குறித்து ஒரு நினைவுக் கட்டுரையை அவர் எழுதியிருந்தார். 

கலாவதியாகிப்போனதும், தமிழரசால் கைவிடப்பட்டதுமான சமஷ்டி பற்றியது அது. தமிழரசுக்கட்சியும், கூட்டமைப்பும் ஒற்றையாட்சியின் கீழான தீர்வுக்கு தயார் என்று ஒற்றைக்காலில் நிற்கையில் இந்த கட்டுரை குறித்து சந்தேகம் எழுகிறது. இதனூடாக சாணக்தியனை சாந்தப்படுத்தி மாகாணசபைக்கு செய்கின்ற விண்ணப்பமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இவரின் கட்டுரை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறதா? இல்லையா? 

ரெலோவும், புளட்டும் இது விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கிறார்களாம். ரெலோ சார்பில் பிரசன்னா, சத்தியசீலன் பெயர்கள் பேசப்படுகிறது. சட்டத்தரணி ஒருவரும் ஜனாவின் கையில் இருக்கிறாராம். புளட்டைப் பொறுத்தமட்டில் வியாழேந்திரனின் வெளியேற்றத்தின் பின் மட்டக்களப்பில் அது நொந்து போய் உள்ளது. எனினும் ரெலோவுடன் இணைந்து வேட்பாளர் நியமனத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டாது என்பதற்கில்லை. பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறுகளைத்திருத்தி கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இளைஞர்களையும், பெண்களையும் உள்வாங்குமா? 

அல்லது புது லேபல் ஒட்டப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய கள்ளாகத்தான் பட்டியல் அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். 

2020 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு  79,460 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றது. இது மாவட்டத்தில் பெற்ற வாக்கில் 26.66  வீதம். ரி.எம்.வி.பி 67,692 வாக்குகள், 23.71 வீதம். பொதுஜனபெரமுன 33,424, 11.22 வீதம். இன்றைய அரசின் நேரடிப்பங்காளிகளான இந்த இருதரப்பும் பெற்றது  மொத்தமாக 1,01,116 வாக்குகள் இது 33.93 வீதம். முஸ்லீம் காங்கிரஸ் 34,428 வாக்குகளுடன் 11.55 வீதத்தைப் பெற்றுள்ளது. கிழக்குமாகாண முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்களின் இன்றைய அரச ஆதரவு நிலைப்பாட்டில் இதையும் சேர்த்துப் பார்த்தால் அரச ஆதரவு பெற்றது சுமார் 45 வீதம்.  

மட்டக்களப்பின் இன்றைய நிலையில் அதிகாரப்பகிர்வு அமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டீ.பி என்பனவும் அரச ஆதரவு அணியில் இணைந்தாலும், பஷீர் சேகுதாவுத், ஹிஸ்புல்லா தரப்பினர் இணைந்தாலும் அது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். ஐக்கிய சுதந்திர முன்னணி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 31,054 (10.54 %)வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113 (2.7%) வாக்குகளையும் பெற்றிருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. 

2012 மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பு 1,04,682 வாக்குகளை பெற்றது. இது சுமார் 51 வீதம். மாறாக அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 64,190 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 23,083 வாக்குகளையுமே பெற்றது. இவை முறையே சுமார் 31, 11 வீதங்கள். ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் ரி.எம்.வி.பியும் பொதுஜன பெரமுனவும் பெற்ற வாக்குகள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவை. 

இன்றைய களநிலையில் கூட்டமைப்புக்கு மாகாணசபையில் முட்டுக்கொடுக்கக்கூடிய ஒரே அணி சஜீத் அணிதான். இது முட்டுக்கு முட்டு. ஆனால் கூட்டமைப்பு பேசுகின்ற தமிழ்மக்களின் அபிலாஷைகளை  தேசிய அரசியலில் எதிர்க்கட்சியில் உள்ள சஜீத் அணியுடன் இணைந்து சாதிக்க முடியுமா? சரத்பொன்சேகாவை இரத்தக்கறை காயமுன் ஜனாதிபதியாக்கப் போன தமிழ்த்தேசிய அரசியல் அபத்தத்திற்கு இது ஒன்றும் குறைந்தது அல்ல. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் புளட், ரெலோ, தமிழரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் மாகாணசபை சபைத்தேர்தலில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும். கட்சி சின்னத்தை விடவும் விருப்பு இலக்கத்தேர்வு இவர்களுக்கு இடையே பெரும் போட்டியாக அமையும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனா பின்னுக்கு தள்ளப்பட்டதற்கான காரணங்களை ரெலோ இலகுவில் மறந்து விட முடியாது. கூட இருந்து குழி பறிக்கின்ற இந்த அரசியலில் ரெலோவும், புளட்டும்  இம்முறை மிகக் கவனமாகவே  இருப்பார்கள். அண்மைய ஜெனிவா அறிக்கைப்போரில் இவர்களை மீண்டும் துரோகிகள் எனப் பிரகடனம் செய்ய முயற்சிக்கப்பட்டது. 

கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றால் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு முதல், தேர்தல் முடிவுவரை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அது ஒரு சவாலாகவே அமையும். மறுபக்கத்தில் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பின் இன்றைய ஆர்ப்பார்ட்ட அரசியலுக்கான மக்கள் கருத்துக் கணிப்பாகவும் அமையும். இந்த அரசியல் கருத்துக் கணிப்பு உரிமையை முன் நிறுத்திய அரசியலா? அல்லது அபிவிருத்தியை முன்நிறுத்திய அரசியலா?என்பதைத்தீர்மானிக்கும். 

அம்பாறை (திகாமடுல்ல ) மாவட்டம்  

அம்பாறையில் கல்முனை தமிழ்பிரிவு பிரதேசசெயலக விவகாரம் மீண்டும் கொதிநிலை அடையும். தமிழ், முஸ்லீம் இனவாத மோதலுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக மாகாணசபை சபைத்தேர்தல் அமையும். மீண்டும் வாக்குறுதிகள், மீண்டும் வால்வெள்ளிகள் வானில் தோன்றும். இங்கு மாகாணசபைக்கு தமிழர்கள் தங்கள் பிரதிநிதிகளை போதுமான அளவு பெற்றுக் கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்படவேண்டும். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு வோட் மட்டும் மாறும் என்றவர்களும் ஓட்டுக்கேட்டு வருவார்கள். இந்த BORD, VOTE வார்தையாடல் இராஜதந்திரம் என்று மீண்டும் சொல்வார்கள். மறுபக்கத்தில் மணித்தியாலங்களில் ஆரம்பித்து காலக்கெடு வேறு இடம்பெறும். 

2012 மாகாணசபை சபைத்தேர்தலில் 44,749 வாக்குகளைப்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, 2020 பாராளுமன்ற தேர்தலில் 25,225வாக்குகளை மட்டுமே பெற்றது. இது ஒப்பீட்டளவில் 10 வீத வீழ்ச்சி. 

கடந்த தேர்தலில் தமிழர் மகாசபையுடன், தமிழ்ப் பிரதிநிதித்துவம் சார்ந்து பல கட்சிகள் அங்கு போட்டியிடவில்லை. வருகின்ற மாகாணசபை சபையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ரி.எம்.வி.பி, ஈ.பி.டீ.பி, கருணா தரப்பு என்பன இப்படியொரு இணக்கத்திற்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழர் மகாசபை பெற்ற 29,379 வாக்குகளை இந்த உடன்பாடு அதிகரிக்குமா? என்பதை கடந்த தேர்தல் மக்களுக்கு விட்டுச்சென்ற பட்டறிவுதான் தீர்மானிக்கும். இது தமிழ்த்தேசிய கூட்டமைபுக்கும்  விலக்கல்ல.  

கிழக்கு மாகாணசபை  தேர்தல்கள் : 

2008இல் கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரித்தது. அது புலிகளின் காலம். இப்பதிவின் ஆரம்பத்தில் சாணக்கியனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் பகிஷ்கரகப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது. இப்போதும் இந்த நிலையில் மாற்றம் எதுவும் இல்லை புலிகள் இல்லை என்பதைத்தவிர. 

2008இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாணத்தில் 3,08,886 வாக்குகளை (52 %) பெற்று  20 ஆசனங்களைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 2,50,732 வாக்குகளை (42%)பெற்று 15 ஆசனங்களையும், ஜே.வி.பி. தமிழ் ஜனநாயக முன்னணி என்பன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றன. மொத்தம் 37 மாகாணசபை உறுபாபினர்கள். பிள்ளையான் முதலமைச்சர். 

2012 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,00,044 வாக்குகளை (32%) பெற்றது. கிடைத்த உறுப்பினர்கள் 14. இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்கவில்லை. இது புலிகள் இல்லாத சூழலில் மேய்ப்பன் இல்லாத அரசியல். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 1,93,827 வாக்குகளை (31%) பெற்றது. கிடைத்தது 11 ஆசனங்கள். முஸ்லீம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 1,32,917. இது 21 வீதம். கிடைத்த உறுப்பினர்கள் 7. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 74,901 வாக்குகள் (12%) 4 உறுப்பினர்கள். திருகோணமலையில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளும் 1.5 வீதத்துடனும் ஒரு உறுப்பினரைப் பெற்றது. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 45,000. கட்சிகள் தனிநபர் விருப்பத்தெரிவை  முதன்மைப்படுத்தும் போது கட்சியை விடவும் தனிநபர் கதிரை முக்கியம் பெற்று வாக்காளர்களுக்கு ஏற்படுகின்ற குழப்பநிலை இதற்கு ஒரு காரணம். 

இனி, 2020 பாராளுமன்ற தேர்தலில் கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 1,44,255 வாக்குகளையே மூன்று மாவட்டங்களில் இருந்தும் பெற்றுள்ளது. 2012 இல் பெற்றதை விடவும் 50,000 குறைவானது.  

ஆளும் பொதுஜன பெரமுன 2,28,117 வாக்குகளை பெற்றுள்ளது. இத்துடன் ரி.எம்.வி.பி (67,692), தமிழர் மகாசபை 29,397, திருமலையில் ஈ.பி.டி.பி. 3,775. எல்லாம் சேர்த்தால் 3,28,963. இது 2012 பெற்ற வாக்குகளை விடவும் சுமார் 1,30,000 வாக்குகள் அதிகமானவை.  

கிழக்கு மாகாண முஸ்லீம் காங்கிரஸ் நிலைப்பாடும், சஜீத் அணியின் நிலைப்பாடும் அயோத்தியின் இராமன் யார் என்பதைத் தீர்மானிப்பதில் வகிபாகம் செய்யமுடியும். 

ஆக, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த நம்பிக்கையை  ஒரே அறிவிப்பில் சம்பந்தர் செய்த துஷ்பிரயோகத்திற்கான கணக்குத் தீர்ப்பாகவும், நல்லாட்சியின் பங்காளியாக தோற்றுப்போன அரசியலுக்கான பதிலாகவும், தற்போதைய பாராளுமன்ற அரசியலில் அடையப்பட்ட உரிமை சார் இலக்குகளுக்கான மக்கள் தீர்ப்பாகவும் அமையும். 

மறுபக்கத்தில் ஆளுந்தரப்பின் உரிமை மறுப்புக்களுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இடையே மக்கள் ஒரு ஐந்தொகைக்கணக்கை பார்ப்பார்கள். விவசாய, மீன்பிடி மாகாணமான கிழக்கில் ஏற்பட்டுள்ள பசளை விவகாரம், மீனவர் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டும், கொரோனா கால வாழ்வாதார செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் அளிக்கின்ற தீர்ப்பாக அமையும். 

எப்படியோ இராமன் ஆண்டால் என்ன…? இராவணன் ஆண்டால் …. 

என்ன என்ற அரசியல் விரக்திக்குள் மக்கள் தள்ளப்படாமல் இருப்பதே கிழக்கின் ஆரோக்கிய  அரசியலாக அமையமுடியும். மூவின மக்களினதும் பங்களிப்பே  இந்த ஆரோக்கிய அரசியலின் சூத்திரம். 

கண்டி இராச்சியத்தின் சமாதான வாழ்வின் சரித்திரம்.