(~ பேராசிரியர் மகேஷ் நிர்மலன், MD, FRCA, PhD, FFICM
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்)
மதம் என்பது பொதுவாக இறைவன், தெய்வீகம், படைப்பு, முக்தி, மறுவாழ்வு, வேதநூல்கள், சடங்குகள் மற்றும் அறநெறிகள் தொடர்பான நம்பிக்கைகளின் தொகுப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மத மரபிலும் இக்கருத்துக்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், உலகின் பெரும்பாலான முக்கிய மதங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுவான போக்கைக் காணமுடிகிறது.
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் தமது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய மதக் கோட்பாடுகளுக்குச் சவால் விடுத்துள்ளனர். இறைவன் குறித்த கருத்தாக்கம், மதகுருக்களின் மேலாதிக்கம், சடங்குகளின் பொருத்தப்பாடு, மத நிறுவனங்களின் தனியுரிமை மற்றும் தெய்வீகம் என்பது தனிமனிதனுக்கு முற்றிலும் வெளியேதான் இருக்கிறது என்ற அனுமானம் ஆகியவற்றை அவர்கள் கேள்விக்குட்படுத்தினர்.
அதற்குப் பதிலாக, தங்களைப் பின்பற்றியவர்களின் கவனத்தை உள்ளத்தை நோக்கித் திருப்பினர். சுயஅறிவு, ஆழ்ந்த சிந்தனை, தியானம் மற்றும் தெய்வீகத்தை நேரடியாக அனுபவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினர். பல்வேறு மதங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த இந்தப் பொதுவான போக்கை ஒரு வகையான ஆன்மீக எதிர்ப்புரட்சி என்று குறிப்பிடலாம்.
மொழியிலும் இறையியலிலும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒரு பொதுவான அடிப்படைக் கருத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. அதாவது, ஆழமான ஆன்மீக உண்மைகள் வெளியில் இருந்து வெறுமனே பெற்றுக்கொள்ளப்படுபவை அல்ல; அவை மனிதனின் உள்ளத்தில் அனுபவத்தின் மூலம் உணரப்பட வேண்டியவை என்பதே அந்தக் கருத்தாகும்.
ஆனால், இந்தக் கதை அத்துடன் முடிவதில்லை. பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒரே நேரத்தில் பிரார்த்தனை, பக்தி மற்றும் தங்களுக்குச் செவிசாய்த்து, பாதுகாப்பு அளித்து, மன்னித்து, ஆறுதல் தரும் எல்லையற்ற இறைவனைத் தேடும் வழிகளுக்கும் திரும்புகின்றனர்.
உள்ளார்ந்த ஆன்மீகத் தேடலை அடிப்படையாகக் கொண்டு உருவான மத மரபுகள்கூட, காலப்போக்கில் வெளியில் இருக்கும் இறைவனை மையப்படுத்திய பக்தி வடிவங்களை வளர்த்துக்கொள்கின்றன. ‘வெளிப்புற இறைவன்’ மற்றும் ‘உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம்’ ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஊசலாட்டம் மேலும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
வெளியில் இருக்கும் இறைவன்:
பெரும்பாலான மதங்கள், ‘வெளிப்புற இறைவன்’ என்ற கருத்தாக்கத்திலிருந்தே தொடங்குகின்றன என்று கூறலாம்.
மனிதர்கள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத பல சக்திகளை எதிர்கொள்கின்றனர். நோய், மரணம், வறட்சி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள், போர், மலட்டுத்தன்மை மற்றும் துன்பங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். இத்தகைய பல சூழ்நிலைகளில், ‘நான் ஏன் இதனை எதிர்கொள்ள வேண்டும்?’ என்ற அடிப்படையான கேள்விக்கு அறிவியலோ பகுத்தறிவுச் சிந்தனையோ பதிலளிப்பதில்லை.
இந்த யதார்த்தங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள், இயல்பாகவே தங்களைக் கடந்த சக்திகளிடம் உதவி தேடுகின்றனர்.
இதனை விரக்தி அல்லது நிர்க்கதியால் உருவாகும் நடத்தையாக நாம் வகைப்படுத்தலாம். ஆனால், விரக்தியும் மனித வாழ்வின் ஓர் உண்மையான நிலையாகும். அதற்குப் பகுத்தறிவுவாதம் மட்டும் பொருத்தமான பதிலை வழங்குவதில்லை.
எனவே, இத்தகைய வாழ்வியல் நிகழ்வுகள் தொடர்பான உரையாடல்களில் பெரும்பாலான மத மரபுகள் இறைவனையோ அல்லது கடந்தகாலச் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் விதியையோ முன்வைத்தன.
எனினும், இங்கு ஒரு முரண்பாடும் உள்ளது. நல்ல காலங்களில்கூட ஒருவரது நம்பிக்கை முழுமையானதாக இல்லாவிட்டால், துன்பமான காலங்களில் அந்த நம்பிக்கையின் ஆற்றலும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இதன் மூலம் ஒரு விடயம் புலப்படுகிறது. நம்பிக்கை தனது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், அது மனித வாழ்வின் அனைத்துக் காலங்களிலும் நீடித்திருக்கும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்.
கண்ணுக்குப் புலப்படாத இந்தச் சக்திகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்வதற்காகச் சடங்குகள், பலியிடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் உருவாக்கப்பட்டன. புனிதத்தன்மை என்பது மனிதனுக்கு வெளியே இருப்பதாகக் கருதப்பட்டது. இறைவனை அணுகுவதற்குப் பூசகர்கள், கோயில்கள், சடங்குகள் மற்றும் புனித நூல்கள் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
மோட்சம், ஆசீர்வாதம் அல்லது பாதுகாப்பு ஆகியவை இறைவனின் உலகத்திலிருந்தோ அல்லது புண்ணியச் செயல்களின் மூலமாகவோ கிடைப்பதாகக் கருதப்பட்டன. அடிப்படையில், மதம் என்பது பாதிக்கப்படக்கூடிய மனிதகுலத்திற்கும் அதனைக் கடந்த இறைசக்திக்கும் இடையிலான ஒரு பாலமாக மாறியது.
இந்த அணுகுமுறை பெரும் வெற்றியடைந்தது. ஏனெனில், அது மனித இயல்பின் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்தது.
மனிதர்கள் பகுத்தறிவுள்ள உயிரினங்கள் மட்டுமல்ல; அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களும்கூட.
அறிவியல் ஒரு நோயை விளக்கக்கூடும். ஆனால், தனது குழந்தையை இழந்த பெற்றோரின் துயரத்தை அதனால் நீக்கிவிட முடியாது. தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்தலாம். ஆனால், மரணத்தை முற்றாக ஒழிக்க முடியாது. அரசியல் அநீதிகளை எதிர்கொள்ளலாம். ஆனால், மனிதத் துன்பங்களை முற்றாக ஒழிக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலைகளில், மனித வாழ்வின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் தாங்கிக்கொள்வதற்கும் தன்னைத் தாண்டிய ஓர் ஆதரவுச் சக்தி தேவைப்படுவது உண்மையானதும் இயல்பானதுமான தேவையாகும்.
இந்த உலகளாவிய மனிதத் தேவையை வெறும் ‘மூடநம்பிக்கை’ என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், ‘அளவிட முடியாதது எதுவும் இல்லை’ என்ற வாதம், மனித வாழ்வின் முழுமையான யதார்த்தத்திற்குப் பொருத்தமான பதிலை வழங்குவதில்லை.
முதல் மாபெரும் உள்ளார்ந்த ஆன்மீகப் புரட்சி:
இந்திய மத மரபிலேயே மிகப் பழமையானதும், செல்வாக்குமிக்கதுமான உள்ளார்ந்த ஆன்மீகத் திருப்பம் உருவானது.
ஆரம்பகால வேத மதம் சடங்குகள், பலியிடல்கள் மற்றும் மதகுருக்களின் அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. பிரபஞ்ச ஒழுங்கையும் செழிப்பையும் பேணுவதற்காகச் சிக்கலான சடங்குகள் நடத்தப்பட்டன. மதச் சடங்குகள் தொடர்பான அறிவும் அதிகாரமும் பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட குழுக்களின் வசம் இருந்தன.
ஆனால், காலப்போக்கில் சில ஆழமான கேள்விகள் எழுந்தன.
இறுதியான உண்மையைச் சடங்குகளுக்குள் மட்டுமே அடக்கிவிட முடியுமா? பலியிடல்களின் மூலம் ஆன்மீக நிறைவைப் பெற்றுவிட முடியுமா? சடங்குகளுக்கும் காணிக்கைகளுக்கும் அப்பால் வேறு ஏதேனும் ஆழமான உண்மை இருக்கிறதா?
உபநிடதங்களின் ஆசிரியர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மதத்தின் முழுக் கவனத்தையும் உள்ளத்தை நோக்கித் திருப்பினர்.
பலியிடல் சடங்குகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மனித உணர்வுநிலை மற்றும் பிரக்ஞையை ஆராய்ந்தனர். இறைவனை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று கேட்பதற்குப் பதிலாக, நாம் யார், படைப்புடன் நமக்குள்ள உறவு என்ன என்பதை ஆராய்வதில் கவனம் செலுத்தினர்.
அவர்கள் முன்வைத்த முடிவு மிகவும் புதியதொரு பார்வையாக அமைந்தது.
படைப்பின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் தனிமனிதனைத் தனியாகப் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் முடிவுசெய்தனர்.
இதன் விளைவாக, ஆன்மீகத் தேடல் என்பது சுயத்தை அறியும் பயணமாக மாறியது. தனிமனிதனின் ஆன்மாவான ‘ஆத்மன்’ (Atman), பிரபஞ்சப் பேருண்மையான ‘பிரம்மம்’ (Brahman) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த உறவை வெறுமனே அறிவார்ந்த நிலையில் புரிந்துகொள்வதற்கு அப்பால், அனுபவத்தின் மூலம் உணர்வதே இந்தத் தேடலின் நோக்கமாக அமைந்தது.
இதன் மூலம் மதத்தின் மையம் பலிபீடத்திலிருந்து மனிதனின் உள்ளத்திற்கு நகர்ந்தது.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அத்வைத வேதாந்தம் இந்தச் சிந்தனையை மேலும் விரிவுபடுத்தியது.
அதன் தூய்மையான வடிவத்தில், தனிமனித ஆன்மாவான ‘ஜீவாத்மா’வுக்கும் (Jeevatma), இறுதியான பேருண்மையான ‘பரமாத்மா’வுக்கும் (Paramatma) இடையில் காணப்படும் பிரிவுநிலை உண்மையானதல்ல என்றும், அது அறியாமையான ‘அவித்தை’ (Avidya) காரணமாகத் தோன்றும் மாயை என்றும் அத்வைதம் வாதிட்டது.
தேடுபவனும் தேடப்படும் உண்மையும் இறுதியில் ஒன்றே என்று அது வலியுறுத்தியது.
எல்லாம் வல்ல, மனிதனுக்கு வெளியே இருக்கும் இறைவன் என்ற கருத்தாக்கத்திற்கு விடுக்கப்பட்ட மிகத் தீவிரமான சவால்களில் இதுவும் ஒன்றாகும்.
சடங்குவாதம், படிநிலை அதிகாரம் மற்றும் விலக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான கிளர்ச்சி..
இந்த உள்ளார்ந்த ஆன்மீகத் திருப்பம் சடங்குகளுக்கு எதிரான ஒரு எதிர்வினை மட்டுமல்ல. மத அமைப்புகளுக்குள் உருவான ஆழமான அறநெறி மற்றும் அறிவுசார் முரண்பாடுகளுக்கான பதிலாகவும் அது அமைந்தது.
வெளிப்புறத் தெய்வங்களை மையமாகக் கொண்ட மதம், நிறுவனமயமாக்கப்படும்போது பெரும்பாலும் பின்வரும் மூன்று போக்குகள் உருவாகின்றன.
1. சடங்குவாதம் (Ritualism): உள்ளார்ந்த மாற்றத்தைவிட வெளிப்புறச் சடங்குகளையும் வழிபாட்டு நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதே முக்கியமானது என்ற அனுமானம்.
2. படிநிலை அதிகாரம் (Hierarchy):ஆன்மீகச் சமூகத்திற்குள் சிலருக்கு உயர்ந்த அந்தஸ்தையும் மற்றவர்களுக்குத் தாழ்ந்த அந்தஸ்தையும் உருவாக்குதல்.
3. தனித்துவ உரிமை அல்லது விலக்கல் (Exclusivity): ஒரு குறிப்பிட்ட மதப் பாதைக்கு மட்டுமே முக்தியையோ அல்லது உண்மையையோ அடைவதற்கான தனித்துவமான உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கை.
மத வாழ்வின் கவனத்தை உள்ளத்தை நோக்கித் திருப்பியமை இந்த மூன்று போக்குகளுக்கும் சவாலாக அமைந்தது.
சடங்குவாதத்தின் மீதான அதிருப்தியுடன், பரம்பரையாகக் கடத்தப்பட்ட சமூகச் சிறப்புரிமைகள் மற்றும் சாதிய வேறுபாடுகள் மீதான அதிருப்தியும் பல சமூகங்களில் இணைந்து கொண்டது.
அனைத்து உயிர்களும் ஒரே இறுதியான பேருண்மையின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றால், சமூகப் படிநிலைகளுக்கு அர்த்தமில்லை என்பதே அத்வைத வேதாந்தத்தின் நிலைப்பாடாகும்.
எனவே, உள்ளார்ந்த ஆன்மீகம் என்பது வெறுமனே ஒரு தத்துவப் பயிற்சியாக மட்டும் அமையவில்லை. அது ஆன்மீகச் சமத்துவத்திற்கான ஒரு வழியாகவும் உருவெடுத்தது.
பௌத்த சமூகங்களில் உருவான எதிரோட்டங்கள்..
உள்ளார்ந்த ஆன்மீகப் புரட்சியின் முழுமையான வெளிப்பாடாகப் பௌத்தத்தைப் பார்க்கலாம்.
புத்தர் தனது போதனையின் மையத்தில் படைப்புக் கடவுள் ஒருவரை வைக்கவில்லை. மாறாக, துன்பத்தையும் அதன் காரணங்களை எதிர்கொள்வதன் மூலம் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதையும் மையப்படுத்தினார்.
தியானம் இந்த ஆன்மீக ஆராய்ச்சிக்கான வழிமுறையாக அமைந்தது. அதன் மூலம் ஒருவர் தனது மனத்திற்குள் உள்ள ஆசை அல்லது பேராசை (தண்ஹா – Tanha), பற்றுதல் (உபாதானம் – Upadana), அறியாமை (அவிஜ்ஜா – Avijja) ஆகியவற்றைப் பிரதிபலித்து ஆராய்ந்தார்.
ஒருவருக்குப் பதிலாக இன்னொரு பூசகர் இந்தப் பணியைச் செய்துவிட முடியாது. எந்தப் பலியிடலும் இதற்கு மாற்றாக அமைய முடியாது. பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் எந்தச் சிறப்புரிமையும் ஞானோதயத்தை உறுதிப்படுத்தாது.
ரூமி: உள்ளார்ந்த தெய்வீக அன்பின் தேடல்:
13ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சூஃபி கவிஞரான ரூமி, ஆன்மா தெய்வீகத்துடன் ஒன்றிணைவதற்காகக் கொண்டிருக்கும் ஏக்கத்தைத் தனது கவிதைகளில் வெளிப்படுத்தினார்.
பல சூஃபி மரபுகள், இறைவனின் அன்பு உலகளாவிய தன்மை கொண்டது என்பதை வலியுறுத்துவதன் மூலம், மதத்திற்குள் இருப்பவர், வெளியே இருப்பவர் என்ற கடுமையான வேறுபாடுகளைத் தளர்த்தின.
இங்கும், அளவுக்கு அதிகமான சட்டவாதம், சம்பிரதாயவாதம் மற்றும் மதப் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றுக்கான எதிர்வினையாக உள்ளார்ந்த ஆன்மீகப் பாதை உருவெடுத்தது.
வெளியில் இருக்கும் இறைவன் ஒருபோதும் மறைவதில்லை..
உள்ளார்ந்த ஆன்மீக மரபுகள் அறிவார்ந்த ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் இவ்வளவு வலுவானவையாக இருக்கும்போது, அவை ஏன் பக்தி சார்ந்த மதத்தை ஒருபோதும் முழுமையாக மாற்றியமைக்கவில்லை?
இதற்கான பதில் மனித இயல்பிலேயே இருக்கலாம்.
உள்ளார்ந்த ஆன்மீக மரபுகள் மனித அறிவுசார் தேவைகளைப் பூர்த்திசெய்தபோது, வெளியில் இருக்கும் இறைவன் மனித உணர்வுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தேவைப்பட்டிருக்கலாம்.
தியானம் உள்ளார்ந்த தெளிவையும் புரிதலையும் வளர்க்கலாம். ஆனால், அது ஆறுதலை வழங்குவதில்லை. தத்துவம் துன்பத்தை விளக்கக்கூடும். ஆனால், ஒருவரது தனிப்பட்ட துயரத்தின் முன்னால் அது குளிர்ச்சியானதாகவும் உணர்வற்றதாகவும் தோன்றக்கூடும்.
நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு தாய், தத்துவ விசாரணையில் ஈடுபடவில்லை. போரிலிருந்து தப்பியோடும் ஒரு அகதி, மெய்யியல் சார்ந்த இருமையற்ற நிலையைத் தேடிக்கொண்டிருக்கவில்லை.
பகுத்தறிவு சார்ந்த உலகம் வழங்க முடியாத நம்பிக்கையையும் ஆறுதலையுமே அவர்கள் தேடுகின்றனர்.
இந்தத் தேவை உலகளாவியதாகத் தோன்றுகிறது.
இது உளவியல் சார்ந்த தேவையாக இருக்கலாம். ஆனால், அதற்கான பதிலாக எல்லாம் வல்ல வெளிப்புற இறைவன் என்ற கருத்தாக்கம் உருவெடுத்திருப்பது, பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் மனித உயிர்வாழ்வுக்கு உதவிய ஒரு பொறிமுறையாகவும் இருந்திருக்கலாம்.
அதன் தோற்றம் எதுவாக இருந்தாலும், சுயபரிசோதனையையும் உள்ளார்ந்த தேடலையும் மையமாகக் கொண்டு உருவான மத மரபுகளுக்குள்ளேயே பக்தி மீண்டும் மீண்டும் உருவாகுவதற்கு இந்தத் தேவை காரணமாகிறது.
மத வரலாற்றின் ஊசலாட்டம்..
எனவே, மதத்தின் வரலாற்றை ஒரு ஊசலாட்டத்துடன் ஒப்பிடலாம்.
வெளிப்புற இறைவனை மையமாகக் கொண்ட மதம், சமூக ஒற்றுமை, அடையாளம், தொடர்ச்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்குகிறது.
ஆனால், காலப்போக்கில் அதே மதம் படிநிலை அதிகாரம், தனித்துவ உரிமை மற்றும் அளவுக்கு அதிகமான சடங்குவாதம் ஆகியவற்றையும் உருவாக்கக்கூடும்.
இதற்கு எதிர்வினையாக உள்ளார்ந்த ஆன்மீக இயக்கங்கள் தோன்றுகின்றன. அவை புனிதத்தை நேரடியாக அணுகுவதற்கான உரிமையை வலியுறுத்துகின்றன. ஆன்மீகச் சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. மனித உணர்வுநிலை மற்றும் உள்ளார்ந்த மாற்றத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்புகின்றன.
ஆனால், இத்தகைய இயக்கங்கள் நடைமுறை வாழ்க்கையிலும் உணர்வுபூர்வமான தேவைகளிலும் ஈடுபட்டுள்ள சாதாரண மக்களுக்கு அளவுக்கு அதிகமான அருவமான சிந்தனைகளாக மாறிவிடுகின்றன.
இதன் விளைவாக, பக்தி மீண்டும் படிப்படியாகத் திரும்புகிறது. புதிய படிநிலை அதிகாரங்களுடன் புதிய நிறுவனங்கள் உருவாகின்றன. சுழற்சி மீண்டும் ஆரம்பமாகிறது.
இந்தப் போக்கை இந்து மதம், பௌத்தம், யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றில் காணமுடிகிறது.
உலகின் அனைத்து முக்கிய மதங்களிலும் மீண்டும் மீண்டும் தோன்றும் இந்த மாயவாத ஆன்மீக மரபுகள், இது வெறும் வரலாற்றுத் தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை உணர்த்துகின்றன. இது மனித இயல்பின் அடிப்படையான ஒரு பண்பைப் பிரதிபலிக்கிறது.
ஆன்மீகத்தின் உலகளாவிய கோட்பாடு:
ஒருவேளை, இரு தரப்பினரிடமும் முழுமையான உண்மை இல்லை என்பதே மிக ஆழமான பாடமாக இருக்கலாம்.
உள்ளார்ந்த ஆன்மீக மரபுகள், ஆன்மீக அதிகாரத்தைப் பூசகர்கள், சாதி, நிறுவனங்கள், இனக்குழுக்கள் அல்லது மதநம்பிக்கைகள் ஆகியவற்றின் தனியுரிமையாக மாற்றிவிட முடியாது என்பதை நினைவூட்டுகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் தெய்வீகத்தை நேரடியாக அனுபவிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று அவை வலியுறுத்துகின்றன.
அதேவேளை, பக்தி சார்ந்த மத மரபுகள் மனிதர்கள் வெறுமனே அறிவைத் தேடும் உயிரினங்கள் மட்டுமல்ல என்பதை நினைவூட்டுகின்றன. அவர்கள் துன்பம் மற்றும் மரணத்தின் நிழலில் வாழும், பாதிக்கப்படக்கூடிய உயிரினங்கள். நெருக்கடியான காலங்களில் அவர்கள் இறைவனுடன் ஓர் ஆன்மீக உறவை ஏற்படுத்திக்கொள்ளவும், நம்பிக்கையையும் பற்றுக்கோட்டையும் தேடவும் விரும்புகின்றனர்.
எனவே, உள்ளிருக்கும் இறைவன் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நமது ஏக்கத்திற்குப் பதிலளிக்கிறார். நம்மைக் கடந்த இறைவன் பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் தேடும் நமது ஏக்கத்திற்குப் பதிலளிக்கிறார்.
இந்த இரண்டு உணர்வுகளுமே உண்மையானவை, நிரந்தரமானவை மற்றும் நம்பகத்தன்மை கொண்டவை. அவை மனித இயல்பின் வெவ்வேறு பரிமாணங்களைப் பிரதிபலிக்கின்றன.
இந்த இரண்டு உணர்வுகளுக்கும் இடையிலான உறவை ஒரு ரயில் பாதையின் இரண்டு தண்டவாளங்களுடன் ஒப்பிடலாம்.
நம்மைக் கடந்த இறைவன் மீதான நம்பிக்கையும், நமக்குள் இருக்கும் தெய்வீகத்தைத் தேடும் முயற்சியும் இணையாகச் செல்கின்றன. அவை ஒருபோதும் ஒன்றிணைய வேண்டிய அவசியமில்லை.
மனிதகுலத்தின் பரந்த உரையாடலில், நம்பிக்கையும் பகுத்தறிவுவாதமும் இதேபோன்று இணையாகப் பயணிக்கின்றன.
இரண்டு தண்டவாளங்களும் ஒன்றாகக் கலப்பதில்லை. ஒன்றை மற்றொன்று உள்வாங்கவோ அல்லது தோற்கடிக்கவோ வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், மனித நாகரிகம் தடம் புரளாமல் சீராக முன்னோக்கிப் பயணிப்பதற்கு இந்த இரண்டு தண்டவாளங்களும் அவசியமானவை.
அவை ஒன்றிணையாமல் தனித்தன்மையுடன் இருப்பது, நல்லிணக்கத்தின் தோல்வியைக் குறிப்பதல்ல. மாறாக, இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கும் சமநிலையின் ஓர் அங்கமாகும்.
முடிவுரை:
உபநிடதங்கள், பௌத்தம், சமணம், வேதாந்தம், யூத மாயவாதம், கிறிஸ்தவ தியான மரபுகள் மற்றும் இஸ்லாமிய சூஃபித்துவம் ஆகியவற்றின் தோற்றம், தனித்தனியான மத வளர்ச்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல.
இவை அனைத்தும் பல்வேறு கலாசாரங்களில் மீண்டும் மீண்டும் உருவாகும் ஒரு விவாதத்தை வெளிப்படுத்துகின்றன.
மதம் சடங்குகள், படிநிலை அதிகாரம், தனித்துவ உரிமை அல்லது வெளிப்புற அதிகாரம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கும்போதெல்லாம், இத்தகைய இயக்கங்கள் தோன்றி, நேரடியான ஆன்மீக அனுபவத்தை நோக்கி மனிதர்களின் கவனத்தைத் திருப்புகின்றன.
அவ்வாறு செய்வதன் மூலம், இறுதியான உண்மையை அணுகுவதற்கான உரிமையைப் பிறப்பு, சாதி, மதகுருத்துவம், நிறுவனம், இனம் அல்லது மதநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தனியுரிமையாக்க முடியாது என்ற கருத்தை அவை முன்வைக்கின்றன.
எனினும், மனிதகுலம் வெளிப்புற இறைவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.
மரணம், துன்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும்போது, நம்பிக்கை, ஆறுதல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தை வழங்கக்கூடிய ஒரு எல்லை கடந்த இறைவனை மனிதர்கள் தொடர்ந்து தேடுகின்றனர்.
மிகவும் ஆழமான சுயபரிசோதனையை மையமாகக் கொண்ட மத மரபுகள்கூட இறுதியில் பக்தியை நோக்கிச் சாய்கின்றன.
அறிவு எதை ஒதுக்க முயற்சிக்கிறதோ, அதை மனித இதயம் மீண்டும் மீண்டும் தன்வசப்படுத்திக்கொள்கிறது.
எனவே, மதத்தின் உண்மையான வரலாறு என்பது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான போராட்டமோ, மரபுவழி மதக் கோட்பாடுகளுக்கும் மாயவாத ஆன்மீகத்திற்கும் இடையிலான மோதலோ அல்ல.
அது இதைவிட ஆழமான ஒன்றாக இருக்கலாம்.
உள்ளார்ந்த தெய்வீகத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம், அதேவேளை தன்னைக் கடந்த தெய்வீகத்தைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் ஆகிய மனிதனின் இரண்டு அடிப்படையானதும் உண்மையானதுமான தேவைகளைச் சமநிலைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியே அது.
உலகின் பெரும்பாலான பெரும் மதங்களுக்குள்ளும் இந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில், அது மனித நாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கலாம்.
⸻
(இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளகருத்துக்களும் அபிப்பிராயங்களும்ஆசிரியருடையவை மட்டுமே. இவைஇவ்விடயம் தொடர்பாக மான்செஸ்டர்பல்கலைக்கழகத்தின் கருத்துக்களைப்பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
பேராசிரியர் மகேஷ் நிர்மலன்
MD, FRCA, PhD, FFICM ஆகிய தகுதிகளைக் கொண்ட பேராசிரியர் மகேஷ் நிர்மலன், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியியலாளராவார். மருத்துவக் கல்வி, மருத்துவ அறநெறிகள், சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஆய்வுகள் ஆகிய துறைகளில் தலைமைத்துவப் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.)
மொழிபெயர்ப்புக் குறிப்பு:-மூலக் கட்டுரையில் சில பகுதிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ‘முதல் மாபெரும் உள்ளார்ந்த ஆன்மீகப் புரட்சி’, ‘சடங்குவாதம், படிநிலை அதிகாரம் மற்றும் விலக்கப்படுதல்’ மற்றும் பௌத்தம் தொடர்பான பகுதிகள் இருமுறை வந்துள்ளன. வாசிப்பின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு அவற்றை இங்கு ஒருமுறை மட்டுமே சேர்த்துள்ளேன். கருத்துக்களையும் தத்துவச் சொற்களையும் இயன்றவரை மூலத்திற்கு நெருக்கமாகப் பேணியுள்ளேன்.
(நன்றி: ஜஃப்னா மொனிட்டர்)
