சிவாஜிலிங்கத்தின் அரசியலும் தமிழ்ச்சனத்தின் எதிர்வினையும்

சிவாஜிலிங்கத்தின் அரசியலும் தமிழ்ச்சனத்தின் எதிர்வினையும்

~ கருணாகரன்

“எப்படியான காலத்தில் வாழ்கிறோம்!” என்று தெரியவில்லை. நடப்பவற்றைப் பார்க்கும்போது எது உண்மை?எது பொய்? எது சரி? எது தவறு?என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழப்பமாக உள்ளது. 

வேறொன்றுமில்லை, சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி எழுதப்படுகின்ற – பேசப்படுகின்ற வார்த்தைகள் கனவா நிஜமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. சில நாட்களுக்கு முன்பு அரசியற் பத்தியாளர் சி. அ. யோதிலிங்கம் மறைந்தபோதும் இப்படித்தான் புகழ் வார்த்தைகளால் தமிழ்ச் சமூக வெளி நிரப்பப்பட்டது. 

இப்பொழுது சிவாஜிலிங்கத்தைப் பற்றிய புகழ் வார்த்தைகள்.  

“தமிழ்த் தேசியத்தின் பெரும் பற்றாளர்’,  ’அடங்காத தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்”,“பொருளாதார ரீதியில் தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாதவர்”,“சிவாஜிலிங்கத்தைப் போன்றதொரு துணிச்சலான செயற்பாட்டாளரை இனிக் காண்போமா?”,“தன்னலத்துக்காக எந்த முகாங்களோடும் சமரசம் செய்து கொள்ளாதவர்”, “One Man Army” என்றெல்லாம் சொல்லிச் சிவாஜிலிங்கத்தை அலங்கரிக்கிறார்கள். 

சிவாஜிலிங்கத்தின் மரணத்திற்குப் பிறகான சோடனை இதுவா? இதைத் தமிழ்ச் சமூகம் ஆழ்ந்து சிந்தித்துத்தான் செய்கிறதா?அல்லது சம்பிரதாயமாக எதையாவது செய்வோம் என்பதற்காக இப்படிச் செய்கிறதா? அல்லது ‘தமிழ்த்தேசியவாதம்’ என்பதை அது எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது? என்று கேட்க வேண்டியுள்ளது. ஆனால்,சிவாஜிங்கத்தைப் பொறுத்தவரையில் இவற்றில் உண்மையுண்டு. அதேயளவுக்கு இதைக்குறித்தும், இந்தப் போக்கைக் குறித்தும் நாம் பேசவேண்டியுள்ளது. 

உண்மையில் சி.அ.யோதிலிங்கம், ம.க. சிவாஜிலிங்கம் ஆகியோரைப் பற்றிய இந்தப் புகழ் வார்த்தைகளைத் தமிழ்ச் சமூகம் தன்னுடைய ஆழ்மனதில் இருந்து சொல்வதாக இருந்தால், அது சிவாஜிலிங்கத்தை தேர்தல்களில் வெற்றி பெற வைத்திருக்கும். யோதிலிங்கத்தை தன்னுடைய அரசியல் வழிகாட்டியாகக் கொண்டிருக்கும். இருவருக்கும் உரிய இடத்தை – அதிகாரத்தை – அங்கீகாரத்தை வழங்கியிருக்கும். இருவராலும் தமிழ்ச் சமூகம் ஒரு படியேனும் உயர்ந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 

பாராளுமன்றத் தேர்தல்களில் சிவாஜிலிங்கமும் அவருடைய சகபாடியான என். ஸ்ரீகாந்தாவும் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய தமிழ்த்தேசியக் கட்சியை அது ஆதரித்து வலுப்படுத்தியிருக்கும். ஆனால்,அப்படியெல்லாம் நடக்கவில்லை. மட்டுமல்ல, தங்களுடைய இயக்கமும் தாய்க்கட்சியுமான ரெலோவிலிருந்து இருவரும் வெளியேற்றப்பட்டனர். இவ்வளவுக்கும் ரெலோவை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து, அதனுடைய தலைவர் சிறிசபாரத்தினத்தை கொன்றபின்னர், புலிகளின் அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி விட்டு, ரெலோவை மீள்நிலைப்படுத்தியது சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவுமே. இதை ரெலோவின் மூத்த போராளியும் இப்போதைய தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகவே மதிப்போடு  கூறியிருக்கிறார். இருந்தும் இருவரையும் ரெலோ வெளியேற்றியது. அப்படித்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் இருவரும் விலக்கப்பட்டனர். ஆக, சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமிழ்த்தேசியக் கட்சிகளாலும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அபிமானிகளாலும் கைவிடப்பட்டிருந்தனர்.

இவ்வளவுக்கும் விடுதலை அரசியலின் வழி வந்த இன்றைய தலைவர்களில் மூத்தவர்கள் இவர்கள். 

சிவாஜிலிங்கம் மறையும்போது, அவருடைய சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரசபையில் தவிசாளராக இருந்தார். அது கூட அவருடைய நோய் நிலைமையைக் கருத்திற் கொண்டு, சபையில் உள்ள ஏனையோரால் அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு விட்டுக் கொடுப்பு அல்லது இறுதி மதிப்பளிப்பு எனலாம். மற்றும்படி அவர் இறங்குவரிசையிலேயே தமிழ் அரசியற் பரப்பிலும் தமிழ்ச் சமூக வெளியிலும் வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம், ஒரு காலம் ரெலோவின் தலைவர்களில் ஒருவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். தமிழ்த்தேசிய அரசியலை உக்கிரமாகப் பேசுகின்றவர்களில் முக்கியமானவர். போர்க்குற்றத்தை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்க வேண்டும். காணாமலாக்கப்பட்டோர் விடயங்களுக்கான நீதி வேண்டும் என ஜெனிவா வரை சென்று குரல் கொடுத்தவர் என்றெல்லாம் தீவிரநிலையில் இருந்தவரைத் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பும் தமிழ் மக்களும் வைத்திருந்த விதம் இதுவே. 

மட்டுமல்ல, கடந்த ஆண்டு (2025) சிவாஜிலிங்கத்துக்கு மருத்துவம் செய்வதற்கு நிதி உதவி தேவைப்பட்டது. அதற்குப் பொதுவெளியில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையைப் பற்றியும் அவருக்குச் சேர்ந்த நிதியைப் பற்றியும் கூட எதிரும் புதிருமாக தமிழ்ச் சமூகம் பேசியது. இதனால் தனக்குக் கிடைக்கப்பெற்ற நிதி பற்றிய கணக்கு விவரங்களைப் பகிரங்கப்படுத்தி, மீதிப் பணத்தை தான் என்ன செய்யப்போகிறேன் என்று சிவாஜிலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தார். அந்தளவுக்கு அந்த நோயாளியைத் தமிழ்ச் சமூகம் பாடாய்ப்படுத்தியது. இப்படியெல்லாம் செய்த சமூகமே இப்பொழுது அவர் மரணித்தவுடன் அவருக்குப் புகழ் வார்த்தைகளால் அலங்கரிப்புச் செய்கிறது. 

உண்மையில் இது சிவாஜிலிங்கத்துக்கான தகுதிநிலைப்படுத்தலா?அதாவது அவருக்கான மதிப்பளித்தலா? அல்லது தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான உத்தியில் – தன்னுடைய குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான முயற்சியில் – தமிழ்ச் சமூகம் ஈடுபடுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

1986 – 2001 வரையில் சிவாஜிலிங்கம், துரோகிப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரெலோவை விடுதலைப் புலிகள் அழித்து, அதனுடைய தலைவர் சிறிசபாரத்தினத்தைக் கொன்ற பின்னர், அதனை மீளமைப்புச் செய்து வைத்திருப்பதற்கு முதன்மைச் சக்திகளாக சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவுமே இருந்தனர். என்பதால் சிவாஜிலிங்கம் துரோகியாக்கப்பட்டிருந்தார். இதைக் கேள்விக்குள்ளாக்காது அப்பொழுது ஆமோதித்திருந்ததும் இதே தமிழ்த்தேசியவாதமும் தமிழ்ச் சமூகமும்தான். ஆனால், ரெலோவைப் புலிகள் எதிர்த்தபோது, அதற்குச் சமதையாகப் புலிகளையும் சிவாஜிலிங்கம் எதிர்த்தார். புலிகளுடைய கொலைப்பட்டியலில் தன்னுடைய பெயர் இருந்தது என்று ஒரு நேர்காணலின் போது சிவாஜிலிங்கமே சொல்லியிருக்கிறார். சிவாஜிலிங்கத்தின் இயல்பே அதுதான். எவருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்திக் கொள்ளாமல், அவர்களை அல்லது அந்தத் தரப்பினரைச் சவாலுக்குட்படுத்துவார். எப்போதும் ஒரு சாகஸக்காரரைப்போல, தனியாகச் செயற்படுகின்ற பண்பைக் கொண்டவர். தான் எதை நினைக்கின்றாரோ, அதைச் செய்து விடுவதில் அக்கறை கொண்டவர். தான் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். ஒரு கட்டமைப்பில் செயற்படுகின்றவர். தன்னுடைய தீர்மானங்கள் கட்சியின் தீர்மானங்களாக இருக்க வேண்டும். தன்னுடைய செயற்பாடுகள் கட்டமைப்பை எப்படி முன்னகர்த்தும்? எவ்வாறான சாதக – பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றெல்லாம் சிந்திப்பதற்குப் பதிலாக, தன்னை மையப்படுத்திச் சிந்தித்துப் பழகியவர். எந்தச் சவாலையும் துணிகரமாக எடுத்துக் கொள்வது, எதிர்கொள்வது என நாம் புரிந்து கொள்ள முடியும். இதுதான் அவரை அரச எதிர்ப்பாளராக எப்போதும் முன்னிறுத்திக் கொள்வதற்கும் அடிப்படையானது. 

2001 இல் புலிகள் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றோடு ஒரு சமரச ஏற்பாட்டுக்கு புலிகள் இயக்கம் வந்தபோது சிவாஜிலிங்கம் புலிகளை ஏற்பவராக மாறினார். சிவாஜிலிங்கம் புலிகளை மன்னித்தாரா? புலிகள் சிவாஜிலிங்கத்தை மன்னித்தார்களா? என்பது விவாதத்திற்குரியது. அல்லது வரலாற்றுக்கே வெளிச்சம்.

ஆனால் தமிழ்த் தேசியவாதிகளிடம் இந்தப் புகழ் வார்த்தைகளை உருவாக்கியது,2009 க்குப் பின்னரான சிவாஜிங்கத்தின் செயற்பாடுகளே. 2009 இன் பின்னர் போராட்டத்தில் இறந்த மக்களையும் போராளிகளையும் நினைவு கொள்ளும் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தது தொடக்கம், அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளை உருவாக்குவது வரையில் சிவாஜிலிங்கம் முதன்மை ஆளாகச் செயற்பட்டார். முதலில் ஒற்றை மனிதராக நினைவு கூரல்களைச் செய்யத் தொடங்கினார். விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்வதோ, புலிகளின் அடையாளங்களைப் பிரதிபலிப்பதோ நெருக்கடியை உருவாக்கும் என்று பலரும் அச்சமடைந்திருந்த சூழலில், அவற்றைத் தன்னுடைய அரசியல் அடையாளமாக மாற்றிக் கொண்டு, இயங்கினார் சிவாஜி. புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பெற்றோருடைய விடயங்களைப் பொறுப்பேற்றது தொடக்கம் பல விடயங்கள் சிவாஜிலிங்கத்தின் செயற்பாடுகளாக இருந்தன. இதனால் அவர், அவருடைய ரெலோவுக்குள்ளும் அவர் இணைந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் அவர் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. சிவாஜிலிங்கத்தின் இயல்பு இதுதான். தனக்குத் தோன்றியதைத் துணிவோடு செய்து விடுவார். அதைப்பற்றிய விமர்சனங்களையோ, அதற்கு உண்டாகும் எதிர்ப்புகள், நெருக்கடிகளைப் பற்றியோ அவர் கவலைப்படுவதே இல்லை. 

எனவேதான் தொடர்ந்தும் அவர் வடக்கு மாகாணசபையில் அரசாங்கத்துக்கு எதிராகப் பல பிரேரணைகளைக் கொண்டு வந்தார். படையினருடைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை அவர் தனித்தும் கூட்டாகவும் செய்தார். முக்கியமாக 2009 க்குப் பின்னர் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இராணுவ மேலாதிக்கமே மேலோங்கியிருந்தது. தேர்தல்களை நடத்தி, ஜனநாயகச் சூழல் ஒன்று வடக்குக் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டங்கள் தராளமாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்று காட்டுவதற்கு அரசாங்கம் முற்பட்டபோதும், படை ஆதிக்கச் சூழலே மெய்யாக நிலவியது. படை ஆதிக்கத்தின் மூலமான அச்ச உளநிலையை மக்கள் மீது பிரயோகிப்பதை ஒரு உத்தியாக அன்றைய மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பின்பற்றியது. இதனால் மக்கள் வெளிப்படையாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அஞ்சியிருந்தனர். அந்த அச்சத்தை உடைப்பதில் சிவாஜிலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அந்த இறுக்கமான நாட்களில் அவர் படைகளின் விதிமுறைகளை உடைக்கும் துணிச்சல் மிக்க ஒருவராக சிவாஜி இருந்தார். 

இதேவேளை சிவாஜிங்கத்தின் பிந்திய கால பிரகடனங்களும் செயற்பாடுகளும் இலங்கை அரசை நோக்கியதாகவும் சக தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுத்தோரையும் நோக்கிய இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். “புலிகளைத் தோற்கடித்து விட்டால், அது தமிழர்களைத் தோற்கடித்து விட்டதாக அர்த்தமில்லை. புலிகள் இல்லை என்றால், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளும் அரசியற் கோரிக்கைகளும் அதற்கான போராட்டமும் இல்லாமற் போய்விடும் என்று கருத முடியாது. அரசியற் தீர்வென்றை எட்டும் வரையில் அவை தொடரும். போரில் வென்ற பின்னர், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு, தமிழ் மக்களுடைய செயற்பாடுகளை நீங்கள் தீர்மானிக்கவும் வரையறுக்கவும் முடியாது’’ என்று இலங்கை அரசுக்குத் தனி நபர் பிரகடனத்தைச் செய்து, அந்தப் பிரகடனங்களின் வழியாகச் செயற்பட்டவர் சிவாஜிலிங்கம்.  

மறுவளத்தில் சிவாஜிங்கம், 2010 க்குப் பின்னரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியற் தடுமாற்றங்களையும் ரெலோவின் குழப்பகரமான நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். இதனால்  தாய்க்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திலும் (TELO) கூட்டுச் சேர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அவர் ஒரு முரணியக்கவாதியாகவே இருந்தார். என்பதால்தான் “சிவாஜிலிங்கத்தைக் கையாள்வது கடினம். அவர் எடுக்கின்ற தீர்மானங்களும் அவருடைய நடவடிக்கைகளும் பரபரப்பாக எப்போதும் இருக்கின்றனவே தவிர, அரசியல் ரீதியாக அழுத்தம் பெற முடியாதவையாக இருக்கின்றன“ என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தன் சொல்ல வேண்டியிருந்தது. இதற்குத் தடலடியாக சிவாஜிலிங்கமும் பதிலளித்திருக்கிறார். அவை கடுமையாக சம்மந்தனையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் விமர்சிப்பதாக – குற்றம்சாட்டுவதாக இருந்தது.

மட்டுமல்ல, 2016 இல், தமிழ் மக்கள் பேரவை (TPC) ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொண்டு அவ்வடிப்படைகளிலே நுட்பமான, சிக்கலான குறைப்புகளை, ‘ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத இலங்கை’ என்ற தமிழரசுக்கட்சியின் அதே வரம்புக்குட்பட்ட கூட்டாட்சித் (சமஷ்டி) தீர்வை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, இறைமையுள்ள அரசுகளின் இணைப்பாட்சியை (Confederation) அதனிலும் உயர்வான மாற்று அரசியற் தீர்வை வலியுறுத்தியவர் சிவாஜிலிங்கம். 2019 இல் அவர் முன்வைத்த, கூட்டாட்சியைக் கீழெல்லையாகக் கொண்ட தீர்வுக் கோரிக்கையில் சமரசக் கூறுகள் இருந்தபோதிலும், 2016 இன் இணைப்பாட்சி முன்மொழிவு, இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் கைவிடாத அரசியற் தீர்வு குறித்த சிந்தனையில் முன் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கிறது என்ற பார்வையும் உண்டு. ஒன்றிய அரசிடம் ஒப்படைக்காத அதிகாரங்கள் யாவும் அரசுகளிடமே இருப்பதையும், ஈழத் தமிழர் தமது அரசியல் எதிர்காலத்தைப் பொதுவாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் உரிமையையும் அவரது முன்மொழிவு வெளிப்படையாகப் பாதுகாத்தது என்ற நோக்கையும் சிவாஜிலிங்கம் பெற்றார். 

இவ்வாறு எப்போதும் தன்னைத் தீவிர நிலையில் வைத்துக் கொண்டு இயங்குவதே சிவாஜிலிங்கத்தின் இயல்பு. அவருடைய அரசியற் செயற்பாடுகளும் அரசியல் சொல்லாடல்களும் இதற்கு ஆதாரம். சிலவேளை இவை கடுமையான விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கின்றன. சிலபோது அரசியற் கோமாளித்தனமாகவும் அவை நோக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கில்லாரி கிளிங்டன் வெற்றியடைய வேண்டும் என்று நல்லூரில் அவர் 1008 தேங்காய்களை உடைத்தமை போன்ற செயல்கள். நடைமுறைச் சாத்தியமற்ற பல வெற்றுப் பிரகடனங்கள். உணர்ச்சிகரமானவை என்பதற்கு அப்பால் எந்தப் பயனுமில்லை என்ற காலாவதியாகிப்போன அரசியற் சிந்தனைகள். ஆனால் எல்லாவற்றுக்குமான மீடியாக் கவர்ச்சியைச் சிவாஜிலிங்கம் பெற்றிருந்தார். 

இது முக்கியமானதொரு அவதானமாகும். தமிழ்ச் சூழலின் பொது இயல்பைச் சிவாஜிலிங்கம் மதி்ப்பிட்டிருந்தார். எதைச் சொன்னால் அல்லது எதைச் செய்தால், மீடியாவில் கவனம் பெறலாம் என்பது அவருக்குத் தெரியும். அந்தக் கவனமும் முக்கியத்துவமும் வாக்குகளாக மாறாது என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், தன்னை அது எப்போதும் முதல்நிலை அரசியல் அடையாளமாக நிறுத்திக் கொள்ளும் என்பதை அறிந்திருந்தார். 

இதனால்தான் அவருடைய 2009 க்குப் பிந்திய காலச் செயற்பாடுகள், 2001 க்கு முன்னரான அவருடைய “ரெலோ காலச் செயற்பாடுகளின் அடையாளத்தை“ மறைக்கக் கூடியதாக இருந்தது. குறிப்பாக 1990 களிலிருந்து கொழும்பிலும் படைக்கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா, மன்னார், மட்டக்களப்புப் பகுதிகளில் மையம் கொண்டியங்கிய ரெலோவின் அடையாளம் இப்போதில்லை. இதுதான் தராகி சிவராம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம் போன்றோருக்கு நடந்ததும். நீங்கள் ஒருகாலம் எதுவாகவும் எப்படியானவராகவும் இருந்திருக்கலாம். இறுதியில் நீங்கள் என்னவாக, எப்படியானவராக இருந்தீர்கள் என்பதே உங்களுடைய அடையாளத்தை நிர்ணயிக்கும் என்ற ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு அண்மைய ஆதாரம் சிவாஜிலிங்கம்.

தொகுத்துச் சொன்னால், தன்னுடைய கடந்த (ரெலோ) கால வரலாற்றைக் கடந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு இராணுவ ரீதியில் முற்றாக அழித்த பின்னர் உருவாகிய தமிழ்த்தேசியவாத அரசியற் சூழலைக் கட்டமைத்ததில் சிவாஜிங்கத்துக்கு கணிசமான பங்குண்டு. சிவாஜிலிங்கத்தைத் தொடர்ந்தே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன், ரவிகரன், சுகாஸ், ஐங்கரநேசன் போன்றோர் விடுதலைப் புலிகளின் நீட்சியாகத் தம்மை அடையாளப்படுத்துவதில் முனைப்புக் கொண்டனர். அதாவது, போருக்கு முந்திய, போர்க்கால அரசியல் இது.  என்றால், தோற்கடிக்கப்பட்ட, தோற்றுப்போன அரசியல். இது விமர்சனங்களுக்கும் பகுப்பாய்வுகளுக்கும் உரியது. 

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அரசியல், முற்றிலும் புதியதாக இருந்திருக்க வேண்டும். அது புலிகளின் நீட்சியைக் கொண்டிருக்கவே முடியாது. புலிகளுடைய வரலாற்றுப் பாத்திரம் வேறு. இன்றைய சூழல் வேறு. போருக்குப் பிந்திய நிலவரம் வேறு. அது போரின் நேரடிப் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களிடையே ஏற்பட்டுள்ள உளவியல் காயங்கள், இழப்புகள் மற்றும் சமூகப் பிளவுகளைச் சீர்செய்வது என நீண்டது. பெரும் சவாலானது. அத்துடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் எனப் பல சமூகச் சூழலின் முக்கியப் பிரச்சினைகளைக் கொண்டது. படை விலக்கல், காணாமலாக்கல் தொடக்கம், அரசியல் அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளாதார மேம்பாடு எனப் பலவற்றோடு பின்னிப் பிணைந்தது. 

ஏனெனில் இது போருக்குப் பிந்திய அரசியல் – சமூகச் சூழல் (Post-war socio-political environment). பல விதமான உள் – வெளி முரண்பாடுகளும் சிக்கல்களும் நிறைந்தது. இதனை மேலெழுந்தவாரியாக – பாரம்பரிய அரசியல் நடைமுறைகளில்  கையாள முடியாது. மட்டுமல்ல, இன்றைய உலக நிலவரமும் வேறு. இதனைக் கவனத்திற் கொண்டு அல்லது இதனை மதி்ப்பிட்டே இன்றைய அரசியல் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்; செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல்,இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளை (செயற்பாடுகளை) பதில் இனவாத அடிப்படையில் எதிர்கொள்வது பொருத்தமற்றது. அதற்கு உலகளாவிய மதிப்பும் இல்லை. உள்ளுர் வலுவுமில்லை. என்பதால்தான் தமிழ்த்தேசியவாத அரசியல் பலவீனமான நிலையில் இருக்கிறது. சிவாஜிலிங்கம் தொடக்கியதும் முன்னெடுத்ததும் பிறரைத் தொடர வைத்ததும் இந்தப் பலவீனமான – தவறான அரசியலையே! 

போருக்குப் பிந்திய அரசியலை இலங்கை அரசும் சிங்களச் சமூகமும்தான் முன்னெடுக்கவில்லை. அது அவர்களுடைய பலவீனமும் தவறுமாகும். சரியாகச் சொன்னால், அது குற்றம். ஏனென்றால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பெரும்பான்மை என்ற பலத்தையும் வைத்திருக்கின்ற தரப்பு நிச்சயமாக அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அது அதைச் செய்யவில்லை. அதைச் செய்யவில்லை என்பதை, அந்தக் குறைபாட்டை, குற்றத்தை தமக்கான பலமாகவும் ஆயுதமாகவும் தமிழ்ச்சமூகம் மாற்றிக் கொள்ளவில்லை. நாம் சமாதானத்துக்கும் அமைதிக்கும் தீர்வுக்கும் தயார் என்பதையும் போருக்குப் பிந்திய, பொருத்தமான அரசியலை முன்னெடுக்கத் தயார் என்பதையும் அறிவுபூர்வமாக தமிழ்ச்சமூகம் சர்வதேச அரங்கில் நிரூபிக்கவில்லை. பதிலாக அது 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வெறும்வாய்ப் பிரகடன, உணர்ச்சி வசப்படும் அரசியலை மேற்கொண்டது. சில நண்பர்கள் வேடிக்கையாகச் சொல்வதைப்போல, “சுதந்திரன் கால அதிரடி முழக்கங்களைச் செய்யும் அரசியலையே“ தமிழ்ச் சமூகம் கண்டெடுத்தது. இது நகைப்புக்குரியது. 

ஒரு அரசியற் சமூகம் தன்னுடைய வரலாற்றுப் படிப்பினைகளின் அடிப்படையிலும் உலகளாவிய படிப்பினைகளின் அடிப்படையிலும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எளிமையாகச் சொன்னால், சொந்த அனுபவத்தைக் கொண்டாவது சிந்திக்க வேண்டும். இதையே அரசியற் சொல்லாடல்களில் படிப்பினைகளின் அடிப்படையில் எனவும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் என்றும் உலகளாவிய அளவில் குறிப்பிடப்படுகிறது. இதனை மறுதலித்துச் செயற்படுவதென்பது, அடிப்படைத் தவறு அல்லவா?

சிவாஜிலிங்கத்தின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்படும் மதிப்பு என்பது, அவருடைய அரசியற் தெரிவுகளுக்கும் அரசியற் செயற்பாடுகளுக்கும் வழங்கப்படும் மதிப்பாகவே அமையும். சிவாஜிலிங்கம் என்ற தனி நபரின் வாழ்க்கை, அவருடைய நேர்மை, அவர் பின்பற்றிய எளிமை, செயற்பாட்டுத்திறன், துணிவு போன்ற தனிப்பட்ட குணாம்சங்களுக்குத் தனி மதிப்புண்டு. ஆனால், அவர் முன்னெடுத்த அரசியல், அது இன்று உருவாக்கியிருக்கின்ற விளைவுகள் என்று பார்த்தால், அவற்றுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல, அது ஆபத்தானது, தமிழ்ச் சமூகத்துக்கு எதிரானதும் கூட. 

இதனை மேலும் சான்றுப்படுத்துவதாக இருந்தால், சமூக அரசியல் கருத்தாளர் ஸ்ரீரங்கன் விஜயரட்ணம் குறிப்பிட்டுள்ளவற்றை இங்கே பகிரலாம். “ஒரு மனிதரின் மரணத்தை மதிப்போம்; ஆனால், வரலாற்றை மன்னிப்புப் பத்திரமாக மாற்ற வேண்டாம்! அரசியல் வாழ்க்கையைத் தனது அடையாளமாகக் கொண்ட ஒருவரின் மரணத்துக்குப் பின்னர், அவருடைய அரசியல் வரலாற்றை விமர்சனமின்றிப் புகழ் மாலைகளால் அலங்கரிப்பது வரலாற்று நேர்மையாகாது. ஏனென்றால், தனிப்பட்ட நற்பண்பும் அரசியல் ஜனநாயகப் பண்பும் ஒன்றல்ல.

சிவாஜிலிங்கம் முன்னெடுத்த இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை, ஒரு குறிப்பிட்ட ஆயுத இயக்கத்தின் அரசியல் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியுடன் ஒன்றாக்கிவிடக் கூடாது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஒரே அரசியல் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல. அவர்களுடைய உயிரிழப்புகளை ஒரு இயக்கத்தின் (புலிகளின்) அரசியல் சொத்தாக மாற்றுவதும் சரியல்ல. தமிழர் தேசிய உரிமைப் போராட்டம் என்பது எந்தவொரு ஆயுத அமைப்பின் தனிப்பட்ட சொத்தும் அல்ல. அது , பல தலைமுறைகளின் அரசியல் அனுபவங்கள், உழைப்புகள், இழப்புகள், போராட்டங்கள் ஆகியவற்றின் வரலாற்றுச் சேர்க்கையாகும். அந்த வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஊரின், குடும்பத்தின் அல்லது,  அரசியல் குழுவின் தனியுரிமையாக மாற்றும் முயற்சிகளையும் விமர்சிக்க வேண்டும். இங்குதாம் நாம் சரியான ஆய்வை நோக்கி நகரமுடியும்! 

கிலாரி கிளின்டனுக்காக உடைக்கப்பட்ட 1,008 தேங்காய்கள் கூறும் வரலாற்று அரசியல் என்ன?  அமெரிக்கத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவது இலங்கைத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்று சிவாஜிலிங்கம்  நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இங்கு, நாம் விமர்சிக்க வேண்டியது தனிப்பட்ட மதநம்பிக்கையையோ வழிபாட்டு உரிமையையோ அல்ல.

ஒரு தேசிய இனத்தின் அரசியல் எதிர்காலத்தை இன்னொரு நாட்டின் தேர்தல் வெற்றியோடு இணைத்துப் பார்க்கும் குறுகிய – தெளிவற்ற அரசியல் மனப்பான்மையைத்தான். அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மற்றும் புவிசார் நலன்களால் தீர்மானிக்கப்படுவது. அந்நாட்டின் ஜனாதிபதி மாற்றம் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கிவிடாது. இதனைப் புரிந்துகொள்ளாமல் வெளிநாட்டு அதிகார மையங்களின் தேர்தல் வெற்றிகளைத் தமிழர் விடுதலையின் நம்பிக்கையாக முன்வைப்பது அரசியல் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத அணுகுமுறையாகும்“.

இதேவேளை சிவாஜிலிங்கத்தின் மீது இன்னொரு குற்றச்சாட்டும் மறக்க முடியாத கறையும் உண்டு. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு ஏந்தல் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை கலந்துகொண்டபோது, சிவாஜிலிங்கம் அவரைச் சாதிப் பெயரால் இழிவுபடுத்தியதாக இந்தக் குற்றச்சாட்டுள்ளது.  இது ஒரு தனிமனிதருக்கு எதிரான வசைமொழி மட்டுமல்ல; தமிழ்ச் சமூகத்திற்குள் நீடித்து வரும் சாதிய மேலாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் உள்ளது. இன ஒடுக்குமுறையை எதிர்ப்பதாகக் கூறும் அரசியல், தனது சமூகத்துக்குள் நிலவும் சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்க்க வேண்டும். ஆனால், அதைச் சிவாஜிலிங்கத்தின் தமிழ்த்தேசியவாதம் செய்யவில்லை. உண்மையில் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசும் ஒருவர், சாதிய ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் தனது அரசியலின் ஜனநாயக அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார். இத்தகைய முரண்கள் சிவாஜிலிங்கத்திடம் பல உண்டு. அது அவருடைய குறைபாடு மட்டுமல்ல, தமிழ்த்தேசியவாத அரசியலின் குறைபாடுமாகும். அதனைக் கேள்வியும் விமர்சனமும்  இல்லாமல் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தொடர்வதால்,  அந்தக் குறைபாட்டை – குற்றத்தை அவர்களும் இழைத்து விடுகிறார்கள். 

ஸ்ரீரங்கன் கூறியிருக்கும் சில வார்த்தைகளோடு இந்தக் கட்டுரையை நிறைவாக்கலாம் – 

“சிவாஜிலிங்கம் இன்று உயிருடன் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கட்டும். அவருடன் தனிப்பட்ட உறவு கொண்டவர்கள் தமது நினைவுகளைப் பகிரட்டும். அவரிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுணர்வுடன் எழுதட்டும். ஆனால், அதற்காக அவரது அரசியல் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை அழித்துவிட முடியாது.

அவர் மக்களுக்காகப் போராடியவர் என்று ஒருவர் எழுதினால், அவர் எந்த அரசியல் வழிமுறைகளை ஆதரித்தார் என்பதையும் கேட்க வேண்டும். அவர் தன்னலமற்றவர் என்று ஒருவர் எழுதினால், அவரது அரசியல் நிலைப்பாடுகள் எந்த சமூக விளைவுகளை ஏற்படுத்தின என்பதையும் ஆராய வேண்டும். அவர் இனத்தின் வரலாற்றில் நிலைத்திருப்பார் என்று ஒருவர் எழுதினால், அந்த வரலாற்றில் அவர் சார்ந்திருந்த அரசியல் அதிகார அமைப்புகளின் வன்முறைகளையும் சேர்த்தே எழுத வேண்டும். வரலாறு என்பது ஒருவரின் மரணத்திற்குப் பின்னர் அவருக்காக எழுதப்படும் இரங்கல் மடல் அல்ல. அது மனிதர்களின் செயல்கள், அரசியல் முடிவுகள், சமூக விளைவுகள், அதிகார உறவுகள், வர்க்க முரண்பாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் விமர்சனபூர்வமான பதிவாகும்“.

சமரசமற்றவர், துணிச்சலானவர், தமிழ்த்தேசியப் பற்றாளர் என்பதை நிரூபித்தது சிவாஜிலிங்கத்தின் சிறப்பு என்றே வரலாறு தன்னுடைய நினைவில் வைத்திருக்கப்போகிறது என்று யாரும் கருத முடியாது. வரலாற்றின் படுக்கையில் சிவாஜிலிங்கத்தின் ஏனைய செயற்பாட்டு அடையாளங்களும் நிச்சயமாக இருந்தே தீரும். இது எதைக்குறித்தும் எவரைக் குறித்தும் பன்முக வாசிப்பை நிலை நிறுத்தியிருக்கும் காலம். ஜனநாயக வெளி திறக்கப்பட்டிருக்கும் போது அனைத்துக்குமான இடங்கள் இருந்தே ஆகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *