— அழகு குணசீலன் —
ஹிஷாலினியின் மரணம் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இவை அவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதற்கப்பால் நோக்கப்படவேண்டியவை.
ஹிஷாலினியின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும், இந்தத் துன்பம் நிகழ்வதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது யார்? சமூகமா? பொருளாதாரமா? அரசியலா? அல்லது இவை அனைத்துமா?
இலங்கையின் இன்றைய சூழலில் அதிக கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள இந்த மரணம் வறிய குடும்பங்களின் வாழ்வியல் துயரங்களை காட்சிப்படுத்துகிறது. ஒருவேளைக் கஞ்சிக்காக ஊராவீட்டுக்கு வேலைக்குப்போய் உழைப்பை மட்டுமன்றி உடலையும் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம்.
இத்தனைக்கும் இவள் போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த வீடுகளில் எஜமானர்களின் அழுக்கை அகற்றச் சென்றவர்கள். அனேகமானவர்கள் மலையக மகளிர். இவர்களின் வேலைகள் என்ன? தலையாய வேலை “துப்பரவு” செய்தல். ஒரு வேளைக்கஞ்சிக்கு வேலைக்கு போய் வயிறுமுட்ட உண்டவர்களுக்கு கோப்பை கழுவுதல், ஒரு நாளைக்கு ஒன்பது தடவைகள் உடைமாற்றுகின்ற அவர்களின் அழுக்குத் துணியை தனக்கு மாற்றுவதற்கு வேறு ஆடையின்றி உள்ள நிலையிலும் துவைத்தல், உள்ளிட்ட கக்கூசு கழுவுதல் வரை இவர்கள் செய்கிறார்கள்.
இவர்கள் தங்குவதற்கோ எங்கோ ஒரு மூலையில் ஒரு குடில்..
ஹிஷாலினியின் அறை ஒரு இருட்டறை என்றும் 24 சதுர அடிகளைக் கொண்டதும், வசதிகள் அற்றது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இரவு 10:30 மணிக்கு அடைத்து காலை 05:30 மணிக்கு வேலைக்கு திறந்து விடப்பட்டதாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது. இடைப்பட்ட நேரத்தில் கழிப்பறைக்குகூட செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் ரிஷாட்டின் வீட்டுக்கு மட்டும் உரியதல்ல. தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற பேதமற்று, தென்இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதன்றி இலங்கை முழுவதும் உள்ள எஜமானர்களின் வீடுகளில் பெரும்பாலும் காணப்படும் நிலைதான் இது. மலையக தோட்டத்தில் உள்ள ஒரு முதலாளியின் வீட்டிலும், கொழும்பிலோ அல்லது அதற்கு வெளியேயோ இந்த நிலை இல்லை என்று கூறுவது சிரமம்.
இது இந்த சமூகத்தில் நிலவும் கொடுமை. சமூக ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடு. வசதிபடைத்தவர்கள் மட்டுமன்றி மத்திய தரவர்க்கத்தினர்கூட வீட்டு வேலைக்கு ஒருவரை வைத்துக் கொள்வது ஒரு “நாகரிகம்” ஆகிவிட்டது. இல்லை என்றால் சமூகத்தில் அவர்களுக்கான அந்தஸ்து குறைவு என்ற போலி கௌரவம். தனது ஊத்தையை இன்னொருவர் கழுவுகிறார் என்பதில் பெருமை. எங்களுக்கு ஒருவர் அல்ல இருவர் வேலைக்காரர் என்று தம்பட்டம் அடிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நிலைமைகளை அவதானிக்கும் போது ஹிஷாலியின் மரணம் சமூகத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி அரசியலில் பெரும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. “தவித்தமுயல் அடிக்கும்” அரசியல். இது அரசியலாக்கப்படாமல் இருப்பதே ஹிஷாலினிக்கு நீதி கிடைப்பதற்கான ஒரேவழி.
அரசியல் இந்த நிகழ்வை தவறாக, தனது இலாபத்திற்காக பயன்படுத்துவதை தடுப்பதாக ஒவ்வொரு முன்னெடுப்பும் அமைய வேண்டும். இதற்கு இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது.
(*) ஹிஷாலினியின் மரணம் தமிழ் -முஸ்லீம் இன, மத முரண்பாட்டின் பின்னணியில் அமைந்ததா? இல்லவே இல்லை!
(*) பேரினவாத அரசு திட்டமிட்டு இரு சிறுபான்மைச் சமூகங்களையும் பிரித்தாளும் தந்திரத்தில் மோதவிடுவதற்காக செய்யப்பட்ட சதியா இது? அப்படியும் இல்லை!
(*) ரிஷாட் குடும்பத்தினரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க திட்டமிட்ட மூன்றாவது தரப்பொன்றின் சூழ்ச்சியா? அதுவும் இல்லை!
(*) அரசாங்கத்தரப்பும், எதிர்தரப்பும் ஒருதரப்பை மறுதரப்பு “மாட்டிவிட” இதைச் செய்தார்கள் என்பதற்கு வாய்ப்புண்டா? இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை!
(*) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டை, தொடர்ந்தும் “மாமியார் வீட்டில்” தங்க வைக்கும் திட்டத்தின் பின்னணியில் இது நடந்திருக்கலாமா? இல்லை இருக்காது!
ஆக, வெளிச்சக்திகளின் எந்த பங்களிப்பும் இன்றி ரிஷாட் குடும்பத்தில் நடந்த இந்த மரணத்திற்கு அவர்களும் பொறுப்பு கூற வேண்டும். இது தற்கொலை என்றாலும் அதற்கான காரணம் என்ன? ஹிஷாலினி மட்டும் அதற்குப் பொறுப்பல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. கொலை என்றாலும் அவர்கள் பொறுப்பு. ஏனெனில் இது இயற்கை மரணம் அல்ல. அகாலமரணம். தீ விபத்து மரணம்.
சிறுவர் உரிமைப் பாதுகாப்பு பிரகடனமும் சட்டங்களும்.
ஐ.நா.வின் சிறுவர் உரிமைப் பிரகடனம், அடிப்படையில் நான்கு அம்சங்களைக் வலியுறுத்திக் கூறுகின்றது.
1. சமத்துவம்: பால், பிறந்த இடம், தாய்நாடு, மொழி, மதம், நிறம், உடல்ஊனம், அரசியல் பார்வை என்பனவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை சிறுவர் பிரகடனம் நிராகரிக்கிறது.
2. பிள்ளைகளின் மகிழ்ச்சி: வளர்ந்தோரால் பிள்ளைகள் தொடர்பாக எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் பிள்ளைகளின் நலனை, மகிழ்ச்சியை முன்னிறுத்தியதாக அமையவேண்டும் என்று கூறுகிறது.
3. பிள்ளை ஒன்று வாழ்வதற்கானதும், தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான உரிமையையும் கொண்டது என்றும், கல்வி, வைத்தியம், பாதுகாப்பு உரிமைகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்றும் வாதிடுகிறது.
4. கருத்துச்சுதந்திரம்: பிள்ளைகள் தொடர்பான முடிவுகளில் அவர்களுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். அவர்களின் கருத்துக் கேட்கப்படவேண்டும். பிள்ளைகள் தொடர்பான தீர்மானங்களில் அவர்கள் பங்காளர்களாக இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.
இந்த சிறுவர் உரிமைப் பிரகடனத்தின் அடிப்படைகள் ரிஷாட் பதியுதீன் வீட்டில் மாத்திரமல்ல இஷாலினியின் வீட்டிலும் மீறப்பட்டுள்ளன. இன்னொரு வகையில் எங்கு இடம்பெற்றாலும் இவை அனைத்தும் மனித உரிமை மீறல்கள்.
ஹிஷாலினியின் விடயத்தில் பாதுகாப்பு, கல்வி, வைத்தியம், என்பனவற்றுடன் சுயமாக தீர்மானம் எடுத்தல், மகிழ்ச்சி என்பன சட்டரீதியாக மீறப்பட்டுள்ளன என்றே கொள்ளவேண்டி உள்ளது.
# வன்முறையில் இருந்து அவளுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. வெறும் வீட்டு வன்முறையில் இருந்து மட்டுமன்றி பாலியல் வன்முறையில் இருந்தும் ரிஷாட் குடும்பம் தொழில் வழங்குனர் என்ற அடிப்படையில் அவளைப் பாதுகாக்கத் தவறியிருக்கிறது. அதேவேளை அவளது பெற்றோர் அல்லது தாய் 18 வயது வரை பெற்ற பிள்ளையை பாராமரிக்கின்ற பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார்.
இலங்கை சமூகங்களைப் பொறுத்தமட்டில் இந்த பெற்றோர் பொறுப்பு 18 வயதையும் தாண்டியது. பாரம்பரியமாக பிள்ளைகள் திருமணம் செய்யும்வரை பெற்றோர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் தனக்கு செய்யவேண்டியதை ஒரு பிள்ளை உழைப்பாளியாக ஹிஷாலினி தனது குடும்பத்திற்கு செய்துள்ளார்.
# இங்கு இலங்கையின் கட்டாயக்கல்விச்சட்டம் (16 வயதுவரை) மீறப்பட்டுள்ளது. உண்மையில் இது சட்டரீதியான குற்றமாகக் கொள்ள வேண்டியது. ஹிஷாலினிக்கான கல்வியை வழங்காது பெற்றோர் அவளை 12 வயதிலேயே வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு தரகரும், வேலை வழங்கியவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
ஹிஷாலினி ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை தாண்டி ஆறு நாட்கள் தான் கடந்து இருந்தாக கூறப்படுகிறது. அங்கு மற்றொரு இளைஞரும் வேலைக்கு இருந்துள்ளார். இரு இளவயதினரை வேலைக்கமர்த்திய ரிஷாட் குடும்பத்தினர் அவர்களை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்டார்களா? இது விடயத்தில் ரிஷாட் குடும்பத்தினரின் பொறுப்புக்கள் எவை?
கட்டாயக்கல்விக்கான வயது எல்லை16 ஆக இருந்தும் அது அலட்சியம் செய்யப்படுகிறது. வேலை செய்யும் வயது 14 ஆக இருப்பது வறிய பெற்றோர் பிள்ளைகளை தனியார் துறையில் வேலைக்கு அனுப்ப துண்டுகிறது. இந்த வறுமை சகல வசதியானவர்களும் மலிவான கூலியில் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்ள வசதியாக அமைந்து விடுகிறது.
# ஹிஷாலினி தொடர்ச்சியாக வீட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளாள் என்று கூறப்படுகிறது. முதலாவது சட்ட வைத்திய அறிக்கை பாலியல் வன்முறையை உறுதி செய்கிறது. இதனால் அவளது உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்புள்ளது. இந்த விடயங்களை, தும்புத்தடியால் அடித்தல், ஏசுதல் போன்ற வாய் வன்முறைகளை மேற்கொண்டதாக கூறப்படுவதை ரிஷாட் குடும்பம் அறியாமல் இருந்திருக்க முடியாது.
பாதிக்கப்பட்ட அவளுக்கு எந்த வைத்திய வசதிகளும் அளிக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. கிடைக்கின்ற தகவல்களின் படி அவளுக்கு உள, உடல் ரீதியான சிகிச்சை தேவைப்பட்டிருக்க வாய்ப்புண்டு. எரியுண்ட நிலையிலும் ஹிஷாலினி காலம் தாழ்த்தியே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இல்லையேல் 70 வீதத்திற்கு மேல் அவளது உடல் எரிந்திருக்க காரணம் இல்லை.
# எப்படி பார்த்தாலும் அந்த வீட்டில் அவள் மகிழ்சியாக இருக்கவில்லை என்பது அவளது உரையாடல்களில் இருந்து தெரியவருகிறது. அவளைப் பார்ப்பதற்கான உரிமை தொழில் வழங்குனர் குடும்பத்தினரால் பெற்றோருக்கு நான்கு தடவைகள் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது அவளை மனரீதியில் மேலும் பாதித்திருக்க முடியும்.
மறுபக்கத்தில் பெற்றார் அல்லது தாய் இது விடயத்தில் தனது கடமையை, பொறுப்பை சரியாகச் செய்யவில்லை. முடிந்த வரை மகளை பார்ப்பதற்கு அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். ஏனெனில் தாயின் கூற்றின்படி மகள் சந்தோஷமாக இல்லை என்பது தாய்க்கு தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும் ஹிஷாலினியை பாதுகாக்கின்ற வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார்.
சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின் படி அவர்கள் சார்ந்த விடயங்களில் அவர்களின் உடன்பாடு பெறப்படவேண்டும். இலங்கை போன்ற சமூகக் கட்டமைப்பில் பல பிரகடனங்களும், சட்டங்களும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன. இதை ஹிஷாலினியின் பெற்றார் மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்கள் செய்வதில்லை. பிள்ளைகள் கற்பதற்கு பதிலாக கட்டாயமாக கற்கவைக்கப்படுகின்ற சமூகத்தில் இந்த சேர்ந்து முடிவு எடுக்கும் பாதுகாப்பு பிள்ளைகளுக்கு கிடைக்கப் போவதில்லை.
சட்ட வைத்திய அறிக்கை கூறுவது போல் பாலியல் வன்முறை தொடர்ச்சியாக இடம்பெற்றிருப்பதாக இருந்தால், இது கட்டாயப்படுத்தி செய்யப்பட்டதா?அல்லது ஹிஷாலினியின் உடன்பாடும் இருந்ததா?
அவளின் உடன்பாடு சூழ்நிலையின் கைதியாக விருப்பமின்றி எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. இது விருப்பத்திற்குரிய கேள்வி இல்லைதான். எனினும் இதைத் தவிர்த்து கடந்த செல்வதும் விரும்பத்தக்கதல்ல. ஒரு இளைஞனையும், ஒரு யுவதியையும் ஒரே வீட்டில் வேலைக்காரராக்கும் போது அவர்களின் பாதுகாப்புக்கு ரிஷாட் குடும்பமே பொறுப்பு என்பதையும் இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
இலங்கையில் திருமண வயது 18ஆக இருக்கையில் ஒரு மைனர் யுவதி மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டதா?
ரிஷாட் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறையில் இருப்பதால் சம்பவம் நடந்த நாளில் அவர் வீட்டில் இல்லை.
ஆனாலும் நடந்த நிகழ்வுகளை அவதானிக்கும் போது இந்த வன்முறை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தீ மூட்டலில் முடிந்திருக்கிறது. இது ஒரு பழைய கதையும் தொடர்கதையும் கூட. எனவே இவை பற்றி ரிஷாட் அறியாமல் இருந்திருக்க நியாயமில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷாட் ஒரு அரசியல்வாதி, கட்சியின் தலைவர், ஒரு சமூகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை வகித்தவர். சட்டவாக்கம் செய்யும் பாராளுமன்றத்தில் ஒர் LAW MAKER. இதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பல விடயங்களை சட்டரீதியாக அறிந்திருந்தும் தவறுகள் இடம்பெற்றது எப்படி?
அரசியல் எதிரொலிகளும், ஆபத்தும்!
ஒரு புறத்தில் ஹிஷாலினியின் கொலையை கட்சி அரசியல் இலாபத்திற்காக முதலிடுவதற்கு கட்சிகள் முயற்சிப்பது தெரியவருகிறது. மறுபக்கத்தில் தமிழ், முஸ்லீம் சமூகத்தில் இருந்து சாமானனியர்களால் இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பால் பார்க்கப்படுவது பெரும் ஆறுதலைத்தருகிறது.
பாராளுமன்றத்தில் விமல் வீரவன்சவும்,முஜிபுர் ரகுமானும் ஆற்றிய ஏட்டிக்கு போட்டியான உரைகள் ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி தேடுவதைத்தவிர்த்து இரு வேறு கோணங்களில் பயணிக்கின்றன.
இது விடயத்தில் எதிர்கட்சிகளின் குறிப்பாக சஜீத்பிரேமதாசா கூட்டணியின் மௌனம் மர்மமானதுதான். எனினும் மற்றைய கட்சிகளும், உறுப்பினர்களும் எழுப்பும் குரலும் அரசியலாக்கப்பட கூடாது.
மனோ கணேசன் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள முன்வைத்துள்ளார். பொலிஸ் விசாரணைக்குழுவில் இருந்து பொரளை பொறுப்பதிகாரியை நீக்குவது, புதைக்கப்பட்ட ஹிஷாலினியின் உடலைத் தோண்டி எடுத்து மீள் வைத்தியப் பரிசோதனைக்கு உடபடுத்துவது உட்பட பல தற்கரீதியான கேள்விகளையும், சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருக்கிறார்.
ஹிஷாலினியின் தாய் முஸ்லீம் வைத்தியர் குறித்து எழுப்பி இருக்கும் சந்தேகம் சரியானதா? வெறுமனே முஸ்லீம் வைத்தியர் என்ற காரணத்திற்காக அவர் கூறும் காரணம் முற்றிலும் இன, மத வாதம் சார்ந்தது. இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தவும், அரசியல்வாதிகள் பயன்பெறவுமே இது உதவும். ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க இந்த வாதம் உதவாது.
அவரின் இந்த கருத்துக்கு பின்னால் அரசியல் மறைகரம் இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறமுடியாது. வைத்திய பரிசோதனையில் திருப்தியில்லை, சந்தேகம் இருக்கிறது என்பதும் டாக்டர் ஒரு முஸ்லீம் என்பதும் ஒன்றல்ல. இலங்கையின் அனைத்து இனங்களையும் சேர்ந்த வைத்தியர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து கடமையைச் செய்து கொண்டிருக்கின்ற காலம் இது.
மலையகத்தில் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் ஹிஷாலினியின் கொலை எதிரொலிக்கிறது. வடக்கு, கிழக்கில் மக்களும், அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கவனயீர்ப்பு போராட்டங்களையும், கண்டனங்களையும் செய்துள்ளனர். இந்தக் குரல்கள் எந்தளவிற்கு அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டும், அதற்கு அதன் பதில் என்னவாக இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
எல்லோரும் கேட்பது ஒன்றாகவே உள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும். ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். இது விடயத்தில் முஸ்லீம் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளின் குரல்களும் நீதிகோரியே உரத்து ஒலிக்கின்றன. சிலர் விலக்காக இருக்கலாம், அந்த விலக்கு இருதரப்பிலும் உண்டு.
இந்த இருதரப்பு சேறு பூசுதல்களால் ஹிஷாலினியை இருதரப்பும் சேர்ந்து இன்னும் ஒரு முறை கொல்லா திருப்பது நல்லது.
உண்மையில் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அல்லது பாராளுமன்றம் அல்லது கட்சிகள் இவ்வாறான சூழ்நிலைகளில் எவ்வாறான முடிவுகளை எடுக்க முடியும் என்பதற்கு பல வாய்ப்புகள் உண்டு. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது நடக்காமலும் இல்லை.
*. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக இராஜினாமாச் செய்து அரசியல் கனவான் பண்பை நிலைநாட்டல்.
*. பாராளுமன்றம் இந்த நிகழ்வு பாராளுமன்றத்திற்கும், ஜனநாயக அரசியலுக்கும் ஏற்படுத்தியுள்ள அவப்பெயரை போக்க நம்பிக்கையில்லாப்பிரேரணை ஒன்றை பிரதிநிதி மீது கொண்டுவரல்.
*. சம்மந்தப்பட்ட கட்சி இதன் மூலம் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்க,மக்களின் நம்பிக்கையை பெற கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தற்காலிகமாக விலக்கி வைத்தல்.
*. கூட்டணிக் கட்சியாயின் கூட்டணியில் இருந்து குறிப்பிட்ட கட்சியை தற்காலிகமாக நீக்கல்.
இவை அனைத்தும் ஹிஷாலினியின் மரணவிசாரணைகள் எந்த அரசியல் தலையீடுகள் இன்றி நடைபெறவும்,பாராளுமன்ற நற்பெயரையும், ஜனநாயகத்தையும் மதிப்பளித்தும் செய்யக்கூடியவை. ஆனால் இலங்கை போன்ற நீதி, நிர்வாகம் அரசியலில் இருந்து பிரித்து நோக்கப்படாத ஒரு நாட்டில் இவை சாத்தியமா?
குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்வரை ஒருவர் வெறும் சந்தேக நபரே, முதலில் குற்றம் நிரூபிக்கப்படவேண்டும் என்ற வாதம் இங்கு முன்வைக்கப்படலாம். ஹிஷாலினியின் மரணத்தில் ரிஷாட்க்கு நேரடியாக எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. இங்கு காலக்கண்ணாடி காட்சிப்படுத்துவது ஜனநாயக அரசியலில் இருக்கக்கூடிய வாய்ப்புக்களையும், இந்த வாய்ப்புக்களின் ஊடாக பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும், அது இழந்துள்ள மக்கள் நம்பிக்கையையும், அரசியல் நீதியின் பெயரால் எப்படி மீளக் கட்டி எழுப்ப முடியும் என்பதுதான்.
இஷாலினி விட்டுச் சென்ற தடம்! தந்த பாடம் …!!
(+). சமூகத்தின் மனநிலையிலும், சிந்தனையிலும் பாரிய மாற்றம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வேலைக்கு பெண்கள் அமர்தப்படுவது உலகில் ஒன்றும் புதுமை அல்ல.. ஆனால் அவர்களின் உரிமைகள் கவனத்தில் கொள்ளப்படுவதும், மனிதாபிமான நடைமுறைகளும் இங்கு வேண்டப்படுகிறது.
(+) வீட்டு பணியாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். சட்டத்தை மீறுபவர்கள், கள்ளத்தனமாக வேலைவழங்குவோர், முகவர்கள், பெற்றோர், மூத்த சகோதர்கள், உறவினர்கள் போன்றவர்களைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் தேவை.
(+) இலங்கையின் கட்டாயக் கல்விச்சட்டம் 16 வயதை நிர்ணயித்துள்ள நிலையில், வேலைக்கமர்த்தும் வயது 14 ஆக உள்ளது. இந்த வயதெல்லை உயர்த்தப்படவேண்டும். இதனமூலம் பிள்ளைகள் கட்டாயக்கல்விக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். திருமணமாகாத பெண்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை தடைசெய்யவும் முடியும், வயதெல்லையை அதிகரிக்கவும் முடியும்.
(+) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்று, உள்நாட்டு வீட்டு பணியாட்கள் பணியகம் ஒன்று நிறுவப்பட்டு பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டு வேலை அனுமதிப்பத்திரம் வழங்கப்படலாம். இதை இரு தரப்பு வேலை ஒப்பந்தத்தன் மூலம் செய்யமுடியும். பணியாளர்கள், வேலைவழங்குவோர், சம்பள விபரம், விடுமுறை, உறவினர்களை சந்திப்பதற்கான உரிமை, தங்குமிடவசதி, உணவு, செய்யவேண்டிய வேலைப்பட்டியல், வேலைநேரம், வைத்திய வசதி போன்ற விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் சட்டரீதியாக உள்வாங்கப்படவேண்டும்.
உண்மையில் சட்டரீதியான இந்த வீட்டுப்பணியானது சமூகத்தில் சட்டரீதியாகவே ஒரு ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுப்பதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இலங்கை போன்ற வேலையின்மை மலிந்து கிடக்கின்றதும், கல்வியைத் தொடரமுடியாத வறிய குடும்பச்சூழ்நிலையும், உள்ள சமூகத்தில் பிள்ளைகள் வருமானம் தேடிப் புறப்படுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை நம்பி வாழ்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சரியான, தூரநோக்கிலான வழிமுறைகள் அரசியலிலும் மட்டுமல்ல சமூகத்திடமும் இன்னும் இல்லை.
தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது மலையக இளம் தலைமுறையிடையே பெரும் கவர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. ஆரம்பக்கல்வியை மட்டும் அரைகுறையாக பூர்த்தி செய்த யுவதிகளைப் பொறுத்தமட்டில் நகரங்களில் அவர்களுக்கு கிடைப்பது வீட்டு வேலையாகவே உள்ளது. நகர வாழ்க்கைக்காக ஏங்கும் இவர்கள் எந்த கஷ்டங்களையும் தாங்கவும், உரிமைகள் பற்றிய கவலைகள் இன்றியும் உள்ளனர். இதற்கு தோட்டத்தில் நிலவும் குறைந்த சம்பளம், வீட்டுவசதியின்மை, கவர்ச்சியற்ற தொழில் என்பன காரணமாக அமைகின்றன.
1980இல் சுமார் 5 இலட்சமாக இருந்த தோட்டங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. சாராசரியாக ஒவ்வொரு 10 வருடங்களிவும் சுமார் ஒரு இலட்சத்தால் குறைவடைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2010 இல் இது சுமார் வெறும் இரண்டு இலட்சமாக மட்டுமே இருந்துள்ளது. தோட்டங்களை விட்டு வெளியேறி மற்றைய சமூகங்களைப்போன்று வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது நல்ல விடயமே. எனினும் இவர்களில் அதிகமானோர் கடைகளிலும், வீடுகளிலும், நகரக்கூலிகளாகவுமே வேலை செய்கின்றனர் என்பதும் கசப்பான உண்மைமையாகும்.
மலையக அரசியல்வாதிகள் ஹிஷாலினி போன்றவர்கள் மரணிக்கும் வரை காத்திருந்து அதை அரசியலாக்காமல் அந்த சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும்,விழிப்பூட்டவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல் பாராளுமன்ற உரைகள் அனைத்தும் பத்தோடு பதினொன்றாக இன்னும் பல ஹிஷாலினிகள் பலிகொடுக்கப்படுவதை/ பலி எடுக்கப்படுவதை தடுப்பதாக அமையாது.
தத்துவார்த்த அரசியல் கோட்பாடுகளுக்கூடாக இந்த வர்க்க வேறுபாட்டை எம்மால் பார்க்கமுடியும். அதன் அடிப்படையிலான தீர்வுகளையும் முன்மொழியவும் முடியும். ஆனால் அவை இலங்கை போன்ற ஒருநாட்டில் எந்தளவுக்கு நடைமுறை ஜதார்த்தம் கொண்டவை? இருக்கின்ற ஒரேயொரு ஜதார்த்த நடைமுறை, அணுகுமுறை சட்டரீதியான பாதுகாப்புக்களை ஏற்படுத்துவதாகவும், சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவுமே உள்ளது.
இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலில், ஒரு சட்டரீதியான பாதுகாப்பையே ஹிஷாலினியின் பெயரால் நாம் தேடமுடியும். ஹிஷாலினி விட்டுச் சென்ற தடம் தொடராமல் தடுப்பதுதான் இப்போதைக்குள்ள ஒரே வழி. இது ஒரு குறுக்கு வழி மட்டுமே.
இந்த குறுக்கு வழி பல ஹிஷாலினிகளை பாதுகாக்க முடியும் என்றால் அதுவே சமூகமும், அரசியலும் ஹிஷாலினிக்கு செய்யும் அஞ்சலியாகும்.
ஹிஷாலினி விட்டுச் சென்ற தடம்,கற்றுத்தந்த பாடம் இரண்டையும் இதயத்தில் ஏந்துவோமாக ….!