— அழகு குணசீலன் —
ரோகண விஜயவீரவின் தலைமையிலான ஜே.வி.பி.யின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அன்றைய மாணவர்களாக இருந்த பலர் இன்றும் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் பெட்டிபடுக்கைகளை கட்டிக்கொண்டு நகர்ப்புறங்களின் மாணவர் விடுதிகளில் இருந்து சொந்த கிராமங்களுக்கு பதறியடித்து ஓடியதை மறந்திருக்க மாட்டார்கள்.
அண்மையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான சேமிப்பு கணக்கிற்கான வட்டி வருமானத்தை ஜே.வி.பி./என்.பி.பி. அரசாங்கம் இரகசியமாக எப்படி திருடியது (?) என்ற சமூக ஊடகப்பதிவுகளை பார்த்த போது ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சி காலம்தான் நினைவுக்கு வந்தது.
அப்போது ஜே.வி.பி.யினர் தேசிய பொருளாதாரத்திற்கு சுமையாக இருக்கின்ற 60/ 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஜே.வி.பி. கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் வயோதியவர்களை பொருளாதாரத்தின் “சுமைகள்” என்றும் , இளைஞர்களே பொருளாதாரத்தின் வளங்கள் என்றும் பேசியதே இதற்குக் காரணம்.
இப்போது ஜே.வி.பி. ஆட்சியின் இரண்டு ஆண்டுகளில் திறைசேரி நிரம்பி வழிகிறது என்று ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை பேசுகிறார்கள். பிரச்சார பாணியில் புள்ளிவிவரங்கள் அள்ளி வீசப்படுகின்றன. அரகலய காலத்தை விடவும் தற்போது திறைசேரியில் இருப்பு அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது எப்படி சாத்தியமானது…?
இதற்கு ஒரு சின்னஞ்சிறிய உதாரணம் தான் முதியோர் சேமிப்பு கணக்கின் வட்டி திருட்டு. ஐந்துவீதம் வட்டியை அறிவித்து முதியோர் தங்களின் இறுதிக்காலத்திற்காக குருவிகள் போன்று சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை வங்கியில் வைப்பில் இடுவதற்கு உயர் வட்டி ஆசை காட்டி, பின்னர் வட்டி வீதத்தை மூன்று வீதமாக குறைத்து, பின்னர் எந்த அறிவித்தலும் இன்றி அந்த மூன்று வீதத்தையையே இல்லாமல் செய்த கதை. சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான நம்பிக்கை, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, மானிட விழுமியங்கள் பேசும் முதியோரைக்கனம் பண்ணல் குறித்த கேள்விகளுக்கான பதில்.
“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவுக்கு வந்தவுடன், பெரும் போராட்டங்களுக்கு பின்னர், இலங்கை அடைந்த பேரின பொருளாதார ஸ்த்திரதன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றனவா? என்பதை உன்னிப்பாக கண்காணிக்க கையிருப்பு மற்றும் வருமானம் ஆகியவையே முக்கிய குறிகாட்டிகள்”
என்ற ஐ.எம்.எவ். ஆசிய, பசுபிக் பிராந்திய இயக்குனர் சோனாலி ஜெயின் சந்திரா அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. இக் கருத்தின் படி இருப்பும், வருமானமும் உயர்ந்துள்ளன. ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்வி யையே மீண்டும் எழுப்பவேண்டி உள்ளது? கேள்வி: இது எப்படி சாத்தியமானது என்பதுதான்.
மிகவும் முக்கியமான விடயம் ஜே.வி.பி/ என்.பி.பி. தேர்தல் மேடைகளில் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள், முதலாளித்துவ நவ தாராளவாதத்திற்கும், மேற்குலகிற்கும் எதிரான நிலைப்பாட்டை காற்றில் பறக்கவிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நவ தாராளவாத பொருளாதார மீட்பு கொள்கையை அப்படியே பின்பற்றி வருவதுதான். அந்த வழியில் தான் திறைசேரி நிரம்பியது. ஆனால் இந்த நிரம்பல் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. அறிவிக்கப்படும் நிவாரணங்கள் மக்களிடம் இருந்து பறித்து மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவடைந்த பின்னரும் சீர் திருத்தங்கள் நீடிக்கும்”என்ற நம்பிக்கையை ஜெயின் சந்திரா வெளியிட்டுள்ளார். மேலும் “வெளிப்புற அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையை நாட்டின் முக்கிய பலவீனமாக” அவர் அடையாளப்படுத்துகிறார்.
ஐ.எம்.எவ் வீதி வரைபடத்தில் தொடர்ந்தும் பயணித்தல், வெளிப்புற அதிர்ச்சிகளில் இருந்து தப்பித்தல் என்ற இந்த இரு கருத்துக்களும் தான் ஜே.வி.பி./ என்.பி.பி உட்கட்சி இரு அணி கருத்து மோதலுக்கு காரணமா? ஜனாதிபதியும், பிரதமரும் அமெரிக்கா சார்ந்த ரணில் விக்கிரமசிங்க போட்ட பாதையில் பயணிக்க விரும்பும் நிலையில், ரில்வின் சில்வாவும், மூத்த ஜே.வி.பி. உறுப்பினர்களும் தேர்தல் பிரச்சார சீனச்சார்பு வாக்குறுதிகளுக்கு திரும்ப விரும்புகின்றனரா..?
இலங்கையின் பொருளாதார புள்ளிவிபரங்களின் நிலைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை ஐ.எம்.எப். தானே எழுப்பியுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச்சூழல் வெளிப்புறச்சூழல் எங்கள் பொருளாதாரப் போக்கை எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பது வெளிப்படையானது. இலங்கையின் அமெரிக்க நெருக்கம் சீனாவையும், இந்தியாவையும் தொடர்ந்தும் பதட்டம் அடையச்செய்கிறது.
கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் கணிசமான பகுதி பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கு திரும்பியிருக்கிறது. சில மாவட்டங்களில், சில திட்டங்களில் இது 50 முதல் 75 வீதமாக இருக்கிறது. ஒரு வகையில் திறைசேரியை நிரப்ப இதுவும் ஒரு வழிதான். கட்சி அரசியல் விளம்பரத்திற்காக ஒதுக்குவது பின்னர் வருட இறுதியில் திறைசேரிக்கு திருப்பி உண்டியலை நிரப்புவது. ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது முழுமையான கள ஆய்வு செய்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் தொல்லியல், மகாவலி, சுற்றாடல் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு – பாதிப்பு போன்ற விடயங்கள் சரியாக தேறிய நன்மை கோட்பாட்டின் கீழ் ஆய்வு செய்யப்படவில்லை. விளைவு திறைசேரி நிரம்புகிறது.
இதுவரை திறைசேரியை நிரப்பிய இறக்குமதிவரிகள், உள்நாட்டு மறைமுக, நேர்வரிகள் இறுதியில் மக்களையே சென்றடைகின்றன. இந்த வகையில் திறைசேரியை நிரப்புவதில் மக்கள் பெரும் சுமையை தூக்குகிறார்கள். விலைவாசி உயர்வு, ரூபாய் நாணய பெறுமதி வீழ்ச்சி, இவற்றிற்கு இடையிலான மெய் வருமானத்தில் ஏற்படும் வேறுபாடு மக்களைப் பாதிக்கின்றது. அரசாங்கம் மக்களிடம் வட்டிவருமானம், விலைஉயர்வு, வரி விதிப்பு….. போன்ற வற்றின் மூலம் பொதுச்சேமிப்பை உயர்த்திக் காட்டி சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி என்பன வற்றை திருப்திப்படுத்தும் நிலையில், வறிய மக்கள் அதிகம் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.
2026 இல் இதுவரையான உல்லாசப்பிரயாணிகளின் வருகை 18 இலட்சம் பேர் என அறிக்கையிடப்படுகிறது. இதில் சுமார் 5 இலட்சம் பேர் இந்திய உல்லாசப் பிரயாணிகள். இவர்கள் மேற்குலக உல்லாசப்பிரயாணிகளை விடவும் குறைவாக செலவு செய்பவர்கள். உல்லாசப் பிரயாணிகள் தொகை, கிடைத்த டொலர் வருமானம் பற்றி பேசப்படுகிறதே அன்றி. அதற்கு தேசிய பொருளாதாரம் எவ்வளவு செலவுசெய்துள்ளது, இயற்கை – சுற்றாடல் பாதிப்புகள், கலாச்சார, பண்பாட்டு தாக்கங்கள், போதைப்பொருள், இணையவழி மோசடிகளில் உல்லாசப்பிரயாணத்துறையின் தாக்கங்கள் பற்றி அடக்கி வாசிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்தின் நிலைத்தன்மை கேள்வியாக உள்ளது. மத்திய கிழக்கிற்கு பதிலீடாக கிழக்காசியாவையும், கிழக்கு ஐரோப்பாவையும் இலங்கை கவனத்தில் கொள்கிறது. ஆனால் பதிலீட்டு பிராந்தியங்களில் மத்திய கிழக்கு போன்று சாதாரண வீட்டு, கூலி வேலைகளுக்கான சந்தை வாய்ப்பில்லை. கணனி டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் இலங்கையை விடவும் முன்னேற்றம் அடைந்த நாட்டு தொழிலாளர்களுடன் போட்டி போடமுடியாத நிலை உள்ளது.
இதுவரையான இலங்கை தேயிலைக்கு ஈரான் எண்ணெய் பண்டமாற்று திட்டம் ஏற்றுமதியாளர்களை திருப்திப்படுத்த கைவிடப்படுகிறது. ஒருயொரு பண்டமாற்று திட்டமான இது 2021 இல் ஈரானுக்கு செலுத்தவேண்டியிருந்த எண்ணெய் கடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதற்காக அதேயளவு பெறுமதியான தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்யமுடிந்தது. அரசாங்கம் என்னத்தை ஒழித்து பிடித்து விளையாடினாலும் திட்டம் கைவிடப்படுவதற்கான உண்மையான காரணம் ஈரான் மீதான அமெரிக்க தடையும், இலங்கை மீதான அமெரிக்க அழுத்தமுமாகும். மத்திய கிழக்கு போர் ஈராக், லிபியா நாடுகளில் இலங்கை தேயிலை ஏற்றுமதியை 50 வீதம் குறைத்துள்ள நிலையில் அமெரிக்க விருப்பத்தை இலங்கை நிறைவேற்றுகிறது. ஒரு வகையில் நன்றிக்கடன். “புதியதோழருடன் ” கைகு்குலுக்கியடவுன் ஈரான் மறக்கப்படுகிறது.
இந்த பொருளாதார நிலைமைகளில் 2027 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், மற்றும் விபரங்கள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசா பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அரசாங்கம் பதில் அளிக்கவில்லை. காலவரையறை அற்ற கால அவகாசத்தை கோரியுள்ளது. ஒரு ஐனநாயக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், பொது நிதி கட்டுப்பாடு குறித்த பாராளுமன்றத்தின் முழுப்பொறுப்பு என்பன அழகான வார்த்தைகளில் மட்டும் இல்லை. மாறாக செயலில் இருக்கிறது என்பதை அரகலய காலத்து பாராளுமன்ற உரைகளை அநுர அரசாங்கம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய காலம் இது.
