~ மோகன் குருசுவாமி
அருணாசலப் பிரதேசத்தின் எவ்வளவு பகுதியைத் தாங்கள் கோருகின்றனர் என்பதைச் சீனர்கள் ஒருபோதும் தெளிவாகக் கூறியதில்லை. ஒருமுறை லாசாவில் உள்ள ஒரு பயண முகவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் உத்தியோகபூர்வ வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். அதில் தவாங் பகுதி மட்டுமே சீனப் பிரதேசமாகக் காட்டப்பட்டிருந்தது. வேறு சில வரைபடங்களில், சீனாவின் எல்லை இமயமலையின் அடிவாரப் பகுதிகள் வழியாக வரையப்பட்டிருந்தது. இதன் பொருள், அருணாசலப் பிரதேசம் முழுவதையும் சீனா உரிமை கோருகிறது என்பதாகும்.
தவாங் பகுதி லாசாவிலிருந்து நிர்வகிக்கப்பட்டது என்பதையும், அதனுடன் இணைந்திருந்த ஏனைய பகுதிகள் திபெத்தின் ஆன்மிக மற்றும் அரசியல் ஆட்சியாளராக இருந்த தலாய் லாமாவுக்கு விசுவாசமாக இருந்தன என்பதையும் அடிப்படையாகக் கொண்டே சீனா தனது பிராந்திய உரிமைக் கோரிக்கையை முன்வைக்கிறது.
அப்படியானால், சீனா இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். 19ஆம் நூற்றாண்டு வரை சிக்கிம் திபெத்தின் கீழ்நிலை அரசாக இருந்தது. டார்ஜிலிங் பகுதியையும் பிரித்தானியர்கள் சிக்கிமிடமிருந்து பலவந்தமாகப் பறித்தனர்! இதே தர்க்கத்தை விரிவுபடுத்தினால், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளுக்கும் சீனா உரிமை கோர முடியுமா? நிச்சயமாக முடியாது. அது அபத்தமானதாக இருக்கும். வரலாறு முன்னோக்கி நகர்ந்துவிட்டது. காலமும் மாறிவிட்டது. 21ஆம் நூற்றாண்டு அமைதியாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால், 20ஆம் நூற்றாண்டில் நிலைபெற்ற எல்லைகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும்; நமக்கு என்ன ஆசைகள் இருந்தாலும் சரி.
இந்தப் பிரச்சினையின் மையத்தில் இருப்பது, இரு நாடுகளினதும் தேசிய அடையாளங்கள் எப்போது, எவ்வாறு உருவாகின என்ற விரிவான கேள்வியாகும்.
முகலாயர்களின் ஏகாதிபத்திய இந்தியா ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை பரந்திருந்தது. ஆனால் தெற்கில் கோதாவரி ஆற்றுக்கு அப்பால் அது பெரிதாக விரிவடையவில்லை. பிரித்தானியர்களின் ஏகாதிபத்திய இந்தியா இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது. ஆப்கானிஸ்தானைத் தமது ஆட்சிக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சி செய்யவில்லை என்பதல்ல அதன் பொருள்; அதனைத் தங்களுடன் இணைத்துக்கொள்ள அவர்களுக்கு முடியவில்லை என்பதுதான்.
1826ஆம் ஆண்டில்தான் பிரித்தானியர்கள் முதன்முறையாக அசாமை இந்தியாவுடன் இணைத்தனர். பர்மாவைத் தோற்கடித்த பின்னர், யாண்டபோ உடன்படிக்கையின் மூலம் அந்த இணைப்பை முறைப்படுத்தினர்.
1886ஆம் ஆண்டில்தான் பிரித்தானியர்கள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கைத் தாண்டி முதன்முறையாகப் பயணித்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களைக் கொள்ளையடித்துத் தாக்கிய பழங்குடியினக் குழுக்களைப் பின்தொடர்ந்து, லோஹித் பள்ளத்தாக்குக்குத் தண்டனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதி சீன அல்லது திபெத்திய கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், அப்போது தலாய் லாமாவிடமிருந்தோ அல்லது லாசாவில் இருந்த சீனாவின் பிரதிநிதியான அம்பானிடமிருந்தோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. விரைவிலேயே பிரித்தானியர்கள் அங்கேயே நிலைகொண்டனர்.
திபெத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் லாசாவை முதலில் சென்றடைவது என்பது ஆய்வாளர்களுக்கும் சாகசப் பயணிகளுக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்தது. இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்திய நில அளவைத் திணைக்களத்தின் உளவாளிகளாகச் செயல்பட்ட புகழ்பெற்ற பண்டிதர்கள் ஆவர்.
அவர்களில் மிகவும் பிரபலமானவர் சரத் சந்திர தாஸ். திபெத்தைப் பற்றிய அவர் எழுதிய நூல்கள் இன்றும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன.
சாகசப் பயணிகள், பெரும்பாலும் இராணுவ அதிகாரிகள் ஆய்வாளர்களைப் போல வேடமிட்டு, திபெத்துக்குச் செல்லத் தொடங்கியபோது, இந்தியாவில் இருந்த பிரித்தானியர்கள் கவலையடையத் தொடங்கினர். சாரின் ரஷ்யாவின் மிகவும் பிரபலமான இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான கேணல் குரோம்ப்செவ்ஸ்கி திபெத்தில் காணப்பட்டார் என்ற தகவல், இந்தியாவின் ஆளுநர் நாயகமாக இருந்த லோர்ட் கர்சனைப் பெரிதும் கவலையடையச் செய்தது.
1903ஆம் ஆண்டில், குரோம்ப்செவ்ஸ்கியின் பழைய எதிரியான கேணல் பிரான்சிஸ் யங்ஹஸ்பண்ட் தலைமையில் திபெத்துக்குள் இராணுவப் படையெடுப்பை மேற்கொள்ள கர்சன் தீர்மானித்தார்.
கூர்க்கா வீரர்களையும் பிரித்தானியப் படைவீரர்களையும் உள்ளடக்கிய ஒரு படையணி நாதுலா கணவாய் வழியாகச் சம்பி பள்ளத்தாக்குக்குள் நுழைந்து, எந்தத் தடையுமின்றி ஷிகாட்சே வரை முன்னேறியது.
அங்கு திபெத்திய இராணுவப் படை ஒன்று அவர்களை எதிர்கொண்டது. ஆனால், அதன் எதிர்ப்பு வெறுமனே செயலற்ற எதிர்ப்பாகவே இருந்தது என்று கூறலாம். பிரித்தானிய இந்தியப் படையினர் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், திபெத்தியர்கள் பதிலுக்குச் சுடவில்லை.
இது ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு முன்னோடியாக அமைந்தது.
ஷிகாட்சேயிலிருந்து யங்ஹஸ்பண்ட் நிதானமாக லாசாவை நோக்கி முன்னேறினார். திபெத்தியர்கள் தமது தனிமைப்படுத்தல் கொள்கையைக் கைவிடுவதற்கு பிரித்தானியர்கள் அவர்களை இணங்கச் செய்தனர். வர்த்தகச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, 1904ஆம் ஆண்டில் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
1907ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் ரஷ்யாவும் ஓர் உடன்பாட்டைச் செய்துகொண்டன. அதன்படி, திபெத் அண்மைக்காலம் வரை கடைப்பிடித்து வந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அது தொடர்ந்து இருக்க அனுமதிப்பது இரு நாடுகளினதும் நலன்களுக்கு உகந்தது என்று தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், பெரிய விளையாட்டு (Great Game) என அழைக்கப்பட்ட வல்லரசுகளின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும்.
1907ஆம் ஆண்டில், அப்போது ரஷ்ய இராணுவத்தில் கேணலாக இருந்த மானர்ஹெய்ம், பின்னர் பீல்ட் மார்ஷலாகவும் பின்லாந்தின் முதல் ஜனாதிபதியாகவும் விளங்கியவர், கிர்கிஸ்தானிலிருந்து சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹார்பின் வரை குதிரைப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். குதிரைப்படை நகர்வதற்கான பாதையை அடையாளம் காண்பதே அதன் நோக்கமாக இருந்தது.
அடுத்த முக்கியமான ஆண்டு 1913.
சீனாவில் சிங் வம்ச ஆட்சி வீழ்ச்சியடைந்து, சன் யாட் சென் தலைமையில் குடியரசு நிறுவப்பட்ட பின்னர், திபெத்தியர்கள் தமது சுதந்திரத்தை அறிவித்தனர். திபெத்தில் இருந்த சீனப் படைப்பிரிவுகளைத் தாக்கி, நாதுலா கணவாய் வழியாக இந்தியாவுக்குள் விரட்டியடித்தனர்.
அதே 1913ஆம் ஆண்டில், இந்தியா–திபெத் எல்லையை வரையறுப்பதற்காக பிரித்தானியர்கள் சிம்லா மாநாட்டைக் கூட்டினர். இதன்போது பிரித்தானியர்கள் முன்வைத்த எல்லைக் கோடுதான் 1914ஆம் ஆண்டின் மக்மகான் கோடு என இன்று அறியப்படுகிறது.
திபெத்தியர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சீனாவின் பிரதிநிதியான அம்பான், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உடன்பாட்டில் தனது ஆரம்பக் கையொப்பத்தை இட்டார். இருப்பினும், அவரது எதிர்ப்பு மக்மகான் கோட்டுக்கு எதிரானதாக இல்லாமல், திபெத்தை ஓர் இறைமையுள்ள நாடாகக் கருதி அதனுடன் பிரித்தானியர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு எதிரானதாகவே பெரும்பாலும் இருந்தது.
அதன்பின்னர் நிகழ்வுகள் முன்னோக்கி நகர்ந்தன.
1935ஆம் ஆண்டில், அப்போது வெளியுறவுத் திணைக்களத்தின் துணைச் செயலாளராக இருந்த ஒலாஃப் கரோ ICS அதிகாரியின் வலியுறுத்தலின் பேரில், மக்மகான் கோடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1944ஆம் ஆண்டில், ஜே.பி. மில்ஸ் ICS அதிகாரி, வடகிழக்கு எல்லைப்புற முகமையான NEFA பகுதியில் பிரித்தானிய இந்திய நிர்வாகத்தை நிறுவினார். ஆனால் தவாங் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. மக்மகான் கோட்டுக்குத் தெற்கே அமைந்திருந்தபோதிலும், லாசாவால் நியமிக்கப்பட்ட தவாங் மடாலயத்தின் தலைமை லாமாவின் நிர்வாகத்தின் கீழேயே அது தொடர்ந்து இருந்தது.
இதற்குப் பிரதான காரணம், அசாமின் ஆளுநராக இருந்த ஹென்றி ட்வைனம், திபெத்தியர்களை ஆத்திரமூட்டிவிடுவோமோ என்று அஞ்சியதுதான். அவர் இந்த விவகாரத்தில் துணிவுடன் செயல்பட விரும்பவில்லை.
1947ஆம் ஆண்டில், இப்போது தர்மசாலாவில் வசிக்கும் அதே தலாய் லாமா, புதிதாகச் சுதந்திரமடைந்த இந்தியாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் NEFA/அருணாசலப் பிரதேசத்தின் சில மாவட்டங்களுக்குத் திபெத் உரிமை கோரியது.
1950ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, சீனா தனது எல்லையில் ஏழு இடங்களில் திபெத்தியர்களைத் தாக்கியது. திபெத் முழுவதையும் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியது.
இதற்குப் பதிலளிப்பதைப் போல, 1951ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் தேதி, மேஜர் ரெலாங்னாவ் ‘பொப்’ காதிங் IFAS, தவாங்கில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, அந்தப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பை இந்தியாவின் சார்பில் ஏற்றுக்கொண்டார்.
இந்த வரலாற்றை இவ்வளவு விரிவாக எடுத்துரைப்பதன் நோக்கம் ஒன்றுதான்: அருணாசலப் பிரதேசத்தின் மீதான இந்தியாவின் உரிமைக் கோரிக்கை, தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தையோ அல்லது ஆழமான கலாசார உறவையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. பிரித்தானியர்கள் அங்கு சென்றதால்தான் நாமும் அங்கு இருக்கிறோம்.
ஆனால், சீனாவுக்கு அந்தப் பகுதியின் மீது உரிமை கோருவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. சிங் பேரரசரின் அரசவையில் இருந்த சில ஆதரவாளர்கள் சீனாவின் வரலாற்றுப் பரப்பை மிகைப்படுத்திக் காட்டும் வகையில் வரைந்த கற்பனையான வரைபடங்களைத் தவிர வேறெதுவும் அதற்கு ஆதாரமாக இல்லை.
இப்போது முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தியா அந்தப் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைகொண்டிருக்கிறது. அதுவே இந்தப் பிரச்சினையைத் தீர்மானிக்கப் போதுமானது.
அருணாசலப் பிரதேசத்தின் மக்கள் தொகையும் இனக்குழுக்களும்
அருணாசலப் பிரதேசத்தில் மிகவும் சுவாரசியமான மக்கள் தொகைக் கலவை காணப்படுகிறது.
அங்குள்ள மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே திபெத்தியர்கள். இந்தோ–மங்கோலிய இனக்குழுக்கள் மக்கள் தொகையில் 68 சதவீதத்தைக் கொண்டுள்ளன. எஞ்சியவர்கள் நாகாலாந்து மற்றும் அசாம் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.
மத அடிப்படையில் பார்த்தால், இந்துக்கள் 37 சதவீதத்துடன் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 36 சதவீதத்தினர் இயற்கை வழிபாடு மற்றும் பழங்குடியின மரபுவழி நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர். பௌத்தர்கள் 13 சதவீதமாக உள்ளனர்.
அண்மைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. இது பணம் அல்லது பொருளாதாரச் சலுகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மதமாற்ற முயற்சிகளின் விளைவாக இருக்கலாம்.
மொத்தத்தில், அங்கு 21 முக்கிய பழங்குடியினக் குழுக்களும், இன அடிப்படையில் வேறுபட்ட 100-க்கும் மேற்பட்ட துணைக்குழுக்களும் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட தனித்துவமான மொழிகளும் வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.
சுமார் பத்து இலட்சம் மக்கள் 17 நகரங்களிலும் 3,649 கிராமங்களிலும் வாழ்கின்றனர்.
மக்மகான் கோட்டுக்கு வடக்கே வசிக்கும் மோன்பா மக்களின் சில கிராமங்களைத் தவிர, இப்பகுதி இன அடிப்படையில் ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான நிலப்பரப்பாக உள்ளது.
உண்மையில், எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளின்போது, மக்மகான் கோட்டுக்கு வடக்கே விடுபட்டுள்ள மோன்பா மக்களின் சில கிராமங்களையும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று இந்தியா கோர முடியாதா?
எல்லைப் பிரச்சினையை நன்கு அறிந்த பல ஆய்வாளர்கள், பெமகோ பள்ளத்தாக்கிலிருந்து அருணாசலப் பிரதேசத்தின் சுபன்சிரி பிரிவு வரை ஹுவாங்போ/பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குப் பகுதியை ஒரு தர்க்கரீதியான எல்லையாகக் கருதலாம் எனக் கூறுகின்றனர்.
அந்த ஆறு வேகமாகப் பாய்வதாலும், அதைக் கடப்பதும் பாலம் அமைப்பதும் கடினமாக இருப்பதாலும், அப்பகுதியில் சீன நிர்வாகத்தின் பிரசன்னம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது அவர்களின் கருத்தாகும்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1846ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் நேபாளத்திடமிருந்து குமாவூன் மற்றும் கர்வால் பகுதிகளைக் கைப்பற்றி, 1886ஆம் ஆண்டில் அருணாசலப் பிரதேசத்தை நோக்கித் தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் வரை இந்தியாவுக்கும் திபெத்துக்கும் நேரடி எல்லை இருந்ததில்லை என்பது உண்மைதான்.
மறுபுறத்தில், வலிமைமிக்க இமயமலைத் தொடர் எப்போதும் இந்தியாவின் கலாசாரப் பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கிலிருந்து திபெத்தியர்களோ சீனர்களோ ஊடுருவி வருவதைத் தடுக்கும் இயற்கையான அரணாகவும் அது விளங்கியது.
ஆனால் காலம் மாறிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதகுலத்தின் பொறியியல் திறன்களும், மிகவும் கடினமான நிலப்பரப்புகளைக்கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கியுள்ளன.
இமயமலை இனியும் முன்பிருந்ததைப் போல ஒரு தடையாக இல்லை.
இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாகவும் வல்லரசுகளாகவும் உருவெடுத்துவரும் நிலையில், சமவெளிப் பகுதிகளிலிருந்து சில மைல் தொலைவில் சீனாவுக்கு இமயமலைக்கு அப்பாலான மூலோபாயப் பிரதேசத்தை இந்தியா விட்டுக்கொடுக்க முடியுமா?
சீனாவின் வரலாற்றுப் பார்வையும் ‘பெரிய சீனா’ என்ற கருத்தாக்கமும்..
சீனாவின் பார்வையிலும், எது சீனாவின் உண்மையான எல்லைக்குள் அடங்குகிறது என்பது குறித்த குழப்பம் குறைவாக இல்லை.
பிரித்தானியர்களைப் போலவே, 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சீனாவை ஆட்சி செய்த மஞ்சு வம்சத்தினரும், தமது எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருந்த பகுதிகளின் மீது உரிமை கோரும் கொள்கையைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இதன் நோக்கம், தமக்கு முன்னால் பாதுகாப்பு அரண்களாகச் செயல்படக்கூடிய இடைநிலைப் பகுதிகளை உருவாக்குவதாகும்.
ஷாங்காயில் உள்ள ஃபுதான் பல்கலைக்கழகத்தின் சீன வரலாற்றுப் புவியியல் நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் கெ ஜியான்சியோங், China Review இதழில் அண்மையில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“தாங் வம்சத்தின் காலத்திலிருந்தே திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறுவது சரியல்ல. பின்னர் சிங்ஹாய்–திபெத்திய பீடபூமி சீன வம்சங்களின் ஆட்சிக்குள் வந்தது என்ற உண்மை மட்டும், அத்தகைய கூற்றை நிரூபிப்பதில்லை.”
1912ஆம் ஆண்டில் சீனக் குடியரசு நிறுவப்படும் வரை, ‘சீனா’ என்ற கருத்தாக்கம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றும் கெ குறிப்பிடுகிறார்.
மஞ்சு வம்சத்தின் பிற்பகுதியில், ‘சீனா’ என்ற சொல் சில சந்தர்ப்பங்களில் சிங் பேரரசின் எல்லைக்குள் அடங்கிய அனைத்துப் பகுதிகளையும் குறித்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், மஞ்சூரியா, உள் மங்கோலியா, திபெத் மற்றும் சின்ஜியாங் ஆகிய பகுதிகளைத் தவிர்த்த, சீனாவின் உள்பகுதியில் இருந்த 18 மாகாணங்களை மட்டுமே குறித்தது.
‘பெரிய சீனா’ என்ற கருத்தாக்கங்கள், சிங் அரசவையின் பெருமையை மிகைப்படுத்திக் காட்டுவதற்காக எழுதப்பட்ட அரசவை ஆவணங்களின் ஒருதலைப்பட்சமான பார்வைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன என்றும் பேராசிரியர் கெ மேலும் கூறுகிறார்.
வரலாற்றில் சீனாவின் நிலப்பரப்பை எவ்வளவு அதிகமாக மிகைப்படுத்திக் கூறுகிறோமோ, அந்த அளவுக்கு நாம் அதிக தேசப்பற்றுடையவர்களாகக் கருதப்படுவோம் என்று நினைப்பவர்களையும் அவர் விமர்சிக்கிறார்.
இந்தச் சூழலில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் யூஷியுடன் நான் அண்மையில் நடத்திய உரையாடலை நினைவுகூர விரும்புகிறேன்.
தாம் தெரிவித்த ஒரு கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகத் தூதர் சன் கூறினார். ஆனால், அதே கருத்து சீனாவில் தமக்கு ஒரு பெரிய ஆதரவாளர் குழுவை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் பேராசிரியர் கெ ஜியான்சியோங்கின் அறிவுரையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
“சீனா உண்மையிலேயே அமைதியான முறையில் வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் உறுதியான அடித்தளத்தில் நிலைநிற்கவும் விரும்பினால், தனது வரலாற்றின் முழுமையான சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இதுவே இந்தியாவின் தெற்கு பிளொக் (South Block) பகுதியில் உள்ள பிரதமர் மற்றும் வெளியுறவு அலுவலக அதிகாரிகளுக்கும், வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலின்றி கருத்துகளை முன்வைக்கும் ஊடக விமர்சகர்களுக்கும் பொருந்தும்.
நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இறுதியில் யார் சிரிக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்!
