புதிய உலக ஒழுங்கில் இலங்கை தப்பிப்பிழைக்க ரணிலின் 10 அம்சத் திட்டம்

புதிய உலக ஒழுங்கில் இலங்கை தப்பிப்பிழைக்க ரணிலின் 10 அம்சத் திட்டம்

புதிய உலக ஒழுங்கில் இலங்கை தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான 10 அம்சத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார். விரைவான தொழில்நுட்ப நவீனமயமாக்கல், பிரிக்ஸ் அமைப்பில் இணைதல், வலுவான கடல்சார் பங்களிப்பு ஆகியவை அவரது திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய உலக ஒழுங்கில் இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து Daily FT, பட்டயக் கணக்காளர்கள் சங்கம் (ACCA), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம், பெண்கள் முகாமைத்துவ அமைப்பு (WIM), இலங்கைப் பணிப்பாளர் நிறுவனத்தினர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் MBA பழைய மாணவர் சங்கம் மற்றும் பயனியர் வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து சனிக்கிழமை நடத்திய 50ஆவது இணையவழிக் கருத்தரங்கில் பிரதான உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

“நாம் இதனைச் செய்யாவிட்டால், புதிய உலக ஒழுங்கில் எமக்கு எந்த இடமும் இருக்காது” என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அவர் முன்வைத்த முக்கிய தேவைகளில், வலுவானதும் போட்டித்தன்மை மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்கும் வகையிலான விரைவான தொழில்நுட்ப நவீனமயமாக்கல், இலங்கையை ஒரு கடல்சார் தளவாட மையமாக மாற்றுதல், இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், வங்காள விரிகுடாப் பிராந்திய நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல், இறுதியில் பிராந்திய ஒருங்கிணைப்பை நோக்கி நகர்தல் ஆகியவை இடம்பெற்றன.

மேலும், இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைய வேண்டும் என்றும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட புவிசார் அரசியலை முன்னெடுத்தல், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பணிகளைத் துரிதப்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடற்படைக் கப்பல்களைக் கொண்ட தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட கடற்படையை உருவாக்குதல் ஆகியவையும் அவரது பரிந்துரைகளில் அடங்கின.

“தொழில்நுட்பம் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்ற, வர்த்தகமும் நிச்சயமாக முக்கியப் பங்கு வகிக்கப்போகின்ற இந்தப் புதிய உலக ஒழுங்கில் நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால், இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். இல்லையேல், பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவுகளில் ஒன்றைப் போன்று முக்கியத்துவம் இழந்து மறைந்துவிடுவோம்” என அவர் தெரிவித்தார்.

புதிய உலக ஒழுங்கும் தொழில்நுட்ப ஆதிக்கமும்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, NDTV உலக உச்சி மாநாட்டில் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டே தனது முன்மொழிவுகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

தற்போதைய உலகம் ஒரு பழைய ஒழுங்கு முடிவுக்கு வந்து, புதிய ஒழுங்கு உருவாகிக்கொண்டிருக்கும் இடைநிலைக் காலத்தில் இருப்பதாக மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

நிதி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை புதிய புவிசார் அரசியலில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை மோடி சுட்டிக்காட்டியிருந்ததாக ரணில் தெரிவித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்கள், மாறிவரும் உலக ஒழுங்குக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தவறியதால், தற்போதைய சூழ்நிலையில் தலையிட முடியாத நிலையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வலிமையானவர்கள் பலவீனமானவர்களை விழுங்கிவிடும் நிலையைத் தடுப்பதன் அவசியத்தை விளக்கும் சாணக்கியரின் மத்ஸ்ய நியாயம் (Matsya Nyaya) என்ற கருத்தையும் மோடி முன்வைத்திருந்தார்.

கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, செயற்கை நுண்ணறிவு (AI), தரவுகளின் மீதான உரிமை மற்றும் டொலரை மையமாகக் கொண்ட உலக நிதிச் சந்தைகள் ஆகியவை அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளன என்றார்.

மற்றொரு செயற்கை நுண்ணறிவுப் பெருவல்லரசான சீனா, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து மாற்று ஏற்பாட்டை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இன்று நாம் காண்பது, செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பெரும் வல்லரசுகளின் ஆதிக்கமாகும்” என அவர் கூறினார்.

விண்வெளி, கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளும் தத்தமது தொழில்நுட்ப ஆற்றல்களை வளர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

“இன்று இறைமை என்பது தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

மேற்குலக நாடுகளின் தலைமையிலான கூட்டணிகளின் செல்வாக்கு குறைந்து வருவதுடன், முன்னணி வல்லரசுகளுக்கு இடையில் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட புவிசார் அரசியல் உறவுகள் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சூழலில், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நவீனமயமாக்கலின் அடிப்படையில் இலங்கை தனது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல், வலிமையான நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இலங்கை சிக்கிக்கொள்ளும் என அவர் எச்சரித்தார்.

இந்தியப் பெருங்கடலும் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவமும்..

புதிய உலக ஒழுங்கின் முக்கிய மையங்களில் ஒன்றாக இந்தியப் பெருங்கடல் விளங்கும் என ரணில் தெரிவித்தார். ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான பிரதான கடல்வழிப் போக்குவரத்துப் பாதையாக இந்தியப் பெருங்கடலின் பங்கு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தியப் பெருங்கடலின் அடியில் ஆராய்ந்து பயன்படுத்தக்கூடிய அளப்பரிய வளங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், அமெரிக்கா–ஈரான் போர், இந்தியப் பெருங்கடலை அமைதிப் பிராந்தியமாகக் கருதும் நிலைக்கும் அங்கு சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சூயஸ் கால்வாய் மற்றும் வளைகுடாப் பிராந்தியம் ஆகிய இரண்டு முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளும் முழுமையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவது இலங்கையின் நலனுக்கு அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்காள விரிகுடா: புறக்கணிக்க முடியாத பொருளாதாரப் பிராந்தியம்..

வங்காள விரிகுடாவை வெறுமனே ஒரு கடற்பிராந்தியமாகக் கருதாமல், முக்கியமான பொருளாதாரப் பிராந்தியமாகவும் கொள்கை வகுப்பாளர்கள் நோக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

2050ஆம் ஆண்டளவில் உலகின் நான்காவது அல்லது ஐந்தாவது மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடாக இந்தோனேசியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் அந்நாட்டின் பிராந்தியச் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷும் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தென்கிழக்காசியாவுக்கும் மேற்கு சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதால், சீனாவின் செங்டு–சொங்கிங் (Chengdu–Chongqing) பொருளாதாரப் பாதை மியான்மர் மற்றும் பங்களாதேஷ் வரை விரிவடைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் வங்காள விரிகுடா வழியாக இந்தியப் பெருங்கடலை அணுகுவதற்கான இரண்டாவது வழியை சீனா பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவைத் தவிர்த்துப் பார்க்கும்போதுகூட, இலங்கைக்கு மிக அருகில் சுமார் 600 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பெரிய சந்தை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் பாதுகாப்பும் நவீன தொழில்நுட்பமும்..

சுற்றுப்பாதையில் இயங்கும் கடல்சார் கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள், அதிவேக மீயொலி ஆயுதங்கள் (Hypersonic Weapons), ஆளில்லா நீர்வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் என ரணில் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் அமைந்துள்ள கடலடித் தொடர்பாடல் கேபிள்களைப் பாதுகாப்பதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.

புதிய வர்த்தகச் சந்தைகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும்..

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவதில் தாம் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, அடுத்த கட்டமாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இலங்கை வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் தொடர்ந்து முக்கியமான சந்தைகளாக இருக்கும் என்றாலும், அந்தச் சந்தைகளுக்கு இலங்கையால் மேலும் அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.

எனவே, ஆசியாவில் புதிய சந்தைகளைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் உலகப் பொருளாதார வலிமை ஆசியாவை நோக்கி நகரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 பில்லியன் டொலர்கள் மட்டுமே. நாம் மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார அளவு இதைவிடப் பெரியது. டாடா அல்லது அதானி நிறுவனங்களும் அவ்வாறானவையே. இதனை நாம் உணர வேண்டும். நாம் பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும்” என அவர் கூறினார்.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் இலங்கையின் நிலையும்

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ரணில், வெளியுறவுக் கொள்கை அந்தத் தேர்தல்களில் முக்கியமான இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறினார்.

துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டைக் குறைக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலாக, அமெரிக்கா தனது நிதி மற்றும் தொழில்நுட்ப வலிமையைச் சார்ந்திருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய வல்லரசுகளும் இந்தியாவும் தங்களுக்கிடையிலான உறவுகளை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றன என்பது, சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை எங்கு, எவ்வாறு செயல்பட முடியும் என்பதைத் தீர்மானிக்கும் என்றார்.

“ஆனால், அந்தச் சதுரங்கப் பலகையில் எமது காய்களை நகர்த்த வேண்டுமானால், முதலில் நாம் வலுவான பொருளாதாரமாக மாற வேண்டும். இல்லையேல், எமக்கு எந்த இடமும் இருக்காது” என அவர் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பும்..

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பைக் கொண்ட நிறுவனங்கள் உருவாகி வருவதாக ரணில் தெரிவித்தார்.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் எச்சரித்தார்.

மேலும், பெரும் செல்வம் ஒரு சில டிரில்லியனர்களிடம் மட்டுமே குவியும் நிலை தொடருமானால், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் சமூகப் பதற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *