சொல்லத் துணிந்தேன்-28

சொல்லத் துணிந்தேன்-28

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

05-08-2020 அன்று இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருணா அம்மானுக்கெதிராக முன்வைத்த ‘தன் சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏன் கருணா அம்மான் அம்பாறைக்கு வரவேண்டும்’. ‘கருணா அம்மான் துரோகி’ என்கின்ற இரு பிரதான குற்றச்சாட்டுக்களையும் புறந்தள்ளி அவருக்கு அம்பாறை மாவட்டத் தமிழர்களால் 29 379 வாக்குகள் அளிக்கப்பட்டன.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விழுந்த 26,255 வாக்குகளை விட இது 4124 வாக்குகள் அதிகமானதாகும். இந்தப் பின்புலத்தில் அம்பாறை மாவட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பகிரங்கப் படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.  

கருணா அம்மானை வெல்ல விடக்கூடாது என்பதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு முழு முஸ்லிம் உலகமுமே குறியாக இருந்தது. அந்த அளவுக்குக் கருணா அம்மான் ஒரு முஸ்லிம் விரோதியாக முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அவர்களின் சார்பு ஊடகங்களினாலும் சித்தரிக்கப்பட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்களைக் கண்டும் காணாமலும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமலும் அது நடந்து கொள்ளும். கருணா அம்மான் வென்று வந்தால் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர முடியாது என்கின்ற எடுகோள்தான் அதற்கு காரணம்.  

தேர்தல் தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே அம்பாறை மாவட்டத் தமிழர்களிடையே கருணா அம்மானுக்கு ஆதரவான அலை எதிர்பார்த்ததற்கும் மேலாகவே எழுந்து அவரது வெற்றி சந்தேகத்திற்கிடமின்றி நிச்சயிக்கப்பட்டதொன்றாயிற்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர்களில் சிலர் தாங்கள் தோல்வி அடையப் போவதாக தங்கள் நெருங்கிய சகாக்கள் சிலரிடம் வாய்விட்டுக் கூறியுமிருந்தார்கள். சில வேட்பாளர்கள் தாங்கள் வெற்றியடையப் போவதில்லை என்பதை முன்கூட்டியே ஊகித்துக் கொண்டு பிரசாரத்தைக் கைவிட்டு உறங்குநிலைக்குக் கூட சென்றிருந்தார்கள்.  

இந்த இடத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாய்கிழியப் பேசும் போலித் தமிழ்த் தேசியமும் அவர்களது பச்சைத் துரோகமும் வெளிப்பட்டன. தாங்கள் தோற்பது உறுதி எனத் தெரிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கருணா அம்மானையும் வெல்ல விடக்கூடாது எனச் செயற்படத் தொடங்கினர். ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்’ எனும் மனநிலைக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தள்ளப்பட்டனர். கருணா அம்மானைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம் தரப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் புலி ஆதரவுத் தரப்பினர் என முத்தரப்பினரும் திரைமறைவில் கைகோர்த்தனர். பலகோடி ரூபாய்கள் கொடுக்கல் வாங்கல்கள் கை மாறின எனத் தகவல்கள் கசிந்தன. தேர்தலின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் இதனை நிரூபிப்பதாகவே அமைந்தன. தமிழர்களுடைய வாக்குகளைப் பிரித்து அம்பாறை மாவட்டத் தமிழர்களின் ஒரே ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்து விட்டு அதற்கான பழியைக் கருணா அம்மான் மீதும் அவரைத் தலைமை வேட்பாளராக நிறுத்திய அகில இலங்கை தமிழர் மகாசபை மீதும் போடலாம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டமாக இருந்தது.  

ஆனால் அதுவும் அவர்களால் முடியவில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடக் கப்பல் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகள் 4124 அதிகமாக அமைந்துவிட்டது.  

அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோனமைக்கான முழுப்பொறுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியது. இதனை மூடி மறைப்பதற்கும் சரிந்து போயுள்ள தனது வாக்கு வங்கியை மீள நிமிர்த்துவதற்காகவுமே தமக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளதே தவிர அம்மாவட்டத் தமிழர்கள் மீதான ஆத்மார்த்த அக்கறையினால் அல்ல.  

அது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் ஒரு மனதாக எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்தவருமாகிய திரு.கி துரைராஜசிங்கம் எடுத்த தற்றுணிவான முடிவு. கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்காலத்திலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றாக நிராகரிப்பதுதான் தங்கள் இருப்பைத் தக்க வைப்பதற்கான அரசியல் மார்க்கமாகும்.