— தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் —
(அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.)
பாகம் 3
தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?
அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.
தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?
அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.
தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித்தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?
அசோக்: அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும்தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.
தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…
அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்கக் கூடாது.
தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.
அசோக்: சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காகப்பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்கத் தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.
தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…
அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். இன்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.
தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை?
அசோக்: இல்லை
தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?
அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க. ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.
78ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.
என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.
தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?
அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.
தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?
அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்கொரு அத்தான் இருந்தார். இரா.பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜதுரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.
தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?
அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.
தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.
தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?
அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.
தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…
அசோக்: அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.
78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம், சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.
இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.
தேசம்: கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.
அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்கப்பட்டிருந்தது.
அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…
தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடனத்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.
தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?
அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?
அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.
தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.
தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?
அசோக்: ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.
தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.
அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.
எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.
இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.
தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்..
அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.
தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க
அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து சுயநிர்ணய உரிமை பற்றி, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.
தேசம்: கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.
அசோக் : ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.
தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?
அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.
தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…
அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம், விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.
தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?
அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.
தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?
அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது, ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது. பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.