— ஜான் க்ரூ —
நீண்ட காலமாக, எனது நோய் குணமாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். நான் 1981ஆம் ஆண்டு பிறந்தேன். மற்ற குழந்தைகளைப் போலவே போதிய வயதில் நடக்கத் தொடங்கினேன். ஆனால், மற்றவர்களைவிட அடிக்கடி தடுமாறி விழுந்தேன். எனது தசைகள் இயல்பாக இருக்க வேண்டிய அளவுக்கு வலிமையாக இல்லை; ஏதோ தவறு இருக்கிறது என்று எனது பெற்றோர் கவலைப்படத் தொடங்கினர்.
இறுதியில், எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, முதுகுத் தண்டு தசைச் சிதைவு நோயின் (Spinal Muscular Atrophy – SMA) ஒரு வகை இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 1980களில், இந்த நோய் எவ்வாறு துல்லியமாகச் செயல்படுகிறது என்பது இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்-படவில்லை. எனினும், இது பரம்பரையாகக் கடத்தப்படும் நோய் என்பதும், அனேகமாக ஒரு பின்னடைவுத் தன்மை கொண்ட மரபணுவுடன் (recessive gene) தொடர்புடையது என்பதும் அறியப்பட்டிருந்தன. மேலும், இந்நோய் படிப்படியாகத் தீவிரமடையும் என்பதும் தெரிந்திருந்தது.
நான் வளர வளர, எனது தசைகள் அதே வேகத்தில் வளர்ச்சியடையாது. எட்டு வயதில், நீண்ட தூரங்களுக்குச் செல்வதற்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினேன். எனக்கு 18 வயதானபோது, வெளியில் நடந்து செல்வதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டேன்.
நீங்கள் இளமையாக இருக்கும்போதே, வலிமை பெறுவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறீர்கள் என்பதை உணர்வது மிகவும் கடினமானது. எனது உடல் குறைபாடுகள் இல்லாத நண்பர்களுக்கு இருந்த அதே ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் எனக்கும் இருந்தன. ஆனால், அவர்கள் எதிர்கொள்ளாத வகையில், எதிர்காலம் குறித்த அச்சத்துடன் நான் வாழ்ந்தேன்.
எனக்கு இந்த நோய் இல்லாமல் இருந்திருந்தால் எனது வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நிறைய நேரம் சிந்தித்தேன். எனது மனக்கண்ணில் தோன்றிய உருவம் என்னைப் போன்ற இன்னொரு நபருடையது. என்னைப் போலவே இருக்கும் அந்த நபருக்கு, எனது உடலில் உள்ள இந்த ஒரு குறைபாடு மட்டும் இல்லாமல் இருந்திருக்கும். அந்தக் குறைபாடு என்னவென்று துல்லியமாக வரையறுக்க முடியாவிட்டாலும், அது எனது உடலில் எங்கோ மரபணுவில் பதிந்திருந்தது.
1990களில், மனித மரபணுத் தொகுப்பை வரைபடமாக்கும் முயற்சி தொடங்கியது. மருத்துவ மரபியல் துறை நாளுக்கு நாள் துல்லியமானதாக வளர்ந்தது. எனது நோயைப் போன்ற மரபணு சார்ந்த நிலைமைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றன என்பதைப் பற்றி எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது.
அந்தப் புரிதலுடன், எனக்கான சிகிச்சை ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பும் உருவானது. அந்த வாய்ப்பு மிகச் சிறியதாக இருந்தாலும், பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் நான் மணிக்கணக்கில் அனுபவித்த, வேதனையானதும் பெரிதாகப் பயனளிக்காததுமான உடற்பயிற்சி சிகிச்சைகளைத் தாண்டி வேறொரு வழி இருக்கலாம் என்று நம்பினேன்.
ஒரு கட்டத்தில், மருத்துவ மரபியல் துறை எனக்கான சிகிச்சையைத் தேடுவதற்கு முன்னரே, கருவில் உள்ள குழந்தைகளிடம் SMA நோயை ஏற்படுத்தும் மரபணுவை அடையாளம் காண முடியும் என்பது எனக்குப் புரிந்தது.
எனது அந்த இன்னொரு சுயம், நோயிலிருந்து குணமடைந்த நானாக இருக்கக்கூடும். அல்லது, நான் பிறந்திருக்கவே மாட்டேன்; எனக்குப் பதிலாக வேறொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
அறிவியல் முன்னேறியபோது, இந்த இன்னொரு சுயம் இன்னும் உறுதியானதாகவும், இன்னும் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடியதாகவும் தோன்றியது. அது என்னை மிகவும் கவர்ந்தது.
மற்ற எல்லா விடயங்களிலும் நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்திருந்தேன். எனது சகோதரியைப் போல நீல நிறக் கண்களுக்குப் பதிலாக எனக்குப் பழுப்பு நிறக் கண்கள் இருந்திருந்தால் நான் எப்படியிருந்திருப்பேன் என்று நான் சிந்திக்கவில்லை. மொழிகளில் எனக்கிருந்த திறமைக்குப் பதிலாக இசையில் திறமை இருந்திருந்தால் நான் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா என்றும் கேட்கவில்லை.
எனது மரபணுத் தொகுப்பில் இருந்த இந்த ஒரு தவறு மட்டும் சரி செய்யப்பட்டிருந்தால் போதும். நான் அதே நானாகவே இருந்திருப்பேன்; ஆனால், இன்னும் சிறந்தவனாக.
இறுதியில், பல்வேறு காரணங்களால் அந்தக் கற்பனையான முழுமையான இன்னொரு சுயம் எனது மனத்திலிருந்து மறைந்துவிட்டது. ஆனால், கடந்த ஆண்டு அது மீண்டும் என்னைத் துரத்தத் தொடங்கியது. அதற்குக் காரணம், நியூக்ளியஸ் ஜெனோமிக்ஸ் (Nucleus Genomics) என்ற நிறுவனத்தின் விளம்பரங்களைப் பற்றிய செய்திகளை நான் வாசித்ததுதான்.
நியூயோர்க் நகரின் சுரங்க ரயில் நிலையங்கள் முழுவதும், வருங்காலப் பெற்றோருக்கு அந்த நிறுவனம் ஒரு வாக்குறுதியை வழங்கியது: இப்போது நீங்கள் உங்களுக்கான “சிறந்த குழந்தையை” பெற்றுக்கொள்ளலாம்.
“உயரத்தில் 80 சதவீதம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது”, “புத்திசாலித்தனத்தில் 50 சதவீதம் மரபணுக்களுடன் தொடர்புடையது” போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு இணையத்தளத்திற்கு வழிநடத்தப்பட்டனர். அங்கு அதிக செலவிலான, விரிவான செயற்கைக் கருத்தரிப்பு (IVF) நடைமுறை பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு குழந்தைக்கான வாய்ப்பிலும், 20 வரையிலான கருக்களைப் பரிசோதித்து, பல்வேறு மரபணு நோய்களைக் கண்டறிவதாக அந்த நிறுவனம் கூறியது. அதுமட்டுமல்லாமல், கண்கள் மற்றும் தலைமுடியின் நிறம், உடல் வலிமை, நீண்ட ஆயுள், தூக்கமின்மை, ஆண்களுக்கேற்படும் வழுக்கை போன்ற பல்வேறு பண்புகளையும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை அது முன்வைத்தது.
இன்றைய காலகட்டத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் விற்பனை உத்தி இது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், நமது உடல்நிலையைத் துல்லியமாகக் கண்காணிப்பதன் மூலமும், நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள ஏற்கெனவே முயற்சிக்கிறோம். உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், தூக்க முறைகள் என அனைத்தையும் அளவிட்டு மதிப்பிடுவதன் மூலம், நாம் சிறந்த முறையில் வாழ்கிறோமா என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
அப்படியிருக்கும்போது, ஏன் நமக்குச் சிறந்த குழந்தையையும் பெற்றுக்கொள்ளக் கூடாது?
அழிவற்ற வாழ்க்கையைத் தேடும் கோடீஸ்வரர்களாக நாம் இல்லாவிட்டாலும், நமது தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் மனிதப் பரிபூரணத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற இடையறாத அழுத்தத்தின் கீழ் நாம் வாழ்கிறோம்.
இது இன்று தனிநபரை மையமாகக் கொண்ட நுகர்வோர் கலாசார வடிவத்தை எடுத்திருந்தாலும், இதற்குப் பழக்கமான ஒரு பெயர் இருக்கிறது: யூஜெனிக்ஸ் (Eugenics).
யூஜெனிக்ஸ் என்றால் என்ன?
மரபணு ஆய்வு நிறுவனங்கள் பொதுவாக ‘யூஜெனிக்ஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன. அதற்குக் காரணமும் இருக்கிறது.
இந்தச் சொல் கிரேக்க மொழியில் ‘நல்ல பிறப்பு’ என்ற பொருளைக் கொண்டிருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், யூஜெனிக்ஸ் இனவாதமும் போலி அறிவியலும் கலந்த இயக்கமாகப் பரவலாக நிராகரிக்கப்பட்டது.
மனித இனத்தை மேம்படுத்துவதே அதன் வெளிப்படையான நோக்கமாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் மிகத் தெளிவான விளைவுகள் பல நாடுகளில் ‘தாழ்ந்தவர்கள்’ எனக் கருதப்பட்டவர்களைக் கட்டாயமாகக் கருத்தடை செய்வதும், அவர்களை வலுக்கட்டாயமாக நிறுவனங்களில் அடைத்து வைப்பதுமாக இருந்தன. நாஜி ஜெர்மனியில், தமது ‘உயர்ந்த இனத்திற்கு’ அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட மக்களைப் பெருமளவில் கொலை செய்வதற்கும் அது வழிவகுத்தது.
ஆனால், அதற்கு முந்தைய பல தசாப்தங்களில், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யூஜெனிக்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தது.
அதன் ஆதரவாளர்களில் பலர் உயர்குடியினரைச் சார்ந்தவர்களாகவும், பாலினப் பாகுபாடு கொண்டவர்களாகவும், இனவாதப் பிற்போக்குவாதிகளாகவும் இருந்தனர். இருப்பினும், முற்போக்கான யூஜெனிக்ஸ் ஆதரவாளர்களும், யூஜெனிக்ஸை ஆதரித்த சோஷலிஸ்டுகளும், அதே நோக்கங்களைக் கொண்ட பெண்ணியவாதிகளும் இருந்தனர்.
இனப்பெருக்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களைக் கட்டாயமாகக் கருத்தடை செய்ய வேண்டும் என்று சிலர் வாதிட்டனர். அதேவேளையில், சமூகத்தை மேம்படுத்தும் வழிமுறையாகப் பெண்களின் கருத்தடை மற்றும் பிறப்புக் கட்டுப்பாட்டு உரிமைகளையும் சிலர் ஆதரித்தனர்.
மனிதர்களின் பல பண்புகள் மரபுவழியாக வலுவாகக் கடத்தப்படுகின்றன என்ற நம்பிக்கைக்கும், மனிதர்கள் தமது முழுத் திறனையும் அடைவதற்கு நல்ல சுகாதார வசதிகள், பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் கல்வி வாய்ப்புகள் அவசியம் என்ற நம்பிக்கைக்கும் இடையில் முரண்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை.
யூஜெனிக்ஸ் ஏன் மக்களைக் கவர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள, அதில் கற்பனாவாத அம்சங்களும் (utopian elements), பயங்கரமான விளைவுகளுக்கான வாய்ப்புகளும் (dystopian elements) ஒருங்கே இருந்தன என்பதை உணர வேண்டும்.
இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், யூஜெனிக்ஸ் மீண்டும் தலைதூக்குவதிலும் இந்த இரண்டு அம்சங்களும் காணப்படுகின்றன.
உண்மையில், யூஜெனிக்ஸ் அதன் பழைய பெயரில்கூட மீண்டும் வந்துவிட்டது.
புதிய யூஜெனிக்ஸ்: இனவாதத்திலிருந்து தனிநபர் தெரிவு வரை
புதிய யூஜெனிக்ஸ் மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் போக்கு, சில சமயங்களில் வெளிப்படையான இனவாத மற்றும் வெள்ளை இன மேலாதிக்க வடிவத்தை எடுக்கிறது.
அதன் ஆதரவாளர்கள் பிறப்பு விகிதங்கள், நுண்ணறிவுச் சுட்டெண்கள் (IQ) மற்றும் மேற்கத்திய நாகரிகம் விரைவில் ‘சரிந்துவிடும்’ என்ற அச்சுறுத்தல் போன்றவற்றைப் பற்றிப் பேசுகின்றனர். அவர்கள் வெவ்வேறான, சமமற்ற இனக்குழுக்கள் இருப்பதாகக் கருதுகின்றனர்.
1916ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க எழுத்தாளர் மேடிசன் கிரான்ட்டின் The Passing of the Great Race என்ற நூல், இந்தப் பாரம்பரிய யூஜெனிக்ஸ் சார்ந்த அச்சக் கற்பனைகளுக்கு ஓர் உதாரணம். எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் The Great Gatsby நாவலில் டாம் புக்கானன் வெளியிடும் இனவாதக் கருத்துகளுக்கு இந்த நூல் ஒரு முக்கியத் தூண்டுதலாக இருந்தது.
தங்களை அறிவொளி பெற்றவர்களாகக் கருதுபவர்களுக்கு, இந்த வகையான புதிய யூஜெனிக்ஸை நிராகரிப்பது எளிது.
ஆனால், மற்றொரு வகையான புதிய யூஜெனிக்ஸ் அதைவிடப் பரவலாகச் சமூகத்தில் காணப்படுகிறது என்று வாதிடலாம்.
இந்த வடிவம் சொற்களையும் பெயரிடல்களையும் கவனமாகக் கையாள்கிறது. மக்கள்தொகையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற பழைய அணுகுமுறையைத் தவிர்த்து, தனிநபரின் சுதந்திரமான தெரிவை மையமாகக் கொள்கிறது.
ஒருவகையில், இந்த யூஜெனிக்ஸ் ஒருபோதும் முற்றிலும் மறைந்துவிடவில்லை.
கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், சில தத்துவவாதிகளும் உயிரியல் நெறிமுறையியலாளர்களும் (bioethicists) ‘தாராளவாத யூஜெனிக்ஸ்’ (liberal eugenics) என்று அழைக்கப்பட்ட கருத்தை ஆதரிக்கத் தொடங்கினர்.
நிக்கலஸ் ஏகர் மற்றும் ஜூலியன் சாவுலெஸ்கு ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். பெற்றோர்கள் தமது சுதந்திரமான தெரிவின் அடிப்படையில் செயல்படும் இந்த வகையான யூஜெனிக்ஸ், கடந்த காலத்தில் முழுக் குழுக்களையும் ஓரங்கட்டுவதற்கோ அழிப்பதற்கோ அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திய அடக்குமுறை யூஜெனிக்ஸிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இந்த மாற்றத்தின் வேர்கள் அதைவிடப் பழமையானவை.
வரலாற்றாசிரியர் நத்தானியல் கம்ஃபர்ட் குறிப்பிடுவதன்படி, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே யூஜெனிக்ஸ் மக்கள்தொகையை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் மருத்துவ மரபியல் துறையும் வளர்ச்சியடைந்தது.
இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, அடக்குமுறையான யூஜெனிக்ஸ் கொள்கைகள் சர்ச்சைக்கு ரியவையாக மாறின. மற்றொன்று, மருத்துவ மரபியல் ஒரு வளர்ந்து வந்த அறிவியல் துறையாக இருந்தது; அது கடந்தகால யூஜெனிக்ஸின் போலி அறிவியல் அடிப்படைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது.
அமெரிக்காவில், யூஜெனிக்ஸ் தொடர்பான பதிவகங்கள் இனம், வர்க்கம், பாலினம் ஆகியவற்றைப் பற்றிய பாரபட்சமான கருத்துகளின் அடிப்படையில் பலவிதமான தகவல்களைச் சேகரித்திருந்தன.
ஆனால், மருத்துவ மரபியல் நிலையங்கள் உண்மையானதும், தொடர்ந்து மேம்பட்டுவருவதுமான முன்கணிப்புத் திறன்களைக் கொண்ட அறிவையும் கருவிகளையும் உருவாக்கிக்கொண்டிருந்தன.
இன்று, மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள் பல தசாப்தங்களாக மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக உள்ளன. இவை பெரும்பாலும் குறைபாடுகள் மற்றும் நோய்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகளை எளிதாகப் பெறக்கூடிய நாடுகளில் டவுன் சிண்ட்ரோம் (Down syndrome) கொண்ட குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. உதாரணமாக, டென்மார்க்கில் டவுன் சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்ட கர்ப்பங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை கலைக்கப்படுகின்றன.
நிச்சயமாக, நமது குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததை வழங்கவே நாம் விரும்புகிறோம்.
ஆனால், எல்லாவற்றையும் அதிகபட்ச அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்ற வெறியுடன் இயங்கும் தாராளவாதப் பொருளாதாரச் சமூகத்தில், ‘சிறந்தது’ என்பது எளிதில் போட்டியில் முன்னிலை பெறுவதைக் குறிக்கத் தொடங்கிவிடும்.
நியூக்ளியஸ் போன்ற நிறுவனங்கள் இதை நன்கு அறிந்திருக்கின்றன.
‘தலைமுறைச் செல்வம்’ (generational wealth) என்ற சொல்லைப் பயன்படுத்தும் அந்த நிறுவனத்தின் இணையத்தளம், வாடிக்கையாளர்கள் ‘தலைமுறை ஆரோக்கியத்தை’ (generational health) வாங்கிக்கொள்ளலாம் என்று கூறுகிறது. பொதுச் சுகாதாரமும் சமூக நலச் சேவைகளும் சீர்குலையும் சூழலில், இது உடலுக்குள் பொருத்தப்பட்ட காப்புறுதிக் கொள்கையைப் போன்ற ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டில் யூஜெனிக்ஸ் என்பது தேசிய அரசின் திட்டமாக இருந்தது. 21ஆம் நூற்றாண்டில், அது முதலாளித்துவத் தனிமனிதவாதத்தின் தர்க்கரீதியான அடுத்த கட்டமாகத் தன்னை மறுவடிவமைத்துக் கொண்டுள்ளது.
மரபணு அறிவியலின் வரம்புகளும் அரசின் கட்டுப்பாடும்..
இந்த அறிவியலில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன.
உயரம் மற்றும் புத்திசாலித்தனத்தில் குறிப்பிட்ட சதவீதம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று நியூக்ளியஸ் கூறுகிறது. ஆனால், இத்தகைய புள்ளிவிவரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் காணப்படும் வேறுபாடுகளில் எவ்வளவு பகுதி மரபணுக்களுடன் தொடர்புடையது என்பதை மதிப்பிடுகின்றன. இந்த மதிப்பீடுகள்கூட விவாதத்திற்குரியவை.
அவை, ‘உங்கள் குழந்தை எவ்வளவு புத்திசாலியாகவும் உயரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் நம்பகமாகத் தீர்மானிக்கலாம்’ என்று பொருள்படுவதில்லை. எனினும், அந்த விளம்பரங்களைப் பார்க்கும் சிலர் அப்படித்தான் புரிந்துகொண்டிருக்கக்கூடும்.
ஆனால், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்ட தர்க்கத்தைத் தனிநபர்களுக்குப் பயன்படுத்துவது ஒருவகையில் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுவது, பொதுச் சுகாதார அவசரநிலைகளைத் தவிர்ப்பது, போர்களில் ஈடுபடுவதற்குப் போதுமான படைவீரர்களைக் கொண்டிருப்பது போன்ற நோக்கங்களுக்காக அரசுகள் தமது மக்கள்தொகையை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது.
நீண்ட காலமாக, இந்த நிர்வாகம் தந்தைவழி அதிகாரம் கொண்ட அல்லது சர்வாதிகார அணுகுமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தத்துவவாதி மிஷேல் ஃபூக்கோ வாதிட்டதுபோல், நவீன அரசின் முக்கிய அம்சம் ‘அரசாட்சித் தன்மை’ (governmentality) என்பதாகும். அதாவது, குடிமக்கள் தாமாகவே தமது வாழ்க்கையை நிர்வகித்துக்கொள்ளும் வகையில் ஊக்குவிப்புகளையும் கட்டமைப்புகளையும் அரசு உருவாக்குகிறது. அதன் மூலம், குடிமக்களின் செயல்பாடுகள் அரசின் நலன்களுடன் ஒத்துப்போகின்றன.
தனிநபர்களாகிய நாம் நமது உடல்களையும் குடும்பங்களையும் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகபட்சமாக்க வேண்டிய சிறிய மக்கள்தொகைகளாகக் கருதித் தாமாகவே நிர்வகிக்கத் தொடங்கினால், அரசுக்கு நிறைய வேலை மிச்சமாகிறது.
ஆனால், இது நம்மைப் பற்றிய நமது புரிதலுக்கு என்ன அர்த்தத்தைத் தருகிறது?
யூஜெனிக்ஸ்: கட்டுப்படுத்தும் விருப்பத்தின் வரலாறு..
உயிரியலாளரும் வரலாற்றாசிரியருமான ஆடம் ரதர்ஃபோர்ட் சுட்டிக்காட்டியபடி, யூஜெனிக்ஸ் எப்போதும் கட்டுப்பாட்டைப் பற்றியதாகவே இருந்துள்ளது.
இந்தச் சொல்லை 1883ஆம் ஆண்டு உருவாக்கியவர் பிரான்சிஸ் கால்டன். அவர் சார்ல்ஸ் டார்வினின் உறவினர். பரிணாம வளர்ச்சியை நிர்வகித்து, ஒரு குறிப்பிட்ட திசையில் வழிநடத்த முடியும் என்று அவர் நம்பினார்.
இயற்கைத் தெரிவு பற்றிய கண்டுபிடிப்புக்குப் பின்னர், கால்டனுக்கு ஒரு கருத்து வெளிப்படையாகத் தோன்றியது. 1904ஆம் ஆண்டு அவர் எழுதிய Eugenics: Its Definition, Scope, and Aims என்ற முக்கியக் கட்டுரையில், “இயற்கை குருட்டுத்தனமாகவும் மெதுவாகவும் இரக்கமின்றியும் செய்வதை, மனிதன் முன்னறிவுடனும் விரைவாகவும் கருணையுடனும் செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.
யூஜெனிக்ஸ் இயக்கத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நிலைத்திருக்கும் ஒரு சின்னம், ‘யூஜெனிக்ஸ் மரம்’ (Eugenics Tree) எனப்படும் உருவப்படமாகும். 1921ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச யூஜெனிக்ஸ் மாநாட்டிற்காக இது உருவாக்கப்பட்டது.
இயற்கை அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பெயர்கள் வேர்களில் பொறிக்கப்பட்ட ஒரு மரம் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த மரத்தைச் சுற்றி, “யூஜெனிக்ஸ் என்பது மனிதப் பரிணாம வளர்ச்சியைத் தானே வழிநடத்திக்கொள்வதாகும்” என்ற வாசகம் காணப்படுகிறது.
இந்த உருவப்படத்தில், அறிவு திரட்டப்படுவதற்கும் உயிரியல் செயல்முறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இறுதி நோக்கம் இருப்பதாகக் காட்டப்படுகிறது.
ஆனால், அந்த நோக்கங்கள் எவை?
இந்தக் கட்டுப்பாடு, நிர்வாகம், மேம்படுத்துதல் ஆகிய அனைத்தும் உண்மையில் எதற்காக?
கால்டனுக்கும் அவருக்குப் பின்னர் வந்த யூஜெனிக்ஸ் ஆதரவாளர்களுக்கும், சமூகச் சீரழிவைத் தடுக்க யூஜெனிக்ஸ் அரசியல் மற்றும் அறநெறி அடிப்படையில் அவசியமானதாக இருந்தது.
தாமஸ் மால்தஸ் போன்ற முந்தைய சிந்தனையாளர்களைப் பின்பற்றி, ஏழைகளும் விரும்பத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று அவர்கள் கவலைப்பட்டனர்.
வெகுவிரைவில், உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்கள், தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களால் எண்ணிக்கையிலும் போட்டியிலும் பின்தள்ளப்படுவார்கள் என்று அவர்கள் அஞ்சினர். இங்கு ‘உயர்ந்தவர்கள்’ என்பது மேல்தட்டு வர்க்கத்தினரையோ, ‘ஆங்கிலோ-சாக்சன்கள்’, ‘நோர்டிக் இனத்தவர்கள்’ அல்லது ‘ஆரியர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டவர்களையோ குறித்தது.
இதனால், மக்கள்தொகையை முழுமையாக நிர்வகிக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் முன்மொழிவு, மனிதகுலத்திற்கான ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டது. அந்த இலட்சியத்தில், அனைவருக்கும் பொதுவான ‘சிறந்தது’ என்பது மிகவும் குறுகிய வரையறைக்குள் அடைக்கப்பட்டிருந்தது.
‘பரம்பரை மேதைமை’ (hereditary genius) என்ற கருத்தின் மூலம், செல்வமும் வர்க்க அந்தஸ்தும் பிறப்பிலேயே கிடைக்கும் இயல்பான திறன்கள் என்று கால்டன் சித்தரித்தார்.
அதேவேளையில், ‘நாடோடி வாழ்க்கை’ மற்றும் ‘குற்றச்செயல்’ போன்ற விரும்பத்தகாத பண்புகளுக்குக் காரணம் வறுமை, புறக்கணிப்பு, சமூக ஒதுக்கல் ஆகியவை அல்ல; அந்தப் பண்புகளே வறுமைக்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.
கால்டனின் யூஜெனிக்ஸ் கற்பனாவாதம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மற்றும் சமூகத்தின் பாரபட்சங்களைப் பிரதிபலித்தது.
இன்றைய தாராளவாத யூஜெனிக்ஸுக்கும் இதே உண்மை பொருந்துகிறது.
மரபணு ஆய்வு நிறுவனங்கள் கூறும் ‘சிறந்த குழந்தை’ பற்றிய வாக்குறுதிகள் நம்பகமானவையா என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி, அவர்கள் ‘சிறந்தது’ என்று கருதுவது எது என்பதாகும்.
மனித வாழ்க்கையில் எவற்றை மதிப்புமிக்கவை என்றும், எவற்றை மதிப்பற்றவை என்றும் அவர்கள் கருதுகிறார்கள்?
‘நல்ல’ பண்புகளும் ‘விரும்பத்தகாத’ பண்புகளும்..
தாராளவாத யூஜெனிக்ஸ் நேர்மறையான அம்சங்களை வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தின் கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, நியூக்ளியஸ் போன்ற நிறுவனங்கள் மனித மேம்பாடு மற்றும் திறன் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
ஆனால், ரதர்ஃபோர்ட் சுட்டிக்காட்டுவதுபோல், உயிரியலில் ஒரு பண்பைத் தெரிவுசெய்வது என்பது வேறொரு பண்பை நிராகரிப்பதையும் உள்ளடக்கியதாகும்.
நேர்மறை யூஜெனிக்ஸும் எதிர்மறை யூஜெனிக்ஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். விரும்பத்தகாதது எது என்ற கருத்து இல்லாமல், விரும்பத்தக்கது எது என்பதை வரையறுக்க முடியாது.
விக்டோரியக் கால யூஜெனிக்ஸ் ஆதரவாளர்களுக்கு, ‘சிறந்தவர்கள்’ என்பவர்கள் ‘நோர்டிக்’ அல்லது ‘ஆரிய’ இனத்தவர்கள் பற்றிய கற்பனைகளையும் மேல்தட்டு வர்க்கத்தின் சலுகைகளையும் ஒன்றிணைத்த உருவங்களாக இருந்தனர். இதற்கு எதிராக, கறுப்பு மற்றும் பழுப்பு நிறத் தோலுடைய மக்கள், ஏழை மக்கள், சமூகத்தின் அடித்தட்டில் இருந்தவர்கள் ஆகியோர் விரும்பத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர்.
இன்றைய தாராளவாதப் புதிய யூஜெனிக்ஸில், நேர்மறையான பண்புகள் உற்பத்தித்திறன் மற்றும் போட்டியில் முன்னிலை பெறுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
அவர்கள் முன்வைக்கும் இலட்சிய மனிதன், இலட்சியத் தொழிலாளனுக்கு மிக நெருக்கமானவன். புத்திசாலியானவன், திறமையாகச் செயல்படுபவன், ஒருபோதும் நோய்வாய்ப்பட்டு விடுமுறை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகாதவன்.
இந்த இலட்சியத்திற்கு எதிராக நிறுத்தப்படுபவை, உடல் குறைபாடுகள் மற்றும் நீண்டகால நோய்களுடன் வாழும் மக்களின் வாழ்க்கைகளாகும்.
அறிவுசார் குறைபாடுகள் யூஜெனிக்ஸ் இயக்கத்தின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாக இருந்தன. அதேபோல், பல்வேறு பிற உடல்நிலைகளும் நோய்களும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்குகளாக மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன.
இது ஒருவகையில் ஆச்சரியமளிப்பதில்லை. உடல் குறைபாடு உண்மையிலேயே ஒருவருக்குப் பாதகமான நிலையை உருவாக்குகிறது.
இதை எனது எலும்புகளிலும் தசைகளிலும் நான் உணர்கிறேன். உடல் குறைபாடுகள் குறித்த ஆய்வாளரான டாம் ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டதுபோல், உடல் குறைபாடு என்பது ஒரு சிக்கலான வாழ்நிலை. அது வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் குறிக்கிறது; வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, எனது நோய் குணமாக வேண்டும் என்று நான் ஏன் இவ்வளவு ஆழமாக ஏங்கினேன் என்பதற்குச் சாதாரணமான காரணங்கள் உள்ளன.
ஆனால், அந்த ஏக்கம் ஏன், எவ்வாறு படிப்படியாகக் குறையத் தொடங்கியது என்பதற்கான காரணங்கள் இன்னும் சிக்கலானவை.
குணப்படுத்தும் மருத்துவமும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதும்
இறுதியில், மருத்துவ மரபியல் உண்மையிலேயே முதுகுத் தண்டு தசைச் சிதைவு நோய்க்கான பயனுள்ள சிகிச்சையை உருவாக்கியது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், நுசினெர்சன் (nusinersen) என்ற மருந்து உருவாக்கப்பட்டு வந்தது. சில ஆய்வுகளின்படி, இந்த மருந்தை நோயின் ஆரம்பத்திலேயே வழங்கினால், நோயின் அறிகுறிகளை முற்றிலுமாகத் தடுக்கவும், வயது வந்தவர்களில் நோய் மேலும் தீவிரமடைவதை நிறுத்தவும் முடியும்.
ஆனால், மருத்துவ மரபியல் இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தியது: எனக்கு SMA நோய் இருக்கவில்லை.
எனது ஆரம்பகால நோயறிதல், தசைத் திசு மாதிரிகளைப் பரிசோதித்ததன் அடிப்படையிலும் மருத்துவர்களின் ஊகங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டது.
SMA நோயுடன் தொடர்புடைய மரபணுக் குறியீடுகளைக் கண்டறியும் பரிசோதனை கிடைத்தபோது, எனது பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தது.
அதற்குப் பதிலாக, இன்னும் அரிதான ஒரு நோய் எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது. அது அரிதானது மட்டுமல்ல; அதற்கான ஆராய்ச்சிக்கு நிதி கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைவாக இருந்தது.
பிரான்ஸ் காஃப்கா ஒருமுறை குறிப்பிட்ட கருத்தை இங்கு மேற்கோள் காட்டத் தோன்றுகிறது: பிரபஞ்சத்தில் நம்பிக்கை அளவற்றதாக இருக்கிறது; ஆனால், அது நமக்கானதாக மட்டும் இல்லை.
ஆனால், உண்மையில் அந்தக் கருத்து எனது நிலைமைக்குப் பொருத்தமானதல்ல.
எனது பழைய நோயறிதலையும், அதற்கான சிகிச்சை கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் இழந்தபோது, எனக்குள் துயரம் எழுந்தது. அந்தத் துயரத்துடன் சிறிதளவு நிம்மதியும் கலந்திருந்தது.
விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அந்த அனுபவம் எனக்கு ஒரு புதிய சுதந்திர உணர்வையும் அளித்தது. எனது வாழ்க்கை உண்மையிலேயே எனக்குச் சொந்தமானது என்ற உணர்வு வலுப்பெற்றது.
என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். எனது நோய்க்கு உண்மையான சிகிச்சை இருந்தால், நிச்சயமாக அதை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஆனால், எனக்காக அத்தகைய சிகிச்சை கிடைக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், எனது வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அது நிகழாது.
காலம் அதிகமாகக் கடந்துவிட்டது. எனது வாழ்க்கையின் பெரும்பகுதி பின்னால் சென்றுவிட்டது.
இது நான் வாழ்ந்து முடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை. நான் வாழாத வாழ்க்கைகளுடன் எனது வாழ்க்கையை ஒப்பிடாமல் இருக்க என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
பதின்ம வயதைவிட நாற்பதுகளில் இருக்கும்போது இவ்வாறு சிந்திப்பது எளிதாக இருக்கிறது.
எனது உடல் குறைபாடுகள் இல்லாத நண்பர்களுடன் இருக்கும்போது, அவர்களுக்கும் ஏராளமான காயங்கள், நோய்கள் மற்றும் தெளிவாக வரையறுக்கப்படாத உடல் வலிகள் இருப்பதைப் பார்க்கிறேன்.
வாழ்க்கை நம் ஒவ்வொருவரின் மீதும் தனது அடையாளங்களைப் பதித்துவிடுகிறது.
வயதாகும்போது எனது உடல் குறைபாடு முக்கியத்துவம் இழந்துவிடுகிறது என்று இதற்குப் பொருளல்ல. மாறாக, உலகின் தாக்கத்தை எனது தசைகளிலும் மூட்டுகளிலும் அதிகமாக உணரும்போது, ஒரு வகையில் அந்தக் குறைபாடு இன்னும் முக்கியமானதாக மாறுகிறது.
ஆனால், எனது உறவினர்களுடனும் நெருக்கமானவர்களுடனும் ஒரு பொதுவான உணர்வை நான் பகிர்ந்துகொள்வதை உணர்கிறேன். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, உடல் எவ்வளவு பலவீனமானது, நாம் ஒருவரையொருவர் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பவை பற்றிய உணர்வுதான் அது.
நாம் எதிர்கொள்ளவிருக்கும் எதிர்காலத்தை நோக்கி விரைந்து செல்லும்போது, ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம்.
இதனை ஒருவகையான யதார்த்த உணர்வு என்று அழைக்கலாம்.
குழந்தைகளைப் பெற்றவர்கள் இந்த உண்மையின் இன்னொரு பக்கத்தை அறிவார்கள்.
ஒரு குறிப்பிட்ட வகையான குழந்தையைப் பெற வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டால், ஏமாற்றத்திற்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
எனக்குத் தெரிந்த ஒவ்வொரு பெற்றோரும், தமது குழந்தைகள் எப்படியிருக்க வேண்டும் என்று முன்பு கற்பனை செய்திருந்தார்களோ, அந்தக் கற்பனைகளைக் கைவிட்டு, தங்களுக்கெனப் பிறந்த குழந்தைகளின் உண்மையான இயல்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்களில் எவரும் ‘இலட்சியக் குழந்தை’ என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கவில்லை. அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்று நம்புகிறேன்.
ஏனெனில், அத்தகைய இலட்சியத்தை அடைய வேண்டிய அழுத்தத்துடன் வாழ்வது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் மிகக் கொடுமையானதாகும்.
தாராளவாதப் புதிய யூஜெனிக்ஸின் மிக மோசமான விளைவு இதுதான்: ஒருவரின் உடல் மற்றும் வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியத்தைத் துல்லியமாக வரையறுக்கவும், அளவிடவும், நனவாக்கவும் முடியும் என்ற கருத்தை அது முன்வைக்கிறது.
இதன் மூலம், குழந்தைகளையும் நம்மையும் நாமே துன்புறுத்திக்கொள்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.
ஏன் நாம் இந்தப் பரிபூரணமான உருவமாக இல்லை?
ஏன் நாம் இன்னும் உடல்தகுதி மிக்கவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும், அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாகவும் இல்லை?
குறிப்பிட்ட ஒவ்வொரு உடல் குறைபாட்டிலும் ஏதேனும் தனித்துவமான மதிப்பு இருக்கிறது என்று நான் உணர்ச்சிவசப்பட்டுப் பேச விரும்பவில்லை. ஆனால், உடல் குறைபாடுகளையும் மனிதர்களின் இயல்பான பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.
அளவிடப்பட வேண்டிய, தரவரிசைப்படுத்தப்பட வேண்டிய, நோயறிதல் செய்யப்பட வேண்டிய பண்புகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம், நாம் இதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்கிறோம். மனிதர்களிடையே காணப்படும் வேறுபாடுகளையே ஒருவகையான குறைபாடாக மாற்றுகிறோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாகச் சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்
என்னைப் பொறுத்தவரையில், குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் உலகை மாற்றுவதற்கான முயற்சியிலிருந்தே நம்பிக்கை உருவாகிறது.
தாராளவாத யூஜெனிக்ஸை நான் விரும்பாததற்கான காரணங்களில் ஒன்று, அதன் தனிமனிதவாத அணுகுமுறை, எனது வாழ்நாளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு எதிரானதாக இருப்பதுதான்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சிறந்த சமூகங்களை உருவாக்குவதில் நாம் எமது முயற்சிகளைச் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், யூஜெனிக்ஸ் மக்கள்தொகையை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறிக்கொண்டிருந்த அதே காலத்தில், உடல் குறைபாடு என்பது மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக மற்றும் அரசியல் பிரச்சினையும் ஆகும் என்ற புரிதல் வளரத் தொடங்கியது.
சமூகவியலாளர் மைக் ஒலிவர் ஒருகாலத்தில் ‘தனிப்பட்ட துயரக் கோட்பாடு’ (personal tragedy theory) என்று அழைத்த கருத்து சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.
அதற்குப் பதிலாக, பல்வேறு உடல் குறைபாடுகளுடனும் நோய்களுடனும் வாழும் மக்களைச் சமூகக் கட்டமைப்புகளே எவ்வாறு மாற்றுத்திறனாளிகளாக ஆக்குகின்றன என்பதை விளக்கும் ‘சமூக மாதிரி’ (social model) முன்வைக்கப்பட்டது.
அடிப்படையில், எது ‘மாற்றுத்திறன் குறைபாடு’ என்று கருதப்படுகிறது என்பது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.
எழுத்தறிவை மையமாகக் கொண்ட நவீன உலகில், டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் சார்ந்த நரம்பியல் வேறுபாடு ஒருவருக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், எழுத்தறிவு இல்லாத ஒரு சமூகத்தில் அது ஒரு நரம்பியல் வேறுபாடு மட்டுமே.
எனது உடல் இயக்கக் குறைபாட்டைப் பொறுத்தவரையில், சில அடிகள் மட்டுமே நடக்க முடிவது அல்லது தரையிலிருந்து எழுந்து நிற்க முடியாதிருப்பது எந்தச் சூழலிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால், சக்கர நாற்காலிகள் இல்லாத அல்லது சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத சமூகத்தில், இந்தக் குறைபாடு பல மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு இடைப்பட்ட நிலையில், சில நோய்களும் உடல் குறைபாடுகளும் சில சூழல்களில் ஒருவரை மாற்றுத்திறனாளியாக்கலாம்; வேறு சூழல்களில் அதே நிலைமை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
சிகிச்சைகளை ஒழிப்பதே இலக்கு அல்ல. ஆனால், சிகிச்சைகள் மட்டுமே அல்லது கருவிலேயே கருவைத் தெரிவுசெய்து மேம்படுத்துவது மட்டுமே, ஒரு வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதியானதாக மாற்றும் என்ற கருத்தை ஒழிப்பதே இலக்கு.
மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் நோக்கம் எப்போதும் அனைவருக்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. எல்லா வகையான உடலமைப்புகளைக் கொண்ட மக்களும் செழித்து வளரக்கூடிய உலகம் அது.
பிறப்பிலிருந்தே உடல் குறைபாடுகளுடன் வாழ்பவர்களும், வாழ்க்கையின் போக்கில் உடல் குறைபாடுகளை எதிர்கொள்பவர்களும் இதில் அடங்குவர்.
இது மனிதர்களிடையே காணப்படும் வேறுபாடுகளையும், வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு திட்டமாகும்.
அதனால்தான், ‘சிறந்த குழந்தை’ என்ற ஒரே இலட்சியத்தை முன்வைக்கும் புதிய யூஜெனிக்ஸ் கருத்துக்கு இது எதிராக நிற்கிறது.
‘சிறந்தது’ என்று ஒரே ஒரு மாதிரியை நிர்ணயித்து, மனித இனம் அதை நோக்கி நகர வேண்டும் என்பது மனிதகுலம் பின்பற்ற வேண்டிய இலக்கல்ல.
மேலும், பெரும்பாலான உடல் குறைபாடுகள் முற்றிலும் மரபணுக் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களின் மரபணு வேறுபாடுகளுக்கும், அவர்கள் வாழும் உலகின் தேய்மானம் மற்றும் பாதிப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளும் பல குறைபாடுகளுக்குக் காரணமாகின்றன.
சாத்தியமான இடங்களில் சிகிச்சைகள், குணப்படுத்தும் முறைகள் மற்றும் மருத்துவத் தலையீடுகளை ஆராய்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அதேவேளையில், மனித இனத்தை முழுமையாகப் பரிபூரணப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் சமமான காரணங்கள் உள்ளன.
குறைபாடுகளைப் பாதுகாப்பதற்கான வாதம்:
மாற்றுத்திறன் மற்றும் உயிரியல் நெறிமுறையியல் அறிஞரான ரோஸ்மேரி கார்லண்ட்-தாம்சன், ‘உடல் குறைபாடுகளைப் பாதுகாப்பதற்கான வாதம்’ (case for conserving disability) என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இது சர்ச்சைக்குரிய கருத்தாகும். ஏனெனில், உடல் குறைபாடுகளும் நீண்டகால நோய்களும் பாதிப்புகளையும், பிறரின் உதவியைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையையும் ஏற்படுத்துகின்றன.
ஆனால், மனித வாழ்க்கையின் இயல்பும் அதுதானே?
நாம் பிறக்கும்போது முற்றிலும் பிறரைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். வயதாகும்போது மீண்டும் பிறரின் உதவியைச் சார்ந்த நிலைக்குத் திரும்புகிறோம்.
முழுமையான ஆரோக்கியத்துடன் பிறந்திருந்தாலும், நோய்களுக்கும் காயங்களுக்கும் ஆளாகும் அபாயம் எப்போதும் இருக்கிறது.
புதிய யூஜெனிக்ஸ் முழுமையான சுதந்திரத்தையும், யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கையையும் முன்வைக்கிறது. இது சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கை நோக்கமாகும்.
அத்தகைய இலட்சியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் அனைவருமே அதனை அடையத் தவறியவர்களாகவே இருப்போம்.
நாம் எவ்வளவு வலிமையானவர்களாகவும், தன்னிறைவு கொண்டவர்களாகவும் இருப்பதாகக் கருதினாலும், நாம் ஒரு சமூக உயிரினம். தனியாக வாழ்வதற்கும், அதைவிட முக்கியமாகச் செழித்து வளர்வதற்கும் நமக்குச் சிறிய வாய்ப்புகளே உள்ளன.
முழுமையான கட்டுப்பாட்டுக்கு எதிராக மனிதப் பன்முகத்தன்மை
கட்டுப்பாடும் அதன் மூலம் கிடைக்கும் முன்கணிப்புத் திறனும், யூஜெனிக்ஸ் முன்வைக்கும் இலட்சியச் சமூகத்தின் அடிப்படையான அம்சங்களாகும்.
ஆனால், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட, அனைத்தும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய உலகில் யார் வாழ விரும்புவார்கள்?
உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வெளிப்புற அமைப்பு ஒன்று கடைசி விவரம் வரை தீர்மானிக்கும் உலகம். என்ன சாப்பிட வேண்டும், எப்போது எங்கே நகர வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்பதையெல்லாம் ‘உங்களது சிறந்த சுயத்தை’ உருவாக்குவதற்காக அந்த அமைப்பு கட்டளையிடும் உலகம்.
ஓ, சரி. அத்தகைய உலகம் ஏற்கெனவே நம்மைச் சுற்றி இருக்கிறதே!
முழுமையான நெறிப்படுத்தலையும், வழிமுறைகளின் அடிப்படையில் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தக் கண்ணோட்டத்திற்கு எதிராக, மனித வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை நாம் வலியுறுத்த வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குச் சிறிது காலத்திற்குப் பின்னர், ஹன்னா அரெண்ட் தனது புகழ்பெற்ற The Origins of Totalitarianism என்ற நூலை எழுதினார்.
அதில், ‘தேவையற்ற மனிதர்கள்’ (superfluous people) என்ற கருத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை அவர் ஆராய்ந்தார். அதாவது, அரசுகள் சில மக்களைப் பயனற்றவர்களாகவோ அல்லது ஆபத்தானவர்களாகவோ கருதும்போது, அவர்கள் தமது உரிமைகளை இழந்து, கொல்லப்படக்கூடியவர்களாக மாற்றப்படும் நிலையை அவர் விளக்கினார்.
இந்த ‘தேவையற்றவர்கள்’ என்ற கருத்தை உருவாக்குவதில் யூஜெனிக்ஸ் முக்கியப் பங்கு வகித்தது. மனித இனத்தின் எதிர்காலத்திற்கோ, தேசத்தின் எதிர்காலத்திற்கோ, ஓர் இனத்தின் எதிர்காலத்திற்கோ அவசியமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களே இவ்வாறு வகைப்படுத்தப்பட்டனர்.
அரெண்ட், சர்வாதிகாரத்தைப் பல அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டமாக விளக்கினார். அவற்றில் ஒன்று, மாற்று வாய்ப்புகள் அனைத்தையும் மூடிவிட்டு, எதிர்காலம் முற்றிலும் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகக் கருதும் கண்ணோட்டமாகும்.
பின்னர் அவர் எழுதிய The Human Condition என்ற நூலில், மனிதச் சமூகங்கள் வளர்ச்சியடைவதற்கும் மாற்றமடைவதற்கும் வழிவகுக்கும் மாற்றுக் கொள்கையை முன்வைத்தார்.
அந்தக் கொள்கை பன்மைத்துவம் (plurality) என்பதாகும். அதாவது, வேறுபாடுகளை எதிர்கொள்வதும் அவற்றுடன் இணைந்து வாழ்வதும்.
இந்த வேறுபாடுகளை எதிர்கொள்வதன் மூலமே, மனிதகுலத்தின் மிக உயர்ந்த ஆற்றலாக அரெண்ட் கருதிய ‘செயற்பாடு’ (action) சாத்தியமாகிறது. இத்தகைய செயற்பாடுகள் எதிர்பாராத விளைவுகளையும் கணிக்க முடியாத முடிவுகளையும் உருவாக்கக்கூடியவை.
அரெண்ட் பன்மைத்துவம் என்று குறிப்பிட்டபோது, அவர் குறிப்பாக உடல் குறைபாடுகளைப் பற்றிப் பேசவில்லை.
ஆனால், இந்தக் கருத்தை மனித உடலமைப்புகளின் வேறுபாடுகளுக்கும் விரிவுபடுத்த முடியும்.
மனிதர்களாகிய நாம் பல வகைகளில் ஒரே மாதிரியானவர்கள். ஆனால், நாம் ஒருவருக்கொருவர் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
நாம் அனைவரும் செழித்து வாழ்வதற்குத் தேவையான அடிப்படை உடல் தேவைகளைப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால், நமது திறன்கள், ஆற்றல்கள், விருப்பங்கள் ஆகியவை வேறுபடுகின்றன. எனவே, செழிப்பான வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வடிவங்களில் அமையலாம்.
‘சிறந்த குழந்தை’ என்ற குறுகிய யூஜெனிக்ஸ் கருத்துக்கு எதிராக, அரெண்ட் முன்வைத்த இன்னொரு கருத்தை நாம் முன்வைக்கலாம். அது ‘பிறப்பாற்றல்’ (natality) என்பதாகும்.
ஒவ்வொரு பிறப்பின்போதும், ஒவ்வொரு புதிய மனிதர் உலகிற்கு வரும்போதும், முற்றிலும் தனித்துவமான ஒன்று உருவாகிறது.
அந்தப் புதிய மனிதருடன் உலகமும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
(நன்றி: த கார்டியன்)
