செம்மணி விவகாரத்தில் ஏற்பட்ட பெரும் தவறு!

செம்மணி விவகாரத்தில் ஏற்பட்ட பெரும் தவறு!

— அருளினியன் மகாலிங்கம் —

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான தொல்லியல் ஆய்வாளர்களின் இடைக்கால அறிக்கை இந்த வாரம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சிந்துபாத்தி இந்து மயானத்திலிருந்து மீட்கப்பட்ட குறைந்தது 574 பேரின் எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்து அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏறத்தாழ குழந்தைகளும் சிசுக்களுமாவர். பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் தயாரித்த இந்த அறிக்கை, உலகின் ஏனைய பகுதிகளில் கண்டறியப்பட்ட இரகசியப் புதைகுழிகளைக் காட்டிலும், இந்த இடம் முறைப்படியான அடக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இடத்தைப் போன்றே காணப்படுவதாகக் கூறுகிறது. அதேவேளை, உறுதியான முடிவொன்றுக்கு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இந்த அகழ்விடத்தை இனப்படுகொலையின் அடையாளமாக முன்னிறுத்திய தமிழ் அரசியல்வாதிகள் தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட மூன்று பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முதலாவது, அவர்கள் பெரிதும் பிரசாரப்படுத்திய அகழ்விடம் ஒரு மயானத்துக்குள் அமைந்துள்ளது. அங்கிருந்து சில மீற்றர் தொலைவில் தகன மேடையும் உள்ளது. யாழ்ப்பாணக் குடும்பங்கள் பல தலைமுறைகளாகத் தமது இறந்தவர்களை அடக்கம் செய்துவந்த நிலப்பகுதியே அது.

இரண்டாவது, அங்கு மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். ஆனால், யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

மூன்றாவது, தொல்லியல் ஆய்வுகள் தாங்கள் ஏற்கெனவே அறிவித்த முடிவுகளை உறுதிப்படுத்தத் தவறியபோது, அந்த ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, அதன் பின்னணியில் சதியொன்று இருப்பதாகக் கூறத் தொடங்கினர்.

ஒரு வருடத்துக்கும் மேலாக, அரசியல் கட்சிகள், தேசியவாத வழக்கறிஞர்கள், சிவில் சமூகத்தின் சில பிரிவினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களில் உரத்த குரலில் பேசும் ஒரு தரப்பினர், இந்த அகழ்விடத்தில் போர்க்கால அட்டூழியங்களின் பலியாட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உலகிற்குக் கூறிவந்தனர். சிலர் இதனை இனப்படுகொலை என்றும் அழைத்தனர். அங்கு யார் புதைக்கப்பட்டனர், அவர்கள் எப்போது இறந்தனர், எவ்வாறு இறந்தனர் என்பன தெரியவருவதற்கு முன்னரே இக்கூற்றுகள் முன்வைக்கப்பட்டன.

தாங்கள் உறுதியளித்த தீர்ப்பை ஆய்வறிக்கை வழங்காதபோது, அதற்கான விளக்கமும் தயாராக இருந்தது: தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் இரண்டு சிங்களக் கல்வியாளர்களை நியமித்துள்ளது என்பதே அந்த விளக்கம்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சோமதேவ ஒரு சிங்களத் தேசியவாதி என்றும், அவருக்கு அரசியல் நோக்கமொன்று இருப்பதாகவும் கூறினார். அகழ்வுப் பணிகளுக்குத் தலைமை தாங்குவதற்கு அவரை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

புதைகுழிகள் நிறைந்த ஒரு மயானம்:

சிந்துபாத்தி பல தலைமுறைகளாக இந்து மயானமாக இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடபகுதியில், இந்துக்கள் பாரம்பரியமாகத் தமது வயது வந்த இறந்தவர்களைத் தகனம் செய்வார்கள். பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் புதைக்கப்படுவார்கள். சில குடும்பங்கள் பத்து வயது வரையிலான குழந்தைகளையும் அடக்கம் செய்கின்றன.

இந்த வழக்கங்கள் குடும்பத்துக்குக் குடும்பமும் சமூகத்துக்குச் சமூகமும் மாறுபடுகின்றன. வயது வந்த அனைவரும் தகனம் செய்யப்படுவதில்லை. பண்டாரம் சாதியினரும் வீரசைவப் பிரிவைப் பின்பற்றுவோரும் இன்றும் தமது இறந்தவர்களைப் புதைக்கின்றனர். இவ்வாறு பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மயானத்தில் ஏராளமான புதைகுழிகள் உருவாகும். அவற்றில் பல சிறிய குழிகளாக இருக்கும்.

இறந்தவர்கள் தங்களுக்குச் சொந்தமான சில பொருட்களுடன் புதைக்கப்படுவார்கள். மணிகள், கொலுசுகள், தாயத்துகள், நாணயங்கள், சிசுக்களுக்கான பால் போத்தல்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், காலணிகள் போன்றவை அவற்றில் அடங்கும். சிந்துபாத்தி அகழ்விடத்திலும் இவை அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவையே அங்கு ஓர் அட்டூழியம் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எனப் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்ட பொருட்களாக இருந்தன.

சிந்துபாத்தி நிலப்பகுதி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை ஆய்வறிக்கை விவரிக்கிறது. புதிய புதைகுழிகள் பழைய புதைகுழிகளை ஊடறுத்துச் சென்றுள்ளன. பின்னர் புதைகுழிகளைத் தோண்டியவர்கள், தளர்வான எலும்புகள் கலந்த 51 குவியல்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் சிலவற்றுடன் ஆணிகளும் இரும்புப் பொருத்திகளும் கலந்திருந்தன. அவை சவப்பெட்டிகளின் எச்சங்களாக இருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இடையூறு ஏற்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் நேராகப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. கைகள் வயிற்றின் மீது மடிக்கப்பட்டிருந்தன அல்லது உடலின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டிருந்தன.

உடலுடன் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் காலத்தால் மிகப் பழமையானதாகத் திகதியிடப்பட்டிருப்பது 1870ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட நாணயமாகும். முன்னர் தகனப் பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தைச் சுத்தப்படுத்தியபோது எஞ்சிய சாம்பல் படலத்திலிருந்து 1920 முதல் 1994 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் குப்பைக் குழிகள், புதைக்கப்பட்ட ஒரு மாடு, மேலும் நிலத்தின் மேற்பரப்பில் சிதறிக் கிடந்த மருத்துவமனைக் கழிவுகள் ஆகியவையும் இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கெல்லாம் தமிழ் தேசியவாதிகள் ஒரு பதிலை முன்வைக்கின்றனர். 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிந்துபாத்தியில் யாரும் அடக்கம் செய்யப்பட்டதாகத் தமக்கு நினைவில்லை என்பதால், யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உடல்களே இவை என்பது அவர்களது வாதம்.

ஆனால், 1995ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு யார் புதைக்கப்பட்டனர் என்று கேட்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தோன்றவில்லை.

நான் உரையாடிய வயதான ஒருவர், 1960களில் சிந்துபாத்தியில் நடைபெற்ற ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்தார். அவருடைய நண்பர் ஒருவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தொற்றுநோய்களும் அடிக்கடி பரவியுள்ளன. காலரா, பெரியம்மை, இன்ஃபுளுவென்சா போன்ற நோய்கள் தீபகற்பப் பகுதிக்குத் திரும்பத் திரும்பப் பரவியுள்ளன. இத்தகைய நோய்ப்பரவல்களில் சிசுக்களும் சிறு குழந்தைகளுமே அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர்.

இந்த அகழ்வில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கண்டுபிடிப்பு, நான்கு அல்லது ஐந்து வயதுடைய சிறுமியின் எச்சங்களாகும். நீதிமன்றத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்த தகவலின்படி, அந்த வயதுடைய சிறுமி ஒருவரின் எச்சங்களே அவை.

கடந்த ஆண்டு நிலத்திலிருந்து மீட்கப்பட்டபோது, ஆங்கில எழுத்துக்கள் அச்சிடப்பட்ட சிறிய நீல நிறப் பாடசாலைப் பையும், கார்ட்டூன் கரடி உருவம் பொறிக்கப்பட்ட காலணியொன்றும் அவளுடன் காணப்பட்டன.

தமிழ்க் கட்சிகள் அந்தப் பையின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடமும், ஐக்கிய நாடுகள் அதிகாரிகளிடமும், இலங்கைக்கு வருகை தந்த தூதுவர்களிடமும் காண்பித்தன. அரசாங்கம் குழந்தைகளைக் கொன்று இரகசியமாகப் புதைத்ததற்கான ஆதாரமாக அவை முன்வைக்கப்பட்டன.

ஆய்வறிக்கையில் அவள் எலும்புக்கூடு இலக்கம் 25 எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளாள்.

அவளது பாடசாலைப் பை, காலணிகள், காலுறைகள், துணித் துண்டுகள் மற்றும் ஒரு கொலுசு ஆகியவற்றுடன் அவள் புதைக்கப்பட்டிருந்தாள். அவளைச் சுற்றிக் கண்டெடுக்கப்பட்ட சிறிய ஆணிகள், அவளது சவப்பெட்டியில் எஞ்சியிருப்பவையாக இருக்கலாம்.

சில கண்டுபிடிப்புகள் ஒரு சாதாரண மயானத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களுடன் பொருந்தவில்லை. அவற்றுக்கு நேரடியான பதில்கள் தேவைப்படுகின்றன.

ஒரு எலும்புக்கூடு அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், மண்டையோடு முறிந்திருந்ததாகவும், தாடை சிதைந்திருந்ததாகவும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு எலும்புக்கூட்டுக்குத் தலை இருக்கவில்லை. அதன் இரு கைகளும் கட்டப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மீட்கப்பட்ட எச்சங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில் ஆடைகள் காணப்படவில்லை எனக் கண்டறிந்ததுடன், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றிருக்கக்கூடிய நியாயமான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்தது.

ஒரு மயானம் இயற்கை மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாக இருப்பதைப் போலவே, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மறைக்கும் இடமாகவும் இருக்க முடியும். இத்தகைய சம்பவங்கள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், இடைக்கால ஆய்வறிக்கை இவற்றை ஆராயவில்லை.

குழந்தைகள்:

இறந்தவர்களில் 41 சதவீதமானோர் குழந்தைகள் என்றும், 22 சதவீதமானோர் சிசுக்கள் என்றும் அறிக்கை வகைப்படுத்துகிறது. மொத்தத்தில் இது சுமார் 360 பேராகும்.

அந்த எச்சங்கள் குறித்துத் தெரிந்த பல மருத்துவ வட்டாரங்கள் இந்த விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் ஆண்களாவர்.

1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் இராணுவம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்தது.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைச் சபை 2,621 முறைப்பாடுகளை ஆராய்ந்தது. பின்னர் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களின்படி, 1996ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 378 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாக அந்த விசாரணைச் சபை முடிவுசெய்தது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் தமிழ் ஆண்கள் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை (Law and Society Trust) ஆவணப்படுத்திய சம்பவங்களில் 60 சதவீதமானோர் 30 வயது அல்லது அதற்குக் குறைந்த வயதுடையவர்கள்.

போரின்போது தமிழ் குழந்தைகள் மிகக் கொடூரமான துயரங்களை அனுபவித்தனர். எறிகணைத் தாக்குதல்களும் வான்வழிக் குண்டுவீச்சுகளும் சிசுக்கள் உட்பட ஏராளமான குழந்தைகளைக் கொன்றன. மேலும் பலர் காயமடைந்தனர்; பெற்றோரை இழந்தனர் அல்லது வீடுகளை இழந்து நிர்க்கதியானார்கள்.

சில குழந்தைகள் தமது பெற்றோருடன் காணாமல் ஆக்கப்பட்டனர்.

2009 மே மாதத்தில், வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சில அதிகாரிகள் தமது குழந்தைகளுடன் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

வொய்ஸ் ஒஃப் டைகர்ஸ் வானொலியின் தலைவரான ஜவன், தனது பதின்ம வயது மகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் கல்விப் பிரிவை நிர்வகித்த பேபி சுப்பிரமணியம், தனது சிறிய மகள் அறிவுமதியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான இளம்பரிதி, தனது இரண்டு குழந்தைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுற்றிய பிரதேசத்தில், வேறுபட்ட சூழ்நிலைகளிலும் வேறுபட்ட அளவிலும் இடம்பெற்றவை.

1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளின் சம்பவப் பதிவுகளில், இராணுவம் நூற்றுக்கணக்கான சிசுக்களையும் சிறு குழந்தைகளையும் கடத்திச் சென்று சிந்துபாத்தியில் புதைத்ததாகக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

அவ்வாறு நடந்ததாக யாரும் தீவிரமாகக் கூறியதுமில்லை.

ஒரு கிலோமீற்றர் தொலைவில்…

நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றத்தின் வழியாகவே செம்மணி தமிழ் மக்களின் நினைவில் இடம்பிடித்தது.

1996 செப்டெம்பரில், 18 வயதுடைய பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை இராணுவத்தினர் தடுத்து வைத்தனர். பின்னர் அவரையும், அவரது தாயாரையும், சகோதரரையும், அவர்களைத் தேடிச் சென்ற குடும்ப நண்பரையும் கொலை செய்தனர்.

1998ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகளில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணியில் மேலும் 300 முதல் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தானும் தனது சக குற்றவாளிகளும் 16 புதைகுழி இடங்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

1999ஆம் ஆண்டு விசாரணையாளர்கள் அவர் சுட்டிக்காட்டிய இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது 15 உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றில் சிலவற்றில் தாக்குதல் மற்றும் கொலைக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

அவற்றில் இரண்டு உடல்கள், 1996ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களுடையவை என அடையாளம் காணப்பட்டன. ஒருவரது கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. மற்றொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

அதன் பின்னர் அந்தத் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

அந்தப் புதைகுழிகள் அன்றைய இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்திருந்தன. இப்போது அகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து அவை குறைந்தது ஒரு கிலோமீற்றர் தொலைவில் இருந்தன.

இரண்டு இடங்களும் ஒரே கிராமத்தின் பெயருடன் தொடர்புடையவை. காலப்போக்கில், பொதுமக்களின் நினைவில் அவை ஒரே புதைகுழியாகக் கலந்துவிட்டன.

இந்த இரண்டு இடங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தவொரு தமிழ்க் கட்சியும் முயற்சி செய்யவில்லை. 1996ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டவர்களின் தடயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ள, பழைய இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள இடங்களில் முழுமையான அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எந்தக் கட்சியும் கோரவில்லை.

எச்சங்களின் பரிசோதனையுடன் நேரடியாகத் தொடர்புடைய மூத்த மருத்துவ அதிகாரிகள் சிலர், சிந்துபாத்தி அகழ்விடம் கொலை செய்யப்பட்டவர்களைப் புதைத்த இடமெனத் தாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்தனர்.

தமது மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில், அங்குள்ள புதைகுழிகள் முறையாக இறந்தவர்களை அடக்கம் செய்த இடங்களைப் போன்றே காணப்படுவதாக அவர்கள் கூறினர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தமது பெயர்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் பேசினர். அவர்களது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தொல்லியல் அறிக்கை வெளியாகுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே அவர்களில் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

“நாங்கள் ஒரு மயானத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறோம்,” என்று அந்த அதிகாரி நேரடியாகக் கூறினார்.

தொல்லியல் மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளும், காபன் காலக்கணிப்பு முடிவுகளும் பொதுவெளிக்கு வரும் நாளைத் தாங்கள் அச்சத்துடன் எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அரசாங்கம் சர்வதேச ஆய்வொன்றுக்கு உத்தரவிட்டால், அதன் முடிவுகளும் வெளியாகலாம்.

“இது தமிழ் மக்களின் உரிமைக்கான செயற்பாடுகளை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிடும்,” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

அறிக்கை வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னர், அவர் இவ்வளவு உறுதியாகப் பேசுவதற்கான காரணம் என்ன என்று நான் கேட்டிருந்தேன்.

“ஏற்கெனவே ஒரு பொது மயானம் இருப்பது தெரிந்த இடத்தைத் தோண்டிவிட்டு, இவ்வளவு ஆரவாரம் செய்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று அவர் பதிலளித்தார்.

அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய வேறு சிலரும் அக்காலத்திலேயே தனிப்பட்ட உரையாடல்களில் இதே கருத்தைத் தெரிவித்துவந்தனர்.

ஆனால், அவர்களில் எவரும் பகிரங்கமாகப் பேச முன்வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தும் தமிழர் ஒருவர் “துரோகி” என அழைக்கப்படும் அபாயம் உள்ளது.

பிரபலமான விருந்தினர்கள்..

இந்த அகழ்விடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்துள்ளனர்.

2025 ஜூன் மாதத்தில், இலங்கைக்கான விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சிந்துபாத்திக்கு வருகை தந்தார். சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணையொன்றை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவொன்றும் அகழ்விடத்தைப் பார்வையிட்டது.

இந்த இரண்டு விஜயங்களையும் தமிழ்க் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பயன்படுத்தி, இந்த இடம் போர்க்காலக் கொலைகளுக்கான ஆதாரம் என முன்வைத்தனர்.

இந்தப் பணிகளுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரி, இந்த விஜயங்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

ஆய்வறிக்கைகள் வெளியான பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் ஐரோப்பியத் தூதுவர்களும் அந்த இடத்துக்குச் சென்றது, தமிழர்களை ஏனையோரின் நகைப்புக்கு உள்ளாக்கிவிடும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

இந்த வழக்கை நெருக்கமாகக் கவனித்துவரும் யாழ்ப்பாண அரசியல் அவதானி ஒருவர், இதனால் ஏற்படும் பாதிப்பு வெறும் அவமானத்துடன் முடிந்துவிடாது என்றார். தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

செம்மணி பிரசாரத்தைப் பொதுவெளியில் கேள்விக்குட்படுத்தும் தமிழர் ஒருவர் உடனடியாகத் துரோகி என முத்திரை குத்தப்படுவதாக அவர் கூறினார்.

ஒரு புதைகுழி அமைந்துள்ள இடத்துக்குச் செல்லும் இராஜதந்திரிகள், தங்களிடம் கூறப்பட்ட தகவல்களைத் தமது நாடுகளுக்குத் திரும்பக் கொண்டு செல்கின்றனர். அவை பின்னர் அவர்களது தலைநகரங்களில் நடைபெறும் கலந்துரையாடல்கள், அறிக்கைகள் மற்றும் ஐ.நா. ஆவணங்களிலும் இடம்பெறுகின்றன.

சிந்துபாத்தி பெரும்பாலும் ஒரு மயானமே என அறிவியல் ஆய்வுகள் நிரூபித்தால், அங்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகள் அடுத்தமுறை ஒரு புதைகுழியைப் பார்வையிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரும்போது இந்த அனுபவத்தை நினைவுகூர்வார்கள்.

இலங்கை அரசாங்கமும் இதனை நினைவில் வைத்திருக்கும்.

சர்வதேச விசாரணைகளைத் தவிர்ப்பதற்கும், வலுவான ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான வெளிப்புறக் கண்காணிப்பைத் தடுக்கவும், சிந்துபாத்தி மற்றும் மன்னார் சம்பவங்களை ஜெனீவாவிலும் ஏனைய இடங்களிலும் சுட்டிக்காட்டி, தமிழர்கள் முன்வைக்கும் பாரிய படுகொலைக் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை எனக் கொழும்பு வாதிடக்கூடும் என்பது அந்த அரசியல் அவதானியின் கருத்தாகும்.

மருத்துவ அதிகாரிகள் அஞ்சிய கேலிக்கூத்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது.

இந்த வாரம், இனவாத அரசியலுடன் இதுவரை தொடர்புபடாத சிங்கள சமூக ஊடக இளைஞர்கள் சிலர், தமிழ் தரப்பினரின் கூற்றுகளைக் கேலி செய்து வருகின்றனர்.

1996ஆம் ஆண்டு சம்பவங்கள் தொடர்பாகத் தமிழர்கள் நம்ப வைக்க வேண்டியவர்களே இந்த இளைஞர்கள்.

மன்னாரிலும் இதே போன்றதொரு சுழற்சி நிகழ்ந்தது.

2018ஆம் ஆண்டு சதொச வளாகத்தில் அமைந்திருந்த குழியொன்றிலிருந்து 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அது போர்க்காலப் புதைகுழி எனத் தமிழ் தேசியவாதிகள் அறிவித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்கக் காபன் பரிசோதனைகள், அந்த எச்சங்கள் 1499 முதல் 1719 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் காட்டின.

அந்த முடிவுகள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன. ஆனால், அந்தச் சர்ச்சை தமிழ் தரப்பின் வாதங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதன் பின்னர், இலங்கையில் பாரிய புதைகுழிகள் தொடர்பாகத் தமிழர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மன்னார் சம்பவம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

சதித்திட்டம் தேடும் முயற்சி..

ஆய்வறிக்கை வெளியானதும், தமிழ் அரசியல் தரப்பினர் அதன் ஆசிரியரை இலக்காகக் கொண்டனர்.

பேராசிரியர் சோமதேவ ஒரு சிங்கள-பௌத்த தேசியவாதி என அழைக்கப்பட்டார். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டு அவரது ஆய்வறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள் தொடர்பாக எவ்விதமான பதிலையும் வழங்கவில்லை.

அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

அங்கு இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிசுக்களும் குழந்தைகளுமாக இருந்தனர். அத்தகைய இடத்தில் அவர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டார்.

தொற்றுநோய்கள் பெரியவர்களைவிடக் குழந்தைகளை அதிகமாகக் கொல்கின்றன. யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற நோய்ப்பரவல்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன. எனவே, சாத்தியமான விளக்கங்களில் ஒன்றாகத் தொற்றுநோயையும் அவர் பட்டியலிட்டார்.

அது ஒரு சாத்தியக்கூறு மட்டுமே என அவர் குறிப்பிட்டார். உறுதியான முடிவொன்றுக்கு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரே தெரிவித்தார்.

எந்தவொரு தொல்லியல் ஆய்வாளரும் இதே கேள்வியை எழுப்பியிருப்பார்.

ஆனால், இதற்காக அவர் ஒரு சிங்களத் தேசியவாதி எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார்.

2025 ஜூன் மாதத்தில், தனது முதலாவது இடைக்கால அறிக்கை அந்த இடத்தை ஒரு பாரிய புதைகுழியாக அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் அவரது கருத்தை விரிவாக மேற்கோள் காட்டினர்.

அப்போது அவர் இதே நபராகத்தான் இருந்தார். அவரது பின்னணியும் இதேதான்.

நான் கலந்தாலோசித்த தொல்லியல் ஆய்வாளர்கள், இதே அகழ்விடத்தில் ஒரு தமிழ் தொல்லியல் ஆய்வாளர் பணியாற்றியிருந்தாலும் இதே கண்டுபிடிப்புகளையே எட்டியிருப்பார் எனக் கூறினர்.

போர்க்கால விசாரணைகள் தொடர்பாக இலங்கைக்கு உள்ள மோசமான வரலாற்றைக் கருத்தில் கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் சுயாதீனமான ஆய்வுகளைக் கோருவதில் நியாயம் உள்ளது.

ஆனால், ஆய்வில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுவோர் அவை என்ன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாக நம்புவோர், அந்த ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

விமர்சகர்களில் மிகச் சிலரே அவ்வாறு செய்துள்ளனர்.

பெரும்பாலானோர் ஆய்வாளரையே இலக்காகக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் தடயவியல் தொல்லியலில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். என்னால் அறிய முடிந்தவரையில், வடக்கு அல்லது கிழக்கைச் சேர்ந்த தமிழ் நிபுணர்கள் அவர்களில் எவரும் இல்லை.

பல தசாப்தங்களாகத் தமிழ் அரசியல் தரப்பினர் சர்வதேச விசாரணைகளைக் கோரி வருகின்றனர். ஆனால், அத்தகைய விசாரணைகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய தடயவியல் தொல்லியல், மானிடவியல், நோயியல், டி.என்.ஏ. பகுப்பாய்வு மற்றும் ஆவணக் காப்பக ஆய்வு ஆகிய துறைகளில் மிகக் குறைந்த முதலீடுகளையே செய்துள்ளனர்.

இப்போது திரு. பொன்னம்பலம் சிந்துபாத்தியில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் எனக் கோருகிறார்.

அத்தகைய விசாரணை நடைபெறக்கூடும். ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள், அரசாங்கம் அதற்கு உத்தரவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

“இது போருடன் தொடர்புடைய பாரிய புதைகுழி அல்ல என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அப்படியிருக்கையில், சர்வதேச விசாரணைக்கு அது ஏன் தயங்க வேண்டும்?” என்று அந்த வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிபுணர்கள் வந்து, சிந்துபாத்தி முறைப்படியான அடக்கங்கள் இடம்பெற்ற ஒரு மயானமே என முடிவுசெய்தால், தமிழ் தேசியவாதிகள் என்ன கூறுவார்கள்?

அவர்களுக்கான பதில் ஏற்கெனவே தயாராக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்.

பேராசிரியர் சோமதேவ மீது குற்றஞ்சாட்டியதைப் போலவே, சர்வதேச நிபுணர்களும் யாரோ ஒருவரின் அரசியல் நோக்கங்களுக்குச் சேவை செய்கிறார்கள் என அவர்கள் குற்றஞ்சாட்டுவார்கள்.

அடுத்து, செம்மணியில் மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தலைமை தாங்கும் நீதித்துறை மருத்துவ அதிகாரியான டாக்டர் எஸ். பிரணவன் இருக்கிறார்.

அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். அவரது அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

அவரது முடிவுகளும் தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவுகளுடன் ஒத்துப்போனால், அவரை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள்?

அவரை ஒரு சிங்களத் தேசியவாதி என்று அழைக்க முடியாது.

அரசாங்கத்தின் கைக்கூலி என்று அழைக்கலாம். அல்லது வெறுமனே ஒரு துரோகி என்று கூறலாம்.

அவர்களிடம் ஏதாவது ஒரு பெயர் தயாராக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

என்ன செய்ய வேண்டும்?

முதலாவது, 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அதிகாரபூர்வமான, நம்பகத்தன்மை வாய்ந்த பதிவொன்றைத் தயாரிக்க வேண்டும். அதில் குடும்பத்தினரின் சாட்சியங்கள், மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்கள், தடுப்புக்காவல் பதிவுகள் மற்றும் முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, ஆரம்பகால செம்மணி விசாரணையை மீளமைக்க வேண்டும்.

ராஜபக்ஷவும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் அடையாளம் காட்டிய ஒவ்வொரு இடமும், அக்கால இராணுவ முகாம்கள், 1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் வரைபடமொன்றில் குறிக்கப்பட வேண்டும்.

இதுவரை அகழப்படாத ஒவ்வொரு இடத்திலும் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மூன்றாவது, சிந்துபாத்தியில் முழுமையான தடயவியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். காலக்கணிப்பு, எலும்புகளில் ஏற்பட்ட காயங்கள் குறித்த ஆய்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஒப்பிடுவதற்கான டி.என்.ஏ. பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேநேரத்தில், அடக்கப் பதிவுகள், பழைய வரைபடங்கள் மற்றும் பொது சுகாதார ஆவணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த மயானத்தின் வரலாறும் ஆராயப்பட வேண்டும்.

சிந்துபாத்தி 1996ஆம் ஆண்டு சம்பவங்களுடன் பெருமளவில் தொடர்பற்றது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்தால், தமிழ் தலைவர்கள் எழுந்து நின்று அதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக மற்றொரு சதித்திட்டக் கதையை உருவாக்கவோ, விஞ்ஞானிகள் ஏதோ ஓர் அரசியல் நோக்கத்துக்குச் சேவை செய்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டவோ, புதிய சாக்குப்போக்குகளை முன்வைக்கவோ கூடாது.

அவர்கள் இந்த மயானத்தை முன்னிறுத்துவதற்காகச் செலவிட்ட ஆற்றல், இன்னமும் காணாமல் போயிருக்கும் மக்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

அவர்களில் சிலரது குடும்பங்கள், தமது மகன், சகோதரன் அல்லது கணவனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றன.

நன்றி: ஜப்னா மொனிட்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *