~ பியோட்டர் சாவர், மைக்கேல் குடியர், ஹரியட் அகர்ஹோம் மற்றும் பிலிப் மக்மஹோன் – தி கார்டியன்
2024 ஒக்டோபர் மாத இறுதியில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இராணுவத் தலைமையகம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சார்ஜன்ட் அலெக்ஸி போல்கோவ், தனது மனைவி நடால்யாவிடம் தொலைபேசியில் பேசினார்.
“இங்கு நடந்துகொண்டிருப்பவை பயங்கரமானவை. நான் வீடு திரும்பியதும் உன்னிடம் சொல்கிறேன்” என்றார்.
ஆனால், அவர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை.
29 வயதை எட்டிய சிறிது காலத்திலேயே, ஐந்து வாரங்களுக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது இராணுவத் தளபதியால் எழுதப்பட்ட அறிக்கையொன்றை ‘தி கார்டியன்’ பார்வையிட்டுள்ளது.
“அவர் உயிரிழந்த நாளன்று, மற்றவர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்ட மனநிலையில் காணப்பட்டார்” என்று அந்தத் தளபதி குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைன் மீதான முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பமானதிலிருந்து தற்கொலை செய்துகொண்டதாகப் பதிவுசெய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்களில் போல்கோவும் ஒருவர்.
ரஷ்ய அரச புள்ளிவிபர நிறுவனமான ‘ரோஸ்ஸ்டாட்’ (Rosstat) அமைப்பின் இரகசியத் தரவுகளை ‘தி கார்டியன்’ ஆய்வு செய்ததன் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளிலோ உயிரிழந்த மேலும் 885 இராணுவ வீரர்களின் மரணங்கள், ‘நோக்கம் தீர்மானிக்கப்படாத துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஏற்பட்ட மரணங்கள்’ எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இத்தகைய வகைப்படுத்தல் தற்கொலைகளை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட பல மரணங்கள் உண்மையில் தற்கொலைகள் என்பதை ‘தி கார்டியன்’ தனிப்பட்ட விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கை ரஷ்ய இராணுவத்தின் ஒரு ரெஜிமென்ட் எனப்படும் படைப்பிரிவின் வீரர்களது எண்ணிக்கைக்கு நிகராக உள்ளது.
கடுமையான மன அழுத்தத்தில் ரஷ்ய இராணுவம்:
உண்மையான தற்கொலை எண்ணிக்கையைவிட இந்தப் புள்ளிவிபரங்கள் மிகக் குறைவாகவே இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் போரில் பாரிய உயிரிழப்புகளும் கடுமையான இராணுவ ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் ரஷ்யப் படையினரின் மனவுறுதியைப் பாதித்துள்ள நிலையில், அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றிய இதுவரை வெளிவராத அரிய தகவல்களை இந்தத் தரவுகள் வழங்குகின்றன.
இராணுவ வீரர்களின் தற்கொலைகள் பெரும்பாலான போர்களிலும் காணப்படும் ஒரு பிரச்சினையாகும்.
2023ஆம் ஆண்டில் மட்டும் பணியிலிருந்த குறைந்தது 158 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ விசாரணையொன்று கண்டறிந்திருந்தது.
ஆனால், ரஷ்ய இராணுவத்தில் சக வீரர்கள் மற்றும் தளபதிகளிடமிருந்து வரும் கடுமையான அழுத்தங்கள், மிகவும் ஆபத்தான போர்ப் பணிகளுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் போன்றவை இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரிலிருந்து விலகுவதற்கு நடைமுறையில் எந்தவொரு வாய்ப்பையும் வழங்காத இராணுவ சேவை ஒப்பந்தங்களும் வீரர்களின் விரக்தியை அதிகரிக்கின்றன.
“இராணுவ வீரர்களை முன்னேறிச் செல்ல நிர்ப்பந்திப்பதற்காக ரஷ்ய இராணுவம் பெருமளவிலான வற்புறுத்தல்களைப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்; சித்திரவதைகளுக்கும் பல்வேறு வகையான உடல்ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்” என்று வெளிநாட்டுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ரொப் லீ தெரிவித்தார்.
“எனவே, சில வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது ஆச்சரியமளிக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
11 மில்லியன் இறப்புச் சான்றிதழ்கள்:
பெலாரஸ் எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய ‘சைபர் பார்ட்டிசன்ஸ்’ என்ற இணைய ஊடுருவல் குழுவும், உக்ரைனின் ‘சைலன்ட் குரோ’ என்ற இணைய ஊடுருவல் குழுவும் பெற்றுக்கொண்ட 11 மில்லியனுக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களிலிருந்து இந்தத் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
ரஷ்ய இராணுவத்தில் இடம்பெறும் தற்கொலைகள் தொடர்பான புள்ளிவிபரங்களை கிரெம்ளின் வெளியிடுவதில்லை. போரில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான எண்ணிக்கைகளையும் அது அரச இரகசியமாகக் கருதுகின்றது.
‘தி கார்டியன்’ அடையாளம் கண்ட 1,087 இராணுவத் தற்கொலைகளில், குறைந்தது 614 மரணங்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள உக்ரைன் பகுதிகளிலோ அல்லது உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ரஷ்யப் பிராந்தியங்களிலோ இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெல்கொரோட் மற்றும் பிரியான்ஸ்க் பகுதிகளில் இவை பதிவாகியுள்ளன.
மேலும் 113 பதிவுகளில் மரணம் இடம்பெற்ற இடம் குறிப்பிடப்படவில்லை.
பாதிக்கும் மேற்பட்ட தற்கொலைகள் துப்பாக்கிகளுடன் தொடர்புடையவையாக இருந்துள்ளன. குறிப்பாக போர்முனைக்கு அண்மித்த பகுதிகளில் இத்தகைய மரணங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
இராணுவ முகாம்கள், போர்க்கள நிலைகள், பயிற்சித் தளங்கள் மற்றும் தனியார் வீடுகளில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
உயிரை மாய்த்துக்கொள்ளும் இளம் வீரர்கள்:
போர்ப் பகுதிகளில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 43 பேர் வெறும் 18 அல்லது 19 வயதுடைய இளம் வீரர்களாவர்.
போர்முனையிலிருந்து தொலைவிலுள்ள ரஷ்யாவின் ஏனைய பகுதிகளில் தற்கொலை செய்துகொண்ட 25 வயதுக்குட்பட்ட 108 ஆண்களும் இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் சிலர் கட்டாய இராணுவ சேவைக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்களாக இருக்கலாம்.
இத்தகைய வீரர்கள் உத்தியோகபூர்வமாக உக்ரைனில் போரிட அனுப்பப்படுவதில்லை என்றபோதிலும், போர்க்களத்திற்கு அவர்களை அனுப்புவதற்கு வழிவகுக்கும் இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு பலர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் தற்கொலைகள்
போர் நீடித்துச் செல்லும் நிலையில், பதிவுசெய்யப்பட்ட இராணுவத் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
| ஆண்டு | பதிவுசெய்யப்பட்ட தற்கொலைகள் |
| 2022 | 50க்கும் அதிகம் |
| 2024 | 200க்கும் அதிகம் |
| 2025 | 365 |
| 2026 | சுமார் 300 |
2025ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 365 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த அதிகரிப்பு ரஷ்யாவின் ஒட்டுமொத்த போர்க்கால உயிரிழப்புகளின் போக்கையும் பிரதிபலிக்கின்றது.
2026ஆம் ஆண்டுக்கான பதிவுகள் இன்னும் முழுமையடையாத நிலையிலும், போர்க்களத்தின் உண்மை நிலவரத்தைவிட தரவுகள் தாமதமாகப் பதிவேற்றப்படும் சூழலிலும், ஏற்கெனவே சுமார் 300 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
போர் ஆரம்பமானதிலிருந்து ஓர் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
ரஷ்ய இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லும் வீரர்களுக்கு உதவிவரும் செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
மறைக்கப்படும் மரணங்கள்:
ரஷ்ய இராணுவ வீரர்கள் படையிலிருந்து வெளியேற உதவும் ‘இடிட்டே லெசோம்’ அமைப்பின் பேச்சாளர் இவான் சுவில்யாயேவ், இந்தப் புள்ளிவிபரங்கள் குறைவான மதிப்பீடாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
“உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்பது வெளிப்படையானது” என்றார் அவர்.
போர்முனையை, தகவல்கள் வெளியே கசிய முடியாத மூடப்பட்ட தகரப் பேழையொன்றுக்கு அவர் ஒப்பிட்டார்.
“போர் தொடர்பான ஏனைய புள்ளிவிபரங்களைப் போலவே, ரோஸ்ஸ்டாட்டின் புள்ளிவிபரங்களும் இராணுவ நிர்வாகத்தின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்கு அனுப்பப்படும் அறிக்கைகளின் தொகுப்புகள்தான்.”
“ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம். ஆனால் ஆவணங்களில் அவர் ஒரு வீரராகச் சித்தரிக்கப்படலாம். அவரது பெற்றோருக்குப் பதக்கமொன்றுகூட அனுப்பிவைக்கப்படலாம்” என்று சுவில்யாயேவ் தெரிவித்தார்.
துல்லியமான எண்ணிக்கைகளைப் பதிவுசெய்வதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கறை இருப்பதில்லை என்றும், அத்தகைய புள்ளிவிபரங்கள் இராணுவத்தின் உயர் அதிகாரிகளால் ஆராயப்படும் என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர்க்களத்தில் தற்கொலை செய்துகொள்ளும் பல ரஷ்ய வீரர்களின் மரணங்கள், தற்கொலைகளாக அல்லாமல் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளாகவே பதிவுசெய்யப்படக்கூடும் என சுவில்யாயேவும் ரொப் லீயும் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய துயரச் சம்பவங்கள் போர்முனையிலிருந்து வெளியாகிய பல காணொளிகளில் பதிவாகியுள்ளன.
ரோஸ்ஸ்டாட்டின் தரவுகளிலும் இந்த முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன.
குடும்பங்களுக்குச் சொல்லப்படும் தகவல்களும் அரச பதிவுகளும்
இர்குட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த 62 வயதான லெப்டினன்ட் கேணல் செர்ஜி சவேனொக், 2022 செப்டெம்பரில் தன்னார்வமாக இராணுவ சேவையில் இணைந்துகொண்டார்.
போர்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர், தனது உள்ளூர் சமூக நிலையத்தின் மேடையில் ஏறி, தன்னுடன் போருக்குச் செல்லவிருந்த வீரர்களிடம் அவர் உரையாற்றும் காணொளியொன்று உள்ளது.
தானும் டொன்பாஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்று கூறிய அவர், எதிரிகளைத் தோற்கடிக்குமாறு வீரர்களுக்கு ஆக்ரோஷமாக அழைப்பு விடுத்தார். அவரது பேச்சுக்குக் கரகோஷம் எழுந்தது.
2023 ஜூலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் தற்கொலை என அவரது மனைவி யெலெனாவிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், ரோஸ்ஸ்டாட்டின் தற்கொலைப் பதிவுகளில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
அவரது பிறந்த திகதியுடன் பொருந்தும் இறப்புச் சான்றிதழில், நோக்கம் தீர்மானிக்கப்படாத துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் ஏற்பட்ட மரணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற காரணங்களுடன் பதிவுசெய்யப்பட்ட 1,038 இராணுவம் சார்ந்த மரணங்களை ‘தி கார்டியன்’ அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் 885 மரணங்கள் உக்ரைனிலோ அல்லது அதனுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ரஷ்யப் பகுதிகளிலோ இடம்பெற்றுள்ளன.
2022 கோடைக்காலத்தில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் சொலொட்கே கிராமத்திற்கு அருகில் உயிரிழந்த 21 வயதான அலெக்ஸாண்டர் லாசோர் என்ற இராணுவ வீரரின் மரணமும் தற்கொலைப் பதிவுகளில் இடம்பெறவில்லை.
அவர் போரில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரோஸ்ஸ்டாட் தரவுகளிலும் போரின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவர் உயிரிழந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவருடன் பணியாற்றிய இரண்டு இராணுவ வீரர்கள், லாசோர் தற்கொலை செய்துகொண்டதாகத் தங்களது படைப்பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததை ‘தி கார்டியன்’ பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினர்.
“அவர் தற்கொலை செய்துகொண்டதாக எமது படைப்பிரிவில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை எமது படைப்பிரிவுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அதனை மறைக்கத் தீர்மானித்திருக்கலாம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லும் ஆயிரக்கணக்கான வீரர்கள்:
ரஷ்ய இராணுவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் ஓர் அறிகுறி மட்டுமே இந்தத் தற்கொலைகளாகும்.
2025 மே மாத இறுதிக்குள் இராணுவ சேவையை மேற்கொள்ள மறுத்த 20,662 பேருக்கு எதிரான வழக்குகள் ரஷ்ய இராணுவ நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக சுயாதீன ஊடகமான ‘மீடியாசோனா’ தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான வழக்குகள் அனுமதியின்றி இராணுவப் பணியிலிருந்து விலகியமை தொடர்பானவையாகும்.
இந்தத் தரவுகளைச் சரிபார்த்த ‘ஐஸ்டோரீஸ்’ ஊடகம், ரஷ்ய ஆயுதப் படைகளைச் சேர்ந்த குறைந்தது 49,000 வீரர்கள் படையிலிருந்து தப்பியோடியவர்களாகவோ அல்லது அனுமதியின்றிப் பணிக்கு சமூகமளிக்காதவர்களாகவோ அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.
‘இடிட்டே லெசோம்’ அமைப்பின் உதவியுடன் இராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பொதுவாகக் காணப்பட்டதாக சுவில்யாயேவ் தெரிவித்தார்.
“நிச்சயமாக அத்தகைய எண்ணங்கள் தோன்றுகின்றன. தான் எத்தகைய சூழ்நிலையில் சிக்கியிருக்கிறேன் என்பதை ஒருவர் உணர்ந்துகொண்ட பின்னர், அத்தகைய எண்ணங்கள் அடுத்த கட்டமாக உருவாகின்றன” என்றார் அவர்.
(மனநல உதவியும் ஆதரவும்
பிரித்தானியாவில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மனநல ஆதரவை வழங்கும் தொண்டு நிறுவனமாக ‘Combat Stress’ செயற்படுகின்றது.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் ‘Samaritans’ அமைப்பை 116 123 என்ற இலவசத் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம்.
அமெரிக்காவில் 988 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது 988lifeline.org இணையத்தளத்தின் மூலமோ உதவியைப் பெறலாம்.
அவுஸ்திரேலியாவில் ‘Lifeline’ அமைப்பை 13 11 14 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். ஏனைய நாடுகளுக்கான உதவிச் சேவைகளை befrienders.org இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.)
(மூலம்: தி கார்டியன்)
