சொல்லத் துணிந்தேன்– 49

சொல்லத் துணிந்தேன்– 49

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்திலும் ஐ.நா தீர்மான விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரில் எடுத்துரைப்பார் என்று என்னுடனான சந்திப்பின் நிறைவில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவால் வாக்குறுதியளித்தார். இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா வழங்கும் பங்களிப்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது”

              — இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார், என இணையவழித் தமிழ் ஊடகமொன்று (01.12.2020) தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்திக்கு  ‘இந்தியாவின் பங்களிப்பில் சம்பந்தன் முழு நம்பிக்கை. அஜித் டோவாலுடனான சந்திப்பின் பின்னர் அவரே தெரிவிப்பு’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. 

அண்மையில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவால், 29.11.2020 அன்று மாலை இலங்கையை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்திற்கு அழைத்து, மூடிய அறைக்குள் சுமார் 30 நிமிடங்கள் சத்தம் சந்தடியின்றி நடத்திய இந்தப் பேச்சுத் தொடர்பில் சம்பந்தன் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததாக இவ் ஊடகச்செய்தி கூறுகிறது. 

இச்செய்தி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. இரா. சம்பந்தன் மீதும் இதைச் செய்தியாக வெளியிட்டுப் பகிரங்கப்படுத்திய ஊடகத்தின் மீதும் எனக்கு ஆத்திரம் வந்தது. 

இராஜதந்திர நகர்வுகளை எவ்வாறு கையாள்வது என்ற தொழில்சார் நுட்பம் தெரியாமல் மூத்த அரசியல்வாதியான அனுபவமிக்க இரா. சம்பந்தன் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்று ஒருபக்கம் வேதனையாகவும் இருந்தது. 

எனது ஆத்திரத்திற்கும் வேதனைக்கும் காரணம் இதுதான். தமிழர் தரப்பு அரசியல், தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம் வரை கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக “மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய” மடமைத்தனமான அரசியலாகவே இருக்கின்றது. 

தம்மை விளம்பரப்படுத்துவதற்கான — தமக்குப் புகழ் சேர்ப்பதற்கான — தமிழ் மக்களை மீட்க வந்த மேய்ப்பர்கள் போல் போலியான தமது பிம்பங்களைக் கட்டியெழுப்புவதற்கான — தமிழர்களுக்குக் ‘கனவுகளைக்’ காட்டி நம்பவைத்துத் தேர்தல்களில் வாக்குச் சேகரிப்பதற்கான ஒரு சமாச்சாரமாகத்தான் இவ்வாறான இராஜதந்திர சந்திப்புகளை அநேகமான தமிழ் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்களே தவிர, இவ்வாறான சந்திப்புகளைத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை வென்றெடுப்பதற்கு அறிவுபூர்வமாகப் பயன்படுத்தியதே இல்லை. 

இராஜதந்திரம் என்பது ‘நீருக்கடியில் நெருப்பைக் கொண்டு போவது’ போன்றது. அந்த வித்தை அநேகமான தமிழ் அரசியல் தலைவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் தமிழர்களின் தலைவிதி. 

தமிழர்களின் அரசியல் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம். 

தேர்தல்கள் திணைக்களத்தில் ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப் பெற்ற இக்கட்சி, வெளியில் ‘சமஷ்டிக் கட்சி’ என்றும் அது ஆங்கிலத்தில் ‘FEDERAL PARTY’ என்றும் அழைக்கப்பட்டுச் சிங்கள மக்கள் மத்தியிலே இவ்வாறுதான் அறியப்பட்டது. தமிழர்களிடையே தமிழரசுக் கட்சி என அறியவும் பேசவும்பட்டது. ‘தமிழரசு’ என்ற பதம் தமிழர்களின் காதுகளில் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் அது ஒரு தனியான அரசு என்ற தவறான சமிக்ஞையையே தென்னிலங்கைக்கு வழங்கியது. 

‘தமிழரசு’ இன் தலை நகரமாகத் திருகோணமலையைக் கற்பிதம் செய்து கொண்டு, தமிழரசுக் கட்சியின் முக்கிய தீர்மானங்கள் யாவும் திருகோணமலையில் வைத்துப் பிரகடனம் செய்யப்பட்டமையும் தமிழரசுக் கட்சியின் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் திருகோணமலையைக் குவி மையமாகக் கொண்டு விளங்கியமையும் (உ+ம் : தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மற்றும் திருமலை யாத்திரை) தென்னிலங்கைக்குத் தவறான தகவல்களையே வெளிப்படுத்தி,   திருகோணமலையைத் தாங்கள் முந்திக் கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைச் சிங்கள ஆட்சித் தலைவர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஊட்டிற்று. 

மேலும் ‘சமஸ்டி’ என்பது பிரிவினையல்ல என்று வெளியிலே விளக்கம் கொடுத்துக் கொண்டு தமிழரசுக்கட்சி 1961 இலே வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தழுவியதாக நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தின் போது யாழ் குடா நாட்டிற்குள் தனியான தபால் சேவையையும், காணிக் கச்சேரிகளையும் நடத்தியமையும் கூட வரலாற்றில் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குச் ‘சமஸ்டி’ பற்றித் தவறான செய்திகளையே வழங்கிற்று. 

இந்த விடயங்களையெல்லாம் சுயவிமர்சன நோக்கில் இப்போது திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 

உறங்கு நிலையிலிருந்த ‘பௌத்த-சிங்களப் பேரினவாத’ எதிரியை விழித்தெழச் செய்த அரசியலைத்தான் தமிழர் தரப்பு அரசியல் இதுவரை செய்து வந்திருக்கிறது. கால தேச வர்த்தமானம் அறிந்து தென்னிலங்கை, பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப தமிழர்தம் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே இராஜதந்திரம். 

அரசியலில் எடுத்தேன்; கவிழ்த்தேன்   என்று இயங்க முடியாது. 

எதிரி ஏனோ தானோ என்று இருக்கும் போதுதான் எதிரியை வெல்வதோ அன்றி வீழ்த்துவதோ எளிதானது. உறங்கு நிலையிலிருக்கும் எதிரியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உசுப்பி, எழுப்பி எச்சரித்து உசார் நிலையை ஏற்படுத்திவிட்டு வெல்வதென்பது கடினமானது. தந்திரோபாய நகர்வுகள் எதுவுமே தமிழர் தரப்பு அரசியலில் இதுவரை இருந்ததில்லை. எப்பொழுதும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகவேதான் அது காணப்படுகிறது. 

இராஜதந்திரம் என்பது விரித்துக் கூறும் விடயமுமல்ல. அது விவேகத்துடனும் செயற்பாட்டுடனும் வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தொடர்புடையது. 

கடந்த எழுபது வருடகால தமிழர் தரப்பின் உரிமைப் போராட்ட அரசியல் “சாண் ஏறி முழம் சறுக்கிய” கதையாகிப் போனமைக்கான பிரதான காரணங்களுள் “மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய” விளம்பர அரசியலும் ஒன்றாகும் 

எனவே, ‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசும்’ விளம்பர அரசியலைத் தமிழர் தரப்பு இனிமேலாவது கைவிட வேண்டும். விவேகம் துணைக்கு வராவிட்டால் வீரம் விலை போகாது.