கொழும்பைத் தூய்மையாக வைத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறந்த பணிச்சூழல், தொழில்சார் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு, உரிய மருத்துவப் பராமரிப்பு மற்றும் கண்ணியம் வழங்கப்பட வேண்டும்!

கொழும்பைத் தூய்மையாக வைத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறந்த பணிச்சூழல், தொழில்சார் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு, உரிய மருத்துவப் பராமரிப்பு மற்றும் கண்ணியம் வழங்கப்பட வேண்டும்!

~ ஜாவிட் யூசுப்/ சண்டே டைம்ஸ்

ஒவ்வொரு நாளும் கொழும்பில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒப்பீட்டளவில் தூய்மையான வீதிகளையும் பொது இடங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவற்றைத் தூய்மையாகப் பராமரிப்பதற்குப் பின்னால் உழைக்கும் மனிதர்களைப் பற்றி அவர்களில் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை.

குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. வீதியோரக் குப்பைத் தொட்டிகள் காலி செய்யப்படுகின்றன. வீதிகள் பெருக்கப்படுகின்றன. கழிவுகள் அகற்றப்பட்டு உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

மழை பெய்தாலும், கடுமையான வெயில் அடித்தாலும், நகரத்தின் ஏனைய மக்கள் பொது விடுமுறையைக் கொண்டாடினாலும் இந்தப் பணிகள் இடையறாது நடைபெறுகின்றன.

ஆனால், இந்தத் தொழிலாளர்கள் ஒரே ஒரு நாள் பணிக்கு வராமல் இருந்தால் என்ன நடக்கும்?

அதன் விளைவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கும். குப்பைகள் குவியும். குடியிருப்புப் பகுதிகளிலும் வர்த்தகப் பகுதிகளிலும் துர்நாற்றம் பரவும். வடிகால்கள் அடைபடும். நகரத்தின் சுற்றுச்சூழல் விரைவாகச் சீர்குலையும்.

பொதுச் சுகாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும்.

கவலையளிக்கும் பணிச்சூழல்:

சில குப்பை சேகரிப்புத் தொழிலாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட சாதாரண உரையாடல்கள், அவர்களது பணிச்சூழல் தொடர்பாகக் கவலையளிக்கும் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

அவர்கள் தெரிவிப்பதன்படி, நாளொன்றுக்கு சுமார் 1,200 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. பணியாற்றும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாத வருமானம் சுமார் 40,000 ரூபாயாக அமைகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர்கள் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஊதியத்துடன் கூடிய வழக்கமான வாராந்த விடுமுறை அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும், ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் அன்றைய ஊதியம் கழிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியவை என்றாலும், அவை உண்மை நிலைமையிலிருந்து பெரிதாக விலகியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இவை சாதாரணமாகப் புறக்கணிக்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல.

இன்றைய கொழும்பின் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது, மாதம் சுமார் 40,000 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமானது. குறிப்பாகக் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு இது பெரும் சுமையாகும்.

அத்துடன், குப்பை சேகரிப்பு என்பது சாதாரணமான தொழில் அல்ல.

கடுமையான உடல் உழைப்பு, மீண்டும் மீண்டும் பாரமான பொருட்களைத் தூக்குதல், நீண்ட தூரம் நடத்தல், தள்ளுதல், இழுத்தல் போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதுவும் பெரும்பாலும் கடினமான காலநிலைகளில் இவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது.

உடல்நல ஆபத்துகள் நிறைந்த தொழில்:

இந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை அவர்களது உடல்நலத்துக்கு ஏற்படும் ஆபத்துகளாகும்.

அழுகிய உணவுக் கழிவுகள், மாசடைந்த குப்பைகள், பயன்படுத்தப்பட்ட சுகாதாரப் பொருட்கள், உடைந்த கண்ணாடிகள், துருப்பிடித்த உலோகங்கள், கூர்மையான பொருட்கள், மருத்துவக் கழிவுகள், இரசாயனப் பொருட்கள் மற்றும் ஏனைய ஆபத்தான கழிவுகளை அவர்கள் நாள்தோறும் கையாள்கின்றனர்.

இதனால் பக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சைகள், பூச்சிகள், எலிகள் மற்றும் காற்றில் பரவும் மாசுத் துகள்கள் ஆகியவற்றின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர்.

கடுமையான வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழை போன்ற சூழ்நிலைகளிலும் அவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் போதிய ஓய்வு, குடிநீர் அல்லது அடிப்படைச் சுகாதார வசதிகள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

போதுமான பாதுகாப்பு உடைகள், கையுறைகள் அல்லது காலணிகள் இல்லாமல் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களைக் காண்பதும் சாதாரணமான விடயமாகிவிட்டது.

ஒரு குப்பைப் பையைத் தூக்கும் தொழிலாளருக்கு அதற்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது.

அதற்குள் பயன்படுத்தப்பட்ட ஊசி, உடைந்த போத்தல் அல்லது நோய்க்கிருமிகளால் மாசடைந்த பொருள் இருக்கலாம். அவை ஏற்படுத்தும் காயங்கள் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

உயிரியல் மற்றும் இரசாயன ஆபத்துகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாவது உடல்நலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மேலும், இத்தொழிலின் கடுமையான உடல் உழைப்பு காரணமாக நீண்டகால முதுகுவலி, முழங்கால் மற்றும் மூட்டுப் பிரச்சினைகள், தசைக் காயங்கள் உள்ளிட்ட எலும்பு, மூட்டு மற்றும் தசை தொடர்பான நோய்களும் ஏற்படக்கூடும்.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள்:

2022ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கையில் நகராட்சி திண்மக் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களின் தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் (Occupational Health and Safety of Municipal Solid Waste Handlers in Sri Lanka) என்ற ஆய்வில், இத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன.

அவற்றில் முதுகுவலி, வழுக்கி விழுதல், முழங்கால் மற்றும் கெண்டைக்கால் வலி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை, கைகளால் பாரமான பொருட்களைக் கையாளுதல் மற்றும் போதிய பயிற்சியின்மை ஆகியவை இப்பிரச்சினைகளுக்குப் பங்களிக்கும் காரணிகளாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கீத்மி திசக்யா மற்றும் பியுமி திசாநாயக்க ஆகிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வு, 2026 ஆகஸ்ட் மாதம் Facilities என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.

இலங்கையின் மூன்று நகராட்சிகளில் திண்மக் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்த ஆய்வு ஆராய்ந்தது.

அதன் முடிவுகள் மிகவும் முக்கியமானவை.

தொழிலாளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களில்கூட அவை பயன்படுத்துவதற்கு ஏற்றவையாக இருக்கவில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ஒரு நகராட்சியில் மூன்று மாதங்களுக்குள் கூர்மையான பொருட்கள் குத்தியதால் ஏற்பட்ட 15 காயங்கள் பதிவாகியிருந்தன.

போதிய ஓய்வு இடைவேளைகள் இல்லாமை, நீண்ட வேலை நேரம், போதுமான கழுவும் வசதிகள் இல்லாமை மற்றும் மருத்துவப் பின்தொடர்புக் கண்காணிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் ஆகியவையும் ஆய்வில் அடையாளம் காணப்பட்டன.

இவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பது யார்?

ஒரு துப்புரவுத் தொழிலாளர் நோய்வாய்ப்பட்டாலோ, காயமடைந்தாலோ மாத்திரம் மருத்துவ உதவி வழங்குவது போதுமானதல்ல.

இந்தத் தொழிலின் தன்மையைக் கருத்திற்கொள்ளும்போது, தொடர்ச்சியானதும் விரிவானதுமான தொழில்சார் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அவசியமாகும்.

தொழிலாளர்கள் பணியில் இணைவதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்தப் பரிசோதனைகளில் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியம், தோல் நோய்கள், எலும்பு, மூட்டு மற்றும் தசை தொடர்பான பிரச்சினைகள், தொழில்சார் ஆபத்துகளால் ஏற்படக்கூடிய ஏனைய நோய்கள் என்பனவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மருத்துவ ரீதியாகத் தேவையான சந்தர்ப்பங்களில் ஏற்புத்தடை (Tetanus) மற்றும் ஹெபடைட்டிஸ் பி (Hepatitis B) போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

பணியிடங்களில் ஏற்படும் காயங்களைப் பதிவு செய்தல், தொழில்சார் நோய்களை அடையாளம் காணுதல், சிகிச்சை வழங்குதல் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

சில தொழிலாளர்கள் பணியாற்றும் காலத்திலோ அல்லது பணியிலிருந்து விலகிய பின்னரோ காசநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கியமான விடயத்தை வலியுறுத்துகிறது.

தொழில்சார் உடல்நலப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு, ஆராயப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் பணியிலிருந்து விலகிய பின்னர் கைவிடப்படக்கூடாது.

உண்மையில், தொழிலாளர்கள் ஓய்வுபெற்றாலோ அல்லது வேலையை நிறுத்தினாலோ அதிகாரிகளின் பொறுப்பு முடிந்துவிடக்கூடாது.

அவர்களது தொழில்சார் மருத்துவப் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அவர்கள் மேற்கொண்ட தொழிலின் தன்மையால் ஏற்பட்டதாக நியாயமாகக் கருதக்கூடிய நோய்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள்கூட இவர்களுக்கு வழங்கப்படுகின்றனவா?

குப்பை சேகரிப்புத் தொழிலாளர்கள் வீதியோர நடைபாதைகளில் அமர்ந்து உணவு உண்பதையும், சிறிது நிழல் கிடைக்கும் இடங்களில் கடினமான தரைகளிலும் வீதியோர மேடைகளிலும் படுத்து ஓய்வெடுப்பதையும் காண முடிகிறது.

இது கவலையளிக்கும் மற்றுமொரு நிலைமையாகும்.

இந்தத் தொழிலாளர்களுக்குச் சுத்தமான கழிப்பறைகள், கைகழுவும் வசதிகள், சவர்க்காரம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர் மற்றும் சுகாதாரமான முறையில் உணவு உண்பதற்கான இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

குப்பைகளால் மாசடைந்த ஆடைகளையே அணிந்துகொண்டு அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலைமை இருக்கக்கூடாது.

கண்ணியமும் சமூகப் பொறுப்பும்:

இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான அம்சமும் உள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்கள் சமூகத்தில் தாழ்ந்த தொழில் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைப்போலப் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்படுகின்றனர்.

ஆனால், குப்பைகளைச் சேகரிப்பதில் எந்தவிதமான தாழ்வும் இல்லை.

மாறாக, இது கடுமையான உடல் உழைப்பை வேண்டிநிற்கும், சமூகத்துக்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கும் தொழிலாகும்.

அவர்களது சேவைகளால் பயனடையும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

இந்தத் தொழிலாளர்களில் பலருக்குத் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்குத் தேவையான கல்வி, வளங்கள் அல்லது பேரம்பேசும் ஆற்றல் போதுமானதாக இல்லை.

தொழிலாளர்கள் தங்களுக்காகத் திறம்படக் குரல் கொடுக்க முடியாத சூழ்நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பது சமூக அக்கறையுள்ள மக்களின் பொறுப்பாகிறது.

சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில்சார் அமைப்புகள், மதத் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது.

இந்தத் தொழிலாளர்களின் நலனைக் கவனிப்பது, சமூகத்தின் ஏனையவர்கள் தூய்மையானதும் ஆரோக்கியமானதுமான சூழலில் வாழ்வதற்காக நாள்தோறும் உழைக்கும் மனிதர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.

லலித் டி சில்வா அண்மையில் வெளியிட்ட Igniting a Gratitude Revolution என்ற நூலில் குறிப்பிடும் கருத்து இங்கு மிகவும் பொருத்தமானதாகும்.

“ஒவ்வொரு சமூகமும், நாம் அரிதாகவே நன்றி தெரிவிக்கும் மனிதர்களின் அமைதியான உழைப்பில்தான் இயங்குகிறது. நமக்கு நெருக்கமானவர்களை மட்டுமன்றி, நமது அன்றாட வாழ்க்கையைத் தாங்கிநிற்கும் கண்ணுக்குப் புலப்படாத பல கரங்களையும் நாம் உணரும்போது நன்றியுணர்வு விரிவடைகிறது.”

குப்பை சேகரிப்புத் தொழிலாளர்கள் நிச்சயமாக அத்தகைய ஒரு சமூகப் பிரிவினராவர்.

என்ன செய்யப்பட வேண்டும்?

கொழும்பு மாநகர சபை, குப்பை சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளரினதும் பணிநிலைமைகள் மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து விரிவான மீளாய்வொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

மாநகர சபையால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டவர்களும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஊடாகப் பணியாற்றுபவர்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த மீளாய்வில் பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

1. நியாயமான ஊதியம்: தொழிலின் கடினத்தன்மை, ஆபத்துகள் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

2. நியாயமான வேலை நேரம்: வேலை நேரம் ஒழுங்குபடுத்தப்பட்டு, போதிய ஓய்வு இடைவேளைகளும் விடுமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

3. பாதுகாப்பு உபகரணங்கள்: தரமான கையுறைகள், பாதுகாப்புக் காலணிகள், முகக்கவசங்கள் மற்றும் பொருத்தமான பாதுகாப்பு ஆடைகள் வழங்கப்பட வேண்டும்.

4. தொழில்சார் மருத்துவப் பாதுகாப்பு: வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசிகள், காயங்களுக்கான சிகிச்சைகள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

5. அடிப்படை வசதிகள்: சுத்தமான கழிப்பறைகள், குளியலறைகள், கைகழுவும் வசதிகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் சுகாதாரமான உணவு உண்ணும் இடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. பாதுகாப்பான பணிக்கான பயிற்சி: கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

7. இயந்திரமயமாக்கல்: அதிகப்படியான பாரங்களை மனிதர்கள் கைகளால் தூக்க வேண்டிய தேவையைக் குறைப்பதற்கும் உடல் உழைப்பால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும் இயந்திர உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

8. நலன்புரி மற்றும் முறைப்பாட்டு நடைமுறைகள்: தொழிலாளர்களின் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பற்ற பணிச்சூழல் அல்லது நியாயமற்ற நடத்தைகள் குறித்து, பழிவாங்கப்படுவோம் என்ற அச்சமின்றி அவர்கள் முறைப்பாடு செய்யக்கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கொழும்பைத் தூய்மையாக வைத்திருப்பவர்கள் சிறந்த வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்!

இறுதியில், இது மாநகர நிர்வாகம் அல்லது குப்பைகளைத் திறம்படச் சேகரித்து அகற்றுவது தொடர்பான பிரச்சினை மாத்திரமல்ல.

ஒரு சமூகம் தனது மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதைக் குறித்த அடிப்படையான கேள்வியாகும்.

ஒரு நாகரிகமான சமூகத்தின் உண்மையான அளவுகோல் அதன் வீதிகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதோ, அதன் கட்டடங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன என்பதோ மாத்திரமல்ல.

அந்தச் சமூகத்தின் அன்றாடச் செயற்பாடுகளைத் தங்களது உழைப்பால் தாங்கிநிற்கும் மனிதர்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதும் முக்கியமான அளவுகோலாகும்.

கொழும்பின் குப்பை சேகரிப்புத் தொழிலாளர்கள் எந்தவிதமான விசேட சலுகைகளையும் கோரவில்லை.

கடினமானதும் ஆபத்துகள் நிறைந்ததுமான தொழிலில் ஈடுபடும் எந்தவொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளையும் வசதிகளையுமே அவர்கள் பெறத் தகுதியானவர்கள்.

அவை நியாயமான ஊதியம், நியாயமான வேலை நேரம், தொழில்சார் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு, உரிய மருத்துவப் பராமரிப்பு மற்றும் மனிதக் கண்ணியம் ஆகியவையாகும்.

கொழும்பைத் தூய்மையாக வைத்திருக்கும் தொழிலாளர்கள், தங்களது சொந்த உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளில் வாழவும் பணியாற்றவும் நிர்ப்பந்திக்கப்படக்கூடாது.

அவர்களது உழைப்பை இவ்வளவு அதிகமாக நம்பியிருக்கும் கொழும்பு நகரம், அவர்களுக்குத் தகுதியான பராமரிப்பையும் பாதுகாப்பையும் மரியாதையையும் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கொழும்பைச் சுத்தமாக வைத்திருக்கும் கரங்கள், பாதுகாப்பற்ற நிலையில் விடப்படக்கூடாது!

மூலக் கட்டுரை: ஜாவிட் யூசுப் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *