இலங்கையில் நிலவும் கடுமையான ஒழுங்குமுறை குறைபாடுகள் காரணமாக, தென்கிழக்காசியாவிலிருந்து இடம்பெயரும் இணையக் குற்றக் கும்பல்களின் புதிய மையமாக இலங்கை உருவாகும் அபாயம் இருப்பதாக, சர்வதேச நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய அமைப்பு (Global Initiative Against Transnational Organised Crime – GI-TOC) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு முதல் சீனாவின் இணையவழி சூதாட்ட நிறுவனங்களின் மையமாக இலங்கை உருவெடுத்துள்ள நிலையில், பாரிய அளவிலான இணைய மோசடிச் செயல்பாடுகளின் புதிய தளமாகவும் அது மாறக்கூடும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“தொழில்துறை அளவிலான இணைய மோசடிகளின் மையமாக இலங்கை மாறுவதற்கான தீவிரமான ஆபத்து காணப்படுகிறது. நாட்டில் தற்போது வலுப்பெற்று வரும் குற்றவியல் வலையமைப்புகளின் ஒருங்கிணைப்பைச் சீர்குலைப்பதற்கு உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குற்றவியல் வலையமைப்புகளின் ஒன்றிணைவு? சீன வம்சாவளியைச் சேர்ந்த மோசடிக் கும்பல்களும் தெற்காசியாவில் அவற்றின் செல்வாக்கும்’ (Criminal Convergence? Chinese-Origin Scam Syndicates and Their Reach into South Asia) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் GI-TOC மேற்கொண்ட நேரடி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேசன் டவர் (Jason Tower), ராதா பரூவா (Radha Barooah) ஆகியோர் இதன் ஆசிரியர்களாவர்.
இலங்கையில் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குக் கூடுதல் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், ஒழுங்குபடுத்தப்படாத வெளிநாட்டு இணையவழி சூதாட்டத் தளங்களால் இந்தியப் பிரஜைகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையாக, இலங்கையின் சூதாட்டத் தொழிற்துறைக்கான ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரே மாதிரியான வளர்ச்சிப் போக்கு..
இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இணையவழி மோசடிச் செயல்பாடுகள் ஒரே மாதிரியான வளர்ச்சிப் போக்கைப் பின்பற்றியுள்ளன.
சீனாவின் இணையவழி சூதாட்ட மற்றும் இணையக் குற்ற வலையமைப்புகள் சுமார் 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை மற்றும் நேபாளத்துக்குள் ஊடுருவ முயன்றன.
“2022ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளிநாட்டு இணையவழி சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, பல்லாயிரக்கணக்கான சீனப் பிரஜைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறினர்.
“இதற்கு இணையாக, 2022ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சூதாட்டத் தொழிற்துறையில் தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் வேகமடைந்தன. GI-TOC நடத்திய கள ஆய்வுகளின் அடிப்படையிலான நேர்காணல்கள், சீன வம்சாவளியைச் சேர்ந்த இணையவழி சூதாட்டக் கும்பல்கள் அதே ஆண்டிலேயே இலங்கைக்கு வந்தடைந்ததை உறுதிப்படுத்துகின்றன” என அறிக்கை தெரிவிக்கிறது.
பிலிப்பைன்ஸில் இயங்கிய வெளிநாட்டு இணையவழி சூதாட்ட நிறுவனங்களிலிருந்து பெருமளவிலானோர் இடம்பெயர்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, சூதாட்டத் தொழிற்துறையுடன் தொடர்புடைய வட்டாரங்களும் இந்தக் கூற்றுக்கு ஆதரவளித்துள்ளன.
2024ஆம் ஆண்டில், இலங்கையில் சீனப் பிரஜைகள் சூதாட்டத் துறையில் முன்னணி வகிப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கத் தொடங்கினர்.
2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பும், குறிப்பாகத் தொழில்துறை அளவிலான இணைய மோசடிச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தமையும், இணையவழி சூதாட்ட மற்றும் இணைய மோசடிக் கும்பல்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்துள்ளமைக்கான மேலதிக ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இலங்கையின் உத்தியோகபூர்வ குடிவரவு புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2023 முதல் 2025 வரை மேலும் 50 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதே காலப்பகுதியில் மியன்மார் மற்றும் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை முறையே 120 சதவீதம் மற்றும் 105 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஈர்ப்புக்குரிய மையமாக இலங்கை?
இலங்கையில் விரிவடைந்து வரும் சூதாட்டத் துறை, இத்தகைய குற்றச் செயல்பாடுகளுக்கு அந்த நாட்டை மேலும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, 2015ஆம் ஆண்டு மணிலாவில் திறக்கப்பட்ட ‘சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்’ (City of Dreams) சூதாட்ட விடுதி, பிலிப்பைன்ஸின் சூதாட்டத் தொழிற்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அது பல்வேறு உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கான (VIP) சூதாட்டச் சேவைகளையும், சீன மொழி பேசும் சூதாட்ட இடைத்தரகர்களையும் (Junket Operators) கொண்டிருந்தது.
“சீன மொழியிலான சூதாட்டத் தொழிற்துறை ஊடக மற்றும் தகவல் தளமான Bodu.co, இந்தச் சூதாட்ட விடுதி திறக்கப்பட்டதை இலங்கை ‘BC சொர்க்கமாக’ உருவெடுத்ததன் முக்கிய அடையாளமாகக் குறிப்பிட்டிருந்தது.
“சீன மொழியில் ‘BC’ என்பது இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடிகளைக் குறிக்கும் சுருக்கச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ‘Bocai’ என்ற சொல்லிலிருந்து உருவானது. அதன் பொருள் சூதாட்டம் என்பதாகும்” என அறிக்கை விளக்குகிறது.
இலங்கைக்கான ஆபத்து இணையவழி சூதாட்ட விடுதிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வணிகச் செயற்பாடுகளை வெளிநிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் சேவை மையங்களும் (Business Process Outsourcing – BPO) இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில், கொழும்புப் பகுதியில் இயங்கிய இரண்டு முக்கிய இணைய மோசடி மையங்களில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக, பெரும்பாலானோர் சீனப் பிரஜைகளாக இருந்த 340 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
“இந்த நடவடிக்கைகள் மற்றும் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகள் இருந்தபோதிலும், அதே கட்டடங்கள் இன்றும் ‘தொழில்நுட்ப நிறுவனங்கள்’ என அழைக்கப்படும் நிறுவனங்களின் பெயரில் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு பெருமளவிலான சீன, வியட்நாம் மற்றும் இந்தோனேசியப் பிரஜைகள் தங்கியுள்ளனர்” என அறிக்கை தெரிவிக்கிறது.
“இவர்களில் பலர், விசேட பொருளாதார வலயமான கொழும்புத் துறைமுக நகரத்திற்குள் (Port City Colombo) பதிவு செய்யப்பட்டுள்ள வணிகச் செயற்பாடுகளை வெளிநிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் சேவை நிறுவனங்களுடன் (BPO) தொடர்புடையவர்களாகவோ அல்லது அவற்றின் ஆதரவில் தங்கியிருப்பவர்களாகவோ காணப்படுகின்றனர்.
“துறைமுக நகரத்துக்கு வழங்கப்படும் சலுகைமிக்க கொள்கைகளை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனரா என்ற கவலையை இது ஏற்படுத்துகிறது” என அறிக்கை குறிப்பிடுகிறது.
இணையவழி சூதாட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் பல்வேறு டெலிகிராம் (Telegram) தகவல் பரிமாற்றக் குழுக்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
கிரிப்டோ நாணயம்..
சீன வம்சாவளியைச் சேர்ந்த குற்றவியல் குழுக்கள், இலங்கையில் இயங்கி வரும் நேரடி வாடிக்கையாளர் இடையிலான கிரிப்டோ நாணயப் பரிமாற்ற வலையமைப்புகளையும் (Over-the-Counter Crypto Exchanges) பயன்படுத்தி வருகின்றன.
இந்தப் பரிமாற்ற மையங்கள், இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடிச் செயல்பாடுகளில் ஈடுபடும் குழுக்களுக்கு இலங்கைக்குள்ளும் சர்வதேச அளவிலும் பணத்தைப் பரிமாற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குகின்றன.
இலங்கையில் வாழும் சீன மொழி பேசும் சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுவான டெலிகிராம் தகவல் பரிமாற்றக் குழுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இத்தகைய தளங்களில் ஒன்று தற்போது 90,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்தத் தளம் மோசடிச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளையும், இலங்கையிலிருந்து இயக்கப்படுவதாகத் தோன்றும் சீன மொழியிலான வெளிநாட்டு இணையவழி சூதாட்டத் தளங்களையும் விளம்பரப்படுத்துகிறது.
“மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், மியன்மாரின் KK Park என்ற மோசடிக் கும்பல்களின் மையத்தில் முன்னர் விளம்பரப்படுத்தப்பட்ட U8.com என்ற இணையவழி சூதாட்டத் தளம், தற்போது இலங்கையிலும் தனது அலுவலகங்களைத் திறந்துள்ளது.
“கொழும்பு நகர மையத்திலிருந்து விமான நிலையம் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் உள்ள விளம்பரப் பலகைகளிலும் வாடகை வாகனங்களிலும் U8 நிறுவனத்தின் விளம்பரங்களைக் காண முடிகிறது” என அறிக்கை தெரிவிக்கிறது.
மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல்..
இணையக் குற்றங்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதுடன், அதற்கான சட்டக் கட்டமைப்பும் காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்படாமல் உள்ளது என அறிக்கை எச்சரிக்கிறது.
இணையக் குற்றங்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் பிரதான குற்றவியல் சட்டமான 2007ஆம் ஆண்டின் கணினிக் குற்றச் சட்டம் (Computer Crime Act), கிரிப்டோ நாணயம், மேகக் கணினி முறைமை (Cloud Computing) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடான மோசடிகள் ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களாக உருவெடுப்பதற்கு முன்னரே இயற்றப்பட்டது.
“தற்போதைய இணைய மோசடிக் கும்பல்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய வழிமுறைகளான டிஜிட்டல் சொத்துகள் தொடர்பான மோசடிகள், செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் ஏமாற்று உத்திகள் மற்றும் இணையத் தளங்கள் மூலம் மோசடிச் செயல்பாடுகளுக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான வெளிப்படையான சட்ட ஏற்பாடுகள் இதில் இல்லை” என அறிக்கை கூறுகிறது.
2025ஆம் ஆண்டின் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டம் (Gambling Regulatory Authority Act), ‘டிஜிட்டல் சூதாட்டம்’ மற்றும் இணையவழி ஊடாடும் விளையாட்டுகள் ஆகியவற்றையும் தனது சட்ட வரம்புக்குள் வெளிப்படையாகக் கொண்டுவந்துள்ளது.
எனினும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அமுல்படுத்துவதிலும் சவால்கள் காணப்படுகின்றன. அத்துடன், ஏற்கனவே நாட்டில் செயற்பட்டு வரும் பெருமளவிலான நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் முக்கிய சவாலாக உள்ளது.
வெளிநாட்டு இணையவழி சூதாட்டக் கும்பல்களினதும் அவற்றுடன் தொடர்புடைய சட்டவிரோத வங்கிச் சேவை மையங்களினதும் பிரசன்னம் அதிகரித்து வருவது, பிரிட்டன் உள்ளிட்ட உலகளாவிய நிதிக் கட்டமைப்புக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“மிகவும் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு நாட்டில் குற்றவியல் வலையமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்படும் அமுலாக்க நடவடிக்கைகள், அந்தக் கும்பல்கள் வேறொரு நாட்டுக்குச் சென்று தமது செயல்பாடுகளைத் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதை இலங்கையின் தற்போதைய நிலைமை எடுத்துக்காட்டுகிறது.
“இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுடனும் வணிகச் செயற்பாடுகளை வெளிநிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் சேவை மையங்களுடனும் இணைந்தோ அல்லது அவற்றுக்குள் ஊடுருவியோ சீன வம்சாவளியைச் சேர்ந்த மோசடிக் கும்பல்கள் உருவெடுத்து வருகின்றன.
“தடுப்பு நடவடிக்கைகள் தாமதிக்கப்பட்டால், இலங்கை ஒரு புதிய பிராந்தியக் குற்றவியல் மையமாக நிலைபெறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகக்கூடும்” என அறிக்கையின் ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
(நன்றி: சண்டே டைம்ஸ்)
