இலக்கியவாதிகளுக்கு எச்சரிக்கை! இலக்கிய மோசடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

இலக்கியவாதிகளுக்கு எச்சரிக்கை! இலக்கிய மோசடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

“வணக்கம் பேராசிரியர் ஸ்னிக்தா பூனம்” (Hello Professor Snigdha Poonam) என்ற வாசகத்துடன் அந்த மின்னஞ்சல் தொடங்கியது.

நான் அதை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். வெளிப்படையான காரணத்துக்காக இதுவரை யாரும் என்னைப் பேராசிரியர் என்று அழைத்ததில்லை. ஏனெனில் நான் பேராசிரியர் அல்ல.

சற்றுத் தயக்கத்துடன் தொடர்ந்து வாசித்தேன்.

அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் திமோத்தி ஃபிர்த் (Timothy Firth). அவர் அமெரிக்காவின் சியாட்டிலைத் தளமாகக் கொண்ட ஓவியத்திற்கான நேரடி மாதிரி வரைவுக் கலை (Life Drawing) சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார். அந்தச் சமூகத்தில் 1,943 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆழமான விவாதங்களைத் தொடர்ந்து நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் அவர்களது விவாதத்துக்கு ஊக்கமளித்த படைப்பு எனது முதலாவது நூலான Dreamers: How Young Indians Are Changing Their World (கனவு காண்பவர்கள்: இந்தியாவின் இளம் தலைமுறையினர் எவ்வாறு தமது உலகத்தை மாற்றுகிறார்கள்?) என்பதாகும்.

தங்களது அடுத்த கூட்டங்களில் ஒன்றில் அந்த நூல் குறித்துக் கலந்துரையாட விரும்புவதாகவும், கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பின்னர் Goodreads மற்றும் Amazon இணையத்தளங்களில் நூலுக்கான மதிப்புரைகளை எழுத ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் CAM Life Drawing என்ற பெயரில் இணையத்தில் தேடினேன். நிகழ்வுகளுக்கான இணையப்பக்கமும் Instagram கணக்கும் கிடைத்தன.

Instagram பக்கத்தில் திமோத்தி ஃபிர்த் என்று குறிப்பிடப்பட்டிருந்த சில புகைப்படங்களும் இருந்தன. அவர் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆண் என்பது தெரிந்தது. சமூக உறுப்பினர்கள் சிலர், அவர் சமூகத்துக்கான இடத்தை உருவாக்குவதற்காக இரவு பகலாக உழைப்பவர் என்று பாராட்டியிருந்தனர்.

ஆனால், அந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பியவர் உண்மையில் இந்த நபராக இருக்க முடியாது என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

சியாட்டிலில் இயங்கும் உள்ளூர் ஓவியக் கலைச் சமூகம், இந்தியாவின் சிறு நகரங்களில் வாழும் இளைஞர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புனைகதை அல்லாத எனது நூலில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?

அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டது.

அவர்களுக்கு என்ன வேண்டும்?

நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.

அடுத்த மின்னஞ்சலில் Zoom நிகழ்வுக்கான அழகாக வடிவமைக்கப்பட்ட விளம்பரச் சுவரொட்டி வந்தது. அதன் பின்னணியில் எனது நூலின் அட்டைப்படமும், Economist உள்ளிட்ட இதழ்களில் வெளியான பாராட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆனால், எனது கவனத்தை ஈர்த்தது வேறொன்று.

‘பங்களிப்புக் கட்டணம்’ (Contribution Fee) செலுத்துமாறு அதில் கோரப்பட்டிருந்தது. எவ்வளவு தொகை என்று குறிப்பிடப்படவில்லை. அந்தப் பணம் விளம்பரம், ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விசித்திரமாக, இந்த மின்னஞ்சலை அனுப்பியவர் திமோத்தி அல்ல.

இந்த முறை கையொப்பமிட்டிருந்தவர் ஸ்டீபன் (Stephen). அவர் தன்னை ‘Community Improv LA’ என்ற மற்றொரு நகரத்தில் இயங்கும் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படு த்தியிருந்தார்.

அந்த அமைப்பின் Facebook பக்கத்தைப் பார்த்தபோது, ஸ்டீபன் என்ற பெயரில் ஒருவர் உண்மையிலேயே அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பது தெரியவந்தது.

ஆனால் ஸ்டீபன் எனக்கு எழுதியது திமோத்தியின் மின்னஞ்சல் முகவரியிலிருந்துதான்.

இதற்கும் மேலாக, அந்த மின்னஞ்சலில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) கட்டளை வாசகம் ஒன்று அப்படியே விடப்பட்டிருந்தது என்று நான் சந்தேகித்தேன். அதில், “MAKE IT MORE PROFESSIONAL” (இதை இன்னும் தொழில்முறையாக மாற்றவும்) என்ற வரியும் இடம்பெற்றிருந்தது.

இது நிச்சயமாக ஒரு மோசடி.

உண்மையான புத்தக வாசிப்பு வட்டங்கள் எழுத்தாளர்களிடம் பணம் கேட்பதில்லை.

ஆனால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

எனது படைப்புகளை உண்மையில் வாசித்திருந்தால், இந்த நபர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கவே விரும்பியிருப்பார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக நான் சர்வதேச எல்லைகளைக் கடந்து நடைபெறும் மோசடிகள் குறித்து செய்தி சேகரித்து வருகிறேன்.

எனது முதலாவது நூலான Dreamers இந்தியாவில் இயங்கும் போலியான தொலைபேசி அழைப்பு மையங்கள் (Fake Call Centres) பற்றிய ஓர் அத்தியாயத்துடன் நிறைவடைகிறது.

எனது இரண்டாவது நூலான Scamlands ஆசியாவின் ஏனைய குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான பயணத்தின் ஊடாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நம்பிக்கையின் சிதைவு ஆகியவற்றின் மீது வளர்ந்து வரும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மோசடிச் சாம்ராஜ்ஜியத்தை  வெளிப்படுத்துகிறது.

இந்தப் பயணத்தில், இந்த மோசடிச் சாம்ராஜ்ஜியத்தை இயக்கும் நபர்களை நான் சந்தித்தும் நேர்காணல் செய்தும் இருக்கிறேன்.

சிலருக்கு மோசடி என்பது சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான வழியாக இருந்தது. வேறு சிலருக்கு, வசதி படைத்தவர்களைப் பழிவாங்கும் செயலாக அது அமைந்திருந்தது.

இந்த இருண்ட உலகிலிருந்து நான் தொழில்முறையாக வெளியேறியிருந்தாலும், ஒரு மோசடி மின்னஞ்சலைப் பார்த்தவுடன் அதைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறியாமல் என்னால் நீக்கிவிட முடியாது.

அந்தப் புத்தக வாசிப்பு வட்டத்துக்கு பணம் செலுத்த ஒப்புக்கொண்டேன். ஆனால் நிகழ்வுக்கு முன்னர் அல்ல; நிகழ்வு முடிந்த பின்னர் செலுத்துவதாகத் தெரிவித்தேன்.

‘ஸ்டீபன்’ என்பது தட்டச்சுப் பிழை என்று விளக்கமளித்த பின்னர், ‘திமோத்தி’ எனக்கொரு Google Meet இணைப்பை அனுப்பினார்.

நான் அந்தக் கூட்டத்தில் இணைந்தபோது சுமார் 20 பேர் ஏற்கெனவே அங்கிருந்தனர்.

அலெக்சாண்டர், ஆண்ட்ரூ, மீரா, ராஜ்னிஷ், இன்னொரு அலெக்சாண்டர் எனப் பலர் இருந்தனர்.

திமோத்தியும் அங்கிருந்தார். ஸ்டீபனும் இருந்தார்.

ஆனால் அவர்களில் எவருடைய கேமராவும் இயக்கப்படவில்லை.

அவர்கள் பயன்படுத்திய சுயவிவரப் படங்களைப் பார்த்தபோது, பெரும்பாலானவர்கள் வெள்ளையினத்தவர்களாகத் தோன்றினர்.

பின்னர் கேள்விகள் ஆரம்பமாகின.

“பேராசிரியரே, Dreamers நூலை எழுதுவதற்கு உங்களுக்கு எது தூண்டுதலாக இருந்தது?”

“பேராசிரியரே, இந்தியாவின் சிறு நகரங்களில் செய்தி சேகரித்தபோது நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?”

“பேராசிரியரே, உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விடயம் எது?”

இந்தக் கேள்விகள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவற்றைக் கேட்ட குரல்கள் மனிதர்களுடையதாகவே இருந்தன.

அவர்களின் குரல்களுக்கும் சுயவிவரப் படங்களுக்கும் இடையில் பொருத்தம் இருக்கவில்லை.

குறிப்பாக, திமோத்தியின் குரலைக் கேட்டபோது, அவர் ஆணாக அல்ல, பெண்ணாக இருக்கலாம் என்று தோன்றியது.

இவர்கள் யார்?

அவர்கள் ஒரு தடயத்தை மட்டும் விட்டுச் சென்றனர்.

வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றிய அந்த ஆண்களும் பெண்களும் அனைவரும் மேற்கு ஆப்பிரிக்க உச்சரிப்பில் பேசினார்கள்.

போலியான வாசகர்களுடன் Zoom புத்தக வாசிப்பு வட்டத்தில் சிக்கிக்கொண்ட எழுத்தாளர் நான் மட்டுமல்ல.

வெளியிடப்பட்ட நூல்களைக் கொண்ட எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு இவ்வாறான வாசிப்பு சமூகங்களிலிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. Google இல் ஒரு சாதாரண தேடலை மேற்கொண்டாலே அவற்றின் போலித்தனம் வெளிப்படத் தொடங்கிவிடும்.

பொதுவாக மோசடிகளில் நடப்பதைப் போலவே, இந்த அழைப்புகளும் உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றுகின்றன.

ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், Goodreads இல் அபாரமான செல்வாக்கு, சில சந்தர்ப்பங்களில் எழுத்தாளரின் நூலைப் பற்றிய ஆழமான புரிதல் போன்றவை அவற்றில் கூறப்படுகின்றன.

பல எழுத்தாளர்கள் முதலாவது மின்னஞ்சலிலேயே சந்தேகத்துக்குரிய அடையாளங்களைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால், அனைவரும் அவ்வாறு செய்வதில்லை.

புத்தக வாசிப்பு வட்டம் ஒன்றின் பெயரில் வந்த மோசடி அழைப்பில் ஈடுபட்ட எழுத்தாளர் ஒருவரிடம், இணையவழி நிகழ்வுக்காக 100 டொலர் பங்களிப்புச் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அந்தப் பணம் பங்கேற்பாளர்களுக்கான சிற்றுண்டிகளுக்குச் செலவிடப்படும் என்று கூறியுள்ளனர்.

Zoom வழியாக நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு அந்தச் சிற்றுண்டிகளை எவ்வாறு வழங்கப்போகிறார்கள் என்று கேட்காமலேயே அந்த எழுத்தாளர் நிகழ்விலிருந்து விலகிவிட்டார்.

நாவலாசிரியர் மார்ஷ் ரோஸ் (Marsh Rose) இந்த மோசடியை ஆராயும் நோக்கில், ‘Chicago LGBTQ Book Club’ என்ற அமைப்புடன் 29 மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டார்.

“Zoom கூட்டத்தில் நான் கேட்ட குரல்கள் சிகாகோவிலிருந்து பேசுவது போல் இருக்கவில்லை. அவை நைஜீரியாவில் வசிக்கும் எனது நண்பரின் குரலைப் போலவே ஒலித்தன” என்று அவர் எழுத்தாளர்களுக்கான இணையவளமான WritersWeekly.com இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர்களைத் தொடர்புகொள்வது போலியான புத்தக வாசிப்பு வட்டங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

எங்களது அடுத்த நூலை வெளியிடுவதாகவும், விளம்பரப்படுத்துவதாகவும், சமூக ஊடகங்களைக் கையாள்வதாகவும், இலக்கிய முகவர்களாகப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், Netflix மற்றும் Paramount போன்ற நிறுவனங்களுடன் திரைப்பட ஒப்பந்தங்களை ஏற்படுத்தித் தருவதாகவும் பல்வேறு சலுகைகள் எழுத்தாளர்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

முக்கியமான பதிப்பகங்கள், இலக்கிய முகவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர் சங்கங்கள் மற்றும் இலக்கிய விருதுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என அனைத்தினதும் பெயர்கள் போலியாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

அவர்கள் கோரும் பணத்தொகை பெரும்பாலும் ஆரம்பத்தில் சிறியதாகவே தோன்றும்.

“எனக்குத் தெரிவிக்கப்பட்ட தொகைகள் 55 டொலர் முதல் 350 டொலர் வரை உள்ளன. ஒரு சந்தர்ப்பத்தில், மோசடிக்காரர் அடிப்படை, அத்தியாவசியம், உயர்தரம் என மூன்று வகையான ‘சிறப்புத் திட்டங்களை’ வழங்கினார். அவற்றின் விலை 100 முதல் 200 டொலர் வரை இருந்தது” என்று மோசடிகளைக் கண்காணிக்கும் அமைப்பான Writer Beware இன் இணை நிறுவனர் விக்டோரியா ஸ்ட்ராஸ் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார்.

பல சந்தர்ப்பங்களில், இந்தப் பணப் பரிமாற்றங்களின் பின்னணியில் அமெரிக்காவில் வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த மூன்றாம் தரப்பினர் இருப்பது தெரியவந்துள்ளது.

எழுத்தாளர் ஜோன் காக்ஸ் (Jon Cocks), அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா முழுவதும் பல புத்தக வாசிப்பு வட்டங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறிய ‘மேரி பிரவுன்’ என்பவருக்கு 478.65 டொலர் செலுத்தினார்.

பின்னர் PayPal பணப்பரிமாற்ற அறிக்கையில் பணத்தைப் பெற்றவரின் பெயர் ‘Dayo Oguntuase’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் கவனித்தார்.

பிரித்தானிய எழுத்தாளர்கள் சங்கமான Writers’ Guild of Great Britain (WGGB), அண்மைய மாதங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் கவர்ச்சிகரமான சலுகைகள் குறித்து ஆலோசனை கேட்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ‘பெரும் அதிகரிப்பு’ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

“மிகவும் விழிப்புடன் இருக்கும் எழுத்தாளர்கள்கூட இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்வது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்” என்று WGGB பொதுச் செயலாளர் எல்லி பியர்ஸ் தெரிவித்தார்.

மோசடிகளிலிருந்து எழுத்தாளர்களைப் பாதுகாப்பதற்காக, மே மாதத்தில் Society of Authors அமைப்புடன் இணைந்து வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டி தொடர்பாக அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

“எங்கள் ஆலோசனைக் குழுவுக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது 12 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கின்றன” என்று Society of Authors அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அன்னா கேன்லி தெரிவித்தார்.

உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவின் (Generative AI) வளர்ச்சியுடன் இந்த அதிகரிப்பை அவர் தொடர்புபடுத்தினார்.

அமெரிக்க Authors Guild அமைப்பும் மோசடியில் சிக்கிய அல்லது சிக்குவதற்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர்களிடமிருந்து தினமும் தகவல்களைப் பெறுவதாகக் கூறுகிறது.

WritersWeekly.com நிறுவனர் ஏஞ்சலா ஹோய் என்னிடம் கூறுகையில்:

“நியூயோர்க்கின் ஐந்து முன்னணி பதிப்பகங்களில் ஒன்றிலிருந்து சலுகை கிடைத்துவிட்டதாகவோ அல்லது பிரபலமான இலக்கிய முகவர் ஒருவர் தங்களைத் தொடர்புகொண்டதாகவோ நம்பும் எழுத்தாளர்களுடன் நான் தினமும், நாள் முழுவதும் தொடர்பில் இருக்கிறேன்” என்றார்.

PageTurner மோசடி: ஒரு முன்னோடி..

எழுத்தாளர்களைக் குறிவைத்த மோசடிகளில் குறிப்பிடத்தக்க முன்னோடியாக அமைந்தது PageTurner மோசடி.

2017 முதல் 2024 வரை இயங்கியதாகக் கூறப்படும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட கற்பனையான பதிப்பக நிறுவனத்தின் பெயரே PageTurner.

பிலிப்பைன்ஸின் செபு (Cebu) நகரிலிருந்த தொலைபேசி அழைப்பு மைய ஊழியர்கள், PageTurner நிறுவனம் எழுத்தாளர்களுக்கும் இலக்கிய முகவர்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இணையவழித் திரைப்பட ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான இடைத்தரகர் என்று கூறினர்.

தங்களது நூல்களை வெளியிடுவதற்கோ திரைப்படங்களாகவும் இணையத் தொடர்களாகவும் மாற்றுவதற்கோ வரி, பரிவர்த்தனைக் கட்டணம் மற்றும் இதர செலவுகள் என்ற பெயரில் எழுத்தாளர்களிடம் பணம் பெற்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் இந்த நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கிய பின்னரே மோசடியின் அளவு தெளிவாகத் தெரியவந்தது.

அமெரிக்க நீதித்துறையின் (Department of Justice) தகவலின்படி, 800க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் 48 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.

Writer Beware அமைப்புக்கு PageTurner தொடர்பாக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

ஒரு எழுத்தாளர் 600,000 டொலருக்கும் அதிகமான தொகையை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோசடியின் மூலம் பெறப்பட்ட பணத்தில் குறைந்தது 42 மில்லியன் டொலர் பிலிப்பைன்ஸிலுள்ள வங்கிக் கணக்குகள் ஊடாகப் பணமோசடி செய்யப்பட்டதாக வழக்குத் தொடர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இந்த ஆண்டு மே மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் மூவர் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுத்தாளர்களைக் குறிவைக்கும் மோசடிகளின் எண்ணிக்கையும், பயன்படுத்தப்படும் தந்திரங்களின் வகைகளும் அதிகரித்துள்ளதைப் பார்க்கும்போது, இவை பல்வேறு நாடுகளிலிருந்து இயக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது.

பதிப்பகத் துறையைப் பற்றி ஆராய்ந்த எவருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களிடம் ஏராளமான பணம் குவிந்து கிடப்பதில்லை என்பது தெரியும்.

அப்படியிருக்க, மோசடிக்காரர்கள் ஏன் எழுத்தாளர்களைக் குறிவைக்கிறார்கள்?

ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுடன் தொடர்புகொண்ட அனுபவமுள்ள WritersWeekly.com நிறுவனத்தின் ஏஞ்சலா ஹோய், இதற்கு எழுத்தாளர்களின் அங்கீகாரம் பெறும் ஆசையே காரணம் என்கிறார்.

அந்த இணையத்தளத்தின் நிர்வாக ஆசிரியர் பிரையன் விடன் இதனை மேலும் விளக்கினார்:

“ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களைப் பற்றியே சிந்திப்பவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் அனைவரும் தங்களது படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மோசடிக்காரர்கள் குறிவைப்பது அதைத்தான். மிகவும் இலாபகரமான ஒரு தனித்துவமான சந்தையை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.”

“யாராவது தங்களது எழுத்தைப் படிக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் காத்திருக்கிறார்கள்” என்று ஹோய் மேலும் கூறினார்.

அதனால்தான் மோசடிக்காரர்கள் தங்கள் படைப்புகளைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது பல எழுத்தாளர்கள் அதை நம்பிவிடுகிறார்கள் என்பது அவரது கருத்து.

செயற்கை நுண்ணறிவு காரணமாக இப்போது அந்தப் பாராட்டுகள் மிகவும் நுணுக்கமானதாகவும், தனிப்பட்ட படைப்பைப் படித்துவிட்டுக் கூறப்படுவது போன்றும் தோன்றுகின்றன.

வயதான எழுத்தாளர்கள் குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ளனர்.

ஹோய் விளக்கியபடி, தங்களுக்குள் ஒரு புத்தகம் எழுதும் திறமை இருப்பதாக நினைக்கும் பலர் ஓய்வுபெறும் வரை எழுதுவதைத் தள்ளிப்போடுகிறார்கள்.

இந்த வாழ்க்கைக் கட்டத்தில் இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களிடம் கணிசமான ஓய்வூதியச் சேமிப்பு இருக்கும்.

அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வூதிய நிதியைச் சேமித்திருப்பார்கள் என்பதை மோசடிக்காரர்கள் நன்கு அறிவார்கள் என்று ஹோய் கூறுகிறார்.

சில எழுத்தாளர்கள் மோசடிக்காரர்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் அவ்வளவு ஆர்வமாக இருப்பதால், ஹோய் வழங்கும் எச்சரிக்கைகளைக்கூடப் புறக்கணிக்கிறார்கள்.

வேறு சிலர் எல்லாம் முடிந்த பின்னரே அவரை அணுகுகிறார்கள்.

அவரது எழுத்தாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் போலியான புத்தகத்தைத் திரைப்படமாக்கும் ஒப்பந்தத்துக்காக 100,000 டொலருக்கும் அதிகமான தொகையைச் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எனது புத்தகத்தைப் பற்றி இந்த மின்னஞ்சல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில புகழ்ச்சியான வாசகங்களை எனது விளம்பரங்களிலேயே நான் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று எழுத்தாளர் டோனா ஸ்ட்ராங், Goodreads இன் ‘Readers Group Scams’ விவாதப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

இலக்கிய மோசடிகளின் புதிய வடிவங்கள் ஒவ்வொரு சில நாட்களுக்கும் தோன்றிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து எழுத்தாளர்களுக்கு மிகக் குறைந்த தகவல்களே கிடைக்கின்றன.

மோசடிக்காரர்களின் வணிகக் கட்டமைப்பு..

ஆகஸ்ட் மாதத்தில், நியூசிலாந்தைச் சேர்ந்த மோசடி எதிர்ப்புச் செயற்பாட்டாளரான டேனி டி ஹெக் (Danny de Hek), பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு மோசடிக்காரரிடமிருந்து பெற்ற Excel விரிதாள் ஒன்றை எனக்கு அனுப்பினார். அதனை அனுப்பியவர் தனது அனுமதியுடன் பகிர்ந்துகொண்டதாக டேனி தெரிவித்தார்.

அந்த ஆவணத்தின் தலைப்பு ‘LinkedIn Outreach 2026’ என்பதாகும்.

அதில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலக்குவைக்கப்பட்ட எழுத்தாளர்கள் தொடர்பான மாதாந்திரத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஒரு பக்கத்தில் 403 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

அவர்கள் ஒவ்வொருவரும் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தனர்:

  • புதிய எழுத்தாளர்
  • சமையல் நூல் எழுத்தாளர்
  • மதம் சார்ந்த நூல் எழுத்தாளர்
  • புலனாய்வு எழுத்தாளர்
  • கவிதை எழுத்தாளர்
  • நியூயோர்க் டைம்ஸின் அதிக விற்பனையான நூல்களை எழுதியவர்

பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்கள். ஏனையவர்கள் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அது நம்பமுடியாத அளவுக்கு விரிவான ஆவணமாக இருந்தது.

எழுத்தாளரின் சுயவிவரத்தைக் கண்டுபிடித்த நபர் யார், முதலில் தொடர்புகொண்டவர் யார், எழுத்தாளருக்குத் தேவைப்படும் சேவை என்ன, எந்தப் பிரிவு அந்த எழுத்தாளரைக் கையாள்கிறது, அவருடன் பகிரப்பட்ட சந்திப்புக்கான இணைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

சில சந்தர்ப்பங்களில் தொடர்புகொண்டதன் முடிவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.

(“முன்பணமாக 1,200 டொலர் செலுத்தினார்.”

“பணம் செலுத்தத் தயாரில்லை. ஏற்கெனவே மோசடியில் சிக்கியுள்ளார்.”போன்றவை அவை.

“ஆகஸ்ட் 12 புதன்கிழமை இரவு 10 மணிக்கு பாகிஸ்தான் நேரப்படி சந்திப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழமான நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யத் தயாராக உள்ளார். குறைந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பு உருவாக்கப்பட வேண்டும்.”)

இந்த விவரங்களில் சிலவற்றைப் புரிந்துகொள்ள அவற்றின் பின்னணியை அறிந்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் நேரப்படி இரவு 10 மணி என்பது அமெரிக்காவின் மேற்குக் கரையில் காலை 10 மணியாகவும், கிழக்குக் கரையில் பிற்பகல் 1 மணியாகவும் இருக்கும்.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று டேனி தெரிவித்தார்.

ஆனால் எழுத்தாளர்களைத் தொடர்புகொள்ளும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் அமெரிக்கப் பெயர்களாக இருந்தன. ஆஷ்லி, ஜோசலின், மேகன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களிலும் சமூக அமைப்புகளிலும் பணிபுரியும் அமெரிக்கர்களே தங்களைத் தொடர்புகொள்கிறார்கள் என்று எழுத்தாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம்.

மோசடி மின்னஞ்சல்களைப் பெறுபவர்கள் அவை ஒழுங்கற்றதாகவும், தொடர்பில்லாததாகவும் இருப்பதாக நினைக்கலாம்.

ஆனால் நவீன மோசடித் தொழில்துறை, உலகளாவிய பெருநிறுவனங்களின் கட்டமைப்பைப் பின்பற்றி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இயங்குகிறது.

தெளிவான பணிப் பொறுப்புகள், சம்பளங்கள், ஊக்கத்தொகைகள் மற்றும் அறிக்கையிடும் நடைமுறைகள் ஆகியவை அங்கு உள்ளன.

மோசடித் திட்டங்கள் எவ்வளவு வியப்பூட்டும் வகையில் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும், அவற்றில் புதிதாக இணையும் இளைஞர்களுக்கு ஒரே மாதிரியான இலக்குகளே வழங்கப்படுகின்றன.

முதலில் அமெரிக்கர்கள். அடுத்ததாக ஏமாற்றப்படக்கூடிய ஏனைய மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய மோசடி அழைப்பு மைய வலையமைப்பு குறித்து நான் பல ஆண்டுகள் செய்தி சேகரித்திருக்கிறேன்.

உள்நாட்டுத் தொழில்சந்தையில் குறைந்த வேலைவாய்ப்புகளும் மோசமான பொருளாதார எதிர்காலமும் நிலவுவதால், இலட்சக்கணக்கான கல்விகற்ற இளைஞர்கள் இந்த மோசடி அழைப்பு மையங்களில் பணியாற்றுகிறார்கள்.

டெல்லி அல்லது கொல்கத்தாவில் உள்ள இந்திய மோசடிக்காரர்கள் Microsoft தொழில்நுட்ப உதவி மையம், அமெரிக்க உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (Internal Revenue Service) அல்லது FBI எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு போன்ற நிறுவனங்களாக நடிக்கும் மோசடிகளிலும் இதேபோன்ற Excel விரிதாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச மோசடிகளை அம்பலப்படுத்தும் வலைப்பதிவையும் YouTube தளத்தையும் தீவிரமாக நடத்திவரும் டேனி டி ஹெக் என்னிடம் கூறுகையில், பாகிஸ்தானில் போலியான இலக்கியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவின் மோசடி அழைப்பு மையங்களைப் போன்றே இயங்குகின்றன என்றார்.

அவற்றில் பெரும்பாலானவை கராச்சி மற்றும் லாகூரில் நேரடி அலுவலகங்களைக் கொண்டுள்ளன.

அங்கு 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

வேலைக்குச் சேர்ந்ததும், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இலக்கிய மோசடித் திட்டத்துக்கென அமைக்கப்பட்ட பிரிவுகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

ஆரம்பநிலை ஊழியர்களுக்கு எழுத்தாளர்களைத் தொடர்புகொள்ளும் பணிகள் வழங்கப்படுகின்றன.

அனுபவமுள்ளவர்கள் எழுத்தாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கி, பல மாதங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகள் வரை பல்வேறு ‘திட்டத் தொகுப்புகளை’ விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பாரம்பரியப் பதிப்பகத் துறைக்குள் நுழைய முடியாமல் தவிக்கும் எழுத்தாளர்களைக் குறிவைக்கும் சேவைகளே அதிக இலாபம் தருகின்றன.

அவர்கள் தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் மட்டும் எழுத்தாளர்களை அணுகுவதில்லை.

சுயமாகப் புத்தகங்களை வெளியிடும் சேவைகள் அல்லது பணம் செலுத்தி நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் (Vanity Publishing) என்ற பெயரில் இயங்கும் இணையத்தளங்கள் மூலம் எழுத்தாளர்களை ஈர்க்கின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள மோசடி நிறுவனங்கள், பிரபலமான பதிப்பகங்களின் பெயர்களைப் போலியாகப் பயன்படுத்தி எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றன.

Google தேடல் முடிவுகளில் முன்னுரிமை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்களைச் செலவிடுகின்றன.

இதன் விளைவாக, முழுமையான கையெழுத்துப் பிரதியைக் கொண்ட ஒருவர் இணையத்தில் புத்தக வெளியீட்டு நிறுவனங்களைத் தேடும்போது, உண்மையான சுயபதிப்பு நிறுவனங்களைக் காட்டிலும் penguinwriters.com அல்லது amazonglobalpublishers.com போன்ற போலியான இணையத்தளங்களே முதலில் தோன்றக்கூடும்.

பாரம்பரியப் பதிப்பகங்களின் இணையத்தளங்களைப் போலல்லாமல், இந்தப் போலி இணையத்தளங்கள் புதிய எழுத்தாளர்களை வெளிப்படையாக அழைக்கின்றன.

WritersWeekly.com மதிப்பீட்டின்படி, இவ்வாறான போலியான இணையத்தளங்கள் குறைந்தது 3,000 உள்ளன.

அவற்றை அடையாளம் காண்பதற்கான முக்கியமான அறிகுறி ஒன்று உள்ளது.

அந்த இணையத்தளத்தைத் திறந்தவுடன், கீழ் வலது மூலையில் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.

அதன்பின்னர் அமெரிக்கப் பெயரைக் கொண்ட ஒருவரிடமிருந்து செய்தி வரும்.

உதாரணமாக, மார்க் ஆண்டர்சன் அல்லது ஜெசிக்கா பார்க்கர் போன்ற பெயர்களும், வெள்ளையினத்தவரின் புகைப்படங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

“இன்று உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?”

“தானியங்கி உரையாடல் மென்பொருள் அல்ல; நேரடி முகவருடன் பேசுங்கள்!”

என்று அவை அறிவிக்கின்றன.

அந்த இறுதி வாக்கியம் மட்டும் முற்றிலும் உண்மை.

உங்களுடன் பேசுபவர் உண்மையான மனிதர்தான். ஆனால் அவர் ஒரு மோசடிக்காரர். அவர் பணிபுரியும் நேரம், நீங்கள் வசிக்கும் நாட்டின் பகல் நேரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

முக்கியமான ஐந்து வர்த்தகப் பதிப்பகங்களில் எதுவும் தங்களைப் போலியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரவில்லை.

இதற்கு விதிவிலக்காக, Amazon நிறுவனம் தனது பெயருடன் தொடர்பு இருப்பதாகப் பொய்யாகக் கூறி எழுத்தாளர்களை ஏமாற்றிய சுமார் 20 நபர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எதிராக கலிபோர்னியாவில் வழக்குத் தொடர்ந்தது.

அவர்கள் Amazon Publishing மற்றும் Kindle Direct Publishing நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என்று போலியாகக் கூறியிருந்தனர்.

2025 பெப்ரவரியில் Amazon இந்த வழக்கில் 36.4 மில்லியன் டொலர் இழப்பீட்டைப் பெற்றது.

100,000 டொலர் இழந்த எழுத்தாளர்..

டென்மார்க்கைச் சேர்ந்த சுயபதிப்பு எழுத்தாளரான M L Stark, தனது மோசடிக்காரரை நேரில் சந்தித்து எதிர்கொண்ட அரிதான பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

உளவியல் திகில் நாவல்கள் பலவற்றை எழுதியுள்ள அவர், கடந்த ஆண்டு தாய்லாந்துக்குப் பயணம் செய்தார்.

அங்கு Ethan Williams என்ற நபரைச் சந்திக்கவே அவர் சென்றிருந்தார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸைத் தளமாகக் கொண்ட, Amazon உடன் தொடர்புடைய சுயபதிப்பு நிறுவனத்தில் நீண்டகாலமாகத் தனது ஆசிரியராகப் பணியாற்றியவர் என்றும், நெருங்கிய நண்பராகவும் அவர் நம்பியிருந்தார்.

அந்தச் சந்திப்புக்கு முன்னர் ஒரு வருடத்துக்கும் மேலாக Zoom மற்றும் மின்னஞ்சல் வழியாக இருவரும் தொடர்பில் இருந்தனர்.

புத்தகத் திருத்தம், அட்டைப்பட வடிவமைப்பு, New York Times மற்றும் Los Angeles Times பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக அந்த நிறுவனத்துக்கு அவர் சுமார் 100,000 டொலர் செலுத்தியிருந்தார்.

அவர் பணம் செலுத்திய பெரும்பாலான சேவைகள் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் சில சேவைகள் மட்டும் செய்யப்பட்டன.

அவரை IngramSpark என்ற சுயபதிப்பு தளத்தில் பதிவு செய்தனர். இதன் மூலம் இரண்டு நூல்களை அவர் வெளியிட முடிந்தது.

Amazon தளத்திலும் அந்த நூல்கள் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு அவரது நூல்களில் ஒன்று நியூயோர்க்கின் Times Square பகுதியில் உள்ள டிஜிட்டல் விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

“அதற்காக நான் 10,000 டொலர் செலுத்தியிருந்தேன்” என்று அவர் என்னிடம் கூறினார்.

நீண்டகால வாடிக்கையாளர் ஒருவர் தங்களது தாமதங்களால் பொறுமையிழந்து பணத்தைத் திருப்பிக் கேட்கும் தருணங்களில், அவரைச் சமாதானப்படுத்துவதற்காகவே இவ்வாறான சில சேவைகளை அவர்கள் வழங்கியதாகப் பின்னர் அவர் புரிந்துகொண்டார்.

“பல மாதங்களாக அவர்கள் காலம் தாழ்த்திய பின்னர், பணத்தைத் திருப்பித் தருமாறு நான் கேட்ட ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றைச் செய்து காட்டுவார்கள்” என்று அவர் கூறினார்.

மோசடிக்காரர்களின் இறுதிச் சலுகை Netflix திரைப்படமாக்கல் தொடர்பானதாக இருந்தது.

தாய்லாந்தில் படமாக்கப்படவுள்ள திரைப்படமாக தனது நூலை மாற்றத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விரும்புவதாக அவர்கள் கூறினர்.

அவரது அடுத்த திகில் நாவல் அவரது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதில் தாய்லாந்து முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.

திரைப்படத்துக்கான இடங்களைப் பார்வையிடுவதற்காகவே Stark மற்றும் Williams தாய்லாந்தில் சந்தித்தனர்.

அந்த நபர் தன்னை பிரித்தானியக் குடிமகன் என்றும், ஆங்கிலேயத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர் என்றும் கூறியிருந்தார்.

வெளிர் நிறத் தோலைக் கொண்ட பாகிஸ்தானியரான அவர் கூறிய கதையை நம்புவது சாத்தியமாக இருந்தது.

“அவர் ஒரு கலைஞர். அந்தப் பாத்திரத்தில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது” என்று Stark கூறினார்.

இருப்பினும், அவரது அடையாள அட்டையைக் காட்டுமாறு அவர் கேட்டார்.

அவர் காட்டிய அடையாள அட்டை போலியானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

“உங்களது கடவுச்சீட்டைக் காட்டுங்கள் என்று நான் வற்புறுத்தினேன்” என்கிறார் அவர்.

அதன் மூலமே அந்த நபரின் உண்மையான பெயரும் குடியுரிமையும் தெரியவந்தன.

அவர் தனது மோசடியை ஒப்புக்கொண்டார்.

“ஆம், ஆரம்பத்திலிருந்தே இது ஒரு மோசடிதான். பீட்டர் என்பவரும் போலியான பெயரைப் பயன்படுத்துகிறார். ரொனால்டும் போலியான பெயரைப் பயன்படுத்துகிறார். நீங்கள் இதுவரை தொடர்புகொண்ட நிறுவனத்தில் உள்ள அனைவருமே மோசடிக்காரர்கள்தான். இது ஒரு மிகப்பெரிய மோசடி நடவடிக்கை. நாங்கள் லொஸ் ஏஞ்சல்ஸில் இல்லை. கராச்சியில் இருக்கிறோம்” என்று அவர் கூறியதாக Stark தெரிவித்தார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னமும் மீளவில்லை.

போலியான அமெரிக்க நிறுவனங்கள்..

அறியப்பட்ட மோசடி இணையத்தளங்களின் பட்டியலிலிருந்து நான் ஒரு இணையத்தளத்தைத் திறந்தேன்.

அது லண்டனைத் தளமாகக் கொண்ட உண்மையான இலக்கிய முகவர் நிறுவனமான Red Rock இன் பெயரைப் போலியாகப் பயன்படுத்தியிருந்தது.

அந்த நிறுவனத்தின் எழுத்தாளர்களின் நூல்கள் Hurst போன்ற முக்கிய பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. Hurst நிறுவனம்தான் எனது முதலாவது நூலை பிரித்தானியாவில் வெளியிட்டது.

அந்தப் போலி இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

“Times Square இல் உங்கள் நூலுக்கான அங்கீகாரத்தைப் பெறுங்கள்.”

“உங்கள் நூலையும் பிராண்டையும் Broadway மேடைக்குக் கொண்டுசெல்லுங்கள்.”

“மன்ஹாட்டனில் தடம் பதிக்கும் எங்கள் எழுத்தாளர்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.”

உடனடியாக ஓர் உரையாடல் பெட்டி திறந்தது.

‘Rae Donnaelly’ என்ற பெயரில் ஒருவர் என்னிடம், “எவ்வாறு உதவ முடியும்?” என்று கேட்டார்.

எனக்கு ஒரு புத்தகம் எழுதும் யோசனை இருப்பதாகக் கூறினேன்.

அவர் எனது தொடர்பு விவரங்களைக் கேட்டார்.

பின்னர் அமெரிக்கத் தொலைபேசி இலக்கத்திலிருந்து WhatsApp வழியாக என்னை அழைத்தார்.

அவர் தெற்காசியப் பின்னணியைக் கொண்ட ஒருவரைப் போல அமெரிக்க உச்சரிப்பில் பேசினார்.

நானும் தெற்காசியாவைச் சேர்ந்தவன் என்பதால், அத்தகைய உச்சரிப்பை என்னால் எளிதில் அடையாளம் காண முடிந்தது. நம்மில் பலரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் அவ்வாறு பேச முயன்றிருப்போம்.

நான் உண்மையைச் சொன்னேன்.

எழுத்தாளர்களைக் குறிவைக்கும் மோசடிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதாகவும், போலியான பதிப்பக நிறுவனத்தில் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பற்றிக் கூற முடியுமா என்றும் கேட்டேன்.

தான் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றிப் பேசுவதற்கு ‘அனுமதி இல்லை’ என்று அவர் கூறினார்.

தனது உண்மையான பெயரையும் தெரிவிக்க மறுத்தார்.

ஆனால், முன்பு பணியாற்றிய நிறுவனத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

Rae சட்டத்துறையில் பட்டம் பெற்றிருந்தார்.

ஆனால் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னர் சட்டத்துறையில் வேலை கிடைப்பது அவருக்குச் சிரமமாக இருந்தது.

பட்டம் பெற்ற பின்னர் அவரது முதலாவது வேலை கராச்சியில் உள்ள போலியான பதிப்பக நிறுவனத்தில் கிடைத்தது.

“நான் ஒரு மோசடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அது நிச்சயமாக ஒரு மோசடி நிறுவனம். ஆனால், நான் அங்கு சேர்ந்தபோது அது எனக்குத் தெரியாது. ஒரு பயிற்சியாளராக, இந்தத் தொழில்துறை உண்மையில் எவ்வாறு இயங்குகிறது, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே சென்றேன்” என்று அவர் கூறினார்.

அந்த நிறுவனத்தின் வணிக மாதிரி என்ன என்பதைப் புரிந்துகொள்ள Rae க்கு சில நாட்களே தேவைப்பட்டன.

அது போலியான விற்பனை உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நூலின் 1,000 பிரதிகளை நிச்சயமாக விற்பனை செய்து தருவதாக எழுத்தாளர்களிடம் கூறுவார்கள்.

இவ்வாறு போலியான உறுதிமொழிகளை வழங்குவார்கள்.

அதோடு மோசடி முடிந்துவிடுவதில்லை.

ஒரு வாடிக்கையாளர் நூலின் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் திருத்தச் சேவைக்கு ஒப்புக்கொண்ட பின்னர், புத்தக அட்டைப்பட வடிவமைப்புக்குத் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறுவார்கள்.

அதற்குப் பணம் செலுத்திய பின்னர், சமூக ஊடக நிர்வாகச் சேவையை வழங்குவதாகப் புதிய சலுகை முன்வைக்கப்படும்.

“இது 400 அல்லது 500 டொலர் போன்ற சிறிய தொகையில் ஆரம்பிக்கலாம். பின்னர் 10,000, 15,000 டொலர் என எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம்” என்று Rae கூறினார்.

ஏனைய மோசடிகளைப் போலவே, இங்கும் மனிதர்களின் ஆசைகளையும் பலவீனங்களையும் எவ்வளவு எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை மோசடியில் ஈடுபடுபவர்கள் கற்றுக்கொண்டிருந்தனர்.

“மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் நேரடியாகப் பார்க்க முடியும். அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே பயமாக இருக்கிறது” என்று Rae ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கர்கள் மோசடிக்காரர்களுக்கு எளிதான இலக்குகள் என்று அவர் நம்புகிறார்.

“அமெரிக்காவில் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள். மற்றவர்களிடம் அன்பாகவும் நம்பிக்கையுடனும் நடந்துகொள்கிறார்கள். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். அதுதான் பிரச்சினை” என்றார் அவர்.

சில சந்தர்ப்பங்களில், Times Square விளம்பரத்தையும் Broadway திரைப்படமாக்கல் ஒப்பந்தத்தையும் பெறுவதற்காகப் பணம் செலுத்திய பின்னரே எழுத்தாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டனர்.

“எழுத்தாளர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பார்க்காதபோது, அவர்கள் வங்கிக் கடன் அட்டைப் பரிவர்த்தனையை ரத்துச் செய்வார்கள் அல்லது நாங்கள் மோசடிக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டுவார்கள்” என்று Rae நினைவுகூர்ந்தார்.

இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊடகவியலாளரான தலால் சௌத்ரியின் (Talal Choudhary) மதிப்பீட்டின்படி, பாகிஸ்தானில் சுமார் 1,000 நிறுவனங்கள் இவ்வாறான மோசடி இணையத்தளங்களை நடத்துகின்றன.

“ஒரு நிறுவனம் மட்டும் 25 இணையத் தளங்கள் வரை நடத்துகிறது. எழுத்தாளர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக சுமார் 200 ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தை எனக்கு நேரடியாகத் தெரியும்” என்று அவர் கூறினார்.

இந்த நிறுவனங்கள் “மிகவும், மிகவும் இலாபகரமானவை” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒரே ஒரு வாடிக்கையாளரிடமிருந்து 60,000 டொலர் வரை சம்பாதிக்க முடியும்” என்றார்.

பாகிஸ்தானில் இந்த மோசடிகளில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் உயர்தரப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்று சௌத்ரி கூறினார்.

அவர்களின் சராசரி மாதச் சம்பளம் சுமார் 50,000 பாகிஸ்தான் ரூபாய் (136 பவுண்ட்) ஆகும்.

சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு விற்பனை அடிப்படையில் மேலதிக ஊக்கத்தொகை வழங்கப்படும்.

1,000 டொலர் மதிப்புள்ள விற்பனைக்கு 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கலாம்.

எழுத்தாளர் பணம் செலுத்துவதை நிறுத்தும் வரை, அவர்களுக்கு மேலதிகச் சேவைகள் விற்பனை செய்யப்படும்.

பாகிஸ்தான் ரூபாயுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால், தாங்கள் செய்துவரும் மோசடிகள் குறித்த குற்றவுணர்வு படிப்படியாக மறைந்துவிடுவதாக Rae கூறினார்.

“பொதுவாக அவர்களுடைய மனநிலை இப்படித்தான் இருந்தது: நீங்கள் டொலரில் வருமானம் ஈட்டினால், உங்கள் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். அதனால்தான் அவர்கள் மக்களை ஏமாற்றினார்கள்” என்றார்.

வறுமையும் மோசடிக்கான நியாயப்படுத்தலும்..

ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மோசடிகளின் வளர்ச்சி குறித்து நான் செய்தி சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து, இதேபோன்ற பல கருத்துகளை நான் கேட்டிருக்கிறேன்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஏஞ்சலா ஹோய்க்கு Facebook ஊடாக நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார்.

அவரது புதிய நாவலை விளம்பரப்படுத்தித் தருவதாக அவர் முன்வந்தார்.

அவர் சந்தேகத்துக்குரிய எழுத்தாளர் மோசடி வலையமைப்பின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர் என்று நம்பிய ஹோய், அவருக்கே ஒரு சலுகையை முன்வைத்தார்.

அமெரிக்கர்களை வெளிநாடுகளில் இருந்து எவ்வாறு மோசடி செய்கிறார்கள் என்பதை விளக்கும் கட்டுரையை WritersWeekly.com இணையத்தளத்துக்காக எழுதுமாறு கேட்டார்.

ஆனால் அவர் அந்தக் கட்டுரையை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எழுதினார். அந்த இணையத்தளத்தின் சமர்ப்பிப்பு விதிகளின்படி அது அனுமதிக்கப்படாதது.

மேலும், வழங்கப்பட்ட தலைப்பையும் அவர் பின்பற்றவில்லை.

அதற்குப் பதிலாக, ஹோய் நினைவுகூர்ந்தபடி, “ஆப்பிரிக்காவில் உள்ள மக்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதால், அமெரிக்கர்கள் பணக்காரர்கள் என்பதற்காக அவர்களை ஏமாற்றுவது தவறல்ல” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

கராச்சியைச் சேர்ந்த சலில் மஹ்மூத் (Salil Mahmood) என்பவரும் தன்னை முன்னாள் மோசடிக்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது உண்மையான பெயரை மாற்றிப் பயன்படுத்துமாறு அவர் என்னிடம் கேட்டார்.

நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை பற்றி டேனி டி ஹெக் மூலமாக அறிந்த பின்னர் அவர் என்னைத் தொடர்புகொண்டார்.

அவரது மேலதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அதீதமான வாக்குறுதிகளுடன் ஒப்பிடும்போது, ஆரம்பநிலை ஊழியராக அவர் செய்த வேலை மிகவும் எளிமையானது.

வெளியிடப்பட்ட நூல்களைக் கொண்ட எழுத்தாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவர்களுக்கான அதிகாரபூர்வமான Wikipedia பக்கங்களை உருவாக்கி, அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக அவர் முன்வந்தார்.

ஆனால் அவர் உருவாக்கிய பல பக்கங்கள், பெரும்பாலும் எழுத்தாளர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும், அவர் வழங்கிய மேற்கோள்கள் போலியானவை என்பதால் Wikipedia சரிபார்ப்பில் தோல்வியடைந்தன.

“அந்தப் பக்கங்கள் சில காலம் செயற்பாட்டில் இருக்கும். பின்னர் காணாமல் போய்விடும்” என்று அவர் கூறினார்.

ஆனால் எழுத்தாளர்களுக்கு அவர்களது பணம் திருப்பிக் கொடுக்கப் படவில்லை.

அவர் அங்கு சில மாதங்களே பணியாற்றியிருந்தாலும், கணிசமான பணம் சம்பாதிக்க விரும்பிய இளைஞர்களுக்கு அந்த வேலை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்றார்.

“முதலாளிகள் தங்களது வாழ்க்கை முறையை எங்களுக்குக் காட்டுவார்கள். பெரிய மாளிகைகள், விலை உயர்ந்த கார்கள், விருந்துகள், ஏராளமான மதுபானங்கள் எனப் புகைப்படங்களைப் பகிர்வார்கள். நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தால், வாடகைக் காரை அனுப்பி உங்களை அழைத்துச் செல்வார்கள்” என்று அவர் கூறினார்.

ஆனால் இத்தகைய நிறுவனங்களின் இயல்புக்கு ஏற்ப, தோல்விக்கு இடமில்லை.

“ஓர் ஊழியர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாவிட்டால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வன்முறை மிரட்டல்கள் விடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Rae தனது மேலாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திலேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

ஆனால் மீண்டும் வேலை தேடுவதற்குப் பதிலாக, சில நண்பர்களுடன் இணைந்து புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்.

அமெரிக்க எழுத்தாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதாக அந்த நிறுவனம் செயற்படுவதாக அவர் கூறினார்.

தங்களது நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால், அது பாகிஸ்தானில் இயங்கும் உண்மையான பதிப்பக நிறுவனம் என்றால், ஏன் அமெரிக்காவில் இயங்குவதாக வாடிக்கையாளர்களை நம்பவைக்கிறது?

அந்த இணையத்தளத்தில் வெளியிடாத நூல்கள் ஏன் இடம்பெற்றுள்ளன?

உரையாடல் பெட்டிகளில் தோன்றும் நபர்கள் ஏன் போலியான அமெரிக்கப் பெயர்களைப் பயன்படுத்து கிறார்கள்?

அவர்களில் ஏன் Rae என்பவரும் போலியான பெயரைப் பயன்படுத்துகிறார்?

இந்தக் கேள்விகளை நான் அவரிடம் கேட்க முடியும்.

ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.

மோசடிக்காரர்களுடன் தனக்குத் தொடர்பில்லை என்று அவர் என்னை நம்பவைக்க விரும்புகிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

தனது மதம் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அடுத்த Frankfurt புத்தகக் கண்காட்சியில் எங்களை நீங்கள் சந்திக்கலாம்” என்று அவர் கூறினார்.

நான் சந்திப்பதாகச் சொன்னேன்.

உலகம் முழுவதும் நடைபெறும் மோசடி..

திமோத்தி ஃபிர்த் என்ற போலிப் பெயரில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவர் இன்னமும் தொடர்புகொண்டு வருகிறார்.

புத்தக வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட தற்கான நன்றிக் கடனாகத் தன்னார்வப் பங்களிப்பைச் செலுத்துமாறு அவர் நினைவூட்டுகிறார்.

அந்தப் பணம் வரப்போவதில்லை என்பது அவருக்கும் தெரிந்திருக்கலாம்.

அந்த Zoom கூட்டம் முடிந்த விதத்தைப் பார்த்து, நான் அவர்களது மோசடியைப் புரிந்துகொண்டுவிட்டேன் என்பதை அவர்களும் உணர்ந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர்கள் தயாரித்திருந்த கேள்விகள் அனைத்தையும் கேட்ட பின்னர், கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் இறுதியாக ஏதாவது கருத்துகள் உள்ளனவா என்று கேட்டார்.

எனது நூலின் இறுதி அத்தியாயம் பற்றி அவர்களில் யாருக்காவது கருத்துகள் உள்ளனவா என்று நான் கேட்டேன்.

டெல்லியில் உள்ள போலியான தொலைபேசி அழைப்பு மையங்கள் குறித்து நான் செய்தி சேகரித்தபோது சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்த அத்தியாயம் பற்றிக் குறிப்பிட்டேன்.

பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற பேராசையுடன் இருக்கும் இளைஞர்கள் எவ்வாறு மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் நிறைந்த இருண்ட உலகத்துக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை அந்த அத்தியாயம் விவரிக்கிறது என்று விளக்கினேன்.

சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை.

பின்னர் திமோத்தி தனது ஒலிவாங்கியை இயக்கினார்.

“இது உலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவிலும் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.

அவ்வளவுதான் அவர் கூறியது…

(மூலம்: The Dial – “The Lucrative World of Literary Scams” | ஆசிரியர்: Snigdha Poonam)

இலக்கிய மோசடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *