வங்குறோத்து நிலையை நோக்கி இலங்கை அரசு?

வங்குறோத்து நிலையை நோக்கி இலங்கை அரசு?

 — வி. சிவலிங்கம் — 

– வருமானம் குறைந்துள்ளது. 

– செலவு அதிகரித்துள்ளது. 

– கொரொனா தொற்று கட்டுப்பாடற்றுச் செல்கிறது. 

– அளவுக்கு அதிகமான நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. 

– வெளிநாட்டு நாணய சேமிப்பு பூச்சியத்தை எட்டுகிறது. 

– கட்டுப்பாட்டு விலை என்பது கேலியாகிறது. 

– வியாபாரிகளின் பதுக்கல் மக்களைப் பாதிக்கிறது. 

இலங்கையின் இன்றைய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் கைகளில் அதிகாரம் படிப்படியாக குவிக்கப்படுகிறது. நிதியமைச்சரின் கருத்துப்படி அரசின் வருமானம் 1500 பில்லியன் முதல் 1600 பில்லியன் ருபாய் வரை குறைந்துள்ளதாகவும், அரசாங்கம் தேவையற்ற விதத்தில் செலவினங்களை மேற்கொண்டுள்ளதுடன், விரயங்களும் அதிகரித்துள்ளதாகவும், ஊழலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவை யாவும் தமது அரச காலத்தில் மட்டுமல்ல மிக நீண்ட காலமாக பதவியிலிருந்த அரசுகள் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற செலவினங்கள் இன்று மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

அரசாங்கத்திற்கு அதிக அளவிலான வருமானம் வாகன இறக்குமதியால் கிடைத்ததாகவும், தற்போது வாகன இறக்குமதி தடுக்கப்பட்டுள்ளதால் அதற்கான வரி வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், பொருட்கள் மீதான வரி வருமானம் குறைந்துள்ளதாகவும் குறிப்பாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் போன்றனவற்றால் மக்களின் கொள்வனவு குறைந்ததால் பொருட்கள் மீதான வரி வருமானமும் குறைந்ததாக தெரிவித்துள்ளார். இதில் குடிவகை விற்பனை வருமானம் குறைந்ததால் அந்த வரி வருமானமும் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அரசின் நேரடி வரி விதிப்பு மூலமாக கிடைக்கும் தினசரி வருமானத்தில் சுமார் 75 – 80 சதவீத வருமானம் தற்போது குறைந்துள்ளதாகவும், நிலமை இவ்வாறிருக்கும் போது அரச கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதால் குறிப்பாக இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கிடைத்த ஒவ்வொரு ரூபாயிற்கும் 84 ரூபா சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் செலவிடுவதாக அமைச்சர் தெரிவித்தார்.  

எதிர்க்கட்சியில் இருந்த போது இதனை பேசவில்லை 

இன்றைய பொதுஜன பெரமுன ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது இந்த நெருக்கடிகள் குறித்து இவ்வளவு விபரமாக எதுவும் பேசியதில்லை. இலங்கையின் பிரதான கட்சிகள் மாறி மாறி பதவிக்கு வந்த வேளையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இவ்வளவு விபரமாக மக்களுக்குத் தெரிவித்தது இல்லை. தாம் பதவிக்கு வந்தால் பாலும், தேனும் ஓடும் என மக்களை மாறி மாறி ஏமாற்றி பதவிகளைக் கைப்பற்றினார்களே தவிர எதுவும் தெரிவித்தது இல்லை. தற்போது சகல கட்சிகளும் இணைந்து இந்தத் தேசிய நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்க வேண்டும் என நிதி அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் இந்தத் தேசிய நெருக்கடிக்கு எதிர்க் கட்சிகளிடமும் தெளிவான பதில் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலர் வேலைகளை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மறு பக்கத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு என்ற பெயரில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கென ஆரம்பித்த பல திட்டங்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.  

எதிர்காலச் சந்ததியின் நிலை?  

இன்று இலங்கை எதிர் நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனை என்பது மிகவும் பாரதூரமான விதத்தில் எதிர்காலச் சந்ததியினரைப் பாதிக்கப் போகிறது. அரசியல்வாதிகள் இவை பற்றி மிகவும் மௌனமாக உள்ளனர். பொருளாதார அறிஞர்களும் மௌனமாக உள்ளனர். ஏனெனில் நாட்டில் நிலமைகள் தனிநபர் பழிவாங்கல்களாக மாறும் ஆபத்துக் காணப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத்துறையிலுள்ள பல வைத்தியர்கள் நாட்டின் சுகாதார நிலை குறித்துப் பேச மறுக்கின்றனர். ஏனெனில் ராணுவ அதிகாரிகளே வைத்தியர்களை மேற்பார்வை செய்கின்றனர். அவர்களே சுகாதார நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். நாட்டில் நிலவும் கொரொனா நோயின் உண்மை விபரங்களை அரசு மறைத்துச் செல்கிறது. அத்தியாவசிய மருந்துகள் பல பதுக்கப்பட்டுள்ளன. சாமான்ய மக்கள் மருந்தில்லாமல் தேவையற்ற விதத்தில் மரணிக்கின்றனர்.  

பொருட்தட்டுப்பாடு 

தற்போது நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளன. உதாரணமாக, மாவு, பால் மாவு, பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய், தகரத்திலடைக்கப்பட்ட மீன் போன்றன கிடைப்பதில்லை. ஆனால் அமைச்சர் ஜி எல் பீரிஸ் இனது கருத்துப்படி தட்டுப்பாடு என்பது உண்மையானது அல்ல எனவும், சில விசமிகளான வர்த்தகர்கள் பதுக்கி வைத்திருப்பதால் ஏற்பட்டுள்ள செயற்கையான தட்டுப்பாடு எனவும் விளக்கம் தருகிறார். ஆனால் நிலமை வேறாக உள்ளது. இறக்குமதியாளர்களின் கருத்துப்படி தமது செலவில் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும், நாட்டில் பணவீக்கம் தினமும் அதிகரிப்பதால் தாம் விலையின் போக்கை அவதானித்து அதற்கேற்ற வகையில் விநியோகிக்க எண்ணுவதாகவும் விளக்கம் தருகின்றனர்.  

நாணய அச்சீடு 

மறு பக்கத்தில் அரசாங்கம் பெருந்தொகையான எண்ணிக்கையில் ரூபாய் தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. உதாரணமாக, கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய வங்கி 1.11 ரிறில்லியன் ரூபாய் வரை அச்சிட்டுள்ளது. இவ்வாறு அரசு உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க ருபாய் நோட்டுகளை அச்சடிக்க மறு பக்கத்தில் வெளிநாட்டுக் கொடுப்பனவுகளும் பணவீக்கம் காரணமாக அதிகரிக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு யூன் மாதம் முதல் இறக்குமதிப் பொருட்களுக்கு இலங்கை நாணயத்தில் செலுத்தும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அரசிடம் வெளிநாட்டு நாணய இருப்பு மிகவும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலர் தற்போது 230 ரூபாய்களுக்கு மேலுள்ளது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்களில் வங்கி விலையை விட அதிகமாக கிடைக்கிறது. இதனால் வங்கிகளுக்குப் போட்டியாக தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டு நாணய மாற்று சேவையை நடத்துகின்றன. இதனால் உண்மையான நிதி நிலமையை அரசினால் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

அரசின் நிதிக் கொள்கை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து பல பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கை செய்த போதிலும் அரசு செவிமடுப்பதாக இல்லை. உதாரணமாக, புதிய நாணயத் தாள்களை அதிகளவில் அச்சிடுவதால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதெனவும், கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தவும், பொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டு விலை அறிவிப்புகள் எதுவும் சாத்தியப்படவில்லை. ஏனெனில் கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் சந்தையில் கிடைப்பதில்லை. அமைச்சர் பீரிஸ் தனியார் வியாபாரிகளை குற்றம் சாட்டுகிறார். அவர்களே பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள் மேல் பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாகவும், ராணுவம் பயன்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஆசியாவிலேயே மிகப் பாரிய நெல் ஆலையை வைத்திருக்கிறார். அவரது நெல் களஞ்சியத்தில் பதுக்கி வைத்திருப்பதாக் கூறி சுமார் 100 லொறிகளுடன் ராணுவம் சென்றபோது அங்கு 25 லொறிகளுக்கான நெல் மட்டும் காணப்பட்டுள்ளது.  

அவசரநிலை 

அரசாங்கம் தற்போது அவசரகாலச் சட்ட விதிகளை முழு அளவில் பயன்படுத்துகிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அரசியல் யாப்பில் 20வது திருத்தம் என அதிகாரங்கள் குவிக்கப்பட்ட பின்னரும், ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். ஒரு புறத்தில் இறக்குமதியை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுப் பத்திரங்களை வழங்கிய பின்னர் பொருட்கள் இறங்கியதும் அவசரகால விதிகளின் அடிப்படையில் சுவீகாரம் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக இவ்வாறே 29,000 மெற்றிக் தொன் சீனி தனியார் களஞ்சியங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த அவசரகால விதிகளைப் பயன்படுத்தி பொருட்கள் மட்டுமல்ல, போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், களஞ்சியப்படுத்திய கட்டிடங்கள் என்பனவும் கையகப்படுத்தப்படுகின்றன.  

இங்கு பிரச்சனைக்குரிய அம்சம் எதுவெனில் நாட்டில் இன்னமும் திறந்த பொருளாதார செயற்பாடுகளே அமுலில் உள்ளன. ஆனால் கட்டுப்பாட்டு விலை பல பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது. இவை சுதந்திரமான சந்தைச் செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ளன. நாட்டின் பொருளாதாரச் செயற்பாடு கொள்கை, கோட்பாடு அற்று அரச ஆதரவாளர்களே பயன்பெறும் வகையில் அரச நிர்வாகமும் ராணுவமும் தொழிற்படுகின்றன. நாட்டின் இறக்குமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம், போக்குவரத்து என்பன போன்ற பிரதான துறைகள் அரச ஆதரவாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனை உறுதி செய்வதே ராணுவத்தின் கடமையாக உள்ளது.  

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிய நாணயத் தாள்களை அச்சிடுவது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,தற்போது நாணயத்தின் அடித்தளமே ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுப்பாடற்றுச் செல்கிறது. பணவீக்கம் என்பது பொருட்களின் விலைகளை மட்டுமல்ல, சொத்துகளின் விலைகளையும் பாதித்துள்ளது. சமீபத்தில் நுகர்வோர் அதிகாரசபை பொருட் பற்றாக்குறைகளை நீக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசாங்கம் அதில் தலையீடுகளை மேற்கொண்டது. அதாவது நுகர்வோரைப் பாதுகாப்பதில் அரசு தயக்கம் காட்டியது. ஏனெனில் வர்த்தகர்களைப் பாதுகாப்பதே அரசின் பிரதான தேவையாக இருந்தது.  

இது தொடர்பாக அமைச்சரும், முன்னாள் மத்தியவங்கி ஆளுநருமான நிவார்ட் கப்ரால் தெரிவிக்கையில் இப் பிரச்சனையில் அரசு ஒரு சமநிலையை பேணவேண்டி உள்ளதாக தெரிவித்திருந்தார். அரசாங்கம் புதிய நாணயத் தாள்களை வெளியிடுவதால் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தடுத்து நுகர்வோரைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். இங்கு ஒரு புறத்தில் விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தியபடி விவசாயிகளை உற்பத்தியை அதிகரிக்கும்படி எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று. விவசாயிகள் தமது உற்பத்திக்கு நியாயமான விலையை எவ்வாறு பெற முடியும்? அரசு அப் பொருட்களைத் தாமாகக் கொள்வனவு செய்யவும் தயாராக இல்லை. பல விவசாய உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்க முடியாத நிலையில் தெருவில் வீசப்பட்ட செய்திகளும் வெளிவந்தன.  

மக்களுடன் வெளிப்படையான உரையாடல் தேவை 

மேற்கூறப்பட்ட நிலமைகளை அவதானிக்கும்போது, இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. நாட்டில் அரசியல், பொருளாதாரம் போன்ற நெருக்கடிகளுடன் கொரொனா நோயின் நெருக்கடியும் அதிகரித்துள்ள நிலையில் இத் தேசிய நெருக்கடியைச் சமாளிக்க தேசிய அளவிலான விதத்தில் மக்களுடன் ஓர் திறந்த உரையாடலை நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறான அணுகுமுறையே சிக்கலான காலங்களில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. மக்களுடன் ஓர் புதிய ஒப்பந்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.  

அமெரிக்காவில் 1930களில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் தாக்கம் உலகம் முழுவதிலும் உணரப்பட்டது. அமெரிக்க வங்கிகள் பல திவாலாகின. நாட்டின் தொழிலாளர் சனத் தொகையில் 25 சதவீதமானோர் வேலையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தன. மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்தமையால் கொள்வனவு குறைந்தது. மக்களின் கொள்வனவு குறைந்ததால் பொருட்களின் விலை குறைந்தது. விலை குறைந்தமையால் உற்பத்தி குறைந்தது. சாதாரண மக்களின் வருமானம் குறைந்தமையால் பணக்காரர்களின் வருமானமும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. வாடகை, முதலீட்டுக்கான வெகுமதி வருமானம், லாபம் போன்றன குறைந்தன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பண்ணைகள், ஆலைகள், சுரங்கங்கள் கைவிடப்பட்டன. மக்கள் வறுமையால் அரசாங்கத்தை எதிர்பார்த்தனர்.  

இந்த வேளையில்தான் அமெரிக்க ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக பிராங்கிளின் டெலனா ருசவெல்ட் (Franklin Deleno Roosevelt) நியமிக்கப்பட்டார். அவர் தனது பிரச்சாரத்தின் போது அமெரிக்க மக்களிடம் ஓர் ஒப்பந்தம் ஒன்றிற்குச் சென்றார். தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். அவர் 1933ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.  

அவர் பதவி ஏற்றதும் தனது புதிய ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை தெளிவாக்கினார். அவை துரித மாற்றங்களைத் தருவதாகவும், சகல மக்கட் பிரிவினருக்கும் பலனளிப்பதாகவும், நவீன உத்திகளைப் பயன்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. அவரது திட்டங்கள் பாரிய அபிவிருத்தியை நோக்கியதாக அமைந்தன. உதாரணமாக, மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பொது மக்களுக்கான வீட்டு வசதிகள், சேரிப் புறங்களை அகற்றுதல், புதிய ரயில் பாதைகளை அமைத்தல் எனப் பல அமைந்தன.  

இதுவே இலங்கையிலும் புதிய மக்கள் ஒப்பந்தம் தேவையாகிறது. தேசிய இனப் பிரச்னையை ஒழித்தல், வறுமையை ஒழித்தல், கல்வியை வளர்த்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், சுகாதார வசதிகளை அதிகரித்தல் என பல அம்சங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் ஒன்றை நோக்கி விவாதங்கள் நகர்த்தப்பட வேண்டும். இதுவே தமிழ் அரசியல் தலைமைகளின் திட்டமாகவும் அமைதல் வேண்டும். நாடு தேசிய அளவிலான நெருக்கடியை எதிர் நோக்கியிருக்கையில் அமெரிக்க ஜனாதிபதி ருசவெல்ட் கூறியது போல புதிய ‘மக்கள் ஒப்பந்தத்தை நோக்கிய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.