இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் (சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 27))

இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 27))

 — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —   

‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

மதிமயங்கிய தலைமையும் 

மட்டக்களப்பின் நிலைமையும் 

“தமிழரசுக் கட்சித் தலைவராகவும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் (TULF) செயலாளர் நாயகமாகவும் இருந்த அ.அமிர்தலிங்கம் அவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்து கிடந்த திட்டம் ஒன்றின் காரணமாக, காசி ஆனந்தன் அவர்களை பட்டிருப்பிற்கோ அல்லது பொத்துவிலுக்கோ விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கள் எதற்கும் அவர் காது கொடுக்கவுமில்லை, கவனத்தில் எடுக்கவுமில்லை.” என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். 

மட்டக்களப்புத் தொகுதியில் 1956ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்கள், 1956ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தல்களிலும், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுவில் அங்கம் வகித்தவராவார். 

ஆனால், தந்தை செல்வா அவர்களது மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற 1977ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனக் குழுவில் அவர் இடம்பெறவில்லை. சி.மூ.இராசமாணிக்கம் அவர்களது மறைவைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சித் தலைவரானவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக மு.சிவசிதம்பரம் அவர்கள் இருந்தாலும், அவர் பெயரளவிலான தலைவராகவே இருந்தார். செயல் தலைவராக அ.அமிர்தலிங்கம் அவர்களே செல்வாக்குச் செலுத்தினார். அதனால் அமிர்தலிங்கம் அவர்களே திட்டமிட்டு இராசதுரை அவர்களை ஓரங்கட்டினார் என்பது பரவலாகப் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது. வேட்பாளர் நியமனக் குழுவில் அவரை இடம்பெறாமல் ஆக்கியதைவிட, அவரை மிகவும் அவமானப்படுத்திய விடயம், வேட்பாளர் தெரிவுக்குழுவின் முன்னிலையில், நேர்முகப் பரீட்சைக்கு அவரும் சமுகம் அளிக்கவேண்டும் என்று தேவைப்படுத்தப்பட்டமைதான்.  

இந்த இடத்தில் மட்டக்களப்பின் அதற்கு முன்னரான அரசியல் நிலைவரம் பற்றியும், திரு.செ.இராசதுரை அவர்களது அரசியல் பின்னணி பற்றியும் சற்று நோக்குவது பொருத்தமானது. 

1956ஆம் ஆண்டுவரை, ஜீ,ஜீ,பொன்னம்பலம் அவர்களது தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சியோ, அல்லது அதிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வீ.செல்வநாயகம் அவர்கள் தோற்றுவித்த தமிழரசுக்கட்சியோ கிழக்கு மாகாணத்தில் கால் ஊன்ற முடியவில்லை. எவ்வளவோ பிரயத்தனங்களை எடுத்தும் அந்தக் கட்சிகளில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. இன்றைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏனைய தொகுதிகளிலும் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு யாரும் முன்வரவில்லை. செல்வமும், செல்வாக்கும் உள்ள பலர் அரசியலில் இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும், தமிழ்காங்கிரஸ் கட்சியிலோ தமிழரசுக் கட்சியிலோ சேர்வதற்கு விரும்பவுமில்லை, முன்வரவுமில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலின் உச்சத்தில் இருந்த ஆர்.பி.கதிராமர், என்.நல்லையா, சோ.உ.எதிர்மன்னசிங்கம், பி.எம்.மாணிக்கவாசகம் முதலிய யாருமே தமிழ்காங்கிரசிலோ, தமிழரசுக்கட்சியிலோ சேர்ந்து இயங்க முன்வரவில்லை. சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள், 1947ஆம் ஆண்டு நடபெற்ற பொதுத்தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்டதிலிருந்து அரசியலுக்கு வந்தவர். அந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்த தேர்தலில், 1952ஆம் ஆண்டு வெற்றிபெற்றுப் பாராளுமன்ற உறுப்பினரானார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட்டிருந்தார். 

பட்டிருப்புத் தொகுதியில் ஒருவர்பின் ஒருவராகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களோ அல்லது சோ.உ.எதிர்மன்ன சிங்கம் அவர்களோ தமிழரசுக் கட்சியில் போட்டியிட முன்வரவில்லை. 

சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்கள், தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்த காலத்தில் இருந்து அதனால் ஈர்க்கப்பட்டு அந்தக் கட்சிக்காகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் திருகோணமலைத் தொகுதியில்தான் தமிழரசுக்கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 

இராஜவரோதயம் அவர்கள் வெற்றிபெற்றுப் பாராளுமன்ற உறுப்பினரானார். 

அவரது வெற்றிக்கு திரு.செ.இராசதுரை அவர்களின் பங்கு மிக முக்கியமாக இருந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் கொள்கைகளையும், அந்தக் கட்சியைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டிய இன்றியமையாத தேவைப்பாடுகளையும் 25 வயது இளைஞனாக இருந்த, இராசதுரை அவர்கள் தமது பேச்சுத்திறனால் செய்த பரப்புரைகள் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி வேரூன்றக் காரணமாயிற்றென்றால் அது மிகையில்லை. 

1956ஆம் ஆண்டுத் தேர்தலில்தான் முதன்முதலில், மட்டக்களப்பில் செ.இராஜதுரை, கல்குடாவில் பீ.மாணிக்கவாசகம், பட்டிருப்பில் சீ.மூ.இராசமாணிக்கம், கல்முனையில் எம்.எஸ்.காரியப்பர், பொத்துவில் தொகுதியில் எம்.எம்.முஸ்தஃபா, ஆகியோர் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில், பட்டிருப்பில், சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் 106 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். கல்குடாவில் மாணிக்கவாசகம் அவர்கள் மூன்றாவதாக வந்து தோல்விகண்டார். மற்றெல்லோரும் வெற்றி பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். 

திருகோணமலைத் தொகுதியில், ஆர்.என்.இராஜவிரோதயம் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுத் தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். 

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உட்புக முடியாதிருந்த தமிழரசுக்கட்சியைப் பல்வேறு எதிர்ப்புக்களுக்கும், இடர்பாடுகளுக்கும், மத்தியில், வேரூன்ற வைத்து, வளர்த்தெடுத்தவர் செ.இராசதுரை அவர்கள்.  

அதனால்தான் பட்டம், பதவி, பணம் முதலிய எந்தப் பின்னணிகளும் இல்லாத செ.இராசதுரை அவர்களை மட்டக்களப்புத் தொகுதியில் 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் வேட்பாளராக, தந்தை செல்வா அவர்கள் நியமித்தார். அந்தத்தேர்தலில் தனது 29 ஆவது வயதில் வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் சென்ற இராசதுரை அவர்கள் (1989ஆம் ஆண்டுவரை 33 வருடங்கள்) தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.   

இத்தகைய அரசியல் பின்னணியைக்கொண்ட திரு.செ.இராசதுரை அவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். நேர்முகத்தேர்வின்போது, வேட்பாளர் நியமனக்குழுவினர், கடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து வெற்றிபெற்று, மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் அவரை, மட்டக்களப்பை விட்டு வேறு தொகுதிக்குச் செல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். 

நேர்முகத் தேர்வினை நடத்திய குழுவில், அ.அமிர்தலிங்கம் அவர்களும் மு.சிவசிதம்பரம் அவர்களும் இருந்தார்கள். சிவசிதம்பரம் அவர்கள் அடிப்படையில் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1972ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி, செல்வா, பொன்னா, தொண்டா ஆகிய முப்பெரும் தலைவர்கள் கூட்டுச் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை உருவாக்கும் வரையில் தமிழரசுக்கட்சிக்கு எதிர்தரப்பில் இயங்கியவரே சிவசிதம்பரம் அவர்கள். அதனால் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு மேலோங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில், சிவசிதம்பரம் அவர்களைவிடத் தமிழரசுக்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களே தன்னிகரற்ற அதிகாரம் கொண்டவராக இருந்தார் என்பது வெளிப்படையானது. 

இல: 100 நொறிஸ் கனால் வீதி, கொழும்பு 8 என்ற முகவரியில் அமைந்திருந்த சிவசிதம்பரம் அவர்களின் வீட்டிலேயே அந்த நேர்முகத் தேர்வு நடைபெற்றது.  

நேர்முகத் தேர்வு முற்றுப்பெறுவதற்கு முன்னரே, மட்டக்களப்பில் காசி ஆனந்தன் அவர்கள், செ.இராசதுரை அவர்கள் ஆகிய இருவரையுமே வேட்பாளர்களாக நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் பரவத்தொடங்கியது. அப்போது கொழும்பில் தங்கி இருந்த யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அங்கு சென்றோம். மட்டக்களப்பு நிலைவரம் பற்றிப் பேசமுயன்றபோது அங்கிருந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள், உள்ளேயிருந்து வெளியே வந்தார். மட்டக்களப்பிற்கு இருவரை நியமிக்கக்கூடாது என்றும், காசி ஆனந்தன் அவர்களைப் பட்டிருப்பிற்கு அல்லது பொத்துவிலுக்கு நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். 

“மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி என்றும் அங்கு இருவரை நியமிக்கலாம் என்றும் அமிர்தலிங்கம் அவர்கள் எங்களுக்குப் பாலபாடம் எடுத்தார்.” இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பது இரண்டு சமூகத்தவர் வசிப்பதால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ஒழுங்கு என்றும் அப்படியானால் கூட்டணியின் சார்பில் ஒரு முஸ்லிமைத்தான் நியமிக்க வேண்டுமேயொழிய இரண்டு தமிழர்களையல்ல என்றும் நாங்கள் வாதிட்டோம். அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கடுமையான தொனியில் பேசினார்.  

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தனது பொறுப்பில், தமிழகத்திற்கு அனுப்பி, அவரைப் படிக்க வைத்து ஒரு பட்டதாரியாக்கியவர் செ.இராசதுரை அவர்களே என்பதைச் சொல்லின் செல்வரும் உணர்ச்சிக் கவிஞரும் என்ற சிறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள, கவிஞர் அவர்களே தன் கைப்பட எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்றிலிருந்து அறியமுடிகிறது. அதில் பின்வருமாறு உள்ளது. 

“…சூழல் என்னைப் பாழாக்கிவைத்த நேரத்தில் அண்ணன் என்னை ஆளாக்கி வைத்தவன். காலம் என்னைத் தாக்கிவிட்டபோது அண்ணன் என்னைத் தூக்கி விட்டவன்.  நான் நினையாதபோது அண்ணன் துணையாக வந்தவன். சாக்கடையில் பிறந்த என்னைப் பூக்கடைக்குக் கொண்டுவந்தவன் அண்ணன். தெருவில் நடந்த என்னை அண்ணன் தேரில் ஏற்றி வைத்தான். பட்டம் எடுத்த பத்திரத்தை உங்கள் கையிலே தந்துவிட்டுப் பழையபடியே வாழ்வேன். எக்காரணமும் இன்றி என்னுடைய உயர்வை நீங்கள் விரும்பினீர்கள்…….  உங்களை நான் எப்படி வாழ்க்கையில் மறக்கமுடியும்?  

உங்களால் தூண்டிவிடப்பட்ட கவித்திறன் இல்லையென்றால் இதுவரை நான் இறந்து தொலைத்திருப்பேன். உங்களால் வழிகண்டு, உங்களால் வாழ்வுகண்டு, உங்களால் வளர்ச்சி கண்டு காலத்தின் ஒரு பகுதியைக் கழித்துவிட்டவன்தான்  நான். …அண்ணன், நாளை நான் நல்ல நிலைபெற்றாலுமுங்கள் காலைச் சுற்றித்தான் என் காலம் சுழலும்….

பாசம் என்ற ஒன்றை நான் மறந்து பல நாட்களாகின்றன. ஆனால், பக்தி என்ற ஒன்றை அண்ணன் என்ற ஒருவரிடமிருந்து நான் என்றும் எடுப்பதற்கில்லை.  

அந்த இறைவனோடு நான் கடைசிவரை இரண்டறக் கலந்தவன். “…..என்னைப் பொறுத்தவரையில் உங்கள் காசியிலும் ஆசியிலுந்தான் நான் வாழ்கிறேன்” 

இப்படி சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்களோடு உறவுகொண்டாடியவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.  

அவர் சிறையிலிருந்து விடுதலைபெற்று வெளிவந்தபோது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒரு வரவேற்பளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் திரு.செ.இராசதுரை அவர்கள் தன் கண்களில் நீர் சுரக்கப் பின்வருமாறு பேசியதாக மேற்குறிப்பிட்ட நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

“அயோத்தி மாநகரின் வீதிவழையாக வெற்றித்திருமகனாக வரும் இராமனை மாளிகையின் உப்பரிகையினின்று பார்த்து மகிழும் தசரதனாக இருக்கிறேன். உன்னைத் தம்பி என்றழைக்கவா, தலைவன் என்றழைக்கவா?”  

இப்படியெல்லாம் தந்தை – மகனாகவும், குரு – சிஷ்யனாகவும், அண்ணன் – தம்பியாகவும் இருந்த சொல்லின் செல்வரையும், உணர்ச்சிக்கவிஞரையும் மோதவிட்டு, பிரித்து ஆளவும், தாங்கள் வாழவும் சூது செய்தவர்களால் 1977ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு போராட்டக் களமாகியது. 

(நினைவுகள் தொடரும்)