இலங்கை தமிழர் வரலாறு குறித்த 5 நூல்கள்

இலங்கை தமிழர் வரலாறு குறித்த 5 நூல்கள்

பேராசிரியர் சி.மௌனகுரு 

இலங்கைத் தமிழர் வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும். கி.மு 250-கி.பி 300) எனும் இந்நூல் இந்து சமய கலசாரத் திணைக்களத்தால் 2016இல் வெளியிடப்பட்டுள்ளது. 550 பக்கங்களைக்கொண்ட இந்நூலின் விலை 2500/=  அழகிய முறையில் குமரன் பதிப்பகம் இதனை அச்சிட்டுள்ளது. 

இதன் தொகுப்பாசிரியர் பேராசிரியர் பத்மநாதன்   முப்பத்தி ஐந்து(35 ) கட்டுரைகளைக் கொண்ட தொகுதி இது. தானும் இதிலே பெரிய பெரிய கட்டுரைகளை எழுதியதுடன் வழிகாட்டியாக நின்று தொகுத்துமிருக்கிறார் பேராசிரியர் சி.பதமநாதன். 

கிழக்கிலங்கையில் மிகப்பழங்காலத்தில் தமிழ்மொழி  பேசுகின்ற அல்லது  தமிழ்மொழியை தமது அரச  அலுவல் மொழியாகக்கொண்ட நாகர் ராஜ்யங்கள்   இருந்ததனை இந்நூல் கல்வெட்டு புதைபொருள் ஆதாரங்களுடன்  நிறுவ முயன்றுள்ளது. எனவே இது ஒரு முக்கிய நூலாக தமிழ் ஆர்வலர்களால்  வரவேற்கப்படுகிறது. 

இந்தியப்பெரும் கண்டத்தில் நாகர் 

நாகர் என்போர் பரதகண்டத்தில் பரவிவாழ்ந்த ஓர்பெரும் இனக்குழுமமாகும். தொன்மங்களில் நாகர் பற்றிய கதைகள் அதிகம் உண்டு, மஹா பாரதத்தில்  இந்த நாகர் ஓர் முக்கிய இனக்குழுமமாக  கூறவும்படுகிறது. 

நாகர் இனத்தை ஆரியர் வருமுன் இந்தியாவில் வாழ்ந்த இனக்குழுமம் என்பார் அம்பேத்கார்.  

நாகரைப் பற்றி புராதன இலக்கியங்களான இராமாயாணம், மஹா பாரதம் புராணங்கள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளன. நாக மன்னர்கள்  ஆட்சி சில காலங்களில் சில இடங்களில் நிலவியிருக்கிறது, சிசு நாகன் இந்திய வரலாற்றில்  பேசப்படும் ஓர் மன்னன் இந்தியாவில் நாகலாந்து என்ற ஓர் நாடே உண்டு. 

மௌரியர், குப்தர் போன்ற பின்னால் வந்த பேரசுகள்  இவர்களை அடக்க மிகுந்த பாடுபட்டன என்ற செய்திகளும் உண்டு. 

தமிழ் நாட்டின் வரலாற்று ஆரம்பமான சங்ககாலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், போன்றவர்களைக் குறிப்பிடலாம். 

முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரனை பாடியிருக்கிறார்.  

இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். 

நாக வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் நாகரென்றும் அவர்கள் இந்தியப் பழங்குடிகளுள் ஒருவர் என்றும் பெரும்பாலான அறிஞர் கொள்வர்.   

 நாகர் பற்றி பல ஆய்வுகள் வந்துள்ளன.  

இலங்கையில் நாகர் 

பேராசிரியர் கணபதிப்பிள்ளை 1956இல் வெளியிட்ட  தமிழர் வரலாறு எனும் சிறு கைநூலில் புத்தர் மூன்று முறை இலங்கை வந்தபோது இரண்டாம் மூன்றாம் முறையாக நாக தீபத்திற்கும் கலியாணிக்கும் சென்றார் எனவும் அப்பகுதிகளில் நாகரே வசித்தனர்  என மஹாவம்சம் கூறுவதாகவும் எழுதியுள்ளார்.

அத்தோடு பண்டைக்காலத்தில் நாகர் இலங்கையில் பரவி இருந்தமையை கி.பி  2ஆம் நூற்றாண்டில்  தோன்றிய மணி மேகலை வலியுறுத்துகிறது எனவும்   இன்று கந்தரோடை என அழைக்கப்படும் இடம் பண்டைய நாகர் குடியிருப்பின் தலை நகர் எனவும் கூறுவர். 

விஜயன் பிறப்பதற்கு முன்னரேயே நாகர் கடல் வணிகம் செய்து வளர்ச்சி பெற்றிருந்தனர் எனவும்  இந்நாக சாதியினர் தமிழரோடு கலந்து தமிழராயினர்  என்பதும் பேரா.கணபதிப்பிள்ளை அன்று  கண்டடைந்த முடிவு. 

வட இலங்கையில் நாகர் 

நாகதீபம் எது எனத் தேடுவோர்க்கு யாழ்ப்பாணமே நாகதீபம் என வல்லிபுரச் செப்பேடு காட்டும் என வலியுறுத்தி நாகரை வட இலங்கையோடு  தொடர்புபடுத்தியுள்ளார் பேரா.கணபதிப்பிள்ளை.  

அவர் காலத்தில் கிழக்கிலங்கையில் நாகர் குலம் இருந்தமைக்கான கல்வெட்டு புதைபொருள் இலக்கியச் சான்றுகள் கிடைக்காமையினால் அவர் கிழக்கிலங்கை நாகர் பற்றிக் கூறாதுவிட்டார். 

நாகதீபம் என்பது வடக்கில் மாத்திரமல்ல கிழக்கின் தென் எல்லை வரை பரந்திருந்தது எனும் எண்ணத்தை  இந்நூலும் இதில் கண்டு உரைக்கப்பட்ட கல்வெட்டு  புதைபொருள் படங்களும் எமக்கு காட்டுகின்றன. 

கிழக்கிலங்கையில் நாகர் 

கிழக்கிலங்கையிலும் மட்டக்களப்பிலும் நாகர் இருந்தனர் என வாய்மொழிக் கதைகளும் இங்கு  வழக்கிலுள்ள நாகதம்பிரான் வணக்கமும்   மட்டக்களப்பு மான்மியமும் சிலருக்கு இடப்பட்ட பெயர்களும் உணர்த்துகின்றன. இந்நாகர் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பிற்கு வடக்கேயும் தெற்கேயும் வாழ்ந்துள்ளனர் எனத்தெரிகிறது. 

மட்டக்களப்பில் நாகர் 

மட்டக்களப்பின் வழிபாடுகளுள் நாகவழிபாடும் ஒன்று,  மட்டக்களப்பின் சைவக் கோவில்கள் எனும் நூல் எழுதிய வி.சீ.கந்தையா மட்டக்களப்பில் அன்று இருந்த நாக வழிப்பாட்டுக் கோவில்களாக பதினெட்டுக் கோவில்களைக் கூறிடுள்ளார். இக்கோவில்கள் மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளிலும் உள்ளே வயல்காட்டுப் பகுதிகளிலும்  இருக்கின்றன. நாக வழிபாடே இங்கு முக்கியம், சில  பெண்கள் உருவந்து நாகமாக நெளிந்து நெளிந்து  ஆடும் முறை சில இடங்களில் இன்றும் உண்டு. பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோவில் வெகு பிரசித்தம். அங்கு அந்நாக வழிபாடு வந்ததற்கான கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. வனிதை என்னும்  பெண்ணுக்குப் பிறந்த 7 பிள்ளைகளில் ஒரு பிள்ளை நாகம் எனவும் அதனையே அவர்கள் பின்னால் வழிபட்டனர் என அக்கதை கூறும். அங்கு பூசை புரிந்தவர் நாகநம்பி என அழைக்கப்பட்டார்.  இச்சொல் எமக்கு இன்னுமோர் வரலாறு கூறுகிறது. 

நாகன், நாகமணி, நாகேஸ்வரி, நாகேஸ்வரன் எனும் பெயர்களும் வரலாற்றை புரிய உதவும் பேராகும் 

அன்று மட்டக்களப்பில் இருந்த குடிமகனாக கருதப்பட்ட நாகன் எனும் பறை வினைஞரான அப்பெரியாரும் அவரது வெற்றுடம்பும் குடிமிக்கோலமும் அவர் எழுப்பும் திண்ணென்ற பறை  ஒலியும் ஞாபகம் வருகிறது. அவரது பெயர் நாகன்  அதற்கு முன்னால் அவர் குலப்பெயரை இட்டு அன்று  அழைத்தனர், இப்படியான பெயருடன் அன்று பலர் இருந்தனர்  

நாகன், நாகி என்ற பெயர்கள் பின்னால் நாகதம்பிரான் ஆனது. அதன் பின் நாகஈஸ்வரன் ஆகி ஈஸ்வரன்  அந்தஸ்து பெற்றது. பெண்நாகம் நாக ஈஸ்வரி  ஆனது, 

சிவனையே ஈஸ்வரன் என அழைப்பர்.   

சிவனின் ஆபரணமானதால் அது சிவ அந்தஸ்தையும்  பெற்றது. 

சிவன் குழு நாக குழுவை வென்ற வரலாறும் இதற்குள் புதைந்து கிடக்கலாம் அல்லவா? 

இப்படி வாய்மொழித் தகவல்கள் கோவில் வழிபாடுகள்  என்பன சரித்திர ஆவணமாக மட்டக்களப்பில்  மலிந்து கிடக்கின்றன தோண்டி எடுக்கும் திறனுடையோர்தான் இல்லை. 

இச்செய்திகள் கல்வெட்டு புதைபொருள் ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படாமையினால் அது வரலாற்று ஆய்வாளர்களை ஈர்க்கவில்லை. 

இதோ இப்போது நாகர் மட்டக்களப்பில் பரவி வாழ்ந்தமைக்கும் மட்டக்களப்பில் கி.மு 250 வருடங்களுக்கு முன்னரேயே நாகரிகம் மிகுந்த மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. 

கிழக்கிலங்கையில் ஓர்பெரும் நாககுல அரசு இருந்தமைக்கான சான்றுகளை இந்நூல் தருகிறது 

நூலும் நூலின் பகுப்பும் 

இந்நூல் ஏழு அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரம் ஒன்றில், பரத கண்டத்தில் நாகர் பற்றியும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவர்களின் செல்வாக்கு பற்றியும் விபரமாகக் கூறப்படுகிறது. 

அதிகாரம் இரண்டில் இலங்கையின் பிராகிருத மொழிச் சாசனங்களில் நாகர் பற்றிச்சொல்லப்படும்   குறிப்புகள் புதிய கண்ணோட்டத்தில்  கூறப்படுகின்றன.  

அதிகாரம் மூன்றில் பிராகிருத மொழிச்சாசன வழக்கில் ஏற்பட்டுள்ள தமிழ்மொழியின் சொல்லாட்சி கூறபடுகிறது.  

அதிகாரம் நான்கில் மட்டக்களப்பு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் படங்களோடு விபரிக்கப்படுகின்றன.  

அதிகாரம் ஐந்தில் திருமலை, அம்பாரை மாவட்டங்களில் காணப்படும் பெரும் கற்காலம் பற்றிக் கூறப்படுகின்றது. 

ஆறாம் அத்தியாயத்தில் மட்டக்களப்பு தேசத்தில் வாழ்ந்த நாககுலத்தவர் உருவாக்கிய வேள்புலங்கள்  பற்றிக்கூறப்படுகிறது.  

ஏழாம் அத்தியாயத்தில் ஆதிகாலத்தில் மட்டக்களப்பு   முக்கியமாக கிழக்கிலங்கையில் வாழ்ந்தநாகர் இனத்தவரின் வழிபாட்டு முறைகள் விபரங்கள் விளக்கங்கள் கூறப்படுகின்றன.  

இதில் முதல் நான்கு பெரும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் பேராசிரியர் பத்மநாதன் அவையாவன. 

1.பரதகண்டத்தில் நாகர் 

2.பிராகிருத மொழிக் கல்வெட்டுகளில் நாகர் 

3.பிராகிருத மொழிக் கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் செல்வாக்கு 

4.மட்டக்களப்பில் நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் 

இந்த நான்கு கட்டுரைகளும் இதுவரை நாகர் பற்றிவந்த ஆய்வுகளை உட்செரித்து எழுதப்பட்ட கட்டுரைகளாகும். 

இவை கிழக்கிலங்கை நாகரை அறிந்துகொள்ளவும்  பின்னால்வரும் கிழக்கிலங்கை நாகரின்   தடயச்சின்னங்களைப் புரிந்து கொள்ளவும் பேருதவி  புரிகின்றன.  

இலங்கைக்கு விஜயன் வந்த ஆண்டாக கி.மு 600   கூறப்படுகிறது. விஜயன் வருமுன்னர் இங்கு இயக்கர், நாகர் என இரு இனக்குழுக்கள் இருந்தனர் என பல நூல்கள் கூறியுள்ளன. 

இப்போது கல்வெட்டு அகழ்வாய்வுத் துணைகொண்டு கிழக்கிலங்கையில், கி.மு 250ஆம் ஆண்டளவில்     தமிழ்பேசிக்கொண்டு, தமிழில் கல்வெட்டுகள் இட்டுக்கொண்டு, வேளாண்மை செய்து கொண்டு, இரும்பினைப் பாவித்துகொண்டு, நாகவழிபாடு  செய்துகொண்டு, அரசு அமைத்து வாழ்ந்த ஓர் இனக் குழுமம் பற்றி கல்வெட்டு புதைபொருள் ஆய்வுகள் மூலம் நிறுவப்படுகிறது.   

கற்பனை எனக் கூறப்பட்ட ஒரு புராதன வரலாறு நிறுவப்படுகிறது. 

இதன் மூலம் மேற்கிளம்பும் இரண்டு பிரதான விடயங்கள் 

1.நாகரின் பேச்சு வழக்கு மொழி தமிழ் என்பது 

2.கி.பி முதல் இரு நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கையில் தமிழர் சமூகம் உருவாகி கோலோச்சி செல்வாக்கினை பெற்று விட்டதென்பது 

20 வருடகாலமாக தமிழ் பிராமிக்கல் வெட்டுகளைப் படித்த அனுபவமும் பயனுமே இந்நூலுக்கு அடிப்படை என்கிறார் பேராசிரியர். சி.பத்மநாதன். 

தேடிப்போகவில்லை கொணர்ந்து தந்தார்கள். மலைகளில் இருந்தவற்றைத் தவிர ஏனைய  அனைத்து இடங்களைச் சென்று பார்த்தேன் என்கிறார் பேராசிரியர். 

இந்நூலாக்கத்தில் பேராசிரியர் பத்மநாதனுக்கு  உதவியவர்கள் 

மட்டக்களப்பிலிருந்து   

எழில்வாணி 

பத்மநாதன் 

குணபாலசிங்கம் 

கிரிதரன் 

எட்வின் 

Dr.அருள்நிதி   

ராகுலதேவி   

திரிகோணமலைப் பகுதியிலிருந்து 

Dr.சதீஸ் 

Dr. ஜீவராஜா   

இவர்களின் கட்டுரைகளும் அவர்கள் வழங்கிய தகவல்களும் சான்றுகளும் நூலை நிறைத்துள்ளன. 

மட்டக்களப்பில் 

இலவாணை வேரம் 

பிளாக்குழிவேரம் 

கல்லடிச் சேனை 

பாலாமடு 

வந்தாறுமூலை 

மாவடிவேம்பு 

வாகரை படிவெட்டினமலை 

குடும்பி மலை 

குசாலன் மலை 

நாவற்குடா 

களுவான்சிக்குடி 

தாந்தாமலை 

மகிழடித்தீவு 

வெல்லாவெளி விவேகானந்தாபுரம் 

தும்பங்கேணி 

கழுமுந்தன் வெளி 

நெடியமடு 

அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் உள்ள 

சங்கமன் கண்டி 

கஞ்சிகுடிச்சாறு 

காரதீவு 

தம்பலகாமம் 

திரிகோணமலை 

திருக்கரசை 

கோகர்ணம் 

என கிழக்கிலங்கையின் வடபகுதியிலிருந்து தென்  பகுதிவரை 26 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட  கல்வெட்டுகள் புராதன பொருட்கள் அகழ்வாய்வுச்  சின்னங்கள் இந்நூலில் உண்டு 

இலங்கையின் புராதன வரலாற்று எழுத்தியல் எனும்   பிரதான நீரோட்டத்துள் கிழக்கு மாகாணம் தனது  கல்வெட்டு ஆதாரங்களுடன் இப்போது மிகுந்த வலிமையோடும் அழகோடும் பிரசன்னமாகிறதோ  என்ற உணர்வையும் இது வரலாற்று நிர்ப்பந்தமோ  என்ற சிந்தனையையும் இந்நூல் தருகிறது 

பேராசிரியர் பத்மநாதன் கருத்துகள் 

இதன் முன்னுரையில் பேராசிரியர் பத்மநாதன் பெரும்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களைக் குறிப்பிடும் போது அரசர் தலைவர் பற்றிக்  குறிப்பிட்டாலும் அரசுக்கு அடித்தளமாக இருந்த  உழைப்பாளர் உற்பத்தி நிலை ஆகியவற்றைக் கூறுவது வரவேற்றற்குரியது. 

அகழ்வாய்வில் அரசரையும்  மதங்களையும் இலக்குவைக்கும் நமது அகழ்வாய்வாளர் பலர்  மக்களை மறந்துவிடுதல் இயல்பு. எங்கள் அகழ்வாய்வு  இன்னும் சமூக அகழ்வாய்வாக பரிமாணம்  பெறவில்லையே என்ற குறை சிலரிடம் உண்டு  

இங்கு பத்மநாதன் பின் வருமாறு கூறுகிறார்:  

தென்னிந்தியாவில் இருந்தும் பரவிய  ஆதி இரும்புக்கால மக்களே முதன்  முதலாக உற்பத்தி முறை ஒன்றினை இலங்கையில் உருவாக்கினர். பயிர்ச்செய்கை, நீர்ப்பாசனம், உலோகவார்ப்பு, மட்கல உற்பத்தி, கிராம நகர அமைப்புகள், பண்டமாற்று, சந்தைப்படுத்தல் கடற்பிரயாணம்  முதலிய யாவும் அவர்களின் நடமாட்டத்தோடு  வழமையாகின என்கிறார். 

இங்கு அரச அமைப்புக்கு அடித்தளமாக விளங்கிய  உற்பத்தி கூறப்படுகிறது. இதனை ஆதாரமாக வைத்து  நாம் அன்றைய கிழக்கிலங்கையின் மட்டக்களப்பின் சமூக அமைப்பை தொழில் பிரிவினைகளை  கட்டமைத்துக்கொள்ளலாம். 

அத்தோடு கிழக்கிலங்கை முன்னோர் வாழ்ந்த வாழ்வையும் கற்பனை செய்துகொள்ளலாம். 

விஜயன் வருகையின் முன் இங்கு நாகரும் இயக்கரும் வாழ்ந்தனர் என்ற வாய்மொழிக்கதையும்  புராணங்களும் உண்டு இந்தக் கதையினை  மட்டக்களப்பு பூர்வீக சரித்திரமும் பதிவுசெய்துள்ளது. 

நாகர் இயக்கரோடு கலந்து ஒரு சமூகமானார்கள்  அவர்கள் எல்லா நகரங்களிலும் ஆட்சி புரிந்தார்கள். உகந்தையில் அவர்கள்கூடி வாழ்ந்தனர். இது புராணக் கதையோ கற்பனைக் கதையோ அல்ல என்கிறார்  பத்மநாதன். கணிக்கப்படும் ஓர் வரலாற்று  ஆய்வாளரின் முக்கிய கூற்று இது. 

இதில் இரு முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. 

1.இனக்கலப்பு பற்றியது 

2.அரசுகளின் உற்பத்தி பற்றியது 

பௌத்த மதம் வருமுன்னர் இலங்கையில் இயக்கரும் நாகரும் வாழ்ந்தனர் என மஹாவம்சம் கூறினும்  இனக்கலப்பு அது பற்றிக்கூறவில்லை. ஆனால் இயக்கரும் நாகரும் மட்டக்களப்பு தேசத்தில் வாழ்ந்து கலப்புற்றனர் என்பதை மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. ஆனால் அக்கூற்றை வரலாற்று  ஆய்வாளரும் இதுவரை கணக்கில் எடுக்கவில்லை. 

ஆனால் அக்கூற்றுகளை இந்த நூலில் வரும்  புதைபொருள் கல்வெட்டு ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. 

கறாரான சரித்திர ஆசிரியர்கள் எங்கே கல்வெட்டு புடைபொருள் சாட்சிகள் என்று கேட்பர். அவர்கள் கேட்ட அந்தச் சரியான கல்வெட்டுச் சாட்சிகள்  இப்போது கிடைத்துவிட்டன. 

மட்டக்களப்பு இளம் தலைமுறையினருடன் சேர்ந்து  வெளிகொணர்ந்து விட்டார் பேராசிரியர் சி.பத்மநாதன். 

புத்தளம் மாவட்டத்திலும் பெரும் தொகையான தமிழ்க்கல்  வெட்டுகள் உள்ளன. அவை தமிழ்பிராமி வடிவங்களில் உள்ளன. அவற்றுள் சில கடந்த இரு வருடங்களுள் அடையாளம் காணப்பட்டன. அதனால் இலங்கை வரலாறு தொடர்பாக நான்காவது  வகையான ஆவணங்கள் இப்போது கிடைக்கின்றன. இவற்றைப் பரிசீலனை செய்வதன் மூலம் ஆதிகால  இலங்கை வரலாற்றிலும் இலங்கைத் தமிழரின்  உற்பத்தி பற்றிய சிந்தனைகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகிவிட்டது என்பது அவரது கூற்று. 

இக்கூற்று அவரது சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது போல எனக்குப்படுகிறது. 

கறாரான கல்வெட்டு ஆதரம்தேடும் அவர் வாய்மொழி  ஆதாரங்களையும் சரித்திர ஆதாரமாக இப்போது  எடுக்க ஆரம்பித்துள்ளார். இது மற்றோர்க்கு ஓர் முன்மாதிரி . 

மன்னரையும் உயர்சமயத்தையும் தேடும் அவர், இங்கு  மக்களையும் மக்கள் சமயத்தையும் முக்கியமாக உற்பத்தி முறையினையும் உழைக்கும் மக்களையும் கவனம் கொள்கிறார். 

அவரது சிந்தனை மாற்றம் அவர்மீது நமக்கு அதிக மரியாதையை ஏற்படுத்துகிறது. 

நாகருக்கு முன்னர் கிழக்கிலங்கையில் இருந்தோர்  யார்? 

நாகர் தமிழர் அல்ல என்பதும் அவர்கள் தமிழராகி பின்னர் தமிழ் மொழியினை தமது ஆட்சிமொழியாக்கி  அதில் கல்வெட்டுகளும் செய்தனர் என அறிகிறோம்.  அவர்களே கிழக்கிலங்கையில் இரும்புப்  பண்பாட்டையும் உழுதொழிலையும் அறிமுகம் செய்தனர் எனவும் அறிகிறோம். அவர்கள் நாக  வழிப்பாட்டினர் என்றும் நாக வழிபாட்டுடன் இங்கு  வந்த அவர்கள் பின்னர் சைவராயும் அதன் பின்னர்   பௌத்தராகவும் மாறினர் என்றும் பெரும் நாகரிகம் கண்டு வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம்.  

ஆரியர் வருகைக்குப் பின்னர்தான் இலங்கையில் நாகரிகம் புகுந்தது என்ற மரபுக்கதைக்கும் இதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு..  

ஆரியர் வருமுன் அதாவது விஜயன் வருகை முன் ஓர் வளர்ச்சியடைந்த பண்பாடு இலங்கையில் இருந்தமைக்கு பல சான்றுகள் இன்று கிடைக்கின்றன.  

அப்பண்பாட்டிற்குரியர் நாகர் என்பது மெல்ல வெளிச்சமாகின்றது. நாகரே வந்து குடி ஏறியவர்கள், அப்படியாயின் நாகர் பண்பாடு இலங்கைக்கு வருமுன் இங்கிருந்தோர்யாவர்? அவர்களின் பண்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. 

நாகருக்கு முன்னர் இருந்த இயக்கர் எனும் குழு பற்றியும் தகவல் கிடைக்கிறது. இயக்கரும் நாகரும் கலந்தனர் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. 

வரலாற்றில்  இனக்குழுமக்கலப்பு, பண்பாட்டுக்கலப்பு  என்பன ஏற்படுவது சகஜம், அக்காலத்தில் இலங்கையில் தமேட, பத, பரத, நாக, கபோஜ, பமனபுலிந்த என்ற இனக்குழுக்கள் வாழ்ந்ததாக  அறிகிறோம். இக்குழுக்களில் ஒரு குழுவே கிழக்கு மாகாணத்தில் இன்றும் தனியாகவும் ஏனைய இனக்குழுக்களுடன் கலந்தும் வாழும் வேடர் குலத்தின் மூதாதைக்குழு ஆகும். 

நாகருக்கு முந்திய கிழக்கு மாகாண வரலாறு 

நாகர் வருமுன் தமக்கான நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் வணக்க முறையுடனும் வாழ்க்கை முறையுடனும் இப்பூர்வீக குடிகள் வாழ்ந்திருக்கலாம், இன்று வேடர் எனவும் வேட வெள்ளாளர் எனவும் அழைக்கப்படும் அப்பூர்வீக குடிகளே கிழக்கிலங்கையின் ஆதிக்குடிகளாகும். 

இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லாதிருக்கலாம், ஆனால், இன்று வரை அப்பூர்வீக   குடிகள் மத்தியில் நின்று நிலவும் வழிபாட்டு முறைகளும் வழிபாடு தெய்வங்களும், வாய்மொழிக் கதைகளும் அவ்வின இருப்புக்குச் சான்று  பகருகின்றன. 

குமரர். மாநீலி, குடா நீலி, கிழ தெவுத்தன், முந்த,  முக்காட்டுத் தெய்வம், ஆலாத்தித்தெய்வம், வதனமார்   என்கின்ற தெய்வ வணக்கங்கள் இன்றும் கிழக்கிலங்கை பூர்வீக குடிகளிடையே  வணங்கப்படும் தெய்வங்களாகும், இவற்றிற்கான வழிபாட்டு முறைகளும் இந்து மத வழிபாடுகளிலிருந்து  முற்றிலும் வேறானவை. 

கிழக்கிலங்கையின் தெற்கே கதிர்காமக் கந்தசாமி  கோவில் தொடக்கம் திருக்கோவில் சித்திரவேலாயுத  சுவாமிக்கூடாக கொக்கட்டிச்சோலை   தாந்தோன்றீஸ்வரர், மண்டூர் கந்தசாமி கோவில் ஆகிய கோவில்களை ஊடறுத்து கிழக்கின்  மத்தியிலுள்ள அமிர்தகளி மாமாங்கப் பிள்ளையார்  கோவில், சிற்றாண்டிக் கந்தசாமி கோவில்என்று சென்று மட்டக்களப்பின் வடக்கே வெருகல்  சித்திரவேலாயுத சுவாமிகோவில் வரையுள்ள முருகன்  ஆலயங்களின் உரித்தாளர் இப்பூர்வ குடிகளான  வேடர்களே என்ற ஓர் கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 

கிழக்கிலங்கை வேடர் பற்றி சலிக்மான் கூறியுள்ளார்.  எனது மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் எனும்  ஆய்வு ஏட்டில் 1980களில் நான் கிழக்கிலங்கை  வேடரிடையே காணப்படும் வழிபாடு பற்றிக்  கொணர்ந்துளேன், சமூகவியலாளர்  யு.வி.தங்கராஜாவும் இதனை ஆராய்ந்துள்ளார்.  

இதனை மேலும் வளர்த்தெடுத்தவர்  எ.விஜயரட்ணம்(விஜய்) ஆவர். அவர் எழுதிய நூல்   மட்டக்களப்பு வரலாறு- பூர்வீக குடிகளும் குமாரதெய்வ வழிபாடும் ஆகும்.    

தங்கேஸ்வரி, வெல்லவூர்க்கோபால், ஈழத்துப்பூராடனார் போன்றோரும் இப்பூர்வீக குடிகள் பற்றித்தம் ஆய்வு நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

அண்மைக்காலமாக இளம் ஆய்வறிஞரான  கமலநாதன் பத்திநாதன் எழுதும் கிழக்கிலங்கையின்   பூர்வீக குடிகள் முக்கியமாக வேடர் பற்றிய பண்பாடு  சார்ந்த கட்டுரைகள் நமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றன. உள்ளிருந்து வரும் அவரது தேடலும்  விபரங்களும் மிக மிக முக்கியமானவையாக எனக்குப்படுகின்றன.  

அவர் ஓர் வரலாற்று ஆய்வாளரல்ல, ஆனால் சிறந்த பண்பாட்டு ஆய்வாளராகக் காட்சிதருகிறார். வேடர் எனும் பூர்வீககுடிகளின் இன்றைய வாழ்வு முறையை  அவர் கட்டுரைகளில் தரிசிக்கிறோம். 

இத்துறையில் பேராசிரியர் இன்பமோகனின்  அண்மைக்கால நூலும் முக்கியமான ஒரு நூலே.  அந்நூலின் பெயர் இலங்கையில் வேடர் வாழ்வியலும்  மாற்றங்களும் என்பதாகும். 

இவ்வெழுத்துகளை கணக்கில் எடுத்து நம் வரலாற்று  ஆய்வாளர்கள் முன்செல்வராயின் நாகருக்கும் முந்திய  கிழக்கிலங்கைப் பூர்வீக குடிகளிலிருந்து நாம் கிழக்கிலங்கையின் வரலாற்றை ஆரம்பிக்கமுடியும். கிழக்கிலங்கை வரலாறும் மேலும் வெளிச்சம் பெறும் 

வரலாற்றை எழுதுவோர் யார்? 

வரலாற்றை எழுதவேண்டியவர்கள் பல்கலைக்கழக வரலாற்று அறிஞர்களே என்ற பொதுக்கருத்துண்டு,  ஏனெனில் அவர்களே அங்கு அதனை முறையாகப்  பயில்கிறார்கள் படிப்பிக்கிறார்கள் என்பதால். 

இங்கோ இதனைச் செய்ய பல்கலைக்கழகம் முன்வராதபோது ஆர்வம்மிகுந்த மக்களே வரலாற்றுச்  சின்னங்கள்தேடி அலைவதையும் வரலாறு  உருவாக்க முனைவதையும் காணுகிறோம். இதில் டொக்டர்  மாரும் இணைந்தமை கவனிக்கப்படவேண்டிய  ஒன்றாகும். 

அறிஞர் செய்யாவிடின் மக்கள் செய்வர் என்பதே உண்மை.  

அவர்களின் வேகத்தையும் ஆர்வத்தையும்பு புரிந்துகொண்ட பேராசிரியர் அவர்களை நன்குவழிப்படுத்தி செயல்படுத்தி வெற்றியும்  கண்டுள்ளார் 

மக்களின் வரலாற்றார்வம் என்பது அண்மைக்காலப் போக்கு. ஆகும் இதில்நன்மையும் உண்டு தீமையும் உண்டு, அதனை விவாதிக்க இது சந்தர்ப்பம் அன்று. 

தளர்ந்துபோன உடல்நிலையிலும் முதுமை வயதிலும்  தானும் இயங்கி தன் மாணாக்கரையும் இயக்கும் பேராசிரியர் பத்மநாதனிடம் இன்றைய தலைமுறை  கற்பதற்கு நிறைய உண்டு. 

பேராதனைப் பலகலைக்கழகத்தில் 1960களில் வரலாறு பயின்றவன் நான்.    

அவரின் அசாத்திய உழைப்பை, அர்ப்பணிப்பை, ஆழ்ந்த வாசிப்பை நான் நன்கு அறிவேன்.  

அவரோடு தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக ஆசிரியனாக இருக்கும் வாய்ப்பையும் இயற்கை எனக்கு அளித்தது. 

2003 ஆண்டில் கிழக்கிலங்கையில் இந்து சமய மஹா நாடு ஒன்றை வைக்க இந்து சமய கலாசார அமைச்சு  விரும்பியபோது அதற்கு ஆலோசகராக இருந்த  பேராசிரியர் பத்மநாதன் சமயம் பற்றிய என் கருத்தியலை நன்கு அறிந்திருந்தும். அதன் முழுப்புறுப்பையும் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அளித்து அதற்குப் பொறுப்பாளராக  மௌனகுருவையே போடுங்கள் என ஆலோசனையும்  வழங்கினார். 

நான் மறுத்தபோது உரிமையோடு வற்புறுத்தினார், அன்பால் வென்றார்.  

அப்போது நான் நுண்கலைத்துறைத் தலைவராகவும்  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  தலைவராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 

நான் பொறுப்பெடுப்பின் இன்ன இன்ன செய்வேன் என அவருக்கு எடுத்துரைத்தேன். அதனோடு சிற்சில  மாறுபாடுகள் அவருக்கு இருப்பினும் அவற்றை ஏற்றுகொண்டவர் அவர். 

மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்து மதம் எனும் தலைப்பில் நாம் ஓர் பெரிய கண்காட்சியும் கருத்தரங்கும் வைத்தோம். மக்கள் பேராதரவு தந்தனர், சிறுதெய்வக் கோவிகளில் வைக்கப்படும் சிலம்பு, அம்மனை காய், வைரவன் பொல்லு, முகக்களை, தீபம், தூபம், சூலவேல், வாள், வில், அம்பு, கயிறு, நாகதீபங்கள் என அவர்கள் தந்த வழிப்பாட்டுப்பொருட்கள் மிக அதிகம்மாணவர் இரவு  பகல் ஒத்துழைத்தனர். 

அதில் வெளிவந்த நூல்தான் மட்டக்களப்பு தமிழகத்தில் இந்து மதம் எனும் நூல். 

அந்நூல் மட்டக்களப்பின் ஆகமம் சார் இந்து மதங்களையும் ஆகமம்சாரா மக்கள் மதங்களையும்  அறிமுகம் செய்யும் ஓர் நூல். 

கண்காட்சி இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்றன, ஆயிரக்கனக்கானோர் வந்து பார்வையிட்டனர். 

அந்நூலிற்கு விதையிட்டவர் அவர் என்பதே நான் இங்கு கூறவருவது. 

பேராதனை பல்கலைக்கழகப் வரலாற்று அறைக்குள்  பெரும்பெரும் புத்தகக் கட்டுகளுடன் மல்லுக்கட்டிகொண்டிருக்கும் அவரது அன்றைய இளம் தோற்றம் ஞாபகத்திற்கு வருகிறது,  

அவர் போல அன்று பலர் தத்தம் துறைகளில் உழைத்தனர். 

அவர்கள் யாவரும் எமது வழிகாட்டிகள். இந்நூல் பற்றிய எனது  விமர்சனக் குறிப்பை பின்னொருபோது  வரைவேன். 

இப்போதைக்கு  அவரை நான்  மனப்பூர்வமாக வணங்குகிறேன். 

அவர் வழிகாட்டலில்  பயணம் செய்து அனுபவம்பெற்ற  கட்டுரை  ஆசிரியர்களை வாழ்த்தி அவர்பணியை  அவர்கள் கையேற்றுத் தொடர வேண்டும்  என்றுகேட்டும் கொள்கிறேன்.