~ ஷானக சமரவிதாரக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தின் தலைவர்
இன்று நாட்டப்படும் ஒரு தேயிலைச் செடி அறுவடை தருவதற்கு ஐந்து ஆண்டுகளும், குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுவதற்கு பத்து ஆண்டுகளும், முதலீட்டை முழுமையாக மீட்டெடுப்பதற்கு 20 ஆண்டுகளுக்கும் அதிகமான காலமும் தேவைப்படலாம்.
ஆனால், இலங்கையின் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகைக் காலத்தில் இன்னும் 19 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதுவே எமது பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் அடிப்படையிலுள்ள முரண்பாடாகும். நீண்டகால முதலீடுகளைச் சார்ந்திருக்கும் ஒரு தொழில்துறை, அத்தகைய முதலீடுகளை மேற்கொள்வதற்குச் சாதகமற்ற கொள்கைக் கட்டமைப்புக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் தாக்கம் பெருந்தோட்டங்களுக்கு அப்பாலும் விரிவடைகிறது.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இலங்கையின் விவசாய உணவு உற்பத்திக் கட்டமைப்பு,
- தேசிய உற்பத்தியில் சுமார் ஆறில் ஒரு பங்கையும்,
- வேலைவாய்ப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும்,
- பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்டத்துறை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் தேயிலை உற்பத்தி 3 சதவீதத்தால் குறைந்து 152.5 மில்லியன் கிலோகிராமாகப் பதிவாகியுள்ளது. தாள் இறப்பர் உற்பத்தி சுமார் 18 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை ஏற்றுமதி வருமானம் 743 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 701 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
மறுபுறம், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
மொத்த உற்பத்திச் செலவில் சுமார் 65 சதவீதம் தொழிலாளர் செலவாகும். 200 ரூபா சம்பள அதிகரிப்பின் காரணமாக சுமார் 6 பில்லியன் ரூபா மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நெருக்கடிகளால் ஒரு தொன் உரத்தின் விலை சுமார் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து மற்றும் எரிசக்திச் செலவுகளின் அதிகரிப்பு, சீரற்ற மழைவீழ்ச்சி, வறட்சி மற்றும் குறைந்து வரும் தொழிலாளர் எண்ணிக்கை என்பனவும் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும், தன்னியக்கத் தொழில்நுட்பம், அதிக பெறுமதியுடைய உற்பத்திப் பொருட்கள் மற்றும் மாற்றுப் பயிர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் பெருந்தோட்டத்துறை மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது, அதற்கேற்ப மாற்றமடையக்கூடிய அரசாங்கக் கொள்கைச் சூழலே அவசியமாகியுள்ளது.
உறுதியான கொள்கைகள் இல்லாமல் முதலீடுகள் வளர்ச்சியடைய முடியாது:
இலங்கையின் மொத்த தேயிலைப் பயிர்ச்செய்கை நிலப்பரப்பில் சுமார் நான்கில் ஒரு பங்கை நிர்வகிக்கும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs), தன்னியக்கத் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் ஊடாக உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்தின் சாத்தியங்களை நிரூபித்துள்ளன.
எனினும், செயற்றிறனை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நவீனமயமாக்கலைத் தொடர முடியாது.
1992ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட குத்தகைக் காலம் பின்னர் 53 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
தற்போது 19 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தேயிலை மீள்நடுகையில் முதலீடு செய்வதற்கான நியாயப்பாடு ஆண்டுதோறும் பலவீனமடைந்து வருகின்றது.
குத்தகைக் காலத்திற்கு அப்பால் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டிய திட்டங்களுக்கு வங்கிகளாலும் நிதியுதவி வழங்க முடியாதுள்ளது.
குறைக்கப்பட்ட 46 ஆண்டுகால குத்தகையை மீண்டும் வழங்குவதன் மூலம் மீள்நடுகை, பயிர்ப் பல்வகைப்படுத்தல், ஓய்வு மற்றும் பொழுதுபோக்குத் துறை உள்ளிட்ட புதிய முதலீடுகளுக்கு வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. எனினும், தொடர்ச்சியான கலந்துரையாடல்களைவிட உரிய நேரத்தில் எடுக்கப்படும் தீர்மானமே முதலீட்டாளர்களுக்கு வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பயிர்ப் பல்வகைப்படுத்தலுக்கும் இதேபோன்ற நீண்டகாலக் கண்ணோட்டம் அவசியமாகும்.
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் வருடாந்த மழைவீழ்ச்சி 500 மில்லிமீற்றருக்கும் குறைவாக உள்ளது. இதனால் தேயிலைப் பயிர்ச்செய்கை மேலும் சவாலானதாக மாறியுள்ளது.
கோப்பி, அவக்காடோ மற்றும் கறுவா போன்ற பயிர்கள் நம்பிக்கையளிக்கும் மாற்றுப் பயிர்களாக உருவெடுத்து வருகின்றன.
மல்வத்தை பெருந்தோட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து ஒரு ஹெக்டேயருக்கான அவக்காடோ செடிகளின் எண்ணிக்கை 150 இலிருந்து 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கறுவா பதனிடும் நடவடிக்கைகளில் சுமார் 60 சதவீதம் தன்னியக்கமயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிக அடர்த்தியில் கோப்பிப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களுக்கான மானியங்களை இழக்கக்கூடிய நிலை காணப்படுகிறது.
அத்துடன், 20,000 ஹெக்டேயரில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட எண்ணெய்ப்பனைப் பயிர்ச்செய்கை சுமார் 10,400 ஹெக்டேயருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தி அளவை மாத்திரமன்றி, பெறுமதியையும் அடிப்படையாகக் கொண்ட போட்டித்திறன்:
அதிகமாக உற்பத்தி செய்வதில் மாத்திரமல்லாது, உயர்ந்த தரத்துடன் உற்பத்தி செய்வதிலேயே எமது வாய்ப்புகள் தங்கியுள்ளன.
தற்போது தேயிலை ஏற்றுமதியின் மொத்த அளவில் பாதிக்கும் அதிகமானவை பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலைப் பொருட்களாகும்.
மட்சா (Matcha), பச்சைத் தேயிலை மற்றும் சிறப்புக் கைவினை முறைகளில் தயாரிக்கப்படும் தேயிலை வகைகளில் உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முதலீடுகளுக்குப் பயனளிக்கும் வகையில் வர்த்தகச் சூழல் அமைய வேண்டும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பச்சைத் தேயிலை மற்றும் CTC முறையில் தயாரிக்கப்படும் தேயிலையில் சுமார் 30 சதவீதம் விற்பனையாகாமல் உள்ளது.
அதேவேளை, குறைந்த விலையிலான வெளிநாட்டுத் தேயிலை வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டு, வெறும் 30 சதவீத உள்நாட்டுத் தேயிலையுடன் கலக்கப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிபந்தனை சுமார் மூன்று தசாப்தங்களாக மாற்றப்படவில்லை.
உள்நாட்டுத் தேயிலையின் கலவை விகிதத்தை 50 சதவீதமாக அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கும் சமமான பரிசோதனைத் தரநிலைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
போட்டியிலிருந்து விலகிக்கொள்வது இதன் நோக்கமல்ல. மாறாக, தரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நியாயமான அடிப்படையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.
விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்:
விஞ்ஞான ஆராய்ச்சிகளும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
சர்வதேச சந்தைகள் விவசாயப் பொருட்களில் எஞ்சியிருக்கக்கூடிய இரசாயனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட அளவுகளை மேலும் கடுமையாக்கி வருகின்றன.
இந்நிலையில், மாற்றுக் களை கொல்லிகளுக்கான தெரிவுகள் குறைவாக இருப்பதுடன், உள்நாட்டுப் பரிசோதனை வசதிகளும் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளன.
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய நடுகைப் பொருட்கள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இறப்பர் பயிர்ச்செய்கையை அச்சுறுத்தும் பெஸ்டா (Pesta) நோய் இதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது.
விஞ்ஞானிகளின் சேவை மற்றும் ஊதியம் தொடர்பான முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதுடன், ஆராய்ச்சி நிறுவனங்களின் பதவிக் கட்டமைப்புகளைப் பல்கலைக்கழகக் கல்விசார் பதவிக் கட்டமைப்புகளுடன் ஒத்திசைப்பதன் மூலம் எமது விஞ்ஞானிகளைத் தக்கவைத்துக்கொள்வதும் அவசியமாகும்.
நவீன பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள்:
நவீனமயமாக்கலுக்கு நடைமுறைச் சாத்தியமான ஒழுங்குமுறைகளும் அவசியமாகும்.
சொட்டு நீர்ப்பாசன முறையின் மூலம் நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், வறட்சியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் முடியும்.
எனினும், நிலத்தடி நீரைப் பொறுப்புடன் நிர்வகிக்க முடியும் என்பதை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலும்கூட, ஆழ்துளைக் கிணறுகளுக்கான அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் முதலீடுகளைப் பாதிக்கின்றன.
வெளிப்படையான, விஞ்ஞான அடிப்படையிலான ஒழுங்குமுறைகள் நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன் முதலீடுகளுக்கும் வழிவகுக்கும்.
பெருந்தோட்டக் காணிகளின் நிர்வாகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் காணிகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் நீரோடைகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதிகள் மீதான அத்துமீறல்கள் நிச்சயமற்ற தன்மையையும் சுற்றுச்சூழல் ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன.
சட்டபூர்வமான உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
உரிய சட்டப் பாதுகாப்புகளுடன், முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் சமூகங்களையும் பாதுகாக்கும்.
பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம்:
இந்தச் சவால்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றுக்கான தீர்வுகளும் அவ்வாறே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன.
நிலையான குத்தகை உரிமை மீள்நடுகையை ஊக்குவிக்கும். ஆராய்ச்சி உற்பத்தித்திறனை அதிகரிக்கும். பயிர்ப் பல்வகைப்படுத்தல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும். நியாயமான வர்த்தகம் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும். முறையான ஒழுங்குமுறைகள் முதலீடுகளைப் பாதுகாக்கும்.
பெருந்தோட்டத்துறை தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும். அந்த முதலீடுகள் செழித்து வளர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு தற்போது கொள்கை வகுப்பாளர்களிடம் உள்ளது.
இலங்கையிடம் தரமான உற்பத்திப் பொருட்கள், நிலைபெற்ற சந்தைகள், அனுபவமிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளன.
கடந்தகால உற்பத்தி அளவுகளை மீண்டும் அடைவது மாத்திரம் எமது இலக்காக இருக்கக்கூடாது.
மாறாக, ஒவ்வொரு ஹெக்டேயர் நிலத்திலிருந்தும் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய, பல்வகைப்பட்ட, அதிக உற்பத்தித்திறன் கொண்ட, நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய விவசாய வணிகப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலட்சியமாக இருக்க வேண்டும்.
அதற்கான அடித்தளம் ஏற்கனவே உள்ளது.
அந்த அடித்தளத்தின் மீது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான கொள்கைத் தீர்மானங்களே இப்போது எமக்குத் தேவைப்படுகின்றன.
(மூலம்: தி ஐலண்ட்)
