-சோனியா லம்பேர்ட்
“ஒரு நாள் அவர்கள் என்னைத் தேடி வருவார்கள் என்று எனக்குத் தெரியும்” என்கிறார் பசீர் ஆரியன்.
2021 ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இணையவழியில் ஆங்கிலம் கற்பதற்கான இலவசக் கல்வித் திட்டம் ஒன்றை பசீர் ஆரியன் தொடங்கினார்.
2022 மே மாதம், ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெராத் நகரில் அவர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரியாத உள்ளூர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்தது.
தலிபான் அதிகாரி ஒருவர், அடுத்த 20 நிமிடங்களுக்குள் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறும், அவரது கைபேசியையும் எடுத்துவருமாறும் அவருக்கு உத்தரவிட்டார்.
“அந்தத் தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்கிறார் ஆரியன். “இந்த உத்தரவை நீங்கள் மீறினால் அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள். அவர்களைக் கோபப்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.”
தான் எங்கே செல்கிறார் என்பதை நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். திரும்பி வராவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து இருவரும் அவசரமாகக் கலந்துரையாடினர்.
அவர் அங்கு போனார். தலிபான் போராளிகள் நுழைவாயிலில் ஆரியனைச் சோதனையிட்டனர். உள்ளே நுழைந்தபோது, இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய முற்றத்தைக் கண்டார். நீண்ட தாடிகளுடனும் தூசி படிந்த செருப்புகளுடனும் ஆயுதம் ஏந்திய தலிபான்கள் எங்கும் காணப்பட்டனர். மேசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்களிடம்கூட துப்பாக்கிகள் இருந்தன.
ஆரியன் அமைதியாக இருக்க முயன்றார். தனது வாழ்க்கையின் இந்தப் பகுதியைப் பற்றி பேசுவது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஆயினும், தனக்கு நடந்ததை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் இதனைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஒரு நடைபாதையில் அமருமாறு அவருக்குச் சொல்லப்பட்டது. அங்கு சில மணிநேரங்கள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர், உயரமான, வழுக்கைத் தலையுடைய இளம் தலிபான் ஒருவர் அவரை ஓர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, மாணவிகள் சிலர் நம்பிக்கையை இழந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும், தங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆரியன் கூறியிருந்த வாட்ஸ்அப் குரல் செய்தி ஒன்றை மூத்த அதிகாரி ஒலிக்கச் செய்தார்.
அவர் ஆரியனை, இறைநம்பிக்கையற்றவர்களுடன் இணைந்து செயல்படுபவர் என்றும், மேற்குலகின் கைப்பாவை என்றும், “மதத்திலிருந்து விலகியவர்” என்றும் குற்றஞ்சாட்டினார். அவரது தோற்றத்தையும் இழிவுபடுத்தினார்.
பின்னர், அந்த உயரமான இளம் தலிபானிடம் திரும்பி, “இவனுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்” என்றார்.
அந்த இளைஞர் ஆரியனின் கண்களைக் கட்டி, நீண்ட நடைபாதையொன்றின் வழியாக அழைத்துச் சென்றார். சுமார் இரண்டு மாடிகள் கீழே இறங்கி, அடித்தளத்திலிருந்த ஓர் அறைக்குள் அவரைக் கொண்டுசென்றார்.
அவரது கைகள் கட்டப்பட்டன. அங்கு மேலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருப்பதை ஆரியனால் உணர முடிந்தது.
அவர்கள் பஷ்து மொழியில் பேசிக்கொண்டனர்.
“இவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று எமது மேன்மைதங்கியவர் கூறியிருக்கிறார்.”
அவர்கள் ஆரியனை “இறைநம்பிக்கையற்றவன்” என்றும் “நாய்” என்றும் அழைத்தனர்.
திடீரென, ஏதோவொரு கடினமான பொருள் அவரது மூக்கிலும் தாடையிலும் மோதியது. அது துப்பாக்கியின் பின்புறம் என்பதை அவர் உணர்ந்தார். பின்னர் அவர் சுயநினைவை இழக்கும் வரை அவரை உதைத்தனர்.
சுயநினைவு திரும்பியபோது, அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது விரல்களில் ஒன்று முறிந்திருந்தது. உடலின் மேற்பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. மூக்கும் தாடையும் பலத்த காயமடைந்திருந்தன.
கண்கட்டையும் கைக்கட்டுகளையும் அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். வேறொரு நபர் அவற்றை அகற்றினார். அவர் மிகவும் சிறிய, மிகுந்த அழுக்கடைந்த சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்தார்.
வறுமையிலிருந்து கல்வியை நோக்கி..
பசீர் ஆரியன் 1997ஆம் ஆண்டு, ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள ஆப்கானிஸ்தானின் கிராமப்புறப் பகுதியில் பிறந்தார். 1979ஆம் ஆண்டு சோவியத் படையெடுப்பாலும், 1989ஆம் ஆண்டு அந்தப் படைகள் வெளியேறிய பின்னர் வெடித்த உள்நாட்டுப் போராலும் ஏற்கெனவே சிதைந்துபோயிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவரது தந்தை ஒரு தையற்காரர். கணிதத்தில் திறமைசாலியாக இருந்தபோதிலும், அவர் ஆரம்பக் கல்வியைச் சில ஆண்டுகள் மட்டுமே கற்றிருந்தார். தனது மகனுக்குத் தன்னைவிடச் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
“என் மீது என் தந்தை வைத்திருந்த நம்பிக்கையிலிருந்துதான் எனது கனவுகள் தொடங்கின” என்கிறார் ஆரியன்.
2003ஆம் ஆண்டு, தமது கிராமத்தில் முதலாவது பள்ளி திறக்கப்பட்ட நாளில், உறவுமுறையில் சில சகோதரர்களுடன் இணைந்து அங்கு நடந்துசென்ற உற்சாகமான அனுபவத்தை அவர் நினைவுகூர்கிறார்.
அங்கு முறையான கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை. கூடாரங்களே வகுப்பறைகளாகப் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கூடாரங்கள் மட்டுமல்லாமல், புத்தகங்கள், பென்சில்கள், இடைவேளையின்போது வழங்கப்பட்ட பிஸ்கட்டுகள்கூட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டவை.
அந்த வறண்ட, மணற்பாங்கான பிராந்தியத்தில் பல மைல் தூரத்துக்கு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டி ருந்தன. காற்றில் தூசி பறந்துகொண்டே இருக்கும். சில நாட்களில், ஒரு மீற்றர் தூரத்துக்கு முன்னால் இருப்பதைக்கூட அவர்களால் பார்க்க முடியாது.
சில வாரங்களுக்கு ஒருமுறை, விறகு சேகரிக்கச் சென்ற மாணவரோ, தண்ணீர் எடுக்கச் சென்ற தாயோ நிலக்கண்ணிவெடியில் சிக்கிக்கொள்வார். அவர்களது கால்களோ கைகளோ துண்டிக்கப்பட்டு விடும்.
சில நேரங்களில், ஆரியன் கூறுவதுபோல், “காப்பாற்றுவதற்கு எதுவுமே எஞ்சியிருக்காது.”
பயிர்களை வளர்ப்பதற்குத் தேவையான மழை போதியளவில் பெய்யவில்லை. இருந்தாலும் மக்கள் விவசாய முயற்சிகளைக் கைவிடவில்லை.
ஆரியனுக்கு சுமார் பத்து வயதாக இருந்தபோது, ஒருவர் நகரத்திலிருந்து கொண்டுவந்த ரோஜா மலரை அவர் முதன்முறையாகக் கண்டார்.
குடிநீர் ஓர் ஊற்றிலிருந்து பெறப்பட்டது. தந்தையுடனும் கழுதையுடனும் சேர்ந்து, பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவருவார் ஆரியன்.
ஒருமுறை, வானத்தில் வெகு தொலைவில் விமானம் ஒன்று செல்வதை அவர்கள் கண்டனர். அவரது தந்தை வானத்தைச் சுட்டிக்காட்டி, சிறுவனிடம் கூறினார்:
“ஒருநாள் நீயும் அவற்றில் ஒன்றில் பயணம் செய்வாய்.”
அவரது குடும்பம் வறுமையில் வாழ்ந்தபோதிலும், அவர்களது வீட்டில் புத்தகங்கள் இருந்தன என்பது அக்காலத்தில் அபூர்வமான ஒன்று. அவரது தந்தை ஈரானிலிருந்து புத்தகங்களை வரவழைத்தார் அல்லது நகரத்திலிருந்து வாங்கிவந்தார்.
ஆரியன் ரொபின்சன் குரூசோ மற்றும் தி லிட்டில் பிரின்ஸ் போன்ற நூல்களை வாசித்தார். பாரம்பரிய பாரசீகக் கவிதைகளையும் அவரது தந்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.
ஒவ்வொரு பரீட்சையிலும் அவர் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றார். ஆனால் கல்வியின் மீது அவரது தந்தை கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்த்து ஊரிலிருந்தவர்கள் சிரித்தனர். கல்வியின் மூலம் வாழ்க்கையை மாற்றலாம் என்ற எண்ணம் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று அவர்கள் கருதினர்.
ஆரியனுக்கு 15 வயதாகும்போது, அவரது வகுப்பில் எஞ்சியிருந்த ஒரே மாணவர் அவர்தான்.
2012ஆம் ஆண்டு, மேலதிகக் கல்வியைத் தொடர்வதற்காக அவர் தனது கிராமத்தைவிட்டு ஹெராத் நகருக்குச் சென்றார்.
அவரது புதிய வகுப்பறையில் சுவர்களும் மேசைகளும் நாற்காலிகளும் இருந்தன. ஆசிரியர்களும் சிறந்த பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் தனது கிராமப்புற உச்சரிப்பைக் கேட்டு மற்றவர்கள் தன்னைக் கேலி செய்வார்களோ என்று அவர் கவலைப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹெராத் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் அனுமதி பெற்ற தனது பிராந்தியத்தின் முதலாவது நபராக அவர் திகழ்ந்தார்.
“எனது பெற்றோர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர்” என்கிறார் அவர்.
தனது உடன்பிறப்புகளும் உறவினர்களும் தொடர்ந்து கல்வி கற்பதற்கு வசதியாக அவரது குடும்பத்தினர் தமது இருப்பிடத்தையும் மாற்றிக்கொண்டனர்.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது ஆரியன் ஒல்லியாகவும் உடல் வலிமை குறைந்தவராகவும் இருந்தார். அதனால் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லத் தொடங்கினார்.
“உடற்பயிற்சிக் கூடம் எனக்கு மனநலச் சிகிச்சையைப் போன்றதாக இருந்தது” என்கிறார் அவர்.
தனது நாட்டின் நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக அவர் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்தார். பெண்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்த “அரசியல் இஸ்லாத்தின்” புதிய வடிவங்களையும் அவர் கவனித்தார்.
கவிதை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விவாதங்களில் பங்கேற்றார். சமூகப் பிரச்சினைகள், ஊழல், மனித உரிமைகள் ஆகியவை குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் பேசினார்.
இதனால் அவர் அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவரானார். பல்வேறு மதக் குழுக்களிடமிருந்து அவருக்கு அச்சுறுத்தல்களும் வரத் தொடங்கின.
“நான் தனியாக இருக்கவில்லை” என்கிறார் அவர். “துணிச்சலான ஆண்களும் பெண்களும் இணைந்த ஒரு வலையமைப்பின் பகுதியாக இருந்தேன்.”
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு..
2017ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ஆரியன், தனது நாட்டை மீளக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.
அடுத்த ஆண்டு, வேலை தேடி காபூல் நகரில் ஒரு வாடகை வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, சுமார் 100 மீற்றர் தொலைவில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
வெடிப்பின் அதிர்வலைகள் தூசி, புகை, மனித உடல்களின் சிதைவுகள் ஆகியவற்றை வாகனத்தின் ஜன்னல்களில் மோதச் செய்தன. அந்த இடத்தில் வீசிய துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது.
வெடிப்பிலிருந்து தப்புவதற்காக வாகன ஓட்டுநர் பின்னோக்கிச் செலுத்தியபோது, ஆரியனின் காதுகளில் தொடர்ந்து இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.
அந்த அனுபவம் அவரை ஆழமாக உலுக்கியது. இத்தகைய வன்முறைக்கு தர்க்கரீதியாகப் பதிலளிப்பது எவ்வளவு கடினம் என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்.
“திடீரென்று, ஒரு கணத்தில் நீங்கள் முற்றாக அழிந்துபோகலாம்” என்கிறார் அவர்.
2019ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் அரசியல், சமூக, மதத் தலைவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதற்காகக் கூடும் பாரம்பரிய சபையான *லோயா ஜிர்கா*வில் இளைஞர் பிரதிநிதியாக ஆரியன் தெரிவுசெய்யப்பட்டார்.
அங்கு, கைத்தொலைபேசிகளுடன் காணப்பட்ட நகர்ப்புறத் தொழில்சார் நிபுணர்களுக்கும், தொலைதூரக் கிராமப்புறங்களில் பாரம்பரிய உடைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்த ஆண்களுக்கும் இடையிலான பிளவையும் பரஸ்பர அவநம்பிக்கையையும் அவர் நேரடியாகக் கண்டார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது லோயா ஜிர்காவிலும் அவர் பங்கேற்றபோது, நாடு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.
அமெரிக்கா தனது படைகளில் பெரும்பாலானவற்றை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றிருந்தது.
“இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது” என்கிறார் ஆரியன்.
சண்டைகள் மற்றும் காலநிலை நெருக்கடி காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் நகரத்துக்கு வரத் தொடங்கினர். இதையடுத்து, நகரத் திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஈரானுக்குச் செல்ல அவர் முடிவெடுத்தார்.
2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது, நாடு இறுதியாகத் தலிபான்களின் கைகளில் வீழ்ந்தது.
உலகம் தங்களைக் கைவிட்டுவிட்டதாக ஆரியன் உணர்ந்தார்.
“ஒரு கட்டடம் இடிந்து விழுவதைப் பார்ப்பது போன்றதாக இருந்தது. அல்லது மனம் முற்றாக உடைந்துபோனது போன்ற உணர்வு” என்கிறார் அவர்.
2001ஆம் ஆண்டு அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து முடிவுக்கு வந்த தலிபான்களின் முதலாவது ஆட்சிக் காலத்தையும் அனுபவித்திருந்த அவரது தாயார், மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததால் மிகுந்த துயரமடைந்து அழுதுகொண்டிருந்தார்.
ஆரியனும் அவரது நண்பர்களும் அதிர்ச்சியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர். ஒருவருக்கொருவர் செய்திகள் அனுப்பிக்கொண்டதுடன், சமூக ஊடகக் கணக்குகளில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளையும் மறைத்தனர்.
பெண்கள் பொதுவெளியில் காணப்படுவது நின்றுபோனது.
தலிபான் போராளிகள் நகரத்தை நிரப்பினர். மோட்டார் சைக்கிள்களில் ஆரவாரமாகச் சென்றனர். கைப்பற்றப்பட்ட இராணுவ வாகனங்களில் நெருக்கமாக அமர்ந்து, கொடிகளையும் பாடல்களையும் பயன்படுத்தி வெற்றியைக் கொண்டாடினர்.
அந்தக் காட்சிகள் நம்பமுடியாதவையாகவும் அச்சமூட்டுபவையாகவும் இருந்தன.
போராளிகளில் பலர் இதற்கு முன்னர் நகரத்துக்கே வந்திருக்கவில்லை. அவர்கள் ஐஸ்கிரீமையும் பீட்சாவையும் சுவைத்துப் பார்க்க விரும்பினர். ஆனால், எவ்வித தயக்கமுமின்றி அவர்கள் ஒருவரைக் கொல்லக்கூடும் என்பதை ஆரியன் அறிந்திருந்தார்.
தலிபான்களின் சோதனைகள், பழிவாங்கும் கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் குறித்து அவரது நண்பர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர்.
தனது சகோதரியின் கண்ணீரைக் கண்டபோது..
ஆரியனின் சகோதரி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.
சில வாரங்களுக்குப் பின்னர், வழக்கமாக அவரை வீதியின் முடிவிலிருந்து அழைத்துச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர், இனிமேல் சிறுமிகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்தார்.
பள்ளிச் சீருடையுடனும் புத்தகப் பையுடனும் அழுதுகொண்டே நின்ற தனது சகோதரியை ஆரியன் கண்டார்.
அவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பியிருந்தார்.
அந்தக் காட்சி ஆரியனுக்குள் ஏதோவொன்றை “வெடிக்கச் செய்தது”. ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தின் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஒருவரைத் தொடர்புகொண்டார். இருவரும் இணைந்து இலவச இணையவழி ஆங்கிலப் பள்ளியொன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தை உருவாக்கினர்.
ஆரியன் நூற்றுக்கணக்கான ஆப்கானியச் சிறுமிகளை மாணவிகளாகப் பதிவுசெய்தார். அமெரிக்க ஆசிரியர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 23 தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களைத் திரட்டினார்.
வெவ்வேறு நாடுகளின் நேர வேறுபாடுகளைக் கருத்தில்கொண்டு, சில வகுப்புகள் நள்ளிரவில்கூட நடத்தப்பட்டன.
தலிபான்களின் சித்திரவதை..
2022 மே மாதம், தனது விசாவைப் புதுப்பிப்பதற்காக ஆரியன் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
அந்தப் பயணத்தின் போதுதான், தலிபான் அதிகாரியிடமிருந்து புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைப்பு வந்தது.
சிறைக்கூண்டில் சுயநினைவு திரும்பிய பின்னர், அவருக்கு ரொட்டியும் தண்ணீரும் வழங்கப்பட்டன. தொழுகை நடத்தலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், தனது ஆடைகளில் இரத்தம் படிந்திருக்கும்போது தொழுகை நடத்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
தனது தாயாரைப் பற்றிய கவலையும், காயங்களால் ஏற்பட்ட வேதனையும், முகம் நிரந்தரமாகச் சிதைந்துவிடுமோ என்ற அச்சமும் அவரைத் தூங்கவிடவில்லை.
விடிவதற்கு முன்னர், அவர் கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் தொழுகை நடத்துமாறு கூறப்பட்டது. அவர் தொழுகை நடத்தினார்.
முகத்தைத் தொட்டுப் பார்த்தபோது, தசைகள் கட்டுப்பாடின்றி இழுபடுவதை உணர்ந்தார்.
காலையில் மீண்டும் அவரது கண்கள் கட்டப்பட்டு, முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட அதே அலுவலகத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
தனது செயலுக்காக வருந்துவதாகக் குறிப்பிடும் ஓர் அறிக்கையில் கையெழுத்திடுமாறு அவர் கட்டாயப் படுத்தப்பட்டார். தனக்கு நடந்ததைப் பற்றி வெளியே பேசக்கூடாது என்றும், மீறினால் கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டார்.
பின்னர் அவரது கைபேசி திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார்.
அங்கிருந்து முச்சக்கர வண்டியொன்றில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார்.
எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது மூக்கு நான்கு இடங்களில் முறிந்திருந்ததும், தாடை உடைந்திருந்ததும் தெரியவந்தது.
தாடையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னர், முகத்தில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் காயங்கள் ஓரளவு குணமடைய சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னர் மூக்கிலும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கூடிய விரைவில் அவர் மீண்டும் ஈரானுக்குத் திரும்பினார்.
மாணவிகளைக் கைவிட விரும்பாததால், ஒரு தன்னார்வலரின் உதவியுடன் இணையவழி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த முயன்றார். எனினும், புதிய மாணவிகளைச் சேர்ப்பதை நிறுத்திக்கொண்டார்.
அவரது முகத்தில் ஏற்பட்ட காயங்கள் குணமடைந்தன. ஆனால், மனதளவில் அவர் முற்றாகச் சிதைந்து போயிருந்தார். அந்த அனுபவத்திலிருந்து மீள்வது அவருக்குக் கடினமாக இருந்தது.
“இது முற்றிலும் அநியாயமானது. அவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை” என்கிறார் அவர்.
சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர், மீண்டும் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லும் அளவுக்கு அவர் தேறினார். அது அவரது மன அழுத்தத்தைக் குறைக்க உதவியது.
தனது ஆய்வுக் கட்டுரையை நிறைவுசெய்து, முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
ஈரானிலிருந்து பிரிட்டனுக்கு..
ஈரானில் வேலை செய்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. வீடற்றவராகிவிடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.
அந்த நேரத்தில், பிரிட்டனில் ஒரு வருட முதுகலைப் பட்டப்படிப்பைப் பயில்வதற்கான முழுமையான நிதியுதவியை வழங்கும் புகழ்பெற்ற Chevening புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பித்தார்.
அது நீண்டதும் சிக்கலானதுமான போட்டி நிறைந்த நடைமுறையாக இருந்தது. அதன் பின்னர் இரண்டு மணிநேர விசா நேர்காணலும் நடைபெற்றது.
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்த அபிவிருத்திக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் சர்வதேச அபிவிருத்தித் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பைப் பயில்வதற்கான இடம் அவருக்குக் கிடைத்தது.
2024 செப்டம்பர் மாதம், தெஹ்ரானிலிருந்து விமானத்தில் புறப்பட்டார்.
விமானம் கட்விக் விமான நிலையத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை கூறிய வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன.
தன்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். ஆனால், கடவுச்சீட்டுப் பரிசோதனைப் பகுதியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் புன்னகையுடன்,
“பிரிட்டனுக்கு வரவேற்கிறோம்!” என்றார்.
புதிய நாட்டில் தனிமை..
பிரிட்டனில் அவரது புதிய வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை.
அவருடன் பாடநெறியில் பயின்ற சில சர்வதேச மாணவர்கள் ஆப்கானியர்களுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். இனவாதக் கருத்துகளையும் தெரிவித்தனர்.
“சில நேரங்களில் நான் இவ்வளவு தனிமையை உணர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்கிறார் அவர்.
தலிபான்களின் கொள்கைகளை விமர்சித்து பிபிசி பாரசீகச் சேவைக்கு ஆரியன் நேர்காணல் ஒன்றை வழங்கினார்.
பாடநெறி முடிவடைந்தபோது, மற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தமது குடும்பத்தினருக்குப் பரிசுப் பொருட்களுடன் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால், ஆரியனுக்குத் திரும்பிச் செல்வதற்கு இடமிருக்கவில்லை.
குறிப்பாக பிபிசி நேர்காணலுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம்.
அரசியல் தஞ்சம் கோருவது அவர் சுதந்திரமாகத் தெரிவுசெய்த ஒன்றல்ல என்று கூறுகிறார்.
“உண்மையான நிலைமை என்னை நிர்ப்பந்தித்ததால் எடுத்த முடிவு அது” என்கிறார் அவர்.
குரொய்டனில் உள்ள பிரிட்டனின் உள்துறை அமைச்சக அலுவலகத்துக்குச் சென்றபோது, அவரிடம் சில பவுண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.
அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, அவசரகாலத் தங்குமிட வசதியைப் பெறுவதற்கான உதவி இலக்கமொன்றைத் தொடர்புகொள்ளுமாறு கூறினர்.
அவர் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார்.
“யாராவது உங்களைத் தொடர்புகொள்வார்கள், இந்த ஆவணத்தை அனுப்புங்கள், அந்த ஆவணத்தை அனுப்புங்கள் என்றுதான் அவர்கள் கூறினார்கள்” என்கிறார் அவர்.
ஆறு நாட்கள் அவர் வீடற்றவராக இருந்தார். இரவுகளில் பூங்காவில் தங்கினார். பகல் நேரங்களில் ஸ்டார்பக்ஸ் கடையில் அமர்ந்து தனது கைப்பேசிக்கு மின்னேற்றம் செய்துகொண்டார்.
பின்னர், குரொய்டன் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு வாடகை வாகனம் அவரை ஏற்றிக்கொண்டது.
அந்த வாகனத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஹொங்கொங்கைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் ஏற்கெனவே இருந்தனர்.
அவர்கள் லிவர்பூலுக்குச் செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார்.
லிவர்பூல் குறித்து ஆரியனுக்குத் தெரிந்த ஒரே விஷயம், அங்குள்ள கால்பந்துக் கழகம் மட்டுமே.
இரவு வெகுநேரத்தில் அவர் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தங்குவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்த பணியாளர்கள் அன்பாக நடந்துகொண்டனர். இருந்தபோதிலும், அந்த இடம் “தடுப்புக் காவலில் இருப்பதைப் போன்ற உணர்வை” ஏற்படுத்தியது.
அங்கு தங்கியிருந்த அனைவருமே ஏதோவொரு வகையில் அதிர்ச்சியடைந்தவர்களாகவும் மனச்சோர்வுற்றவர்களாகவும் இருந்தனர்.
உணவு போதியளவில் இருக்கவில்லை. கிடைத்த உணவின் தரமும் மிகவும் மோசமாக இருந்தது. ஆரியன் உடல் எடையை இழந்தார். தூங்க முடியாமல் தவித்தார். மனதளவில் மிகவும் தாழ்ந்த நிலையை அடைந்தார்.
அங்கு தலிபான்களின் சித்திரவதையிலிருந்து தப்பிவந்த ஏனைய ஆப்கானியர்களும் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களது நம்பிக்கைகள் அல்லது இன அடையாளங்கள் காரணமாகத் துன்புறுத்தப்பட்டவர்கள். மற்றவர்கள் முந்தைய ஆட்சியில் பணியாற்றியவர்கள்.
ஈரானியர்களும் வேறு மோதல்களிலிருந்து தப்பிவந்த அகதிகளும் அங்கு தங்கியிருந்தனர்.
சில நேரங்களில் போராட்டங்கள் நடைபெறக்கூடிய ஆபத்து இருப்பதால், வெளியில் செல்லாமல் உள்ளேயே இருக்குமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1.30 பவுண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. வேலை செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
ஆரியனிடம் வழக்கறிஞர் ஒருவர் இருக்கவில்லை. பிரிட்டனின் புகலிடக் கோரிக்கை நடைமுறை குறித்தும் அவருக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
எனவே, இணையத்தில் தகவல்களைத் தேடி, தனது புகலிடக் கோரிக்கையை அவரே கையாளத் தொடங்கினார்.
அது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதே விடுதியில் தங்கியிருந்த பலருடன் ஒப்பிடுகையில் அவரது விண்ணப்ப நடைமுறை விரைவாக முன்னேறியது.
2025 அக்டோபரில் அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. சில நாட்களுக்குப் பின்னர், அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேறினார்.
மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குதல்..
பிரிட்டனில் பணிபுரியும் அனுபவத்தைப் பெறுவதற்காக, ஒரு கட்டுமான நிறுவனத்தில் நான்கு மாதங்கள் தன்னார்வலராகப் பணியாற்றினார்.
இந்த ஆண்டின் கோடைக்காலத்தில், சிவில் பொறியியலாளராகத் தனது முதலாவது ஊதியத்துடனான வேலையைப் பெற்றார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் குறித்த ரோரி ஸ்டீவர்ட்டின் The Places in Between என்ற நூலை பாரசீக மொழியில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பாக இருப்பதற்கும், தனக்கு உதவியவர்களுக்கும் அவர் நன்றியுடையவராக இருக்கிறார். பிரிட்டனில் பணியாற்றி, இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்கள் பல நேரங்களில் “தவறானதும் அநீதியானதுமான” செய்திகளை வெளியிடுவதாக அவர் கூறுகிறார்.
“புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஒரு குழுவினர். சில அரசியல்வாதிகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவர்களையே காரணமாகக் காட்டுகிறார்கள். மில்லியன் கணக்கான மக்களை அச்சுறுத்தலான ஒரே மாதிரியான பிம்பமாகச் சுருக்குவது நியாயமல்ல.”
துன்பம் எப்போதும் ஒருவரை வலிமையாக்குவதில்லை..
துன்பங்களை அனுபவிப்பது ஒருவரை மேலும் வலிமையாக்கும் என்ற கருத்தை ஆரியன் நிராகரிக்கிறார்.
சில அனுபவங்கள் ஒருவரிடமிருந்து சிலவற்றைப் பறித்துக்கொள்கின்றனவே தவிர, அவரை வலிமையாக்குவதில்லை என்று அவர் கூறுகிறார்.
வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். எனவே, நிலையான வாழ்க்கைச் சூழலை அவர் ஒருபோதும் சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்வதில்லை.
“மோசமானது எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகிக்கொள்வீர்கள். அது கிட்டத்தட்ட தானாகவே நிகழ்கிறது” என்கிறார் அவர்.
தனது வாழ்க்கை, மகிழ்ச்சியான முடிவொன்றின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஆயினும், சிறுவயதில் தனது தந்தை தன்னிடம் விதைத்த சிறந்த எதிர்காலம் சாத்தியம் என்ற நம்பிக்கையே தொடர்ந்து முன்னேறுவதற்கான வலிமையைக் கொடுத்ததாக ஆரியன் கூறுகிறார்.
வாசிப்பும் கல்வியும் எப்போதும் அவரது வாழ்க்கையில் முக்கியமானவையாக இருந்துள்ளன. தனது வாழ்க்கையில் ஒழுங்குணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் நிறையப் பட்டியல்களை எழுதுகிறார்.
வாழ்க்கையின் ஏனைய பகுதிகள் முடங்கிப்போனதாகவோ தனது கட்டுப்பாட்டை மீறியதாகவோ உணர்ந்த தருணங்களில், உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வது அவருக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது.
“மனிதர்களுடனான தொடர்பு உண்மையிலேயே முக்கியமானது” என்கிறார் அவர்.
புதிய நாட்டில் வாழும்போது, தற்செயலாகக் கிடைக்கும் இனிமையான உரையாடல்களும் அன்பான அணுகுமுறைகளும் கூட எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவை அனைத்தும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கான வலிமையைக் கண்டறிய அவருக்கு உதவுகின்றன.
சித்திரவதையின் தாக்கம், உடல் காயங்கள் குணமடைந்த பின்னரும் அவரை நீண்டகாலம் பாதித்தது.
தனது கண்ணியமும் கட்டுப்பாடும் பறிக்கப்பட்டுவிட்டன என்ற உணர்வே அவரை அதிகம் பாதித்தது.
“யாரோ ஒருவர் திட்டமிட்டே உங்களுக்கு இதைச் செய்தார் என்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார் அவர்.
அவரைப் பொறுத்தவரை, மீண்டெழுதல் என்பது, நடந்த சம்பவத்தை வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கான வழியைக் கண்டறிவதாகும்.
“ஆனால், அந்த அனுபவம் உங்கள் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துவிட அனுமதிக்கக் கூடாது.”
கல்வியற்ற நிலையில் விடப்பட்ட ஆப்கானியப் பெண்கள்..
ஆப்கானிஸ்தானில் இன்னமும் வாழும் ஏராளமான மக்களின் நிலைமையை ஆரியனால் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஏனைய அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டுள்ள பெண்களின் நிலை அவரை வேதனைப் படுத்துகிறது.
மார்ச் மாதத்தில், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆப்கானியர்கள் அனைவருக்கும் கல்வி விசா வழங்குவதைத் தற்காலிகமாகத் தடைசெய்தது. இதனால், ஆரியன் பிரிட்டனுக்கு வந்த பாதை தற்போது அவர்களைப் பொறுத்தவரை மூடப்பட்டுள்ளது.
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தனது குரலை எழுப்பி, இயன்றவரை சிறந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு உள்ளது. அதேவேளை, தன்னால் மாற்ற முடியாத விடயங்கள் எவை என்பதையும் யதார்த்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
மற்ற அகதிகளுக்கான அவரது செய்தி இதுதான்:
“உங்களுடைய மனித மாண்பைப் பற்றிக்கொள்ளுங்கள்.”
“மிகவும் ஆழமான இருளிலிருந்துகூட ஒருவர் மீண்டெழ முடியும். என்னால் அது முடிந்தது” என்கிறார் பசீர் ஆரியன்.
(நன்றி: த கார்டியன்)
