~ வில்லியம் கிறிஸ்டோ/ தி கார்டியன்
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்தப் பிரதேசம் ஹூதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, ஹுசைன் தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஓரளவு பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தெற்கே துறைமுக நகரமான ஏடனுக்குச் சென்று குடியேறினார்.
சவூதி அரேபியாவின் ஆதரவுபெற்ற யேமன் அரசாங்கம் ஏடனைத் தனது தற்காலிகத் தலைநகராகக் கொண்டிருந்தது. அந்த நகருக்கும் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடைப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் பிரதேசத்தில் பலமான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், இன்று மீண்டும் தனது வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய வேதனையான முடிவை எடுப்பது குறித்து ஹுசைன் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த செப்டெம்பரில் ஈரானின் ஆதரவுபெற்ற ஹூதிகள், யேமன் அரசாங்கப் படைகளைத் தோற்கடித்துப் பெரும் முன்னேற்றம் கண்டனர். தற்போது அவர்களின் கவனம் ஏடன் நகரை நோக்கித் திரும்பியுள்ளது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைச் சுற்றிவளைக்கும் வகையில் ஹூதிகள் தமது படைகளைக் குவித்து வருகின்றனர்.
“சனாவில் இருந்த எனது வீட்டைவிட்டுத் தப்பி இங்கு வந்தேன். ஹூதிகள் உடனடியாக ஏடனைக் கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் மேலும் நெருங்கினால் மரிப் அல்லது ஹத்ரமவுத் பகுதிகளுக்கு மீண்டும் தப்பிச் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று புனைபெயரில் பேசிய ஹுசைன் தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியரான ஹுசைன், முன்னர் இஸ்லாஹ் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். சவூதி அரேபியாவுடன் இணக்கமான நிலைப்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அரசியல் கட்சியான இஸ்லாஹ், ஹூதி இயக்கத்தை எதிர்த்து வருகின்றது.
ஹூதிகள் ஏடனைக் கைப்பற்றினால், தனது முன்னாள் அரசியல் தொடர்புகள் காரணமாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடுமென அவர் அஞ்சுகிறார்.
“ஹூதிகளுக்குச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒரேயொரு குரலை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமான குரலாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.
அச்சத்தில் ஏடன் மக்கள்:
ஹூதிகளின் முன்னேற்றத்தைப் பதற்றத்துடன் அவதானித்துவரும் பல குடியிருப்பாளர்களிலும் அமைப்புகளிலும் ஹுசைனும் ஒருவர்.
ஹூதிப் படையினர் இன்னமும் ஏடனிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர். எனினும், கடந்த செப்டெம்பரில் அரசாங்கப் படைகளும் அவற்றின் கூட்டணிக் குழுக்களும் வேகமாகத் தோல்வியடைந்ததைப் பார்த்த மக்கள், ஹூதிகளின் மற்றுமொரு தாக்குதலை அரசாங்கப் படைகளால் எதிர்கொள்ள முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
2015 ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவின் ஆதரவுபெற்ற யேமன் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைமையிடமாக ஏடன் விளங்கி வருகின்றது.
ஹூதிகள் இந்த நகரத்தைக் கைப்பற்றினால், அது யேமன் அரசாங்கத்துக்குப் பாரிய பின்னடைவாக அமையும். அத்துடன், பல ஆண்டுகளாக ஹூதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் அது மிகப்பெரிய தோல்வியாக அமையும்.
12 ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப் போரின் நிலைமை ஹூதிகளுக்குச் சாதகமாகத் திரும்பும். நீண்டகாலமாக ஹூதி இயக்கத்துக்கு இராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கிவரும் ஈரானுக்கும் இது பெரும் அனுகூலமாக அமையும்.
ஏடன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்பதற்காக யேமன் அரசாங்கம் தனது படைகளை மீள அழைத்துள்ளது. தென்மேற்குக் கரையோரப் பகுதிகளிலிருந்த படையினர் ஏடன் நகரின் பாதுகாப்புக்காக மீள நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது.
ஹூதிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக சவூதி அரேபியா மீண்டும் தீவிரமான வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் முதல் யேமனில் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களில் 181 சிறுவர்கள் உட்பட 822 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் எனச் சுயாதீன அமைப்பான ‘யேமன் தரவுத் திட்டம்’ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை முதல் சவூதி அரேபியா 5,500 வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹூதி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏடன் முற்றுகையிடப்படுமா?
ஏடனைக் கைப்பற்றும் நோக்கம் குறித்து ஹூதிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ஏடனுக்கான முக்கிய தரைவழிப் போக்குவரத்துத் தொடர்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் அவர்கள் படைகளைக் குவித்து வருகின்றனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இடர் மதிப்பீட்டு ஆலோசனை அமைப்பான ‘பாஷா ரிப்போர்ட்’ நிறுவனத்தின் ஸ்தாபகர் மொஹமட் அல் பாஷா கூறுகையில்,
“ஹூதிகளின் படைக்குவிப்பு, ஏடனின் கிழக்குப் பகுதி வீதித் தொடர்புகளுக்கும் சவூதி அரேபியாவிலிருந்து நகருக்கான விநியோகப் பாதைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
ஏடனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தளவுக்குப் பலமானவை என்பதை ஹூதிகள் சோதித்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. அரசாங்கப் படைகளின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தால், அவர்கள் நகரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கலாம். அரசாங்கப் படைகள் தாக்குப்பிடித்தால், நகரத்தை முற்றுகையிட முயற்சிக்கலாம்” என்றார்.
ஏடன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது ஹூதிப் படைகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. இதனால் பல ஆண்டுகளாக நகரத்தில் நிலவிய ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு நிலை சீர்குலைந்துள்ளது.
குண்டுவெடிப்புச் சத்தங்கள் தம்மை நெருங்கிவருவதை மக்கள் அச்சத்துடன் அவதானிக்கின்றனர். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்களும் அதிகளவில் ஏடனுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
“கடந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு மணித்தியாலமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நான் வேலையில் மும்முரமாக இருந்தால், செய்திகளைப் பார்த்து எனக்குத் தகவல் தெரிவிக்குமாறு எனது மகளிடம் கூறுகிறேன்” என்று ராமி என்ற புனைபெயரில் பேசிய ஏடன் நகரவாசி ஒருவர் தெரிவித்தார்.
53 வயதான அவர், 2015 ஆம் ஆண்டு ஏடனில் நான்கு மாதங்களாக நடைபெற்ற போரின்போது ஹூதிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிக்கொண்ட கசப்பான அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
ஏடனிலுள்ள ஏனைய மக்களைப் போலவே, ஹூதிகள் எப்போது நகருக்கு வருவார்கள் அல்லது வருவார்களா என்பது குறித்து அவரும் கணித்துக் கொண்டிருக்கிறார்.
வெளியேறத் தயாராகும் சர்வதேச அமைப்புகள்:
ஹூதிகள் ஏடனைக் கைப்பற்றும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகளைச் சர்வதேச அமைப்புகளும் திட்டமிட்டு வருகின்றன.
“இந்த வாரம் அனைத்து ஊழியர்களுக்கும் பணிநீக்க அறிவித்தல்கள் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகம் எமக்குத் தெரிவித்துள்ளது. ஹூதிகள் ஏடனை வந்தடையாவிட்டால் பணிகள் தொடரும்; எமது ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். இல்லையெனில், இத்துடன் எமது பணிகள் முடிவுக்கு வந்துவிடும்” என்று சர்வதேச அரச சார்பற்ற அமைப்பொன்றின் நிவாரணப் பணியாளர் தெரிவித்தார்.
ஹூதிகளின் பெரும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து தாயிஸ் நகரத்தில் ஏற்கெனவே பல அரச சார்பற்ற அமைப்புகள் தமது பணிகளை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஹூதிகள் ஏடனைக் கைப்பற்றினால் அனைத்து அரச சார்பற்ற அமைப்புகளும் வெளியேறிவிடும் என்பதில்லை. எனினும், நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாகவும், 2025 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹூதிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளதன் காரணமாகவும் சில அமைப்புகளால் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்ற முடியாதுள்ளது.
பட்டினியில் 1 கோடியே 87 இலட்சம் மக்கள்:
யேமன் பல ஆண்டுகளாக மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. சுமார் ஒரு கோடியே 87 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியான மோதல்களால் போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மக்களின் இடப்பெயர்வு நெருக்கடியும் மேலும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாத்திரம் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
“நான் நாளாந்தக் கூலிக்குப் பணியாற்றுகிறேன். வேலை இல்லாத நாட்களில் எனது குடும்பத்திலுள்ள ஆறு பேருக்கும் போதுமான உணவு கிடைப்பதில்லை” என்று உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஐம்பது வயதுகளிலுள்ள அஹமட் தெரிவித்தார்.
“அரசியல் குறித்தோ போர்கள் குறித்தோ எனக்கு அக்கறையில்லை. அவற்றில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகப் போராடும் மில்லியன் கணக்கான யேமன் மக்களில் நானும் ஒருவன்.”
ஏடனிலுள்ள பல குடியிருப்பாளர்களுக்கு, ஹூதிகள் நகரத்தைக் கைப்பற்றக்கூடும் என்ற அச்சம், அரசாங்கத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்த நகரத்தை நாடிவந்தபோது அவர்கள் பெற்றிருந்த பாதுகாப்பு உணர்வை முற்றாகச் சிதைத்துள்ளது.
“நான் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவில்லை. ஏனெனில், போர் ஏடனை வந்தடையும் வரை நான் இங்கு காத்திருக்கப்போவதில்லை. நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும் எந்த நேரத்திலும் தப்பிச் செல்லத் தயாராக இருக்கின்றனர்.
வீட்டில் தங்கியிருப்பது பாதுகாப்பானதல்ல. நாங்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளக்கூடும்” என்று ராமி தெரிவித்தார்.
