பிரிட்டனால் கட்டாயமாக எஸ்வாத்தினியில் மீள்குடியமர்த்தப்பட்ட இலங்கை அகதி சில மாதங்களில் உயிரிழப்பு!

பிரிட்டனால் கட்டாயமாக எஸ்வாத்தினியில் மீள்குடியமர்த்தப்பட்ட இலங்கை அகதி சில மாதங்களில் உயிரிழப்பு!

 ~ பிபிசி செய்தி

பாலியல் குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவரை, அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஆபிரிக்க நாடொன்றில் பிரிட்டன் கட்டாயமாக மீள்குடியமர்த்தியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கோ, அந்நாட்டின் உள்ளூர் சமூகத்திற்கோ வெளிப்படுத்தப்படவில்லை.

கடுமையான மனநலப் பாதிப்புகளையும், தற்கொலை முயற்சிகளையும் கொண்டிருந்த குறித்த இலங்கையர், எஸ்வாத்தினி நாட்டிற்கு அனுப்பப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின் பிரதியொன்றை பிபிசி பெற்றுள்ளது. அதன்படி, அவரது மீள்குடியமர்வு தொடர்பான செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்வதற்கு பிரிட்டன் உறுதியளித்திருந்தது.

35 வயதுடைய கிஷாந்த் பெருமாள்யா (Kishanth Peramalya) என்பவரை அந்நாட்டில் நிரந்தரமாகக் குடியமர்த்துவதற்கான திட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் இறுதிப்படுத்திக் கொண்டிருந்தபோதே அவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் அகதி ஒருவரை இவ்வாறான முறையில் கட்டாயமாக வெளிநாடொன்றில் நிரந்தரமாகக் குடியமர்த்தியதாக அறியப்படும் முதலாவது சம்பவம் இதுவென குடியேற்றத்துறை நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் குடியேற்றக் கொள்கை

2024ஆம் ஆண்டு, புகலிடக் கோரிக்கைகள் பரிசீலனையில் இருந்தவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை தொழிற்கட்சி அரசாங்கம் கைவிட்டது.

தற்போது, புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப முடியாத சந்தர்ப்பங்களில் மூன்றாவது நாடுகளுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் விரும்புகிறது. எனினும், இதுவரை அது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் அறிவிக்கவில்லை.

கடந்த வாரம், புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றை ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எட்டியிருந்தன.

எஸ்வாத்தினியுடனான இந்த ஒப்பந்தம், இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் எந்தளவுக்குத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுபவர்களையும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் சமூகங்களையும் எவ்வாறு பாதுகாக்கின்றது என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்வாத்தினி அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

பெருமாள்யாவின் குடும்பத்தினர் அவருக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு தொடர்பாக விளக்கம் கோருகின்றனர். அதேவேளை, பிரிட்டன் தமது நாட்டை ஒரு ‘குப்பை கொட்டும் இடமாக’ பயன்படுத்துவதாக எஸ்வாத்தினியைச் சேர்ந்த விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதி

2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முயன்ற பல இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பெருமாள்யாவையும் இந்தியப் பெருங்கடலில் பிரிட்டிஷ் கடற்படை மீட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலுள்ள டியாகோ கார்சியா தீவின் முகாமொன்றில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இந்தத் தீவு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

லண்டனின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தீவின் அதிகாரிகள், பெருமாள்யாவும் ஏனைய சிலரும் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்ப முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அகதிகளுக்கான பாதுகாப்பை வழங்கினர்.

எனினும், அவர்களது எதிர்காலம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் விவாதித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் மூன்று ஆண்டுகள் முகாமிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என நீதிமன்றமொன்று பின்னர் தீர்ப்பளித்தது.

இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானவர்:

பெருமாள்யா தனது பதின்ம வயதில் இலங்கை இராணுவ அதிகாரிகளால் சித்திரவதைக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார். பின்னர், அவருக்குப் பிந்தைய மனஅதிர்ச்சி அழுத்தக் கோளாறு (PTSD) இருப்பது கண்டறியப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனநிலை மேலும் மோசமடைந்தது.

மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றிருந்தார். தீவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வாளர்களும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலை குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.

அங்கிருந்த காலத்தில் இரண்டு தற்கொலை முயற்சிகளின்போது தாக்குதல் மற்றும் தீவைப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்ட அவர், 24 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

மேலும், நான்கு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டனுக்குள் அனுமதிக்க மறுப்பு:

2024 டிசம்பரில் பெரும்பாலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பெருமாள்யா செய்த குற்றங்கள் காரணமாக அவரை அனுமதிக்க அமைச்சர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் அவர் டியாகோ கார்சியாவிலேயே தங்கியிருந்தார்.

அவரால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் அவர் பாதுகாப்பாக வாழக்கூடிய வேறொரு நாட்டைக் கண்டறிய அமைச்சர்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், அவரை பிரிட்டனுக்குள் அனுமதிக்க மறுத்த அரசாங்கத்தின் முடிவை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

பிபிசி பார்வையிட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, பிரிட்டன் 20க்கும் மேற்பட்ட நாடுகளை அணுகியிருந்த போதிலும், எந்தவொரு ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை.

2026 பெப்ரவரியில் ஈரானுடனான போருக்காக டியாகோ கார்சியாவிலுள்ள தனது இராணுவத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தத் தொடங்கியது.

இதனையடுத்து, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடாதவர்களைத் தீவிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்தனர்.

மார்ச் மாத இறுதியில், பெருமாள்யாவை 30 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ள மாலைதீவு முன்வந்தது. முதலில் அங்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் சுவாசிலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட எஸ்வாத்தினி நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

மூன்று ஆண்டுகளுக்குச் செலவுகளை ஏற்க பிரிட்டன் இணக்கம்

பெருமாள்யா உயிரிழந்தபோது, அவரை எஸ்வாத்தினியில் நிரந்தரமாக வாழ அனுமதிப்பதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளின் அரசாங்கங்களும் இறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

அவரது தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஏனைய உதவிகளுக்கான நியாயமான செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்வதற்கு பிரிட்டன் இணங்கியிருந்தது.

எனினும், இதற்கான மொத்தச் செலவு எவ்வளவு என்பதையோ, பெருமாள்யாவால் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இரு அரசாங்கங்களும் எவ்வாறு கையாளும் என்பதையோ அந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

அதேவேளை, அவரது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உடல் மற்றும் மனநலத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகள் அவருக்கு அவசியம் என்பதை அந்த ஆவணம் தெளிவாக ஏற்றுக்கொண்டிருந்தது.

‘எனது சகோதரர் அங்கு செல்ல விரும்பவில்லை’

ஆரம்பத்தில் பெருமாள்யா தனிமைப்படுத்தப்பட்ட விருந்தினர் இல்லமொன்றில் தனியாகத் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து பேசிய அவரது சகோதரி, அவரை எஸ்வாத்தினியில் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியாது என்றும், அந்நாட்டில் இருந்தபோது அவரது மனநிலை மேலும் மோசமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு நான்கு முறை அவர் தன்னுடன் தொலைபேசியில் பேசுவார் என்றும் அவர் கூறினார்.

“எனது சகோதரர் அங்கு செல்லவே விரும்பவில்லை. அங்கு தனியாக இருப்பதை அவரால் சமாளிக்க முடியவில்லை. அவர் மிகவும் தனிமையில் இருந்தார்” என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

அவர் செய்திருந்த பாலியல் குற்றங்கள் குறித்தும் தமக்குத் தெரியாது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒருமுறை மனநல மருத்துவரை அவர் சந்தித்துள்ளார். பின்னர் அவரது மனநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தினமும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதுடன், அவருக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காக உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், செப்டெம்பர் 13ஆம் திகதி அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கவலை:

டியாகோ கார்சியாவில் பெருமாள்யாவின் நிலை குறித்து ஏற்கனவே கவலை வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு (UNHCR), அவரது மரணம் ஆழ்ந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் அகதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

“சில சூழ்நிலைகளில் புகலிடக் கோரிக்கையாளர்களையும் அகதிகளையும் சட்டபூர்வமாக மூன்றாவது நாட்டிற்கு மாற்ற முடியும் என்பதை UNHCR ஏற்றுக்கொள்கிறது. எனினும், அதற்கான குறிப்பிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருப்பதும், அந்த நிபந்தனைகள் உண்மையில் நிறைவேற்றப்படுவதும் அவசியமாகும்” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் குடியேற்றக் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த பீட்டர் வோல்ஷ், இந்தச் சம்பவம் மிகவும் அசாதாரணமானது என வர்ணித்துள்ளார்.

“பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப முடியாதவர்கள் பிரிட்டனிலேயே தொடர்ந்து இருப்பார்கள். வெளிநாட்டுக் குற்றவாளிகளை ஏற்றுக்கொள்வதில் மூன்றாவது நாடுகள் பொதுவாகத் தயக்கம் காட்டுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

‘உலகின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான குப்பைத் தொட்டியாக ஆபிரிக்கா’

எஸ்வாத்தினியை பிரிட்டன் எவ்வாறு தெரிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக் குடியேற்றவாசிகளை அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விரிவான திட்டத்தின் கீழ், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்களை ஏற்றுக்கொள்ள எஸ்வாத்தினி ஏற்கனவே இணங்கியிருந்தது.

2025ஆம் ஆண்டு, 160 பேர் வரை ஏற்றுக்கொள்வதற்காக எஸ்வாத்தினிக்கு ட்ரம்ப் நிர்வாகம் 5.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை (3.9 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்) வழங்கியிருந்தது.

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ள தென்னாபிரிக்க வழக்காடல் நிலையத்தைச் சேர்ந்த மெலுசி சிமெலானே, குடியேற்றவாசிகளின் இடமாற்றம் தமது நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

“எமது சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்து வருகின்றது. மனநல மருத்துவக் கட்டமைப்பின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இத்தகைய அதிகளவான உதவிகள் தேவைப்படுபவர்களை எமது சமூகத்திற்குள் கொண்டுவருவது பெரும் சுமையாகும்.”

“உலகின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கொட்டும் இடமாக ஆபிரிக்கா மாறி வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளின் எதிர்ப்பு:

பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பதற்காகச் செயற்படும் எஸ்வாத்தினி கிராமப்புறப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஸகிதி சிபாண்ட்ஸே, பாலியல் குற்றவாளி ஒருவர் தமது நாட்டிற்கு அனுப்பப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“அவரை ஆபிரிக்காவுக்கு அனுப்புவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என அவர்கள் ஏன் நினைத்தார்கள்?”

“வறிய நாடுகளில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் இடம்பெறுவது பரவாயில்லை என்று பிரிட்டன் கூறுவதைப் போல இது உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்கான ஐ.நா. விசேட அறிக்கையாளர் கெஹாட் மாடி, ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் குடியேற்ற ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை அரசாங்கங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அவற்றை நாடாளுமன்ற மற்றும் பொதுமக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

“மனித உரிமைகள் தொடர்பான ஆபத்துகளைக் குறைப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவது அவசியம்” என அவர் தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதில்:

பெருமாள்யாவின் மீள்குடியமர்வு தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பிரிட்டன் மற்றும் எஸ்வாத்தினி அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

எனினும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“பிரிட்டிஷ் மக்களின் பாதுகாப்பே எப்போதும் எமது முதலாவது முன்னுரிமையாக இருக்கும். பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான தீர்மானங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டுக் குற்றவாளிகள் பிரிட்டனுக்குள் நுழைய முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.”

மூலம்: பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *