மருத்துவத் தவறுகளுக்கு விலை என்ன?

மருத்துவத் தவறுகளுக்கு விலை என்ன?

— கருணாகரன் —

சில மாதங்களுக்கு முன்பு, ஊடக நண்பர் ஒருவருடைய தாயார் இலங்கையின் வடபகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் இறந்து விட்டார். சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றபோது, சாதாரணமாகவே கதைத்துப் பேசிச் சென்றவர், மருத்துவமனையில் கூட எல்லோரோடும் இயல்பாகவே பேசியவர், திடீரென மரணமடைந்தது, பிள்ளைகளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே ‘இந்தச் சடுதியான மரணத்துக்கான காரணம் என்ன?’ என்று அறிவதற்காக மருத்துவமனையிடம் கேள்வி எழுப்பினார்கள். அது கிருமித்தொற்றினால் ஏற்பட்டது” என மருத்துவமனை மிகச் சாதாரணமாகவே பதில் சொன்னது. 

இந்தக் கிருமித் தொற்று ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இதற்குக் காரணம் என்ன? அதை ஏன் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை?இதற்கான பொறுப்பை யார் ஏற்பது? இந்த மரணத்துக்கான நியாயம் என்ன? அதை யார் சொல்வது?எதிர்காலத்தில் இப்படி ஒன்று நிகழாதிருப்பதற்கான உத்தரவாதம் என்ன?அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எந்தக் கேள்விக்கும் மருத்துவமனை பதில் அளிக்கவில்லை. அது பதில் அளிக்கப் போவதுமில்லை. 

ஏனென்றால், அது அரச மருத்துவமனை. 

பொதுவாகவே அரச மருத்துவமனைகளில் இந்த மாதிரியான அசமந்தமான போக்கு உண்டு என்பது பலருக்கும் அனுபவம். ஏனென்றால், அங்கே இலவசமாக மருத்துவ சேவை வழங்குவது அதாவது, அங்கே வரும் நோயாளிகளின் பரிதாபத்தைப் பார்த்து, புண்ணியத்துக்காகச் சேவையாற்றப்படுவது என்றே பெரும்பாலான மருத்துவர்களும் சில மருத்துமனை உத்தியோகத்தர்களும் கருதுகிறார்கள். ஆகவே, அங்கே வருகின்ற மக்கள் (நோயாளிகள்) எந்தக் கேள்வியையும் கேட்காமல், வழங்கப்படுகின்ற சேவையைப் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டியதுதான். எதிர்த்துப் பேசவோ, சந்தேகங்களைக் கேட்கவோ கூடாது. அப்படி ஏதாவது பேசினால், பேசுவதற்கு வாயைத்திறந்தால்… 

பிறகு, நீங்கள் வேறு இடத்தைப் பார்க்க வேண்டியதுதான். 

அரச மருத்துவ மனைகளில் நோயாளிகளோடு ஏனோதானோ என்று பேசும் சில மருத்துவர்கள், தனியார் மருத்துவனைகளில் மிகப் பவ்வியமாகப் பேசி, நலம் விசாரிப்பார்கள். இதுவும் பலருக்கும் நேரடி அனுபவம். அதெப்படி ஒரே ஆள் இரண்டு இடத்திலும் இரண்டு விதமாகச் செயற்படுகிறார்; சேவையாற்றுகிறார்?

ஆகவே, இதைப்போன்ற மரணம் குறிப்பிட்ட மாவட்ட மருத்துவனையில் மட்டும் நடந்ததல்ல. பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் நடக்கும் சாதாரண விடயம். அல்லது பொதுவான நிலவரம். 

2013 தை மாதம் மாத்தறை வைத்தியசாலையில் சட்டபீட மாணவியின் வலது கை துண்டிக்கப் பட்டதிலிருந்து, 2023 இல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கைதுண்டாடப்பட்டமை, கிளிநொச்சி வைத்தியசாலையில் முதல் பிரசவத்திற்கு சென்ற தாய், தனது சிசுவையும் இழந்து கருப்பையையும் இழந்தமை, மன்னாரில் தாயும் சேயும் இறந்தமை, வவுனியாவில் பச்சிளம் குழந்தையின் மரணம், முல்லைத்தீவில் சிறுமி மரணம் எனப் பல மருத்துவத் தவறுகளைப் பட்டியலிட முடியும். 

இந்த விடயங்களையெல்லாம் இப்படி பொதுத் தளமொன்றில் எழுதியதற்காகவே மருத்துவர் சமூகமும் மருத்துவமனைச் சூழலும் மருத்துவ நிர்வாகத்தினரும் போர்முனையொன்றைத் திறக்கக் கூடும். இந்தக் கட்டுரைக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தலாம். ஆனால், என்னதான் நடந்தாலும் சிலவற்றைப் பேசித்தானே ஆக வேண்டும். சீழ்ப் பிடித்தால் வெட்டி அகற்றவே வேண்டும்.  ஏனென்றால், இந்த மாதிரியான மரண விளையாட்டுகள் தொடர்ச்சியாகப் பல இடங்களிலும் நடந்து, பாதகமான விளைவுகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே யிருக்கின்றன. கேட்கவும் பேசவும் ஆளில்லை என்றால், விளைவுகள் பாரதூரமானவையாகவே ஆகி விடும். ஆகவே கொடுக்க வேண்டிய விலையைக் கொடுத்தேனும் சிலவற்றைப் பேச வேண்டும். சில கதவுகளைத் திறந்தே தீர வேண்டும்.

மேலும் ஒரு ஆதாரமாக இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் நண்பர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். நாமும் சென்று அவரைச் சுகம் விசாரித்து விட்டு வந்தோம். இரண்டொரு நாளில் அவர் இறந்து விட்டார். காரணத்தைக் கேட்டால்,“கிருமித்தொற்று” என்று சொன்னார்கள். 

மருத்துவ விசாரணையை நடத்தக் கோரலாமா என்று ஆலோசித்தோம். குடும்பத்தினர் விரும்பவில்லை. நடந்தது நடந்து விட்டது. உரியவர் இறந்து விட்டார். இனி விசாரணை, நீதிமன்றம் என்றெல்லாம் அலைவதால் என்னதான் பயன்?என்ற சலிப்பு அவர்களுக்கு. ஆனால்,விசாரணையைக் கோரியிருக்க வேண்டும். அது எதிர்காலத்தில் பொறுப்புடன் நடப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்கும். 

இதைப்போல பல சம்பவங்களை இங்கே சொல்ல முடியும். பெரும்பாலான மரணங்கள் கிருமித் தொற்றுக் காரணமாக நடப்பதாகவே மிகச் சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. இறந்தவரின் உறவினர்கள் சில சந்தர்ப்பங்களில் கொந்தளித்து, மருத்துவமனை நிர்வாகத்துடன் உடனடியாக எதிர்வினையாற்றுகிறார்கள். அதற்குப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் பேசுவதில்லை. நோயாளி இறந்து விட்டார். இனி இதைப்பற்றிப் பேசுவதால் என்ன பயன்? என்று அவர்கள் கருதுகிறார்கள். பலருக்கு அதற்கு அப்பால் என்ன செய்வது என்பதும் தெரியாது. அவர்களுக்கு உள்ள அடுத்த பிரச்சினை, இறந்தவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து சச்சரவில்லாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்வதே. இறுதி நிகழ்வுகளோடு அவர்களுடைய கோபமும் நியாயத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவேசமும் தணிந்து விடுகிறது. ஆகவே ஆறிய கஞ்சி பழைய கஞ்சி என்ற கதையாகவே இவையெல்லாம் முடிந்து விடுகின்றன. மரணங்களோ தொடர்கதையாக நீள்கின்றன.

‘அப்படியென்றால் மரணச் சான்றிதழில் இந்த மரணங்களைப் பற்றி எப்படிக் குறிப்பிடுப்படுகிறது?’என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 

“சுகவீனம் காரணமாக மரணம்” என்று எழுதி முடித்து விடுகிறார்கள்.

இப்படி எழுதிய மரணச் சான்றிதழை குறித்த ஊடகவியலாளர் ஆட்சேபித்து, மருத்துவ அறிக்கையைத் தாம் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டமூலம் கோரியிருக்கிறார். சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும்  வகையில் தாயாருடைய நோய் தொடர்பில் பேணப்பட்ட தலைமாட்டுச் சிட்டை(BHT), ஆய்வு கூட பரிசோதனை அறிக்கைகள், மருந்துச் சிட்டை, காய்ச்சல் சிட்டை போன்றவற்றின் உறுதிப்படுத்திய பிரதிகளை வழங்குமாறு கேட்கப்பட்டது. 

“மருத்துவ அறிக்கையை வெளியார் பார்ப்பதற்கு வழங்க முடியாது” என்று மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. நண்பர் விடவில்லை. ஊடகத்துறையில் செயற்படுகின்றவர் என்பதால், தனக்குள்ள மேலதிக அறிவுடனும் துணிச்சலோடும் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் தன்னுடைய கோரிக்கையை முன்வைத்தார். 

தகவல் அறியும் ஆணைக்குழு, மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதோடு, குடும்ப உறுப்பினர்கள் கோரும் பட்சத்தில் மருத்துவ அறிக்கையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் உள்ளது. இந்த முன்னுதாரணத்தைக் கொண்டு. அதற்குப் பிறகு பல மருத்துவத் தவறுகளை விசாரிப்பதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் வேறு சில தனி நபர்களும் முயற்சித்துள்ளனர்.   

நடந்த மரணத்தைக் குறித்த ஆட்சேபனைகள் எதுவும் உறவினர்களால் தெரிவிக்கப்படவில்லை என்றால், மருத்துவர்கள் எதை எழுதுகிறார்களோ, அதுதான் காரணமாகவும் உண்மையாகவும் இருக்கும். ஆட்சேபனைகள் எதையும் எவரேனும் தெரிவித்தால்தான், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட காரணம் குறிப்பிடப்படும். 

அந்தக் காரணங்கள் பின்னர் சரிசெய்யப்படுமா?மெய்யாகவே மருத்துவத் தவறு ஏதேனும் நடந்திருந்தால், அதற்கான இழப்பீடு வழங்கப்படுமா?நிவாரணம் அளிக்கப்படுமா?பொறுப்புரைத்தல் நடக்குமா?என்பதெல்லாம் மங்கலானவை.

ஆக மொத்தத்தில் அரச மருத்துமனையில் இப்படியும் அப்படியும்தான் சிகிச்சை நடக்கிறது. பல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்பான மருத்துவர்களும் தாதியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் சிறப்பான முறையில் சேவையாற்றுகிறார்கள். பல ஆயிரக் கணக்கானோர் அரச மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்றுத் தேறுகிறார்கள். நான் எப்போதும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சைகளைப் பெற்றிருக்கிறேன். மருத்துவமனை அனுபவங்களைக் கொண்டு, கவிதை நூலொன்றைக் கூட எழுதியிருக்கிறேன். மருத்துவர்களையும் தாதியர்களையும் ஏனைய பணியாளர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளேன். அதேவேளை அதே அளவுக்கு அசிரத்தையும் உண்டு. சிகிச்சைக்காக விடுதியில் சேர்க்கப்படும் நோயாளிக்கு கட்டில் கிடைப்பதிலிருந்து, அவருடைய நோய்த்தன்மையைக் குறித்து அறிவது வரையில் சவாலாக இருப்பதும் பல இடங்களிலும் நடக்கிறது. 

ஏனைய துறைகளை விட மருத்துவத்துறையை மக்கள் மதிப்பதற்குக் காரணம், உயிர்களை காக்கிறது, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றது என்பதாலேயே. 

ஆகவேதான் கடவுளுக்கு நிகராக மருத்துவர்களைச் சமூகம் பார்க்கிறது. ஆனால், சிலநேரங்களில் மருத்துவ அலட்சியம் அல்லது தவறான முடிவுகள், நிர்வாகம் சார்ந்தகுறைபாடுகள் (system failure) காரணமாக உயிரிழப்புகள் அல்லது ஊனங்கள் நிகழ்கின்றன. இவை பாரதூரமானவை. வேறு துறைகளில் நடக்கின்ற தவறுகள், பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. மருத்துவத்துறையில் நிகழும் தவறுகள் ஆளையே காலியாக்கி விடக் கூடியது. 

“மருத்துவத் துறையில் நிகழும் தவறுகளைக் கண்டறியும், கட்டுப்படுத்தும் நடைமுறை (கலாச்சாரம்) உலகளாவிய ரீதியில் கட்டி எழுப்பப்படுகிறது. இலங்கையிலும் அது கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தினைப் பேணுவதற்காகச் சுகாதார அமைச்சு ஒரு பிரிவினையே ஆரம்பித்துள்ளது. இதற்கென (நோயாளர் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கென – atient safety and quality) ஒருதனிப் பிரிவு, பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள்,வாகனம், ஏனைய வளங்கள் என அனைத்தையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. அவர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு இது தொடர்பான பயிற்சிகளில் பங்கேற்று, நடைமுறைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை. 

தவறுகள் தொடர்கின்றன. அதனால், அநாவசியச் சாவுகள் நிகழ்கின்றன. பதட்டத்தோடுதான் ஒவ்வொருவரும் மருத்துவமனையில் கால் வைக்க வேண்டியுள்ளது. கலக்கத்தோடுதான் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்க வேண்டியிருக்கிறது. நோய்தேறி, வீடு திரும்பினால், அது மெய்யாகவே வீடு பேறுதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *