ஞானசார சர்ச்சை அரசுக்கும் மகாசங்கத்துக்கும் இடையிலான பாரம்பரிய உறவில் புதிய கோட்டை வரையுமா?

ஞானசார சர்ச்சை அரசுக்கும் மகாசங்கத்துக்கும் இடையிலான பாரம்பரிய உறவில் புதிய கோட்டை வரையுமா?

 — வீரகத்தி தனபாலசிங்கம்  

இலங்கை அரசியலிலும் சிங்கள பௌத்த சமூகத்திலும் மகாசங்கம் (பௌத்த பிக்குகள்) செலுத்திவரும் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் வரலாற்று ரீதியாக ஆழமான வேர்களைக் கொண்டது. “அரசனை/ ஆட்சியாளர்களை  உருவாக்குவதும் அழிப்பதும் மகாசங்கமே” என்ற பிம்பம் நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டு வந்திருக்கிறது. 

இருப்பினும், சிறைவாசம் அனுபவிக்கும் சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு  மீண்டும் மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு  நாட்டின் அரசியல் கலாசாரத்தில் இருந்து  ஒரு ‘விலகலாக’ அமைந்திருக்கிறது.

ஞானசாரவின் காவி உடையைக் களைந்து விட்டு அவரை சாமானியர்களின் உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்த சிறைச்சாலை அதிகாரிகளின் செயலை ஆட்சேபித்து “காவி உடைக்கு நீதி” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் ஒரு அங்கமாக கண்டி தலதா மாளிகைக்கு அருகில் இருந்து பிக்குகளும் ஆதரவாளர்களும் ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடங்கிய பாதயாத்திரை ஆறாவது நாள் கொழும்பிற்குள் பிரவேசித்ததும் அவர்களின் கோரிக்கை ஞானசாரவை உடனடியாக நிபந்தனையின்றி  விடுதலை செய்ய வேண்டும் என்பதாக மாறியது.

கொழும்பு  காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்திய பிக்குமார் நீதிமன்ற உத்தரவையடுத்து அதை தொடர முடியாமற்போன நிலையில் அவர்களில் ஒரு பிரிவினர் விகாரமகாதேவி பூங்காவில் முகாமிட்டு கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக,  சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும்  மீறி பிக்குமார் நடத்திய அந்த  போராட்டம் மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டையடுத்து ஞாயிறன்று (25) முடிவுக்கு வந்தது. 

மகாநாயக்கர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் ஞானசாரவின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் தாங்கள் பேசிவருவதாகக் கூறியிருப்பதுடன் பிக்குமார் மத்தியில் ஒழுக்கமின்மை குறித்தும் விசனம் தெரிவித்திருந்தனர். 

ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற மகாசங்கத்தின் ஒரு பிரிவினரின் அழுத்தங்களுக்கும்  அடிபணிய மறுத்து ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற நிலைப்பாட்டில்  அரசாங்கம் உறுதியாக  நிற்பது பௌத்த தர்மத்தின் உண்மையான சாராம்சத்துக்கும் மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி  அரசியலிலும் ஆட்சிமுறையிலும் செல்வாக்கைத் தக்க வைக்கக் கங்கணம் கட்டிநிற்கும் பிக்குகளின் போக்கிற்கும் இடையிலான தார்மீக மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மகாசங்கத்தின் இந்த பிரிவினருக்கு சிங்கள பௌத்த சமூகத்தின் மத்தியில் பரந்தளவிலான ஆதரவு இருப்பதற்கான அறிகுறிகள்  தெரியவில்லை. இவர்கள் ஞானசாரவின் விடுதலையை வெறுமனே ஒரு பிக்கு சம்பந்தப்பட்ட  விவகாரமாகப் பார்க்கவில்லை. மாறாக, அதை அரசியல் மீதான தங்களின் மேலாதிக்கத்தின் அளவுகோலாகக்  கருதுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ற முறையில் செயற்பட வைப்பதும் தங்களது சொற்படி செயற்படத் தவறும் அரசாங்கங்களை வீழ்த்துவதும் தங்களது பிரத்தியேகமான உரிமை என்று பிக்குகள் கருதி வந்துள்ளனர். ஞானசாரவுக்கு ஜனாதிபதி திசநாயக்க மன்னிப்பு வழங்காவிட்டால், ‘புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்’ என்று இளம் பிக்குவான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரின் எச்சரிக்கை இந்த மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடேயாகும்.

தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், இலங்கையின் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் பிக்குகள் கொண்டிருப்பதாகக் கருதப்படும் ‘நிபந்தனையற்ற செல்வாக்கு’ சரிந்துவிடும் என்ற அச்சமே அவர்களை இந்த அளவுக்கு கொதிப்படைய வைத்திருக்கிறது.

ஞானசாரவுக்கு ஆதரவாகத் அணிதிரண்டிருக்கும் பிக்குகளின் நிலைப்பாடு பௌத்த போதனைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முற்றிலும் முரணானதாக அமைந்திருப்பதுதான் இங்குள்ள முக்கியமான அறம் சார்ந்த பிரச்சினை.  கடந்த காலத்தில் பௌத்த போதனைகளுக்கு முரணாகச் செயற்பட்டு சமூகங்களுக்கு இடையில் குரோதங்களைத் தூண்டி,  நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, வன்முறையை மூளவைத்த  பிக்கு ஒருவருக்கு காவி உடையின் பெயரில்  மன்னிப்புக் கோரப்படுவது இலங்கையில் பௌத்த மதத்தின் ஒழுக்க நியாயப் பாரம்பரியம் குறித்து பெரும் கேள்வியை எழுப்புகிறது.

நீதிமன்ற அவமதிப்பு, சமூகங்களுக்கு இடையில் வெறுப்புணர்வுகளைத் தூண்டிவிடுதல், காணாமல்போன தனது கணவருக்கு நீதிகோரிய ஒரு பெண்ணை அச்சுறுத்தியமை போன்ற அருவருக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு துறவிக்காக ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சை உருவாக்கப்படுகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும்.

அரசியலிலும் ஆட்சிமுறையிலும் தங்களது ஆதிக்கம் தளர்ந்துபோகக் கூடிய சூழ்நிலை ஏற்படுவதை பொதுவில் மகாசங்கம் விரும்பப் போவதில்லை என்றாலும், ஞானசார விவகாரத்தில் பிக்குகளுக்குள் பிளவு இருக்கிறது என்பது தெளிவானது. ஒரு புறத்தில், ஞானசாரவுக்கு ஆதரவாக ஒரு பிரிவு பிக்குகள் அணி திரண்டு நிற்கும் அதேவேளை மறுபுறத்தில், அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாமல் சட்டத்தின் ஆட்சியை  நிலைநிறுத்துமாறு கணிசமான எண்ணிக்கையில் இன்னொரு பிரிவு  பிக்குகள் ஜனாதிபதியை வலியுறுத்துகிறார்கள். அரசாங்கத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி நாட்டின் பல பாகங்களில்  இடம்பெறும் ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்களின்  முன்னரங்கத்தில் பிக்குகளைக் காணக் கூடியதாக இருக்கிறது.

பிக்குகளுக்கும் சாமானியர்களுக்கும் நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்கிறது என்றும் சட்டத்தையும் தர்மத்தையும் மதித்து நடக்கத் தயாராக இல்லாதவர்கள் காவி உடைகளைக் களைந்து துறவறத்தைக் கைவிட வேண்டும் என்றும் மூத்த பௌத்தத் தலைவர்களில்  ஒருவரான ஒமல்பே சோபித தேரர் எச்சரிக்கை செய்திருந்தார். இது   அரசியலில் சில பிரிவு  பிக்குகளின் கர்வத்தனமான  போக்கை தர்மத்தின் பெயரால் நியாயப்படுத்த முடியாது என்ற செய்தியைச் சொல்கிறது.

சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்ட ஒரு பிக்குவை இன்று சட்டம் இறுக்கிப் பிடித்திருக்கிறது. நீதி  அதன் கடமையைச் செய்வதை மதித்துப்  பாராட்டுவதற்குப் பதிலாக, எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  குறுகிய அரசியல் இலாபத்துக்காக மதவாத உணர்வுகளைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்;  ஞானசாரவை விடுதலை செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோரிக்கை விடுத்தார்கள். 

நாட்டின் பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவை தீவிரமாக இருக்கும் நிலைவரத்தூக்கு மத்தியில் எதிரணி அரசியல்வாதிகள்  ஞானசார விவகாரத்தைக் கையிலெடுத்திருப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இனவாத, மதவாத. அடிப்படையிலான அணிதிரட்டலைச் செய்வதே தங்களது அரசியல் மீட்சிக்கான ஒரே மார்க்கம் என்ற அவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

ஜனாதிபதி திசநாயக்கவையும் அரசாங்கத்தையும் மகாசங்கத்திடமிருந்து பிரித்து “சிங்கள பௌத்த விரோத அரசு” என்ற முத்திரையைக் குத்துவதன் மூலம் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்பலாம் என்று எதிரணி கணக்குப் போடுகிறது. ஆனால், ஜனாதிபதி மகாசங்கத்தை ஒட்டுமொத்தமாகப் பகைத்துக் கொள்ளக்கூடிய ஒருவரல்ல. அவ்வாறு செய்தால் அதனால் தனக்கு ஏற்படக்கூடிய அரசியல் சிக்கல்களை அவர் நிச்சயமாக அறிவார். மகாசங்கத்துடனான பொருதல் நீடிப்பதை அவரது ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) உள்ள பெரும்பாலான பிரிவுகளும் விரும்பப் போவதுமில்லை.

ஆனால்,  சட்டத்தை மீறிச் 

செயற்பட வேண்டும் என்று தனக்கு நெருக்குதலைக் கொடுக்கும் பிக்குகளுக்கு அடிபணியாமல் உறுதியாக நிற்பதன் காரணமாக ஞானசாரவை மையமாகக் கொண்ட தற்போதைய சர்ச்சையில் ஜனாதிபதி ஒருவித அறவியல் மேல்நிலையில் இருக்கிறார் என்பது நிச்சயமானது. இதன் மூலமாக, பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ பகிரங்கமாகக் கண்டனம் செய்ய முடியாத ஒரு திரிசங்கு நிலையை அவர் ஏற்படுத்தியிருக்கிறார் எனலாம்.

சட்டத்தை மதித்துச் செயற்பட மறுக்கும் பிக்குமாருக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, நாட்டை இதுவரை காலமும் சீரழித்துவந்த மதவாத அரசியலுக்கும் சட்டத்தில் இருந்து விலக்குப் பெற்றவர்கள் போன்று சலுகைகளை அனுபவித்த பிரிவினருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவாலாகும். 

சட்டத்தை மீறப் போவதில்லை என்பதில் உறுதியாக நிற்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படுவதற்கான அக்கறையின் ஒரு நல்ல அடையாளமாகும். ஆனால், இந்த நிலைப்பாட்டை சிறுபான்மைச் சமூகங்களை பாதிக்கும் பிரச்சினைகளிலும் கடைப்பிடிப்பதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களினாலும்  வரவழைக்க முடியுமேயானால், அவர்கள் வாக்குறுதி அளித்த புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான அடியெடுத்துவைப்பாக அது  இருக்கும். 

மாகாணசபைகளை உருவாக்குவதற்காக சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மறுப்பதும் சட்டத்தை மதிக்காத ஒரு செயலேயாகும்.  அதுவும் சட்டத்தின் ஆட்சிக்கான சவால்தான்.

வடக்கு, கிழக்கில் சிறுபான்மைச் சமூகங்களுக்குச்  சொந்தமான மதத் தலங்களிலும் நிலங்களிலும்  செய்யப்படும்  அத்துமீறல்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படாத போக்கு தொடருகிறது. 

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது என்பது அரசாங்கத்தின் விருப்பத்தெரிவுக்குரிய ஒரு விடயமாக அல்லாமல், சகல விடயங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பெரும்பான்மை தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்களில் இருந்து சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதில்  ஜனாதிபதி உறுதிப்பாட்டை வெளிக்காட்டினால் மாத்திரமே  சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற கோட்பாடு நடைமுறையில் முழுமை பெறுவதாக அமையும். 

எது எவ்வாறிருந்தாலும், ஞானசார விவகாரம் மூளவைத்திருக்கும் சர்ச்சை  சட்டத்தின் ஆட்சிக்கும் மதவாத அரசியல் மேலாதிக்கத்துக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவ மோதலைக் குறித்து நிற்கிறது. இந்த சர்ச்சையை மகாசங்கத்தில் ஒரு பிரிவினர் தங்களது கட்டமைப்பின்  கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். ஞானசார போன்ற தீவிரவாத / இனவாத பேச்சுக்களுக்கு பெயர் பெற்ற பிக்குகள் மீதான சட்ட நடவடிக்கைகள் தென்னிலங்கை கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களில் நீதிமன்றத் தண்டனைகளில் இருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் தப்பிப்பிழைப்பது தீவிரவாதப் பிக்குகளுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் அத்தகைய அரசியல் தலையீடுகளை தவிர்த்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தால், மீண்டும் இனவாத – மதவாத உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகளின் திட்டங்கள் தோல்வியடையும்.

பேரினவாத மற்றும் தீவிரவாதப் போக்கை விரும்பாத, நியாயமாகச் சிந்திக்கும் பௌத்த பிக்குகளும் நாட்டில் அமைதியையும் பொருளாதார மீட்சியையும் விரும்பும் பெரும்பான்மை மக்களும் அரசாங்கத்தின் இந்த உறுதியான  நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அதன் மூலமாக தீவிரவாதப் பிக்குகளைத் தனிமைப்படுத்த முடியும்.  தங்களது பிரச்சினைகளில் அரசாங்கத்தின் கடந்த இருவருட கால அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் குறித்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு கடுமையான ஏமாற்றமும் வேதனையும் இருக்கின்ற போதிலும், தற்போதைய சர்ச்சையில் ஜனாதிபதிக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவது காலத்தின் தேவையாகும். 

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் ஆரோக்கியமானவையாக இல்லை என்ற போதிலும், பிக்குகளுடனான இன்றைய தகராறில் ஜனாதிபதிக்கு பின்னடைவு ஏற்படுமேயானால், மீண்டும் இனவாத/ மதவாத அணிதிரட்டல்களைச் செய்து ஆட்சியைப் பிடிக்கத்துடிக்கும் அரசியல் சக்திகளுக்கு அது அனுகூலமாக  அமைந்துவிடும். சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகளின் அணுகுமுறை இதை மனதிற்கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞானசார விவகாரத்தில் அரசாங்கம் காட்டும் உறுதிப்பாடு இலங்கை அரசுக்கும் மகாசங்கத்துக்கும் இடையிலான உறவை அழித்துவிடப் போவதில்லை. மாறாக, அந்த உறவை நவீன, ஜனநாயக மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட புதியதொரு எல்லைக்குள் சீரமைக்க வழிபிறக்குமானால் இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது.

அரசாங்கத்துக்கும் பிக்குமாரில் ஒரு பிரிவினருக்கும் இடையிலான பொருதல் அரசுக்கும்  மகாசங்கத்திற்கும் இடையிலான பாரம்பரிய உறவில் புதிய கோடு ஒன்றை வரையுமா? அதாவது மதரீதியான வழிநடத்தல் என்பது ஆன்மீகம் மற்றும் சமூகநலன் சார்ந்ததாக மாத்திரம் இருக்க வேண்டுமே தவிர, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலோ அல்லது நீதித்துறையின் முடிவுகளிலோ தலையிடுவதாக இருக்கக்கூடாது என்ற நிலை உருவாக முடியுமா? இலங்கை சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படுகின்ற, பன்மைத்துவ ஜனநாயக நாடாக முன்னகர்வதற்கான வாய்ப்புக்கு வழிபிறக்குமா? இவையே நம்முன்னாலுள்ள முக்கியமான கேள்விகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *