இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5

இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5

— மல்லியப்புசந்தி திலகர் —

 நிறைவேற்றுத்துறை ( ஜனாதிபதி – அமைச்சரவை – பகிரங்க சேவை)

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைகளைக் கோரும் அறிவித்தலில் ‘உ’ வில் கோரப்படுவது, “நிறைவேற்றுத்துறை (ஜனாதிபதி – அமைச்சரவை – பொதுச் சேவை)” என்பதாக உள்ளது.

சட்டவாக்கத்துறை (Parliament) மேற்கொள்ளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான் நிறைவேற்றுத் துறையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்துக்கு புறம்பாக அதேபோல மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, தான் எடுக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். இப்போதைக்கு மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அவ்வாறே மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் “இரண்டரை ஆண்டுகளில் கலைத்து விடலாம்” எனும் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் ஊடாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இத்தகைய ஜனாதிபதி முறைமை மேலைத்தேய அரசியல் கலாச்சாரங்களுக்குப் பொருந்தினாலும்  கீழைத்தேய அரசியல் கலாசாரங்களுக்குப் பொருந்திப் போவதாக தெரியவில்லை. ஆனாலும் இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை” முற்றாக இல்லாமல் ஆக்கிவிடும் யோசனை ஒன்றை அரசியலமைப்பு முன்மொழிவுகளில் முன்வைப்பதன் மூலம் அடைந்துவிடலாம் என்பது சந்தேகமே. அப்படி மாற்ற முடியுமெனில் புதிய அரசியலமைப்பு உருவாக்க யோசனை கோரலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பதாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களைக் அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் எனும் யோசனை பெருமளவில் எடுபட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்ற யதார்த்த நிலையில் ஒரே ஒரு யோசனையை மாத்திரம் இது குறித்து முன்வைத்துவிட்டு அமைச்சரவை-பொதுசேவை தொடர்பான பகுதிக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.

அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் முறைமையாயினும் மாற்றி அமைக்க யோசனை கோரலாம். பொதுத்தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் வேறு வேறாக நடத்தாமல் ஒரே தேர்தலில் தெரிவு செய்வது. இப்போது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றக்கூடிய அணி எது என்பதை தீர்மானிக்கும் முன்னோட்டமாக ‘ஜனாதிபதி தேர்தல்’ அமைந்து விடுகிறது. எந்தக் கட்சியில் அல்லது அணியில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகிறாரோ அந்த அணிசார்ந்த நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. மக்கள் மன நிலையும்கூட அவ்வாறான ஒரு உளவியல் பக்கம் திருப்பப்படுகிறது. இது சட்டவாக்கத்துறை மீது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்தே மறைமுகமாக அதிகாரம் செலுத்தும் நிலைமையைத் தோற்றுவிக்கிறது. ‘எனது தயவிலேயே நீங்கள் வெற்றி கொள்ளப் போகிறீர்கள்’ என்ற இறுமாப்புடன் அந்த செல்நெறி தீர்மானிக்கப்படுகிறது. அதன் பின்னர் அதே ஜனாதிபதி அமைச்சரவைத் தலைவராகவும் இருப்பதனால் அத்தகைய அமைச்சர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை இணங்கிச் செல்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் எடுக்கும் தீர்மானங்களே சட்ட வரைபாகி நாடாளுமன்றத்துற்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. சுருங்கச் சொன்னால் தனி ஒருவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நாடாளுமன்றம் வழிநடாத்தப்படுகின்ற ஒரு சர்வாதிகாரத்தை இது ஏற்படுத்துகிறது. 


எனவே நாடாளுமன்ற தேர்தலையும் பதவிக் காலத்தையும் ஒரேயடியாக அமைவதுபோல ஒரு யோசனையை பரிந்துரைக்கலாம். பொதுத்தேர்தல் அறிவிப்பின்போதே அந்தந்த கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் சின்னத்துக்கும் அளிக்கும் வாக்குகள் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குகளாகக் கணக்கில் எடுக்கப்பட்டு தேசிய ரீதியாக எந்தக் கட்சி அதிகளவான வாக்குகள் பெறுகிறதோ அந்தக் கட்சியில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகவே (அதிகார எல்லைகளை தனித்து ஆராயலாம்) இருக்கலாம். ஆனால், நாடாளுமன்ற பதவிக்காலமும் ஜனாதிபதி பதவிக்காலமும் ஒன்றாகவே அமையும்.

இதன் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இல்லாமல் ஆக்கப்படும். அதே நேரம் ஜனாதிபதி தேர்தலினால் தீர்மானிக்கப்படும் நாடாளுமன்ற செல்நெறி மாற்றமடையும். ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய சிறுபான்மை சமூகங்கள் அடையும் தடுமாற்றமும் தவிர்க்கப்படும். (யுத்தம் முடிவடைந்து 6 மாத கால முடிவில் அந்த யுத்தத்தை நடாத்திய படைத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அமோகமாக ஆதரவளிக்க வேண்டிய அவல நிலை வடக்குத் தமிழருக்கு வந்தமை மனங்கொள்ளத்தக்கது)

இந்த யோசனை மூலம் நிறைவேற்றுத்துறை – சட்டவாக்கத்துறைக்கு இடையே இப்போது நிலவும் ஏற்றத்தாழ்வு தவிர்க்கப்பட்டு check and balances சரி செய்யப்பட வாய்ப்பு உண்டு.

அமைச்சரவை என்றுவரும்போது அதற்கு ஜனாதிபதியே தலைமை வகித்தாலும் நாடாளுமன்றத்தோடு ஒரு பிணைப்பு ஏற்படும். அமைச்சரவையின் எண்ணிக்கை நிச்சயமாக வரையறுக்கப்படுவதுடன் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் மாற்றப்பட முடியாத தன்மைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படுதல் வேண்டும். (உதாரணம் : வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபை கொண்டு வந்ததுபோல) இதன் மூலம் அமைச்சு குறித்த விடயதானத்துக்கு பொறுப்பாக இருந்து அதனை முழுமையாக நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். ஒரு துறைசார் அமைச்சுப் பொறுப்பினை கையாளும்போது அதன் கீழ் வரக்கூடிய திணைக்களம்/ ஆணைக்குழு/ கூட்டுத்தாபனம் ஒன்று வேறு அமைச்சிடத்தில் அல்லது ஜனாதிபதி இடத்தில் அமைவது எந்த விதத்திலும் மக்களுக்கு சேவை வழங்க ஏற்புடையதாகாது.

இப்போதைய பொது நிர்வாக கட்டமைப்பை சுருக்கமாக விபரிப்பதன் மூலம் இதில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது தொடர்பில் யோசிக்கலாம்.

இன்றைய நிலையில் பொது நிர்வாகம் தொடர்பில் நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் இணைந்த அமைச்சரவை தீர்மானங்களால் அமுலுக்கு வருகிறது. அமைச்சுக்கு கீழ்வரும் திணைக்களங்களும் பொதுக்கூட்டுத்தாபனங்களும் நடைமுறைப்படுத்தும் முகவரங்கங்களாக உள்ளன.

இதில் நிதி திட்டமிடல் அமைச்சு ‘தலைமை அமைச்சு’ தோற்றத்தைக் கொண்டுள்ளது. அவற்றில் ஏனைய துறைசார் (Line) அமைச்சுகள் நிதிக்காகத் தங்கி இருக்கின்றன. வரவு செலவுத்திட்டத்தில் துறைசார் அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சுடன் கடுமையான பிரயத்தனங்களை துறைசார் அமைச்சரும் செயலாளரும் செய்யவேண்டி இருக்கும்.

நிதிக்காக இவ்வாறு நிதி அமைச்சிடம் தங்கி இருக்கும்போது நிர்வாக முறைமைக்காக பொது நிர்வாக அமைச்சிடம் தங்கி இருக்கின்றன. அமைச்சின், அதன் கீழ்வரும் திணைக்களங்களின் கூட்டுத்தாபனங்களின் அரச ஊழியர்களை தீர்மானிப்பது இந்த அமைச்சே (இந்த அமைச்சு மாகாண சபைகள், உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி அமைச்சு இணைந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது இல்லை. இதனை இவ்வாறு அமைக்க அரசியலமைப்பில் கோரலாம். ஏனெனில் பொதுநிர்வாகத்துடன் இந்த துறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை)

பொது நிர்வாக அமைச்சின் நேரடி கண்காணிப்பில் அரச அதிபரும் (மாவட்ட செயலாளரும்) அவரின் கீழ் உதவி அரச அதிபரும் (பிரதேச செயலாளர்களும்) அவரின் கீழ் கிராம சேவை உத்தியோகத்தர்கள் (கிராம அதிகாரிகள்) என்பதே ஒழுங்கு. அதாவது, மாகாண சபை முறைமை இருக்கத்தக்கதாக கிராம அதிகாரி நாடாளுமன்றம் / நிறைவேற்றதிகார ஜனாதிபதி எனும் நேரடி நிர்வாக முறைமையிலேயே அடித்தட்டு அலுவலராக வருகிறார் என்பது கவனிக்கப்படுதல் வேண்டும்.

மறுபுறமாக ஜனாதிபதியின் நேரடி அதிகாரங்களுடன் மாகாண ஆளுநர்களும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளும் இன்னுமொரு நிர்வாக முறைமையக் கொண்டுள்ளன. அதன் கீழ் முதலமைச்சர்,  அமைச்சர்கள் சபை (இங்கே cabinet ministers அல்ல board of ministers என்பது கவனிக்கத்தக்கது), அதன் கீழ் பிரதான மாகாண செயலாளர் (Chief Secretary ) மாகாண அமைச்சு, மாகாணத்திணைக்களங்கள், அதற்கான மாவட்ட மட்ட மாகாண அலுவலகங்கள், பிரதேச செயலக மட்ட மாகாண அலுவலகங்கள், என்பவற்றோடு உள்ளூராட்சி அதிகார சபைகளை (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை) நிர்வகிக்கும் ஒரு நிலையே காணப்படுகிறது.

இந்த மத்திய – மாகாண ‘அரசியல்’ அதிகார பகிர்வு சிக்கலின் வெளிப்பாடுகளை ‘நிர்வாக’ அதிகார பகிர்வின் ஊடாகவே கண்கூடாக காணலாம்.

இவ்வாறு குழப்பகரமான பொது நிர்வாக முறைமையை எவ்வாறு அரசியல் நிர்வாக (தொகுதி நிர்ணயம் ஊடாக இணைத்துப் போகும் வகையில் பார்க்கலாம்) என்பதை அடுத்த பாகத்தில் ஆராயலாம்.