~ வீரகத்தி தனபாலசிங்கம்
தேசிய மக்கள் சக்தி அதன் 2024 தேர்தல் அறிக்கையில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் அனைத்தையும் ஒழிப்பதாகவும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அது மாற்றத்துக்கான ஆணையோடு ஆட்சியதிகாரத்துக்கு வந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.
நீண்டகாலமாக படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமும் முன்னைய அரசாங்கங்களின் ஒடுக்குமுறைச் சட்டங்களை விடவும் கொடூரமானவையாக அமைந்திருக்கின்றன.
இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச மனித உரிமைத் தராதரங்களுக்கு முரணானவையாகவும் மீண்டும் படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன அவை ஜனநாயக விழுமியங்களின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளினாலும் அரசியல் சக்திகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினாலும் விமர்சிக்கப்படுகின்றன.
பயங்கரவாதத்தையும் பாதாள உலகக் குற்றங்களையும் தடுப்பது என்ற போர்வையில் மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் வரையப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படும் இவ்விரு சட்டமூலங்களும் பழைய அடக்குமுறைச் சட்டங்களை விடவும் கூடுதலான அளவுக்கு கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் பாதுகாப்பையும் சட்டம், ஒழுங்கையும் நிலைநிறுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதற்காக முன்வைக்கப்படும் சட்டங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமையக்கூடாது. இரு சட்டமூலங்களும் ‘ பயங்கரவாதம் ‘ என்பதற்கும் ‘ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்’ என்பதற்கும் தெளிவற்றதும் பரந்தளவிலானதுமான வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் வரலாற்றில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களும் அவசரகாலச் சட்டங்களும் எப்போதுமே அரசியல் எதிரிகளையும் தொழிற் சங்கங்களையும் சிறுபான்மைச் சமூகங்களையும் ஒடுக்குவதற்கே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய கசப்பான வரலாற்று அனுபவங்களைக் கடுமையாகக் கண்டித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதே போன்ற கொடூரமான அல்லது அதை விடவும் மேலும் கொடூரமான ஏற்பாடுகளுடன் கூடிய சட்டமூலங்களை மீளவும் கொண்டு வந்திருப்பது பெரும் வரலாற்று முரண்நகையாகும்.
நீதிமன்றத்தின் கண்காணிப்பைக் குறைத்து பொலிசாருக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் தங்குதடையற்ற அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டமூலங்கள் எதிர்காலத்தில் அரச அடக்குமுறைக்கான சட்டபூர்வமான கருவிகளாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு என்று முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டமூலம் குடிமக்களின் தனியுரிமையையும் சுதந்திரமான வாழ்வியல் உரிமையையும் கேள்விக்குறியாக்கி, நாட்டை ஒரு ‘பொலிஸ் அரசாக’ மாற்றும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியிலும் அமைதியற்ற சூழலிலும் வாழும் இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை விடவும் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கும் சாமானிய மக்களயே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போர் என்ற பெயரில் நாட்டின் எதிர்கால ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தையும் காவுகொடுக்கும் இந்த சட்டவாக்க நடவடிக்கையை முறியடிக்க சகல ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும் ; சட்டமூலங்களை மீளப்பெற வேண்டும் என்று ஜனநாயக வழிமுறைகள் மூலமாக அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும்.
இரு சட்டமூலங்கள் தொடர்பிலும் கடந்த வாரம் மூன்று முக்கியமான சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வெளியிட்ட கடுமையான விமர்சனங்களுடன் கூடிய அறிக்கைகள் முக்கிய கவனத்துக்கு உரியவையாகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ( Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவையே அந்த அமைப்புக்கள்.
” சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாகவே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதில் உள்ள பயங்கரவாதம் என்பதற்கான பரந்த வரையறைகளும் குற்றவியல் பிரிவுகளும் அமைதிவழிப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை இலக்கு வைக்கும் ஆபத்தை இன்னமும் கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
“கைதுகள் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவேண்டும் என்ற ஏற்பாட்டை இந்த சட்டமூலம் கொண்டிருக்கின்ற போதிலும், இந்த மேம்பாடுகள் போதுமானவை அல்ல.
“பழைய சட்டம் நீக்கப்பட்டாலும், இடைக்கால விதிகள் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஏற்கெனவே உள்ள அடக்குமுறை விதிமுறைகளும் தொடர்ந்து நீடிக்க புதிய சட்டம் அனுமதிக்கும்.
“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் பிடியாணை இன்றி சோதனை செய்தல் மற்றும் ஊடக அறிக்கையிடல் அல்லது பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் போன்ற பரந்த பொலிஸ் அதிகாரங்களை அறிமுகப்படுத்துகிறது. இவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் துஷ்பிரயோகக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கின்றன” என்று அந்த அலுவலகம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இரு சட்ட மூலங்களையும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாகக் கொண்டு வருவதற்காக அவற்றை கணிசமான அளவில் மீண்டும் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியிருப்பதுடன் இதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வருவதாகவும் அறிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாகவும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலத்துடன்’ இணைந்து, இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகப் பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவதாக அமைந்துள்ளது என்றும் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
“இரு சட்டமூலங்களும் சாதாரண குற்றவியல் சட்டத்திற்கு வெளியே அடிப்படைப் பாதுகாப்புகளின்றி இயங்கும் மாற்றுச் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்கி, பழைய துஷ்பிரயோக அம்சங்களையே மீண்டும் பிரதிபலிக்கின்றன. கடுமையான குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு என்பவற்றுக்கு மிகப் பரந்தளவிலானதும் தெளிவற்றதுமான வரையறைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வழங்குகிறது.
“தனிநபர்களின் உடைகள், பச்சை குத்தல்கள், கை சமிக்ஞைகள் அல்லது சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதும் நிலையை சட்டமூலம் உருவாக்குகிறது. மேலும், நீதிவானின் தலையீடின்றி பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தையும், பிணை பெறுவதைக் கடினமாக்கும் பிரிவுகளையும் அது கொண்டுள்ளது.
“பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்பதற்கு அனுமதிப்பதன் மூலம் இச்சட்டம் சித்திரவதை மற்றும் தவறான நடத்தைகளை ஊக்குவிக்கிறது. அத்துடன், நீதிமன்ற உத்தரவு இன்றியே மின்னணுச் சாதனத் தரவுகள், அழைப்பு விபரங்கள் மற்றும் கோபுர இருப்பிடங்களை அணுகும் பரந்த கண்காணிப்பு அதிகாரங்களையும், பிடியாணையின்றி பரிசோதனை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரங்களையும் பொலிஸாருக்கு வழங்குகிறது.
“குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதைத் தடுப்பது மற்றும் நீதிமன்ற அனுமதி இன்றி செய்திகளை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் முடக்கப்படுகின்றன.
“முறையான ஆலோசனைகளின்றி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய கலந்தாலோசனைகளை நடத்தி சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு அமைவாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்” என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை:
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம், அதிகாரிகளுக்குத் தன்னிச்சையான — விரிவான அதிகாரங்களை வழங்குவதுடன், சந்தேக நபர்களின் மனித உரிமைகளைப் பெரிதும் மீறுகிறது. அதனால், ஆபத்தான சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
“இந்தச் சட்டமூலம், நாட்டின் நீண்டகால ஒடுக்குமுறைச் சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிகவும் மோசமான பல அம்சங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. இது பல்வேறு குற்றங்களுக்கும் அத்தகைய கொடூர விதிகளைப் பொருத்துவதன் மூலம் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
“உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு மேற்பட்ட அதிகாரிகளிடம் வற்புறுத்தலின் பேரில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஏற்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும், சித்திரவதைக்கு உள்ளானதை நிரூபிக்க வேண்டிய சுமையை பாதிக்கப்பட்டவர்கள் மீதே சுமத்துவதுடன், இது பொலிஸ் துஷ்பிரயோகங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் தடையின்றி வழிவகுக்கும்.
“குற்றச்சாட்டுக்கு முன்பாக ஒரு வருடமும் விசாரணைக் காலத்தில் மேலும் ஒரு வருடமும் என சந்தேக நபர்களை மொத்தம் இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. அத்துடன், பொலிசாருக்குத் தகவல் வழங்கத் தவறினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
“நீதிமன்ற அனுமதியின்றி தனிநபர்களின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தரவுகளைப் பெறும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தனியுரிமை உரிமையைப் கடுமையாக மீறுவதோடு, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஊடகச் செய்திகளையும் தடை செய்கிறது.
“உடை, மொழி, பச்சை குத்தல்கள் அல்லது செயற்படும் இடங்களின் அடிப்படையில் ஒருவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினராக முத்திரை குத்துவது முறையற்ற சுயவிவரத் தயாரிப்புக்கு வழிவகுக்கும். இது நியாயமான விசாரணைக்கான உரிமையைப் பலவீனப்படுத்தி, தண்டனையிலிருந்து விலக்கு பெறும் கலாச்சாரத்தை மேலும் ஆழமாக்கும்” என்று மன்னிப்புச்சபையின் அறிக்கை கூறகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்காக என்று கூறிக்கொண்டு இதுவரையில் முன்மொழியப்பட்ட எந்தவொரு சட்டமூலமும் மேலும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டவையாகவே அமைந்திருந்தன. “மாற்றம்” என்ற முழக்கத்துடன் பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய ஆட்சியாளர்களின் பாதையையே பின்பற்றி, மக்களின் ஜனநாயக உரிமைகளையன்றி, அரசைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருப்பது கவலைக்குரியது.
மக்களின் அடிப்படை உரிமைகளையும் பேச்சுரிமையையும் நசுக்கும் கொடூரச் சட்டங்களை எவ்வித சமரசமுமின்றி முழுமையாக நீக்குவதுதான் உண்மையான ஜனநாயக மாற்றத்தின் அளவுகோலாக இருக்க முடியுமே தவிர, பழைய போத்தலில் புதிய நஞ்சை அடைப்பது தீர்வாகாது. எனவே, மக்களின் சுதந்திரத்தை நசுக்கும் எந்தவொரு அடக்குமுறைச் சட்ட வடிவமும் நிராகரிக்கப்பட வேண்டியதேயன்றி, அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
