மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்னும் நூலை முன்வைத்து சில குறிப்புகள் 

மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்னும் நூலை முன்வைத்து சில குறிப்புகள் 

 ~ எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம்

மட்டக்களப்பு  தமிழகத்தின் வரலாற்றெழுதலில் வித்துவான் கமலநாதன், கமலா கமலநாதன் ஆகியோர் எழுதிய ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ என்னும் நூல் முக்கியமானதொன்றாகும். இந்நூலானது ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ என்னும் தலைப்பிலமைந்த ஏட்டுப்பிரதிகளின் பொழிப்புரையாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலினை முன்வைத்து  இத்தொடரில் காலனித்துவ ஆட்சியின் தொடக்க காலமான 1505 ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை சுதந்திரம் அடைந்தது வரையான மட்டக்களப்பை அடிப்படையாகக்கொண்ட  வரலாற்றுத் தகவல்களை அலச முனைவோம்.

1505 ல் முதன் முதல் போத்துக்கீசர் இலங்கையில் காலடி எடுத்து வைத்த போது மட்டக்களப்பு  கண்டி இராச்சியத்தின் அங்கமாக காணப்பட்டது. இருந்தபோதிலும்  உள்ளக சுயாதிபத்தியம் மிக்க வன்னிமைகளை அது கொண்டிருந்தது. போத்துக்கீச பிரான்சிஸ்கன் பாதிரிமார் எழுதிய கடித்தொகுப்புகளில் உள்ள கடிதங்கள் இவை பற்றி விபரிக்கின்றதன. 1539ஆம் ஆண்டு தொடக்கம் 1542ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பாதிரியாரான ‘சைமாவே கொய்ம்பரா’ என்பவரால் எழுதப்பட்ட கடிதங்களில் இத்தகவல்கள் அடங்கியுள்ளன. அதாவது ‘மட்டக்களப்பு ஒரு தனிராச்சியமாக இருந்ததாகவும் அவ்விராச்சியத்தின் மன்னனை தான் நேரில் சென்று கண்டதாகவும்’ அவர் குறிப்பிடுகின்றார். மேற்படி தகவல்கள்  ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’  என்னும் நூலுக்கு த.சிவராம் எழுதிய முன்னுரையில் குறிப்பிடப்படுகின்றன. 

மேலும் பல சுவாரசியமான தகவல்களை சிவராம் அதில் குறிப்பிடுகின்றார்.  

மட்டக்களப்பு மன்னனானவன் அந்தப் பாதிரியாரூடாக  போத்துக்கீச மன்னனுக்கு ஒரு செய்தியனுப்பியதாகவும் அச்செய்தியில் ‘மட்டக்களப்பை கோட்டை மன்னனனிடமிருந்து விடுவித்துக்கொள்ள பீரங்கிகள் முதலியவற்றைக் கேட்டு கொண்டதோடு அதற்குப் பதிலாக கப்பல் கட்டுவதற்கான மரங்கள் போன்றவற்றைத் தருவதாகவும்’ சொல்லியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இந்த செய்தியை தெரிவித்த மட்டக்களப்பு மன்னனின் கடிதத்தின் பிரதியொன்றும் அப்பாதிரியாரின் கடித்ததொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அதேவேளை 1582-1597 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட போத்துக்கேயரின் நிர்வாக ஆவணத் தொகுப்பு ஒன்று டிக்கிரி அபயசிங்க அவர்களால் ‘இலங்கையில் போத்துக்கீச படையினர்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந் நூலிலும் மட்டக்களப்பு மன்னன் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன என்றும் 1582ஆம் ஆண்டு  மட்டக்களப்பு மன்னனிடமிருந்து போத்துக்கீசர்கள் முந்நூறு அவணம் (3 மூடைகள் சமன் 1 அவணம்) நெல்லை திறையாகப் பெற்றமையையும் குறிப்பிடுகின்றது. மேற்படி ஆவணங்களில் குறிப்பிடப்படும் மன்னன் பெயர் எதிர்மன்னசிங்கனாக இருக்கமுடியும்.  ஏனெனில் “எதிர்மன்னசிங்கன் என்னும் மன்னனே  நாற்பத்து நான்கு வருடங்கள்  மட்டக்களப்பை அரசுபுரிந்து தேகவியோகமாக மத்திய நாட்டுக்குக்கீழ் மட்டக்களப்பு இருந்தது’.என்றும் ‘அந்தக்காலத்தில் மத்திய நாட்டுக்கு அரசன் இராஜசிங்கன்’. என்றும் ‘கலிபிறந்த அறுநூற்றி எண்பத்தைந்தாம் வருஷம் போத்துக்கீசர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்தி கோட்டைகட்ட அடிகோலினர்”எனவும்   மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுகின்றது.

இத்தகைய காலனித்துவ நாடுகளின் சார்பில் நமது மண்ணில் பணியாற்றிய அதிகாரிகளின் மூலப்பிரதிகளை நேரிடையாக ஆராய்கின்ற போது மட்டக்களப்பு தமிழகத்தின் அன்றைய அரசியல் நிலைமைகள் குறித்த பெரும்பாலான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும். அதனை மட்டக்களப்பு வரலாற்றுத் தேடல்களில் ஆர்வமும் அக்கறையும் கொண்டியங்கும் ஆய்வு மாணவர்கள் எதிர்காலத்தில்  சாத்தியமாக்க முன்வரவேண்டும்.

1597 ல் போத்துகீசர்  மெதுமெதுவாக கோட்டை இராச்சியத்தைத்  தமது முழுக்கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 1619 ல் யாழ்ப்பாண ராச்சியமும் போத்துகீசர் வசம் வீழ்ந்தது. ஆனால் கண்டி இராச்சியத்தின் பிரசைகள்  மிகவும் தேசப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். அதேவேளை அப்பிரதேசம்  இயற்கை அரண்களான மலை, காடு போன்றவற்றால் பாதுகாக்கப்பட்டதாகவும் இருந்தமையினால் அதன் சுதந்திரம் தொடர்ந்து  நீடித்தது. ஆனாலும் கண்டி இராச்சியத்தின் கிழக்கு எல்லைகளான மட்டக்களப்புத் தமிழகத்தின் கடற் கரையோரப்பகுதிகள்(எழுவான்கரை) இவ்வித இயற்கையான பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை. எனவே இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலே நிலைகொண்டிருந்த  போத்துக்கீசர்கள் அடிக்கடி கிழக்குக்கரையோரங்களை  நோக்கி தாக்குதல்களைத் தொடுத்தவண்ணம் இருந்தனர். கண்டி இராச்சியத்தின் மையப் பகுதிக்குள் நுழைவதற்கு முடியாவிடினும்  கிழக்கு கரையோரங்களிலிருந்த துறைமுகங்களையாவது தம்வசப்படுத்தும் முயற்சியில் போத்துகேயர் இடையறாது ஈடுபட்டனர்.

இறுதியாக அத்தகைய தாக்குதல்கள் ஊடாக 1622 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தமிழகத்தை  அதாவது திருகோணமலை உட்பட்ட  அனைத்து கிழக்கு கரையோரப் பகுதிகளை அதாவது எழுவான்கரை பிரதேசத்தை  தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் போத்துக்கேயர்கள் வெற்றிகண்டனர். இக்காலப்பகுதியில்தான் திருக்கோவில் கிராமத்திலுள்ள கோவிலும் போத்துக்கீசரால் இடிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில்தான்  மட்டக்களப்புப் படுவான்கரைக்கும்  எழுவான்கரைக்கும் இடையே இருக்கும் புளியந்தீவினை போத்துக்கீசர் தமது பாதுகாப்பு அரணாக பயன்படுத்தத் தொடங்கினர். தீவின் கிழக்குக்கரையோரமாக மெதுமெதுவாக ஒரு கோட்டையையும் கட்டத்தொடங்கினர்.

எனினும் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே போத்துக்கீசரின் அந்த வெற்றியை முறியடிக்க கண்டியரசன் தயாரானான். இதுபற்றி “விமலதருமன் மலாய் வீரர்களை அழைத்து மட்டக்களப்பால் துரத்திவிட்டு காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பை இருத்தினன்” என்கின்றது இந்நூல்.  1626 ஆம் ஆண்டு  இந்த மட்டக்களப்பு மீட்பு நடவடிக்கை  நடைபெற்றிருக்கிறது. இதற்கிடையில் ஒல்லாந்தரின் தரையிறக்கங்களும் இலங்கையைச் சுற்றியிருந்த கரையோரப்பகுதிகளில் இடம்பெறத்  தொடங்கியது.

எனவே  மட்டக்களப்பின் மீது  தமது பிடியை விட்டுவிட போத்துக்கீசர்கள் விரும்பவில்லை. மீண்டும் 1639ல் கண்டியரசனுடன் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தியதன் பேரில் கண்டிராச்சியத்தின் கரையோர பிரதேசங்களில் போத்துகீசர் வியாபாரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது . எனினும் கோட்டை இராச்சியப் பகுதியான  இலங்கையின் தெற்கிலோ மேற்கிலோ ஆளுமை செலுத்தியதைப் போன்றோ யாழ்ப்பாண இராச்சியத்தில் ஆளுமை செலுத்தியதைப் போன்றோ கிழக்குக் கரைகளில் ஆளுமை செலுத்தும் அதிகாரத்தை போர்த்துக்கேயரால் பெற்று விட முடியவில்லை.

‘மட்டக்களப்பு  பாதுகாப்பு  ஒப்பந்தம்’:

இலங்கையில் ஒல்லாந்தரின் கை  ஒங்கத்தொடங்கிய வேளைகளில் போத்துக்கேயரின் அரணாக இந்த புளியந்தீவு கோட்டை  மீது 1639ல் ஒல்லாந்தர் தாக்குதல் தொடுத்தனர். அவ்வேளையில் போத்துக்கீசர் கோட்டை பெரும் அழிவுக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து கண்டியரசனைக் காண ஒல்லாந்தர்கள் ஒரு தூதுவனை அனுப்பி போத்துக்கீசரை கிழக்கு கரைகளில் இருந்து துரத்திவிட தாம் உதவிசெய்வதாக வாக்குறுதி கொடுத்தனர். அதற்காக கண்டி மன்னன்  இராஜசிங்கன் ஒல்லாந்தருடன்  ‘மட்டக்களப்பு பாதுகாப்பு  ஒப்பந்தம்’ ஒன்றை செய்துள்ளான். அதனிமித்தம் ‘மட்டக்களப்பு நீக்கி மற்ற கரையோர நாட்டை  பெற்றுக்கொள்’ என்றும்  ‘போத்துக்கீசரோடு போர் செய்து முடியும் வரை செலவும் போர்வீரரும் தருவோம்’என்றும் ‘ஒல்லாந்து வர்த்தகரே இலங்கை முழுவதும் வர்த்தகம் செய்ய வேண்டும்’என்றும் ‘மறுதேச வர்த்தகர்கள் வர இடம்கொடுக்கப்போடாது’என்றும் கத்தோலிக்க குருமார் மட்டக்களப்பு, கண்டி, அனுரதன்புரம் இவைகளில் இருக்கப்படாது’ என்றும் அவ்வொப்பந்தம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுகின்றது.

1689 க்குப்பின்னரான காலத்தில் கோட்டை,  யாழ்ப்பாண இராச்சியங்களை ஒல்லாந்தர் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள்   கொண்டுவந்தனர்.

கண்டி மன்னனுடனான ஒப்பந்தம் ஊடாக மெதுவாக கிழக்கு கரைகளில் கால்பதித்த ஒல்லாந்தர் கண்டியரசனுடன் செய்துகொண்ட ஒப்பந்த விதி முறைமைகளுக்கு மாறாக போத்துக்கீசருடனும் ஒருவிதமான போர் தவிர்ப்பு ஒப்பந்தந்தை செய்துகொண்டனர். அதனுடாக கிழக்கு கரையின் சில பகுதிகளில் போத்துக்கேயரும்  தொடர்ந்து வர்த்தகம் செய்ய அனுமதித்தனர். இதையறிந்த கண்டியரசன் ஒப்பந்த மீறலை கரணம் காட்டி ஒல்லாந்தருடன் போர் தொடுத்து, ஒல்லாந்த அதிகாரியொருவனின் தலையை வெட்டி சாக்கிலிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்த அரச பீடத்துக்கு அனுப்பிவைத்தான்.

அதன் பின்னர் தமது நேரடி பிரசன்னத்தை தவிர்த்து அதிகாரிகளை மீளப்பெற்ற ஒல்லாந்தர் மட்டக்களப்பில் இருந்த முற்குக தலைவர்கள் இருவரை தெரிவு செய்து தமது பிரதிநிதிகளாக பயன்படுத்த விளைந்தனர். அதன்படி  மட்டக்களப்புக்கு (அன்று  மட்டக்களப்பு என அழைக்கப்பட்ட பிரதேசம் இன்றைய சம்மாந்துறையை அண்மித்ததாக இருந்துள்ளது) தெற்கேயுள்ள எருவில்பற்று, மண்முனைப்பற்று, கோறளைப்பற்று, போன்றவற்றுக்கு அறுமக்குட்டி போடியையும் மட்டக்களப்புக்கு வடக்கேயுள்ள கரவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று, அக்கரைப்பற்று, பாணமைப்பற்று, உன்னரசுகிரி போன்ற பகுதிகளுக்கு கந்தப்போடியையும் தங்கள் பிரதிநிதிகளாய் நியமித்து கண்டடியரசனின் ஒப்புதலுக்கு அனுப்பினர். அதிலும்  அறுமக்குட்டி போடி காலிங்கா குடியென்பதால் அவனுக்கு சில விடயங்களில் முன்னுரிமையையும் அங்கீகரித்தனர். ஒல்லாந்தரின் ஏற்பாட்டின்படியே கண்டியரசனின் ஒப்புதல்பெற்று வந்த அவர்களே நீண்டகாலத்துக்கு மட்டக்களப்பை நிர்வகித்துவந்தனர்.

வீரம் செறிந்த போடிகள்:  

இவ்வேளையில்தான் 1707ஆம் ஆண்டில்  புளியந்தீவு கோட்டை இருந்த இடத்தினை ஒரு முழுமையான கோட்டை கொத்தளங்கள் அமைந்ததொரு பெரும் கோட்டையாக  கட்டி முடித்துள்ளனர். எனினும் யாழ்பாணத்திலிருந்தே அவர்களின் ஆட்சி இடம்பெற்றுவந்தது. ஒருமுறை  யாழ்பாணத்திலிருந்து ஒல்லாந்து அரசுக்கு திறை அறவீடு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட இரு கணக்கப்பிள்ளைகளை மட்டக்களப்புப் போடிகள் இருவரும் இணைந்து கொல்லுவித்தனர். அந்தக்கொலையை யார் செய்தார்கள் என்பதை ஒல்லாந்து அதிகாரிகளின் விசாரணையால்  கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் மட்டக்களப்பையும்  புளியந்தீவுக்கோட்டையையும் கைவிட்டு ஒல்லாந்தர் பின்வாங்கினர்.

இப்படியாக  கண்டி இராச்சியமானது தனது கிழக்கு எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அவ்வப்போது விட்டுக்கொடுத்து வந்தாலும் அவற்றை முற்றாக இழந்துவிடவில்லை. குறிப்பாக போத்துக்கீசருக்குப் பின்னர் ஒல்லாந்தர் இலங்கையின் கோட்டை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் கிழக்கு கரைகளில் சில இடங்களைக் கைப்பற்றிய பின்னரும்கூட கண்டி இராச்சியம் மிகப்பலமானதாகவே இருந்து வந்துள்ளது என்பதனை 1762 ல் சென்னைப்பட்டினத்தில் இருந்து கண்டி மன்னனை காணவந்த ‘பைபஸ்’ எனும் தூதுவனது நாட்குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

‘பைபஸ்’ மூதூருக்கு அண்மையிலுள்ள கொட்டியாரத்  துறைமுகத்தில் இறங்கிய போது கண்டி மன்னனின் அதிகாரிகள் அவரை வரவேற்று திருகோணமலை பொலநறுவை மாத்தளை வழியாக மன்னனின் இராஜசபைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்பதையும் “மூதூர் மாவட்டத்தில் 64 கிராமங்கள் உண்டு இவையனைத்தும் 3 கிராம தலைவர்களின் கீழ் இயங்கிவருகிறது. இத்தலைவர்கள் கண்டி நகரில் வதியும் (திஸாவ) தளபதியின் கீழ் இயங்குகிறார்கள்.” என்பதையும் தெளிவாக  எழுதியுள்ளான். இதனுடாக கண்டி இராச்சியத்தின் எல்லைகள் திருகோணமலையையும் தாண்டி விரிந்துக் கிடந்தமையை நாம் உணரமுடிகின்றது.

அதேவேளை மட்டக்களப்பு பிரதேசம் முழுவதும் அதாவது தெற்கு எல்லையிலுள்ள பாணம வரையிலும் சென்றுவந்த ‘ஜொகானஸ் பிராங்’ என்னும் ஒல்லாந்து அதிகாரியொருவனின் சுற்றுப்பயணக்குறிப்பும் அக்காலத்தில் இருந்த ஆட்சியதிகாரங்கள் பற்றி விபரிக்கின்றது. அதாவது போடிமார்களில் நிலபுல அதிகாரங்கள் மற்றும் மட்டக்களப்பில் இருந்த ஏழுவகை பற்றுகள்(வன்னிமைகள்) பற்றியும் பல தகவல்கள் காணப்படுகின்றது.

அன்றைய போத்துக்கீசர் ஒல்லாந்தர் காலகட்டங்களில் இன்று அமுலில் உள்ள அல்லது நாம் உபயோகத்தில் கொண்டிருக்கின்ற ‘மாகாணம்’ என்கின்ற முறையமைப்புகள் இருந்திருக்கவில்லை. அவ்வேளை இருந்ததெல்லாம் இராச்சியங்களே. இதில் கிழக்கு மாகாணம் என்று இன்று நாம் குறிப்பிடும் பகுதிகள் எல்லாம் கண்டிராச்சியத்துக்கு உட்பட்டே  பற்று,வன்னிமை போன்ற பல அலகுகளாக  இருந்துள்ளன  என்பதை தெளிவுபெற நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *