~ ஈவா கோர்லெட் – வெலிங்டனிலிருந்து
நியூசிலாந்தின் தெற்குத் தீவின் கரடுமுரடான மேற்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது பிரான்ஸ் ஜோசப் (Franz Josef) என்ற சிறிய கிராமம்.
இப்பகுதியின் இயற்கை அழகு ஆண்டுதோறும் சுமார் பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. இங்குள்ள விடுதிகள், உடல் நல ஓய்வு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
மலைநடைப் பயணம் முதல் சிறுபடகுச் சவாரி வரையிலான பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாக விளங்கும் இக்கிராமம், நியூசிலாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
ஆனால், இக்கிராமத்துக்குப் புகழையும் செழிப்பையும் பெற்றுக்கொடுத்த அதே இயற்கையே இன்று அதன் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
புகழ்பெற்ற பிரான்ஸ் ஜோசப் பனிப்பாறைக்கு அருகிலும், அல்பைன் புவியியல் பிளவுப் பகுதியிலும், உலகளவில் அரிதாகக் காணப்படும் பல கிளைகளாகப் பிரிந்து பாயும் வைஹோ (Waiho) ஆற்றின் அருகிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.
இப்போது அந்த ஆற்றின் படுகை உயர்ந்து வருகின்றது.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம்..
கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அண்மைய தொழில்நுட்ப அறிக்கையின்படி, முன்னர் கணிக்கப்பட்டதைவிடப் பல ஆண்டுகள் முன்னதாகவே வைஹோ ஆற்றின் படுகை வேகமாக உயர்வடைந்து வருவதுடன், அதன் நீரோட்டப் பாதையும் மாறி வருகின்றது.
ஆற்று நீர் பரந்து பாய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பிரான்ஸ் ஜோசப் கிராமம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளத்தையும் உயிரிழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆற்று நீரைப் பரந்து பாய அனுமதிப்பதற்காக முன்னர் வகுக்கப்பட்ட பத்தாண்டுத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
“வைஹோ ஆற்றின் முழு வேகத்திலான நீரோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தால், அதன் வழியிலுள்ள கட்டடங்களும் ஏனைய கட்டமைப்புகளும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும். அவை முற்றாக அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது” என பேராசிரியர் இயன் புல்லர் தெரிவித்துள்ளார்.
ஆறுகளின் நிலவடிவ மாற்றங்கள் தொடர்பான நிபுணரான இவர், மேற்குக் கரையோரப் பிராந்திய சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சுயாதீன வைஹோ தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் செயற்படுகின்றார்.
“இப்போது எமக்கு ஏழு ஆண்டுகளே இருக்கின்றன. அடிப்படையில், பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஏழு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து பேரழிவைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து உள்ளூராட்சி அதிகாரிகள் ஆற்று முகாமைத்துவத் திட்டங்களை விரைவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
பூகம்பத்தாலும் பேராபத்து:
ஆற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதைக்கு உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், புவி வெப்பமடைதலும் எல் நினோ காலநிலை நிகழ்வும் அதிக மழைவீழ்ச்சிக்கும் வெள்ள அபாயத்துக்கும் வழிவகுக்கும் என புல்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கும் மேலாக, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 8 அளவிலான பாரிய பூகம்பம் ஏற்படுவதற்கு 75 சதவீத வாய்ப்புள்ளதாக நியூசிலாந்தின் புவி அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புவியியல் பிளவில் ஏற்படும் முறிவு வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களைத் தூண்டுவதுடன், கிராமம் முழுவதும் அழிவடைவதற்கும் வழிவகுக்கக்கூடும் என புல்லர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஆற்றின் நிலைமையும் மழைவீழ்ச்சியும் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால், குடியிருப்பாளர்கள் அச்சமின்றி உறங்க முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும், மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான மேம்பட்ட திட்டங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடவடிக்கையின்மையால் விரக்தியடையும் மக்கள்:
பிரான்ஸ் ஜோசப் கிராம மக்கள் அச்சத்துடன் வாழவில்லை. ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் அவர்கள் அதிகளவில் விரக்தியடைந்து வருவதாக அக்கிராமத்தின் குடியிருப்பாளரும் பனிப்பாறைப் பிரதேச சுற்றுலாக் குழுவின் தலைவருமான ஜனெல் ஷோ தெரிவித்துள்ளார்.
“இதேபோன்ற ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்தவிதமான மேலதிக முன்னேற்றமும் ஏற்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடல் நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஷோவும் குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
“இது சமூகத்தின் மீது திணிக்கப்படும் நடவடிக்கையாக இல்லாமல், சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்களையும் உள்ளடக்கும் வகையில் வெஸ்ட்லாண்ட் மாவட்ட சபையினால் அமைக்கப்பட்டுள்ள புதிய செயற்குழு, அதற்கான சிறந்த ஆரம்ப நடவடிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு 20 சென்டிமீற்றர் உயரமடையும் ஆற்றுப்படுகை:
பல கிளைகளாகப் பிரிந்து பாயும் ஆறுகள் பெருமளவிலான சரளைக் கற்களையும் வண்டல் படிவுகளையும் கீழ்நோக்கிக் கொண்டுசெல்கின்றன.
ஆனால், ஆற்றின் அகலம் குறுக்கப்படும்போது, அந்தக் கற்களும் படிவுகளும் பரந்து செல்ல முடியாமல் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து, ஆற்றுப்படுகையின் உயரத்தை அதிகரிக்கின்றன.
வைஹோ ஆற்றின் படுகை ஆண்டுதோறும் சுமார் 20 சென்டிமீற்றர் உயர்ந்து வருகின்றது.
பனிப்பாறைக்கு அருகில் பெருமளவிலான படிவுகள் குவிந்துள்ள நிலையில், புயல் ஒன்று அவற்றை ஆற்றின் கீழ்ப்பகுதிக்குத் தள்ளுமானால் இப்பிரச்சினை மேலும் தீவிரமடையக்கூடும்.
1980களிலிருந்து கட்டட நிர்மாணம், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற தேவைகளுக்காக நிலத்தைப் பயன்படுத்தும் நோக்கில், ஆற்று நீர் பரவுவதைத் தடுக்கும் மண் மற்றும் கற்களாலான தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றுப்படுகையின் உயரம் அதிகரித்து வருவதால், இந்தத் தடுப்பணைகளும் வெள்ளப்பெருக்கின்போது பாதிப்படையும் அபாயம் அதிகரித்துள்ளது.
“தற்போது கிராமத்துக்கு அருகிலுள்ள ஆற்றுப்படுகை, அதனை ஒட்டியுள்ள நிலப்பரப்பைவிட இரண்டு மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது” என புல்லர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஜோசப் கிராமத்தின் வடக்குப் பகுதியில் ஆறு புதிய நீரோட்டப் பாதையொன்றை உருவாக்கி வருவதை ஆலோசனைக் குழு கண்டறிந்தது.
ஆறு இயற்கையாகப் பரந்து பாய்வதற்கான இடத்தை வழங்கி, வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் பத்தாண்டுத் திட்டமொன்றை அக்குழு பரிந்துரைத்திருந்தது.
ஆனால், ஒப்பீட்டளவில் அமைதியான வானிலை நிலவியபோதிலும், முன்னர் கணிக்கப்பட்டதைவிட ஆற்றின் மாற்றங்கள் மிக வேகமாக இடம்பெற்று வருவது கடந்த செப்டெம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
கிராமத்தையே இடமாற்ற வேண்டிய நிலை?
பிரான்ஸ் ஜோசப் கிராமத்தை வேறொரு இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் நீண்டகாலமாகக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
எனினும், முதற்கட்டமாக ஆற்றின் தென்பகுதியிலுள்ள தடுப்பணைகளைத் திறந்து, நீர் பரந்து பாய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் ஆற்றுப்படுகை உயரமடையும் வேகத்தைக் குறைக்க முடியும் என ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்நடவடிக்கை கிராமத்துக்குக் கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும்.
ஆனால், அதற்காக நெடுஞ்சாலை, கழிவுநீர் உட்கட்டமைப்புகள் மற்றும் கழிவுகள் புதைக்கப்படும் தளங்கள் என்பவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கும். பெருமளவிலான தனியார் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கும்.
இத்திட்டத்துக்காக 200 மில்லியன் நியூசிலாந்து டொலர்களுக்கும் அதிகமாக (83 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள்) செலவிட வேண்டியிருக்கும்.
ஆற்று நீரைப் பரந்து பாய அனுமதிக்கும் திட்டம் தொடர்பில் உள்ளூர் மக்கள் மிகவும் வேதனையான நிலையில் இருப்பதாக வெஸ்ட்லாண்ட் மாவட்ட மேயர் ஹெலன் லாஷ் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடுகளிலும் பண்ணைகளிலும்தான் அவர்கள் வாழ்கின்றார்கள். இங்குதான் அவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்; தமது பிள்ளைகளை வளர்த்துள்ளார்கள். இது எவருடனும் கலந்துரையாடுவதற்கு மிகவும் கடினமான விடயமாகும். ஆனால், கிராமத்தின் வடபகுதியைப் பாதுகாக்க வேண்டுமானால் இதனை நாம் பரிசீலித்தே ஆக வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருக்கும் கிராமம்:
தொழில்நுட்ப அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழுவொன்றை லாஷ் அமைத்துள்ளார்.
2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்திடம் திட்டமொன்றைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
நவம்பர் 27ஆம் திகதி நாட்டின் தேர்தல் முடிவுகள் இறுதியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அமையவுள்ள அரசாங்கமே இப்பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்கும்.
இயற்கை அனர்த்த அபாயங்களுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளுக்கான தழுவல் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை உள்ளூராட்சி சபைகள் உருவாக்குவதை உறுதிப்படுத்தும் சட்டங்களைத் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் சைமன் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கம் போதிய அவசரத்துடன் செயற்படவில்லை என பேராசிரியர் புல்லர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் டவுரங்கா பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மண்சரிவை அவர் ஓர் எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னரே அப்பகுதியின் அபாயம் அறியப்பட்டிருந்தது.
“அத்தகையதொரு சம்பவம் பிரான்ஸ் ஜோசப் கிராமத்தில் இடம்பெறுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. அபாயம் என்னவென்பது எமக்குத் தெரியும். அதற்கான தீர்வும் எம்மிடம் உள்ளது. அதற்கு முதலீடுதான் தேவை. இங்கு எவரும் உயிரிழக்க வேண்டிய அவசியமில்லை” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
(நன்றி: தி கார்டியன்)
